தமிழக் சட்டசபை எப்படி செயல்படுகிறது. புதிய அவை எப்படி தோற்றுவிக்கப்படுகிறது. உறுப்பினர்களின் கடமைகள் என்ன? அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று சட்டசபையின் அத்ததனை சங்கதிகளையும் இங்கே அலசுவோம்.
இதுதான் சட்டசபை...!
சட்டசபை என்பது அந்த அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட அவை. மாநிலங்களுக்கான சட்டங்கள் உருவாக்கும் அதிகாரம் கொண்டது. இந்த அவைக்கு கட்டுப்பட்டதாக அமைச்சரவை இருக்கிறது. மாநிலத்தின் பட்ஜெட், அரசின் கொள்கைகள், துறைவாரியான திட்டங்கள் ஆகியவற்றை ஜனநாயக ரீதியாக விவாதித்து நடைமுறைபடுத்தும் பணிகளை சட்டசபை மேற்கொள்கிறது.
எத்தனை உறுப்பினர்கள்!
தமிழகத்தை பொறுத்தவரையில், சட்டசபை என்பது 234 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு. 234 தொகுதிகளில் தலித்துகளுக்கு 42 தொகுதிகளும் பழங்குடியினருக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலோ இந்திய சமூகத்தில் இருந்து யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், அச்சமூகத்தில் இருந்து ஒருவரை கவர்னர் நியமிப்பார்.
ஐந்து ஆண்டுகள்தான் ஆயுள்!
பொதுவாக சட்டசபையின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள்தான். தேர்தல் முடிந்ததும் நடக்கும் சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் இருந்து அதன் ஆயுள் தொடங்கும். என்றாலும் சில சமயங்களில் பல காரணங்களால் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே சட்டசபையை கலைக்க முடியும்.
யார் முதல்வர் ?
பொதுத்தேர்தல் முடிந்ததும் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். பெரும்பான்மை கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் முதல்வர் ஆவார். முதல்வரின் அறிவுரைப்படி மற்ற அமைச்சர்களுக்கு, கவர்னர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையெனில், மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவை யார் பெற முடியும் என்று கவர்னர் நினைக்கிறாரோ அவரை ஆட்சி அமைக்க அழைப்பார். அவர் சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். அப்படி அழைக்கப்படுபவர் சட்டசபை உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படி முதல்வர் ஆகிறவர், ஆறு மாதத்துக்குள் சட்டசபையில் உறுப்பினராக வேண்டும்.
தற்காலிக சபாநாயகர்!
சட்டசபை உறுப்பினர்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தவிர சட்டசபையில் நீண்ட காலம் உறுப்பினராக பதவி வகித்த மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக சட்டசபை தொடங்கும் முன்பு கவர்னரால் நியமிக்கப்படுவார். தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டவர் சட்டசபைக்கு முதல் நாள் கவர்னர் முன்னிலையில் சட்டசபை உறுப்பினருக்கான பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார். பின்னர் சட்டசபையில் மற்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிபிரமாணம் செய்து வைப்பார்.
பதவி ஏற்பு!
சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். 'உறுப்பினர் பிரமாணம்' அல்லது 'உறுதிமொழி' கூறி பிரமாண பத்திரத்தில் கையொப்பம் இடவேண்டும்.
பிரமாண வரிசை முறை!
சட்டசபையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்பவர்கள் முதல்வர், அமைச்சர்கள், கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் சபாநாயகர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசுக் கொறடா, என்கிற வரிசைப்படி பதவி ஏற்பார்கள். மற்ற உறுப்பினர்கள் அகர வரிசைப்படி அழைக்கப்படுவார்கள்.
பதவி ஏற்கும் முறை!
பதவி ஏற்கும் உறுப்பினர்கள் இருவர் இருவராக சட்டசபை செயலாளர் அழைப்பார். தாங்கள் வெற்றி பெற்றதற்கு ஆதாரமாக தேர்தல் கமிஷனால் தரப்பட்ட சான்றிதழை சட்டசபை செயலாளரிடம் உறுப்பினர்கள் வழங்குவார்கள். பதவிபிரமாண வாசகம் அடங்கிய தாளை உறுப்பினர்களுக்கு செயலாளர் வழங்குவார். பிரமாண வாசகத்தை தமிழிலோ ஆங்கிலத்திலோ உறுப்பினர்கள் உரக்க படித்து கையொப்பம் இட்டு செயலாளரிடம் தரவேண்டும். படிக்க இயலாதவர்கள் செயலாளர் படிக்க அதை திருப்பிச் சொல்ல வேண்டும். 'கடவுள் மீது சூளுரைத்து' உறுப்பினர்கள் உறுதி கூறலாம் அல்லது 'உளமாற' என்று கூறியும் உறுதி ஏற்கலாம். பதவி ஏற்காமல் யாரும் அவையில் உட்காரக் கூடாது என்பது விதி. பதவி ஏற்காமல் அவையில் உட்கார்ந்து இருந்தால் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்படும்.
சபாநாயகர் தேர்தல்!
கவர்னர் குறிப்பிடும் நாளில் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலை தற்காலிக சபாநாயகர் நடத்துவார். சபாநாயகர் வகுக்கும் வரிசைப்படி உறுப்பினர்கள் இருக்கையில் அமர வேண்டும்.
சட்டசபை கூட்ட அழைப்பு!
சட்டசபை கூடும் நாள், நேரம் ஆகியவை குறித்த தகவல், உறுப்பினர்களுக்கு அவர்களது முகவரிக்கே அனுப்பப்படும். சபை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 வரையில் நடைபெறும். தேவைபட்டால் இந்த நேரத்தை நீட்டிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது. சில சமயங்களில் மாலையில் கூட சபை நடக்க வாய்ப்பு உண்டு. சட்டசபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும். சபையின் அனுமதியை பெறாமல் தொடர்ந்து 60 நாட்களுக்கு அவைக்கு வராத உறுப்பினரின் பதவிக்காலம் காலியாகி விட்டதாக முடிவு செய்யப்படும்.
கோரம்!
சட்டசபை நடைபெற சபாநாயகர் அல்லது அவைக்கு தலைமை வகிப்பவர் உட்பட 24 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை குறைந்தால் கோரம் மணி ஒலிக்கப்படும். மணி ஓசை கேட்டு வெளியே இருக்கும் உறுப்பினர்கள் அவைக்குள் வருவார்கள். மணி ஒலித்து 15 நிமிடங்கள் ஆகியும் குறைந்தபட்ச எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாவிட்டால் அவை ஒத்திவைக்கப்படும்.
கட்சி அங்கீகாரம்!
ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்படும். அந்த கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார். 24 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகள் சட்டசபை கட்சிகளாக அங்கீகரிக்கப்படும். 8 பேருக்கு குறையாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளும், பொதுத்தேர்தலில் 4 சதவீதத்துக்கும் குறையாத வாக்குகளை பெற்ற கட்சிகளும் சட்டமன்ற அணி என அங்கீகரிக்கப்படும். இவ்விரண்டிலும் இடம் பெறாதவர்கள் சுயேட்சைகள் என ஏற்கப்படுவார்கள்.
சட்டசபைக் கூட்டம்
அமைச்சரவையின் அறிவுரைப்படி சட்டசபை கூடும் நாளை கவர்னர் அறிவிப்பார். சட்டசபை கடைசியாக கூடிய நாளுக்கும் அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளுக்கும் இடையில் ஆறு மாதங்கள் இடைவெளி இருக்கக் கூடாது. பொதுத்தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டத்திலும் ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் கவர்னர், சட்டசபையில் உரை நிகழ்த்துவார். அரசின் சாதனைகள், திட்டங்கள், கொள்கைகள் கவர்னர் உரையில் இடம் பெறும்.
சபாநாயகருக்கு மரியாதை!
சட்டசபை கூட்டம் நடக்கும் போது சபாநாயகரோ அல்லது அவைக்கு தலைமை வகிப்பவரோ அவைக்குள் நுழையும் போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் உரையாற்றும் போதும் உறுப்பினர்கள் எழுந்து நிற்கவோ அல்லது வெளியேறவோ கூடாது. அவையை விட்டு வெளியேறும் போதும் அல்லது அவைக்குள் இருக்கையில் அமரும் போதும் சபாநாயகருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
செய்ய கூடாதவை!
சபாநாயகரின் இருக்கைக்கும், பேசும் உறுப்பினரின் இருக்கைக்கும் இடையே பிற உறுப்பினர்கள் குறுக்கே செல்லக்கூடாது. அவையில் அமைதி காக்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் அவை நடவடிக்கைக்கு இடையூறு இல்லாமல் மற்ற உறுப்பினர்களுடன் பேசலாம்.
கன்னிப் பேச்சு!
சட்டசபையில் முதன்முறையாக உரையாற்றும் உறுப்பினர்களின் பேச்சை கன்னிப்பேச்சு என்பார்கள். கன்னிப்பேச்சை பேசுபவர்கள் எழுதிக்கொண்டு வந்து படிக்கலாம். சபாநாயகரின் முன் அனுமதி இல்லாமல் எழுதிக்கொண்டு வந்த உரையை மற்றவர்கள் படிக்கக்கூடாது. தேவைப்படும் குறிப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு உரையாற்றலாம். தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகக் கூறும் ஆதாரங்களை சபாநாயகரிடம் முன்கூட்டியே காட்ட வேண்டும். ஆதாரங்களின் நகல்களை தரவேண்டும்.
தனித் தீர்மானம்!
சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவர விரும்புபவர்கள் 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு தரவேண்டும். அத்தீர்மானங்களுக்கான அனுமதியையும் வரிசைக்கிரமத்தையும் சபாநாயகர் நிர்ணயிப்பார்.
தினம் ஒரு திருக்குறள்!
ஒவ்வொரு நாளும் சட்டசபை தொடங்கும் முன்பு சபாநாயகர் ஒரு திருக்குறள் படித்து அதற்கு பொருளையும் சொல்வார். சி.பா. ஆதித்தனார் சபாநாயகராக இருந்த போதுதான் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது.
உறுப்பினர்கள் எண்ணிக்கை!
இந்திய அரசியலமைப்பின் படி சட்டமன்றத்தின் அதிகப்பட்ச உறுப்பினர்களாக 500 பேர்களுக்கு மிகாமலும், குறைந்த பட்ச உறுப்பினர்காளாக 60 பேர்களுக்கு குறையாமல் அமைய வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பெற்ற சிறப்பு விதியின் கீழ் கோவா, சிக்கிம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் 60 உறுப்பினர்களுக்கு குறைந்தும் செயல்படுகின்றன.
நியமன உறுப்பினர்!
ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆங்கிலோ இந்திய சமுதாயத்திலிருந்து ஒரு நியமன உறுப்பினர் நியமிக்கப்படுவார். இந்த நியமன உறுப்பினர் விவாதங்களிலோ ஓட்டெடுப்பிலோ பங்குபெறுவதில்லை.
காலவரை!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற பணியாற்ற கடமைப்பட்டவர்கள். ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் உறுப்பினர்களின் இருக்கைகள் காலியாகப்பட்டு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறும். உறுப்பினர்களில் அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சியே மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்.
சட்டசபை கலைப்பு!
அவசரகாலப் பிரகடன காலங்களில் சட்டசபை உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் பதவி வகிக்க அனுமதிக்கப்படுவர் அல்லது சட்டசபை கலைக்கப்படலாம். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசுக்கெதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரும் சமயத்தில் அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் சட்டசபை கலைக்கப்படும்.
தமிழ்த்தாய் வாழ்த்து!
1991& ல்தான் முதன் முறையாக கவர்னர் உரை துவங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதுபோல் அவர் உரையாற்றி முடித்து தமிழாக்கம் சபாநாயகரால் படிக்கப்பட்ட பின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் சிறந்த கட்டுரை.
ReplyDelete