சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, December 29, 2011

மக்கள் நாயகன் ராமராஜன்


ராமராஜன். மிகச்சில வருடங்களே தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அந்த உச்சத்தை வைத்து ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தை பிடித்தவர். என்னுடைய 10லிருந்து 13 வயதுக்குள் அந்த காலக்கட்டம் அடங்கும். அப்பொழுது எல்லாம் திருவாரூரைப் போன்ற சிறு நகரங்களில் ரசிகர் மன்றங்கள் திறப்பது என்பது ரசிகர்களிடையே மிகப்பிரபலமான விஷயம். எங்க ஊரு பாட்டுக்காரன் வந்தவுடனேயே எங்கள் தெரு அண்ணன்கள் எல்லாம் ராமராஜனுக்கு ரசிகர் மன்றம் திறக்க முடிவெடுத்தார்கள். எனக்கும் ராமராஜனைப் பிடிக்கும் என்பதால் அந்த வயதிலேயே மன்றத்தில் சேர்ந்து விட்டேன். பேனர் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலைகளை செய்ததால் எனக்கு துணைச் செயலாளர் பதவியும் கொடுத்தார்கள்.

எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன் ரசிகர் மன்ற துணைச் செயலாளர், எப்படியிருக்கு என் பதவியின் பெயர். அதன் பிறகு வந்த ஒவ்வொரு படங்களும் எங்களுக்கு திருவிழா தான். படம் வெளியாவதற்கு முன் தினம் தியேட்டரில் பேனர் கட்டுவது ஊரில் உள்ள முக்கி சுவர்களில் ரசிகர் மன்றத்தின் சார்பாக போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலையெல்லாம் எனக்கு தான். அவரது பிறந்த நாள் வந்தால் அன்றைய தினத்தின் இரவில் டி.வி, டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து ராமராஜனின் படங்களை வரிசையாக திரையிடுவது போன்ற கேளிக்கைகள் எல்லாம் வழக்கமாக நடக்கும். மனசுக்கேத்த மகாராசா படம் வந்த போது தியேட்டரை அதகளம் செய்து விட்டோம்.

கரகாட்டகாரன் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் போது தியேட்டருக்கு ராமராஜன் வந்தார். அதற்கென லாட்டரி கடைக்கு சென்று பழைய லாட்டரிகளை பண்டல் பண்டலாக வாங்கி வந்து அவற்றை பொறுமையாக சுக்கு நூறாக கிழித்து மேடைக்கு மேல் ஐந்து பெட்டிகள் அமைத்து அவற்றில் நிரப்பி பெட்டியின் அடிப்பகுதியில் சிறு திறப்பு ஏற்படுத்தி அவற்றை நூலுடன் இணைத்து நூலை இழுத்தால் பெட்டியிலிருந்து பேப்பர்கள் அவரின் மீது விழும் படி செய்தோம். விழா முடிந்தவுடன் அது போல் செய்தது யாரென விசாரித்து எங்கள் மன்றத்தினர் அனைவரையும் அழைத்து பாராட்டி விட்டு சென்றார். அப்பொழுது எடுத்த போட்டோ வெகு நாட்களுக்கு மன்றம் இருந்த தியாகுவின் வீட்டு வெளிவராந்தாவில் இருந்து பிறகு நண்பன் சாம்பாரங்கனின் வீட்டு பரணில் கிடந்து பிறகு எங்கு சென்றதென்றே தெரியவில்லை.

எனக்கு தெரிந்து ராமராஜனின் அனைத்து படங்களுக்கும் முதல் நாள் திரையரங்குக்கு சென்று பார்த்து இருக்கிறேன். அதற்காக வீட்டில் எங்கப்பாவிடம் பெல்டால் அடியும் வாங்கியும் இருக்கிறேன். ஆனால் அவர் மீதான ஆர்வம் குறையவேயில்லை. அவரின் எல்லா படங்களின் பாட்டு புத்தகங்களும் என்னிடம் இருந்தன. அத்தனை பாடல் வரிகளும் பாடியவர் பெயர் விவரங்களும் பாடலின் ராக விவரங்களும் எனக்கு மனப்பாடமாக இருந்தன. காலம் மாறத் தொடங்கியது.

ராமராஜனுக்கு படங்கள் தோல்வியடையத் தொடங்கின. புதிய நடிகர்கள் அப்பொழுது சினிமாவில் நுழையத் தொடங்கினர். மன்றம் சோர்வடைய ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல மன்றமே கலைக்கப்பட்டது. பிறகு அதே ரசிகர் மன்ற குழு வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்தனர். நமக்கு சாதாரண மன்றங்கள் எல்லாம் வேண்டாம், மாவட்டத் தலைமை அல்லது நகரத் தலைமை ரசிகர் மன்றம் தான் வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்பொழுது பிரசாந்துக்கு எங்கள் பகுதியில் ரசிகர் மன்றமே இல்லாததால் நாம் ஆரம்பித்தால் மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் கிடைக்கும் என்று முடிவு செய்து மன்றம் துவக்கினர். அது போலவே மாவட்ட தலைமை ரசிகர் மன்றத்திற்கான அனுமதியும் பிரசாந்திடம் இருந்து கிடைத்தது. எனக்கு பிரசாந்த் பிடிக்காததால் நான் வெளி வந்து ஏற்கனவே எங்கள் தெருவில் இருந்த கலைவேந்தன் ரஜினி ரசிகர் மன்றத்தில் இணைந்து விட்டேன்.

அத்துடன் ராமராஜன் காலம் முடிவடைந்தாலும் எனக்கு வெகு நாட்களுக்கு அவரது படங்கள் மற்றும் பாடல்கள் நினைவில் இருந்தன. நாட்கள் செல்லச் செல்ல எல்லாம் மறந்து விட்டது. ஆனாலும் இப்போதும் எனது மிகச்சிறந்த இளையராஜா பாடல்கள் தொகுப்பில் ராமராஜனின் பாடல்களே அதிகம் இருக்கும். இப்பொழுதும் அந்த காலக்கட்டத்தைய ராமராஜன் படங்கள் டிவியில் போட்டால் படம் முடியும் வரை வேறு சேனல்கள் மாற்றாமல் பார்ப்பது என் வழக்கம்.

அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு ராமராஜனிடம் உதவியாளராக இருந்த எங்கள் தூரத்து சொந்த பெரியப்பா ராதாகிருஷ்ணனின் வீட்டு சுபகாரியத்திற்கு ராமராஜன் வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன்யாருமே சென்று அவரிடம் நலம் விசாரிக்காமல் இருந்தது மட்டுமல்லாமல் கண்டுகொள்ளாமலும் இருந்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, நான் மட்டும் அவரிடம் சென்று நலம் விசாரித்து விட்டு வந்தேன். ஒரு மனிதனின் வீழ்ச்சி இந்த அளவுக்கா இருக்க வேண்டும்.

இன்றும் என் மனைவி காலம் மாறி விட்டது அஜித், விஜய், தனுஷ், சிம்பு ஆகியோர் வந்து விட்டனர். ஆனால் நீங்கள் இன்னும் ராமராஜனின் ரசிகர் நிலையை மாற்றவேயில்லையே, நீங்கள் இன்னும் ராமராஜன் ரசிகர் என்று சொன்னால் உங்களை எல்லோரும் ஊர்நாட்டான் என்று கூறுவார்கள் என்று கூறி கிண்டலடிப்பாள். ஆனால் அந்த பால்ய வயதிலிருந்து பதின் வயதுக்குட்பட்ட காலங்களில் மனதை கொள்ளையடித்த ராமராஜனின் ரசிப்புத் தன்மையை என்னால் மாற்ற முடியவில்லையே


ஆரூர் முனா செந்திலு

12 comments:

  1. Senthil...
    Manila alavula
    rasigar mandram
    aarmbikka.....
    SAM ANDERSON -idam
    ketkavum......
    Udane ok aagum....

    ReplyDelete
  2. கரகாட்டக்காரன்... மட்டும் நான் ஒரு 25 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்...

    ReplyDelete
  3. இந்த வாரம் முழுக்க இரவு பத்து டு பத்தரை ஜெயா டிவியில் திரும்பி பார்க்கிறேன் என்கிற நிகழ்ச்சியில்
    ராமராஜன் தன் திரை உலக அனுபவங்களை பேசுறார். நான் தினம் பார்த்து (கூடவே ராமராஜன் பட க்ளிப்பிங்குகள் வேறு !) வருகிறேன். நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க செந்தில் !

    ரசிகர் மன்றம் பற்றிய இந்த பதிவு உருக்கமா இருக்கு !!

    ReplyDelete
  4. /// NAAI-NAKKS said...

    Senthil...
    Manila alavula
    rasigar mandram
    aarmbikka.....
    SAM ANDERSON -idam
    ketkavum......
    Udane ok aagum... ///

    யோவ் நக்கீரரே நான் ஏற்கனவே அகில உலக கில்மா ஸ்டார் ரசிகர் மன்ற தலைவன்யா.

    ReplyDelete
  5. /// சங்கவி said...

    கரகாட்டக்காரன்... மட்டும் நான் ஒரு 25 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்... ///

    அதாவது சதீஷ் இப்பொழுது எல்லாம் இதனை வெளியில் சொல்வது அவமரியாதையாக கருதப்படுகிறது. அந்த உண்மையை உண்மையாக சொன்னதற்கே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. /// மோகன் குமார் said...

    இந்த வாரம் முழுக்க இரவு பத்து டு பத்தரை ஜெயா டிவியில் திரும்பி பார்க்கிறேன் என்கிற நிகழ்ச்சியில்
    ராமராஜன் தன் திரை உலக அனுபவங்களை பேசுறார். நான் தினம் பார்த்து (கூடவே ராமராஜன் பட க்ளிப்பிங்குகள் வேறு !) வருகிறேன். நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க செந்தில் !

    ரசிகர் மன்றம் பற்றிய இந்த பதிவு உருக்கமா இருக்கு !! ///

    பார்த்துகிட்டு வர்றேன் அண்ணே.

    ReplyDelete
  7. ராமராஜன் படம் ரிலீஸ் என்றால் பெருந்தலைகளே தன் படத்தை வெளியிடமாட்டார்கள்....அவ்வளவு பெரிய நடிகராக இருந்தவரின் தற்போதைய நிலையை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.....

    ReplyDelete
  8. அருமையான பதிவு நண்பரே!..சில்வர் ஜூபிலி மோகன் இன்றய நிலைமையும்!!!. அப்படிதான்.

    ReplyDelete
  9. /// veedu said...

    ராமராஜன் படம் ரிலீஸ் என்றால் பெருந்தலைகளே தன் படத்தை வெளியிடமாட்டார்கள்....அவ்வளவு பெரிய நடிகராக இருந்தவரின் தற்போதைய நிலையை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.... ///

    அது என்னவோ சரி தான் சுரேஸ்.

    ReplyDelete
  10. /// Murugaraj said...

    அருமையான பதிவு நண்பரே!..சில்வர் ஜூபிலி மோகன் இன்றய நிலைமையும்!!!. அப்படிதான். ///

    ஆமாம் முருகராஜ்.

    ReplyDelete
  11. ஈரோடு ஸ்டார் தியேட்டரில் கரகாட்டக்காரனை இரண்டு மூன்ரு முறை பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஸ்டீரியோ டைப் கதைகளே அவர் சரிவுக்குக் காரணம். மேலும் பெரிய அளவில் நடிப்பும் வந்ததா அவருக்கு?

    ReplyDelete
  12. இன்னும் கூட அவரது சில பாடல்கள் கேட்கும் போது, வயல்வெளி, கலப்பிடமில்லாத காற்று மற்றும் மனிதர்கள்,..... சுருக்கமாக நம்மை கிராமத்திற்கே கொண்டு செல்லும். நிறைய பேர் அவர் பெயரை வைத்து கிண்டல் செய்யும் போது கஷ்டமாக இருக்கும். நன்றி சார்!
    தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    அன்புடன் அழைக்கிறேன் :
    "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...