சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, December 13, 2011

காலத்தினால் கலர் மாறிய தமிழ் சினிமா வில்லன்கள் - இறுதி பாகம்

அன்பார்ந்த வலைப்பூ ரசிகர்களுக்கு,

"காதல்' லண்டன் திரைப்பட விழாவிலும், "ஆட்டோகிராஃப்' டொராண்டோ திரைப்பட விழாவிலும் பங்கேற்கும் தகுதியை அடைந்து, தமிழர்களின் நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்தன. அதிலும் "ஆட்டோகிராஃப்' முதல் காட்சியில் நாயகன் ஊரில் கால் அடி வைக்கும்போது ஞாபக அடுக்குகளிலிருந்து சரிந்து விழுவதாக காட்டப்படும் நூற்றுக்கணக்கான வாழ்க்கைத் துணுக்குகள் தமிழ் சினிமா அதுவரை காணாதது. மேலும், படத்தின் துவக்கத்தில் வரும் பள்ளி பருவ காதல் காட்சி உலக சினிமாவின் தரத்திற்கு மிகச் சரியான உதாரணம். இதனை தொடர்ந்து வந்த அடுத்தடுத்த பருவங்கள் அந்த தரத்திலிருந்து தன்னை குறைத்துகொண்டே வந்தன. என்றாலும் தமிழில் கடந்த பத்தாண்டுகளில் உலக தர மதிப்பீட்டில் முன்னணியில் இருக்கும் படமாக "ஆட்டோகிராஃப்' படத்தைதான் சொல்ல முடியும்.

அதேபோல "காதல்' படத்தில் கையாளப்பட்ட சில அரிதான நுட்பங்கள் அதன் நம்பகத்தன்மையையும், கலைதரத்தையும் கூட்டித் தந்திருந்தன. இறுதிக் காட்சியின் மிகைத்தன்மை மற்றும் செயற்கையான முடிவு ஆகியவை மட்டும் சரிசெய்யப்பட்டிருந்ததால் இதுவும் தமிழின் உன்னதத்தை உலக சினிமாவின் பட்டியலில் இடம் பெற வைத்திருக்கும். சேரனின் "தவமாய் தவமிருந்து' இதே வரிசையில் வந்திருந்த தரமான மற்றொரு திரைப்படம். கடின உழைப்பும், கலை நயமும் சிறப்பாக வடிவம் கொண்டிருந்த இப்படம் பொது அனுபவமாக மாறாமல் தனி மனித அனுபவமாக, அதாவது நாவல் வாசிப்பது போன்ற அனுபவத்தோடு தங்கிப் போனதால் "ஆட்டோகிராஃப்" அடைந்த உயரத்தை இப்படம் அடைய முடியாமல் போனது.

இனவரைவு படங்களின் வருகை!

இப்படி, "காதல்' உருவாக்கிய இனவரைவு வில்லன்கள் மெல்ல தமிழில் பல திரைப்படங்களில் பிரவேசிக்கத் துவங்கினர். இச்சமயத்தில் வெளியான பல சென்னை நகர் சார்ந்த குறிப்பாக வட சென்னையைப் பின்புலனாக கொண்ட பல படங்களில் இத்தகைய இனவரைவு வில்லன்கள் அதிகமாக தோற்றமளித்தனர். பலர் கழுத்துவரை நீளமாக முடியை வளர்த்துக் கொண்டு பயமுறுத்தினர். "காக்க காக்க' படத்தில் வில்லனாகத் தோன்றிய ஜீவன் இந்த ஃபேஷனைத் துவக்கினார். இப்படியாக முடியை இரண்டு பக்கமும் பரப்பிக் கொண்டு தோற்றமளிக்கும் வில்லன்களின் ஆதிக்கம் இன்றுவரை குறையவில்லை.

ஒரு கட்டத்தில் இனவரைவை அடிப்படையாகக் கொண்ட கமர்ஷியல் ஆக்ஷன் படங்கள் அதிகமாக வரத் துவங்கின. இதற்கு அப்போது சக்கை போடு போட்ட உலக சினிமாவான "சிட்டி ஆஃப் காட்' மூல காரணமாக இருந்து, நம் இயக்குநர்களை அதன் கவர்ச்சியில் வி வைத்தது. இதுபோன்ற படங்களில் குறிப்பிடத் தகுந்த படமாகவும் வடசென்னை வாழ்வின் ஒரு பகுதியாக "கானா' வை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்ற படம் "சித்திரம் பேசுதடி'. இதில் நானே ஒரு அங்கமாக இனவரைவு பாத்திரமாக நடிக்க நேர்ந்தது.

இப்படத்தில் வில்லன் ஒரு மண்டி வியாபாரியாக பேரம் பேசிக் கொண்டே தன் அடியாட்களுக்கு கட்டளையிடுவது வேடிக்கையாகவும், புதுமையாகவும் இருந்தது. இப்படியாக பல படங்கள் இக்காலத்தில் வந்தாலும் பிற்பாடு வந்த "பொல்லாதவன்' சென்னை இனவரைவியலைத் துல்லியமாக சித்தரித்த படமாக வெளியானது. ஆனால், இதில் வில்லன் ஆதிக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் அக்காலகட்டத்துக்கான புதிய மசாலாப் படமாக மாறிப்போனது விபத்து.

தொடர்ந்து வெளியான படங்களில் "பருத்திவீரன்', "வெயில்' போன்ற படங்கள் மட்டுமே மேற்சொன்ன "ஆட்டோகிராஃப்' மற்றும் "காதல்' திரைப்படத்திற்கு இணையான தாக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் உண்டாக்கின.

"பருத்திவீரன்' திரைப்படம் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் கத்ரினா புயல் என்றுதான் சொல்ல வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக தன் அசாத்திய புலமையை இயக்குநர் இத்திரைப்படத்தில் அழுத்த பதித்திருந்தார். இரண்டும் இனவரைவு படங்களாகவும் "காதல்' படத்தைத் தொடர்ந்து மதுரை சார்ந்த இனவரைவு படங்களின் நீட்சியாகவும் இருந்தன. இரண்டு படங்களிலும் தென்பகுதி மக்களின் வாழ்வு உள்ளும் புறமுமாக தோலுரிக்கப்பட்டது. "வெயில்' திரைப்படம் மனித வாழ்வின் அவலம் ஆன்ம விசாரமாக ஒரு இலக்கியத் தகுதியுடன் படைப்பாக்கம் பெற்றிருந்தது. ஒழுங்கிற்குள் கட்டமைக்கப்படாத திரைக்கதை அதன் குறையாகிப்போனது. அதேபோல "பருத்திவீரன்' தமிழின் மிகச்சிறந்த காட்சிபடுத்துதலை தக்கவைத்துக் கொண்டிருப்பினும் அதன் உள்ளடக்கம் வணிக ரசனையைச் சார்ந்தே இயக்கம் கொண்டிருந்த காரணத்தாலும் பிற்போக்கு தனத்தை ஆதரிக்கும் இறுதிக் காட்சியின் வன்முறை காரணமாகவும் உலகத்தர மதிப்பீட்டை இதனால் எட்ட முடியாமல் போனது. ஆனாலும் "வெயில்' கேன்ஸ் திரைப்பட விழாவிலும் மற்றும் "பருத்திவீரன்' ஜெர்மன திரைப்பட விழாவிலும் கலந்து தமிழர்களுக்கு பெருமையை ஈட்டிதந்தன.

இந்த நான்கு படங்களுடன் இக்கால கட்டத்தில், "சென்னை 28', "மொழி', "சுப்ரமணியபுரம்', "பூ', "வெண்ணிலா கபடிக்குழு', "பசங்க', "நாடோடிகள்' போன்ற படங்கள் இதே வரிசையில் தொடர்ந்து வெளியாகி, வெற்றி பெற்று வருவதும் வணிகத் திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதும் குறிப்பிடத் தகுந்தது. மேற்சொன்ன படங்களில் "சுப்ரமணியபுரம்' படம் மட்டுமே வில்லனை தக்கவைத்துக் கொண்டிருந்தது. ஏற்கெனவே இருந்த சென்னை இனவரைவு, மதுரை இனவரைவு ஆகிய இருகூறுகளுடன் "வெண்ணிலா கபடிக்குழு', "பசங்க' போன்றவை தமிழகத்தின் வன்முறை இல்லாத இதர சிறு நிலப்பரப்புகளை பின்புலனாகக் கொண்டு வெளியாகி இருந்தன.

என்னதான் நல்ல படமாக இருந்தாலும் வில்லனை தக்கவைக்கும்போது அந்தப் படம் தவிர்க்க முடியாமல் வன்முறை சார்ந்து இயங்க நேரிடுவதையும் யதார்த்தம் இழப்பதையும் நம்மால் உணர முடிகிறது.

இனவரைவு படங்களின் காரணமாக குறிப்பிட்ட பகுதி மக்களின் கலாச்சாரம் பொதுத் தன்மைக்குள் ஊடுருவுவது வரவேற்கத் தகுந்ததாகவும் பன்னாட்டு தொழில் முதலீடுகளின் காரணமாக மாறி வரும் கலாச்சார மாண்புகளுக்கு தக்க பதிலடியாகவும் இயங்கி வருவது ஒரு வரவேற்கத்தக்க விஷயமே! ஆனாலும் இதுபோன்ற படங்களில் கதாநாயகர்களாக சித்தரிக்கப்படும் லும்பர்கள் பராகிரமசாலிகளாகவும் பெண்களை தங்களது மோசமான வசனங்களால் இழிவுப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இளைஞர்களின் கைதட்டலையும் அதன் மூலம் கல்லா கட்டலையும் குறிவைத்து தரமான பின்புலத்துடன் உண்டாக்கப்படும் இது போன்ற திரைப்படங்களால் சமூகம் பெருத்த சீரழிவுக்கே அழைத்து செல்லபடுகின்றன. பெண்களை கொச்சைப்படுத்தும் ஒரு படம் அது. எத்தனை தரமாக எடுக்கப்பட்டிருந்தாலும் மோசமான படமே. மதுரை இனவரைவு சார்ந்து எடுக்கப்பட்ட பல படங்கள் தொழில் நுட்பத்தில் என்னதான் சிறந்து விளங்கினாலும் வன்முறை மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் செயல்களில் அதிகமாக ஈடுபடுவதும் பிற்போக்கான கருத்துகளை ஆதரித்து வருவதும் வருந்தத் தக்கதாகவே இருக்கிறது.

பொதுவாக இக்கட்டுரையை காலம்தோறும் நிகழ்ந்துவரும் வில்லன்களின் மாறுபாட்டை தான் எழுத நினைத்தேன். ஆனால் தவிர்க்கவே முடியாமல் 2000-க்குப் பிறகான சினிமாக்களை அலசும் விதமாக மாறிப்போய்விட்டது. இப்படியெல்லாம் எழுதுவதால் இது ஏதோ வில்லன்களை ஒழித்துக்கட்ட நடக்கும் சதியாக யாரும் கருத வேண்டாம். இது ஒரு பார்வை அவ்வளவே. அதற்காக நான் சொல்வது மட்டுமே வேதவாக்கும் அல்ல!

ஆரூர் முனா செந்திலு



2 comments:

  1. innum nee indha villana vidalayaa? ishhh appaa!!

    ReplyDelete
  2. ஏன் அதுக்குள்ள முடிச்சிட்டீங்க?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...