சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, November 29, 2011

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - கடைசி நாட்கள்.../பகுதி 1

இரண்டாம் உலகப்போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா குதித்ததும், போரின் போக்கே தலைகீழாக மாறியது. வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின. அமெரிக்க தளபதி மக்ஆர்தர், பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கிக் கொண்டிருந்தார்.

1945 ஏப்ரல் 30_ந்தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப்படைகள் முற்றுகையிட்டன. இனி தப்ப வழி இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை.

எனவே, 1945 ஆகஸ்ட் 6_ந்தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரா நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12_ந்தேதி, ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடையத் தீர்மானித்தது.

அப்போது நேதாஜி மலேயாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கப்பூர் திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். 1945 ஆகஸ்ட் 15_ந்தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, ராணுவத் தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். முக்கியமாக, "ஜான்சி ராணிப்படை"யில் உள்ள பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார்.

இதற்கிடையே, ஜப்பான் அரசிடமிருந்து, நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது. "ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்" என்பதுதான் அந்தச் செய்தி. அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும், அங்கிருந்து மஞ்சூரியாவுக்குப் புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார்.

1945 ஆகஸ்ட் 16_ந்தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு செய்திகளை வெளியிட்டார். முதலாவது செய்தி, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு. "ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன. இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்" என்பதே அந்தச் செய்தி.

அடுத்த செய்தி, கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு. "நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள். இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்.

இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டு, காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய்ச்சேர்ந்தார். ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார்.

துணைத்தளபதி கர்னல் ஹபிப் வுர் ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் (நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்) ஆலோசகர் தேவநாத் தாஸ், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரசார இலாகா மந்திரியாக பதவி வகித்த எஸ்.ஏ.அய்யர் (தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.


(தொடரும்...)

ஆரூர் முனா செந்திலு

டிஸ்கி 1: ஒரு பகுதியிலேயே முடிக்கலாம்னு நினைச்சேன் ஆனால் முடித்த பிறகு பார்த்தால் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே 2 பகுதிகளாக பிரித்து வெளியிடுகிறேன். இரண்டாம் பகுதி நாளை மறுநாள்.

டிஸ்கி 2 : நேற்று போதையில் பதிவில் செய்த அலப்பறைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாம ஒழுங்கா இருக்கனும்னு நினைச்சாலும் சேர்க்கை நம்மள அப்படி இருக்க விடமாட்டேங்குது.


5 comments:

  1. இரண்டே பகுதி கொண்ட தொடரா? தலைவரே.. நிறைய எழுதலாம்... வில்லன்களுக்கு எல்லாம் நாலு பகுதி எழுதிறீங்க, ஹீரோ வுக்கு இரண்டு பகுதி தானா?

    ReplyDelete
  2. /// suryajeeva said...

    இரண்டே பகுதி கொண்ட தொடரா? தலைவரே.. நிறைய எழுதலாம்... வில்லன்களுக்கு எல்லாம் நாலு பகுதி எழுதிறீங்க, ஹீரோ வுக்கு இரண்டு பகுதி தானா? ///
    இல்லை சகா, இறுதி நாட்கள் கட்டுரை மட்டும் தான் இரண்டு பகுதி, அவரின் சுதந்திர போராட்டங்கள் தயாராகி வருகிறது. அது எப்படியும் 10 பகுதிகள் வரும்.

    ReplyDelete
  3. // நானும் எழுதுகிறேன் // என்று பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்து நிற்கும் உங்களின் திறன் மதிப்புக்கு உறியது.
    வீரர் நேதாஜி போன்றவர்கள் இன்று இல்லாவிடினும் அவரை படித்து அந்த நெஞ்சுரத்தை நாமும் பெறவேண்டும்.
    தொடர்ந்து எழுதுங்கள்.நிச்சயம் இது குறித்து நீங்கள் பெருமை கொள்ளலாம்.

    ReplyDelete
  4. <<< கக்கு - மாணிக்கம் said...

    // நானும் எழுதுகிறேன் // என்று பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்து நிற்கும் உங்களின் திறன் மதிப்புக்கு உறியது.
    வீரர் நேதாஜி போன்றவர்கள் இன்று இல்லாவிடினும் அவரை படித்து அந்த நெஞ்சுரத்தை நாமும் பெறவேண்டும்.
    தொடர்ந்து எழுதுங்கள்.நிச்சயம் இது குறித்து நீங்கள் பெருமை கொள்ளலாம். >>>

    நன்றிண்ணே

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...