சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, April 15, 2013

திருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம்

 கர்நாடக சங்கீதத்திற்கு மூத்தவர்கள் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்ஷிதர் ஆகியோர் திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர்களே.


பிற்காலத்தில் அவர்கள் திருவையாற்றில் தங்கியிருந்து பாடல்களை இயற்றினர். அங்கேயே ஜீவசமாதியும் அடைந்தனர். இவர்களின் நினைவாக திருவையாற்றில் இப்பொழுது கூட மும்மூர்த்திகள் திருவிழா நடப்பதுண்டு.

திருவையாறு அளவுக்கு திருவாரூரில் அவ்வளவு சிறப்பாக மும்மூர்த்திகள் விழா நடந்தது கிடையாது. இதற்கு காரணம் திரு. கருப்பையா மூப்பனார் அவர்கள் தான். அவரது கர்நாடக சங்கீத ஆர்வத்தினாலும் அவரது செல்வாக்கினாலும் திருவையாற்றில் மிகச்சிறப்பாக நடத்திக் காட்டினார்.


ஆனால் திருவாரூரில் அந்த அளவுக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வமுள்ள பெரியவர்கள் யாருமில்லாததால் அந்த அளவுக்கு சிறப்பாக நடப்பதில்லை. திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர்கள் எல்லோரும் திராவிட கழகத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்ததனால் தான் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் திருவாரூரில் சிறிய அளவுக்கு மும்மூர்த்திகள் விழா நடப்பதுண்டு. இரண்டாம் மற்றும் அறிமுக நிலை கர்நாடக சங்கீத கலைஞர்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக அது அமையும். பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் திருவையாறு விழாவைப் பற்றி மட்டுமே செய்திகள் வரும் போது திருவாரூரின் நிலையை நினைத்து வருத்தமாக இருக்கும்.


எனக்கோ எனது நண்பர்களுக்கோ கர்நாடக சங்கீதத்தின் ராகம், தாளம் பற்றியெல்லாம் ஆனா, ஆவன்னா கூட தெரியாது. ஆனால் எனது ஊரின் பெருமை என்ற அளவிலேயே விருப்பம் கொண்டிருந்தோம். திருவாரூர் பெரிய கோவிலிலும், மேல வடம்போக்கித் தெருவில் இருக்கும் அரங்கிலும் நடைபெறும் கச்சேரிகளுக்கு செல்வதுண்டு.

ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் புரியவில்லையென்றாலும் அங்கே பாடகர் சரிகம, மமகரிச, காஆஆஆஆல ஆஆஆஆஆ மமமமமா என்று ரொம்ப சிரத்தையாக பாடிக் கொண்டு இருப்பார். எனக்கு ஒன்றுமே புரியாது. என் அருகிலோ எதாவது ஒரு பிராமணர் சம்மணமிட்டுக் கொண்டு தொடையில் தாளம் போட்டவாறு ரசித்துக் கொண்டு இருப்பார்.


கொஞ்ச நேரத்திற்கு மேல் அங்கு அமர முடியாது. ஏதாவது புரிந்தால் தானே. ரசிக்க வந்தவர்கள் கூட பெரும்பான்மையோர் பிராமணர்களாகவும், கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்களாகவும் தான் இருப்பர. சொற்ப அளவிலே இருக்கும் அந்த கூட்டத்தை விட்டு வெளியேறினால் நானே எங்கள் ஊரை புறக்கணிப்பது போல் இருக்கும் என நினைத்துக் கொண்டு கச்சேரி முடியும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருப்பேன்.

திருவாரூரில் என் வீட்டிலிருந்து மூவர் வாழ்ந்த வீடும் அருகிலேயே தான் இருக்கிறது. எங்கள் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புதுத்தெருவில் தியாகராஜ சுவாமிகள் பிறந்து வாழ்ந்த வீடு இருக்கிறது. 200 மீட்டர் தொலைவுக்குள் மேட்டுத் தெருவில் சியாமா சாஸ்திரிகள் பிறந்து வாழ்ந்த வீடு இருக்கிறது. 200 மீட்டருக்குள் முத்துசாமி தீட்ஷிதர் பிறந்து வாழ்ந்த வீடு இருக்கிறது.


இவற்றில் தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த வீட்டை அரசு பராமரிக்கிறது அந்த இடத்தில் வீணை மற்றும் வாய்ப்பாட்டும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன, சியாமா சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டை காஞ்சி சங்கராச்சாரிகள் மடம் பராமரிக்கிறது. இன்றும் ஜெயந்திரர் என்னும் டுபாக்கூர் சாமியார் திருவாரூர் வந்தால் அங்கு தங்கி தான் செல்வார்.

முத்துசாமி தீட்ஷிதர் வீடு இருந்த இடத்தில் தற்போது கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. தியாகராஜ சுவாமிகள் வீட்டிற்கு மட்டும் அங்கு வாய்ப்பாட்டு கற்கும் அய்யராத்து பெண்களை சைட் அடிப்பதற்காக சென்றதுண்டு.


திருவையாறில் மிகப் பிரம்மாண்டமாக அனைத்து முன்னணி கர்நாடக கலைஞர்களும் பங்கேற்று பெருமை செய்வார்கள். அதனை பார்க்கும் போது எனக்குத்தான் பொறாமையாக இருக்கும். மும்மூர்த்திகள் மறைந்த ஊருக்கு வந்து இவ்வளவு பெருமை சேர்க்கும் இவர்கள் மும்மூர்த்திகள் பிறந்த ஊருக்கு ஏன் வருவதில்லை என்று.

சென்னையில் நடக்கும் டிசம்பர் விழாக்களுக்கு என் நண்பரின் சகவாசத்தால் செல்வதுண்டு. கர்நாடக சங்கீதத்தில் ஆர்வமுள்ள அவன் முடித்த வரை பெரும்பாலான கச்சேரிகளில் கலந்து கொள்வான். கம்பெனிக்கு என்னையும் கூட்டிச் செல்வான். நானோ கேண்டீனில் கிடைக்கும் பிரமாதமான சுவையுள்ள டிபனுக்காக மட்டுமே செல்வதுண்டு.

எனக்கு பத்து வயது இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு அய்யராத்து வீட்டுக்கு பரதம் கற்றுக் கொள்ள என் அம்மாவினால் கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டேன். அதே தெருவில் சட்டை கூட போடாமல் கிட்டிப்புல்லும், கபடியும் ஆடிக் கொண்டு இருக்கும் நான் சுத்தபத்தமாக குளித்து விட்டு பைஜாமா அணிந்து செல்வது பயங்கர கடுப்பாக இருக்கும்.

மற்ற நண்பர்கள் பயங்கரமாக கிண்டல் செய்வார்கள். நான் மட்டுமே பையன் மற்றவர்கள் எல்லோரும் சிறுமிகள். அதுவும் அய்யராத்து சிறுமிகள். போனவுடன் நடனம் கற்றுக் கொடுக்காமல் அபிநயங்கள் மட்டுமே கற்றுக் கொடுத்தார்கள். பதாக்கம், திருப்பதாக்கம், அர்த்தப்பதாக்கம், கர்த்தரிமுகம் என ஒரு மாதத்திற்கு பாடாய் படுத்தினார்கள்.

ஒரு வருடம் முழுவதும் கற்றுக் கொண்டேன். மாலை வேளைகளில் 6லிருந்து 7 வரை பரதம் கற்றுக் கொள்ளும் நான் 7 மணியிலிருந்து தெருவில் புழுதியில் பொரண்டு விளையாடிக் கொண்டு இருப்பேன். தெரு விளையாட்டு, பரதம் இரண்டில் எதில் கவனம் செலுத்துவது என புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன்.

ஒரு டைபாய்டு ஜூரத்தால் பரதத்திற்கு ஒரு மாதம் விடுப்பு எடுத்த நான் அத்துடன் செல்வதை நிறுத்திக் கொண்டு விட்டேன். என் அம்மா தான் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார். எனக்குத்தான் தெரியும் நான் விட்டதனால் பிழைத்துக் கொண்டது பரதம் தான் என்று.

ஆரூர் மூனா செந்தில்




Sunday, April 14, 2013

சென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே.


எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் டிராபிக் ரூட்டை தெரிந்து கொள்வது எனக்கு ஒரு ஹாபி போல. திருவாரூரில் இருந்த வரை திருவாரூர், மன்னார்குடி, மாயவரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், பட்டுக்கோட்டை ஊர்களின் வழிப்பாதையை சந்துபொந்து வரை தெளிவாக தெரிந்து வைத்திருந்தேன்.


கும்பகோணம் மட்டும் விதிவிலக்காக அதிகம் போகாத ஊராக இருந்தது. சென்னைக்கு வந்த பிறகு சிலகாலம் வழிதெரிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தது. சில மாதங்களில் அதையும் தெரிந்து கொண்டேன். இதற்கு கூட ஒரு ஐடியா வைத்திருந்தேன். சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வந்தால் சென்னையில் வழிப்பாதையை தெரிந்து கொள்ளலாம் என்பதே அது.

அதையும் அப்ரெண்டிஸ் சேர்ந்த பிறகு மாலை வேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்து மாதக்கணக்கில் சுற்றித் தான் தெரிந்து கொண்டேன். நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் பலஊர்களுக்கு மாற்றலானதால் அந்தந்த ஊர்களில் திரிந்து வழிப்பாதையை தெரிந்து கொள்வது என்னுடைய பெரிய பொழுதுபோக்கு.


பெங்களூர், மதுரை, விருதுநகர், ஐதராபாத், வாரணாசி, டெல்லியில் ஒரு பகுதி, நாகர்கோயில், கொச்சி, நெல்லூர் என பல ஊர்களில் வேலை பார்த்ததால் அந்தந்த ஊர்களில் எங்கிருந்து எங்கு செல்வது என்றாலும் எனக்கு அத்துப்படி.

ஆனால் பலஊர்களில் இதற்காக நான் பட்ட சிரமங்கள் எனக்குத்தான் தெரியும். திருவனந்தபுரத்தில் நான் வேலை பார்க்க செல்லும் போது தங்கியிருந்த இடம் கழக்கூட்டம். அங்கிருந்து சாஸ்தாமங்கலம் என்ற ஏரியாவுக்கு செல்வதற்காக கம்பெனியின் பழைய ஸ்கூட்டரில் சக ஊழியருடன் புறப்பட்டேன்.

அது எனக்கான சுக்ரதிசை நாள் என்று தெரியாமல் போய் விட்டது. அந்த ஸ்கூட்டருக்கு ஒரு தன்மை உண்டு. வண்டி புறப்பட்டதும் மூன்று கிலோ மீட்டர் ஒழுங்காக செல்லும் பிறகு கார்ப்பரேட்டர் அடைத்துக் கொள்ளும். மெக்கானிக்கிடம் காட்டி அடைப்பை எடுத்து விட்டால் தான் மறுபடியும் ஸ்டார்ட் ஆகும்.


மறுபடியும் மூன்று கிலோமீட்டர் செல்லும். மறுபடியும் கார்ப்பரேட்டர் அடைப்பு, மெக்கானிக் சரிசெய்ய வேண்டும். இந்த கதை எனக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன். அந்த சமயம் எனக்கு மலையாளத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாது.

திருவனந்தபுரத்திற்கும் புதுசு. தட்டுத் தடுமாறி ஒவ்வொரிடமும் வழிகேட்டு செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. கழக்கூட்டத்திற்கும் சாஸ்தாமங்கலத்திற்கும் 17 கிலோமீட்டர். மதியம் சாப்பிட்டு விட்டு புறப்பட்ட நாங்கள் வண்டியை சரிசெய்து சாஸ்தாமங்கலத்திற்கு செல்வதற்கு மாலை ஆறுமணியாகி விட்டது.

வண்டியை அன்று தள்ளி தள்ளி ஏகக்கடுப்பாகி விட்டது. இரவு நெடுநேரம் கழித்து திரும்ப வேண்டியதாகியதாலும் கேரளாவில் ஒன்பது மணிக்கெல்லாம் ஒயின்ஷாப்பை அடைத்து விடுவார்கள் என்பதாலும் ஆபீசில் இருந்த நண்பர்களிடம் ரெண்டு புல் வாங்கி வைக்கச் சொல்லியிருந்து அன்று இரவு முழுவதும் குடித்து தீர்த்து தான் அசதியை போக்க முடிந்தது.


அன்றிலிருந்து நான் கேரளாவை விட்டு திரும்பும் வரை எல்லோரும் எனக்கு சாஸ்தாமங்கலம் என்று பெயரிட்டு கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அதுபோலவே அந்த ஸ்கூட்டரை நான் கேரளாவை விட்டு செல்லும் வரை தொடவே இல்லை.

1997ல் நான் சென்னைக்கு வந்த புதிதில் என் பெரியப்பா பையன் சதீஷ் "மை இந்தியா" என்ற படத்திற்கு பிரிவியூ இரண்டு டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தான். என்னுடன் என் நண்பன் இந்திரனை அழைத்துக் கொண்டு சென்றோம்.

வழி தெரியாது என்பதால் பெரியார் நகரிலிருந்து எப்படி செல்ல வேண்டும் என்று க்ளாஸ் எடுத்தான். பெரியார் நகர் பேருந்து நிலையத்தில் 42 பஸ் பிடித்து பாரிமுனை சென்று அங்கிருந்து சைதாப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி ஜெமினியில் இறங்கி எதிர்பக்கம் சென்றால் ராணிசீதை ஹாலின் பக்கத்து ரோட்டில சென்றால் இந்த பிரிவியூ தியேட்டரை அடையலாம் என்று.

நாங்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக பாரிமுனையில் இறங்கி மற்றவர்களிடம் விசாரித்து சைதாப்பேட்டைக்கு செல்லும் பேருந்தில் ஏறி ஜெமினியில் இறங்கி அந்த இடத்தை விசாரித்து சென்று அடைந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் போல் இருவரும் உணர்ந்தோம்.

இத்தனைக்கும் என்னுடன் வந்த நண்பன் இந்திரன் அக்மார்க் சென்னைக்காரன்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, April 12, 2013

இன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும்

பேருந்து பயணம் என் வாழ்வின் அங்கமாகிப் போனது எப்படியென்றே தெரியவில்லை. என்னுடன் பழகிய நிறைய நண்பர்களை பார்த்து அதிசயித்து இருக்கிறேன். அவர்கள் செங்கல்பட்டினையே இது வரை தாண்டியதில்லை. சென்னைக்கு தெற்கே தமிழ்நாடு எப்படியிருக்கிறது என்பதை அறியாதவர்கள்.

 (பச்சை சட்டையும் சிகப்பு டவுசரும் அணிந்திருப்பது தான் நான்)

நானோ தமிழ்நாட்டில் செல்லாத மாவட்டமே கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மாதம் வசிக்காத மாவட்டம் தமிழ்நாட்டில் கிடையாது. அந்தளவுக்கு ஊர்சுற்றியே வாழ்ந்து விட்டேன். அப்படி ஊர் ஊராக சுற்றிய பொழுது கிடைத்த பேருந்து பயணத்தின் அனுபவமே இந்த கட்டுரை.

எனக்கு விவரம் தெரிந்த வயதில் அதிகம் சென்ற பேருந்து பயணம் திருவாரூரிலிருந்து என் அம்மா வழி தாத்தா வீடு இருக்கும் ஆதனூர் என்ற கிராமத்திற்குத் தான். தஞ்சாவூர் செல்லும் சாலையில் நீடாமங்கலத்திற்கு அருகில் இருக்கும் அந்த ஊருக்கு வார இறுதியில் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது.

(மகாபலிபுரத்தில் இடுப்பில் துண்டுடன் நான்)

நீடாமங்கலத்தில் ரயில்வே கேட்டு போட்டு விட்டால் அரைமணிநேரத்திற்கு திறக்க மாட்டார்கள். அப்படி நிறுத்தும் போது மாலை நேரமாக இருந்தால் அப்படியே ஓடிச் சென்று பால் திரட்டு வாங்கி தின்று கொண்டே பயணத்தை தொடர்வோம்.

தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொன்னாலும் அதற்கு ஏற்ற நெல் பயிரிடும் நிலங்கள் இந்த சாலையில் தான் அதிகமாக இருக்கும். ஒரு பக்கம் ஆற்றின் கரையும் மறுபக்கம் நெல் விளையும் நிலமாகவும் இருக்கும் அந்த பகுதியில் செல்லும் போது நீர் பாய்ச்சுவது, நாத்து விடுவது, மேட்டில் கதிரடிக்கும் கூட்டம் என இனிய அனுபமாகவே இருக்கும்.

தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினால் ஆதனூரில் நிறுத்த மாட்டார்கள். வேறுவழியில்லாமல் நீடாமங்கலத்தில் இறங்கி அங்கிருந்து 3 கிலோமீட்டர் நடந்தே செல்வோம். எனக்கு இது தான் ஊர், இவர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று நம்பவைக்கப்பட்ட அந்த இடம் இன்று காலத்தின் கோலத்தால் செல்ல முடியாமலே போனது தான் சோகம்.

 (வளர்ந்து கடாவான பிறகு ஒரு குற்றால பயணத்தில்)

அடுத்த பயணம் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு மன்னார்குடி வழியாக செல்வது. திருவாரூரிலிருந்து மன்னார்குடி வரை கடுப்பாக செல்லும் பயணம் மன்னார்குடியில் பேருந்து மாறியதும் குதூகூலமாக மாறிவிடும். காரணம் இளையராஜாவின் பாடல்கள் தான்.

அந்த ரூட்டில் தனியார் பேருந்துகள் தான் அதிகமாதலால் எப்பொழுதும் போட்டி போட்டு தான் பேருந்துகள் செல்லும். அப்படி போகும் போது சன்னலோர இருக்கையில் அமர்ந்து இளையராஜாவின் பாடல்களை ரசித்துக் கொண்டு வேகமாக போகும் போது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்.

இன்று இந்த ரூட்களில் சொந்தகாரர்களின் வீட்டுக்கு காரில் செல்வதே வழக்கமாக இருப்பதால் அந்த பேருந்து பயணத்தின் சுகத்தினை அனுபவிக்க முடியவில்லை.

(அம்மா, தம்பியுடன்)

திருவாரூரில் வடக்கு வீதியில் குடியிருந்த போது தெருவில் உள்ள அனைத்து மக்களும் பரிட்சயமானவர்களாகவே இருந்தார்கள். இன்று பாதி குடும்பங்களுக்கு மேல் அங்கு கிடையாது. வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டார்கள்.

1980 இறுதி காலக்கட்டங்களில் தெருவில் இருக்கும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து திருப்பதி ஆன்மீக சுற்றுலா, கேரளா இன்பச் சுற்றுலா, கர்நாடகா இன்பச் சுற்றுலா செல்வது வழக்கமாக இருந்து. இதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் இருந்தார் அவர் பெயர் டூர் தியாகு.

அவர் தான் பேருந்து ஏற்பாடு செய்து ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பணம் ஆகும் என்றெல்லாம் கணக்குப் போட்டு வசூல் செய்து பயணத்தை திட்டமிடுவார். வடக்குவீதி சித்தி வினாயகர் கோயிலில் கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து பேருந்து புறப்படும். இரவு தூங்கி விழித்ததும் சாத்தனூர் அணையில் இருப்போம். எனக்கு அந்த சமயங்களில் பத்து பதினோரு வயது என்பதால் புது இடங்களை காண்பதில் உற்சாகமாகவே இருக்கும்.

சாத்தனூர் அணையில் குளித்து முதலைப் பண்ணையை சுற்றிப் பார்த்து விட்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு புறப்பட்டால் பேருந்து வேலூர் வழியாக திருப்பதிக்குள் நுழையும். வழியெங்கும் வீட்டிலிருந்து கட்டி எடுத்து வரப்பட்ட புளிசோறும், சப்பாத்தியும் தான் உணவு.

கீழேயே பேருந்தை நிறுத்தி விட்டு ஆந்திர மாநிலத்து பேருந்தில் திருமலைக்கு பயணத்தை தொடரும் போது வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும். பேருந்து மலையில் ஏறத் தொடங்கியதும் பாதிப் பேர் வாந்தி எடுப்பார்கள். எங்கப்பா எனக்கும் என் தம்பிக்கும் ஒரு எலுமிச்சை பழம் கொடுத்து முகர்ந்து கொண்டே வரும்படி சொல்லுவார்.

எனக்கு வாந்தி வராது. ஆனாலும் அப்பாவுக்காக முகர்வது போல் நடித்துக் கொண்டே வருவேன். அம்மாவெல்லாம் கண்ணைச் சுற்றி துண்டை கட்டிக் கொண்டு மயக்கத்திலேயே வருவார். பக்கத்து வீட்டு மாமா குடும்பங்கள், அப்பாவின் நண்பர்கள் குடும்பங்கள் என் எல்லாமே மயக்கத்தில் தான் வரும்.

அப்பா மட்டும் தான் தெம்பாக வருவார். எனக்கு பார்க்கும் போது பெருமையாக இருக்கும். மற்றவர்களிடம் அப்பாவைப் பற்றி பீற்றிக் கொள்வேன். மலையில் காத்திருந்து சாமி பார்த்து விட்டு உண்டியலில் அப்பா தூக்கிக் காட்ட நான் காசு போடுவேன்.

வரிசையில் நின்று லட்டு வாங்கி மீண்டும் பேருந்தில் இறங்கும்போதும் இதே வாந்தி படலம் தான். பேருந்தும் மங்கலான வெளிச்சத்தில் இருப்பதால் ஆந்திரா பேருந்தே பிடிக்காது. தமிழ்நாடு பேருந்து தான் இந்தியாவிலேயே சிறந்த பேருந்து என்று எண்ணத் தோன்றும்.

அப்படியே மீண்டும் பேருந்தில் ஏறினால் சென்னைக்கு சுற்றுலா வருவோம். மெரினா பீச், வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்றிப் பார்த்து விட்டு மாமல்லபுரம் பார்த்து விட்டு இரவோடு இரவாக திருவாரூர் திரும்புவோம். ஏழெட்டு வருடங்களுக்கு இது வழக்கமான பயணமாக இருந்தது.

அப்பொழுது எல்லாம் சாதாரணமாகவும் கடுப்பாகவும் தெரிந்த சுற்றுலா பயணங்கள் இன்று பசுமையான நினைவுகளாக இருக்கிறது. 12 வயதில் 10 பெண்ணைப் பார்த்து சைட் அடித்தது, பேருந்தில் திரும்பும் போது அப்பாவுக்கு தெரியாமல் லட்டை சுரண்டி தின்றது, மயக்கமோ வாந்தியோ வராமல் மற்றவர் கவனம் என் மீது வரவேண்டும் என்பதற்காக மயக்கம் வருவது போல் நடித்தது எல்லாம் இன்று நினைத்து பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

கேரளா இன்பச்சுற்றுலா சென்று எல்லா ஊர்களும் சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும் வழியில் மழம்புழா அணைக்கடுத்து ராஜபாளையம் அருகில் கேரள எல்லையில் நாங்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி ஏகப்பட்ட பேர் காயமடைந்ததால் சுற்றுலா திட்டங்கள் அத்துடன் கைவிடப்பட்டன.

புளிசோறு பயணத்தில் சாப்பிட்டால் தான் அருமையான சுவையை தருகிறது. எப்படி அந்த சுவை என்பது தான் புரியாத புதிர்.

ஆரூர் மூனா செந்தில்
 

Wednesday, April 10, 2013

திருவாரூரும் ஹோம்சிக்கும்

பனிரெண்டாம் வகுப்பு வரை திருவாரூரில் படித்தேன். அங்கு ஓவராக ஆட்டம் போட்டதால் இனி திருவாரூரில் வைத்திருந்தால் பையன் வெளங்க மாட்டான் என்று என் குடும்பமே திட்டமிட்டு என்னை சென்னைக்கு நாடு கடத்தியது. அதுவரை குடும்பத்தில் என்னைக் கண்டால் யாருக்குமே பிடிக்காது.


திருவாரூரில் விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தம் தான் எங்களது ஏரியா. காலையில் 6 மணிக்கே எழுந்து நிறுத்தத்தில் அமர்ந்தால் 6.30 மணிக்கு வேலைக்கு செல்லும் யாமினி முதல் 09.30 மணிக்கு வேலுடையார் பள்ளிக்கு செல்லும் ரோஜா வரை வழியனுப்பி வைத்து விட்டு தான் வீட்டுக்கு வருவேன்.

அடுப்படியில் டிபன் இருக்கும். நானே போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டதும் ஒரு தூக்கம் போட்டு விட்டு மதியம் சாப்பாட்டையும் ஒரு கட்டி விட்டு கிரிக்கெட் விளையாட கிரவுண்டிற்கு சென்றால் இருட்டும் வரை விளையாடி விட்டு மறுபடியும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சரக்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தால் 12 மணி வரை கதைகளும் பஞ்சாயத்துகளும் ஒடும்.


அதன் பிறகு வீட்டிற்கு சென்று படுப்பேன். தினமும் அம்மாவிடமும் அப்பாவிடமும் வசவுகள் தான். அதுவும் என் அப்பாவுக்கு என்னைப் பார்த்தால் வில்லன் போலவே இருக்கும். என்னைப் பார்த்தால் ஒரு ஆக்சன் காட்சியை நிகழ்த்தி விட்டு அரைகிலோ அறிவுரையும் விலையில்லா பொருளாக தந்து விட்டு தான் கடந்து செல்வார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பெற்றோர் என் மாமாவிடம் ஒரு சதியாலோசனை செய்து சென்னையில் அப்ரெண்டிஸ் நுழைவுத் தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். எனக்கு கூட ஊர்பாசமெல்லாம் இல்லாமல் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் போதும் என்றே தேர்வு எழுதினேன்.


அதில் தேர்ச்சி பெற்று சென்னையில் சேர்ந்ததற்கு பிறகு தான் ஒரு விஷயம் தெரிய வந்தது. நான் மட்டும் தான் இங்கிருக்கிறேன், என் உயிர் திருவாரூரிலும் வீட்டிலும் தான் இருக்கிறது என்பதை. எந்தநேரமும் வீட்டு நினைவு ஊர் நினைவு தான். ஒவ்வொரு சனியன்று மதியம் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு சென்று திருவாரூர் செல்லும் பேருந்திற்குள் ஏறியதும் தான் முகமே மலர்ச்சியாகும்.

எப்படியும் ஒரு தெரிந்த முகமாகவது பேருந்தில் தென்பட்டு விடும். பிறகு அவர்களுக்கு கதைத்துக் கொண்டே சென்றால் நேரம் போவதே தெரியாது. பேருந்து சன்னாநல்லூர் தாண்டியதும் எனக்கு ஒரு ஊர் வாசனை அடிக்கும். அப்போதே ஊரில் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு விடும்.

கல்லுபாலத்தில் இறங்கியதும் நண்பர்கள் குழாம் கண்ணுக்கு தென்பட்டு விடும். பிறகென்ன அப்படியே பேருந்து நிறுத்தம் சென்று கூத்தடித்து விட்டு வீட்டுக்கு செல்ல 12 மணியாகி விடும். ஞாயிறு விழித்ததும் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன். வீட்டின் மீது எனக்கிருந்த பிரியம் அதனை பிரிந்தது தான் தெரிய வந்தது.

எனக்கென அறை, எனக்கென டிவி, எனக்கென பிரத்யேக சமையல் ஞாயிறு மாலை வந்ததும் உற்சாகம் வடிந்து சோகம் அப்பிக் கொள்ளும். 7.30 மணிக்கு செல்லும் திருவள்ளுவர் பேருந்தில் அப்பா டிக்கெட் வாங்கித் தருவார். பிரிய மனமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவேன்.

இரவு முழுவதும் கண்விழித்துக் கொண்டே சோகத்துடன் பயணமாவேன். சென்னையிலிருந்து திருவாரூருக்கு நொடிப் பொழுதில் செல்லும் பயணம் திருவாரூரிலிருந்து சென்னைக்கு பயணமாகும் போது மணிக்கணக்கில் நீளும்.

சென்னைக்கு வந்ததும் ஹாஸ்டலில் மனமே ஒட்டாது. மீண்டும் சனி எப்போது வரும் என்றே மனது கணக்கு போடும். சனியன்று உற்சாக பயணம். ஞாயிறு இரவன்று சோக பயணம் என்றே ஆறு மாதம் சென்றது.

சென்னையில் என்னுடன் படித்துக் கொண்டு இருந்த நண்பர்களுடன் நட்பு இறுகியது. வாரம் ஒரு முறை சென்று கொண்டிருந்த நான் மாதம் ஒரு முறை பயணிக்கலானேன்.  சென்னைக்கு திரும்ப வரும் பயணம் கூட வருத்தங்களை ஏற்படுத்தவில்லை.

மூன்றாம் ஆண்டில் திருவாரூருக்கு செல்வதே சுத்தமாக குறைந்து போயிருந்தது. சென்னை அதை விட அதிக உற்சாத்தை தந்ததே காரணம். முதல் வருடம் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் இருந்த காலம் போய் வெந்தது வேகாதது எல்லாத்தையும் திங்க உடல் மாறியிருந்தது.

என்னை ஒரு காலத்தில் வில்லனாக பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நான் திருவாரூருக்கு வருவதே இல்லை என வருத்தப்பட்டு கடிதம் எழுதிய சம்பவம் கூட நடந்தது. படித்து முடித்து விட்டு ஹாஸ்டலை காலி செய்து திருவாரூக்கு செல்ல மனமில்லாமல் நண்பர்களை கட்டிப் பிடித்துக் கொண்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் கதறியழுதேன்.

ஊரில் சென்று அம்மாவிடம் நான் அழுததை சொன்னதும் சிரித்துக் கொண்டே சொன்னார். "நீ படிக்கப் போகும் போது திருவாரூரிலிருந்து போக மாட்டேன் என்று அழுதாய். இன்று சென்னையை விட்டு வர மனமில்லாமல் அழுகிறாய். ஒரு நாள் எல்லாமே பழகிப் போகும் " என்று.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, April 9, 2013

சுகமான குளியல் நினைவுகள்

அம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இக்கிராமத்தில் தான் செலவழிப்போம். அம்மாவின் பிறந்த வீடு மிகப்பெரிய மண் வீடு. 1993ல் தான் அந்த வீட்டை இடித்து விட்டு பெரிய கல்வீடாக கட்டினார்கள்.

(என் அப்பாவுடன் நானும் தம்பிகளும்)

வீட்டில் என் தாய்மாமாக்கள் 4 பேர் அவர்களது குடும்பத்தினர், பெரியம்மா வீட்டினர், எங்கள் வீட்டினர் மற்றும் சித்தி வீட்டினர் அனைவரும் கோடை விடுமுறைக்கு வந்து விடுவோம். வீட்டின் எதிரில் தேவர்குளம் என்றொரு குளம் இருந்தது. நான், என் தம்பி மற்றும் என் சித்தி பசங்க இருவர் தான் ஒரு குழுவாக இருப்போம். காலை நேரக் குளியல் அங்கு தான்.

என் தாத்தா குளத்தில் இறங்கும் போது நாங்களும் இறங்கி விடுவோம். தாத்தா குளித்து விட்டு வயலுக்கு சென்று விடுவார். செல்லும் போது சீக்கிரம் எல்லோரும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என சொல்லி விட்டு வயலுக்கு செல்வார். நாங்கள் 11 மணி வரை சாப்பிடாமல் குளத்தில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீச்சலடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டே இருப்போம்.

 
வயலில் வேலை செய்பவர்களுக்கு டீ எடுத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வரும் தாத்தாவிடம் வீட்டில் உள்ளோர் நாங்கள் இன்னும் வரவில்லை என்பதை சொல்லிவிட குளத்திற்கு வந்து ரெண்டு சாத்து சாத்தி வீட்டிற்கு அழைத்து செல்வார். சில காலங்களுக்கு பிறகு குளம் மாசடைந்து விட்டதால் பிறகு அந்தக் குளத்தில் குளிப்பதேயில்லை.

திருவாரூரில் மிகப்பிரச்சித்திப் பெற்ற கமலாலயக் குளம் உள்ளது. திருவாரூரில் உள்ள பெரியவர்களில் பெரும்பாலானோர் தினமும் காலையில் அந்தக்குளத்தில் தான் குளிப்பர். இன்றும் கூட மகாலய அமாவாசை அன்று என் அப்பா மற்றும் அவரது நண்பர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக கமலாலயத்தில் குளித்து சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


எங்கள் வீட்டில் செவிட்டுப் பாட்டி ஒருவர் இருந்தார். அவர் என் அப்பாவுக்கு சொந்த அத்தை. எப்பொழுது திருவாரூருக்கு வந்தாலும் கமலாலயத்தில் தான் குளிப்பார். குளித்து விட்டு ஈரத்துணியுடன் நெற்றியில் பட்டை இட்டுக் கொண்டு முராசன்ஸ் பிள்ளையாரிடம் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென மனமுருகி வேண்டிக் கொண்ட பிறகு தான் வீடு திரும்புவார். அவருடன் நானும் கமலாலயத்திற்கு செல்வேன்.

கமலாலயத்தில் குளிப்பது புண்ணியம் என்பதையெல்லாம் தாண்டி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் காலத்தில் வெட்டப்பட்ட குளத்தில் குளிப்பது என்பதே பெருமை தானே. கமலாலயம் எங்கள் ஊரின் பெருமைக்குரிய மற்றுமொரு அடையாளம்.

எங்கள் நிலத்தில் உள்ள பம்புசெட்டில் குளிப்பது என்பது மற்றுமொரு இனிய அனுபவம். கோடை விடுமுறைகளில் மதிய வேளைகளில் நாங்கள் குளிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் தெற்கு பம்புசெட் தான். பம்புசெட்டில் விசாலமான தொட்டியிருக்கும். என் அம்மா, பெரியம்மா, சித்தி மற்றும் மாமிகள் அனைவரும் குளிப்பதற்கு கிளம்பும் முன் எனக்கும் என் சகோதரர்களுக்கும் எண்ணெய் தேய்த்து அனுப்பி விடுவர்.



நாங்கள் முன்பே சென்று குளித்துக் கொண்டிருப்போம். ஒரு மணிநேரம் கழித்து வரும் அம்மா சீயக்காயுடன் கரிசலாங்கண்ணியையும் சேர்த்து தேய்த்து விடுவார். என்ன ஒரு பரிபூரணத்துவக் குளியல். வாரம் ஒருமுறை இந்தக்குளியல் உண்டு. குளித்து விட்டு வந்து சாப்பிட்டால் ஏழு மணிக்கெல்லாம் தூக்கம் கண்ணை சொக்கும். இன்று குடும்பங்கள் எல்லாம் பிரிந்து போய் விட்டன. இனியொரு முறை அது போன்ற ஒரு குளியல் கிடைக்குமா என்பது சந்தேகமே.

இவ்வளவு சொல்லி விட்டு தஞ்சாவூர்க்காரன் காவிரியாற்றுக் குளியல் பற்றி சொல்லாவிட்டால் நன்றாக இருக்குமா. திருவாரூரில் காவிரியின் கிளையாறான ஒடம்போக்கியாறு ஒடுகிறது. இதில் ஜூன் முதல் தை மாதம் வரை தான் தண்ணீர் செல்லும் மற்ற நேரங்களில் எல்லாம் இது தான் கிரிக்கெட் கிரவுண்ட். பத்தாவதுக்கு பிறகு வேலைக்கு சேரும்வரை ஒடம்போக்கி ஆற்றில் தான் குளிப்பேன்.

இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வது தான் என்னுடன் குளிக்கும் நண்பர்களிடையேயான போட்டி. அப்பொழுது ஸ்டாமினா இருந்ததால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வது எல்லாம் சாதாரண விஷயம். இப்பொழுது எல்லாம் ரெண்டு முங்கு முங்கினாலே மூச்சிரைக்கும். எல்லாம் நெப்போலியனின் சாபம்.

பட்டயப்படிப்புக்காக சென்னை வந்த பிறகு பாத்ரூம் குளியல் தான். அதுவும் 1999 காலத்தில் வில்லிவாக்கத்தில் மெட்ரோ வாட்டர் வீட்டு பம்புகளில் வருவது நின்று விட்டது. லாரிகளில் அடித்துப் பிடித்து தண்ணீர் வாங்கி வந்து குளிப்பது தான் அந்தக் காலங்களின் ஸ்டைல். அதிலும் நான் இருந்தது பாச்சிலர் ரூமில்.

நான் இருந்த தெருவுக்குள் மிகுந்த டீசண்ட்டாக அதுவரை நடந்து கொண்டிருந்த நான் தண்ணீர் பிடிக்கும் போட்டியில் எதிர் வீட்டு ஆண்ட்டி, அடுத்த வீட்டு அக்காவையெல்லாம் தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டைப் போட்டு அந்த அக்காவின் ஏச்சுப் பேச்சுகளையெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டு கிடைக்கும் ஒரு பக்கெட் தண்ணீரில் கழிவறைக்கு கால் பக்கெட், குளிக்க முக்கால் பக்கெட் என இருந்ததெல்லாம் காலத்தின் கோலம்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இரண்டு நாட்களாக கம்ப்யூட்டரில் உட்கார நேரமில்லாததால் பதிவெழுத முடியவில்லை. எனவே ஏற்கனவே எழுதி அவ்வளவு பிரபலமாகாத இந்த பதிவை மீண்டும் மீள்பதிவு செய்கிறேன்.

Friday, April 5, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்

ஏற்கனவே டெல்லிபெல்லி படத்தினை பார்த்து விட்டதாலும் இரண்டரை மணிநேரம் தியேட்டரில் அமர்ந்திருக்க உடல்நிலை ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் இருந்ததாலும் படத்திற்கு போவதை தவிர்த்து வீட்டிலேயே அமர்ந்து விட்டேன்.


ஒன்னேமுக்கால் மணிக்கு ஒரு அலாரம் மண்டையில் அடித்தது. 2லிருந்து 4 வரை கரண்ட் இருக்காது. வீட்டில் சும்மா உக்கார்ந்து இருப்பதை விட திரையரங்கிற்கு செல்லலாம் என்று நினைத்து ராசா வண்டியை தியேட்டருக்கு விட்டேன்.

1.45க்கு ஆரம்பித்த படம் 4 மணிக்கெல்லாம் முடிந்து விட்டது. டெல்லிபெல்லியில் பல ராவான காட்சிகளையும் வசனங்களையும் பார்த்து மிரண்டு போன எனக்கு இந்த படம் படுசைவமாகவே தெரிந்தது.


டெல்லிபெல்லியில் இரண்டு காட்சிகள் படுஆபாசமாக இருக்கும். வீட்டு ஓனர் ஒரு கில்மாவிடம் இருக்கும் போது குணால்ராய் கபூர் அவருக்கு தெரியாமல் போட்டோ எடுத்து விட்டு கில்மாவின் அந்த இடத்தை அமுக்கி ஜாக்கெட்டுக்குள் பணத்தை சொருகும் காட்சி.

இன்னொன்று அதுபோல் பூர்ணா ஜெகந்நாதன் கணவனிடம் இருந்து தப்பிக்க ஹோட்டலுக்கு வந்து ஒரு அறையினுள் இம்ரான்கானும் பூர்ணா ஜெகந்நாதனும் கில்மாவில் ஈடுபடுவது போல் நடிக்கும் ஒரு காட்சி.


தமிழில் இரண்டையும் தான் எப்படி எடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். குணால்ராய் கபூர் வேடத்தில் நடித்திருக்கும் சந்தானம் தனது குழுவினருடன் ஏதாவது யோசித்து காட்சியை மாற்றியிருப்பார் என்று பார்த்தால் அந்த காட்சியையே நீக்கி விட்டார்கள்.

அதே போல் ஹோட்டல் கில்மா காட்சியையும் ஆர்யாவும் அஞ்சலியும் போர்வைக்குள் இருப்பது போல் காட்சி ஆபாசமில்லாமல் எடுத்து விட்டார்கள். எனக்குத்தான் எதையோ எதிர்பார்த்த சப்பென்று ஆகிவிட்டது.


இனி டெல்லிபெல்லியை ஒதுக்கி வைத்து விட்டு சேட்டையை மட்டும் பார்ப்போம். மூன்று பத்திரிக்கைத் துறை நண்பர்கள், அவர்களிடம் ஆர்யாவின் காதலி மூலம் டையமண்ட் வந்து சேருகிறது. டையமண்ட் பற்றிய விவரம் அறியாமல் அவர்களிடம் இருக்கும் அதனை வில்லன் கைப்பற்ற முனைகிறார். மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பதே சேட்டையின் கதை.

ஆர்யாவுக்கு இது போன்ற படத்தில் நடித்ததற்காக கைவலிக்கும் வரை குலுக்கலாம். எந்தவித ஹீரோயிசமும் இல்லாத ஒரு ஹீரோ கேரக்டரில் நடித்ததற்காக. இன்ட்ரொடியூஸ் சீனில் பத்து பேரை பொளப்பதும், ஓரு ஹீரோயிச பாடலும் இல்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார்.

படத்தின் நிஜமான கதாநாயகன் சந்தேகமில்லாமல் சந்தானம் தான். ஏற்கனவே பல படங்களில் பல காட்சிகள் ரீப்பிட்டு ஆனதால் காமெடி படங்களுக்கு செல்வதே கடுப்பாகி இருந்த சமயத்தில் சற்றும் சளைக்காமல் கவுண்ட்டர் காமெடி செய்து அசத்தியிருக்கிறார். இந்த ஆய் மேட்டர் புதுசா தமிழில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் சற்று குமட்டலாக இருக்கலாம்.

இந்தியில் பார்த்ததால் அதனை எந்த அளவுக்கு கெடுக்காமல் எடுத்திருக்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். அதனை குறையின்றி செய்திருக்கிறார். ஆனால் படத்தின் டைட்டிலில் நகைச்சுவை சூப்பர் ஸ்டார் என்று போடுகிறார்கள். பாத்துக்கங்க தம்பி இந்த ஆணவத்துல அழிஞ்சவங்க தான் அதிகம்.

படத்தில் சந்தேகமில்லாமல் வேஸ்ட் கேரக்டர் பிரேம்ஜி தான். ஆனால் அந்த ஒரு பாடலுக்கு நடனமாடியதால் தப்பித்துக் கொள்கிறார். இதற்கு எதற்கு ஸ்டார் காஸ்ட் என்று தான் தெரியவில்லை. ஏதாவது புதுமுகத்தையே போட்டிருக்கலாம்.

ஹன்சிகா அழகாக இருக்கிறார் என்று சொல்வதே பார்மாலிட்டிக்கு சொல்வது என்று ஆகிவிடும். வேறென்ன விமர்சனம் என்றால் இது போல் சொல்வது தான் சம்பிரதாயம்.

அஞ்சலிக்கு அழகே பக்கத்து வீட்டு போன்ற ஒரு மேக்கப்பில்லாத எளிய தோற்றம் தான். ஓவர் மேக்கப் போட்டு கெடுத்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் கொடுத்த பாத்திரத்தை செவ்வனே செய்து இருக்கிறார். நமக்கு அங்காடி தெரு அஞ்சலி போதுமப்பா.

படத்தின் மிகப்பெரிய தடைக்கல் பாடல்கள் தான். டெல்லிபெல்லியில் பாடல்களே இருக்காது. படமும் ஒன்றை மணிநேரத்தில் முடிந்து விடும். தமிழில் பாடல்கள் சேர்த்து இரண்டு மணிநேரமாக்கி விட்டு இருக்கிறார்கள்.

படத்தை பிரித்து மேய்கிறேன் பேர்வழி என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு செல்லாமல் சி கிளாஸ் ரசிகனாக சென்றால் விசிலடித்து கைதட்டி ரசித்து விட்டு வர ஒரு அருமையான பொழுது போக்கு சித்திரம் சேட்டை.

ஆரூர் மூனா செந்தில்


Thursday, April 4, 2013

கேடியும் கில்லாடியும்

பத்து நாட்களுக்கு பிறகு பதிவு. கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்ததே எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு சிறு உடல்நலக்கோளாறு. சரியாகி வர இவ்வளவு நாளாகி விட்டது. விவரமறிந்து நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியோ நன்றி.


இந்த படத்தை கடந்த வெள்ளியன்றே பார்த்து விட்டேன். ஆனால் அன்றிலிருந்து உடல்நலக்குறைவின் தீவிரம் அதிகமானதால் பதிவெழுத முடியவில்லை. பரவாயில்லை, இன்று எழுதித் தள்ளிவிடுவோம் என்று அமர்ந்து விட்டேன்.

படத்தை பற்றி சொல்வதற்கு முன்பு படத்தில் வந்த ஒரு காட்சியை யாரும் இதனுடன் ஒப்பிட்டு பார்த்திருக்க மாட்டார்கள். எனவே முதல் முதலாக நான் தான் அந்த மேட்டரை கவனித்து பகிர்கிறேன் என்று நினைக்கிறேன்.

படத்தில் அரசியல் தலைவர் நமோ நாராயணன் இருவரின் சேவையை பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளிப்பதாக ஒரு காட்சி இருக்கும். அதன் தொடர்ச்சியாக மற்ற தொண்டர்கள் நமோநாராணனை சூழ்ந்துக் கொண்டு "எனக்கு ஏன் அது போல் அன்பளிப்பு தரவில்லை" என்று கேட்கும் போது அதற்கு அவர் "நீயும் அவர்களைப் போல் சங்கிலியை முன்பே கொடுத்து மேடையில் போடச் சொல் போடுகிறேன்" என்பார்.


இது அப்படியே அப்பட்டமாக வனவாசத்திலிருந்து சுடப்பட்ட காட்சியாகும். கண்ணதாசன் எப்படி விவரித்து இருப்பார் என்றால் 1957ல் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதற்கான பாராட்டு விழாவில் அண்ணா அவர்கள் வெற்றிக்கு காரணமான கலைஞருக்கு மோதிரம் அணிவித்து இருப்பார்.

இதனை கண்டு திடுக்கிட்ட கண்ணதாசன் அவர்கள் கூட்டம் முடிந்ததும் அண்ணாவிடம் போய் நானும் தான் இந்த தேர்தலில் கடுமையாக உழைத்தேன் எனக்கு ஏன் மோதிரம் அணிவிக்கவில்லை என்று கேட்கும் போது நீயும் கலைஞரைப் போல் மோதிரத்தை முன்பே கொண்டு வந்து கொடுத்திருந்தால் உனக்கும் அதே போல் மேடையில் அணிவித்து இருப்பேன் என்று சொன்னாராம்.


இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மைக்குள் நாம் போக வேண்டாம். காட்சி எங்கிருந்து சுடப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் போதும்.

படத்தின் கதையைப் பற்றி படம் எடுத்தவர்களும் கவலைப்பட வில்லை. பார்த்தவர்களும் கவலைப்படவில்லை. ஒரு மாதிரியான நகைச்சுவை தோரணங்களுடன் கூடிய படம். பார்க்கும் போது சிரித்து விட்டு வெளியில் வந்து சிரித்தோம் என்று யோசிக்க வைக்கக்கூடிய வகை படம் தான். இதுவும்.

படத்தினை விமர்சனம் செய்கிறேன் என்று உங்களைப் போட்டு அறுக்க விரும்பவில்லை. படத்தின் உங்கள் பார்வைக்கும் என் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை மட்டும் விளக்க விரும்புகிறேன்.


படத்தில் குறிப்பிட்டு உள்ளது போல் ரயில்வே காலனியில் குடியிருக்கும் பசங்க இன்று வரை ரயிலடியில் உக்கார்ந்து பொழுது போக்குவது சாதாரண விஷயம். எங்கள் ஊரில் கூட தியாகேசன், மதி, பாலா, வெங்கிட்டு மற்றும் பல நண்பர்கள் இன்றும் இதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவர்களது வீடு ரயில்வே ஸ்டேசனுக்கு அருகிலேயே இருக்கும். ஸ்டேசனில் பணிபுரிபவர்கள் கூட சொந்தக்காரர்களாகவே இருப்பார்கள். அதனால் அவர்கள் நேரம் காலம் தெரியாமல் பொழுது போக்கும் இடம் ரயில்வே ஸ்டேசன் தான்.

அதுபோல் திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேசனை காட்டியிருக்கிறார்கள். ரவுடியிசம் அதிகமாக வளர்வது ரயில்வே குடியிருப்புகளில் தான். திருச்சி ரயில்வே காலனியில் தான் சென்ற ஆட்சியில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட முட்டை ரவி உள்ளிட்ட பல ரவுடிகள் இருந்தனர்.

சென்னையில் அயனாவரம் ரயில்வே குவார்ட்டர்ஸ் மோசமான ஏரியா. இன்றும் இரவு நேரங்களில் நடமாடுவது பாதுகாப்பில்லாத ஒன்று. ஆள்கடத்தல் எல்லாம் மாதம் ஒரு முறை நடக்கக்கூடியது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைவான ஏரியா.

அதனை அப்படியே கொஞ்சம் நகைச்சுவை கலந்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மற்றபடி நகைச்சுவை தோரணங்களால் நம்மை சில இடங்களில் சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

பிந்து மாதவியிடம் அடிபட்ட சோகத்தை விமல் கூறும் போது நடக்கும் பார்ட்டியில் ஒருத்தன் மட்டும் குடிப்பதை மட்டும் செய்து கொண்டு இருக்கும் காட்சியிலும், ஓட்டுப் பெட்டியில் 30க்கு பதில் 38 ஓட்டு விழுந்ததை பெருமையாக சொல்லும் காட்சியிலும் மட்டும் கண்ணில் நீர் வர சிரித்தேன்.

சில  இடங்களில் புன்சிரிப்பு மட்டுமே.

நடிகைகள், நடிப்பு, பாடல், ஒளிப்பதிவு, இசை என எல்லாத்தையும் மற்றவர்கள் பிரித்து மேய்ந்து விட்டதால் நான் அதனுள் செல்லவில்லை.

மொத்தத்தில் படம் செகண்ட் குவாலிட்டி ஓகேஓகே.

ஆரூர் மூனா செந்தில்




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...