சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, June 7, 2012

செம குளியல்

அம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இக்கிராமத்தில் தான் செலவழிப்போம். அம்மாவின் பிறந்த வீடு மிகப்பெரிய மண் வீடு. 1993ல் தான் அந்த வீட்டை இடித்து விட்டு பெரிய கல்வீடாக கட்டினார்கள்.
(என் அப்பாவுடன் நானும் தம்பிகளும்)

வீட்டில் என் தாய்மாமாக்கள் 4 பேர் அவர்களது குடும்பத்தினர், பெரியம்மா வீட்டினர், எங்கள் வீட்டினர் மற்றும் சித்தி வீட்டினர் அனைவரும் கோடை விடுமுறைக்கு வந்து விடுவோம். வீட்டின் எதிரில் தேவர்குளம் என்றொரு குளம் இருந்தது. நான், என் தம்பி மற்றும் என் சித்தி பசங்க இருவர் தான் ஒரு குழுவாக இருப்போம். காலை நேரக் குளியல் அங்கு தான்.

என் தாத்தா குளத்தில் இறங்கும் போது நாங்களும் இறங்கி விடுவோம். தாத்தா குளித்து விட்டு வயலுக்கு சென்று விடுவார். செல்லும் போது சீக்கிரம் எல்லோரும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என சொல்லி விட்டு வயலுக்கு செல்வார். நாங்கள் 11 மணி வரை சாப்பிடாமல் குளத்தில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீச்சலடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டே இருப்போம்.

வயலில் வேலை செய்பவர்களுக்கு டீ எடுத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வரும் தாத்தாவிடம் வீட்டில் உள்ளோர் நாங்கள் இன்னும் வரவில்லை என்பதை சொல்லிவிட குளத்திற்கு வந்து ரெண்டு சாத்து சாத்தி வீட்டிற்கு அழைத்து செல்வார். சில காலங்களுக்கு பிறகு குளம் மாசடைந்து விட்டதால் பிறகு அந்தக் குளத்தில் குளிப்பதேயில்லை.

திருவாரூரில் மிகப்பிரச்சித்திப் பெற்ற கமலாலயக் குளம் உள்ளது. திருவாரூரில் உள்ள பெரியவர்களில் பெரும்பாலானோர் தினமும் காலையில் அந்தக்குளத்தில் தான் குளிப்பர். இன்றும் கூட மகாலய அமாவாசை அன்று என் அப்பா மற்றும் அவரது நண்பர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக கமலாலயத்தில் குளித்து சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

எங்கள் வீட்டில் செவிட்டுப் பாட்டி ஒருவர் இருந்தார். அவர் என் அப்பாவுக்கு சொந்த அத்தை. எப்பொழுது திருவாரூருக்கு வந்தாலும் கமலாலயத்தில் தான் குளிப்பார். குளித்து விட்டு ஈரத்துணியுடன் நெற்றியில் பட்டை இட்டுக் கொண்டு முராசன்ஸ் பிள்ளையாரிடம் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென மனமுருகி வேண்டிக் கொண்ட பிறகு தான் வீடு திரும்புவார். அவருடன் நானும் கமலாலயத்திற்கு செல்வேன்.

கமலாலயத்தில் குளிப்பது புண்ணியம் என்பதையெல்லாம் தாண்டி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் காலத்தில் வெட்டப்பட்ட குளத்தில் குளிப்பது என்பதே பெருமை தானே. கமலாலயம் எங்கள் ஊரின் பெருமைக்குரிய மற்றுமொரு அடையாளம்.

எங்கள் நிலத்தில் உள்ள பம்புசெட்டில் குளிப்பது என்பது மற்றுமொரு இனிய அனுபவம். கோடை விடுமுறைகளில் மதிய வேளைகளில் நாங்கள் குளிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் தெற்கு பம்புசெட் தான். பம்புசெட்டில் விசாலமான தொட்டியிருக்கும். என் அம்மா, பெரியம்மா, சித்தி மற்றும் மாமிகள் அனைவரும் குளிப்பதற்கு கிளம்பும் முன் எனக்கும் என் சகோதரர்களுக்கும் எண்ணெய் தேய்த்து அனுப்பி விடுவர்.

நாங்கள் முன்பே சென்று குளித்துக் கொண்டிருப்போம். ஒரு மணிநேரம் கழித்து வரும் அம்மா சீயக்காயுடன் கரிசலாங்கண்ணியையும் சேர்த்து தேய்த்து விடுவார். என்ன ஒரு பரிபூரணத்துவக் குளியல். வாரம் ஒருமுறை இந்தக்குளியல் உண்டு. குளித்து விட்டு வந்து சாப்பிட்டால் ஏழு மணிக்கெல்லாம் தூக்கம் கண்ணை சொக்கும். இன்று குடும்பங்கள் எல்லாம் பிரிந்து போய் விட்டன. இனியொரு முறை அது போன்ற ஒரு குளியல் கிடைக்குமா என்பது சந்தேகமே.

இவ்வளவு சொல்லி விட்டு தஞ்சாவூர்க்காரன் காவிரியாற்றுக் குளியல் பற்றி சொல்லாவிட்டால் நன்றாக இருக்குமா. திருவாரூரில் காவிரியின் கிளையாறான ஒடம்போக்கியாறு ஒடுகிறது. இதில் ஜூன் முதல் தை மாதம் வரை தான் தண்ணீர் செல்லும் மற்ற நேரங்களில் எல்லாம் இது தான் கிரிக்கெட் கிரவுண்ட். பத்தாவதுக்கு பிறகு வேலைக்கு சேரும்வரை ஒடம்போக்கி ஆற்றில் தான் குளிப்பேன்.

இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வது தான் என்னுடன் குளிக்கும் நண்பர்களிடையேயான போட்டி. அப்பொழுது ஸ்டாமினா இருந்ததால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வது எல்லாம் சாதாரண விஷயம். இப்பொழுது எல்லாம் ரெண்டு முங்கு முங்கினாலே மூச்சிரைக்கும். எல்லாம் நெப்போலியனின் சாபம்.

பட்டயப்படிப்புக்காக சென்னை வந்த பிறகு பாத்ரூம் குளியல் தான். அதுவும் 1999 காலத்தில் வில்லிவாக்கத்தில் மெட்ரோ வாட்டர் வீட்டு பம்புகளில் வருவது நின்று விட்டது. லாரிகளில் அடித்துப் பிடித்து தண்ணீர் வாங்கி வந்து குளிப்பது தான் அந்தக் காலங்களின் ஸ்டைல். அதிலும் நான் இருந்தது பாச்சிலர் ரூமில்.

நான் இருந்த தெருவுக்குள் மிகுந்த டீசண்ட்டாக அதுவரை நடந்து கொண்டிருந்த நான் தண்ணீர் பிடிக்கும் போட்டியில் எதிர் வீட்டு ஆண்ட்டி, அடுத்த வீட்டு அக்காவையெல்லாம் தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டைப் போட்டு அந்த அக்காவின் ஏச்சுப் பேச்சுகளையெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டு கிடைக்கும் ஒரு பக்கெட் தண்ணீரில் கழிவறைக்கு கால் பக்கெட், குளிக்க முக்கால் பக்கெட் என இருந்ததெல்லாம் காலத்தின் கோலம்.

ஆரூர் மூனா செந்தில்


17 comments:

 1. குடும்பத்தினர் பிறிவு தாங்கா துயரம் என்ன செய்வது அது கடவுளிடம் நாம் செய்து கொண்ட முன்ஜென்ம ஒப்பந்தம். யார் Brother அந்த நெப்போலியன் தங்கள் அப்ரன்டிஸ் ஃப்ரண்டா. தங்களுடய குழந்தய் பருவம் என்னுடைய குழந்தய் பருவத்தைவிட சுகமானதாய் தோண்றுகிறது . தங்களின் படைப்பு அனைத்தும் என் பழய ஞாபகத்தை தூண்டுகிறது. மிக்க நன்றி

  ReplyDelete
 2. நாட்பட நாட்பட உங்கள் பதிவுகள் மெருகேறி வருகின்றன. அனுபவம் சார்ந்த பதிவுகள், அதில் பிரயோகிக்கப்படும் யதார்த்த சொற்கள்...சிறப்பு. நண்பர் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் ஆரூர் முனா!!

  ReplyDelete
 3. பொதுவாக நள்ளிரவு நேரங்களில் மேலோட்டமாய் பதிவுகளை பார்த்துவிட்டு பிடித்த பதிவுகளை நோட் செய்து பகலில் படிப்பது வழக்கம். (ஆர்.வி.எஸ்., கேபிள் மட்டும் விதிவிலக்கு). இவ்விரவு இந்த முழுப்பதிவையும் படிக்க வைத்து விட்டீர். கங்க்ராட்ஸ். தொடர்க!!

  ReplyDelete
 4. /// NAAI-NAKKS said...

  ஹும்....... ///

  ஒன்னியும் விளங்கல.

  ReplyDelete
 5. /// SNEHANASHOK said...

  குடும்பத்தினர் பிறிவு தாங்கா துயரம் என்ன செய்வது அது கடவுளிடம் நாம் செய்து கொண்ட முன்ஜென்ம ஒப்பந்தம். யார் Brother அந்த நெப்போலியன் தங்கள் அப்ரன்டிஸ் ஃப்ரண்டா. தங்களுடய குழந்தய் பருவம் என்னுடைய குழந்தய் பருவத்தைவிட சுகமானதாய் தோண்றுகிறது . தங்களின் படைப்பு அனைத்தும் என் பழய ஞாபகத்தை தூண்டுகிறது. மிக்க நன்றி ///

  அய்யோ தம்பி, நெப்போலியன் யார் என்று தெரியாத அளவுக்கு சின்னப்பையனா நீ. சினேகா கேட்டா வருத்தப்படும்ப்பா. சரக்கில் எத்தனை வகையுண்டு என்பதை கத்துக்கோ.

  ReplyDelete
 6. /// ! சிவகுமார் ! said...
  நாட்பட நாட்பட உங்கள் பதிவுகள் மெருகேறி வருகின்றன. அனுபவம் சார்ந்த பதிவுகள், அதில் பிரயோகிக்கப்படும் யதார்த்த சொற்கள்...சிறப்பு. நண்பர் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் ஆரூர் முனா!! ///

  மிக்க மிக்க மிக்க நன்றி சிவா.

  ReplyDelete
 7. /// ! சிவகுமார் ! said...
  பொதுவாக நள்ளிரவு நேரங்களில் மேலோட்டமாய் பதிவுகளை பார்த்துவிட்டு பிடித்த பதிவுகளை நோட் செய்து பகலில் படிப்பது வழக்கம். (ஆர்.வி.எஸ்., கேபிள் மட்டும் விதிவிலக்கு). இவ்விரவு இந்த முழுப்பதிவையும் படிக்க வைத்து விட்டீர். கங்க்ராட்ஸ். தொடர்க!! ///

  நண்பன் என்பதினாலேயே நீங்கள் என்னை அதிகம் பாராட்டுதாக தெரிகிறது. இருந்தாலும் அவையடக்கத்துடன் நன்றி. இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் சிவா.

  ReplyDelete
 8. ஆறு...குளத்தில் குளிச்சு பல நாளாச்சு ஏங்க வைத்த பதிவு...!

  ReplyDelete
 9. போட்டோ ல உங்கள மாதிரி குண்டா யாருமே இல்லியே...

  ReplyDelete
 10. ஊரின் நினைவுகளுக்குள் அழைத்துச் சென்று இல்லை இல்லை இருப்பது சென்னை தான் என்பதை உணர்த்தும் படி பதிவை முடித்துள்ளீர்கள் .

  ReplyDelete
 11. Your posts are not coming in Dashboard. Do not know why. I am seeing ur posts in Tamilmanam and coming inside.

  ReplyDelete
 12. /// வீடு சுரேஸ்குமார் said...

  ஆறு...குளத்தில் குளிச்சு பல நாளாச்சு ஏங்க வைத்த பதிவு...! ///

  நன்றி சுரேஷ்

  ReplyDelete
 13. /// கோவை நேரம் said...

  போட்டோ ல உங்கள மாதிரி குண்டா யாருமே இல்லியே... ///

  நல்லா பாருங்க ஜீவா, பசங்களிலேயே உசரமா நிக்கிரது நான் தான். உடம்பு 12 வயதிற்கு மேல் தான் ஏறியது.

  ReplyDelete
 14. /// Sasi Kala said...

  ஊரின் நினைவுகளுக்குள் அழைத்துச் சென்று இல்லை இல்லை இருப்பது சென்னை தான் என்பதை உணர்த்தும் படி பதிவை முடித்துள்ளீர்கள் . ///

  நன்றி சசிகலா

  ReplyDelete
 15. /// மோகன் குமார் said...

  Your posts are not coming in Dashboard. Do not know why. I am seeing ur posts in Tamilmanam and coming inside. ///

  என்னான்னு தெரியலையே அண்ணா, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க மாத்திடுறேன்.

  ReplyDelete
 16. இந்த பதிவும் படித்து இருக்கேன்ங்க.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...