சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, July 26, 2013

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

எப்போதுமே பூபதி பாண்டியனுக்கு ஒரு இடத்தில் தவறு நடக்கும். தேவையில்லாத இடங்களில் எல்லாம் பாட்டை வைத்து கடுப்பேத்துவார். இந்த படத்திலும் சரியாக அதே விஷயத்தை செய்திருக்கிறார். தம்மு விக்கிறவன் நல்லா கல்லா கட்டுறான்.


அது மாதிரி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மயில்சாமி வந்து விடுவார். அந்த காமெடியும் வாய்விட்டு சிரிப்பது போல் இருக்கும். இன்னும் சில காட்சிகள் மயில்சாமி வரமாட்டாரா என ஏங்க வைக்கும், இதிலும் அதே நடந்திருக்கிறது.

மலைக்கோட்டை படத்தில் ஒரு மெடிக்கல் படிக்கும் திருச்சி மாணவிக்கு ரவுடியால் பிரச்சனை வரும். வெளியூரில் இருந்து திருச்சிக்கு வரும் விஷால் காப்பாற்றி பரிட்சை எழுத வைப்பார். இந்த படத்தில் மெடிக்கல் படிக்க ஆசைப்படும் பள்ளியில் படிக்கும் திருச்சி மாணவிக்கு ரவுடியால் பிரச்சனை வரும். அதே போல் வெளியூரில் இருந்து வரும் விஷால் பள்ளி இறுதி பரிட்சையை எழுத வைத்து டாக்டராக்குகிறார்.


மத்தபடி இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே மாதிரியான கதை தான். சில இடங்களில் திரைக்கதையை பட்டி டிங்கரிங் பார்த்து மாத்தியிருக்கிறார்கள். மலைக்கோட்டை பிடித்திருந்தால் பட்டத்து யானையும் உங்களுக்கு பிடிக்கும்.

சந்தானம் தான் படத்தின் வசூலுக்கு காரணமாக இருப்பார். படம் பாதி வரை எடுத்த பிறகு யார் கதாநாயகன் என்ற சந்தேகம் வந்திருக்கும் போல. இடைவேளைக்கு அரைமணி நேரம் முன்பும் அரைமணிநேரம் பின்பும் காணாமல் போகிறார். அந்த இடங்கள் தான் போரடிக்கிறது.


படத்தின் கதைனு சொல்லனும்னாக்கா மூணு கொலை சரவணன் சந்தானத்துக்கிட்ட சமையற்காரராக தன் நண்பர்கள் நால்வருடன் சேர்கிறார். வந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட திருச்சி இடம் பெயர்கிறார்கள். வந்த இடத்தில் ஹீரோயினுடன் காதல் ஏற்படுகிறது.

வில்லன் ஒருவன் ஹீரோயினை அடைய முயற்சிக்க ஏகப்பட்ட அடிதடிகள் கொஞ்சம் காமெடி சேர்த்து வில்லன்களை வீழ்த்தி விட்டு காதலியை கைப்பிடிக்கிறாரா என்பதை சந்தானத்தின் உதவியுடன் கொஞ்சமே கொஞ்சம் பார்க்க முடியுமாறு சொல்லியிருக்கிறார்கள்.


மலைக்கோட்டைக்கு பிறகு சுமாரான வெற்றி கூட விஷாலுக்கு வரவில்லை. அந்த ரெக்கார்டை இந்த படம் தட்டி உடைக்கப் பார்த்து இருக்கிறது.விஷாலும் விஜய் மாதிரி நடனமாடுகிறார். சந்தானத்துடன் சேர்ந்து கிச்சு கிச்சு மூட்ட முயற்சிக்கிறார். ஆனால் பத்தவில்லை.

இந்த படத்திற்கு இந்த பொண்ணு எதற்கு என்று தான் தெரியவில்லை. முகத்தில் களையில்லை. கடாமுடான்னு முகத்தின் அமைப்புகள் இருக்கின்றன. மிகவும் ஒல்லியாக வேறு இருக்கிறார். தமிழனுங்களுக்கு கொஞ்சம் கொழுக் மொழுக்குன்னு இருந்தாத்தான் பிடிக்கும், இனி தேறாது.

ரொம்ப புகழ்ந்தாலும் வேற வழியில்லாமல் சந்தானம் தான் படத்தை சந்தோஷமாக துவக்கி வைத்து முடித்தும் வைக்கிறார். ஆனால் சில காமெடிகள் கடுப்பேத்துகிறது. குரூப் டிஸ்கசனில் கவனம் செலுத்துங்க சந்தானம் சாரே.

பாடல்கள் இரண்டு முன்பே கேட்டிருந்ததால் பார்க்க வைக்கிறது. மற்றபடி இசை சொல்லிக் கொள்வது போல் ஏதும் இல்லை. நடனமும் அப்படித்தான்.

படத்தில் கார்த்திக் சபேஷூக்கு காமெடி நன்றாக வருகிறது. வாய்ப்புகள் சரியாக அமைந்தால் தனியாவர்த்தனம் செய்து நல்ல காமெடியனாக வருவார் என்று தோன்றுகிறது. நண்டு ஜெகனை வீணடித்து இருக்கிறார்கள்.

படம் ஆவரேஜ் ஹிட் தான். டிரெய்லரில் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பினை படம் பூர்த்தி செய்யவில்லை.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, July 23, 2013

ஆட்டோகிராப்பும் எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பும்

2003-04ல் சென்னையின் குடிநீர்த் தேவைக்கான வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கியிருந்தது. அதற்கான பணிஆணை 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டு இருந்தது. வீராணம் ஏரியில் தொடங்கும் குழாய் பதிக்கும் பணி போரூர் ஏரியில் அந்த நீரை சுத்திகரித்து வழங்குவதில் முடியவடையும்.


இதில் நான் வேலை பார்த்த நிறுவனம் மேல்மருவத்தூரில் இருந்து போரூர் சுத்திகரிப்பு நிலையம் வரை குழாய் பதிக்கும் பணிஆணையை பெற்றிருந்தது. இதில் வண்டலூர் முதல் போரூர் வரை உள்ள இடத்தில் குழாய்களை தொழிற்சாலையில் இருந்து கொண்டு வந்து இறக்கும் பொறுப்பு என்னுடையது.

எனக்கு உதவியாக ஆறு பேர், 25 கண்டெய்னர் லாரிகள் மற்றும் ஒரு டவர் கிரேன். இந்த பணிக்காக எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. வண்டலூரில் இருந்து தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை வரை மண்ணுக்குள் வரும் குழாய் புறவழிச்சாலை தொடங்கியதும் சிறுபில்லர் அமைக்கப்பட்டு மண்ணுக்கு மேலேயே பயணிக்கும்.

பில்லர் போடுவது, குழாயை வெல்டிங் அடிப்பது இடையில் பட்டர்ப்ளை வால்வுகள் பொருத்துவது, இடையில் வரும் சாலைகளை கடக்க சுரங்கம் அமைப்பது, அனகாபுத்தூரில் உயர்மட்ட பாலம் அமைப்பது போன்ற இன்ன பிற பொறியாளர்களிடமும் அலுவலர்களிடமும் கொடுக்கப்பட்டு இருந்தன.


10 டன் எடையுள்ள மாபெரும் குழாய்கள் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்டு புறவழிச்சாலையில் இருந்து டவர் கிரேன் மூலம் கீழே இறக்கி வைக்க வேண்டும்.

இப்பொழுது உள்ளது போல் நடுவில் சென்டர் மீடியன் உள்ள நான்கு வழிச்சாலை அப்போது கிடையாது. இருவழிச்சாலை மட்டும் தான். நடுவில் தடுப்பு கூட கிடையாது. எந்நேரமும் 100 கிமீக்கும் அதிகமான வேகத்தில் வரும் வாகனங்களை வேகம் குறைக்க வைத்து அனுப்ப வேண்டும்.

ஏனென்றால் டவர் கிரேன் சாலையின் முக்கால் பகுதி இடத்தை அடைத்துக் கொள்ளும். மீதியுள்ள சாலையை இருபக்க வாகனங்களும் கடக்க வேண்டும். தொழிற்சாலையில் குழாயை எடுப்பதில் தொடங்கி இவ்வளவு சிக்கல்களையும் கடந்து குழாயை புறவழிச்சாலையின் பக்கவாட்டில் அடுக்க வேண்டும்.


எங்கள் குழு குழாயை வைத்து முடித்ததும் அடுத்த குழு பில்லரில் குழாயை வைத்து வெல்டிங்கை துவக்கும். இது ஒரு செயின் லிங்க் ஒர்க். பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இருள் தொடங்கியதும் புறவழிச்சாலையில் குழாய்கள் வைக்கும் பணி நிறுத்தப்பட வேண்டும்.

கடைசி நேரத்தில் மேலிடத்தின் அழுத்தத்தினால் வேலை அசுர வேகத்தில் நடைபெற தொடங்கின. எனக்கென்று வேலை நேரம் கிடையாது. 24 மணிநேரமும் புறவழிச்சாலையில் தான் இருக்க வேண்டும்.

இருக்கும் 25 கண்டெய்னர் லாரிகளை வைத்து இடைவெளி விடாமல் குழாய்களை இறக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேரம் முழுவதும் மொத்த வண்டிகளையும் தொழிற்சாலைக்கு அனுப்பி குழாய்களை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

காலை ஆறு மணிக்கு குழாய்களை இறக்கத் தொடங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு எங்கள் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் தலைவராக இருந்தார். எனக்கு அவர் குரு மாதிரி. மிகச்சாதாரண ஆளாக இருந்த என்னை வளர்த்து நல்ல பொறுப்பில் வைத்திருந்தார்.

அவருக்கு மேல்மருத்தூர் முதல் போரூர் வரை வேலையிருக்கும். எங்கள் பகுதிக்கு அவர் வரும் போது நான் இருக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையாக சத்தம் போடுவார். அவரது பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது, மொத்த குழுவும் அவரைப் பார்த்து நடுங்குவர்.

நிற்க. தலைப்புக்கும் இதுவரை சொல்லிய கதைக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறீர்களா, கதையை சொல்வதற்கு முன்பு கால சூழ்நிலையை உங்களிடம் சேர்த்தால் தான் சம்பவத்தின் வீரியம் உங்களுக்கு புரியும்.

இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் கிடைக்கும் கேப்பில் எஸ்கேப்பாகி சினிமாக்களை முடிந்த வரை முதல் காட்சி பார்த்து விடுவேன். சரக்கும் எப்படியாவது அடித்து விடுவேன். என் தலைவர் வரும் நேரம் கொஞ்சம் வெடவெடவென்று நடுக்கமாக இருக்கும்.

ஒரு கணக்கு உண்டு, அவர் எங்கள் பகுதியை சுற்றிப் பார்த்து விட்டு கிளம்பி விட்டால் மறுபடியும் அதே இடத்திற்கு வர குறைந்தது 8 மணிநேரம் ஆகும். மேல்மருவத்தூர் வரை சென்று வழியில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து விட்டு திரும்ப வர வேண்டுமே.

ஆட்டோகிராப் படம் வெளியான அன்று முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். காலையில் முதல் லோடு குழாய்களை இறக்கி வைத்து விட்டு லாரிகளை அனுப்பி படம் பார்த்து வருவதற்குள் குரோம்பேட்டை வெற்றியில் படம் பார்த்து விட்டு வந்து விடலாம் என திட்டம் போட்டேன்.

லாரிகளை அனுப்பி வைத்து விட்டு தொழிற்சாலையில் உள்ள என் நண்பனிடம் "ஏதாவது காரணம் சொல்லி ஒரு இரண்டு மணிநேரம் இடைவெளி விட்டு குழாய்களை லாரியில் ஏற்று" என்று சொல்லி விட்டு தியேட்டருக்கு வந்து விட்டேன்.

நான் திரையங்கிற்கு போன சமயம் எங்கள் தலைவர் தொழிற்சாலைக்கு சென்றிருக்கிறார். லாரிகள் லோடு ஏற்றாமல் நிற்கவே அவனை கூப்பிட்டு சத்தம் போட்டு "இன்னும் பதினைந்து நிமிடத்திற்குள் லாரிகள் கிளம்ப வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

அவன் பதற்றத்தில் எனக்கு சொல்லாமல் ஏற்றி அனுப்பி வைத்து விட்டான். லாரிகள் ஊரப்பாக்கம் பக்கம் ரோட்டில் நின்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்த தலைவர் லாரிகள் நிற்பதை பார்த்து எனக்கு போன் போட்டிருக்கிறார்.

அவரது போனிலிருந்து எனக்கு கிடைக்காமல் போகவே பக்கத்தில் இருந்த டெலிபோன் பூத்தில் இருந்து போன் அடித்தார். நான் படம் துவங்கி அரைமணிநேரம் வரை ஜாலியாக படம் பார்த்துக் கொண்டு இருக்க லோக்கல் நம்பரில் இருந்து போன் வரவும் மிகவும் அசால்ட்டாக போனை எடுத்து "யாரு" என்று நக்கலாக தியேட்டரின் உள்ளேயே அமர்ந்து பேசினேன்.

சில நொடிகளில் நான் தியேட்டரில் இருப்பதை கண்டுபிடித்து விட்டார். கடுமையாக சத்தம் போட்டு "இன்னும் அரைமணிநேரத்திற்குள் லாரிகளில் உள்ள குழாய்கள் இறக்கப்பட்டு தொழிற்சாலைக்கு திரும்பாவிட்டால் நீ வேலையை விட்டு அனுப்பப்படுவாய்" என்றதும் எனக்கு சர்வமும் நடுங்கி விட்டது.

தியேட்டரை விட்டு வெளியே வந்தால் தியேட்டர்காரன் பைக்கை எடுக்க விட மாட்டேங்கிறான். படம் முடியாமல் எடுக்க முடியாது. கதவையும் திறக்க முடியாது என்று சத்தம் போடவே வெற்றி தியேட்டரின் பெரிய கதவை ஏறி குதித்து வெளியில் வந்து ஒரு ஆட்டோவை பிடித்து ஊரப்பாக்கம் வந்தேன்.

லாரிகளை எடுத்துக் கொண்டு புறவழிச்சாலைக்கு வந்து அவசர அவசரமாக குழாய்களை இறக்கி லாரிகளை அனுப்பி வைத்ததும் தான் நிம்மதி வந்தது. படம் முடியும் நேரம் தியேட்டருக்கு போய் பைக்கை எடுத்து வந்தேன். மறுநாள் காலை திட்ட அலுவலர்கள், பொறியாளர்களுக்காக ஆலோசனை கூட்டம் நடந்தது.

என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டே உள்ளே அமர்ந்தேன். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் கலையும் போது ஒரு நிமிடம் என்று எல்லோரையும் அமர வைத்த தலைவர் என் கதையை சொல்லி "இப்படிப்பட்ட பொறுக்கிகளையும் வைத்து தான் இந்த திட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது" என்று முடித்தார்.

நல்ல வேளை பிரச்சனை அத்துடன் முடிந்ததே என்ற திருப்தி எனக்கு. அதற்காக அடுத்த வாரம் சினிமாவுக்கு போகாமல் இருந்திருப்பேன் என்றா நினைக்கிறீர்கள், ஹி ஹி.

ஆரூர் மூனா செந்தில்

Monday, July 22, 2013

பஞ்சேந்திரியா - சென்னையில் டப்பாவாலாக்கள், எ மா ச வாழ்கிறோம்

கரடு முரடான உருவமும் முரட்டுத்தனமான தோற்றமும் எனக்கு எதற்கு உதவுகிறதோ இல்லையோ சாலையில் நடக்கும் தகராறுகளுக்கு மற்றவர்களை யோசிக்காமல் ஒரடி பின்வாங்கச் செய்கிறது.

இரண்டு வருடத்திற்கு முன்பு திருவாரூரில் இரண்டு பேருந்துகள் ஒரே நிறுத்தத்தில் நிற்கையில் பின்வரும் வாகனங்கள் செல்ல வழியில்லை. இருந்த கேப்பில் நான் புகுந்து செல்ல முற்பட எதிரில் வந்த ஆட்டோக்காரன் "டேய் மயிராண்டி" என்று சவுண்டு விட்டான். அப்படியே நின்று வண்டியை கீழே போட்டு திரும்பினேன். சற்றும் யோசிக்காமல் "அண்ணே நீங்க போங்கண்ணே, நான் ஆளை மாத்தி கூப்பிட்டேன் ஸாரிண்ணே" என்றான். சிரித்துக் கொண்டே வந்து விட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அயனாவரத்தில் உள்ள ஒரு நாற்சந்திப்பில் நான் கடக்கும் போது குறுக்கே மோதுவது போல் வந்த ஆட்டோவின் பின்னே அமர்ந்திருந்தவன் பயத்தில் என்னைப் பார்த்து "அடப்பாவி" என கத்தினான். சைடு ஸ்டாண்டு போட்டு இறங்கி "என்ன" என்றேன். "சார் நான் டிரைவரை திட்டினேன் நீங்க போங்க" என்றான்.

# வில்லன் பொன்னம்பலம் மாதிரி ஆகிட்டேன் போல. கண்ணாடியில் எப்படிப் பார்த்தாலும் ரொமாண்டிக் லுக் வர மாட்டேங்குதே - கவுண்டமணிகிட்ட கிளாஸூக்கு போகனும் போல # ஏ அக்கா மகளே இந்து.

----------------------------------------

Factu Factu Factu



-----------------------------------------------

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் தலைப்பில் முகநூலில் பகிர்ந்தவை

என் நண்பன் வெளிநாடு செல்வதற்காக சென்னை வந்தான் அவனுடன் இன்று முழுக்க சுற்றி இரவு அவனை வழியனுப்பி வந்து முகநூலை பார்த்தால் எல்லோரும் ஸ்டாம்ப் அடித்து உலவ விட்டு இருக்கின்றனர். நான் தான் லேட்டு # ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

நைட்டு ஓவர் மப்பு, காலைல எழுந்ததில் இருந்து தலைய வலிக்குது. கட்டிங் அடிச்சா சரியாப் போயிடும்னு சொல்றான் ப்ரெண்டு # ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

நக்கீரன் இன்னைக்கி 400 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்திருக்காராம். எவன் எவன்லாம் சிக்கி சின்னாபின்னமாகப் போறானோ, எது எதற்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கிறது # என்ன மாதிரியாக சமூகத்தில் வாழ்கிறோம்

5000 கிலோமீட்டருக்கு அப்பால் சென்று தாக்கும் ஏவுகணையை கூட கண்டுபிடித்து விட்டான். ஆனால் இன்னும் ஆப்பாயிலை பார்சல் செய்யும் முறையை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. # என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

கையேந்திபவனில் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மூன்றாம் முறையாக சாம்பார் கேட்டால் தரமாட்டேங்கிறேன் # என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

-----------------------------------------------

எங்க குலசாமி


-----------------------------------------------

மும்பையில் உலகப் புகழ்ப்பெற்ற டப்பாவாலாக்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது போல் சென்னையில் கூட பல வருடங்களுக்கு முன்பு டப்பாவாலாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா.

டப்பாவாலாக்கள் சரியான நேரத்தில் டிபன்பாக்ஸ் எடுத்து வருவதற்காக அரக்கோணத்தில் இருந்தும் கும்மிடிப்பூண்டியில் இருந்தும் மின்சார ரயில்கள் கிளம்பி சரியாக 11.30 மணிக்கு பெரம்பூர் கேரேஜ் ஓர்க்ஸ் ரயில் நிலையத்திற்கு வந்திருக்கின்றன. அப்படி வந்த உணவை சாப்பிடுவதற்காக மூன்று வகையான டிபன் ஷெட்டுகள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

ஒன்று இந்தியர்களுக்கு சற்று வசதிக் குறைவானது. இரண்டாவது ஆங்கிலோ இந்தியர்களுக்கானது சற்று வசதியானது. மூன்றாவது வெள்ளைக்காரர் களுக்கான டிபன் ஷெட், இதில் வசதி சற்று கூடுதலானது.

காலப்போக்கில் டப்பாவாலாக்கள் மதிய உணவு எடுத்து வருவது நின்று போனாலும் அதற்கு சாட்சியாக இன்றும் அந்த ரயில்வே ஸ்டேசன் அருகில் மூன்று ஷெட்டுகளும் இருக்கின்றன. ஒன்று பாழடைந்து கிடக்கிறது. மற்ற இரண்டும் யூனியன் ஆபீஸ்கள் ஆகி விட்டன. மேலும் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் விரைவில்.


ஆரூர் மூனா செந்தில்

Friday, July 19, 2013

அலைந்து திரிந்து மரியான் பார்த்த கதை

எப்பொழுதும் ஒரு நாள் நன்றாக இருந்தால் ஒரு நாள் கவிழ்த்து விடும். இன்றைய நாள் சரியில்லை என்பது முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது போல. எப்பொழுதும் AGSல் படம் பார்க்கும் நேற்று காலை மரியான் படம் பார்க்க முன்பதிவு செய்ய இணையத்திற்கு வந்த போது முதல் காட்சி 10.30 தான் என போட்டிருந்தது.


ஆனால் அம்பத்தூரில் 9 மணிக் காட்சிக்கான முன்பதிவுகள் தொடங்கியிருந்தன. காலையிலேயே படத்தினை பார்த்து முடித்து விட்டால் இன்று சில வேலைகளை கூடுதலாக பார்க்கலாம் என்று முடிவு செய்ததால் நண்பனிடம் கூறி அம்பத்தூர் முருகன் திரையரங்கில் டிக்கெட்டை எடுக்கச் சொல்லியிருந்தேன்.

அவனும் டிக்கெட்டை எடுத்து விட்டான். மாலை 6 மணிக்கு AGS வெப்சைட்டுக்கு போனால் 9 மணிக்காட்சிக்கு முன்பதிவு இருந்தது. அடடா தேவையில்லாமல் நண்பனை வேறு சொறிந்து விட்டோமே என்று யோசனையாக இருந்தது.

அவனிடம் சொல்லி டிக்கெட்டும் எடுத்தாகி விட்டது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். கேன்சல் செய்யச் சொன்னால் அவன் திட்டுவான். ஒரு படம் பார்க்க பெரம்பூரிலிருந்து அம்பத்தூர் போக வேண்டுமா எனவும் யோசனை.

சொல்லியாகி விட்டது. வேறு வழியில்லை. போய்த்தான் ஆகவேண்டுமென்று காலையில் இங்கிருந்து 8 மணிக்கு கிளம்பினேன். எப்படியும் AGS வழியாகத்தான் போக வேண்டும். பார்த்தால் திரையரங்கு காலியாக இருந்தது. எரிச்சலும் கடுப்புமாக கிளம்பினேன். நாதமுனி தாண்டியதும் மழை தொடங்கியது.

மழையில் நனையும் ஆசையில்லை, ஒதுங்கவும் மனமில்லை. நண்பன் வேறு காத்திருப்பானே என நனைந்து கொண்டே கிளம்பினேன். தியேட்டருக்கு சென்று பார்த்தால் எங்களுடன் சேர்த்து மொத்தமே இருவது பேர் தான் திரையரங்கில் இருந்தனர்.

----------------------------------------

மரியான் படத்தில் பார்வதி கதாபாத்திரம் முழுவதும் இயல்பிலிருந்து விலகி வடிவமைக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டின் எந்த கடலோர கிராமங்களிலும் இது போல் உடையணிந்த பெண்ணை நான் பார்த்ததே இல்லை.

இருபது வயதை கடந்த பெண் குட்டை பாவாடை, சட்டை போட்டு எந்த கிராமங்களிலும் வெளியே நடமாட மாட்டார். மிகவும் சாதாரணமாக குனிந்தாலே மார்பு பகுதி தெரியும் அளவுக்கு இறக்கித் தைக்கப்பட்ட சட்டையை அணிந்து கொண்டு கிராமம் முழுக்க நடமாடுகிறார்.

அப்புக்குட்டி முன்னால் குனிந்து குனிந்து பேசுகிறார். குனிந்து கொண்டே லாலிபாப்பை ஒரு மார்க்கமாக சுவைக்கிறார். கவர்ச்சியாக இருக்கிறது, ஜொள்ளு கூட விடுகிறோம் சரி. ஆனால் நீங்கள் கிளாஸ் படம் என்று நினைத்து எடுத்த படத்தில் அல்லவா இந்த காட்சிகள் இருக்கிறது. ரூம் போட்டு யோசிங்கப்பா.

----------------------------------------

படம் முடிந்து வெளியில் வந்ததும் நல்ல வெயில் அடித்தது. சரி வீட்டுக்கு போய் விடலாம் என்று நினைத்த போது நண்பன் ஒரு ஆட்டோகேட் பைலை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து விட்டு போ என்றான். அவனுக்காக அவன் வீட்டுக்கு சென்று பைலை கரெக்ட் செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து விட்டு மணியாகி விட்டதே என்று அங்கிருந்தே விமர்சனத்தை தட்டச்சு செய்தேன்.

முடித்து விட்டு வெளியில் வந்தால் வெளியில் நல்ல மழை, பயங்கர கடுப்பாகிப் போனது. எனக்கு மட்டும் ஏண்டா இந்த மாதிரியெல்லாம் நடக்குதுன்னு திட்டிக்கிட்டே வீட்டுக்குள் போய் விட்டேன். அரைமணிநேரம் வரை காத்திருந்தேன். மழை விடுவது போல் தெரியவில்லை. பாலிதீன் கவர் வாங்கி போனையும் பர்ஸையும் பத்திரப்படுத்திக் கொண்டு மழையில் நனைந்த படியே வீடு வந்து சேர்ந்தேன்.

சிங்கம் 2 படத்திற்கு டிக்கெட் எடுத்தது போல் இந்த படத்திற்கும் அவரசப்படாமல் டிக்கெட் எடுத்திருந்தால் அவ்வளவு தூரம் அலைச்சலும் இருந்திருக்காது. மழையில் நனைந்திருக்கவும் மாட்டேன். உடனடியாக வீடு வந்தும் சேர்ந்திருப்பேன். எல்லாம் என் கெரகம். ஒன்னியும் பண்ண முடியாது.

ஆரூர் மூனா செந்தில்

மரியான் - சினிமா விமர்சனம்

ஆப்ரிக்க கடத்தல்காரர்களிடம் தனுஷூம் ஜெகனும் மாட்டி பசியில் துடித்துக் கொண்டு இருக்கும் போது பனிமலர் ஜெகனுக்கு சோறு போடு அப்படின்னு சொல்லுவார். ஒரு நிமிஷம் பதறிட்டேன் அடடா மயக்கம் என்ன, 3 வரிசையில் அடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் தனுஷூக்கு என்று.


ஆனால் அது கற்பனை காட்சி என்ற போது அப்பாடா என்று இருந்தது. அது போல் டிரெய்லரில் சிறுத்தையிடம் மாட்டிக் கொள்வது போல் ஒரு காட்சி இருந்தது. சரியான ஆக்சன் பேக் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அதுவும் கற்பனை என்னும் போது அடச்சே என்று ஆகிவிட்டது.

இப்படி இரண்டு மனநிலையும் கலந்த விதத்தில் தான் படம் அமைந்துள்ளது. மிகச்சிறப்பான படம் என்று கொண்டாடவும் முடியாது. மொக்கைப்படம் என்று ஒதுக்கி வைக்கவும் முடியாது. கொஞ்சம் மாஸ், நிறைய கிளாஸ் கலந்த படம் இது.


படத்தின் முதல், மிகப்பெரும், ஆகச்சிறந்த பலம் சந்தேகமில்லாமல் ஏ.ஆர்.ரகுமான் தான். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டுப் பழகியிருந்ததால் பார்க்கும் போது அதற்கு ஏற்ப கொஞ்சம் கூட குறையில்லாமல் படமாக்கப்பட்டு இருக்கிறது.

தென் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமத்தில் வசிக்கும் மீனவர் மரியான். அவர் அதே கிராமத்தில் வசித்து தன்னுடன் மீன்பிடித்து வரும் சலீம்குமாரின் மகள் பனிமலரை(பார்வதி) காதலிக்கிறார். அதே ஊரில் உள்ள ரவுடியிடம் சலீம் கடன் வாங்கியிருப்பதால் பணத்திற்கு பதில் பனிமலரை திருமணம் செய்து கொடுக்கும்படி ரவுடி கட்டாயப்படுத்துகிறார்.


அவரிடம் சண்டை போடும் தனுஷ் பணத்திற்காக இரண்டு ஆண்டுகள் கான்ட்ராக்ட்டில் ஆப்பிரிக்காவில் உள்ள சூடானுக்கு செல்கிறார். இரண்டு வருடம் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் நேரம் அங்குள்ள கொள்ளையர்களால் தனுஷூம் அவருடன் வேலை பார்த்து வரும் ஜெகனும் கடத்தப்படுகிறார்கள்.

தனுஷ் அந்த கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்தாரா, பார்வதியை கைப்பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

தனுஷ் நடிப்பில் எங்கோ எங்கோ எங்கெங்கோ போய் விட்டார். இனி அவர் நடிப்புக்கு தீனி கொடுக்க இயக்குனர் ரூம் போட்டு யோசித்து தான் கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் போல. இனிமேல் தனுஷை பாராட்டவெல்லாம் வேண்டாம். வந்தார் சென்றார் என்றாலே அது சிறந்த நடிப்பு என்றே பொருள்படும்.


பனிமலராக பார்வதி, பூ படத்தில் நடித்த சாயலோ வசன உச்சரிப்போ அழுகையோ ஒரு துளி கூட இந்த படத்தில் எட்டிப் பார்க்கவில்லை. எல்லாமே புதுசா இருக்கு. இது போல் நடிப்பில் வித்தியாசம் காட்டும் கதாநாயகிகள் தான் தமிழுக்குத் தேவை. ப்ராம்ப்ட் கொடுத்து நடிக்கும் மைதா மாவுகள் அல்ல.

சலீம் என்ற மகா கலைஞனை சும்மா வெறுமனே டம்மி கதாபாத்திரத்தை கொடுத்து வீணடித்திருக்கிறார்கள். அது போல் அவருக்கு தலைவாசல் விஜய்யின் டப்பிங்கும் பொருந்தவில்லை. ஒருவேளை இதற்கு முன்பு நான் அவரின் சொந்த குரலை கேட்டு கேட்டு பழகியதால் இருக்கலாமோ என்னவோ.

உமா ரியாஸ் மெளனகுரு படத்தில் மிக இயல்பாக நடித்து அசத்தியிருப்பார். ஆனால் இந்த படத்தில் நடிப்பது போல் இன்னும் இரண்டு படங்களில் நடித்தால் காணமல் போயிருப்பார். மேக்கப்பும் வாயை சுழித்துக் கொண்டு தப்புத்தப்பாக நெல்லை ஸ்லாங் பேசுகிறேன் என்று கொன்று எடுக்கிறார்.

படத்தில் காமெடியன்கள் அறியப்படுபவர்கள் அப்புக்குட்டியும் ஜெகனும். ஆனால் இருவருமே படத்தில் சீரியசான கதாபாத்திரத்தில் வந்து செத்துப் போகிறார்கள். அதற்கு அவர்கள் எதற்கு என்று தான் புரியவில்லை. சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சி சொல்லிக் கொள்வது போல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மொத்தத்தில் படம் மிகச்சிறந்த வெற்றியும் பெறாது. படுதோல்வியும் கிடையாது. தனுஷூக்கு இந்த படத்திற்காக சில விருதுகள் உறுதி. ஆவரேஜ் படம். ஒரு முறை பார்க்கலாம்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : எங்கள் ராஜகுரு அறிவுரையின்படி இனி சினிமாவுக்கு போன கதைகள் விமர்சனத்தில் இடம் பெறாது. யார் அந்த ராஜகுருன்னு எல்லாம் கேக்கப்பிடாது. முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கங்க.
 

Thursday, July 18, 2013

சென்னையில் செப் 1 அன்று இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு திருவிழா

பதிவுலக நட்புகளே,

கடந்த வருடம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா(மாநாடு) சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. சுமார் 200க்கும் அதிகமான பதிவர்கள் (பெண்களும் கணிசமான எண்ணிக்கையில்) கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பதிவர் சந்திப்பு திருவிழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவர் திருவிழாவிற்கான பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டை போலவே பல்வேறு பதிவர் குழுக்கள் அமைக்கப்பட்டு அடுத்தடுத்த ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறார்கள். இந்த பதிவர் சந்திப்பு திருவிழா பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விருப்பமுள்ள பதிவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
 
கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும் அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல, என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.
 
விழாவினை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடத்த பதிவர்கள் தங்களது ஆலோசனைகளை ஞாயிற்றுக் கிழமை தோரும் கே,கே.நகரில் உள்ள DISCOVERY BOOK PALACE-ல் மாலை 4 மணிக்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களின் போது தெரியப்படுத்தலாம், விழக்குழுவினர் அனைவரது கருத்துக்களையும் திறந்த மனதோடு கேட்டு, ஒரு நாளில் நடக்கும் நிகழ்ழ்சி நிரலில் சாத்தியப்படும் அனைத்தையும் சேர்க்க முனைவார்கள். யாரேனும் விழாக்குழுவினருடன் இணைந்து பொறுப்புகளை ஏற்று நடத்த முன்வந்தால் அவர்களையும் இனைத்துக்கொண்டு பதிவர் சந்திப்பு விழாவினை நடத்த விழாக்குழுவினர் முன் வந்திருக்கிறார்கள்.
 
இந்த விழாவிற்காக கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெறும் பதிவர்களுக்கு விழாவின் போது பரிசுகள் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு வாரத்தில் விழா ஏற்பாட்டு பதிவர்களின் பதிவுகள் மூலம் வெளியிடப்படும்.
 
இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
 
செப்டம்பர் 1ம் தேதி (01-09-2013) ஞாயிற்றுக் கிழமை மாநாட்டு தேதியாக முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் முடிவ் செய்யப் பட்டு, சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்தமான கட்டடம் மாநாட்டுக்காக புக் செய்யபட்டுள்ளது.
 

மாநாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகத்தோற்றம்.  
(வாசலில் திருஷ்டி பொம்மை போல் நிற்பது பட்டிக்காட்டான் ஜெய்)


கட்டிடத்தின் முன் பகுதியில் போதுமான இடவசதி உள்ளது.


வாயில்பகுதியிலிருந்து எடுத்த படம்.


வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் உள்ளது.

முதலில் கடந்த வருடத்தைப் போல் ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான ஆகஸ்ட் 25 ல் நடத்தலாமா என்று ஆலோசித்து அன்று பல பதிவர்கள் TNPSC தேர்வு எழுத இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அந்த தேதி நிராகரிக்கபட்டது. செப். மாத ஞாயிற்றுக்கிழமைகளில், செப்.8 முகூர்த்த தினமென்பதால் பல பதிவர்கள் அந்த தேதிக்கு ஆட்சேபம் தெரிவிக்க அந்த தேதியும் வேண்டாம் என்று, முடிவில் செப். 1 ல் நடத்தலாம் என்று முடிவெடுக்க பட்டுள்ளது.
 
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :
  1. மதுமதி kavimadhumathi@gmail.com
  2. பட்டிகாட்டான் ஜெய் pattikattaan@gmail.com
  3. சிவக்குமார் – madrasminnal@gmail.com
  4. ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com
  5. அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
  6. பாலகணேஷ் bganesh55@gmail.com
  7. சசிகலா - sasikala2010eni@gmail.com
உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal) தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.
 
வரவேற்புக்குழுவில் சென்னையில் தங்குமிடம் ஏற்பாடு செய்தல், வாகன ஏற்பாடு செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்ய உதவுதல் போன்ற பணிகளை ஆரூர் மூனா செந்தில், அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன் ஆகியோர் பொறுப்பேற்று செய்கின்றனர்.

சென்னை தவிர ஏனைய பகுதிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மின்னஞ்சலில் அனுப்பியும் அலைபேசியில் அழைத்தும் விழாவுக்கு அழைத்து வரும் பொறுப்பை தமிழ்வாசி பிரகாஷ், சதீஷ் சங்கவி, வீடு சுரேஷ், பாண்டிச்சேரி கோகுல், திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பெண் பதிவர்களின் வரவேற்பு பொறுப்பை மின்னல் வரிகள் கணேஷ், தென்றல் சசிகலா ஆகியோர் ஏற்கின்றனர்.

மற்ற பதிவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு தங்களது வருகை, தங்குமிடம், வாகன வசதி பொன்றவற்றை உறுதி செய்து கொள்ளவும்.

 
ஆரூர் மூனா செந்தில் 
 
 பின்குறிப்பு : வலையுலக நட்புகள் இந்த தகவலை தங்கள் வலைதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, July 16, 2013

கட்டதொரைக்கிட்ட மாட்டியிருந்தா கைப்புள்ளயோட கதி...

 17 வயது வரை என்னைப் பொறுத்த வரை சென்னை என்பது மேற்கு மாம்பலம் மட்டும் தான். சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் மெரினா பீச்சும் காந்தி மண்டபமும் தான். புறநகரில் என்றால் வண்டலூர் உயிரியல் பூங்காவும், கோல்டன் பீச்சும் தான். அதைத் தாண்டி வேறு இடங்கள் தெரியாது.


ஒவ்வோரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு சென்னைக்கு வருவது மேற்கு மாம்பலத்தில் உள்ள மாமா வீட்டுக்கு தான். இந்த காலகட்டங்களில் எனக்கு தெரிந்த திரையரங்குகள் உதயம், காசி, ஜெயராஜ், நூர்ஜகான், ஸ்ரீநிவாசா மட்டும் தான்.

பள்ளிப்படிப்பை முடித்ததும் சென்னைக்கு அனுப்பி விட நினைத்த அப்பா பல இடங்களில் விசாரித்து ரயில்வே அப்ரெண்டிஸ்ஸில் சேர்த்து விட முடிவு செய்தார். அதன்படி விண்ணப்பம் பூர்த்தி செய்து போட்டு நுழைவுத் தேர்வுக்கு அழைப்பு வந்த போது அழுது கொண்டே ரயிலேறினேன்.


எந்த இடம் என்று கூட தெரியாமல் அண்ணாநகர் கிழக்கில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதி விட்டு திருவாரூருக்கு திரும்பி விட்டேன். பிறகு தேர்வானது வந்து சேர்ந்தது எல்லாம் இந்த கட்டுரைக்கு முக்கியமில்லை.

தங்குவதற்காக நான் வந்து சேர்ந்த இடம் பெரம்பூர். அதுவரை சற்று அமைதியான பகுதிகளையே சென்னை என்று நினைத்திருந்த நான் வந்த அன்று கண்முன்னே ஒருவன் வெட்டிக் கொல்லப்படுவதை கண்டேன். ஆட்டோவில் வந்தார்கள் வெல்டிங் கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவனை வெட்டி சாய்த்து விட்டு போய் விட்டார்கள்.                              


சர்வமும் ஒடுங்கி விட்டது. திருவாரூரில் பிரச்சனையென்றால் கைகளால் அடித்துக் கொண்டு இருந்த நான் என்னை பெரிய முரடன் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஒரு நிமிடத்தில் என் நினைப்பை அடித்து நொறுக்கி மரண பயத்தை காட்டி விட்டார்கள்.

அதன் பிறகு சில மாதம் வரை வகுப்பு நண்பர்களுடன் கலக்காமல் நான் மட்டும் தனியே இருந்தேன். அவர்களுடன் சகஜமாக பழகிய பிறகு தான் பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், அயனாவரம், வியாசர்பாடி என என்னை சுற்றிய பகுதிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் சாதாரணம் என்று தெரிய வந்தது.


ஒரு முறை எங்கள் ஏரியாவில் ரோட்டில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு ஆட்டோவில் வந்த வேறு சில நண்பர்கள் என்னுடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டு இருந்தவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்கள். வா மச்சான் அடுத்த ஏரியாவில் போய் கிரிக்கெட் பெட் மேட்ச் ஆடலாம் என்று அழைத்தார்கள்.

சரி என்று ஆட்டோவில் ஏறினேன். நேரே கொளத்தூர் மூகாம்பிகா தியேட்டர் அருகே சென்றது. சரசரவென இறங்கியவர்கள் ஆட்டோவின் பின்புறமிருந்து உருட்டுக் கட்டைகளையும் இரண்டு பட்டாக் கத்திகளையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஜெராக்ஸ் கடைக்கு சென்று அடித்து உடைத்து ஷட்டரை மூடி விட்டு வந்து ஆட்டோவில் ஏறி வாடா மச்சான் நம்ம தெருவுக்கே போகலாம் என்றார்கள்.

ஒரு மாசம் அவனுங்க பக்கமே போகவில்லை. பிறகு தான் புரிந்தது. இது சாதாரண ஏரியா கிடையாது, நம்ம கூட சுத்துறவனும் சாதாரணமானவன் கிடையாது என்று. ஒரு வருடத்தில் இவர்களுடன் சகஜமாகி நானும் சில பல கோதாக்களில் இறங்கி உள்ளேன். ஆனால் எங்காவது நம்ம பக்கம் வலு குறைவாக இருப்பது போல் தெரிந்தால் முதலில் எஸ்ஸாவது நானாகத்தான் இருக்கும்.

ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு கபடிப் போட்டியில் வேறொரு குழுவுடன் மோதும் போது சண்டையாகி எங்கள் நண்பர்களில் ஒருவன் அவர்களின் அணித் தலைவனை அடித்து விட்டான். எங்கே அவனுங்க ஸ்கெட்ச் போட்டுறுவானுங்களோன்னு பயந்து இரண்டு நாள் நாங்கள் எங்கு சென்றாலும் குழுவாகவே சென்று வந்தோம்.

பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு பிரச்சனை அடங்கி விட்டது என்று நினைத்துக் கொண்டு நான் தனியாக அயனாவரம் பக்கம் போக அவர்கள் துரத்த ஆரம்பித்தனர். ஓடினேன் ஓடினேன் நூர் ஓட்டல் ஸ்டாப்பிங் வரைக்கும் ஓடினேன். வந்த பஸ்ஸில் ஏறி தப்பித்தேன்.

இரண்டு நாள் கழித்து தான் தெரிந்தது. அவர்கள் என்னை துரத்தியது அடிப்பதற்காக அல்ல, எங்கள் குழுவில் உள்ள மற்றவர்கள் அடிப்பார்களோ என்று பயந்து சமாதானத்திற்கு தூது விடத்தான் என்று.

இந்த சம்பவத்திற்கு பிறகு பல நாட்கள் எங்க ஆளுங்க ரன்னர் ரன்னர் என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அந்த சமயத்தி்ல் மாட்டியிருந்தால் கட்டதொரைக்கிட்ட மாட்டியிருந்த கைப்புள்ளயாகியிருப்பேன் என்று என் உள்ளுணர்வு சொன்னதை அவர்களிடம் சொல்ல முடியுமா என்ன.

ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...