சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, May 30, 2012

பொன்னியின் செல்வன் - புத்தக விமர்சனம்

நான் ஒரு புத்தகக் காதலன். டீக்கடையில் பஜ்ஜி சாப்பிடும் பேப்பர் முதல் பெரிய புத்தகங்கள் வரை படிப்பதில் ஒரு ஆசை கொண்டவன். சிறுவயதில் குமுதம், ஆனந்த விகடன் மற்றும் நாவல்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தவன். சென்னை வந்த பிறகே புகழ்பெற்ற நாவல்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படிக்க ஆரம்பித்து வருடா வருடம் குறைந்தது 50 புத்தகங்களையாவது வாங்கி விடுவேன்.

பொதுவாக புத்தக விமர்சனம் எழுதும் பழக்கம எனக்கில்லை. நான் அந்த அளவுக்கு வளரவில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததால் எழுதவில்லை. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மிகவும் ஆசைப்பட்டு வாங்கியது பொன்னியின் செல்வன் நாவலும் காவல் கோட்டம் நாவலும் தான். ஏற்கனவே காவல் கோட்டத்தை படித்து முடித்து விட்டேன்.

20 நாட்களுக்கு முன்பு தான் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆரம்பித்தேன். LKM பப்ளிகேசனின் 5 பாகங்களும் அடங்கிய தொகுதி இது. மொத்தம் 850 பக்கங்களை கொண்டது. பொதுவாக சரித்திர நாவல்கள் கொஞ்சம் போரடிப்பது போல் எனக்கு தோன்றும். ஆனால் இதற்கு முன் படித்த பார்த்திபன் கனவு தான் போரடிக்காமல் படித்த சரித்திர நாவல்.

இந்த முறை பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்ததும் நானும் வல்லரையன் வந்தியத் தேவனுடன் குதிரையில் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். அப்பப்பப்பா என்ன வகையான நாவல் இது. கொஞ்சம் கூட போரடிக்காமல் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மனதோடு ஒன்றி விட்டது.

எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள். வந்தியத்தேவனில் தொடங்கி பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், அருள்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், பெரிய சம்புவரையர், கந்தன்மாறன், சேந்தன்அமுதன், கருத்திருமன், ஆழ்வார்க்கடியான், பார்த்திபேந்திரன், நந்தினிதேவி, குந்தவை நாச்சியார், பூங்குழலி, வானதி தேவி, மணிமேகலை மற்றும் பலப்பல கதாப்பாத்திரங்கள். அவற்றிற்கான சிறப்பான குழப்பமில்லாத பாத்திரவடிவமைப்புகள் அசத்துகின்றன.

அதன் கதை சுருக்கம் இது தான். தஞ்சாவூரில் சோழ அரசர் சுந்தர சோழன் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரி்ன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் அரண்மனை கட்டி வடபகுதியில் மற்ற படைகள் வந்துவிடாதபடி அரணாக இருக்கிறார். இளையமகன் அருள்மொழிவர்மன் (பின்னாளில் ராஜராஜ சோழன்) இலங்கையில் படையெடுத்து சென்றுள்ள சோழப்படைக்கு தலைமையேற்று இருக்கிறான். ஒரே மகளான குந்தவை நாச்சியார் பழையாறை அரண்மனையில் இருக்கிறார்.

ஆதித்த கரிகாலன் தன் தந்தைக்கு அந்தரங்க நண்பனும் வாணர் குல வீரனுமான வல்லரையன் வந்தியத்தேவன் மூலமாக தன்னுடன் வந்து தங்கியிருக்குமாறு ரகசிய செய்தி அனுப்புகிறான். ஆனால் தஞ்சை அரண்மனையில் பாதுகாப்பு ஏற்றிருக்கும் சின்னப் பழுவேட்டரையரிடம் பல பொய்களைச் சொல்லி அரசரை சந்தித்து ஒலையை கொடுக்கிறார்.

வந்தியத்தேவன் பொய் சொல்லியிருப்பது சின்ன பழுவேட்டரையருக்கு தெரிய வரவே வந்தியத்தேவனை சிறைப்பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரிடமிருந்து தப்பித்து குந்தவை நாச்சியாரை சந்திக்கிறான். இருவருக்கும் காதல் மலர்கிறது. குந்தவையிடம் பெரிய பழுவேட்டரையரும் அவரது இளம் மனைவியான நந்தினி தேவியும் சேர்ந்து அரசரின் பெரியப்பா மகன் மதுராந்தகருக்கு பட்டம் சூட்ட சிற்றரசர்களை திரட்டும் விஷயத்தை சொல்கிறான்.

குந்தவை பழுவேட்டரையர்களுக்கு தெரியாமல் இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனிடம் இந்த செய்தியைச் சொல்லி அழைத்து வருமாறு கூறுகிறார். பல எதிர்ப்புகளை மீறி பூங்குழலி என்ற பெண்ணின் உதவியுடன் படகில் இலங்கை சென்று அருள்மொழிவர்மனை சந்தித்து விஷயத்தை சொல்லி அழைத்து வருகிறான். வழியில் புயலை கடந்து வருகிறார்கள்.

அதற்குள் பாண்டிய அரசினைச் சேர்ந்த நந்தினி தேவி மேலும பல பாண்டிய ஒற்றர்கள் மூலம் சோழ அரசை கவிழ்க்கவும் சோழ அரசரையும் அவரது மகன்களையும கொல்ல திட்டமிடுகிறார். நந்தினி தேவி திட்டமிட்டபடி நடந்ததா? யார் அடுத்த அரசாக பதவியேற்றார்கள்? குந்தவை நாச்சியார் வந்தியத்தேவனை கைப்பிடித்தாரா? அரசரையை கைப்பிடிப்பேன் என்று சபதம் செய்த சாதாரண குலப்பெண் பூங்குழலி சபதத்தை நிறைவேற்றினாரா? அருள்மொழிவர்மனை திருமணம் செய்தாலும் சிங்காதனம் ஏறமாட்டேன் என்று சபதம் செய்த வானதி தேவியின் நிலை என்ன? மற்றும் பலப்பல என்ற கேள்விகளுக்கு விடை நாவலில் உள்ளது.

20 நாட்களும் சற்று போரடித்தால் உடன் சுறுசுறுப்பாக நாவலை படித்தாலே போதும் என்ற நிலை இருந்தது. தற்போது படித்து முடித்து விட்டதால் சற்று சோகம் வந்ததென்னவோ நிஜம். நீங்களும் என்னைப் போல் நாவலைப் படித்து பரவசமடையுங்கள்.

இது நன்றாக வந்திருக்கிறது என்று விமர்சனம் வந்தால் மேலும் 500 புத்தக விமர்சனங்கள் உறுதி. சற்று போரடிப்பதாக படிப்பவர்கள் நினைத்தால் இத்துடன் நிறுத்தப்படும்.

ஆரூர் மூனா செந்தில்


Friday, May 25, 2012

த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் திறந்த பெரிசுகள்


மிக சமீபத்தில் எனது நண்பரின் லேப்டாப்பில் இந்த புகைப்படத்தை காணநேர்ந்தது. அடப்படுபாவிகளா இந்த வயசுல இதெல்லாம் தேவையா?



இந்த லட்சணத்துல த்ரிஷாவின் சிரிப்பு , திகட்டாத இனிப்பு ன்னு பஞ்ச் டயலாக் வேற. எல்லாப் பெருசுகளுக்கும் குறைந்தது அறுபத்தஞ்சு வயசு இருக்கும். பேரன் பேத்தி எடுத்த வயசுல இதெல்லாம் தேவையா?

எல்லாம் கலிகாலம்டா சாமி.

ஒரு சந்தேகம், ஒருவேளை த்ரிஷாவுக்கு வயசானப்புறம் அமலா பால் க்கு புதிய ரசிகர் மன்றம் ஒப்பன் பண்ணுவானுங்களோ.


ஆரூர் மூனா செந்தில்


Thursday, May 24, 2012

மக்கள் நாயகன் ராமராஜன்

ராமராஜன். மிகச்சில வருடங்களே தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அந்த உச்சத்தை வைத்து ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தை பிடித்தவர். என்னுடைய 10லிருந்து 13 வயதுக்குள் அந்த காலக்கட்டம் அடங்கும். அப்பொழுது எல்லாம் திருவாரூரைப் போன்ற சிறு நகரங்களில் ரசிகர் மன்றங்கள் திறப்பது என்பது ரசிகர்களிடையே மிகப்பிரபலமான விஷயம். எங்க ஊரு பாட்டுக்காரன் வந்தவுடனேயே எங்கள் தெரு அண்ணன்கள் எல்லாம் ராமராஜனுக்கு ரசிகர் மன்றம் திறக்க முடிவெடுத்தார்கள். எனக்கும் ராமராஜனைப் பிடிக்கும் என்பதால் அந்த வயதிலேயே மன்றத்தில் சேர்ந்து விட்டேன். பேனர் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலைகளை செய்ததால் எனக்கு துணைச் செயலாளர் பதவியும் கொடுத்தார்கள்.

எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன் ரசிகர் மன்ற துணைச் செயலாளர், எப்படியிருக்கு என் பதவியின் பெயர். அதன் பிறகு வந்த ஒவ்வொரு படங்களும் எங்களுக்கு திருவிழா தான். படம் வெளியாவதற்கு முன் தினம் தியேட்டரில் பேனர் கட்டுவது ஊரில் உள்ள முக்கிய சுவர்களில் ரசிகர் மன்றத்தின் சார்பாக போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலையெல்லாம் எனக்கு தான். அவரது பிறந்த நாள் வந்தால் அன்றைய தினத்தின் இரவில் டி.வி, டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து ராமராஜனின் படங்களை வரிசையாக திரையிடுவது போன்ற கேளிக்கைகள் எல்லாம் வழக்கமாக நடக்கும். மனசுக்கேத்த மகாராசா படம் வந்த போது தியேட்டரை அதகளம் செய்து விட்டோம்.

கரகாட்டகாரன் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் போது தியேட்டருக்கு ராமராஜன் வந்தார். அதற்கென லாட்டரி கடைக்கு சென்று பழைய லாட்டரிகளை பண்டல் பண்டலாக வாங்கி வந்து அவற்றை பொறுமையாக சுக்கு நூறாக கிழித்து மேடைக்கு மேல் ஐந்து பெட்டிகள் அமைத்து அவற்றில் நிரப்பி பெட்டியின் அடிப்பகுதியில் சிறு திறப்பு ஏற்படுத்தி அவற்றை நூலுடன் இணைத்து நூலை இழுத்தால் பெட்டியிலிருந்து பேப்பர்கள் அவரின் மீது விழும் படி செய்தோம். விழா முடிந்தவுடன் அது போல் செய்தது யாரென விசாரித்து எங்கள் மன்றத்தினர் அனைவரையும் அழைத்து பாராட்டி விட்டு சென்றார். அப்பொழுது எடுத்த போட்டோ வெகு நாட்களுக்கு மன்றம் இருந்த தியாகுவின் வீட்டு வெளிவராந்தாவில் இருந்து பிறகு நண்பன் சாம்பாரங்கனின் வீட்டு பரணில் கிடந்து பிறகு எங்கு சென்றதென்றே தெரியவில்லை.

எனக்கு தெரிந்து ராமராஜனின் அனைத்து படங்களுக்கும் முதல் நாள் திரையரங்குக்கு சென்று பார்த்து இருக்கிறேன். அதற்காக வீட்டில் எங்கப்பாவிடம் பெல்டால் அடியும் வாங்கியும் இருக்கிறேன். ஆனால் அவர் மீதான ஆர்வம் குறையவேயில்லை. அவரின் எல்லா படங்களின் பாட்டு புத்தகங்களும் என்னிடம் இருந்தன. அத்தனை பாடல் வரிகளும் பாடியவர் பெயர் விவரங்களும் பாடலின் ராக விவரங்களும் எனக்கு மனப்பாடமாக இருந்தன. காலம் மாறத் தொடங்கியது.

ராமராஜனுக்கு படங்கள் தோல்வியடையத் தொடங்கின. புதிய நடிகர்கள் அப்பொழுது சினிமாவில் நுழையத் தொடங்கினர். மன்றம் சோர்வடைய ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல மன்றமே கலைக்கப்பட்டது. பிறகு அதே ரசிகர் மன்ற குழு வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்தனர். நமக்கு சாதாரண மன்றங்கள் எல்லாம் வேண்டாம், மாவட்டத் தலைமை அல்லது நகரத் தலைமை ரசிகர் மன்றம் தான் வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்பொழுது பிரசாந்துக்கு எங்கள் பகுதியில் ரசிகர் மன்றமே இல்லாததால் நாம் ஆரம்பித்தால் மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் கிடைக்கும் என்று முடிவு செய்து மன்றம் துவக்கினர். அது போலவே மாவட்ட தலைமை ரசிகர் மன்றத்திற்கான அனுமதியும் பிரசாந்திடம் இருந்து கிடைத்தது. எனக்கு பிரசாந்த் பிடிக்காததால் நான் வெளி வந்து ஏற்கனவே எங்கள் தெருவில் இருந்த கலைவேந்தன் ரஜினி ரசிகர் மன்றத்தில் இணைந்து விட்டேன்.

அத்துடன் ராமராஜன் காலம் முடிவடைந்தாலும் எனக்கு வெகு நாட்களுக்கு அவரது படங்கள் மற்றும் பாடல்கள் நினைவில் இருந்தன. நாட்கள் செல்லச் செல்ல எல்லாம் மறந்து விட்டது. ஆனாலும் இப்போதும் எனது மிகச்சிறந்த இளையராஜா பாடல்கள் தொகுப்பில் ராமராஜனின் பாடல்களே அதிகம் இருக்கும். இப்பொழுதும் அந்த காலக்கட்டத்தைய ராமராஜன் படங்கள் டிவியில் போட்டால் படம் முடியும் வரை வேறு சேனல்கள் மாற்றாமல் பார்ப்பது என் வழக்கம்.

அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு ராமராஜனிடம் உதவியாளராக இருந்த எங்கள் தூரத்து சொந்த பெரியப்பா ராதாகிருஷ்ணனின் வீட்டு சுபகாரியத்திற்கு ராமராஜன் வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன்யாருமே சென்று அவரிடம் நலம் விசாரிக்காமல் இருந்தது மட்டுமல்லாமல் கண்டுகொள்ளாமலும் இருந்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, நான் மட்டும் அவரிடம் சென்று நலம் விசாரித்து விட்டு வந்தேன். ஒரு மனிதனின் வீழ்ச்சி இந்த அளவுக்கா இருக்க வேண்டும்.

இன்றும் என் மனைவி காலம் மாறி விட்டது அஜித், விஜய், தனுஷ், சிம்பு ஆகியோர் வந்து விட்டனர். ஆனால் நீங்கள் இன்னும் ராமராஜனின் ரசிகர் நிலையை மாற்றவேயில்லையே, நீங்கள் இன்னும் ராமராஜன் ரசிகர் என்று சொன்னால் உங்களை எல்லோரும் ஊர்நாட்டான் என்று கூறுவார்கள் என்று கூறி கிண்டலடிப்பாள். ஆனால் அந்த பால்ய வயதிலிருந்து பதின் வயதுக்குட்பட்ட காலங்களில் மனதை கொள்ளையடித்த ராமராஜனின் ரசிப்புத் தன்மையை என்னால் மாற்ற முடியவில்லையே


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : நேற்றிரவு என் பெரியப்பாவுடன் குடும்ப விழாவுக்கு பத்திரிக்கை வைப்பதற்காக திரு. ராமராஜன் அவர்களை சந்திக்க சென்றிருந்தேன். கொடுத்து விட்டு வந்து படுத்தபிறகும் அவரின் நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தது. அதற்காக தான் இந்த மீள் பதிவு.

Wednesday, May 23, 2012

சிங்காரியின் கதை - ஒரு வெளங்காவெட்டி விமர்சனம்

சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் 3மணிக்கு ஒரு நபரை அயனாவரம் அருகில் சந்திக்க வேண்டியிருந்தது. அவரது அலுவலகம் சென்ற பின் தான் அவர் தாமதமாக மதிய உணவு சாப்பிட சென்றிருக்கிறார் என்றும் 4 மணிக்கு மேல் தான் வருவார் என்றும் தெரிந்தது.

நேரத்தை கடத்தலாம் என்னடா செய்யலாம் என்று யோசித்து சரி ஐசிஎப் கிரவுண்ட் சென்று உட்கார்ந்தால் கேலரியின் இருக்கைகள் கொதிக்கிறது. முடியவில்லை. எனவே எழுந்து வந்து வண்டியை எடுத்து அயனாவரம் பக்கம் விட்டேன். கோபிகிருஷ்ணாவில் இஷ்டம் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. சரி நேரத்தை கடத்த சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து வண்டியை திரையரங்கத்திற்கு விட்டேன்.

திரையரங்க வளாகத்தில் கோபிகிருஷ்ணா, ராதா, ருக்மணி என மூன்று திரையரங்கங்கள் உள்ளன. இஷ்டம் படம் அடுத்த வாரம் தான் ரிலீஸ் என்று போட்டிருந்தது. கோபிகிருஷ்ணாவில் கண்டதும் காணாததும் என்ற படமும், ராதாவில் கலகலப்பும், ருக்மணியில் சிங்காரியின் கதை என்ற படமும் ஒடியது.

கலகலப்பு ஏற்கனவே பார்த்தாகி விட்டது. கண்டதும் காணாததும் பார்க்கக் கூடிய படமே இல்லை என முத்துராமலிங்கம் அவர்கள் ஓஹோ புரொடக்ஷன்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். நமக்கும் ஒரு மணிநேரத்தில் திரும்பி செல்ல வேண்டியிருந்ததால் சிங்காரியின் கதை படத்துக்கு டிக்கெட் எடுத்தேன். கில்மா படம் தியேட்டரில் பார்க்க வேண்டியது அவசியமானதில்லை. நமக்குத்தான் கம்ப்யூட்டரும் இணையமும் இருக்கிறதே, இருந்தாலும் ஒரு மணிநேரத்தை ஒட்ட வேண்டுமே என்பதற்காக தான் உள்ளே சென்றேன். இந்த இடத்தில் ஒரு பிளாஷ்பேக்.

நான் அப்ரெண்டிஸ் படித்துக் கொண்டிருந்த 1997, 98 காலக்கட்டங்களில் கி்ல்மா படம் பார்க்க வேண்டுமென்றால் பெரம்பூர், ஐசிஎப், அயனாவரம் பகுதியில் உள்ளவர்களுக்கு உள்ள ஒரே தியேட்டர் அயனாவரம் ராதா தான். பிட்டுக்கு பயங்கர பேமஸ். நண்பர்களுடன் சேர்ந்து வாரம் ஒரு முறை சினிமாவுக்கு வந்து விடுவேன். பலமுறை நான் மொட்டை மாடியில் 10 மணிக்கெல்லாம் படுத்து தூங்கி விடுவேன். சில நாட்கள் தூங்கிய பின் திடீரென்று வந்து நண்பர்கள் எழுப்புவார்கள்.

ராதாவுக்கு படம் பார்க்கலாம் வா என்று அழைப்பார்கள். கீழே சென்று சட்டையை எடுக்க முடியாது. எனவே மொட்டை மாடியில் யார் சட்டை காய்ந்தாலும் எடுத்து மாட்டிக் கொண்டு சினிமாவுக்கு சென்று விடுவேன். ஒரு முறை மொட்டை மாடியில் துணிகளே காயவில்லை. பரவயில்லை என்று வெறும் லுங்கி மற்றும் உள்பனியனுடன் சென்ற காலமும் உண்டு. படிப்பு முடிந்த பிறகு நான் அந்த ஏரியாவை விட்டு சென்று விட்டபடியால் ராதா திரையங்கையே மறந்து விட்டேன். பிளாஷ்பேக் முடிந்து விட்டது.

டிக்கெட் எடுத்த பிறகு திரையரங்கினுள் சென்று அமர்ந்தால் என்னுடன் சேர்த்து படம் பார்த்தவர்கள் பத்து பேர் மட்டுமே. அனைத்தும் 50 வயதை கடந்த பெரிசுகள் தான். டீன்ஏஜ் பசங்கள் எல்லாம் இன்டர்நெட், செல் என ஏகமாய் வளர்ந்து விட்டதால் இந்த பக்கமே வருவதில்லை போல.

அப்பொழுது எல்லாம் இன்டர்வெல் முடிந்த பின் வரும் பிட்டு பயங்கர பேமஸ். இப்பொழுது என்ன செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை என்று ஆர்வத்துடனே உட்கார்ந்தேன். படம் துவங்கியது.

படத்தின் ஒன்லைன் என்ன? அம்மாவைத் தொடர்ந்து பொண்ணும் விபச்சார தொழிலுக்கு வரக்கூடாது என்பதை பல கூடாதுக்கு பிறகு முடிக்கிறார்கள்.

படத்தின் கதை என்ன? ஒரு விபச்சார விடுதியில் பலபெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவர் கீதா. அவருக்கு வயதாகி விட்டதால் விடுதியின் ஒனர் கீதாவின் மகளை இத்தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். கீதா தடுக்கவே அவரை இன்ஸ்பெக்டரின் உதவியுடன் கொலை குற்றத்தில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார். அம்மா இல்லாததால் பொண்ணை தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால் அம்மா சிறையில் இருந்து தப்பி வந்து விடுதியின் ஒனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரை போட்டுத்தள்ளி விட்டு பொண்ணை அவளது காதலனுடன் அனுப்பி வைக்கிறார். உஸ் அவ்வளவு தாங்க கதை.

படத்தில் கில்மா காட்சிகளே இல்லை. இதுக்கு பேசாம SJ சூர்யாவின் நியு அல்லது அஆ பார்த்திருந்தாலே சற்று கூடுதலான கில்மா காட்சிகள் இருந்திருக்கும். ஒருமணிநேரம் நேரத்தை கடத்தியதை தவிர படத்தில் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

இந்தப் படத்தின் வசனங்களை அப்படியே சொல்வதற்கு நமக்கு ஞாபக சக்தியில்லை. இயக்குனருக்கு ஆலோசனைகளை சொல்லுமளவிற்கு அருகதையும் இல்லை. எனவே விமர்சனத்தை இத்துடன் முடிக்கிறேன்.

நான் உங்களுக்கு சொல்ல வரும் நீதி என்ன? இதுக்கு பேசாம இன்டர்நெட் சென்டருக்கே போய்விடுங்கள். பத்துரூபாயுடன் செலவு முடிந்து விடும்.

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, May 22, 2012

இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.

ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான்

ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான்.

முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் 'இங்கே என்ன பண்ணுவார்கள் ? ' என்று கேட்டான்.



அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.

கேட்கவே நன்றாக இல்லை. ஆகவே அவன் அடுத்த நரகத்துக்குப் போனான். அடுத்தது அமெரிக்க நரகம். அடுத்தது ருஷ்ய நரகம்.. ஆக இப்படி. ஆனால் அவை எல்லாமே ஜெர்மானிய நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.

இறுதியில் இந்திய நரகம் இருந்தது. அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. சரி நம் ஆட்கள் தான் ஏராளமாயிற்றே அவர்கள் தான் நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், இந்தியர்களோடு ஜெர்மானியர்கள் அமெரிக்கர்கள் இன்னும் எல்லோரும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் கேட்டான். 'இங்கே என்ன பண்ணுவார்கள் '

அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு இந்தியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.

'இதுவும் மற்ற நரகங்களைப் போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கிறது ? ' என்று கேட்டான்

'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்

இது எப்படி இருக்கு

சூழ்நிலைக்கேற்ப மெயிலில் வந்த நகைச்சுவை இது.

ஆரூர் மூனா செந்தில்

Saturday, May 19, 2012

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு விவரங்கள்

டிகிரி முடித்தவர்கள் அலுவலக உதவியாளர் வேலைக்கு தேவை.

உணவு, தங்குமிடம் இலவசம்

சம்பளம் : 1800 சிங்கப்பூர் டாலர்

----------------------

Bus Wiring and Electrical Work அல்லது BUS A/C Mechanism தெரிந்தவர்கள் DEEE, DECE மற்றும் ITI Electrician, A/C Mechanic முடித்தவர்கள் Venda Engineering and Trading Company, Singapore க்கு வேலைக்குத் தேவை

சம்பளம் : 1800 சிங்கப்பூர் டாலர்

----------------------

வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை.

சம்பளம் : 400 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------

வளைகுடா நாடுகளுக்கு குறைந்தபட்சம் 10 வகுப்பு முடித்தவர்கள் உதவியாளர் வேலைக்குத் தேவை.

உணவு, தங்குமிடம் இலவசம்

சம்பளம் : ரூ.35,000/- (முப்பத்தி ஐயாயிரம் ரூபாய்)

---------------------

மேலும் தமிழ்நாடு அரசு தேர்வானையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் குரூப் 4 பணிக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

கல்வி்த்தகுதி : பத்தாம் வகுப்பு

---------------------

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள
தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

ஆரூர் மூனா செந்தில்



Friday, May 18, 2012

உலகின் மிக வினோதமான சட்டங்கள் - தற்பொழுதும் நடைமுறையில் இருப்பவை

கலிபூர்னியா, பசிபிக் குரோவ்

பட்டாம் பூச்சியைக் கொல்வதோ, கொல்வதாக பயமுறுத்துவதோ சட்டப்படி குற்றம்

கலிபோர்னியா, வென்சுரா மாவட்டம்

நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது.

ஃப்ளோரிடா, சரசோடா

பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்

இல்லினாய், சிக்காகோ

தொப்பியில் இருக்கும் ஊசி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதம்

மிச்சிகன் மாநிலம், அமெரிக்கா

தன் கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தன் முடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

ப்ரெய்னெர்ட் மாவட்டம், மின்னசோடா மாநிலம், அமெரிக்கா

எல்லா ஆண்களும் தாடி வளர்க்கவேண்டும்

ஓஹையோ மாநிலம், அமெரிக்கா

நீங்கள் நாயாக இருந்தாலும், சாண்டா கிளாஸ் உடை உடுத்திக்கொண்டு பீர் விற்பது குற்றம்

கனடா டோரண்டோ மாநிலம்

ஞாயிற்றுக்கிழமையில் பூண்டு சாப்பிட்டதும் கார் ஓட்டுவது சட்டப்படி குற்றம்

க்ளீவ்லேண்ட், ஓஹையோ மாநிலம்

வேட்டையாடும் லைசன்ஸ் இன்றி எலிகளைப் பிடிப்பது சட்டப்படி குற்றம்

அரிசோனா மாநிலம், அமெரிக்கா

ஒட்டகங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

ஐஸ்கிரீம் கோனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு செல்வது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

வருடத்துக்கு குறைந்தது ஒரு தடவையாவது குளிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்

அர்கன்ஸாஸ் மாநிலம், அமெரிக்கா

ஒரு ஆண் தன் மனைவியை அடிக்கலாம். ஆனால், மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் அடிப்பது சட்டப்படி குற்றம்

மெஸ்க்வேட், டெக்ஸாஸ், அமெரிக்கா

குழந்தைகள் வினோதமாக தலைமுடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

கையாலேயே நடந்து தெருவைக் கடப்பது சட்டப்படி குற்றம்

அவினான், ஃப்ரான்ஸ்

சட்டப்படி, ஒரு பறக்கும் தட்டை நகரத்தில் இறக்குவது குற்றம்

ஹார்ட்போர்ட் கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

தெருவில் மரத்தை நடுவது சட்டப்படி குற்றம்

விர்ஜினியா, கிரிஸ்டியன்பர்க், அமெரிக்கா

துப்புவது சட்டப்படிகுற்றம்

இணையத்தில் படித்தது

ஆரூர் மூனா செந்தில்







Wednesday, May 16, 2012

குறட்டை விட்டால் என் மனைவி கிள்ளுறாப்பா

உலகத்தில் கஷ்டமான விசயம் என்று பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ரொம்ப சுகமான விசயம் என்றால் பலர் கூ தயாராக இருக்கிறார்கள். முக்கால்வாசி பேர் 'காலைக் கடன் ' கழிப்பதே சுகம் என்று கூறிக் கொண்டு அலைகிறார்கள். கஷ்டமான விசயம் என்னவென்று என்னை கேட்டால் , ஒரு குறட்டை விடுபவரின் அருகில் படுத்து உறங்குவதே என்பேன். இந்த உலக மகா கஷ்டத்தை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும் நான் சொல்வது உண்மையென்று.

எதுக்காக ஆண்டவன் இதை மனிதர்களுக்கு குடுத்தான் என்று தெரியவில்லை. என்னோடு சேர்ந்து இரண்டு பேருக்கு பக்கத்து கோயிலில் கதாகாலட்சேபம் செய்து கொண்டு இருந்த ஒரு பெரியவரிடம் இந் சந்தேகத்தை கேட்டேன். 'ஆண்டவன் மனிதர்களுக்கு டேய் மானிடா நீயும் மிருகஙகளை போலதாண்டா. அதில் இருந்து வந்தவந்தாண்டா ' என்பதை புரி வைக்க, இந்த தண்டனையை கொடுத்ததாகச் சொன்னார். ஆனால் அந்த தண்டனை அருகில் இருப்பவர்களுக்கு தானே என்று நான் அவரிடம் விவாதம் செய்யவில்லை. அவருக்கும் ஆண்டவனுக்கும் எந்த அளவு நெருக்கம் என்பது எனக்கு தெரியாததால் நான் அதை ஆட்சேபிக்கவில்லை.

ஆனால் எதுக்காக இது தோன்றியது என்பது வேறு விசயம். ஆனால் சில பேர் நல்ல தூக்கம் என்றாலே 'குறட்டை விட்டு தூங்குவதுதான் ' என்ற எண்ணத்துடன் அலைகிறார்கள். பல பேச்சு வழக்கங்களிலும் , ' ஊம் நல்ல சாப்பாடு ஆச்சு .... இனி குறட்டை விட்டு தூங்க வேண்டியது தான்... ' என்று குறட்டை விடாதவர்களும் கூறுவது இதற்கு காரணமாக இருக்கலாம். இதனால் பக்க விளைவு என்னவென்று பார்த்தீர்கள் என்றால் , குறட்டை விடாமல் தூங்குபவர்களுக்கு ஒரு கழிவிறக்கம் ஏற்பட்டதுதான். இவர்கள் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போதெல்லாம் , ' சே !! சுகமான ஜீவன்பா. என்னம்மா தூங்கறான் பாரு.. ' என்று ஒரு எண்ணம் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

என்னை பொறுத்தவரை , குறட்டை விடுபவர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். இதில் முதல் விதம் எப்படியென்றால் படுத்து சிறிது நேரம் கழித்து மெதுவாக குறட்டையை ஆரம்பிப்பார்கள். முதலில் எங்கயோ எலி குடைவது போல் சத்தம் கேட்கும். பிறகு மெதுவாக சத்தம் கூடி உச்சஸ்தாயில் இரண்டு கிரேன் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வேலை செய்வது போல் கர்ண கடூரமாக இருக்கும். இரண்டாவது விதம் எப்படி என்றால் படுத்து சில நிமிடங்களிலியே குறட்டை உச்சஸ்தாயில் ஆரம்பிக்கும். இவர்கள் அருகே படுப்பவர்கள்தான் அதி பாவமான ஜீவன்கள்.

சில சமயம் , பேருந்து அல்லது இரயிலில் நீங்கள் ரவு பயணம் செய்தீர்கள் ஆனால், அருகில் குறட்டை விடாத ஜீவன்கள் வந்து அமர வேண்டும் என்று தங்கள் குல தெய்வத்திடம் வேண்டிக் கொள்வது நல்லது. ஏன் என்றால் உங்களால் அவர் குறட்டை சத்தத்தை ஆராய்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. சிலர் தாங்க முடியாமல் ரயில் பயணங்களில் அபாய சங்கிலியை இழுத்து விடுவதும் உண்டு. இந்த நேரத்தில் உங்களை ஒரு விசயத்தில் எச்சரிக்க விரும்புகிறேன்.

'சே என்ன பெரிய குறட்டை தொந்தரவு. விடரவனை எழுப்பிட்டா குறட்டை நிக்கப் போவுது. ' என்று விஷப் பரிட்சை செய்ய வேண்டாம். காரணம் இப்படி குறட்டை விடுபவரை எழுப்பினீர்கள் என்றால், முதலில் Vacuum cleaner ஐ அணைக்கும் போது ஏற்படுவது போல் ஒரு ஒலியை எழுப்பி விட்டு, அப்பாவியாக அந்த குறட்டை ஜீவன் முழித்துப் பார்க்கும். 'அய்யோ பாவம்.. இவரை போய் எழுப்பிட்டோமே !! ' என்ற எண்ணமே உங்களுக்கு ஏற்படும். மீண்டும் அவர் தூங்க ஆரம்பித்த பிறகு அவர் குறட்டை முன்னை விட அதி ஆத்திரமாக ஒலிக்க ஆரம்பிக்கும்.

ஆகவே இதை சமாளிக்க, இதை ரசிக்க ஆரம்பிப்பதே நல்லது. குறட்டை விடுபவர் ஒரு சங்கீத வித்வானாய் இருந்தாலோ, அல்லது கேட்கும் உங்களுக்கு சங்கீத ஞானம் இருந்தாலோ ரொம்ப நல்லது. சங்கீத வித்வான்கள் குறட்டை அருமையாக ஆரம்பிக்கும். மெதுவாக ஆரம்பித்து, சூடு பிடித்த பிறகு அருமையான ஆலாபனை நடைபெறும். வார்த்தகள் இல்லாமல் , 'ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ' என்று ஏதாவது ராகத்தை ஒரு பிடி பிடித்து விடுவார். இவர்களிடம் ஒரு நல்ல விசயம் என்னவென்றால், நடு நடுவே சில நிமிடங்கள் பக்க வாத்தியக்காரர்களுக்கு நேரம் ஒதுக்குவது போல் குறட்டை நிற்கும்.

பிறகு காலை வேளையில் அருமையாக மங்கலம் பாடி முடித்து விடுவார். இன்னும் சிலர் எப்படியென்றால் குறட்டையிலேயே பேசுவார். அவர் குறட்டை சத்தத்தின் ஸ்ருதி மாறுதல்களை வைத்தே என்ன கனவு காணுகிறார், அல்லது உங்களிடம் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். நான் சில வீடுகளில் கணவரிடம் இருந்து அவர் குறட்டை மூலமே பல ரகசியங்களை அறிந்து கொள்ளும் மனைவிகளையும் பார்த்து இருக்கிறேன்.

ஆனால் சில வீடுகளில் சிறிது அதிகமாகவே நடப்பதுண்டு. குறட்டையை நிறுத்துகிறேன் பேர்வழி என்று மல்லாந்து படுத்து தூங்கி கொண்டு இருப்பவரை சடாரென்று திருப்பி விடுவர் அருகில் தூங்குபவர், அதாவது மல்லாக்க படுத்தால் குறட்டை அதிகமாக வருமாம். பாவம் அந்த நபர், என்ன தாக்கியது என்று தெரியாமல், எழுந்து உட்கார்ந்து திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி முழித்துக் கொண்டு இருப்பார். ஏதாவது கெட்ட கனவு கண்டு விட்டோமோ என்று பயந்து வேறு போய் இருப்பார். இன்னும் சில வீடுகளில் குழந்தகள் செய்யும் சேஷ்டைகள் தாங்க முடியாது. என் நண்பர் வீட்டில் , அவர் குறட்டை விட்டு தூங்கும் போது அவர் சிறு பையன் பஞ்சால் மூக்கை அடைப்பது, இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டுவது போன்று பல ஆராய்ச்சிகளின் ஈடுபடுவான்.

சில சமயம் குறட்டை விடுபவர் மிகவும் நல்லவராக இருந்தால், நம் அருகே தூங்கச் செல்லும் முன் , 'ஸார், நான் தூக்கத்தில கொஞ்சம் குறட்டை விடுவேன் .. ' என்று அபாய அறிவிப்பு கொடுத்து விட்டு தூங்கச் செல்வார். அந்த 'கொஞ்சம் ' என்பது எவ்வளவு என்பது நமக்கு தெரியாததால், புஸ்வானத்திற்கு நெருப்பு வைக்கும் போது 'இது பொறி விடுமா.. அல்லது வெடிக்குமா !! ' என்ற பயம் மாதிரி, அவர் குறட்டை விட ஆரம்பிக்கும் வரை கண்கள் விரிய உட்கார வேண்டி வரும்.

ஆனால் குறட்டை சத்தம் அதிகமாக இருப்பதால் பல நல்ல உபயோகங்களும் உண்டுதான். உதாரணமாக, கல்யாண நேரத்தில், மூகூர்த்தம் அதிகாலையில் என்றால், இவர்களை திருமண மஹால் நடுவில் தூங்க வைத்து விட்டால் போதும். குறட்டை சத்தத்தில் சரியான நேரத்தில் யாவரும் எழுந்து விடுவர், ஏன் பலரால் தூங்க கூட முடியாது. அதே மாதிரி பரிட்சை நேரங்களில் பிள்ளைகளுக்கு இதை விட ஒரு நல்ல அலாரம் கிடைக்கவே கிடைக்காது. ஒரு குறட்டை விடுபவரை பரிட்சை எழுதப்போகும் பிள்ளைக்கு அருகில் தூங்க விட்டால் போதும்.

குறட்டை விடாதவர்கள் கூட சில சமயம் குறட்டையில் தள்ளப் படுகிறார்கள். அதீத அலைச்சல், விளையாட்டு போன்றவற்றால் சில சமயம் குறட்டை விடாதவர்களும் குறட்டை விடலாம். ஆனால் இது இரண்டு மாதங்கள் வரும் சிறிய தொலைக்காட்சி தொடர் மாதிரி . அதிக தொந்தரவில்லை. என்றும் எங்கும் குறட்டை விடுபவர்களே நம் ஆயுள் முழுவதும் வரும் மெகா தொடர்.

பலரின் குறட்டை சத்தத்தில் நாம் காதை பொத்திக் கொண்டு தூங்கி விடலாம். ஆனால் சிலர் அதீத சத்தத்தில், DOLBY மற்றும் DTS எஃபக்ட்டில் குறட்டை சத்தத்தை உற்பத்தி செய்வர். இவர்கள் அருகில் தூங்குவது என்பது ஒரு பிரம்ம பிரயத்தனம்.

என்னடா இப்படி உளர்ரானே, பாதி தூக்கத்தில எந்தரிச்ச மாதிரின்னு உங்கள்ல யாராவது நினைச்சு இருந்தீங்கன்னா, அவர்கள் நோபல் பரிசு வாங்க என்னால் பரிந்துரைக்கப் படுகிறார்கள். (ஏய்.. யாரங்கே !!)

என்னடா தூக்கத்தில் இருந்து எழுந்தவனைப் போல் உளறுகிறானே என்று பார்க்கிறீர்களா, அது வேறொன்னுமில்லீங்கண்ணா என் குறட்டையின் காரணமாக என் மனைவி தூங்க முடியாமல் எழுந்து என்னை கிள்ளிவிட்டதனால் தீடீரென்று எழுந்தவனிடம் என் மனைவி புலம்பியதன் பாதி தொகுப்பே இது. முழுவதும் கேட்டால் நீங்கள் தூங்கப் போய் விடுவீர்கள். ஆவ்வ்வ் . . .(தூக்கம் வருதுங்க, நாளை சந்திப்போமா)

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, May 15, 2012

கண்டுபிடியுங்கள் இது என்ன திருவிழா

இது என்ன பண்டிகை கண்டுபிடியுங்கள்.

நாம் இது போல் ஒரு திருவிழாவை கிருஷ்ணஜெயந்தி அன்று கண்டிருப்போம். மும்பையில் இது மிகப்பெரிய திருவிழா ஆனால் இது என்ன.?


"

"

"

"

"

"

"

"

"

"

"

"

"

"

"

"

இது ரக்சா பந்தன்.

எப்பூடி


ஆரூர் மூனா செந்தில்



Friday, May 11, 2012

கலகலப்பு@மசாலா கேப் - சினிமா விமர்சனம்

ஒரு படத்தோட டிரைலர் நம்மை படத்தை பார்க்கும்படி தூண்ட வேண்டும் ஆனால் இந்தப் படத்தின் டிரைலர் பார்க்கும் போது என்னை முதல் காட்சிக்கு யோசிக்க வைத்தது. ஆனால் கொஞ்ச நாட்களுக்கு பிறகு எனக்கு இன்று நேரம் கிடைத்ததால் முதல் காட்சிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து ராக்கி தியேட்டருக்கு சென்றால் பாதிக்கும் குறைவான கூட்டமே இருந்தது. ஆனால் முடிந்து வரும் போது சிரித்து சிரித்து வயிற்று வலியுடன் வந்ததென்னவோ உண்மை.

படம் ஆரம்பித்ததும் கொஞ்ச நேரத்திற்கு டல்லடித்தது. ஆனால் சிவா வந்ததும் படத்தில் சிரிப்பே ஆரம்பிக்கிறது. இடைவேளைக்கு பிறகு சந்தானம் வந்ததும் சிரிப்பு இரட்டிப்பாகிறது. வெளியில் வரும் போது இதற்கெல்லாம் ஏன்டா சிரித்தோம் என்று யோசனை வருகிறது.

படத்தின் கதை என்ன? நஷ்டத்தில் இயங்கும் நூற்றாண்டு கண்ட ஹோட்டலின் உரிமையாளரான விமலும் அவரது தம்பி சிவாவும் மற்ற ஹோட்டலை விட வித்தியாசமாக ஒரு கான்செப்ட்டை கண்டுபிடித்து தங்களது ஹோட்டலை தரம் உயர்த்துகிறார்கள். அத்துடன் ஆளுக்கொரு பெண்ணுடன் காதல் வந்து சில பிரச்சனைகளுக்கு பிறகு கரம் பிடிக்கிறார்கள். அவ்வளவு தான் கதை.

படத்திற்கு மிகச்சிரிப்பு வரும்படியான ஐந்து சீன்களை வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல ஒரு டொக்கு கதையை யோசித்திருப்பார்கள் போல. மொத்தப்படமுமே அந்த ஐந்து காமெடியில் தான் உள்ளது.

கடன் கொடுத்த இளவரசுவை சிவா ஒரு தவறான தகவலுடன் இன்ஸ்பெக்டர் ஜானுடன் கோர்த்து விட ஜானுக்கு பயந்து மாறுவேடத்தில் சுற்றும் இளவரசுவை வேணுமென்றே தவறாக அடையாளம் காணும் சிவாவும் அதனை அவரிடமே கேட்கும் இளவரசுவின் நகைச்சுவை பயங்கர கலாட்டா. இப்பொழுது கூட நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

தனது மகளை சந்தானத்துடன் சேர்க்க வேண்டுமென்பதற்காக அஞ்சலியை கடத்தும் மனோபாலா, அது தெரியாமல் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக தாத்தாவுடன் தப்பிக்கும் விமல் அவரை துரத்தும் சந்தானம் என அந்த ஒரு காமெடி கலாட்டா தான்.

விமல் வீட்டில் வைரத்திற்காக வந்து மிரட்டும் சுப்பு பஞ்சு மற்றும் அவரது அடியாட்கள், மாட்டிக் கொண்ட விமல், சிவா மற்றும் இளவரசு, திடீர் பைத்தியமாகும் கான்ஸ்டபிள், வைரத்திற்காக சுப்புவின் பின்பக்கத்தை கொத்தாக கவ்வும் நாய் என் அதுவும் ஒரு காமெடி கலாட்டா தான்.

கடைசியாக ஹோட்டலில் வைரத்திற்காக நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை அதன் முடிவு கூட காமெடி கலாட்டா தான். அவ்வளவு தான் அத்துடன் நான்கு மொக்கப்பாடல்கள், இருபது சீன் சேர்த்து படத்தை முடித்து விட்டிருக்கிறார்கள்.

படத்தில் முதல் வேஸ்ட் பாடல்கள் தான். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் லாயக்கே இல்லை. பின்னணி இசையும் அப்படித்தான். அதுவும் ஹோட்டலில் புதுமையாக இருப்பதாக ஓரு ராப் போன்ற பாடல் இருக்கே மகா கொடுமை.

என் மனம் கவர்ந்த அஞ்சலியா அது, நெசமாத்தான் சொல்லுறியா என்று தமிழ் எம்ஏ வில் கொஞ்சியும், சேர்மக்கனியாக அங்காடித்தெருவில் வாழ்ந்தும், மணிமேகலையாக எங்கேயும் எப்போதும் படத்தில் அசத்திய அஞ்சலியை உரித்த கோழியாக்கி விட்டிருக்கிறார்கள். அஞ்சலிக்கு முகம் தான் அம்சம், ஒரு சாத்வீக பெண்ணை பிரச்சோதகமாக்கி இருக்கிறார்கள். நமக்கு தான் பயானகமாகி விட்டது.

ஓவியாவின் முகத்தை பார்த்து இதுவரை ஏதோ பள்ளி செல்லும் பெண்ணை நடிக்க அழைத்து வந்து விட்டிருக்கிறார்கள் என்று தான் பார்த்தேன். ஆனால் இந்தப்படத்தில் அம்மணிக்கு நெறஞ்ச மனசு என்பது தெரிகிறது. எப்பாடி எவ்ளோ பெரிய மனசு (சத்தியமா மனசை மட்டும் தான் சொன்னேன்). காசு கிடைக்கிறதே என்பதற்காக ஹோம்லி பிகர் என்ற கிடைத்த பெயரை ரூம்லி பிகர் என்று மாற்றி விடுகிறார்.

சந்தானத்திற்கு மற்றுமொரு படம் அவ்வளவு தான். அவரின் உதவியாளர்கள் அவரை விட பயந்தாங்கொள்ளியாக இருப்பதும் சரியான காமெடி. ஒரு சண்டைக்கு கிளம்பும் போது பாதியில் சுகர் மாத்திரை போட வேண்டுமென்பதற்காக எஸ்கேப்பாக முயற்சிக்கும் தினேஷின் காமெடியும், கடைசியில் எல்லோரும் படுங்கடா என்றதும் மூவரும் சேர்ந்து சந்தானத்தின் மீது படுத்து நசுக்குவதும், கடைசியில் கோழியிடம் மிதிபட்ட ..ஞ்சாக நசுங்கிப் போவதும் காமெடியும் சூப்பர் தான்.

கேபிள் அண்ணன் வசனத்தில் உதவியாக இருந்திருக்கிறார். வசனம் உண்மையில் அசத்துகிறது. எனக்கு தான் நம்ம சிபி போல ஞாபகத்தில் இருந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.

பார்க்க கூடாத படமும் அல்ல, பார்த்தே தீர வேண்டிய படமும் அல்ல, ஒரு முறை பார்த்து சிரித்து விட்டு வீட்டிற்கு வந்து யோசிக்கலாம் ஏண்டா இந்த மொக்க ஜோக்குக்கெல்லாம் சிரித்தோம் என்று.

ஆரூர் மூனா செந்தில்


Thursday, May 10, 2012

மும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா

நான் அப்பொழுது திருவாரூரில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், என் சித்தப்பா ஒருவர் ரேஷன் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரைப்போல் ஒரு நபரை வேறு எங்கும் பார்க்க முடியாது. மனிதர் பழகுவதற்கும் அடுத்தவருக்கு ஒரு உதவி என்றால் முன்னின்று செய்வதற்கும் அவரைப்போல் ஒருவர் கிடையாது. ஆனால் அவர் ஒரு ஜொள்ளர். வயது வித்தியாசமெல்லாம் அவருக்கு கிடையாது.

யார் ஒருவர் புடவைக்கட்டிக் கொண்டு அவரது கடைக்கு வந்தாலும் அவரிடம் வழிந்து பேசுவார், அதுவும் அழகாக இருந்து விட்டால் இலவசங்கெலல்லாம் கிடைக்கும். அதில் சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார், பலவற்றில் செருப்படியும் பட்டுள்ளார்.

எங்கள் சொந்தங்களில் எந்த வீட்டு விசேஷம் என்றாலும் அவரே முக்கியஸ்தர் ஆகிவிடுவார், அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு செய்வது என் வயதையொத்த பசங்களை வேலை வாங்குவது எல்லாம் அவரே, ஆனாலும் அவர் சொல்லும் வேலைகளை நாங்கள் விரும்பி செய்வதற்கு காரணம் அவர் சொல்லும் அவரது வாழ்வில் நடந்த கிளுகிளு கதைகள், நாம் நம் வயதில் பார்க்கும் கிழவிகளை பற்றிய டீன்ஏஜ் கதைகலெல்லாம் அவரிடம் இருக்கும்.

எங்களுக்கெல்லாம் அவர் கதாநாயகர், ஏனெனில் எங்களுக்கு அப்பொழுது பதின்வயது என்பதால் பெண்களைப்பற்றிய ஆர்வமிக் வயது என்பதால் தான். எங்கள் தாத்தா நாங்கள் அவரிடம் சுற்றிக் கொண்டிருக்கும்போது எல்லாம் பசங்களை எல்லாம் உன் போல் ஆக்கிவிடாதே என்று எஙகள் சித்தப்பாவை திட்டிக் கொண்டிருப்பார்.

இதில் நாங்கள் நாங்கள் நான் கூறுவது நான், என் அத்தை மகன் சதீஷ் (தற்பொழுது மன்னார்குடியில் பேருந்து நிலையம் எதிரில் புட்பிளாசா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறான்),என் சித்தப்பா மகன் வினோத் (தற்பொழுது ஹூண்டாயில் இன்ஜினியர்),என் மாமா மகன் கெளதமன் (தற்பொழுது உயிருடன் இல்லை) ஆகியோர் தான்.

இந்நிலையில் எங்கள் சித்தப்பா அவரது கூட்டுறவு சங்கத்தின் சார்பாக ஒரு பணிநிமிர்த்தமாக மும்பைக்கு முதல் முறையா செல்ல வேண்டியிருந்தது. அவரோ அதுவரை ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டம், பழைய திருச்சி மாவட்டம் ஆகியவற்றை விட்டு வெளியில் சென்றதில்லை.

வெளியூர் செல்வதால் அதுவரை பேண்ட் போடாத அவர், புதிதாக கடைக்கு சென்று புது பேண்ட், புது சட்டை, புது ஷு ஆகியவற்றை வாங்கி வந்தார், புதிதாக ஹேர் டை அடித்துக் கொண்டார். எங்களுக்கெல்லாம் திடீரென்று அவரின் செய்கை வியப்பை அளித்தாலும் நாங்களும் அவருக்கு கிளம்புவதற்குரிய உதவிகளை செய்து வந்தோம்.

ஒரு நாள் அதிகாலை சைக்கிள் எடுத்து வீட்டுக்கு வந்து என்னை அழைத்தார், என்னவோ ஏதோவென்று அவருடன் சென்றேன். என்னவென்று விசாரித்தால் அவருக்கு மும்பை செல்வதால் ஹிந்தியில் ஒரு வார்த்தை தெரிந்து கொள்ள வேண்டும், பக்கத்து ஊரில் ஆந்திராவில் வேலை செய்த ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் என கூறினார்.

சரி என்று அவருடன் சென்று பக்கத்து ஊருக்கு சென்று தேடி வந்தவரை அணுகி கேட்டால் அவரோ தனக்கு தெலுங்கு மட்டுமே தெரியுமென்றும், ஹிந்தி தெரியாது என்றும் கூறி விட்டார், நாங்கள் ஊருக்கு திரும்பி விட்டோம். என்னை வீட்டில் இறக்கி விடும்போது சித்தப்பா நீ யாராவது ஹிந்தி தெரிந்தவர் இருந்தால் விசாரித்து வை நாம் சென்று அவரிடம் அந்த வார்த்தையை கற்று வருவோம் என்றார்.

நானும் என் உறவுக்கார பசங்களும் அவருக்காக தேடியலைந்தால் இரண்டு நாட்களாக யாரும் கிட்டவில்லை, இரண்டு நாள் கழித்து வடஇந்தியாவிலிருந்து செட்டியார் கடைக்கு லோடு ஏற்றி லாரி வந்ததாகவும் அவர்களிடம் கேட்டால் தெரியும் என்று கேள்விப்பட்டு சித்தப்பாவை அழைத்துக் கொண்டு சென்றேன்.அவர்களிடம் விசாரித்தால் அவர்கள் ததக்கா பிதக்கபவென பிதற்றினார்கள், பிறகு தான் தெரிந்தது வந்தவர்கள் ஒரிசாக்காரர்கள் அவர்களுக்கும் இந்தி தெரியவில்லை என்று. நொந்துகொண்டே திரும்பி வந்தோம்.

சித்தப்பாவுக்கு செல்லும் நாள் நெருங்கி கொண்டு வந்தது. அப்பொழுது என் நண்பன் பிரசாத் ஒரு ஐடியா சொன்னான். எங்கள் ஊரில் கமலாலயம் தென்கரையில் ஹந்தி டியூசன் சென்டர் இருப்பதாகவும் அங்கு சென்றால் உங்கள் சித்தப்பாவுக்கு வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிடலாம் என்றும் கூறினான். மிகுந்த சந்தோஷத்தோடு சித்தப்பா வீட்டுக்கு சென்று அவரிடம் செய்தியை கூறினேன். அவரும் என்னுடன் புறப்பட்டு வந்தார்.

மாஸ்டரிடம் சென்று சித்தப்பாவை அந்த ஹிந்தி வார்ததையை கற்றுக் கொள்ளக் கூறினேன். அவர் டியூசன் சென்டர் உள்சென்று சிறிது நேரம் கழித்து சந்தோஷமாக வந்தார். வெளியில் வந்த ஹந்தி வாத்தியார் வெளியில் வந்து தலையில் அடித்துக் கொண்டு இவரையெல்லாம் ஏன் அழைத்து வந்தீர்கள் என்று அலுத்துக் கொண்டார். எல்லாம் சரி என்னடா ஓவர் பில்ட்அப் செய்கிறாயே, அந்த வார்த்தை என்னவென்று கேட்கிறீர்களா? அது பெரிய காமெடி, நம்ம சித்தப்பு மும்பை போய் பலான இடத்துக்கு போனா அங்க பேசறதுக்கு கத்துக்கிட்டு போன வார்த்தை "பூரா கப்டா நிக்காலோ". இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்குறீங்களா, எல்லா துணியையும் கழட்டுன்னு அர்த்தம்,

எப்பூடி

ஆரூர் மூனா செந்தில்


Wednesday, May 9, 2012

கேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

நான் இரண்டு முறை கேரளாவில் ரஜினி படம் வெளியீட்டின் போது இருந்துள்ளேன். ஒரு முறை படையப்பா வெளியீட்டின் போது திருச்சூரில் இருந்தேன். சந்திரமுகி வெளியீட்டின் போது திருவனந்தபுரத்தில் இருந்தேன். எங்கு இருந்தாலும் தலைவர் தலைவர் தான் என்பதை முதல் நாள் காட்சியின் போது கண்டவன் என்ற முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

(வட்டத்துலநான்தான்பா)

படையப்பா வெளியீட்டின் போது நான் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்பரன்டிஸ் பயிற்சியில் இருந்தேன். அப்பொழுது திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழாவுக்காக ரயில்வே ஸ்டால் போட்டிருந்தார்கள். அந்த பணிக்காக ரயில்வே அப்ரெண்டிஸ் குழுவினர் இங்கிருந்து திருச்சூர் சென்றோம்.

சென்று இறங்கிய மூன்றாவது நாள் படையப்பா ரிலீஸ். எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று என்னுடன் இருந்த நண்பர்களுடன் இணைந்து திரையரங்கிற்கு சென்றேன். அப்பப்பா அந்த தெருவின் உள்ளேயே நுழைய முடியவில்லை. கேரளாவில் ரஜினிக்கு இருக்கும் Grace கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். ஒரு வழியாக மாட்னி ஷோ வுக்கு டிக்கெட் கிடைத்தது.

மிகப்பெரிய திரையரங்கம். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள். அவர்களே வசனம் புரியாவிட்டாலும் தலைவர் வரும் காட்சியில் எல்லாம் கை தட்டி விசிலடித்து ஆரவாரம் செய்தார்கள். படம் சூப்பர் ஹிட். அன்று தான் தலைவர் தமிழ்நாட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. தென்னகத்துக்கே அவர்தான் என்று புரிந்தது.

அடுத்தது சந்திரமுகி ரிலீஸ் போது நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். முன்பே தலைவருக்கு கேரளாவில் இருக்கும் மாஸ் தெரிந்ததால் சென்னையில் திட்டமிடுவது போல் ஒரு வாரத்திற்கு முன்பே எப்படி சினிமாவுக்கு செல்வது என்று பிளான் செய்து விட்டோம்.

படம் ரிலீஸ் அன்று மம்மூட்டி, மோகன்லால், திலீப் ஆகியோரின் படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் டாகுடர் விஜய்யின் சச்சின் ரிலீஸ். ஆனால் மற்ற படங்கள் எல்லாம் ஒரு தியேட்டரில் தான் ரிலீஸ். சந்திரமுகி மட்டும் 6 தியேட்டரில் ரிலீஸ். எங்களுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்களின் பெரிய நடிகர்களின் படம் ஒரு தியேட்டரில் வருகிறது. சூப்பர் ஸ்டாரின் படத்தை 6 தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்களே என்று.

இரவு காட்சிக்கு தியேட்டருக்கு சென்றால் செமகூட்டம். நிறைய தமிழர்களும் இருந்தார்கள். அவகளிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் நாகர்கோயிலில் இருந்து வந்திருப்பதாகவும் அங்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். ஆச்சரியப்பட்டு போனேன்.

உள்ளுர் மலையாளி ஒருவன் வரிசையில் நிற்கும் எங்கள் தோளின் மீது ஏறி டிக்கெட் எடுப்பதற்காக முன் சென்றான். அவ்வளவு தான். ஏற்கனவே மலையாளிகளின் மீதான கடுப்பும் சேர்ந்து அவனை கீழே இழுத்துப் போட்டு செம மொத்து மொத்தினோம். பாரபட்சமில்லாமல் எல்லாத் தமிழர்களிடம் இருந்தும் அவனுக்கு அடி விழுந்தது.

படம் முழுக்க ஆரவாரம் தான். மொழி கடந்து, மாநிலம் கடந்து எங்கும் தலைவர் தலைவர் தான்.

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, May 8, 2012

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே ஸ்டேஷன்

மூன்று வருடம் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவங்களை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியுமா, ஆம் முடியும். 15 வருடங்களுக்கு முன் நடந்தவை எல்லாம் இன்று வரை எனக்கு பல சம்பவங்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 1997 முன்பு வரை எனக்கு தெரிந்த சென்னை சைதாப்பேட்டையும், மேற்கு மாம்பலமும் மட்டுமே. எனது மாமாவும், சித்தியும் மேற்சொன்ன இடங்களில் குடியிருந்ததால் கோடை விடுமுறைக்காக வரும்போது அங்கு மட்டுமே தங்குவேன். வடசென்னை பக்கம் வந்ததே இல்லை.

12ம் வகுப்பு முடித்ததும் ஐசிஎப்பில் அப்ரென்டிஸ் படிக்க வேண்டும் என முடிவெடுத்த பின் சென்னைக்கு வந்து சென்ட்ரல் புறநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஏறி நான்கு ஸ்டேஷன் தள்ளி ஐந்தாவதாக வந்த பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் என்று பெயர் பலகையில் எழுதியிருந்த ஸ்டேஷனில் இறங்கினேன். என் வாழ்வில் நல்ல மற்றும் அதிர்ச்சியான சம்பவங்கள் அங்கே தான் நடக்க போகிறது என்று தெரியாமல்.

அதன் பிறகு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சேர்ந்தது எல்லாம் வேறுகதை, அது இந்த கட்டுரைக்கு தேவைப்படாது என்று நினைக்கிறேன். வகுப்பில் சேர்ந்து நண்பர்கள் செட்டான பிறகு வகுப்பு முடிந்ததும் நாங்கள் ஒன்று கூடி அரட்டையடிக்க தேர்ந்தெடுத்த இடம் லோகோ ஸ்டேஷன் தான். நாலரை மணிக்கு முடிந்ததும் ரூமுக்கு வந்து உடை மாற்றி சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தால் அரட்டை கச்சேரி முடிந்து திரும்ப இரவு 10 மணியாகி விடும்.

எங்கள் குழுவில் நந்தா என்றொரு நண்பன் அவன் கோலார் தங்க வயலில் இருந்து படிக்க வந்திருந்தான். அவனுக்கு எப்பொழுதுமே காதல் இளவரசன் என்ற நினைப்பு தான். நாங்கள் ஸ்டேசனில் அமரும் சமயத்தில் ஒரு பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் பெண் 6 மணியளவில் ரயிலில் இருந்து இறங்கி வீடு செல்லும். பார்க்க மிக நன்றாக இருக்கும் அவள் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்.

நந்தா சில நாட்களிலேயே அந்த பெண்ணை கரெக்ட் செய்து விட்டான். அந்த பெண் பெரம்பூரில் ரயில் ஏறுவாள் என்பதற்காக முன்பே பெரம்பூர் சென்று அவளுடன் ரயிலில் வந்து இறங்கி வீடு இருக்கும் தெருமுனை வரை விட்டு வருவது தான் அவனது பணி. சில நாட்களில் அந்த விஷயம் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து நாங்கள் அங்கு அமர்ந்திருக்கும் போது அந்தப் பெண்ணின் அம்மா அனைவரின் முன்பாக காறித்துப்பி விட்டு சென்றார்.

நாங்கள் எல்லோரும் ஏண்டா எங்கள் மானத்தையும் சேர்த்து வாங்கினாய் என்று மொத்து மொத்தென்று மொத்தினோம். எல்லாத்தையும் துடைத்துக் கொண்டு ஒரு வாரத்திலேயே மற்றொரு பெண்ணை கரெக்ட் செய்தான். அந்தக்காதலும் ஒரு மாசம் மட்டுமே. மீண்டும் அந்தப் பெண்ணின் பெற்றோர் காறித்துப்புவது, நாங்கள் அவனை மொத்துவது என்றே இறுதி ஆண்டு வரை காதலித்துக் கொண்டிருந்தான். கடைசி வரை ஒரு காதலும் செட்டாகவில்லை என்பது தான் அவனுக்கு வருத்தமான விஷயம்.

ஸ்டேசனுக்கு வெளியே உள்ள சம்சா கடையில் இருந்து சம்சாக்கள் வாங்கி வந்து அந்த வழியாக செல்லும் ரயில்களில் உட்கார்ந்திருக்கும் அழகான பெண்களுக்கு பழிப்பு காட்டி சாப்பிடுவது சுவையான விஷயம். சில பெண்கள் காறித்துப்புவதும் துடைத்துக் கொள்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

இது போன்ற உருப்படாத விஷசயங்கள் பல ஸ்டேசனில் நடந்தாலும் பரிட்சை சமயங்களில் படிப்பதற்காக மதிய வேளைகளில் ஸ்டேசன் பெஞ்ச்சில் அமர்ந்து படித்தால் அப்படியே மனதில் நிற்கும். அந்தளவுக்கு அமைதியான ஸ்டேசன் அது.

அதுவரை பார்த்திராத ஒரு கோர விபத்து நடந்தேறியதை அங்கு தான் பார்த்தேன்.

ஆரூர் மூனா செந்தில்

(தொடரும் . . .)


Monday, May 7, 2012

நான் பழைய காங்கிரஸ்காரன்.

இன்று மனதளவில் ஈழத்துரோகம் காரணமாக காங்கிரஸை தமிழ்நாட்டில் வேரறுக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் சிறு வயதில் விபரம் தெரிந்த காலத்திலிருந்து நான் காங்கிரஸ்காரனாக இருந்திருக்கிறேன் என்பதை எண்ணும் போது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஆம், நம்புங்கள் நான் போடுங்கம்மா ஒட்டு கை சின்னத்தைப் பார்த்து என்று பல தேர்தல்களுக்கு கூவிக் கூவி பிரச்சாரம் செய்திருக்கிறேன்.

திருவாரூரில் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் மாமா ஒருவர் இருந்தார். அவர் தான் எங்கள் வார்டில் உள்ள பசங்களின் ஆதர்ச நாயகன். ஏனென்றால் தீபாவளிக்கு அவர்களது வீட்டில் தான் மிக அதிக அளவில் பட்டாசுகள் வாங்குவார்கள். அதிகளவில் என்றால் இரண்டு சாக்கு சரம், ஒரு சாக்கு உலக்கை வெடி வாங்குவார்கள்.

எங்கள் வீட்டில் என் சிறுவயதில் பட்டாசு பட்ஜெட் நூறு ரூபாயைத் தாண்டாது. இப்பொழுதும் கூட எங்கள் அப்பாவிற்கு சில ரூல்ஸ்கள் இருக்கின்றன. வீட்டிற்கு மீன் மற்றும் ஆட்டுக்கறி வாங்குவதும், தீபாவளி சமயத்தில் பட்டாசு வாங்குவதும், பொங்கல் சமயத்தில் கரும்பு வாங்குவதும் அவரது கடமையாக இன்றும் நினைக்கிறார். நானோ எனது தம்பியோ போய் வாங்கி வந்து விட்டால் அவரது உரிமை பறிக்கப்பட்டு விட்டதாக நினைத்து காச்மூச்சென்று கத்துவார். அதனால் நாங்கள் இவற்றினை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்று கூட 300 ரூபாய்க்குள் தான் பட்டாசு இருக்கும்.

மீண்டும் கட்டுரைக்குள் வருவோம். அவரது கட்டளைக்கு அடிபணிவதற்காகவே தெருவுக்குள் 20 பேர் இருந்தனர். அவற்றில் மிகவும் ஜூனியர் நான் தான். 7வயதிலேயே தேர்தல் பிரச்சாரங்களில் போடுங்கம்மா ஓட்டு கை சின்னத்தைப் பார்த்து என்று கூவுபவன் நானாகத் தான் இருக்கும்.

காங்கிரஸை பிடிக்க ஆரம்பித்ததற்கு காரணமெல்லாம் சொல்ல முடியாது. என் மாமா காங்கிரஸில் இருந்ததால், என்னை சிறு வயதில் கட்சிக் கூட்டங்களுக்கு கூட்டிச் சென்றதால், இந்திய சுதந்திரப் போராட்டம் காங்கிரஸின் தலைமையில் நடந்தது என சொல்லக் கேட்டதால் அந்த வயதிலேயே பிடிக்க ஆரம்பித்து விட்டது.

87 காலக்கட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் என் மாமா காங்கிரஸ் கட்சியின் சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். வார்டுக்குள் இருந்த நான்கு தெருவையும் பிரித்துக் கொண்டு காலையிலிருந்து மாலை வரை ஒவ்வொரு வீடாக புகுந்து ஒட்டு கேட்பது நோட்டீஸ் வினியோகிப்பது என பிஸியாக இருப்பேன்.

மாமா ஜெயித்ததும் காங்கிரஸின் மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் அந்த வயதில் சுதந்திரப் போராட்டங்கள் பற்றி படிக்க ஆரம்பித்ததும் சுதந்திரத்திற்கு முன் இருந்த காங்கிரஸ் தான் தற்போதைய காங்கிரஸ் எ நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு நடந்த 89 சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் 91 சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 13வது வார்டு பூத் அலுவலகத்தில் நான் தான் நிர்வாகியாக இருப்பேன்.

வருபவர்களுக்கு சட்டையில் கை சின்னம் ஸ்டிக்கரை ஒட்டி விடுவது, கை சின்னம் பேட்ஜ் மாட்டி விடுவது அவ்வப்போது ஒட்டுப்போட வரிசையில் நிற்பவர்களிடம் கை சின்னத்திற்கே ஒட்டு போடுங்கள் என்று கேன்வாஸ் செய்வது வரை நான் தான் முன்னணியில் இருப்பேன்.

ஜிகே மூப்பனார் மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு என்னை மிக நன்றாக தெரியும். அவர்கள் திருவாரூர் வரும்போது என் மாமாவிடம் யார் இவன், இந்த சிறுவயதில் சூட்டிகையாக கட்சி வேலை செய்கிறானே என்று விசாரிப்பர். என் மாமாவும் என் சொந்தக்காரப் பையன், கட்சி மீது ஆர்வம் என்று கூறுவார்.

ஆனால் கட்சியின் ஆர்வம் 14, 15 வயதில் குறைய ஆரம்பித்தது. அதுவும் இவர்களின் கோஷ்டி சண்டையை கவனிக்க ஆரம்பித்த பிறகு சுதந்திரத்திற்கு முன்பு உள்ள காங்கிரஸூக்கும் நிகழ்கால காங்கிரஸூக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. அத்துடன் காங்கிரஸூக்கு வணக்கம் சொல்லி விட்டு வந்து விட்டேன்.

ஆனால் என் மாமா அரசியல் பண்ணத் தெரியாமல் இன்றும் காங்கிஸில் கிடந்து அல்லாடுகிறார். திமுகவிலோ, அதிமுகவிலோ யாராவது இத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தால் கமிஷன், டெண்டர் என பிழைத்து பெரிய ஆளாகியிருப்பார்.

இன்று அவர் தான் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர். ஆனால் மனிதர் ஸ்கூட்டியில் தான் செல்கிறார். ரியல் எஸ்டேட்டில் தான் ஓரளவு சம்பாதிக்கிறார். அவரிடம் அரசியல் கற்றுக் கொண்ட சின்னப் பசங்களெல்லாம் மற்ற கட்சிகளில் சேர்ந்து சம்பாதித்து வீடு, கார் என செட்டிலாகி விட்டனர்.

என்றைக்குமே வில்லங்கமானவர்கள் மட்டுமே அரசியலில் பிழைக்க முடியும் போல.

ஆரூர் மூனா செந்தில்



Sunday, May 6, 2012

பரிட்சையிலிருந்து தப்பிக்கும் வழி

படு புத்திசாலிகளான 4 எம்பிஏ படிக்கும் நண்பர்கள் இறுதித்தேர்வுக்கு சற்று முன்னர் நன்றாக குடித்துவிட்டதானால் படிக்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் துயரம் மிக அவர்கள் யோசித்து எப்படி தேர்வை 4 பேருக்காக மட்டும் தள்ளிப்போட முடியும் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

கை கால்கள், உடை எல்லாவற்றிலும் கிரீஸ், எண்ணெய் தடவிக்கொண்டு, தலை முடியை கலைத்துக்கொண்டு பரிட்சை ஹாலுக்குள் நுழைந்தார்கள். 'அய்யோ HOD', என்று கதறி HOD முன்னர், தங்கள் சோகக்கதையைச் சொன்னார்கள். நேற்று இரவு நகரத்திலிருந்து காரில் வரும்போது, வனாந்தரத்தில், கார் டயர் பஞ்சராகி எந்தவித உதவியுமின்றி பல முயற்சிகளுக்குபின்னர் வெறும் காலில் நடந்து இப்போதுதான் வந்து சேர்வதாக புலம்பினார்கள். சில நாட்களுக்குப்பின்னர் தாங்கள் பரிட்சை எழுதுவதாக கேட்டுக்கொண்டார்கள். HOD, சரி என்று ஒப்புக்கொண்டு 3 நாட்களுக்குப்பின்னர் பரிட்சை என்று சொன்னார்.

நண்பர்கள் விழுந்து விழுந்து படித்து மூன்று நாட்களுக்குப்பின்னர் HOD அறைக்கு சென்றார்கள். இது அசாதாரணமான கோரிக்கை ஆதலால், பரிட்சையும் அசாதரணமாகத்தான் இருக்கும் எனக் கூறி, நான்கு மாணவர்களுக்கும் 4 வெவ்வேறு பரிட்சை அறைகளில், ஒரே கேள்வித்தாளை கொடுத்து பரிட்சை வைக்கப்போவதாகச் சொன்னார்.

கேள்வித்தாளில் முதல் கேள்வியாக 5 மதிப்பெண்களுக்கு ஒரு எளிய கேள்வி இருந்தது. மாணவர்கள் வெகு எளிதில் அதனை முடித்துவிட்டார்கள். அடுத்து 95 மதிப்பெண்ணுக்கு ஒரு கேள்வி இருந்தது

'எந்த டயர் ? '


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இணையத்தில் படித்தது

Wednesday, May 2, 2012

நாட்டுப்புறக்கலைகள்

நாட்டுப்புறக் கலைகள் பற்றி சிவா கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் விவரங்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன். விரைவில் தொடராக வெளியிடுகிறேன். நேற்று எழுதியது பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள


ஆரூர் மூனா செந்தில்




Tuesday, May 1, 2012

நாட்டுப்புறக் கலைஞர்களின் தற்போதைய நிலை

சிறுவயதில் இருந்தே நாட்டுப்புறக் கலைகளின் மீது ஆர்வம் உண்டு. என் அம்மாவழிப் பாட்டி ஊரான ஆதனூர் மண்டபத்திற்கு மே மாதம் முழுவதும் என் குடும்பத்தார் மற்றும் சித்தி குடும்பத்தார், நான்கு மாமா குடும்பத்தார் அனைவரும் வருவது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கம். சுற்றுப்புற ஊர்களில் கோடை திருவிழாக்களில் இரவு முழுவதும் நாடகங்கள் நடைபெறும்.

பவளக்கொடி, அல்லி அர்ஜூனா மற்றும் ப நாடகங்கள் மூன்று இரவுகள் நடைபெறும். கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உட்பட அனைத்து நாட்டுப்புறக் கலைகளும் உண்டு. விடாமல் என் ஆத்தா வீட்டிலிருந்து தாத்தா, ஆத்தா உட்பட சின்டு, சிமிழு, மரக்கா உட்பட அனைத்து வானரங்களும் (வேற யாரு, நாங்க தான்) வண்டிக்கட்டிக் கொண்டு செல்வோம்.

முழு இரவும் விழித்திருந்து நாடகம் பார்ப்பது, இரண்டு ரூபாய் கண்ணாடி மாட்டிக் கொண்டு திருவிழா முழுவதும் சுற்றி வருவது, மாவிளக்கு போடுபவர்களிடம் சென்று ஒரு கை வாங்கித் தின்பது, சின்னப்புள்ளைங்க ஜடைய புடிச்சு இழுப்பது என 12 வயது வரை அழகான நாட்கள் நிரம்பிய டைரி இன்னும் என் மனதில் இருக்கிறது.

12 வயதிற்கு பிறகு ஆத்தா வீட்டிற்கு செல்வது குறைந்ததாலும், திரை கட்டி படங்கள் போடுவது அதிகரித்து நாடகங்கள் நடைபெறுவது குறைந்ததாலும், மீசை முளைக்க ஆரம்பித்ததாலும் தஞ்சை மண்ணில் நாடங்கள் பார்ப்பது நின்றே போனது.

அதன் பிறகு மற்றொரு சீசன் அது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்த என் பெரியம்மாவின் வீட்டிற்கு சென்ற போதிலிருந்து துவங்கியது. அந்தப்பக்கம் கரகாட்டம் கொஞ்சம் கிளுகிளுப்பு மிக்கதாகவும், நாடகங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இதற்கெனவே கோடை காலங்களில் கறம்பக்குடியில் டேரா போட ஆரம்பித்தேன். அங்கு ஒரு நண்பர்கள் குழு சேர்ந்தது. அவர்களுடன் சேர்ந்து சுற்றுப்புறங்களில் நடைபெறும் கரகாட்டம், கிளப் டான்ஸ் ஒன்று விடாமல் பார்க்க ஆரம்பித்தேன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் சென்னைக்கு படிக்க வந்து விட்டதால் அதன் பிறகு கறம்பக்குடி செல்வது மிகவும் குறைந்து போனது.

இது வரை நான் சொன்னது நாட்டுப்புறக் கலைஞர்கள் எவ்வாறு மகிழ்வித்தார்கள் என்பதை வெளியில் இருந்து பார்த்ததைத் தான். மற்றொரு முகம் அவர்களுக்கு உண்டு என்பதை மற்றொரு இடத்தில் தான் கண்டு கொண்டேன்.

தஞ்சாவூர் நகரத்தில் கீழஅலங்கத்தில் பீரங்கி மேடு அருகில் என் பெரிய அத்தை வீடு இருக்கிறது. அங்கு செல்லும் சமயங்களில் என் மாமா பையனுடன் கிரிக்கெட் விளையாட செல்வேன். அங்கு விளையாட வருபவர்கள் பற்றிய அறிமுகம் கிடைத்த பிறகு தான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் நாட்டுப்புறக் கலைஞர்களின் பிள்ளைகள் என்று. பீரங்கிமேடு எதிர்ப்புறம் உள்ள குடியிருப்பு முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மட்டும் தான் குடியிருக்கிறார்கள்.

அதன் பிறகு அந்தப்பக்கம் செல்லும் போது அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது சாயங்கால நேரங்களில் நாட்டுப்புறக் கலைகளை பயிற்சியில் ஈடுபடுவதை பார்ப்பதற்கு அவர்கள் குடியிருப்புக்கு செல்வேன். அங்கு கண்ட ஒரு காட்சி என் மனதை என்னவோ பண்ணியது.

புதுக்கோட்டை பக்கம் கரகாட்டத்தில் அதிகமான ரசிகர்களை கொண்ட கரகாட்ட சரசா அள்ளி முடிந்த கூந்தலுடன் முகத்தில் கரி அப்பிக் கொண்டு மண் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். சரசா ஆடும் போது அதன் ரவிக்கையில் நூறு ஐம்பது என ரூபாய் நோட்டுக்களை குத்துவதற்கே கூட்டம் வரிசையில நிற்கும்.

அந்த சம்பவத்தினை மட்டுமே நினைவில் கொண்டுள்ளவர்களுக்கு இந்தக் காட்சியைப் பார்த்தால் தான் தெரியும். அவர்களது சிரமம். ஏனென்றால் அவர்களது சம்பாத்தியம் எல்லாம் அந்த ஒரு மாதம் மட்டும் தான், அந்த ஒரு மாத சம்பாதியத்தை வைத்துக் கொண்டு குடும்பமே ஒரு வருடத்தை ஒட்ட வேண்டியிருக்கும். வேலையில்லாத நேரங்களில் பயிற்சி மட்டுமே.

அதன் பிறகு கரகாட்டம் பார்க்கும் காலங்களில் அவர்களது படும் சிரமம் மட்டுமே எனக்கு முன்னாடி தெரிந்ததால் கரகம் பார்ப்பதை குறைத்துக் கொண்டேன். பிறகு இல்லாமலே போனது. சென்னை வந்த பிறகு தஞ்சாவூர் செல்வதும் குறைந்ததால் அவர்களுடன் பழக்கமே இல்லாமல் போனது.

17 வருடங்களுக்கு பிறகு என் அப்பாவின் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூரில் 20 நாட்கள் தங்க நேர்ந்தது. பீரங்கி மேடு வழியாக செல்லும் போது ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஆள் குடித்து விட்டு ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தான். காரை நிறுத்தி கவனித்தால் சிறு வயதில என்னுடன் கிரிக்கெட் விளையாடிய என்னை விட வயதில் சிறியவனான ரமேசு.

அப்புறம் நானே முன் சென்று சண்டையை நிறுத்தி அவனை தனியே அழைத்து வந்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிறிது நேரம் யோசித்தவன் பிறகு ஞாபகம் வந்த பிறகு என்னைக் கட்டிக் கொண்டு அழுதான். அவனது அப்பாவுக்கு பிறகு அவனே கரகம் ஆடுவதாகவும் இப்பொழுதெல்லாம் வாய்ப்புகள் மிகவும் குறைந்து போய் பயிற்சியை நிப்பாட்டி விட்டு கூலி வேலைக்கு போய்க் கொண்டிருப்பதாகவும் கூறினான். முடியெல்லாம் நரைத்துப் போய் ஆளே ஒடுங்கிப் போயிருந்தான்.

அவனிடம் இரவு நான் வருகிறேன். நாம் இருவரும் உட்கார்ந்து சரக்கடிப்போம் என கூறிவிட்டு மருத்துவமனைக்கு வந்தேன். இரவு அவனுடன் பேசிக் கொண்டிருந்த போது அவன் கூறிய அனைத்து விஷயங்களும் என் மனதை கலக்கி விட்டது. அது வேண்டாம் மிகவும் பர்சனல். இன்னும் ஒரு தலைமுறை மட்டுமே நாட்டுப்புறக் கலைகளில் ஈடுபடும் என்பதும் அடுத்த தலைமுறை படித்து வேலை பார்க்க கிளம்பி விட்டது என்பது மட்டும் புரிந்தது.

கண்முன்னே அழிந்துக் கொண்டிருக்கும் நம் கலைகளை நம் வம்சாவழிகளுக்கு காட்ட முடியாது என்பது மட்டும் உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...