சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, September 16, 2013

திருவாரூர் பயணக் கட்டுரை - தகராறு தகவல்கள்

என்ன ஒரு ஆச்சரியம், திருவாரூரில் ஆறுமாதத்திற்குள் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கிறது. கமலாலய மேல்கரையில் புதிதாக காலனி ஒன்று கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. துர்காலயா ரோட்டில் இரண்டு காலனிகள் முளைத்துள்ளன. இவ்வளவு காலனிகளிலும் தங்குவதற்கு ஆட்கள் திருவாரூரில் இருக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.


சனியன்று வீட்டுக்கு போனதுமே மகாதியானத்திற்கு இரவு எங்களுடன் தான் வரவேண்டும் என்று ஒரு குழு முன்பதிவு செய்துவிட்டது. அதனால் மற்ற குழுக்களை வெறுமனே சந்தித்து விட்டு வீட்டுக்குள் அடைக்கலமாகி விட்டேன். மாலை மங்கியதும் நான், என் தம்பி, மணி, நாராயணன் ஆகியோர் அடங்கிய குழு மகாதியானத்தை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தியான மண்டபத்தில் தொடங்கினோம்.

பொதுவாக திருவாரூரில் உள்ள எந்த தியானமண்டபத்திற்கு சென்றாலும் அங்கு ஏற்கனவே பழக்கமான ஒரு குழு அமர்ந்திருக்கும். பிறகு மகாதியானம் பேரளவுதியானமாக மாறி பஞ்சாயத்தில் முடியும். இந்த ஒரு தியானமண்டபத்திற்கு மட்டும் அவ்வளவாக தெரிந்த முகங்கள் வராது.


எங்களது திட்டம் மகாதியானத்தை முடித்து விட்டு மூடர்கூடம் செல்வதுதான். அதன்படி ஆளுக்கு அரை மண்டகப்படி சாத்தி விட்டு முழு மண்டகப்படியை கமண்டலத்தில் எடுத்துக் கொண்டு தியானமண்டபத்தை விட்டு கிளம்பினோம்.

திடஆகாரம் வேண்டி ராஜாராணி இட்லிக்கடையில் தஞ்சமடைந்தோம். புதிதாக திருமணமான மணி கண்டிப்பாக வீட்டுக்குப் போய் தான் சாப்பிட வேண்டும். நீங்கள் அனைவரும் கடையில் சாப்பிடுங்கள். நான் வீட்டுக்குப் போய் வருகிறேன் என்று ஜிஆர்டி கார்டன் நோக்கி பேட்டரி பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். நாங்கள் போகவேண்டாம் என்று எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை.
 


நாங்கள் முடித்து விட்டு சாம்பிராணியை புகைய விட்டுக் கொண்டே தியேட்டரில் வாசலில் காத்திருந்தோம். பத்தரை மணியாகியும் மணியை காணவில்லை. போன் அடித்தால் பேசியது ஒரு போலீஸ்காரர். அது பேட்டரி வண்டி லைசன்சும் தேவையில்லை. வண்டி பேப்பரும் தேவையில்லை.

காரணமில்லாமல் புடித்துக் கொண்டிருக்கிறார்களே என்று கடுப்பு வேறு. நாங்கள் அங்கு போனால் ஏழரையாகிப் போகும் என்று அப்போது தான் வந்திருந்த கார்த்தியை அனுப்பி வைத்தோம். போய் அழைத்துக் கொண்டு வரும் போது மணி பதினொன்று.


கோவமாக வந்த கார்த்தி தலையில் அடித்துக் கொண்டான். போலீஸெல்லாம் மணியை பிடிக்கவேயில்லையாம். இவனாக வீட்டுக்கு போய் திரும்பிக் கொண்டு இருந்தவன், வண்டிகளை சோதனை செய்து கொண்டிருந்தவர்களிடம் போய் "என்ன சார் என் வண்டியை சோதனை போட மாட்டீர்களா" என்று கேட்டிருக்கான்.

அவர்களோ "டேய் தம்பி மகாதியானத்தில் இருக்க சலம்பாத போயிடு" என்று எச்சரித்து இருக்கிறார்கள். மறுபடியும் அவர்களிடம் போய் "வண்டி பேப்பரை என்னிடம் கேளுங்கள்" என்று சலம்பியிருக்கான். வண்டியை பிடித்து வைத்துக் கொண்டு யாரையாவது வந்து உன்னை அழைத்துப் போகச் சொல் என்று சொல்லவே அதன் பிறகு தான் எங்களுக்கு போன் வந்தது.

வந்தவனை மொத்தி விட்டு படம் பார்க்க முடியாது என்பதால் மண்டகப்படியை நிறைவு செய்ய எங்களது கடையின் வாசலில் அமர்ந்து மகாதியானத்தை துவக்கினோம். ஐந்து நிமிடம் தான் எங்கிருந்தோ வந்த காவலர்கள் எங்களைப் பார்த்து விட்டனர்.

மறுபடியும் பஞ்சாயத்தா என்று யோசித்துக் கொண்டு இருக்க அந்த வழியாக எனக்கு நன்கு தெரிந்த எஸ்ஐ வந்தார். அரைமணி நேரம் பேசி முடித்து பைசல் செய்து அனுப்பி விட்டு என்னடா இது திருவாரூருக்கு என்னால் வந்த சோதனை என்று புலம்பிக் கொண்டே மகாதியானத்தை அங்கேயே முடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி வருவதற்கு இரவு 1 மணி ஆகிவிட்டது.

எங்கு நின்றாலும் நம்மை ஏன் என்று கேட்காத சுதந்திரம் இருந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பான திருவாரூர் எங்கே. எங்கு நின்றாலும் சந்தேகத்துடனே நம்மை அணுகும் பாதுகாப்பு முறைகளால் சூழப்பட்ட இன்றைய திருவாரூர் எங்கே.

நகரமயமாக்கலில் எல்லாவற்றையும் இழந்து வருகிறோம்.

அரே ஓ சாம்பா

ஆரூர் மூனா செந்தில்

14 comments:

  1. சுதந்திரமாக மகா தியானத்துக்கு அனுமதி இல்லையா? என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்.. அரே ஓ சாம்பா..

    ReplyDelete
    Replies
    1. அதானே நானும் கேட்கிறேன் சுவாமிஜி, அரே ஓ சாம்பா.

      Delete
  2. பதினைந்து வருடங்களுக்கு முன்பு......

    கணக்கு சரிதான் தல...1998 மே மாசம் ஒரு அரசியல்வாதி கொலை நடந்தது தெரியுமா... அப்போ ஸ்டாண்டர்ட் வேன்ல ஒரு காவலர் குழு, எங்கே கூட்டம் கூடினாலும் துரத்த ஆரம்பித்தார்கள். அப்போது நான் 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் படிப்பை தொடருவதற்கும் இடைப்பட்ட காலம். எங்கள் நண்பர்கள் குழுவில் யாரிடமும் மோட்டார் சைக்கிள் கிடையாது. எல்லாரிடமும் பெட்ரோல் தேவைப்படாத வாகனம்தான். (சைக்கிள்தான் தலைவரே)

    வடக்குவீதி-மயிலாடுதுறை சாலை சந்திப்பில் நின்று நாங்கள் ஏழெட்டு பேர் பேசிக்கொண்டிருந்தபோது (ஜீன்ஸ் படம் பற்றிய உரையாடல் என்ற நினைவு) அந்த ஸ்டாண்டர்ட் வேனில் இருந்து இரண்டு போலீசார் கையில் லத்தியுடன் துரத்த ஆரம்பித்தபோது ஆளுக்கு ஒரு திசையில் சைக்கிளில் ஏறி பறந்தோம். நான் நின்று திரும்பி பார்த்த இடம் வடக்குவீதி-கொடிக்கால்பாளையம் சாலை சந்திப்பு.

    நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்துக்கும் இப்போது நான் சைக்கிளில் பறந்து வந்து நின்று திரும்பி பார்த்த இடத்துக்கும் இடையில் இப்போது நிறைய மாடி வீடுகளும் கடைகளும் முளைத்து விட்டன. ஆனால் அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓட்டு வீடுகள்தான். அதிலும் பாதி வீடுகளுக்கு வடக்குவீதி கொல்லைப்புறமாகத்தான் இருந்தது. தெருவிளக்கில் டியூப் லைட்டுகள் கூட அழுது வடிந்து கொண்டுதான் இருக்கும்.

    ------------------------
    /////////என்ன ஒரு ஆச்சரியம், திருவாரூரில் ஆறுமாதத்திற்குள் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கிறது. கமலாலய மேல்கரையில் புதிதாக காலனி ஒன்று கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. துர்காலயா ரோட்டில் இரண்டு காலனிகள் முளைத்துள்ளன. இவ்வளவு காலனிகளிலும் தங்குவதற்கு ஆட்கள் திருவாரூரில் இருக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.///////

    மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரியை காரணம் காட்டி திருவாரூர் நகருக்குள் 4 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வாடகையில் வீடு கிடைக்காதமாதிரி செய்து விட்டார்கள். அதற்கும் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள்.

    நடுத்தர வருமானம் உள்ள பாவப்பட்ட ஜென்மங்கள் எல்லாம் கிராமங்களை நோக்கி செல்லும்படியாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான். அந்த சம்பவத்திற்கு பிறகு லுங்கியை தூக்கிக் கட்டி சாலையில் நடந்தவர்களின் பின்புறத்தை லத்திகள் பதம் பார்த்தன.

      /// திருவாரூர் நகருக்குள் 4 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வாடகையில் வீடு கிடைக்காதமாதிரி செய்து விட்டார்கள். /// ஆனால் இதற்கு தகுதி வாய்ந்த ஊரா இது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு கிராமங்களின் சந்தையாக திகழ்ந்த திருவாரூர் தான் பிடித்திருந்தது.

      Delete
  3. தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வச்சிகிட்டு, நாம எப்பிடிய்யா மகாதியானம் சுதந்திரமா செய்ய முடியும், பைக்ல போனா கூட ஊதச் சொல்லுராணுவ படுக்காளி பயலுவ...!

    ReplyDelete
    Replies
    1. இதை சொன்னா நம்மளை பைத்தியக்காரனுங்கிறாங்க

      Delete
  4. பசுமை மங்கா
    என் பால்யத்தின் நாட்களை
    சிதைந்து போன
    கிராமமொன்றில் தேடிக்கொண்டிருக்கிறேன்....

    கானகமெல்லாம்
    கான்கிரீட் வனங்களாய்
    மாறிவிட்டிருந்தன...
    மரங்களெல்லாம்
    அலைபேசிக் கோபுரங்களாய்ப்
    பரிணாமித்திருந்தன.....

    ஆடுகளும் மாடுகளும்
    மறந்துபோய்
    ஸ்கூட்டிகளும் ஸ்ப்லண்டர் பிளஸ்களும்
    முற்றத்தை அலங்கரித்திருந்தன....
    அலுப்புக்கு வந்தமரும்
    ஒட்டுத் திண்ணை போய்
    புகுமுக வாயிலும் புதுப் புது
    வடிவங்களில் வந்தாயிற்று....

    தோட்டம் தொரவு
    ஏரி குளம் எல்லாம் போய்
    மாடி வீடு மச்சு வீடு யாவும் வந்தாச்சு...!

    அத்தை மாமா சித்தி சித்தப்பா
    தாத்தா பாட்டி எல்லோரும்
    கரைந்து போக
    அம்மா அப்பா மட்டும்
    வாழும் புத்துலகமாம்
    இந்த வெற்றுலகம்....!

    பக்கத்து வீடு அடுத்த தெரு
    மேலத்தெரு கீழத்தெரு
    நண்பரெல்லாம் காணாது போக
    பேஸ்புக்கும் ட்விட்டரும்
    உடலோடு ஒட்டிக்கிடக்க
    பேஸ்புக்கில் 245 நண்பர்களும்
    ட்விட்டரில் 153 நண்பர்களென்று
    மார்தட்டிக்கொள்கிறார்கள்
    நவீன யுகவாதிகள்....!

    தொலைந்துபோன
    சுவர்க்கம் தேடி
    அலைந்து திரிந்து
    அலுப்புத்தட்டி தாகம் கொண்டேன்
    தாகம் தீர தண்ணீர் கேட்டேன்
    பாக்கெட் 3 ரூபாய் என்று சொல்லி
    எடுத்து நீட்டினான்
    அருந்திக்கொண்டே நடந்து சென்றேன்
    'தவித்த வாய்க்கு தண்ணீரென்ன
    மோரே தருவார்கள் தமிழத்தில்'
    என்று பாட்டி சொன்ன கதையை நினைத்துக்கொண்டே .....!

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை, நன்றி சுவாமிநாதன்

      Delete
  5. நகர மயமாதலில் கிராமங்கள் அழிவது சாபக்கேடு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஸ்

      Delete
  6. அன்பின் செந்தில் - மகாதியானம் நடத்த திருவாரூர் பயணம் சென்று - பயனத்தைப் பற்றிய பதிவும் இட்டமை நன்று - படங்களும் நன்று - மகா தியானப் படங்கள் காணவில்லையே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனா அய்யா

      Delete
  7. குருஜி ,
    மஹா தியான பயண பதிவு அருமை.நம்ம ஊருக்கு வந்து மஹா தியான நுணுக்கங்களை தெரிவித்து /தெளிவித்து அருள் பாலிக்கவேண்டும்.அன்புடன் அடியேன்.(தியான மண்டபம் வீட்டிலேயே உள்ளது மேலும் தீர்த்தம் பாதுகாப்பு துறை)

    ReplyDelete
  8. இவ்வளவு நாளா உங்க பதிவை படிச்சாலும் தமிழ்மணம் ஒட்டு மட்டும் போட்டது கிடையாது ஆனா ஆள்வச்சி ஒட்டு போடுரிங்கனு ஒரு பஞ்சாயத்து ஓடுறதால இனிமே கண்டிப்பா எல்லா பதிவுக்கும் ஏன் ஒட்டு நிச்சயம் :) , சத்தியமா இதுவரை யாருக்கும் தமிழ்மணம் ஒட்டு போட்டது கிடையாது ஏன்னா எனக்கு தெரியாது. :) வேணும்னா ஒட்டு போடாமல் ஓசியில் படிப்பவர்கள் ஒரு பதிவா தேத்திக்குங்க :)

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...