சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, December 21, 2013

துபாயில் சிவில் இஞ்சினியர் வேலை வாய்ப்பு

துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் BE (Civil) முடித்தவர்கள் தேவை. இந்த ஆண்டு முடித்தவர்களாக இருந்தாலும் கான்வகேஷன் சர்டிபிகேட் இருந்தால் விண்ணபிக்கலாம்.

சம்பளம் - 3000 திர்காம் (இந்திய ரூபாயில் 50000)

24.12.2013 செவ்வாய் அன்று சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 8883072993, மெயில் ஐடி - senthilkkum@gmail.com


Friday, December 20, 2013

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

வருடக் கடைசியில் வந்திருக்கும் சிறந்த படம். எனக்கு தெரிந்து காதலை மிகவும் ரசிப்புத்தன்மையுடன் சொன்ன படம் அலைபாயுதே. அதன் பிறகு அதே அளவுக்கு காதல் உணர்வுகளை சொன்ன படம் இது தான். 


மிக மெதுவாக ஜீவாவின் நட்பில் அலுவல் பணி காரணமாக நுழையும் த்ரிஷா படிப்படியாக ஜீவாவின் நட்பை பெற்று பிறகு அவரின் மனதில் வெகு இயல்பாக காதலை விதைக்கிறார். இந்த காட்சிகள் தான் படத்தின் ஆகப்பெரும் பலம். நாயகியாக ஜூனியர் கமலா காமேஷ் நடித்துள்ளார் என்பது தான் படத்தின் பெரிய பலவீனம்.

ஜீவா, சந்தானம், வினய் மூவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஜீவாவின் அப்பா நாசர். ஜீவாவின் அம்மா வேறொருவருடன் ஓடிப் போய் விடுகிறார். இதனால் பெண்கள் என்றாலே வெறுப்புடன் வளர்கிறார் ஜீவா.


ஒரு பிரச்சனையால் நாசருடன் பேசாமல் இருக்கிறார். நண்பர்கள் மூவரும் விளம்பர நிறுவனத்தை இணைந்து நடத்தி வருகிறார்கள். கல்யாணமே செய்ய மாட்டோம் என கல்யாணி பீர் மீது மூவரும் சத்தியம் செய்கிறார்கள்.

ஓரு விளம்பர படபிடிப்பிற்காக த்ரிஷா இவர்களுடன் இணைகிறார். மெல்ல மெல்ல நட்பாகிறார். 

ஒரு நாள் ஜீவாவிடம் சொல்லிக் கொள்ளாமல் காணாமல் போகிறார்கள் வினய்யும் சந்தானமும். திரும்பி வந்து ஜீவாவிடம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறுகிறார்கள். 

கோவப்பட்டு அவர்களுடனும் நட்பை முறிக்கும் ஜீவா. த்ரிஷாவுடன் நெருக்கமாகிறார். படிப்படியாக காதல் ஜீவாவுக்குள் முளைக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரிவு ஏற்படுகிறது. 


எல்லா பிரச்சனைக்கும் காரணம் தன்னுடைய ஈகோ தான் காரணம் என்பதை அறியும் ஜீவா, அதனை கைவிட்டு அப்பாவுடனும், நண்பர்களுடனும், காதலியுடனும் இணைகிறாரா என்பதே படத்தின் கதை.

படத்தின் மெயின்லைனை விளக்கி விட்டு வெறும் சந்தானம், சரக்கை வைத்தே முதல் பாதியை ஓட்டி விடுகிறார்கள். மக்களும் ரிலாக்ஸாக அரங்கில் சிரித்து மகிழ்கின்றனர். நானும் தான். 

எங்கடா படம் இலக்கில்லாமல் அலைகிறதே என்று நினைக்கும் போது நண்பர்களுக்குள் பிரிவும், இடைவேளையும் வந்து விடுகிறது. அதன் பிறகு த்ரிஷாவுடன் நெருங்கும் போது நமக்கு மனசு ஜில்லென்று பறக்கத் துவங்குகிறது. மன உணர்வுகளை இவ்வளவு இயல்பாக இப்போது வந்த படங்களில் பார்க்கவில்லை. வெல்டன் இயக்குனரே.


ஜீவா கடைசி படங்களில் தோல்வியை கொடுத்திருந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் ரிசல்ட் வேற மாதிரி வந்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்கும்.

நடிப்பிலும் குறைவே வைக்கவில்லை மனுசன். எப்போதும் கடுகடு முகத்துடன் இருக்கும் போது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார். கடைசியில் காதலை சொல்லும் போதும் அதே சிடுசிடு எக்ஸ்பிரசன் அப்ளாஸை அள்ளுகிறது.

வெல்டன் ஜீவா.

உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான் படங்களில் பட்டையை கிளப்பிய வினய்யா அது அடப்பாவமே. இந்த படத்தில் அவரது பாத்திரப்படைப்பு நன்றாக இருந்தாலும் வினய்யின் உடல்மொழியும் நடிப்பும் கடுப்பைத்தான் கிளப்புகிறது.

பேஸ்புக், டிவிட்டர் மற்றும் மதுரை முத்து, இந்த ஏரியாவிலிருந்து நகைச்சுவைகளை கடன் வாங்கி படம் முழுவதும் தூவி விட்டு இருக்கிறார். சில இடங்களில் நகைக்க வைக்கிறார். பல இடங்களில் முழிக்க வைக்கிறார். சார் சரக்கு தீர்ந்துடுச்சா.

த்ரிஷா கூட நன்றாக நடித்து இருக்கிறார். வயது முதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. கிரீடம் படத்தில் இதே ஹேர்ஸ்டைலில் பார்க்க அழகாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் ஹேர்ஸ்டைல் மட்டும் அழகாக இருக்கிறது.

இரண்டாம் பாதியை கலகலப்பாக அங்கங்கே சந்தானம் வினய் காமெடியை திணித்திருக்கிறார்கள். ஆனால் அதுதான் வேகத்தடையாக இருக்கிறது. இரண்டாம் பாதி அழகை கெடுக்கிறது.

ஆண்ட்ரியா மாடல் அழகியாக வருகிறார். சிரித்துப் பேசி கழுத்தறுக்கும் கேரக்டர். நிறைவாக செய்திருக்கிறார். சரியாக லாக்செய்து ஜீவாவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். ஆனால் அதற்கு ஜீவாவின் ரியாக்சன் தூள்.

இரண்டு பாடல்கள் தவிர மற்றதெல்லாம் படத்திற்கு வேகத்தடை.

மற்றபடி கேன்சர், அதற்காக நண்பர்கள் நடிப்பது எல்லாம் சினிமாத்தனம். மனிதனின் ஈகோ தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது தான் படத்தின் லைன். காதல் உணர்வுள்ள காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Tuesday, December 17, 2013

பஞ்சேந்திரியா - காசிமேடு சந்தையும், சினிமாவுக்கு போன கதையும்

மீன் வாங்குவதற்காக காசிமேடு செல்வது நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. தோழர் மணிகண்டவேல் அறிமுகப்படுத்தியதால் இரண்டு வாரங்களுக்கு முன்பு காசிமேடு மீன் சந்தைக்கு செல்லத் தொடங்கினேன்.

நமது ஏரியாவில் உள்ள சந்தைக்கும் காசிமேடு சந்தைக்குமான மீன் விலையின் வித்தியாசம் ஆச்சரியத்தை கொடுக்கிறது. நல்ல தரமான சங்கரா மீன் 30 கிலோ அடங்கிய கூடை 1000 ரூபாய் வரை கிடைக்கிறது.

அதை வாங்கி இதர செலவுகளுடன் கணக்குப் பார்த்தால் கூட கிலோ 50 ரூபாய் கணக்கு தான் வருகிறது. சங்கரா மீன் கிலோ 200ரூபாய்க்கு கிடைக்கிறது. நாலு கிலோ எடையுள்ள திருக்கை மீன் 150 ரூபாய். நாலு கிலோ இறால் 450 ரூபாய்.

என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் பிரித்துக் கொள்ளும் போது சல்லிசான விலையில் வாங்கி மீனாக தின்று ஜமாய்க்கிறேன். என்ன காலையில் 4 மணிக்கு எழுந்து தயாராகி நண்பர்களை ஒன்று சேர்த்து அழைத்துப் போய் சேரும் போது 5 மணியாகி விடும்.

ஆறு மணி வரை சந்தை விலையை கவனித்து வாங்கினால் நல்ல லாபம் தான், சென்னையில் உள்ள நண்பர்கள் ஒரு குழு சேர்த்துக் கொண்டு வாங்கினால் உங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

----------------------------------------------------

உங்க அலப்பறைக்கு அளவே கிடையாதா பொண்ணுங்களா


----------------------------------------------------

வெள்ளியன்று அதிகாலை காசிமேடு சென்ற களைப்பால் தூங்கிவிட்டேன். பத்தரை மணிக்கு எழுந்து அவசர அவசரமாக ஊரிலிருந்து வந்திருந்த தம்பியையும் அழைத்துக் கொண்டு அரங்கிற்கு செல்லும் போது மணி 11.30. அரங்கிலும் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. 

நான் முன்பே விமர்சனத்தை படித்து விட்டதால் ஆர்வமுடன் நுழைந்தேன். படம் துவங்கி சில நிமிடங்களிலேயே என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து விட்டதால் சப்பென்று ஆகிவிட்டது. 

நானே யூகிக்கும் அளவுக்கு திருப்பங்கள் இருந்தன. ஆனால் என்னுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்த ஒரு காலேஜ் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் கவுண்ட்டர் கொடுத்து கலாய்த்துக் கொண்டே இருந்தது, எனக்கு என் பால்ய காலத்து நினைவுகளை கிளறி விட்டது.

இப்படித்தான் நானும் என் 20க்கும் மேற்பட்ட நண்பர்களும் கொளத்தூர் கங்காவில் முதல்நாள் முதல் காட்சி ஹேராம் பார்க்க போய் வரிசையில் நின்று மன்னன் பட ரஜினி கவுண்டமணி ஸ்டைலில் கலாட்டா செய்து டிக்கெட் வாங்கி கிழித்த லாட்டரி டிக்கெட்டுகளை விசிறியடித்து பார்க்கத் துவங்கினோம்.

நேரம் ஆக ஆக மண்டையை பிய்த்துக் கொண்டு ஓப்பாரி வைத்து அலப்பறை செய்து பிறகு போலீஸ் வந்து கலாட்டா ஆனது எல்லாம் நினைவுக்கு வந்தது. டீன்ஏஜ் கலாட்டாக்கள் என்றுமே இனிமையானவை தான். 

----------------------------------------------------

கலி முத்திடுச்சி பாட்டி


----------------------------------------------------

நான் பணிபுரியும் பிரிவில் மார்கழி மாதம் தோறும் தினசரி பூஜையும் பிறகு பிரசாதமும் வழங்கப்படும். பொங்கல், இனிப்பு, சுண்டல், வடை, கலந்த சாதம் என தடபுடலாக இருக்கும். வரிசையில் நின்று தான் வாங்கி சாப்பிட வேண்டும். 

உயர் அதிகாரிகள் வரை சங்கோஜப்படாமல் நின்று வாழையிலையில் சுடச்சுட பிரசாத்தை வாங்கி தின்னும் போது சமத்துவம் பொங்கி வழியும்.  நானும் என் நண்பர்களும் வரிசையில் நின்று கலாட்டா செய்து வாங்கி ஒர்க்கிங் டேபிளில் வைத்து சாப்பிடுவோம். இந்த சம்பவங்கள் பால்ய வயதின் வினாயகர் சதுர்த்தி பொங்கல், சுண்டலுக்கு என் நினைவுகளை அழைத்துச் செல்லும்.

இன்று கூட ரவாப்புட்டு, கடலைப்பருப்பு சுண்டல், மசால் வடை, வெண்பொங்கல், தேங்காய் சாதம் என ஒரு வெட்டு வெட்டினேன். அப்புறம் எங்கேயிருந்து வேலை செய்ய. படிப்பவர்களுக்கு நாவில் எச்சில் ஊறினால் நான் பொறுப்பல்ல.

ஆரூர் மூனா


Monday, December 16, 2013

தினமணியில் நமது வலைப்பதிவு பற்றிய அறிமுகம்

தினமணி கதிரில் நேற்று நமது தோத்தவண்டா வலைத்தளத்தைப் பற்றி அறிமுகம் வந்து இருந்தது. தீபாவளிக்கு முன்பு தோழர் மபா அலைபேசியில் அழைத்து தீபாவளிக்கு தினமணிக்காக தீபாவளி மலர் தயாராகிறது என்றும், அதற்காக வலைத்தளத்தின் விவரங்களை அனுப்பச் சொல்லி கேட்டார். 



பிறகு தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரசுக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார். அதன் பிறகு அந்த அறிமுகம் தினமணி கதிரில் வெளியாகியுள்ளது. வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்கள். 

மற்ற பதிவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால் இணையம் என்பதும் எழுத்து என்பதும் நமக்கு தொழில்முறையாகவோ விருப்பமிகுதியாலோ அறிமுகமாகவில்லை.

பதிவர்களில் மிகப் பெரும்பாலானோர் எழுத்துத்துறை, சினிமாத்துறை, பத்திரிக்கைத்துறை மற்றும் கணினி சார்ந்த வேலைகளில் இருக்கின்றனர். நமக்கு அந்த கொடுப்பினையும் வாய்ப்பும் இல்லை. 

2009 வாக்கில் தமிழில் எழுதப்பட்ட புத்தகங்கள் வாங்கி படித்து அலுத்துப் போன பிறகு ஒரு வாரப் பத்திரிக்கையில் இணையத்திலும் புத்தகங்களை படிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது. அதனை வைத்து எனக்கு உள்ள சிற்றறிவை வைத்து தேடி கண்டுபிடிக்கவே ஒரு மாதம் ஆனது.

பிறகு ப்ளாக்ஸ்பாட் பக்கம் வந்து பதிவுகளை படித்து மற்றவர்களின் எழுத்துக்கள் மக்களால் படிக்கப்படுவதை பார்த்து ஆசைப்பட்டு நானும் ஒரு வலைத்தளத்தை தட்டுத்தடுமாறி ஆரம்பித்து வைத்தேன். ஆனால் அதில் என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை. 

மற்ற பதிவர்களின் சினிமா விமர்சனங்கள் பெரிதாக கவனிக்கப்படுவதை அறிந்து நானும் ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதலாம் என்று ஆசைப்பட்டு போன படம் டீஸ்மார்கான். அக்ஷய் குமார், காத்ரினா கைப் நடித்த அந்த படத்தினை பார்த்து விட்டு வந்து இரண்டு மணிநேரம் முயற்சித்து என்னால் ஒரு பாரா மட்டுமே அடிக்க முடிந்தது. 

இன்றும் என் வலைத்தளத்தில் அந்த பதிவு இருக்கிறது. இப்போது எனக்கு பொழுது போகாத போது அதனை படித்துப் பார்த்து சிரித்துக் கொள்வேன். பிறகு தட்டுத்தடுமாறி எழுத முயற்சித்து எழுதவும் வராமல் எங்கோ படித்த விஷயங்களை எழுதி பதிவில் போட்டுப் பார்த்துக் கொள்வேன்.

படிப்படியாக பதிவர்களின் தனித்துவம், திரட்டிகள், ஓட்டு, சம்பிரதாய பின்னுட்டங்கள், குழு சச்சரவுகள் என அறிந்து சரியோ தப்போ சொந்தமாக எழுதுவது தான் சரி என்று மொக்கையாக இருந்தாலும் இப்போது எழுதிக் கொண்டு இருக்கிறேன். 

நமக்கு வழிகாட்டி என சொல்லிக் கொள்வது போல் ஒருவரும் இல்லையே என்பது தான் சற்று வருத்தமாக இருக்கு. எந்த எழுத்தாளர்களின் சாயல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் சிரமப்படுகிறேன். 

எப்படி மேடு பள்ளங்கள் வைத்து எழுதினாலும் மற்றவர்களின் சாயல் வந்து விடுகிறது. அதற்காக ப்ளெய்னாக எழுதி எனக்கென ஒரு பாணி அமைக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். படிப்பவர்கள் தான் குறையை சொல்ல வேண்டும். திருத்திக் கொள்கிறேன்.

இருந்தாலும் இப்ப நாமே சொந்தமாக ஆசிரமம் அமைத்து பதிவுலக நண்பர்களுடன் கலந்து கட்டி மகாதியானம் செய்யும் அளவுக்கு நண்பர்களை பெற்றிருப்பது சந்தோஷமே.

இப்போது சொந்த அலுவல் காரணமாக அடிக்கடி எழுத முடியவில்லை. இது போன்ற சமயத்தில் இந்த ஊக்கம் இன்னும் நான் தரமாக எழுத முயற்சிக்க வேண்டும் என்று மண்டையில் கொட்டுகிறது.

வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

ஆரூர் மூனா

Friday, December 13, 2013

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

இந்த படத்தை மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யம் குறையாமல் சீட்நுனியில் அமர்ந்து பார்த்து ரசிக்க ஆசை உண்டெனில் தயவு செய்து இந்த இடத்துடன் இந்த பதிவை மூடி வைத்து விட்டு வேறுவேலை பார்க்கச் செல்லவும். இப்போதைக்கு படம் பார்க்கும் எண்ணம் இல்லையெனில் மேற்கொண்டு படிக்கவும். இந்த படத்தின் எல்லா விமர்சனத்திற்கும் இந்த கருத்து பொருந்தும்.


நான் கூட காலையில் நண்பர் செங்கோவியின் விமர்சனத்தை படித்து விட்டே சினிமாவுக்கு சென்றேன். என்னுடன் பார்த்து ரசித்த மற்றவர்களை விட எனக்கு சுவாரஸ்யம் ஒரு மாற்று குறைவாகத்தான் கிடைத்தது.

ரொம்ப நாட்களாக தமிழ்சினிமா கையில் வைத்து இருந்த இடையில் மறந்திருந்த எம்ஜிஆர் காலத்து நாயகன். அது ஒன்னுமில்லீங்க சமுதாயத்துக்கு நல்லது செய்ய நினைக்கும் நாயகன்.

தனக்கு சம்பந்தமேயில்லாத ஆனால் நாட்டினை சிறுமைப்படுத்தும் சமூகத்தின் கேடு ஒன்றினை புத்திசாலித்தனத்துடன் களைகிறார். அந்த நேரம் பார்த்து எனக்கு உச்சா வந்ததால் திரையரங்கில் இடைவேளை விடுகிறார்கள். 


இடைவேளைக்கு பிறகு அந்த  சமூகத்தின் கேடு நாயகனிடம் விளையாட்டு காட்டி வம்பு வளர்க்கிறது. கடைசியில் நாயகனிடம் வழக்கம் போல அடி வாங்கி செத்து மடிகிறது. படம் ஆரம்பித்து இரண்டரை மணிநேரம் ஆனதாலும் எனக்கு பசி வந்து விட்டதாலும் அத்துடன் படத்தை முடித்து நம்மை அனுப்பி வைக்கிறார்கள்.

இதுக்கு மேல வௌக்குனா உங்களுக்கு சுவாரஸ்யம் போயிடும் மக்கா. 


படம் மிகச்சிறந்த எண்டர்டெயினர். அதில் சந்தேகமே வேண்டாம். ஆரம்பம் முதல் முடிவு வரை டெம்போவை குறைக்காமல் கொண்டு சென்றதிலேயே இயக்குனர் வெற்றி பெற்று விடுகிறார்.

இயக்குனர் சரவணன் முதல் படமாக இயக்கியது தெலுகில் கணேஷ். படம் பிளாப். இரண்டாவது தான் எஙகேயும் எப்போதும். அதனால் இந்த படத்திற்குரிய எதிர்பார்ப்பு எனக்கு சற்று குறைவாகத்தான் இருந்தது.
 
என் எண்ணம் எல்லாத்தையும் படம் அடித்து நொறுக்கி விட்டது. மேக்கிங்கில் மிரட்டியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

தெலுகில் முதல் படத்திலும் இரண்டாவது படத்திலும் வாரிசு நடிகர்களான என்டிஆர், ராம்சரண் ஆகியோரின் அறிமுகக் காட்சியினை பார்த்து மிரண்டு போய் கொளப்பாக்கம் முனீஸ்வரன் கோயில் பூசாரியிடம் மந்திரித்து விட்டு வந்தவன் நான். 

ஆனால் இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் அறிமுகக் காட்சியில் எதார்த்தத்தை கண்டு வியந்து தான் போனேன். அந்த ஹீரோயிசம் இல்லாத எளிமையை படம் முழுதும் கண்டேன், ரசித்தேன்.

சுரபி ஒரு டெல்லி குல்பி. அப்படியே ப்ரெஷ்ஷாக இருக்கிறார். நான் வேண்டிக் கொள்வது எல்லாம் இந்த பொண்ணு தெலுகு பக்கம் போயிடக் கூடாதுன்னு தான். 

இப்படித்தான் மாஸ்கோவின் காவிரி படத்தில் ஒரு பொண்ணு பார்க்க செம செம செம பிகராக இருந்தது. தமிழில் கவனிக்கப்படாமல் தெலுகு பக்கம் போய் அவர்களின் வில்லங்க ட்ரீட்மெண்ட்டால் வத்திப் போய் வசீகரம் இழந்து முன்னணி நாயகி என்ற நிலையை அடைந்தார். வேறு யாருமல்ல சமந்தா தான் அவர்.

நாயகி சென்னையிலேயே தங்கி தமிழ் படங்களில் மட்டும் நடித்து முன்னணி நடிகையாக ஆக அருள் புரிவாய் கருணைக்கடலே. 

வம்சி கிருஷ்ணா தெலுகில் பல வருடங்களாக அடியாள் பாத்திரத்தில் வந்து பிறகு சின்ன சின்ன வில்லன் கதா பாத்திரங்களில் நடித்து முன்னணி வில்லனாக ப்ரமோட் ஆகியவர். தமிழில் தடையற தாக்க படத்திற்கு பிறகு கிடைத்த இந்த வாய்ப்பை பிரமாதமான பெர்பார்மன்ஸ் மூலம் தக்க வைத்துள்ளார்.

படத்தின் பாடல்களில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் மான்டேஜ் ஆக இருப்பது நன்றாகவே இருக்கிறது. இசையும், பின்னணி இசையும் ரசிக்கும் படியே இருக்கின்றன. 

கயிறு கட்டி பறந்து பறந்து அடிக்கும் ஆக்சன் காட்சிகள் போல் அல்லாமல் இயல்பாக சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்.

அந்த காதல் போர்ஷன் வெகு இயல்பாக ரசிக்கும் படி இருக்கிறது. நாயகியை விட நாயகியின் தங்கையாக வருபவர் முகத்தில் அதிக எக்ஸ்பிரசன்களை கொடுக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். 

அது போல் படத்தின் ஒவ்வொரு காதல் காட்சியிலும் படத்தின் வேறொரு சம்பவத்தின் லிங்கை வைத்து பாதிக்கு பிறகு ஒவ்வொன்றாக இணைப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

மொத்தத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு. உங்களுக்கும் தான். 

ஆரூர் மூனா

Friday, December 6, 2013

கல்யாண சமையல் சாதம் - சினிமா விமர்சனம்

எப்போதுமே அடிதடி க்ரைம் மசாலா படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோமே இந்த முறையாவது ஒரு நீட் அண்ட் க்ளீன் மூவியாக போவோம் என்று முடிவு செய்து கல்யாண சமையல் சாதம் படத்தை தேர்வு செய்தேன். ஆனால் அது எவ்வளவு தப்பு என்பதை படம் போட்ட பத்து நிமிடத்தில் தெரிந்து விட்டது.


பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக பார்ப்பனர்களை வைத்து பார்ப்பனிய திருமணத்தை சார்ந்து வில்லங்க கதைக்கருவுடன் எடுக்கப்பட்ட பார்ப்பணீய திரைப்படம் கல்யாண சமையல் சாதம்.

படம் துவங்கியவுடன் ஒரு அக்மார்க் மாடர்ன் அய்யர் வீட்டுக்குள் நுழைந்த மாதிரி தோன்றியது. படம் முடியும் வரை அந்த பீல் போகவேயில்லை. ஏனப்பா இந்த கதைக்கருவுக்கு உங்களுக்கு எப்படி பார்ப்பனர்களை பின்புலமாக வைத்து எடுத்து அவர்களை கேவலப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.


நல்ல அய்யர் வீட்டு பையன் பிரசன்னாவுக்கும் நல்ல அய்யர் வீட்டு பொண்ணு லேகாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என பேஸ்புக் டிவிட்டர் ப்ளாக் கலந்து கட்டி எல்லாவற்றிலும் தங்களது புரிதலை வளர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு ஒரு நல்ல நாளில் இருவரும் சரக்கடித்து (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்) ஒன்று சேர முற்படுகின்றனர். அந்த நேரம் பார்த்து நாயகனுக்கு தற்காலிக எழுச்சியின்மை ஏற்படுகிறது.


இதனை தவறாக நினைக்காத நாயகியும் ஜஸ்ட் லைக் தட் (என்ன கொடுமை இது) எடுத்துக் கொள்கிறார். நாயகன் தன் உதவாக்கரை நண்பர்களுடன் கண்ட இடங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்க நினைக்கிறார். 

சில பல கலாட்டாக்களுக்கு பிறகு நாயகனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை வெறும் மன அழுத்தம் தான் என்று தெரிய வர சுமூகமாக திருமணம் நடைபெறுகிறது.

நான் மட்டும் சென்சார் போர்டு அதிகாரியாக இருந்திருந்தால் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்து இருப்பேன். பொதுவாக ஆச்சாரம் அனுஷ்டானம் பார்க்கும் ஒரு இனத்திற்கு இப்போது சரக்கடிப்பதும் கல்யாணத்திற்கு முன்பு சேர நினைப்பதும் சகஜமான ஒன்று என்று கதையின் போக்கு இருப்பதால் தான் இந்த முடிவு

இந்த படத்திற்கு எத்தனை பார்ப்பனர் இயக்கங்கள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கப் போகின்றனவோ.

பிரசன்னா 5ஸ்டார் படம் முதல் கண்ட நாள் முதல் படம் வரை எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரின் இயல்பான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இயக்கம் என்று வரும் போது சாரி பிரசன்னா, நீங்க அதை கை கழுவி விடுவது தான் அதற்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.

படத்தில் நடித்துள்ள டெல்லிகணேஷ், ராகவ், உமா பத்மநாபன், கீதாரவிசங்கர், க்ரேஸி மோகன், நீலு, பிரசன்னாவின் நண்பர்கள் என எல்லாம் பிராமணர்கள் தான்.

லேகா வாஷிங்டன் மட்டுமே எனக்கு படத்தில் கிடைத்த ஆறுதல். 

பாடல்கள் எல்லாம் சொல்லிக் கொள்வது போல் இல்லை.

சர்வசாதாரணமாக ஆபாச வார்த்தைகளையும் பொதுவில் பேச தயங்கும் வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பேசுகின்றனர். என்ன நடக்குதுன்னு தான் புரியலை.

படம் நகைச்சுவை படமாகத்தான் இருக்கும் என நினைத்து சென்றேன். அவரும் அதை நினைத்து தான் இயக்கியிருக்கிறார். ஆனால் எனக்கு படம் முடியும் வரை ஒரு புன்முறுவல் கூட வரவில்லை என்பது தான் சோகம்.

நாயகி கோவப்பட்டு நாயகனை போடா உஸ் என்று திட்டுகிறார். நாயகன் சில மணிநேர முறைப்புகளுக்கு பிறகு ஒன்றுமே சொல்லாமல் நாயகியை கட்டிக் கொள்கிறார். வாழ்க தமிழ் சினிமா.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு வசனம் வரும், "போங்கடி நீங்களும் உங்க கல்யாணமும்." - இது தான் இந்த படத்திற்கான கமெண்ட்.

ஆரூர் மூனா

Thursday, December 5, 2013

பஞ்சேந்திரியா - தேவிலாலின் சாதுர்யம் மற்றும் புத்தக கண்காட்சி

மக்களின் அறியாமையினை ஒரு நபர் எந்த அளவுக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் உயர முடியும் என்பதற்கு உதாரணம் ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான தேவிலால்.
இவர் அரியானா மாநிலத்தின் பெருமான்மையினமான சாட் இனத்தை சேர்ந்தவர். இதனால் அந்த இனமக்கள் தேவிலாலை தங்களது பெருந்தலைவராக கருதினார்கள். சாட் இனத்தினர் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டவர்கள். எனவே தேவிலால் விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் முக்கிய தலைவராகவும் திகழ்ந்து வந்தார்.
அரியானா மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அவர் பலமுறை அங்கு முதல்-மந்திரியாக இருந்துள்ளார். 1989-ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது அரியானா முதல்-மந்திரியாக இருந்த தேவிலால் துணைப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
விவசாயிகள் நிறைந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசி மக்களை ஒரு நிலையில் நிறுத்தி விட்டு உரையாற்றியதன் சாராம்சம்.

"நமது மாநிலம் இதற்கு முன்பாக பசுமையோடு இருந்தது. ஆனால் பாருங்கள் இப்போது வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் நம் மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா,"

மக்கள் : தெரியாது, தெரியாது

"மத்திய அரசாங்கம் அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி வைக்கிறது. அந்த நீரைப் பயன்படுத்தி மின்சாரத்தை எடுத்து விட்டு பிறகு வெறும் சக்கை நீரை மட்டும் நமக்கு தருகிறது. அந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் பார்த்தால் விவசாயம் எப்படி செழிப்பாக நடைபெறும்."

அவ்வளவு தான் மறுநாள் அத்தனை விவசாயிகளும் கடப்பாறை மண்வெட்டி சகிதம் அணைக்கட்டை உடைக்க கிளம்பி விட்டார்கள். 

வாழ்க ஜனநாயகம்

------------------------------------------------------


-----------------------------------------------

என் தெலுகு நண்பர் சொல்லக் கேட்டது. 

ஆந்திராவில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம். தெனாலி என்ற நகரில் கடந்த 27 வருடங்களாக காந்தி சிலை ஒரு இருந்து வந்தது. போன வருடம் அந்த சிலைக்கு மிக அருகில் ஒரு மதுபானக்கடை துவக்கப்பட்டது. 

முதலில் சாதாரணமாக இருந்த இந்த விஷயம் ஒரு காந்தியவாதியின் முயற்சியால் சிறிது சிறிதாக மக்களின் கவனம் பெற்று பெருதரப்பட்ட மக்களின் அதிருப்திக்கு ஆளானது.

போராட்டம் பெரிதாக வெடித்து கடையடைப்பு பேருந்துகள் மறியல் என கலவரமானது, விஷயத்தை கவனிக்க அந்த இடத்திற்கு கலெக்டர் வந்தார். மக்களின் கோரிக்கைகளை கவனமாக கேட்டு அறிந்தார். பிறகு மக்களிடம் இந்த விஷயத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்து கிளம்பி விட்டார். 

சில நாட்களில் கலெக்டரின் நடவடிக்கையின் பேரில் மாற்றப்பட்டது. 

சற்று தள்ளி இருந்த பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது மதுபானக்கடை இல்லை. காந்தி சிலை.

வாழ்க ஜனநாயகம்.

-------------------------------------------------

------------------------------------------------

அதோ இதோவென்று புத்தக கண்காட்சி நெருங்கி விட்டது, புத்தகங்கள் வாங்குவதற்கென பட்ஜெட்டும் ஒதுக்கியாச்சி. ஆனால் பாருங்கள் நான் வாங்க வேண்டுமென நினைத்த அனைத்து புத்தகங்களையும் வாங்கியாச்சி, அருமையான கிளாசிக் புத்தகங்கள் உட்பட. அனைத்தையும் படித்து அடுக்கியும் வைச்சாச்சி.

இப்போது வாங்க என்னிடம் பட்டியல் ஏதும் இல்லை. படிக்க இன்ட்ரட்டிங்காக இருக்கும் புத்தகங்களின் விவரங்களை இணையத்தில் இருந்து எடுத்தாலும் வாங்கிய பின் சொதப்பி விடுமோ என சந்தேகம் வேறு இருக்கிறது.

பெரியாரின் அனைத்து புத்தகங்களும், சுஜாதாவின் ஏறக்குறைய அனைத்து புத்தகங்களும், சாண்டில்யன், கல்கி, சுந்தர ராமசாமி, தி.ஜா ஆகியோர்களின் அனைத்து புத்தகங்களும் கைவசம் இருக்கிறது. சாரு, ஜெமோ கூட தான்.

இது தவிர தாங்கள் படித்த சிறந்த புத்தகங்களின் பட்டியலை என்னிடம் பகிர்ந்தால் இந்த ஆண்டு வாங்க உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி

ஆரூர் மூனா

Tuesday, December 3, 2013

உடம்பை குறைப்பது எப்படி

அதிகாலையில் எழுந்ததும் முதல்நாள் ஊற வைத்த கொண்டைக்கடலையை தின்று விட்டு ரெண்டு பச்சை முட்டையை அலேக்காக தலையில் தட்டி லபக்கென வாயில் கவிழ்த்து கிரவுண்ட்ல .............................

தலைப்பை பார்த்துட்டு இப்படியெல்லாம் நான் டிப்ஸ் கொடுப்பேன்னு நினைச்சிங்கண்ணா சாரி இந்த பதிவு அதைப் பற்றியதல்ல. கஜினி மாதிரி என்னுடைய விடாமுயற்சியும் அதில் நான் பெற்ற அனுபவங்களையும் பற்றிய பகிர்வு இது.


சிறு வயதில் இருந்தே எனக்கு பள்ளியில் பட்டப்பெயர் குண்டா, தடியா தான். ரோட்டில் செல்லும் போது யாராவது யாரையாவது குண்டா தடியா என்று கூப்பிட்டால் அனிச்சையாக திரும்பிப் பார்ப்பேன்.

ஆனால் உடம்பு பிட்டாக இருந்ததால் அது எனக்கு பெரிய விசயமாகவே தோணவில்லை. உடம்பு குண்டாக இருந்த போதும் பத்தாவது படிக்கும் போது ஹாக்கியில் கோல் கீப்பராக இருந்ததால் தினமும் பயிற்சி உண்டு.

அதிகாலையில் கமலாலயம் குளத்தை சுற்றி மூன்று ரவுண்டுகள் ஓடுவேன். அதுக்கப்புறம் திருவிக காலேஜ் கிரவுண்டுக்கு போய் அங்கும் விடாமல் பயிற்சிகள் மேற்கோள்வோம். 12 மணிக்கு பயிற்சி முடிந்த பிறகு சைக்கிளில் வீட்டுக்கு வந்து சாதாரணமாக 25 இட்லி சாப்பிடுவேன். 


அந்த பயிற்சிக்கு அது தேவையானதாக இருந்தது. பத்தாவது பரிட்சை எழுதி முடிந்ததும் நான் என் நண்பர்கள் கணேசன் மற்றும் சண்முகம் ஆகியோர் ஆரூரான் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தோம். 

தினமும் 4 மணிக்கு எழுந்து கமலாலயத்தை சுற்றி ஓடுவோம். 6 மணிக்கு ஜிம்முக்கு போய் பயிற்சிகள் செய்து ஒரு மாதம் வரை அக்குளில் கட்டி வந்த மாதிரியே சுற்றிக் கொண்டு இருந்தோம்.

அதன் பிறகு போரடிக்க ஆரம்பித்தது. காலையில் கணேசன் வீட்டுக்கு வந்து எழுப்பி கூட்டிச் செல்லுவான். கமலாலயம் வந்ததும் முராசன்ஸ் பிள்ளையார் சன்னதியில் உக்கார்ந்து கணேசனிடம் "மாப்ள எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நீ இரண்டு ரவுண்டு ஒடி வா, அதன் பிறகு நான் உன்னுடன் இணைந்து கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு தூங்கி விடுவேன். 


கடைசி ரவுண்டு மட்டும் ஓடி விட்டு ஜிம்முக்கு போய் வந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு அதுவும் போரடித்து அப்படியே இரண்டுக்கும்
ஜூட் விட்டேன்.

அதன் பிறகு கொஞ்ச நாள் இந்த பிட்னஸ் பக்கம் தலைவைக்காமல் இருந்தேன். சில வருடங்களுக்கு பிறகு ஆசை தலை தூக்கியது. அந்த நேரம் நான் ஐசிஎப் கிரவுண்டு எதிரில் உள்ள பள்ளியின் இரண்டாம் தளத்தில் இருந்த மாணவர் விடுதியில் தங்கி அப்ரெண்டிஸ் படித்துக் கொண்டு இருந்தேன்.

காலையில் உடன் தங்கியிருந்த நண்பர்களை அழைத்துக் கொண்டு காலை நாலு மணிக்கு ஐசிஎப் கிரவுண்ட்டில் ரவுண்ட் அடித்துக் கொண்டு இருப்பேன். சில நாட்களில் வழக்கம் போல போர், வழக்கம் போல ஜூட் தான்.

அதுக்கப்புறம் ரொம்ப வருசம் அதுக்குள்ளயே போகல. ஆனால் உடம்பு மட்டும் கட்டுப்பாடில்லாமல் போனது. அந்த காலக்கட்டம் தான் நான் மகாதியானத்தில் மூழ்க ஆரம்பித்த நேரம். 1997ல் 78கிலோ இருந்த நான் 2006ல் 101கிலோவை தொட்டேன். 

எனக்கு ஒரு பெரிய ஆபீசர் இருந்தார். பெரிய என்றால் நான் பணிபுரிந்த கம்பெனியின் தமிழக மண்டல அலுவலகத்தின் மூத்த அதிகாரி. என் எடை எப்போதும் அவருக்கு உறுத்திக் கொண்டே இருக்கும். 

2005 வாக்கில் எனக்கு ஒரு சவால் விடப்பட்டது. அதுவும் அபீசியலாக. ஆமாம். ஜெனரல் மோட்டார் டயட் என்ற டயட்டை நான் பாலோ செய்ய வேண்டும். என்று கம்பெனி எம்டியால் கடிதம் கொடுக்கப்பட்டது. 

முதல் முறை நானும் சற்று பயந்து போய் கெடுபிடியாக இருந்தேன். ஒரு வாரத்தில் சட்டென 7 கிலோ இறங்கியது. பிறகு ரெகுலர் டயட். ஒரு வாரத்திற்கு பிறகு மறுபடியும் டயட். 

ஆனால் இந்த முறை பயம் தெளிந்து கிடைத்த கேப்பில் எக்ஸ்ட்ரா உணவுகளை அள்ளி விட ஆரம்பித்தேன். அந்த அளவுக்கு எடை குறையவில்லை, பிறகு ஒரு நாளில் அதுவும் காற்றில் பறக்க விடப்பட்டது. 

2007 ஜனவரியில் சென்னை அண்ணா நகரில் உள்ள தல்வாக்கர் என்ற ஜிம்மில் கட்டாயமாக உடம்பை குறைக்க வேண்டுமென உயர் அதிகாரியால் சேர்க்கப்பட்டேன். அதற்கான கட்டணம் ரூ30,000 கம்பெனி கணக்கில் செலுத்தப்பட்டு என் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.

சேர்ந்த அன்று டயட்டிசியன் நாப்பது பக்கத்துக்கு நான் சாப்பிட வேண்டியது சாப்பிடக் கூடாதது லிஸ்ட்டை கொடுத்தது. என் அறையில் இருந்த மற்ற பேச்சிலர் பையன்கள் காலையில் கையேந்திபவனில் ரெண்டு இட்லியை பிய்த்து தின்று விட்டு வேலைக்கு போகும்  போது நான் மட்டும் சிறு அடுப்பு வாங்கி வைத்து ஓட்ஸ் கிண்டிக் கொணடு இருப்பேன். கடுப்பாக இருக்கும். 

அந்த சார்ட் படி ஏழு மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும் அதுவும் ரெண்டு சப்பாத்தி மட்டுமே. சாப்பிட்டு பத்து நிமிசத்தில் பசிக்க ஆரம்பித்து விடும். ராத்திரி பசியால் தூங்க முடியாமல் தவிப்பேன்.

ஜிம்மின் உள்ளே செல்லவே எனக்கு மிகுந்த தயக்கமாக இருக்கும். ட்ரெட்மில்லில் திணறித் திணறி ஓடிக் கொண்டு இருப்பேன். பக்கத்து ட்ரெட்மில்லில் சினிமா நாயகி கணக்காக அம்சமான ஒரு பெண் அசால்ட்டாக ஒடிக் கொண்டு இருக்கும். வெட்கமாக இருக்கும்.

ஒர்க்அவுட் செய்யும் போது சில பெண்கள் சில இடங்களில் உள்ள குறிப்பிட்ட சதைப்பகுதியை குறைக்க வேண்டி பக்கத்தில் பயிற்சி செய்து கொண்டு இருப்பார்கள். நான் முழு ஏரியாவையும் குறைக்க பகீர ப்ரயத்தனப்பட்டுக் கொண்டு இருப்பேன்.

இது மட்டுமே சற்று பலனளித்தது. ஏனெறால் காசு கட்டியதால் பல்லைக் கடித்துக் கொண்டு ஜிம்முக்கு போய்க் கொண்டு இருந்தேன். 20 கிலோ வரை குறைந்தேன். அந்த சமயத்தில் காதல் துவங்கி தினமும் நள்ளிரவு போனில் பேசிப் பேசியே நேரத்தை கழித்ததால் அதிகாலை தூங்கி ஜிம்முக்கு போக முடியாமல் போய் அதுவும் பணாலானது.

பிறகு திருமணம் விருந்து என பிஸியானதால் எடை கூட ஆரம்பித்து இப்போது இந்த நிலையை வந்தடைந்திருக்கிறது.

இப்போது ஒரு பேஸ்புக் ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் இணைந்து டயட்டைப் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறேன், ஒரு முறை சோதித்தும் பார்த்து விட்டேன். மற்றவர்களின் டயட் முறைகளை பார்க்கும் போது நானும் டயட்டை துவங்கி குறைத்து விடுவேன் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்த முறை யாரும் என்னை வற்புறுத்தவில்லை. நானாக ஆர்வப்பட்டு ஆரம்பித்திருப்பதால் வந்த நம்பிக்கை இது.

ஆரூர் மூனா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...