சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, October 31, 2013

தீபாவளி கொண்டாட்டம் - மறக்க முடியாத நினைவுகள்

தீபாவளி வந்தாலே வீரதீர சாகசங்கள் செய்வது வழக்கமாக இருக்கும். லட்சுமி வெடியை பற்ற வைத்து வானில் பறக்க விடுவது, ராக்கெட்டை கையில் வைத்து விடுவது, புஸ்வாணத்தை கையில் வைத்து கொளுத்துவது, சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு சரத்தை கொளுத்தி கையில் வெடிக்க வைத்து தெருவை ரவுண்ட் அடிப்பது என ஏகப்பட்ட செயல்கள் செய்திருக்கிறேன். கையை சுட்டுக் கொண்டு பல்புகளும் வாங்கியதுண்டு.


எங்களது பூர்வீக ஊர் பட்டுக்கோட்டை நகரம். தாத்தா இருந்த வரை தீபாவளிக்கு திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று கொண்டாடுவதையே பழக்கமாக வைத்திருந்தோம். தாத்தா இறந்த பிறகு சொத்துகள் விற்று என் அப்பாவுடன் பிறந்த 12 பேருக்கும் பைசல் செய்யப்பட்டது.

அதன்பிறகு பங்காளிகள் ஒவ்வொருவரும் பணிநிமித்தமாக வெவ்வேறு ஊர்களுக்கு சென்று செட்டிலானார்கள். அதன் பிறகு சமீபகாலம் வரை பொங்கல் தீபாவளி திருவாரூரில் தான்.

என் 14வயது வரை வடக்கு வீதியில் இருந்தோம். தீபாவளி கொண்டாட்டம் காலை 4 மணிக்கே ஆரம்பித்து விடும். விடியற்கால எழுப்பி அப்பா ஒரு சரம் பண்டிலை கொடுத்து வெடித்து வரச் சொல்லுவார். முதல் சரம் வெடித்ததுமே தூக்கம் கலைந்து உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.


பட்டாசை வெடித்து காலி செய்து விட்டு உள்ளே வந்தால் அம்மாவும் அப்பாவும் வடையும் சுளியனும் சுட்டுக் கொண்டு இருப்பார்கள். மணம் தூக்க ஆரம்பித்து விடும். 4.30 மணிக்குள் பூஜையை போட்டு தலையில் எண்ணெய் தேய்த்து விடுவார் அப்பா.

குளித்து விட்டு வந்ததும் பூஜையறையில் இருந்து அப்பா எடுத்துத் தரும் புதுத்துணியை கையில் வாங்கியதுமே இனம் புரியாத மகிழ்ச்சி முளைத்து ரெக்கை கட்டி பறக்கும். ஆறுமணிக்கு பூஜை படையலை் போட்டுவோம்.

இட்லி சாம்பார் சட்னி வடை சுளியன் தீபாவளி பலகாரங்கள் வைத்து ஒரு கட்டு கட்டி விட்டு கையில் வெடியுடன் தெருவில் இறங்கினால் நான் வீடு திரும்ப மதியமாகி விடும். அதற்குள் அப்பா கடைக்கு போய் ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் வாங்கி அம்மாவிடம் கொடுத்து விடுவார்.




நான் தெருவில் நண்பர்களை சேர்த்துக் கொண்டு ஒரு இடத்தில் கூடி சாகசங்களுடன் வெடிய வெடிப்போம். ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து வந்து அதனுள் வெடியை நுழைத்து வெடிப்பது, கொட்டாங்குச்சியில் வைத்து வெடிப்பது என ஏகப்பட்டது நடந்திருக்கிறது. ஒரு நண்பனுக்கு பாட்டில் உடைந்து கையை கிழித்த பிறகு பாட்டில் சாகசம் மட்டும் கைவிடப்பட்டது.

மதியம் வீட்டுக்கு வந்ததும் தோசை ஆட்டுக்கறி குழம்பு கோழிக்கறி வறுவல் என போட்டுத்தாக்கிய பிறகு சைக்கிளை எடுத்துக் கொண்டு சினிமாவுக்கு போவோம். எனக்கு விவரம் தெரிந்து பத்து வயதில் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த முதல் படம் அவசர போலீஸ் 100. சென்னைக்கு படிக்க வருவதற்கு முன்பு தீபாவளியன்று கடைசியாக பார்த்த படம் அவ்வை ஷண்முகி.

சினிமா முடிந்து வீட்டுக்கு வந்ததும் பலகாரங்களை சாப்பிட்டு விட்டு மறுபடியும் வெடியுடன் தெருவுக்கு இறங்கினால் நள்ளிரவாகி விடும். பால்ய வயது முதல் பதிண் வயது வரை இது தான் தீபாவளி ஷெட்யூல்.


பட்டாசு வாங்குவது முதல் வெடித்து தீர்க்கும் வரை அதன் மீதுள்ள மோகம் தீராது. பட்டாசு விலைப்பட்டியலை பார்த்து ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி அப்பாவுடன் கடைக்கு போய் வாங்கி வந்து அந்த இரவு முழுக்க தூங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பேன்.

மறுநாளிலிருந்து பகல் நேரத்தில் வெடியை வெயிலில் காய வைத்து பக்கத்தில் காவலுக்கு உக்காந்து இருப்பேன். வெயில் தணிந்ததும் பத்திரமாக எடுத்து பரணில் வைத்து விட்டு தான் விளையாட போவேன்.

பிஜிலி வெடியை பிரித்து மாற்று வெடி செய்வது, நாலு யானை வெடி மருந்துகளை ஒன்று சேர்த்து குமுதம் புத்தகத்தில் சுற்றி உலக்கை வெடியாக மாற்றி வெடிப்பது, புஸ்வாணத்தை பிரித்து ஒரு பேப்பரில் மருந்தை கொட்டி கொளுத்திப் பார்ப்பது என அப்போதே ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். ஆனால் இப்போது, போன வருடமும் சரி, இந்த வருடமும் சரி ஒரு வெடி கூட வாங்கவில்லை.

சென்னை வந்த பிறகு தீபாவளிக்கு திருவாரூர் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கும். பாரிமுனையில் இருந்த திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து தான் பேருந்துகள் புறப்படும். என்று கிளம்புவது என்பதை முன்பே திட்டமிட முடியாது. அதனால் முன்பதிவு செய்யாமல் புறப்படும் அன்று பேருந்து நிலையத்திற்கு சென்றால் கூட்டம் அள்ளும்.

இப்போது போல் சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படாது. டிக்கெட்டுக்காக டோக்கன் வாங்க கியூவில் நின்று சிரமப்பட்டு சில சமயம் அதுவும் கிடைக்காமல் இரவு முழுவதும் நின்று கொண்டே பயணமானதும் உண்டு.

அவ்வளவு சிரமத்திற்கிடையில் பயணம் செய்து ஊரில் இறங்கியதும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அந்த நாளை என்ஜாய் செய்து அன்று இரவே கிளம்ப வேண்டியிருக்கும். என் குரூப்பிலேயே நான் மட்டும் தான் சென்னையில் அதுவும் அப்ரெண்டிஸ் படித்தேன்.

தனியாக பேருந்தில் ஏறியதும் மனதில் இருந்த உற்சாகமெல்லாம் வடிந்து போகும். இரவு முழுவதும் அழுது கொண்டே பயணம் செய்து சென்னைக்கு வந்து இறங்கியதும் வகுப்புக்கு ஓட வேண்டியிருக்கும்.

எவ்வளவு சிரமப்பட்டாலும் தீபாவளிக்கு திருவாரூர் போவது தவறியதே இல்லை. என்னைப் போல் எல்லோருக்கும் அந்த உற்சாகம் சொந்த ஊரில் கிடைக்கும். சென்ற வருடம் பாட்டி இறந்து போனதால் தீபாவளி கிடையாது. அதனால் போக முடியவில்லை.

கடந்த எட்டு வருடங்களாக தோல்வியையும் கசப்புகளையும் மட்டுமே சந்தித்து வந்த நான் இந்த வருடம் தான் அதுவும் இப்போது தான் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வை அனுபவிக்கிறேன். இந்த நேரத்தில் பயணம் இருக்கக்கூடாது என்பதால் இந்த வருட தீபாவளி பண்டிகை திருவாரூரில் கொண்டாடுவதை சந்தோஷமாக ரத்து செய்கிறேன்.

ஆரூர் மூனா

ஆரம்பம் - சினிமா விமர்சனம்

காலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மாவட்ட தலைமை, நகர தலைமை கிடையாது. ஆனால் ரசிகர்களின் உற்சாகத்துக்கு மட்டும் அளவே கிடையாது. போன தீபாவளியன்று துப்பாக்கி காலை 4 மணிக்காட்சி பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்த ஓப்பனிங் மாஸ் விஜய்க்கு கூட கிடையாது.


என்ன ஒரு ஸ்கிரீன் ப்ரசன்ஸ். என்ன ஒரு அழகு. என்ன ஒரு வசீகரம். என்ன ஒரு ஸ்டைல். ரஜினிக்கு அடுத்து சந்தேகமில்லாமல் அஜித் தான். படம் முழுக்க அஜித் அஜித் அஜித் தான். அஜித் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி சந்தேகமில்லாமல் டபுள் கொண்டாட்டம் தான்.

இந்த படம் ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். நான் அந்தப்படத்தை பார்க்கவில்லை. அதனால் ஒப்பிட்டு பார்ப்பதை விட்டு விடுவோம்.

 ரசிகர்களின் உற்சாகம்

அஜித் மும்பையில் ஒரு உதவி கமிசனர். ஒரு தீவிரவாத தாக்குதலில் அவரது சக நண்பர் ராணா டகுபதி இறந்து விடுகிறார். அதில் புல்லட் ப்ரூப் ஊழல் நடந்திருப்பது தெரிய வருகிறது. ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சரும் கமிசனரும் அஜித்தின் குடும்பத்தை கொன்று விடுகின்றனர்.

அதில் இருந்து தப்பிக்கும் அஜித்தும் நயன்தாராவும் ஆர்யாவை பயன்படுத்தி வில்லன்கள் கூட்டத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். இறுதியில் வில்லன்களை வீழ்த்தி படத்தை முடித்து வைக்கிறார் அஜித்.

முதல்பாதியில் தாடியுடன் வரும் அஜித் வசீகரிக்கிறார். பிட்டாக இருக்கிறார். எப்போதும் போல் கோட்டு கோபி போல் இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் மறந்தும் கோட்டை கையில் எடுக்கவில்லை. டிசர்ட் தான் படம் முழுக்க அருமையாக இருக்கிறது.

 காலை 5.30மணிக்கு திரையரங்கம் முன் நான் செல்வின் சிவா

ஆர்யா பாத்திரத்திற்கு சரியான தேர்வு. அவ்வப்போது நச் வசனங்களில் சிரிக்கவும் வைக்கிறார். முதலில் அஜித்திடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் போதும் இடைவேளைக்கு பிறகு உண்மை தெரிந்து உதவும் போதும் நன்றாகவே செய்திருக்கிறார்.

நயன்தாரா ம்ஹூம் ஒன்னும் சாதாரணமாக சொல்வதற்கில்லை. ஒரு வில்லனை கொல்வதற்காக ஒரு சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு எண்ணெய் வழியும் உடம்புடன் வரும்போது அப்படிேய டென்சனாகிட்டேன். சமநிலை வருவதற்கு பத்து நிமிடம் பிடித்தது. நாயனம் வாசிச்சவனெல்லாம் பாக்கியசாலிங்க.

 இடைவேளையில் காரசார விவாதம்

டாப்ஸி வழக்கமான தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகியாக வருகிறார். ஒரு பாடலுக்கு ஆர்யாவுடன் வந்து செல்கிறார். அவ்வப்போது பேபி பேபி என்று கொஞ்சுகிறார். நமக்குதான் கடுப்பாகிறது.

கிஷோர் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு நச்சென பொருந்துகிறார். அதுல் குல்கர்னியை வேஸ்ட் செய்து இருக்கிறார்கள். ராணா டகுபதியை தெலுகு மார்க்கெட்டுக்காக போட்டு இருக்கிறார்கள். பத்து நிமிடம் வந்து செல்கிறார்.

அஜித்தும் ஆர்யாவும் பணத்தை களவாடும் காட்சி தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். ஆனால் எனக்கு காட்சி சற்று சுமாராகத்தான் தெரிகிறது. இன்னும் இன்ட்ரஸ்டிங்காக யோசித்து இருக்கலாம்.

பாடல்கள் எல்லாமே கடுப்பேற்றுகி்ன்றன. தேவையில்லாத இடத்தில் எல்லாம் பாடல்கள் வருகின்றன. ஹீரோ இன்ட்ரோ சாங்க் சுமாராக இருக்கிறது.

முதல்பாதியில் சுவாரஸ்யமே இல்லை. காலங்காத்தால பார்ப்பதால் கொட்டாவி வரவைத்தது. பின்பாதி தான் படத்தின் பக்கா பேக்கேஜ். ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் போறவன் வர்றவனையெல்லாம் சுட்டுக்கிட்டு இருக்கப் போறாங்களோ.

ஆர்யாவின் அந்த குண்டு பிளாஷ்பேக், படத்தின் ஓட்டத்தை இன்னும் குறைக்கிறது. அதை அப்படியே வெட்டி எறிஞ்சிடலாம். அது படத்தின் சுவாரஸ்யத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.

அஜித்தை விட்டு இந்த படம் என்று பார்த்தால் சற்று தொங்கலாகத்தான் இருக்கும். ஆரம்பம் என்று பெயர் வைத்ததற்காக படத்தில் ஏகப்பட்ட காட்சிகளில் ஆரம்பம் ஆரம்பம் என்று சொல்வது சற்று நெருடத்தான் செய்கிறது.

அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் டபுள் அடிப்பொளி. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஆனால் பொதுமக்களுக்கு ஒரு முறை பார்க்கலாம் ரகமே.

ஆரூர் மூனா

Tuesday, October 29, 2013

பஞ்சேந்திரியா - ஆரம்பம் முதல்நாள் முதல்காட்சி

கொஞ்ச நாளா பதிவு பக்கமே வரமுடியல. இன்னைக்கும் விட்டுட்டா சரியா இருக்காதுன்னு தான் வலுக்கட்டாயமா உக்காந்து பதிவு போடுறேன். ச்சே வேலைக்கு போயி சமைச்சி பாத்திரம் கழுவி வீடு கூட்டி ஒரே குஷ்டமப்பா.

--------------------------------------------

ஆரம்பம் படத்திற்கு காலை நாலு மணிக்காட்சி ராக்கி தியேட்டரில் இருந்தது. கங்காவில் 5 மணிக்காட்சி இருந்தது. எப்பொழுது விஜய் டிவி படத்தை வாங்கியதாக தகவல் வந்ததோ உடனே அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. வாழ்க ஜனநாயகம்.

நேற்று நான் எனக்கும் போலி பன்னிக்குட்டிக்கு மட்டும் டிக்கெட் வாங்கியிருந்தேன். இன்று சிவாவுக்கும் செல்வினுக்கும் என் நண்பன் அசோக்குக்கும் டிக்கெட் வாங்க வேண்டி வந்ததால் மறுபடியும் பிருந்தா திரையரங்கிற்கு சென்று விசாரித்ததால் டிக்கெட் முடிந்து விட்டது என்று தெரிவித்தார்கள்.

பிறகு நம்ம பவரை பயன்படுத்தி எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து ஒரு வழியாக டிக்கெட் வாங்கி விட்டேன். ஆக 31ம் தேதி காலை ஆறு மணிக்கு நான், செல்வின், சிவா மற்றும் என் நண்பர்களுடன் பிருந்தாவில் காலை ஆறு மணிக்காட்சி ஆரம்பம்.

-----------------------------------------------------

----------------------------------------------------
குறும்பட ஆர்வம் வந்து ஏகப்பட்ட குறும்படங்கள் பார்த்தாச்சு. எதைப் பார்த்தாலும் ஒரே கேமிரா ஆங்கிள் நினைப்புத்தான். ஏன் இந்த ஷாட்டை இப்படி வைத்தான் அப்படி வைத்தான் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

நானும் செல்வினும் தான் முதலில் துவக்கினேன். பதிவர்களில் நிறைய பேர் இப்போது தொடர ஆரம்பித்து இருக்கிறார்கள். நல்ல விஷயம். இவர்களில் யாராவது ஒருவர் உயரம் தொடப்போவது நிச்சயம்.

மயிலனை வைத்து ஒரு கைக்குட்டையும் சில காதல்களும் என்ற குறும்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். வசனத்தை ஒரு பிரபல பதிவர் எழுதுகிறார். இன்னும் பதினைந்து நாட்களில் எல்லா ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளும் முடிந்து விடும். அதன் பிறகு இரண்டு நாள் படப்பிடிப்பு பத்து நாள் போஸ்ட் புரொடக்சன் முடித்து வெளியிட திட்டம்.

எதுவரை போகிறது என்று பார்ப்போம்.

---------------------------------------------------------


 -----------------------------------------------------

வடஇந்தியாகாரனுங்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் இருந்து ஒருவன் சென்னைக்கு வேலைக்கு வருகிறான். ஒரு வருடத்தில் அவன் கிராமத்தில் உள்ள பெரும்பாலானோரை வேலைக்கு கொண்டு வந்து விடுகிறான்.

இப்பொழுது ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கும் அதுதான் நடக்கிறது. ஆர்ஆர்பி எக்சாம் எழுதி வேலை கிடைத்து சென்னை வந்த ராஜஸ்தானி ஒருவன் இப்பொழுது அப்ரென்ஸில் சேர்த்து விட நானூறு ஊர்க்காரர்களை அழைத்து வந்து இருக்கிறான். காலியிடம் என்னவோ 215 தான்.

நம்ம ஆட்களுக்கு இந்த விஷயத்தை சொல்லிச் சேரச் சொன்னால் அடபோங்க அண்ணே. நான் சாப்ட்வேர் இஞ்சினியர் ஆவேன் அல்லது ஆபீசர் ஆவேன் என்பது தான் பதிலாக இருக்கிறது.

பத்தாவது முடித்த ஒருவன் ரயில்வேயில் அப்ரெண்டிஸ் முடித்து பிறகு ஆர்ஆர்பி எக்சாமில் தேர்ச்சியடைந்தால் ஆரம்ப சம்பளமே 21000 ரூபாய். 3ம் வகுப்பு ஏசி பாஸ். வேலைப்பளு கிடையவே கிடையாது. ஆனால் இந்த வேலைக்கு வருவதற்கு நம்ம ஆட்களுக்கு கசக்கிறது.

ஆரூர் மூனா

Monday, October 21, 2013

குறும்படம் இயக்குவது எப்படி

இயக்குனர் நண்பர் சுரேஷ் அழைப்பின் பேரில் நேற்று நான் செல்வினுடன் ஏவிஎம் பிரிவியூ தியேட்டரில் ஓட்டம் என்ற குறும்படத்தின் பிரிவியூ ஷோவுக்கு சென்றிருந்தேன். படம் பற்றி சொல்ல எதுவுமில்லை. ஆனால் வெறும் 15 நிமிடம் மட்டுமே ஓடிய இந்த குறும்படத்தின் பட்ஜெட்டும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் ரொம்பவே மலைக்க வைத்தது.


சினிமாவுக்கு சம்பந்தமேயில்லாமல் என்னைப் போலும் செல்வினைப் போலும் இருப்பவர்கள் பட்ஜெட் அதிகமாகி விடுமோ என்று பார்த்து பார்த்து செலவுகளை குறைத்துக் கொண்டு குறும்படமெடுக்க ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறோம்.

இவ்வளவு காசு செலவு பண்ணி ஒரு குறும்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்னும் போது தான் யோசனையாக இருக்கிறது, இத்தனைக்கும் இயக்குனர் சொந்தமாக செலவு பண்ணியிருக்கிறார். பட்ஜெட் ஒன்றரை லட்சமாம். இப்பொதெல்லாம் ஒரு குறும்படத்தை போட்டுக் காட்டி வாய்ப்பு கேட்பது பேஷனாகி போய் விட்டது.

சினேகா, பிரசன்னா, நடிகை சங்கவி, ஏஆர்முருகதாஸின் தம்பி வத்திக்குச்சி நாயகன் இன்னும் ஏராளமான சிறப்பு விருந்தினர்களுடன் மூன்று ஷோ பிரிவியூ. ஒரு ஷோவுக்கு 100 பேர் படம் பார்த்திருப்பார்கள். இயக்குனர் மாத்தியோசிச்சி தான் வாய்ப்பு தேடியுள்ளார்.


நடிகை சங்கவி என்னா கலரு, என்னா ஸ்ட்ரக்சரு ப்பா அப்படியே டென்சனாயிட்டேன். இன்னும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் தோன்றியது. சீனியர் நடிகையை சைட் அடிக்கிறான் என்று கிண்டல் செய்வார்களே என்று தான் பம்மினேன். ஆனால் என்னை விட ஒரு வயது தான் சங்கவி மூத்தவர் என்பது கூடுதல் தகவல்.

இவர்களுக்கான கவர்ச்சி தான் இவர்களின் பலம். நான் இதுவரை எந்த சினிமா விழாக்களுக்கும் சென்றதில்லை. சினிமாக்காரர்கள் இருக்கும் இடத்திற்கும் சென்றதில்லை. ஆனால் இவர்கள் சந்திக்கும் ஒரு இடம் எப்படியிருக்கும் என்பதை நேற்று தான் ஆவென்று வாயை திறந்து கொண்டே பாா்த்தேன்.


சாதித்த நடிகர்கள் முதல் சாதிக்கத் துடிக்கும் துணை இயக்குனர்கள் வரை அங்கு சந்தித்தேன். ஒருவர் தாடியுடன் (இவர் குறும்படத்தின் இயக்குனரல்ல, ஒரே சமயத்துல ரெண்டு பேரும் தாடி வச்சி நாம அடையாளம் சொல்லவே சிரமப்பட வேண்டியிருக்கிறது) வந்திருந்தார். இயக்குனர் சுரேஷின் நண்பர். எங்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கும் போது புதிதாக படம் இயக்க வாய்ப்பு வந்திருப்பதாக சுரேஷ் தெரிவித்தார்.




சுரேஷ் மற்றும் அவரது துணை இயக்குனர் நண்பர்களிடம் எங்களது குறும்படத்தை பற்றி விவரிக்கும் போது இயக்கம் என்றால் என்ன என்றும் படபிடிப்பு என்றால் செய்ய வேண்டிய நடைமுறைகள் பற்றியும் சுரேஷ் விவரித்தார். அனுபவப்பட்ட துணை இயக்குனர்கள் முன்பு நாம் ஒன்றுமேயில்லை என்று எனக்கு புரிந்தது.

படபிடிப்பில் லைட்டிங் செய் வேண்டிய அவசியம் பற்றியும் தொழில் முறை நடிகர்களாக இருந்தால் தான் சாலையில் நடக்கும் ஷூட்டிங்கில் கூச்சமில்லாமல் நடிப்பார்கள் என்றும் சுரேஷ் சொன்ன போது நிறையவே புரிந்தது. ஆனால் புரிய வேண்டியது இன்னும் மலை அளவுக்கு இருப்பது தான் நிஜம்.

இருந்தும் முன்னே பின்னே ஷூட்டிங் பார்த்திராத எந்த சினிமாவின் டிஸ்கசனிலும் அமர்ந்திராத நான் வீ்ட்டில் தனியாக உட்கார்ந்து திரைக்கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே காமெடியாக இருக்கிறது.

இருந்தாலும் இத்தனை வருட சினிமா பார்த்த அனுபவங்களும், சினிமாவின் மீதான ஆசையும், சினிமாவின் கவர்ச்சியும் தான் இந்த குறும்படம் இயக்க வேண்டும் என்ற ஆசையை கொளுந்து விட்டு எரிய வைக்கிறது.

செல்வின் கதை திரைக்கதையை தயார் செய்து ஸ்டோரி போர்டு கூட தயார் செய்து விட்டு லொகேசன் பார்க்க சென்றுள்ளார். இ்ன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஷூட்டிங் முடிந்து அடுத்த மாதம் உங்கள் பார்வைக்கு வந்து விடும். நாம கொஞ்சம் ஸ்லோ, எழுத்து வேலைகள் முடியவே இரண்டு மாதம் ஆகிவிடும். மூன்று மாதத்திற்கு பிறகு தான் ஷூட்டிங்.

ஒரு கை பார்த்துடுவோம். என் அதிகபட்ச உழைப்பை போட்டு குறும்படத்தை எடுக்கிறேன். நல்லாயிருந்தா மக்கள் பார்வைக்கு, இல்லாவிட்டால் என் கம்ப்யூட்டர் ரீசைக்கிள்பின்னுக்கு என்று இருந்து விட வேண்டியது தான்.

ஆரூர் மூனா

Thursday, October 17, 2013

நாக்கில் நீர் ஊற வைக்கும் டாஸ்மாக் சைட்டிஷ்கள்

மனைவிக்கு உடல்நலம் சரியில்லாததால் கொஞ்ச நாளாக வீட்டில் நான் தான் சமைத்துக் கொண்டு இருக்கிறேன் மனைவிக்கும் சேர்த்து. இப்பத்தான் நல்ல சாப்பாட்டின் அருமை தெரிகிறது. பெரிய பெரிய ஹோட்டல்களை விடுங்கள். டாஸ்மாக் பாரில் கிடைக்கும் சில நல்ல சைட்டிஷ்கள் கூட நினைவுக்கு வந்து தொலைக்கிறது.


குரோம்பேட்டையில் உள்ள ஒரு பாரில் முட்டை முந்திரி போட்டி என்ற சைட்டிஷ் கிடைக்கும். மிகப் பிரமாதமாக இருக்கும், போட்டியை தோசைக்கல்லில் போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மசாலாக்கள் சேர்த்து அதில் வறுத்த முந்திரியை போட்டுத் தருவார்கள். அந்த மணம் ம்ம்ம்ம், ஒரு தேக்கரண்டி சுவைத்தாலே ஒரு மடங்கு போதை கூடுதலாக ஏறும்.

அயனாவரத்தில் உள்ள ஒரு பாரில் சுடச்சுட இறா வறுவல் அப்புறம் ப்ரூட் சாலட் இரண்டையும் வாங்கி ஒரு டூத்பிக்கில் ஒரு தர்பீஸ் துண்டு ஒரு இறா துண்டு திராட்சை சொருகி ஒரே நேரத்தில் வாயில் வைத்து இழுத்து கடித்தால் ஒரு சேர கிடைக்கும் சுவை இருக்கிறதே அடடா அடடா சொர்க்கம் அங்கு தெரியும்.


பெரம்பூர் பட்மேடில் உள்ள பாரில் ரசவடை கிடைக்கும். அதில் உள்ள ஸ்பெசல் என்னவென்றால் ரசம் சாதா ரசம் கிடையாது. நண்டு ரசம். சரவணபவன் வடை சைசில் பெரியதாக இருக்கும் மெதுவடையை ரசத்தில் ஊறவைத்து துண்டு துண்டாக்கி சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பராக இருக்கும்.

அப்புறம் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் சிறுமசால் வடை இன்னும் சூப்பராக இருக்கும். நமது குரூப்பிலேயே செல்வின் அரசன் சும்மா உள்ளே வந்து வேடிக்கை பார்க்கும் சிவா வரை அந்த வடைக்கு ரசிகர்கள். கேட்டவுடன் கிடைக்காது. கேட்டதும் அரைமணிநேரம் கழித்து தான் தருவான். அவ்வளவு பேமஸ் அந்த வடை.
 

கேகேநகரில் உள்ள ஒரு பாரில் பணியாரம் பயங்கர பேமஸ். நம்ம பட்டிக்ஸ் இந்த பணியாரத்திற்காகவே அந்த பாருக்கு எங்களுடன் வருவார். பணியாரத்தை விட அதற்கு இணையாக கொடுக்கப்படும் கார குழம்பு அப்பப்பா. ஒரு விள்ளல் பணியாரத்தை பிட்டு கார குழம்பில் தொட்டு வாயில் வைத்தால் வழுக்கிக் கொண்டு போகும்.

திருவாரூரில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பாரில் கொடுக்கப்படும் முட்டை கலக்கி பிரமாதமாக இருக்கும். என்ன சுவை என்ன சுவை. அந்த சூட்டுடன் வாழையிலையில் போட்டுத் தரும் போது ஒரு வாசனை வரும். அது இன்னும் இன்னும் என்று நம்மை சொல்ல வைக்கும்.


2004ல் பம்மலில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக 20பேர் ஒரு ஆறுமாசம் தங்கியிருந்தோம். அப்போது பாரில் சைட்டிஷ் வாங்கி கட்டுப்படியாகாததால் பர்மனன்ட்டாக ஒரு கேஸ் ஸ்டவ் சிலிண்டர் வாங்கி வைத்து தினம் இரண்டு டிரே முட்டை வாங்கி மொட்டைமாடியில் நடுவில் ஸ்டவ்வை பற்ற வைத்து அதனை சுற்றி அமர்ந்து கொண்டு ஆப்பாயில் போட்டுக் கொண்டே சரக்கடிப்போம்.

சுடச்சுட ஆப்பாயில் தோசைக்கல்லில் இருந்து எடுத்ததும் அப்படியே வாயில் போகும் போகும் போது கிடைப்பது தான் பேரானந்தம். பகல் முழுவதும் கடும்வேலையாக இருக்கும். நைட்டு அந்த நேரத்திற்கு நண்பர்கள் 20பேர் சூழ மொட்டை மாடியில் இந்த சூழ்நிலையில் நேரத்தை செலவிட்டது இப்பவும் பசுமையாய் என் நினைவு வங்கியில்.

விருதுநகரில் வெறும் பரோட்டா, சாத்தூரில் தட்டை வடை, மன்னார்குடியில் கடலை போட்ட சிக்கன், தூத்துக்குடியில கொத்து பரோட்டா, பட்டுக்கோட்டையில் வறுத்த நண்டு என இன்னும் பல மறக்க முடியாத டாஸ்மாக் சைட்டிஷ்கள் இருக்கின்றன.

ஆனால் இன்று நான் மொட்டை ரசம் தொட்டுக் கொள்ள கொத்தமல்லி துவையலுடன் என் டின்னரை கடக்க இருப்பது தான் சோதனை. நாளைக்கு கிரைண்டரில் மாவு அரைக்க வேண்டியிருப்பது சோதனை மேல் சோதனை.

ஆரூர் மூனா

Friday, October 11, 2013

நய்யாண்டி - சினிமா விமர்சனம்

இன்னிக்கி மனசு முழுக்க ராமைய்யா ஒஸ்தாவய்யா பார்க்க வேண்டும் என்று தான் அடித்துக் கொண்டது. ஆனால் கூட வந்த நண்பனின் வற்புறுத்தலால் தான் நய்யாண்டி போக வேண்டியதாயிற்று.


சற்குணத்தின் மேல் இருந்த அதிதீவிர நம்பிக்கையினால் தான் தைரியமாக படத்தில் நுழைந்தேன். ஆனால் பாருங்கள் முகத்தில் சாணியை மொழுகி அப்பியிருக்கிறார்கள். தனித்துவமான இயக்குனர்கள் பெரிய நடிகர்களுடன் ஒன்று சேரும் போது காணாமல் போவதை இந்த தமிழ் சினிமா நிறைய பார்த்திருக்கிறது. அந்த வரிசையில் இனி சற்குணமும் சேருகிறார்.

சற்குணத்தின் பலம் நேட்டிவிட்டி தான் முதல் படமான களவாணியி்ல் ஒரத்தநாடு அதனை சுற்றியுள்ள கிராமங்கள் சரியான அளவிட்டும் இயற்கையாகவும் இருக்கும். வாகை சூடவாவில் கூட அப்படித்தான். வாகை சூடவா படம் பார்த்து க்ளைமாக்ஸில் நெகிழ்ந்து போய் கண்ணில் நீர் விட்டவன்.


எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப தலையில் அடித்துக் கொண்டு இருக்கிறேன். அதற்காக படம் பார்க்கவே முடியாமல் சூர மொக்கை என்று சொல்ல முடியாது. வாகை சூடவா இயக்குனரின் அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பில் போனது தான் பிரச்சனை.

படத்தின் கதை பெரிசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. 20 வருசத்துக்கு முன்பு வள்ளி வரப் போறா என்று ஒரு படம் வந்தது. பாண்டியராஜன் ஹீரோ, வீட்ல விசேங்க படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்தவர் தான் ஹீரோயின்.

அந்த படத்திற்கு மூலம் ஒரு மலையாளப் படம் ஜெயராம் ஷோபனா நடித்தது. சூப்பர் ஹிட்டான அந்த படத்தை ரீமேக்கி சொதப்பியது தான் வள்ளி வரப் போறா. அந்த படத்தை இன்னும் சொதப்பி எடுத்து இருக்கும் படம் தான் நய்யாண்டி.


ஒரு குடும்பம் மூன்று ஆம்பளைப் பசங்க, மூத்தவர்கள் இருவருக்கும் வயது கடந்து திருமணமாகவில்லை. வெளியூருக்கு வரும் கடைசி பையனுக்கு ஒரு காதலும் அதனால் திருமணமும் முடிந்து விடுகிறது.

வீட்டுக்கு தெரிய படுத்த முடியாமல் அந்த கடைசி பையன் ஹீரோயினை வேலைக்காரி போல் வீட்டுக்கு அழைத்து வருகிறான். அவளை மற்ற இரண்டு பசங்களுக்கும் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்க கடைசியில் உண்மை தெரிய வந்து குடும்பம் ஒன்றாவதே கதை.

நான் மேற்சொன்ன மூன்று படங்களின் கதையும் ஒன்று தான்.

இதில் ஸ்பெசலாக தஞ்சை ஏரியாவை இந்த கதையின் மேல் தோய்த்து தந்து இருக்கிறார் சற்குணம். இப்ப வரைக்கும் எனக்கு சற்குணத்தின் திறமை மேல் நம்பிக்கை இருக்கிறது. தனுஷ் இதில் நடித்ததனால் காம்பரமைசுக்காக இந்த படம் இந்த வடிவத்தை அடைந்து இருக்கும் என நினைக்கிறேன்.

சில காமடிகள் சிரிக்க வைக்கிறது. பல காமெடிகள் கடுப்படிக்கின்றன. இன்னும் சொல்லி உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை.

நன்றி

நஸ்ரியாவைப் பத்தி சொல்லனும்னு எதிர்பார்த்தீங்கன்னா ஸாரி. எனக்கு வண்டை வண்டையா வார்த்தை வருது. இது பொதுஇடம் என்பதனால் நாகரீகம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

எப்பொழுதும் ஒரு படத்தை பார்த்து நான் விமர்சனம் எழுதும் அளவுக்கு இந்த பதிவில் கண்ட்டெண்ட் இருக்காது. நான் என்ன செய்ய சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

நய்யாண்டி - நந்தவனத்தில் ஒரு ஆண்டி, போட்டான் தலையில் ஒரு ஒலக்கை வெடி

ஆரூர் மூனா

Tuesday, October 8, 2013

வடசென்னை திருப்பதி குடை ஊர்வலம்

சென்னையில் கிட்டத்தட்ட 17 வருசமா இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட எந்த கோயில் திருவிழாக்களிலும் கலந்து கொண்டதேயில்லை. ஆனால் நான் படிக்கும் போது அயனாவரம் பகுதி நண்பர்கள் திருப்பதி குடை பற்றி சிலாகித்து பேசுவார்கள். நான் பெரிதாக கண்டு கொண்டதே கிடையாது.


ஆனால் இந்த சனியன்று உடன்பணிபுரிபவர்களால் யானை கவுனி முதல் அயனாவரம் வரை திருப்பதி குடையுடன் பயணமாக வேண்டியிருந்தது. வடசென்னையில் இவ்வளவு பெரிய திருவிழாவையும் மக்களின் உற்சாகத்தையும் பார்த்து மிரண்டு விட்டேன்.

சனியன்று அயனாவரம், பெரம்பூர், பெரியார் நகர், ஜவஹர்நகர், திருவிக நகர், பட்மேடு பட்டாளம், யானை கவுனி, ஓட்டேரி ஏரியாவில் மக்கள் தெருவுக்குத் தெரு ஏழுமலையான் விக்ரகம், போட்டோ ஏதோ ஒன்றை வைத்து பூஜித்து மக்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை, நீர்மோர், ரோஸ்மில்க், பானகம் போன்றவற்றை வழங்கிக் கொண்டு இருந்தனர்.

என்னுடன் வந்த மற்றவர்கள் குடையைப் பார்ப்பதில் பிஸியாக இருக்க நான் மட்டும் தெருத் தெருவாக வழங்கப்பட்டுக் கொண்டு இருந்த பிரசாதங்களை சுவைப் பார்க்கத் தொடங்கினேன். அட அட அடடா என்ன சுவை, அதுவும் அடித்த கொடூர வெயிலுக்கு ரோஸ்மில்க் இதமோ இதம்.


எப்பப் பார்த்தாலும் பிஸியாகவும் கடும் டிராபிக்காவும் இருக்கும் வடசென்னையில் இந்த ஒருநாள் பக்திமயமாய் குட்டித் திருப்பதியாகவே காட்சியளித்தது. நமக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.


எப்போதும் தண்ணீர்லாரிக்காக சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் பட்மேடு மக்கள் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று பஜனை பாடியது எனக்கு புது அனுபவமே.

அது போல் எல்லாப் போஸ்டர்களிலும் திருப்பதி குடை கவுனி தாண்டுகிறது என்றே போட்டு இருந்தது. எனக்கு பயங்கர சந்தேகம். அது என்னடா கவுனி தாண்டுகிறது என்று போடுகிறார்களே. அதற்கு என்ன காரணம் என்று.

அது போல் எனக்கு கவலையளித்த விஷயம் இந்த முறை ஏகப்பட்ட போஸ்டர்களில் இந்துத்வ சங்கங்களின் பிரதிநிதிகளின் படங்கள் தான் ஆக்ரமித்து இருந்தது. இதுவரை இப்படி பார்த்ததில்லை. இது நம்ம ஊருக்கு நல்லது இல்லை என்றே நினைக்கிறேன்.

என்னுடன் பணிபுரிந்த நாமம் போட்ட நாராயணனை கேட்டேன். ஒரு காலத்தில் ஏழுமலையான் கவுனியில் யாரிடமோ கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்த பகுதி வரும் போது நிற்காமல் குடையை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விடுவார்களாம். இது 500 வருடமாக நடந்து வரும் சம்பிரதாயம் என்று கூறினார்.

எனக்கு தெரிந்து சென்னை உருவாகியே 380 வருடங்கள் தான் ஆகிறது என்று நினைக்கிறேன். ஆனால் நம்ம ஆட்கள் கதை கட்டி விடுவதில் உலகிலேயே சிறந்தவர்கள் ஆச்சே. விட்டா ஏழுமலையானின் மாமியார் வீடு அங்கு தான் இருந்தது என்று சொன்னாலும் சொல்வார்கள்.

ஆரூர் மூனா

Monday, October 7, 2013

பஞ்சேந்திரியா - ரயில்வே வேலையும், கடுப்பேற்றிய பதிவர் சந்திப்பும்

பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்றவங்க தன் வீட்டுக்கு அருகிலேயே இடம் இருப்பது மாதிரி பார்த்துக்குறாங்க. ஐந்து நிமிசம் முன்னாடி கிளம்புறது உடனே வந்துடுறது அவங்களுக்கு வசதியா இருக்கலாம். நான் கிளம்பனும்னா ஒரு திட்டம் போட்டு கிளம்பி இடத்துக்கு வந்து சேரவே மணிநேரத்திற்கு மேல் ஆகும். நாம போய் சேர்ந்தவுடனே சந்திப்பை முடிச்சிட்டு கிளம்பிடுறது, நாம மட்டும் கேனையன் மாதிரி எங்க போறதுன்னு தெரியாம சுத்திக்கிட்டு இருக்கிறது. பலமுறை இது எனக்கு நடந்து இருக்கிறது.

நேற்றும் அது தான் நடந்தது. நான் வீட்டிலிருந்து கிளம்பி பதிவர் சந்திப்புக்கு வந்து சேரும் நேரத்தை விட குறைவு பதிவர் சந்திப்பு நடந்த நேரம். ஒருத்தர் என்னன்னா இன்னிக்கி சீன ஓப்பன் டென்னிஸ் பைனல் இருக்கு நான் பார்த்தாகனும், கிளம்புறேன்னு கிளம்புறார். அடுத்தவங்க அடுத்தடுத்த வேலைகளை பார்க்க போயிட்டாங்க.

நான் மட்டும் என்ன செய்யிறதுன்னு தெரியாம மண்டை காஞ்சிப் போயி தேவையே இல்லாம டிநகரில் இருந்து பாரீஸ் கார்னர் வரை வந்து அங்கு ஒரு மொக்க ஓட்டலில் சாப்பிட்டு பர்மா பஜாரில் மேய்ந்து சில டிவிடிக்களை வாங்கி கொளுத்தும் வெயிலில் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மற்றவர்கள் எல்லாம் புத்திசாலிகள் நான் மட்டும் தான் அடிக்கடி கேனையனாகிடுறேன். # ச்சே என்ன மாதிரியான பதிவர்கள் இடையே வாழ்கிறோம். இருங்கவே அடுத்த பதிவர் சந்திப்பை சந்திர மண்டலத்துல ஏற்பாடு செய்கிறேன்.

----------------------------------

எங்கள் அண்ணன் கவியுலகின் கண்ணன் பதிவுலகின் முடிசூடா மன்னன் கவியாழி அவர்கள் தான் முதன் முதலாக வெட்டி பிளாக்கர்ஸில் நட்சத்திர பதிவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அண்ணன் பெயரை அட்மினில் இருக்கும் பெரிய மனிதர்கள் யாருமே பரிந்துரைக்கவில்லை.

இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கும் வெட்டி பிளாக்கர்ஸின் ஓனர் வீடு சுரேஷையும் வெட்டி பிளாக்கர்ஸின் அட்மின்கள் சதீஷ் சங்கவி, மயிலன், சிவக்குமார், செல்வின், சங்கரலிங்கம் சார், தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோரையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது எல்லாம் வளர்ந்து கொண்டு இருக்கும் கவிஞர்களின் திட்டமிட்ட சதி. தக்காளி இருங்கவே வெட்டாத பிளாக்கர்ஸை ஆரம்பித்து உங்களுக்கு ஆப்பு அடிக்கிறேன்.

----------------------------------

 1100க்கு ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் சீனு


---------------------------------------------

பதிவைப் படிக்கும் நண்பர்களே பதிவர் தங்கங்களே

ஏதோ ஒரு வேலையில் இருந்து சரியான எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களே, ஒரு அரிய வாய்ப்பு. ரயில்வேயில் கலாசி வேலைக்கு 5000 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

விண்ணப்பிக்க கடைசித் தேதி 21.10.2013.

ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். http://www.rrcchennai.org.in/ இந்த வெப்சைட்டை பாருங்கள்.

விண்ணப்பித்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். எந்த பார்மேட்டில் கேள்விகள் இருக்கும் என்பதையும் எந்த மாதிரி படித்தால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

----------------------------------

அதுபோல் பெரம்பூர் கேரேஜில் அப்ரெண்டிஸ் படிப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும். குறைந்த பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு.

FC OBC மாணவர்கள் 40 ரூபாய்க்கு டிடி எடுத்து அப்ளிக்கேசன் பெற்று நிரப்பிக் கொடுத்து ஹால்டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். SC/ST மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசம்.

அப்ரெண்டிஸ் முடித்த பிறகு ரயில்வே வேலை கிடைப்பது சுலபமாக இருக்கும்.

நன்றி நண்பர்களே.

இன்றைய பதிவு : சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

ஆரூர் மூனா

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

B.Com முடித்தவர்கள் சூப்பர் மார்க்கெட் அக்கவுண்டன்ட் வேலைக்குத் ததேவை

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

வேலை நேரம் 12 மணிநேரம்

தங்குமிடம் இலவசம்

-------------------------------------------------

BE (ECE), DECE முடித்தவர்கள் வேலைக்குத் தேவை

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

வேலை நேரம் 12 மணிநேரம்

தங்குமிடம் இலவசம்

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் சூப்பர்வைசர் வேலைக்குத் தேவை

சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர்.

வேலை நேரம் 12 மணிநேரம்

உணவு இலவசம்

-------------------------------------------------

BE (Civil) முடித்தவர்கள் Engineer (Civil) வேலைக்கு தேவை.

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

உணவு தங்குமிடம் இலவசம்

-------------------------------------------------

MBA Accounts முடித்தவர்கள் அக்கவுண்ட்டன்ட் வேலைக்கு தேவை

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

உணவு தங்குமிடம் இலவசம்
-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் Food Packing வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

Opening for Graduates who have minimum 2 years of experience in IT industry at Korea.


If you are exactly eligible and interested, kindly forward the below mentioned details of yours.


Company Name                  :- SAMSUNG, Korea
Education                            :- B.Sc. IT or Higher
Salary                                  :- Singapore dollar $3000
Visa Type                           :- Employment Visa
Accommodation                :- Free
Food                                    :- "No"

Category 1:
Department:- System Solution - S/W Lab
Areas of Expertise:- Windows Application Development (more than 5 years experience), GUI Development - C++, MFC, WinAPI
Expectation:- English Proficiency: Upper Intermediate (Speaking & Writing)

Category 2:
Department:- Printing Solution Divsion - S/W Platform Lab
Areas of Expertise:- Security Engineering - C and Java Programming

Category 3:
Department:- Printing Solution Division - S/W Platform Lab
Areas of Expertise:- Network Protocol Development (more than 5 years of experience); Embedded System - C/C++, Java; Analyzing & processing of Ethernet or 802.11 packet
Other:- Security Background - SSL & Crypto

Category 4:
Department:- Printing Solution Division, S/W - Copier Dev. Part
Areas of Expertise:- Linux, Java, WEB & Android experience
Expectation:- English Proficiency: Advanced (Speaking & Writing)

Category 5:
Department:- Printing Solution Division, S/W - ABAT (Auto Build Auto Test)
Areas of Expertise:- Design Test Script & Development in JAVA, WEB, ANDROID or C-Environment
Expectation:- English Proficiency: Advanced (Speaking & Writing)
-------------------------------------

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Wednesday, October 2, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - சினிமா விமர்சனம்

ரெண்டு மூணு கதைகள், அவற்றை சரியான விகிதத்தில் கலந்து ஒரு இடத்திற்கு கொண்டு வந்து முடிக்கும் சிம்புவின் வானம் பட டைப் கதை தான். ஆனால் இதில் ஒரு கதை மட்டும் சுமாராக இருப்பதால் நம்மளை தியேட்டரை விட்டு வெளியே இழுக்கிறது. மற்றபடி வித்தியாசமான முயற்சிதான்.


கொஞ்சம் அசந்திருந்தாலும் வ குவாட்டர் கட்டிங் ஆகியிருக்க வேண்டிய படம் இது. ஆனால் கடைசி அரைமணிநேர காமெடி கலாட்டாக்கள் படத்தை சற்று தூக்கி நிறுத்தியிருக்கிறது. இருந்தாலும் சூது கவ்வும் போல் பரிபூரண கலாட்டா படம் பார்த்த திருப்தி இல்லை.

சுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி, அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம், பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின், அவருக்கும் சுவாதிக்கும் காதல், அவரது வேலையின் பிரச்சனைகள், குடித்து விட்டு வண்டியை ஓட்டி ஒரு பெண்மணிக்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார், உயிருக்கு போராடும் இந்த பெண்மணியை காப்பாற்ற வேண்டும்


அஸ்வின் குடித்த ஒயின்சாப்பில் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளிகள் விஜய்சேதுபதி செல்போனை திருடி தப்பித்து விடுகின்றனர், உயிருக்கு போராடும் பெண்மணிக்கு விஜய்சேதுபதியின் அரிய வகை ரத்தம் தேவை. கொலை செய்த இடத்தில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவன்

இவை எல்லாம் சரியாகி விஜய்சேதுபதியின் ரத்தம் பெண்மணிக்கு கிடைத்ததா, அஸ்வினின் காதல் என்னவானது, கொலையாளிகள் சிக்கினரா, செல்போன் விஜய்சேதுபதிக்கு திரும்ப கிடைத்ததா, விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவர் தப்பித்தாரா போன்ற கேள்விகளுக்கு பதிலை குடி குடியை கெடுக்கும் என்ற மெஸேஜை வைத்து முடித்து நம்மளை வீட்டுக்கு அனுப்புகின்றனர்.


படம் நான் எதிர்பார்த்து போன அளவுக்கு இல்லை, சுமார் மூஞ்சி குமார் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனாலும் படத்தில் சில காட்சிகள் அடித்து துவம்சம் பண்ணியிருக்கின்றன. சூரியின் கேரக்டரும் ஓகே ஓகேயில் சந்தானத்தின் காதலியாக வருவாரே அவரின் கேரக்டரும் ஓவர்டோஸாகி சற்று ஜெர்க்கை கொடுக்கின்றன.

படம் எப்படியிருந்தாலும் விஜய்சேதுபதிக்கு இந்த படம் மற்றுமொரு வெற்றிப்படிக்கல் தான். கேரக்டரைசேசனிலும் டயலாக் டெலிவரியிலும் மனிதர் பின்னி எடுக்கிறார். நந்திதா மீது ஒரு தலை காதல் கொண்டு அவரை டார்ச்சர் செய்யும் போதும்,

பசுபதியிடம் தன் காதலை மொக்கை இங்கிலீஷூடன் விவரிக்கும் போதும் இடைவேளைக்குப் பிறகு ஆஃப்புக்கு அலையும் போதும், க்ளைமாக்ஸில் காதலியை இம்ப்ரெஸ் செய்ய ரத்தம் கொடுக்க செல்லும் போதும் அசத்தோ அசத்து என்று அசத்தியிருக்கிறார்.


பாலாவாக அஸ்வின் சற்று படித்து காதலியிடமும் உயரதிகாரியிடமும் சூழ்நிலைக்கேற்ப பொய் சொல்லி சமாளிக்கும் இன்றைய நடுத்தர வர்க்க இளைஞர்களை கண்முன் நிறுத்துகிறார். அதுவும் ஒரே வீட்டில் இருந்து நான்கு நண்பர்களும் உயரதிகாரியிடம் வெவ்வேறு சூழ்நிலையில் இருப்பதாக நம்ப வைக்கும் காட்சியில் விசில் பறக்கிறது.

நந்திதா விஜய்சேதுபதியை காதலிக்காமல் திட்டிக் கொண்டே இருப்பதும் கடைசி நேர இக்கட்டிற்காக விஜய்சேதுபதியிடம் நெருங்கி வந்து ரத்தம் கொடுக்க வைப்பதும், கடைசியில் காதலுக்கு முந்தைய நிலையை அடையும் போதும் நன்றாக இருக்கிறது.

சென்னையில் வாழும் டிபிக்கல் பெண் கதாபாத்திரம் ஸ்வாதிக்கு. ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் கண்டுபிடிக்கும் போதும், காதலன் பொய் சொல்வதை கண்டுபிடித்து அவன் எங்கு இருப்பான் என யூகித்து அங்கு சென்று பிடிக்கும் போதும் பிரச்சனைகளில் அவனை விட்டு விலகிச் செல்லாமலும் சிறப்பாக செய்துள்ளார்.

பசுபதி சுகர்பேஷண்ட் தாதா. நேரத்திற்கு சாப்பிட முடியாமல் விஜய்சேதுபதியின் காதலுக்கு பஞ்சாயத்து செய்யும் போது சிரிக்க வைக்கிறார். ஒவ்வொரு எக்ஸ்பிரசனும் தேர்ந்த நடிகர் என்பதை தெரிய வைக்கிறது.

படத்தில் விசில் அள்ளும் ஒரு காட்சி தமிழ் பையனை மலையாளி நண்பன் ஒருத்தன் கூடவே இருந்து தண்ணியடித்து விட்டு தமிழன் போதையில் மேனேஜரை திட்டும் போது செல்போனில் ரெக்கார்டு செய்து அதனை அப்படியே மேனேஜரிடம் காண்பித்து ப்ரமோஷன் கேட்கும் காட்சி. அதற்கு காம்ப்ரமைசாகத்தான் மேனேஜர் கதாபாத்திரத்தையும் மலையாளியாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இன்னும் பல கதாபாத்திரங்கள் கன்னாபின்னாவென்று பேசி கடுப்பை கிளப்புகின்றன. உதாரணத்திற்கு ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக வருபவர் டயலாக் டெலிவரி எரிச்சலூட்டுகிறது.

ரோபோ சங்கருக்கு கூட சிறிய பாத்திரம், சிறப்பாக செய்துள்ளார்.

படம் முழுக்கவே டாஸ்மார்க்கில் காட்சிகளை வைத்து விட்டு குடித்து விட்டு வண்டியை ஓட்ட வேண்டாம் என்று மெஸேஜ் சொல்லும் படம். அட்றா அட்றா.

ஒரு முறை பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Tuesday, October 1, 2013

ராஜாராணி படம் பார்த்த கதை

வெள்ளியன்று என் முதல் சாய்ஸாக இருந்தது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தான். ஆனால் காலையில் முதல் காட்சி பெரும்பாலான திரையரங்கங்களில் வெளியாகவில்லை. அடுத்த ஆப்சன் என்னவென்று தேடிய போது ராஜாராணி அம்பத்தூர் திரையரங்கங்களில் காலை 8 மணிக்காட்சி இருக்கிறது என்பதை அறிந்து புறப்பட முடிவு செய்தேன்.


ஊரிலிருந்து அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். வேலை நேரத்தில் சினிமாவுக்கு போகிறேன் என்று சொன்னால் அப்பா டின்னு கட்டி விடுவார் என்பதால் அவசரமாக அம்பத்தூரில் ஒரு வேலை இருக்கிறது. அதனை முடித்து விட்டு வருகிறேன் என்று வீட்டில் கப்சா விட்டு கிளம்பினேன்.

கடும் டிராபிக்குகிடையில் அம்பத்தூர் செல்ல லேட்டாகியது. ராக்கி வரை செல்ல முடியாது அதனால் முருகனில் பார்த்து விடலாம் என்று வண்டியை முருகனுக்கு விட்டேன். தியேட்டர் வாசலில் ஈ காக்கா இல்லை, ஆனால் போஸ்டரில் காலை 8 மணிக்காட்சி உண்டு என்று போட்டிருந்தது.

மண்டை காய்ந்து போய் வண்டியை வெளியில் நிறுத்தி உள்ளே சென்று விசாரித்தால் யாருமே முன்பதிவு செய்யாததால் காட்சியை ரத்து செய்து விட்டார்கள் என்று தெரிந்தது. வட போச்சே என்று மறுபடியும் வண்டியை கிளப்பி ராக்கிக்கு விரைந்தேன்.


வாசலில் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்தது. இரண்டு திரையரங்கிற்கும் எவ்வளவு வித்தியாசம். வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு டிக்கெட் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். ஒரு குரூப் பால் பாக்கெட்டை பிய்த்து பாலபிஷேகம் செய்ய விரைந்து கொண்டு இருந்தனர்.

பட்டாசு வாசலில் வெடித்து பட்டையை கிளப்பிக் கொண்டு இருந்தது. என்னடா இது ஆர்யாவுக்கு இவ்வளவு வெறிப்பிடித்த ரசிகர்களா என்று யோசித்துக் கொண்டே டிக்கெட் எடுத்தேன்.

டிக்கெட் எடுத்துப் பார்த்தால் சி வரிசையில் நம்பர் இருந்தது. இருக்கும் கூட்டத்திற்கும் சி வரிசை டிக்கெட்டிற்கும் சம்பந்தமேயில்லையே என்று குழம்பிப் போய் வண்டியை எடுக்கப் போனால் ரேய் நானா இக்கடக்கி ராரா என்று சத்தம் கேட்டது.


அப்பத்தான் ஸ்ரைக்கானது அடடா இன்று பவன் கல்யாணின் அத்தண்டிக்கடி தாரடி படம் ரிலீஸ் ஆச்சே, பயலுக அத்தனைப் பேரும் கொல்டிங்க என்று. வாசலில் வேல்டெக் கல்லூரியின் பவன்கல்யாண் ரசிகர் மன்றம் என்ற பேனர் வேறு.

சென்னையிலேயே இப்படி என்றால் ஆந்திராவில் படம் பயங்கரமாக களை கட்டியிருக்கும். முன்பே தெரிந்திருந்தால் ஆந்திராவுக்கு சென்றிருப்பேன். ச்சே சான்ஸை மி்ஸ் செய்து விட்டேன் என்று வருந்திக் கொண்டே அரங்கினுள் சென்றேன்.

மொத்தமே ஆறு வரிசைகள் மட்டுமே நிறைந்திருந்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் காட்சி பத்து பேருடன் ஏஜிஎஸ்ஸில் பார்த்ததை விட இது எவ்வளவோ தேவலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

படமும் தொடங்கியது, சந்தோஷத்துடன் ஒரு வழியாக மெளனராகத்தின் சாயலிலேயே முடிந்தது.

படம் முடிந்து வெளியில் வந்தால் எனக்கு முன்னால் வெளியில் வந்த கல்லூரி மாணவர்கள் அலறிக் கொண்டு உள்ளே வந்தனர். என்னடாவென்று வெளியில் வந்து பார்த்தால் தான் தெரிந்தது. டிவியில் இருந்து வெளியில் வருபவர்களை படம் எப்படியிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு இருந்தனர்.

காலேஜ் கட் அடிச்ச பசங்க சினிமாவுக்கு போனது தெரிந்து விடுமே என்று தான் உள்ளே வந்து இருக்கின்றனர். நாமும் பந்தாவாக வெளியில் வந்து படம் சூப்பர், என்று பாராட்டி விட்டு வெளியில் வந்தேன். வெயில் சுட்டெரித்தது.

இருந்தாலும் விமர்சனம் டைப்படித்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் வெயிலை பொருட்படுத்தாமல் அவ்வளவு டிராபிக்கு இடையிலும் வீட்டிற்கு வந்து டைப் அடித்த பிறகு தான் தண்ணீரே குடித்தேன் என்றால் என் கடமை உணர்ச்சியை என்னவென்று சொல்வது.

ஆரூர் மூனா

டிஸ்கி 1 : நல்ல வேளையாக நாளை காலை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் ஏஜிஎஸ்ஸில் காலை எட்டு மணிக்காட்சி இருக்கிறது. நாளை லீவு என்பதால் அப்பாவுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தாகி விட்டது.

டிஸ்கி 2 : வேறு வழியில்லை ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்த்த கதை கூட தனிப்பதிவாகிறது. நீங்கள் படித்து தான் ஆகவேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...