சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Sunday, December 25, 2011

வ.சோ.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.

நான் படித்த பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.எனது போதி மரம். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன். கல்வியாண்டு 1990 - 1997 வரை. திருவாரூரில் கமலாலயம் தென்கரையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் ஆண்டுகாலம் நூறாண்டுக்கும் மேல். பள்ளி துவங்கிய போது பள்ளியின் பெயர் போர்டு ஹை ஸ்கூல். எனது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், முரசொலி மாறன் ஆகியோர். மற்றபடி சொல்லிக்கொள்வது போல் நான் தான் (போதும்டா உன் சுயபுராணம், ஸ்கூலைப் பத்தி மட்டும் சொல்லு).

எனக்கு வீடு வடக்கு வீதியில் இருந்தது. அங்கிருந்து வெட்டவாசப்படி வழியாக பெரிய கோயிலின் உள் நுழைந்து கமலாம்பாள் சன்னதி வழியாக மேலவீதி நுழைவாயிலின் வழியாக வெளி வந்து கமலாலய படிக்கட்டின் வழியாக நடந்து சென்று முராசன்ஸ் பிள்ளையார் சன்னதியில் மேல் ஏறி பள்ளிக்கு செல்வோம். ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் இது நடந்தது. எட்டாம் வகுப்பு தொடங்கியதும் என் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அதன் பள்ளி இறுதி வகுப்பு முடியும் வரை சைக்கிள் பயணம் தான். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியர் திரு. மகாதேவன் அவர்கள். அவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு அது மணியடிக்கும் முன் வரும் மகாதேவன். அதாவது பள்ளி துவங்கும் நேரம் காலை மணி 10, ஆனால் அவர் 9.30 மணிக்கே வகுப்புக்கு வந்து பாடம் எடுப்பார். பள்ளி மைதானத்தில் பே பே, கிரிக்கெட் மட்டும் தான் விளையாட முடியும். மற்ற பள்ளிகளுக்குரிய எந்த விளையாட்டுகளும் அதாவது வாலிபால், பேஸ்கட் பால் மற்றும் எந்த விளையாட்டுகளும் எங்களுக்கு கி்டையாது. பெரிய கோயிலின் வெளி பிரகாரத்தில் தான் பள்ளி இல்லாத நாட்களில் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த வயதிற்குரிய குறும்பு அவ்வளவே.

ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்புகளில் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் P.G. சுப்பிரமணியன், அந்த காலக்கட்டம் தான் பெண்கள் பற்றிய ஈர்ப்புகளும் அவர்களைப் பற்றிய ரகசிய பேச்சுகளும் துவங்கிய காலம், சைட் அடிப்பதில் துவங்கி பலான புத்தகம் படிப்பது வரை அறிந்து கொண்ட காலம். அப்பொழுது செங்கம் தியேட்டரில் ஜாக்கிசானின் ஆபரேசன் காண்டர் என்றொரு படம் வந்தது. அந்தப்படத்தில் ஒரு நொடிக்காட்சியில் ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் காண்பிக்கிறார்கள் என்று முதல் நாள் தனது அண்ணனுடன் சென்று பார்த்து வந்த சேத்தமடையான் சொன்னான். பிறகென்ன வகுப்பில் இருந்த தினேஷ், பிரகாஷ் மற்றும் நான் ஆகியோர் ஒரு திட்டமிட்டோம்.

முதல் முறையாக ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் திரையில் பார்க்க ஆசைப்பட்டதால் வந்த வினை இது. அப்பொழுது 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்ததால் காலையில் பள்ளி விடுமுறை, மதியம் மட்டுமே பள்ளி உண்டு. மறுநாள் வீட்டில் காலை எங்கள் டியூசன் ஆசிரியரின் வீட்டில் ஆண்டு விழாவுக்காக பெஞ்சு நகர்த்த வேண்டியிருக்கிறது. அதனால் நான் டியூசன் சென்று அதனை முடித்து விட்டு 1மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்கிறேன் என்று என் அம்மாவிடம் கூறி விட்டு நாங்கள் மூவரும் சினிமாவுக்கு 11மணி காட்சிக்கு சென்று விட்டோம். படம் துவங்கியவுடன் கரண்ட் போய் விட்டது. அந்த தியேட்டரில் ஜெனரேட்டர் கிடையாது. வேறு வழி அந்த சீனை பார்த்தே ஆக வேண்டுமென்று தியேட்டரிலேயே அமர்ந்திருந்தோம். 12.30 க்கு தான் கரண்ட் வந்தது. அந்த சீன் வரும் வரை போக கூடாது என்று முடிவு செய்து அமர்ந்து விட்டோம். படம் முடியும் போது மணி 2. வீட்டிற்கு வந்தால் அம்மா மட்டும் தான் இருந்தார். உள்ளே சென்றதும் முதல் பளார் விழுந்தது, எங்க பொறுக்கிட்டு வந்த என்றார். என்னம்மா ஆச்சு என்றேன். இரண்டாவது பளார். ரைட்டு எஸ்கேப்பாகனும் என்று நினைத்து பள்ளிக்கு நேரமாகி விட்டது கிளம்பனும் என்று கிளம்பி விட்டேன். பள்ளிக்கு சென்றால் என் வகுப்பாசிரியர் வகுப்பில் அழுது கொண்டிருந்தார். நான் உள்ளே சென்றதும் நான் உன்னை என் வீட்டிற்கு வர சொன்னேனா என்றார். இல்லை என்று சொல்வதற்கு முன் அவரிமிருந்து பளார் விழுந்தது. அவ்வளவு தான் அரைமணிநேரத்திற்கு என்னை சாத்திவிட்டார். எனது பெஞ்ச்சை பார்த்தேன் என்னுடன் படம் பார்த்த தினேஷூம் பிரகாஷூம் சிரித்து கொண்டிருந்தனர். அன்று முழுவதும் என்னை முட்டி போட சொல்லி விட்டார். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. என் அம்மா எதற்கு அடித்தார். வகுப்பாசிரியர் எதற்கு அடித்தார். என்னுடன் படம் பார்தத இருவரும் எப்படி தப்பித்தனர். மாலை வரை முட்டி போட்டு அமர்ந்திருந்தேன். மண்டைக்குள் குடைந்தது காரணம் என்ன என்று. பள்ளி முடிந்ததும் வெளியில் வந்து வகுப்பாசிரியரின் பக்கத்து வீட்டுக்காரனும் என் வகுப்பு தோழனுமான ராமலிங்கத்திடம் கேட்டேன். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. நான் அம்மாவிடம் 1மணிக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தியேட்டரில் அமர்ந்திருந்ததால் போகவில்லை. 01.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து சாப்பிட வந்த என் அப்பாவிடம் அம்மா என்னைக் காணும் என்று சொல்லி அழ அப்பா என் ஆசிரியரின் வீட்டிற்கு 10 பேருடன் சென்று என் செய்தாய் என் மகனை என்று மிரட்டியிருக்கிறார். பயந்து போன ஆசிரியர் தான் அழைக்கவேயில்லை என்பதை சொல்லியிருக்கிறார். அத்துடன் என் அப்பா அலுவலகம் சென்று விட்டிருக்கிறார். இதுவரை இருவரிடம் வாங்கியாகிவிட்டது. அடுத்தது அப்பா தான். ஆனால் அவர் காட்டுத்தனமாக அடிப்பாரே என்று பயம் வேறு. சாயந்திரம் முழுவதும் பயந்து கொண்டே வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். என் அப்பா வந்தார்...

ஆரூர் முனா செந்திலு


10 comments:

  1. அருமை.

    கலைஞர் மன உறுதியைப் பெற்ற இடம் கமலாலயக் குளம் தானே.
    தென்னன் குறித்து அடுத்த பதிவில் வரும் என நம்புகிறேன்

    ReplyDelete
  2. Thodar kathai maathiri suspensaa poguthu !!

    ReplyDelete
  3. //வருகைக்கு நன்றி. விருந்தினராக வந்தால் நீங்க வீரன். பின்னூட்டமிட்டால் நீங்க மனுஷன்//

    அப்ப வீரன் மனுஷனே இல்லையா???

    ReplyDelete
  4. பதிவுலக 'கலைஞர்' வாழ்க. சரியான காமடி. அப்பா வந்தார்...கட் பண்ணிட்டீங்களே.

    ReplyDelete
  5. /// ! சிவகுமார் ! said...

    பதிவுலக 'கலைஞர்' வாழ்க. சரியான காமடி. அப்பா வந்தார்...கட் பண்ணிட்டீங்களே. ///

    இல்லை சிவா, அதன் டிராஜிடி எனக்கு தான் தெரியும் அடுத்த பகுதியில் ஒரு சஸ்பென்ஸாக வைக்கலாமேன்னு தான்.

    ReplyDelete
  6. /// மோகன் குமார் said...

    Thodar kathai maathiri suspensaa poguthu ! ///

    ஆமாண்ணே, ஏழு வருட கதையல்லவா அதன் இரண்டு பகுதியாக போடலாம்னு.

    ReplyDelete
  7. என்ன சார்! அடுத்தப் பதிவைப் பார்க்க ஆவல் ஏற்படுத்தி விட்டீர்களே! நன்றி!

    ReplyDelete
  8. கலைஞர் படிச்ச ஸ்கூல்ல படிச்சிருக்கிறிங்க ஒத்துக்கிறேன்...நீங்களும் பெரிய ஆளுன்னு ஒத்துக்கிறேன்....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...