சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Sunday, November 27, 2011

மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம்

காந்தி சுடப்பட்டார் என்ற தகவல், பிரதமர் நேருவுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் அலுவலகத்தில் இருந்து பிர்லா மாளிகைக்கு விரைந்தார். காந்தியின் உடல் அருகே ண்டியிட்டு அமர்ந்து, காந்திஜியின் ரத்தக்கறை படிந்த உடையில் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டு, குழந்தை போல அழுதார்.

சற்று நேரத்திற்குப்பின் காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியும், மந்திரி அபுல்கலாம் ஆசாத்தும் வந்து சேர்ந்தனர். இதற்குள் வெளியே பெருந்திரளான கூட்டம் கூடிவிட்டது. காந்தி இறந்துவிட்டார் என்பதை அறிந்து அவர்கள் கதறி அழுதார்கள். காந்திஜி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

காந்தி உடலைச்சுற்றி பலர் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்கள். பகவத் கீதை வாசிக்கப்பட்டது. காந்தியின் உடலை தைலமிட்டு (லெனின் உடல் போல்) நிரந்தரமாக வைத்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்த யோசனையை, அவர் மகன் தேவதாஸ் நிராகரித்தார். மறுநாளே தகனம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

மறுநாள் அதிகாலையிலிருந்து வெளிநாட்டுத் தூதர்களும், தலைவர்களும், பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்தியவண்ணம் இருந்தனர். காந்தியின் மூன்றாவது மகன் ராமதாஸ், நாகபுரியிலிருந்து 11 மணிக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார். அதன்பின் 11.15 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பீரங்கி வண்டியில் காந்தியின் உடல் வைக்கப்பட்டு, உடல் மூவர்ணக்கொடியால் பார்த்தப்பட்டது.

அந்த வண்டியில் நேரு, பட்டேல் உள்பட சில தலைவர்கள் இருந்தார்கள். முப்படைகளைச் சேர்ந்த 200 வீரர்கள், ராணுவ வண்டியை இழுத்துச் சென்றார்கள். 2 மைல் நீள ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் நடந்து சென்றனர். "மகாத்மா அமரர் ஆனார்" என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர். இடையிடையே பலர் காந்தியடிகளுக்குப் பிடித்தமான "ரகுபதி ராகவ ராஜாராம்" கீதத்தைப் பாடியபடி சென்றனர்.

ஊர்வலத்துக்கு மேலாக மூன்று விமானங்கள் பறந்து ரோஜா இதழ்களைத் தூவின. பீரங்கி வண்டியின் முன்னும், பின்னும் 4,000 ராணுவ வீரர்களும், 1,000 விமானப் படையினரும், 1,000 போலீசாரும், 100 கடற்படையினரும் நடந்து சென்றனர். ஊர்வலம், 5 மைல் தூரம் சென்று, மாலை 4.20 மணிக்கு யமுனை நதிக்கரை அருகில் உள்ள ராஜ கட்டத்தை அடைந்தது.

சந்தனக் கட்டைகளால் ஆன சிதையில் காந்திஜியின் உடல் வைக்கப்பட்டது.4.15 மணிக்கு மகன் ராமதாஸ், கற்பூரத்தைக் கொளுத்தி, "சிதை"க்குத் தீ மூட்டினார். கூட்டத்தினர் கதறி அழுதனர். "சிதை" 14 மணி நேரம் எரிந்தது. அதுவரை தொடர்ந்து பிரார்த்தனைகள் நடந்தன. பகவத் கீதை முழுவதும் வாசிக்கப்பட்டது.

27 மணி நேரத்துக்குப்பின், தீ முழுவதும் ஆறிய பின், அஸ்தி (சாம்பல்) சேகரிக்கப்பட்டது. அஸ்தியுடன் ஒரு துப்பாக்கி குண்டும் கிடந்தது. அஸ்திக் கலசம், பிர்லா மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பெரும் பகுதி, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் நேரு, பட்டேல், ஆசாத், சரோஜினி நாயுடு ஆகியோர் முன்னிலையில் கரைக்கப்பட்டது.

அஸ்தியின் ஒரு பகுதி, சிறு சிறு கலசங்களில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புனித நதிகளிலும், கடலிலும் கரைக்கப்பட்டது. பர்மா, இலங்கை, மலாயா, திபெத் ஆகிய நாடுகளுக்கும் சிறிது அஸ்தி அனுப்பப்பட்டது. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று, நேரு ரேடியோவில் பேசினார்.

அமைதி காக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார். குரல் தழுதழுக்க அவர் கூறினார்: "நமது வாழ்வின் ஒளி விளக்கு அணைந்து விட்டது. தேசத்தந்தை மறைந்துவிட்டார். ஆறுதல் பெறுவதற்கோ, ஆலோசனைகள் பெறுவதற்கோ இனி அவரிடம் போக முடியாது. எனக்கு மட்டுமின்றி, இந்த நாட்டின் கோடானுகோடி மக்களுக்கு இது ஒரு பேரிடி.

"மகாத்மா காந்தி தமது பணிகளை ஏற்கனவே முடித்துக்கொண்டு விட்டார் என்று நினைத்தால் அது தவறு. குறிப்பாக, பல சோதனைகள் சூழ்ந்துள்ள நிலையில் அவர் நம்மிடையே இல்லாதது பயங்கர பேரிடி. "ஒளி விளக்கு அணைந்துவிட்டது என்று நான் கூறினேன். ஒரு விதத்தில் அது சரியல்ல. கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டில் ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த ஒளி விளக்கு, மேலும் பல ஆண்டுகள் ஒளி பரப்பிக்கொண்டிருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஒளி விளக்கை நம் நாட்டிலும், உலகம் முழுவதிலும் காணலாம்" இவ்வாறு நேரு கூறினார். உலகத் தலைவர்கள் அஞ்சலி "புத்தருக்குப்பின் இந்தியாவில் தோன்றிய மாமனிதர் மறைந்துவிட்டார்" என்று உலகத் தலைவர்கள் கண்ணீர் சிந்தினர்.

"அளவுக்கு மீறி நல்லவராக இருப்பதுகூட கொடியதுபோலும்" என்றார், ஜார்ஜ் பெர்னாட் ஷா இந்தியாவின் பெயரையே "காந்தி நாடு" என்று மாற்றலாம் என்று கூறினார், காந்தியின் மரணச்செய்தியை அறிந்ததுமே, அப்போது நடந்து கொண்டிருந்த ஐ.நா. சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்திலும், அந்நாட்டுக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறந்தன.

தீர்க்கதரிசி தனது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும், அது இயற்கையானது அல்ல என்பதையும் முன்பே உணர்ந்த தீர்க்கதரிசி காந்தியடிகள். "நோய்வாய்ப்பட்டோ, விபத்தினாலோ நான் மரணம் அடையமாட்டேன்.ஒரு கொலையாளியின் கையினால், கொள்கைக்காக உயிர் துறக்கும் தியாகியாக உயிர் துறப்பேன்" என்று சில நாட்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர்களிடம் கூறினார். அதன்படியே, ஒரு இந்து தீவிரவாதியின் குண்டுக்கு இரையானார்.

காந்தியின் மறைவினால், இந்திய வரலாற்றில் ஒரு யுகம், ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

ஆரூர் முனா செந்திலு

11 comments:

  1. இந்தியர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பது உண்மைதான். அதைவிட காங்கிரஸ் அரசுக்கும், அன்றய பிரதமர் நேருவிற்கும் அது மிகப்பெரிய பேரிழப்பு. எங்கும், என்நேரமும் மதக்கலவரங்கள் என்ற செய்தி கேட்டால் உடனே, அந்த இடத்திற்கு சென்று, நிலைமயை சமாளிக்கும் தகுதி காந்தியடிகளுக்கு மட்டும் இருந்தது, அவருக்கு போக விருப்பமில்லை என்றாலும் கூட காலில் விழுந்து அனுப்பிவைத்தவர் நேரு. இனி காலில் விழுந்து அனுப்பிவைக்க யாரும் இல்லையே என்ற கவலைதான் அந்த கண்ணீரின் வெளிப்பாடாக இருந்திருக்கும்.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  2. /// MOHAMED YASIR ARAFATH said...

    இந்தியர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பது உண்மைதான். அதைவிட காங்கிரஸ் அரசுக்கும், அன்றய பிரதமர் நேருவிற்கும் அது மிகப்பெரிய பேரிழப்பு. எங்கும், என்நேரமும் மதக்கலவரங்கள் என்ற செய்தி கேட்டால் உடனே, அந்த இடத்திற்கு சென்று, நிலைமயை சமாளிக்கும் தகுதி காந்தியடிகளுக்கு மட்டும் இருந்தது, அவருக்கு போக விருப்பமில்லை என்றாலும் கூட காலில் விழுந்து அனுப்பிவைத்தவர் நேரு. இனி காலில் விழுந்து அனுப்பிவைக்க யாரும் இல்லையே என்ற கவலைதான் அந்த கண்ணீரின் வெளிப்பாடாக இருந்திருக்கும். ///

    அது என்னமோ சரிதான்

    ReplyDelete
  3. வல்லபாய் பட்டேலுக்கு முன்பே காந்தியை கொல்ல திட்டமிடுவது தெரியும். இருந்தும் இவர்களின் அலட்சியத்தினால் தான் காந்தி சுடப்பட்டார். நல்ல பதிவு நீ தொடர்ந்து இது போல் எழுதவே முயற்சி செய்.

    ReplyDelete
  4. ஒரு பக்கம் சினிமா, மறு பக்கம் காந்தி.. கலக்குறீங்க செந்தில்

    ReplyDelete
  5. /// மோகன் குமார் said...

    ஒரு பக்கம் சினிமா, மறு பக்கம் காந்தி.. கலக்குறீங்க செந்தில் ///

    நன்றிண்ணே,

    ReplyDelete
  6. இந்தியாவின் பயங்கரவாதம் உண்மையில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.

    அதன் உச்சகட்டம் தான் பிரிவினையின் போது வடக்கு, வடமேற்குப்பகுதிகளிலும் பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள்.

    இந்தப் படுகொலைகளில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத்தரப்பாரும் ஈடுபட்டிருந்தார்கள்.

    இந்த வகுப்புக் கலவரங்களில் "ஆர்.எஸ்.எஸ்." இன் கைகள் இருந்ததை அதன் வரலாறு அம்பலப்படுத்துகிறது.

    ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங்கள்தான் விடுதலை பெற்ற இந்தியாவில் தீவிர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்ற உண்மையைப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.

    முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட தீவிரவாதத் தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படுகொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.

    அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள்.

    படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

    எனவே விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை 1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.

    ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அவர்கள் திட்டத்தில் ஏற்பட்ட கோளாறால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார்.

    ஜனவரி 30 அன்று கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான்.

    அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாக இருந்தன.

    (கோட்சே காந்திஜியை சுடும்பொழுது கையில் "இஸ்மாயில்" என ஒரு முஸ்லீம் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டு ஒரு மூஸ்லீம் போல் "சுன்னத" தும் செய்திருந்தான்.)

    அவர்களது நோக்கம்: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது.

    மருத்துவமனையின் உள்ளேயிருந்து ஒருவன் ஓடி வந்து, "காந்தியை முஸ்லிம் ஒருவன் சுட்டுவிட்டான்" என்று கூச்சல் போட்டதும்,

    அவனை ஜவஹர்லால் நேரு பற்றி இழுத்து கன்னத்தில் அறைந்து "முட்டாள், காந்தியை சுட்டது ஒரு இந்து" என்று சொன்னதும்,

    தொடர்ந்து வானொலியில் அதை அறிவித்து மிகப்பெரும் மதக்கலவரத்தை தவிர்த்ததும் வரலாற்று உண்மை.

    SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1909:2010-01-08-15-10-30&catid=969:09&Itemid=223

    ReplyDelete
  7. /// Anonymous said...

    Bloody useless posting. You are a useless blogger.Show my comment if you have guts ///

    ஏன் தம்பி சொந்த பெயரில் எழுதவே துப்பில்லையே, உனக்கு எதற்கு இவ்வளவு பொறுப்பில்லாத்தனம், எனது கட்ஸ் பார்த்துட்டல்லீயாஉனக்கு கட்ஸ் இருந்தா விவரங்களுடன் வா தம்பி.

    ReplyDelete
  8. நல்ல சிந்தனை , சிந்திக்க வைக்கும் பதிவு

    ReplyDelete
  9. படேலுக்கும், நேருவிற்குமான விரிசல் அதிகமாவதற்கு காரணமான ஒரு நிகழ்வும் இதுதான். காந்தியின் கொலைக்கு காரணமாக ஆர் எஸ் எஸ் அமைப்பினை தடை செய்ய நேரு வலியுருத்தியும், படேல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் இது ஒரு தனிநபரின் செயலே அல்லாது ஒரு அமைப்பின் செயல் அல்ல என வாதிட்டார், கோட்சே அல்லாது வேரு யாரையும் கைது செய்ய அனுமதிக்கலாகாது என்று வாதிட்டார். பின்பு காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பால், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. பல அரச சாம்ராஜ்ஜியங்களை இணைத்து இந்தியாவிற்கு வலு சேர்த்து தான் பெற்ற நற்பெயரை இந்த சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலால் இழந்தார் படேல்.

    ReplyDelete
  10. /// MOHAMED YASIR ARAFATH said...

    படேலுக்கும், நேருவிற்குமான விரிசல் அதிகமாவதற்கு காரணமான ஒரு நிகழ்வும் இதுதான். காந்தியின் கொலைக்கு காரணமாக ஆர் எஸ் எஸ் அமைப்பினை தடை செய்ய நேரு வலியுருத்தியும், படேல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் இது ஒரு தனிநபரின் செயலே அல்லாது ஒரு அமைப்பின் செயல் அல்ல என வாதிட்டார், கோட்சே அல்லாது வேரு யாரையும் கைது செய்ய அனுமதிக்கலாகாது என்று வாதிட்டார். பின்பு காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பால், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. பல அரச சாம்ராஜ்ஜியங்களை இணைத்து இந்தியாவிற்கு வலு சேர்த்து தான் பெற்ற நற்பெயரை இந்த சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலால் இழந்தார் படேல். ///

    கருத்துக்கு நன்றி அராபத், அபூர்வமான தகவல்களை தருகிறீர்கள்.

    ReplyDelete
  11. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பரே!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...