சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, October 28, 2011

குறட்டை விட்டால் என் மனைவி கிள்ளுறாப்பா


உலகத்தில் கஷ்டமான விசயம் என்று பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ரொம்ப சுகமான விசயம் என்றால் பலர் கூற தயாராக இருக்கிறார்கள். முக்கால்வாசி பேர் 'காலைக் கடன் ' கழிப்பதே சுகம் என்று கூறிக் கொண்டு அலைகிறார்கள். கஷ்டமான விசயம் என்னவென்று என்னை கேட்டால் , ஒரு குறட்டை விடுபவரின் அருகில் படுத்து உறங்குவதே என்பேன். இந்த உலக மகா கஷ்டத்தை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும் நான் சொல்வது உண்மையென்று.


எதுக்காக ஆண்டவன் இதை மனிதர்களுக்கு குடுத்தான் என்று தெரியவில்லை. என்னோடு சேர்ந்து இரண்டு பேருக்கு பக்கத்து கோயிலில் கதாகாலட்சேபம் செய்து கொண்டு இருந்த ஒரு பெரியவரிடம் இந்த சந்தேகத்தை கேட்டேன். 'ஆண்டவன் மனிதர்களுக்கு டேய் மானிடா நீயும் மிருகஙகளை போலதாண்டா. அதில் இருந்து வந்தவந்தாண்டா ' என்பதை புரிய வைக்க, இந்த தண்டனையை கொடுத்ததாகச் சொன்னார். ஆனால் அந்த தண்டனை அருகில் இருப்பவர்களுக்கு தானே என்று நான் அவரிடம் விவாதம் செய்யவில்லை. அவருக்கும் ஆண்டவனுக்கும் எந்த அளவு நெருக்கம் என்பது எனக்கு தெரியாததால் நான் அதை ஆட்சேபிக்கவில்லை.


ஆனால் எதுக்காக இது தோன்றியது என்பது வேறு விசயம். ஆனால் சில பேர் நல்ல தூக்கம் என்றாலே 'குறட்டை விட்டு தூங்குவதுதான் ' என்ற எண்ணத்துடன் அலைகிறார்கள். பல பேச்சு வழக்கங்களிலும் , ' ஊம் நல்ல சாப்பாடு ஆச்சு .... இனி குறட்டை விட்டு தூங்க வேண்டியது தான்... ' என்று குறட்டை விடாதவர்களும் கூறுவது இதற்கு காரணமாக இருக்கலாம். இதனால் பக்க விளைவு என்னவென்று பார்த்தீர்கள் என்றால் , குறட்டை விடாமல் தூங்குபவர்களுக்கு ஒரு கழிவிறக்கம் ஏற்பட்டதுதான். இவர்கள் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போதெல்லாம் , ' சே !! சுகமான ஜீவன்பா. என்னம்மா தூங்கறான் பாரு.. ' என்று ஒரு எண்ணம் தோன்றுவது தவிர்க்க முடியாதது.


என்னை பொறுத்தவரை , குறட்டை விடுபவர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். இதில் முதல் விதம் எப்படியென்றால் படுத்து சிறிது நேரம் கழித்து மெதுவாக குறட்டையை ஆரம்பிப்பார்கள். முதலில் எங்கயோ எலி குடைவது போல் சத்தம் கேட்கும். பிறகு மெதுவாக சத்தம் கூடி உச்சஸ்தாயில் இரண்டு கிரேன் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வேலை செய்வது போல் கர்ண கடூரமாக இருக்கும். இரண்டாவது விதம் எப்படி என்றால் படுத்து சில நிமிடங்களிலியே குறட்டை உச்சஸ்தாயில் ஆரம்பிக்கும். இவர்கள் அருகே படுப்பவர்கள்தான் அதி பாவமான ஜீவன்கள்.
சில சமயம் , பேருந்து அல்லது இரயிலில் நீங்கள் இரவு பயணம் செய்தீர்கள் ஆனால், அருகில் குறட்டை விடாத ஜீவன்கள் வந்து அமர வேண்டும் என்று தங்கள் குல தெய்வத்திடம் வேண்டிக் கொள்வது நல்லது. ஏன் என்றால் உங்களால் அவர் குறட்டை சத்தத்தை ஆராய்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. சிலர் தாங்க முடியாமல் ரயில் பயணங்களில் அபாய சங்கிலியை இழுத்து விடுவதும் உண்டு. இந்த நேரத்தில் உங்களை ஒரு விசயத்தில் எச்சரிக்க விரும்புகிறேன். 'சே என்ன பெரிய குறட்டை தொந்தரவு. விடரவனை எழுப்பிட்டா குறட்டை நிக்கப் போவுது. ' என்று விஷப் பரிட்சை செய்ய வேண்டாம். காரணம் இப்படி குறட்டை விடுபவரை எழுப்பினீர்கள் என்றால், முதலில் Vacuum cleaner ஐ அணைக்கும் போது ஏற்படுவது போல் ஒரு ஒலியை எழுப்பி விட்டு, அப்பாவியாக அந்த குறட்டை ஜீவன் முழித்துப் பார்க்கும். 'அய்யோ பாவம்.. இவரை போய் எழுப்பிட்டோமே !! ' என்ற எண்ணமே உங்களுக்கு ஏற்படும். மீண்டும் அவர் தூங்க ஆரம்பித்த பிறகு அவர் குறட்டை முன்னை விட அதி ஆத்திரமாக ஒலிக்க ஆரம்பிக்கும்.


ஆகவே இதை சமாளிக்க, இதை ரசிக்க ஆரம்பிப்பதே நல்லது. குறட்டை விடுபவர் ஒரு சங்கீத வித்வானாய் இருந்தாலோ, அல்லது கேட்கும் உங்களுக்கு சங்கீத ஞானம் இருந்தாலோ ரொம்ப நல்லது. சங்கீத வித்வான்கள் குறட்டை அருமையாக ஆரம்பிக்கும். மெதுவாக ஆரம்பித்து, சூடு பிடித்த பிறகு அருமையான ஆலாபனை நடைபெறும். வார்த்தகள் இல்லாமல் , 'ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ' என்று ஏதாவது ராகத்தை ஒரு பிடி பிடித்து விடுவார். இவர்களிடம் ஒரு நல்ல விசயம் என்னவென்றால், நடு நடுவே சில நிமிடங்கள் பக்க வாத்தியக்காரர்களுக்கு நேரம் ஒதுக்குவது போல் குறட்டை நிற்கும்.


பிறகு காலை வேளையில் அருமையாக மங்கலம் பாடி முடித்து விடுவார். இன்னும் சிலர் எப்படியென்றால் குறட்டையிலேயே பேசுவார். அவர் குறட்டை சத்தத்தின் ஸ்ருதி மாறுதல்களை வைத்தே என்ன கனவு காணுகிறார், அல்லது உங்களிடம் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். நான் சில வீடுகளில் கணவாிடம் இருந்து அவர் குறட்டை மூலமே பல ரகசியங்களை அறிந்து கொள்ளும் மனைவிகளையும் பார்த்து இருக்கிறேன்.


ஆனால் சில வீடுகளில் சிறிது அதிகமாகவே நடப்பதுண்டு. குறட்டையை நிறுத்துகிறேன் பேர்வழி என்று மல்லாந்து படுத்து தூங்கி கொண்டு இருப்பவரை சடாரென்று திருப்பி விடுவர் அருகில் தூங்குபவர், அதாவது மல்லாக்க படுத்தால் குறட்டை அதிகமாக வருமாம். பாவம் அந்த நபர், என்ன தாக்கியது என்று தெரியாமல், எழுந்து உட்கார்ந்து திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி முழித்துக் கொண்டு இருப்பார். ஏதாவது கெட்ட கனவு கண்டு விட்டோமோ என்று பயந்து வேறு போய் இருப்பார். இன்னும் சில வீடுகளில் குழந்தகள் செய்யும் சேஷ்டைகள் தாங்க முடியாது. என் நண்பர் வீட்டில் , அவர் குறட்டை விட்டு தூங்கும் போது அவர் சிறு பையன் பஞ்சால் மூக்கை அடைப்பது, இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டுவது போன்று பல ஆராய்ச்சிகளின் ஈடுபடுவான்.


சில சமயம் குறட்டை விடுபவர் மிகவும் நல்லவராக இருந்தால், நம் அருகே தூங்கச் செல்லும் முன் , 'ஸார், நான் தூக்கத்தில கொஞ்சம் குறட்டை விடுவேன் .. ' என்று அபாய அறிவிப்பு கொடுத்து விட்டு தூங்கச் செல்வார். அந்த 'கொஞ்சம் ' என்பது எவ்வளவு என்பது நமக்கு தெரியாததால், புஸ்வானத்திற்கு நெருப்பு வைக்கும் போது 'இது பொறி விடுமா.. அல்லது வெடிக்குமா !! ' என்ற பயம் மாதிரி, அவர் குறட்டை விட ஆரம்பிக்கும் வரை கண்கள் விரிய உட்கார வேண்டி வரும்.


ஆனால் குறட்டை சத்தம் அதிகமாக இருப்பதால் பல நல்ல உபயோகங்களும் உண்டுதான். உதாரணமாக, கல்யாண நேரத்தில், மூகூர்த்தம் அதிகாலையில் என்றால், இவர்களை திருமண மஹால் நடுவில் தூங்க வைத்து விட்டால் போதும். குறட்டை சத்தத்தில் சரியான நேரத்தில் யாவரும் எழுந்து விடுவர், ஏன் பலரால் தூங்க கூட முடியாது. அதே மாதிரி பரிட்சை நேரங்களில் பிள்ளைகளுக்கு இதை விட ஒரு நல்ல alarm கிடைக்கவே கிடைக்காது. ஒரு குறட்டை விடுபவரை பரிட்சை எழுதப்போகும் பிள்ளைக்கு அருகில் தூங்க விட்டால் போதும்.


குறட்டை விடாதவர்கள் கூட சில சமயம் குறட்டையில் தள்ளப் படுகிறார்கள். அதீத அலைச்சல், விளையாட்டு போன்றவற்றால் சில சமயம் குறட்டை விடாதவர்களும் குறட்டை விடலாம். ஆனால் இது இரண்டு மாதங்கள் வரும் சிறிய தொலைக்காட்சி தொடர் மாதிரி . அதிக தொந்தரவில்லை. என்றும் எங்கும் குறட்டை விடுபவர்களே நம் ஆயுள் முழுவதும் வரும் மெகா தொடர்.


பலரின் குறட்டை சத்தத்தில் நாம் காதை பொத்திக் கொண்டு தூங்கி விடலாம். ஆனால் சிலர் அதீத சத்தத்தில், DOLBY மற்றும் DTS எஃபக்ட்டில் குறட்டை சத்தத்தை உற்பத்தி செய்வர். இவர்கள் அருகில் தூங்குவது என்பது ஒரு பிரம்ம பிரயத்தனம்.


என்னடா இப்படி உளர்ரானே, பாதி தூக்கத்தில எந்தரிச்ச மாதிரின்னு உங்கள்ல யாராவது நினைச்சு இருந்தீங்கன்னா, அவர்கள் நோபல் பரிசு வாங்க என்னால் பரிந்துரைக்கப் படுகிறார்கள். (ஏய்.. யாரங்கே !!)


என்னடா தூக்கத்தில் இருந்து எழுந்தவனைப் போல் உளறுகிறானே என்று பார்க்கிறீர்களா, அது வேறொன்னுமில்லீங்கண்ணா என் குறட்டையின் காரணமாக என் மனைவி தூங்க முடியாமல் எழுந்து என்னை கிள்ளிவிட்டதனால் தீடீரென்று எழுந்தவனிடம் என் மனைவி புலம்பியதன் பாதி தொகுப்பே இது. முழுவதும் கேட்டால் நீங்கள் தூங்கப் போய் விடுவீர்கள். ஆவ்வ்வ் . . .(தூக்கம் வருதுங்க, நாளை சந்திப்போமா)

ஆரூர் முனா செந்திலு



6 comments:

  1. நல்லா தாங்க விடுறீங்க...
    நான் குறட்டைய சொன்னேன்

    ReplyDelete
  2. //
    கஷ்டமான விசயம் என்னவென்று என்னை கேட்டால் , ஒரு குறட்டை விடுபவரின் அருகில் படுத்து உறங்குவதே என்பேன்///

    ரொம்ப உண்மை

    ReplyDelete
  3. சத்தியமா சொல்றேன், சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது....................

    ReplyDelete
  4. என்னடா இப்படி உளர்ரானே, பாதி தூக்கத்தில எந்தரிச்ச மாதிரின்னு உங்கள்ல யாராவது நினைச்சு இருந்தீங்கன்னா, அவர்கள் நோபல் பரிசு வாங்க என்னால் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.//


    Nice....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...