சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, February 29, 2012

ஸ்பானிய பெண்ணுடன் 15 நாட்கள் நான்...



சத்தியமா பொய் சொல்லலீங்க. ஆனா அதுக்காக இது கில்மாவும் இல்லைங்க. நான் 2006ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான ஒரு தனியார் நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். அந்த ஆண்டு சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக அரசு டெண்டர் வெளியிட்டது. அந்த டெண்டரின் கட்டுப்பாடுகளில் ஒன்றாக ஏற்கனவே இது போன்ற கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செய்திருக்க வேண்டும் என்று இருந்தது.

எங்கள் நிறுவனத்திற்கு அதற்கு முன் அது போன்ற வேலைகளில் முன் அனுபவம் இல்லாததால் அதற்குரிய அனுபவம் ஏற்கனவே பெற்றிருந்த ஒரு ஸ்பெயின் கம்பெனியுடன் ஜாயின்ட் வென்ச்சர் போட்டு இந்த டெண்டரை பெற எங்கள் கம்பெனி முனைந்தது. டெண்டர் போட்டு அந்த புராஜெக்ட் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது.

புராஜெக்ட் கிடைத்ததும் Project Analysis Report தயார் செய்வதற்காக அந்த ஸ்பெயின் நிறுவனத்தின் Planning Head ஆக இருந்த அலெக்ஸான்ரியா செ கார்லெ என்பவர் சென்னை வந்தார். எங்கள் பாஸ் என்னை அந்த அம்மிணிக்கு Co-Ordinator ஆக என்னை நியமித்தார். அதன் பணி என்னவென்றால் அந்த அம்மிணி சென்னை வந்ததும் விமான நிலையத்தில் வரவேற்பது முதல் அந்த அம்மிணி Prepare செய்யும் Project Analysis Report ஐ முடித்து திரும்பி அனுப்பி வைப்பது வரை நான் உடனிருக்க வேண்டும்.

ஆஹா நமக்குள் கற்பனை பறக்கிறது. அவளுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்வது முதல் வரும் அம்மிணி நன்றாக இருந்தால் பிக்அப் செய்து ஸ்பெயினில் செட்டிலாகி விட வேண்டும் என்பது வரை யோசித்து பார்த்து விட்டேன். நம்மால் முடிந்தது யோசிக்க மட்டும் தானே. அந்த நாளும வந்தது. விமான நிலையத்தில் காத்திருந்தேன். சில மணித்துளிகளுக்கு பிறகு அவர் வந்தார். அடடடா என்னா கலரு என்னா பிகரு. பார்த்ததும் கொஞ்ச நேரம் மெய்மறந்து நின்றேன். மிகக்கொஞ்ச நேரமே. என்னிடம் வந்து ஆர் யூ மிஸ்டர் செந்தில் என்றாள். ஆஹா என்ன குரல். குயில் ஆங்கிலத்தை ஸ்டெயிலாக பயன்படுத்தியது போல் இருந்தது.

கொஞ்சம் நில்லுங்கள். ஒவர் பில்ட் அப்பாக இருக்குது. ஜொள்ளு கதையா இது என்று நினைக்க வேண்டாம். அந்த அம்மிணியை பற்றிய நல்ல நினைப்பெல்லாம் சில மணிநேரங்களுக்கு மட்டுமே. அதன் பிறகு நடந்ததெல்லாம் டெரர் தான்.

வந்து காருக்குள் நுழைந்ததும் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். டமால் டுஸ் டகீர். என்னடா புரியாத சப்தம் என்று பார்க்காதீர்கள். என் இதயம் வாய் வழியாக வெளி வந்து உடைந்து நொறுங்கி விட்டிருந்தது. என் எதிர்பார்ப்பெல்லாம் காலி.

அவர் வருதற்கு முதல் நாள் இரவு ஒரு அழகான வெள்ளைக்காரப் பெண் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "அத்தான் காபி சாப்பிடுங்க".

நல்ல கனவு, கனவுடனே சென்று விட்டது. அந்த சமயத்தில் என் கற்பனையில் அதே பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "மச்சி நெருப்பு இருக்கா".

கல்யாண கனவு கலைந்து சும்மா குஜாலுக்காவது முயற்சி பண்ணுவோமே, எதிர்பார்ப்பு அடுத்த கட்டமாக இறங்கி வந்தது. அவர் வந்து என் நிறுவனத்தின் மேலதிகாரிகளை சந்தித்த பின் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட கெஸ்ட் அவுஸில் தங்க வைக்க அழைத்து சென்றேன். இரண்டு நாள் ஒய்வு தேவை, டிரைவர் மட்டும் போதும், இரண்டு நாள் கழித்து பணியை துவங்குவோம் என்றார். நான் எங்கள் டிரைவர் அண்ணாதுரையை விட்டு விட்டு சென்றேன். நாமும் உடனடியாக முயற்சித்து விடக்கூடாது பொறுமை காக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

இரண்டு நாள் கழித்து காலையில் அவரை அழைக்க சென்றேன். காலையிலேயே வின்டெஜ் கட்டிங் அடித்துக் கொண்டிருந்தார். மிச்சமிருந்த நம்பிக்கையும் கரைந்து ஒடி விட்டது. இனிமேல் இவரை ஒண்ணும் பண்ண முடியாது. நமக்கு நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள குக்கிராமங்களில் இருந்து மாமா இது தான் அண்ணா சமாதியா என்று கேட்டு வியக்கும பெண்ணே சிறந்தது என்று முடிவு செய்து விட்டேன்.

மீதமிருந்த நாட்களும் எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல் சென்றது. ஒரு நாளைக்கு 3 பாக்கெட் தம்மடிப்பார். ஒரு புல் பாட்டில் அடிப்பார். ஆனால் ஆள் போதையில் இருப்பது போலவே தெரியாது. நானெல்லாம் ஆப் தாண்டிவிட்டால் நடுரோட்டில் குட்டிக்கரணம் அடிப்பேன். நாம இன்னும் வளரணும் என்பது மட்டும் தெரிந்தது.

இதையெல்லாம் விடுங்க. எங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்கு நடந்தது என்பதை சொன்னால் நான் ஜோக்கராகி விடுவேன். தமிழோடு கலந்து பேசும் தமிங்கிலீஷ் தெரியும், மலையாளி பேசும் மங்கிலீஷ் தெரியும், அது போலவே தெங்கிலீஷ், ஹிங்கிலீஷ் எல்லாம் கேட்டு விட்டேன். எனவே நான் மிகப்பெரிய இங்கிலீஷ்மேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் வந்து பேசிய இங்கிலீஷ் இருக்கே அப்பப்பப்பா, அது ஸ்பெங்கிலீஷ். இங்கிலாந்துகாரன் பேசும் இங்கிலீஷே புரியாது ஸ்பெயினை தாய்மொழியாக கொண்டவள் பேசும் இங்கிலீஷ் எப்படியிருக்கும். அவள் பேசுவதை கேட்டால் விவேகானந்தா கல்வி நிலையத்தின் ஓனரே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒடுவார். நானெல்லாம் எம்மாத்திரம். சிக்கிட்டேன். பேசிப்பேசியே என்னை சிதைச்சிட்டார்.

கெஸ்ட் அவுஸ் சர்வீஸ் பையனிடம் இவர் ஒன்று கேட்க அவன் என்னைப் பார்க்க நான் ஒன்று சொல்ல அவன் வந்து கொடுத்த பிறகு தான் தெரியும் அவர் கேட்டது வேறு என்று. பலமுறை நடந்த இந்த கூத்தை என் பாஸ் ஒரு முறை பார்த்து விட்டார். பிறகென்ன என்னை கிழிகிழி என்று கிழித்து விட்டார். வெக்கம், மானத்தை விட்டு எப்படியெல்லாம் வேலைப் பார்க்க வேண்டியிருக்கு. துடைச்சிக்கிட்டு வந்துட்டேன்.

ஒரு வழியாக அவர் கேட்ட பொருட்களின் ரேட்களை எல்லாம் நான் மார்க்கெட்டில் விசாரித்து கொடுக்க ஒரு வழியாக புராஜெக்ட் ரெடி செய்து விட்டு புறப்பட்டார். ஏர்ப்போர்ட்டில் வழியனுப்பும் போது தாங்க்யூ பார் எவரிதிங் என்று சொல்லி ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்து விட்டு புறப்பட்டார். கடைசி வரையில் என்னன்னமோ எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு கிடைத்தது சிகரெட் வாசத்துடன் கூடிய ஒரு உதட்டு முத்தம் தான். நல்லவேளை தப்பித்தேன்.

அன்றிரவு மீண்டும் கனவு அதே வெள்ளைக்காரப் பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் கேட்டாள் "மச்சி நெருப்பு இருக்கா".

அன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு தினமும் மட்டையாகும் அளவுக்கு சரக்கடிக்காமல் நான் தூங்கியதில்லை.

ஆரூர் மூனா செந்தில்

Saturday, February 25, 2012

விமான விபத்து - மோகன் குமாரமங்கலம் கடைசி நாள்...


31.5.1973ந்தேதி இரவு 7.35 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு `இந்தியன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் போயிங் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 58 பயணிகள், 7 சிப்பந்திகள் ஆக 65 பேர் இருந்தார்கள். இரவு 9.52 மணிக்கு அந்த விமானம் டெல்லி சென்று இறங்கவேண்டும். அதற்கு 30 நிமிடத்துக்கு முன்பாக விமான நிலையத்துடன் விமானத்துக்கு இருந்த ரேடியோ திடீர் என்று துண்டிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் விமானம் தெற்கு டெல்லியில் "வசந்த் விகார்" என்ற இடத்தில் எரிந்து விழுந்து நொறுங்கியது. தூள் தூளாக விமானம் சிதறியது. விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் மத்திய மந்திரி மோகன் குமாரமங்கலம், கோவையைச் சேர்ந்த வ.கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாலதண்டாயுதம் ஆகியோரும் பயணம் செய்தார்கள்.

மோகன் குமாரமங்கலம், பால தண்டாயுதம் உள்பட 48 பேர் உடல் கருகி உயிர் இழந்தார்கள். 17 பேர் மட்டுமே காயத்துடன் பிழைத்தார்கள். உயிர் தப்பியவர்களில் மத்திய உதவி மந்திரி பால கோவிந்தவர்மா, தமிழ்நாட்டைச் சேர்ந்த இ.காங்கிரஸ் "எம்.பி." விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் ஆவர். இந்த இருவரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

பலியான 48 பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாதபடி தீயில் கருகி கிடந்தன. உடல்கள் மீட்கப்பட்டு உறவினர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மத்திய மந்திரி மோகன் குமாரமங்கலத்தின் உடல் அவர் வைத்திருந்த பேனா மற்றும் காது கேட்கும் கருவி (இயர் எய்டு) ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி குருநாம்சிங் உடல் கையில் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாலதண்டாயுதம் உள்பட 42 பேரின் உடல்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. பாலதண்டாயுதத்தின் மனைவி மற்றும் அவரது நண்பரான காத்தமுத்து எம்.பி. ஆகியோர் டெல்லி சென்று, எவ்வளவோ முயன்றும் அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதனால் முயற்சி கைவிடப்பட்டது. உடல்களை மீட்கும்போது ஒரு இடத்தில் கணவனும், மனைவியும் கை கோர்த்தபடி பிணமாகி கிடந்தார்கள். அவர்கள் கட்டி இருந்த கெடிகாரத்தில் 10 மணி 3 நிமிடம் காட்டியது. மோகன் குமாரமங்கலத்தின் உடல் சவப்பெட்டியில் வைத்து டெல்லி ஹேஸ்டிவஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பிரதமர் இந்திரா காந்தி மோகன் குமாரமங்கலம் வீட்டிற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மத்திய மந்திரிகள், வெளிநாட்டு தூதர்கள், அனைத்துக்கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு மோகன் குமாரமங்கலம் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் இறுதிச் சடங்குகளை செய்தார். குமாரமங்கலம் மறைவுக்கு ஜனாதிபதி கிரி, கவர்னர் கே.கே.ஷா, பெருந்தலைவர் காமராஜர், தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி, கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்பட தலைவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள். விபத்து நடந்த இடத்தை பிரதமர் இந்திரா காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். ஜனாதிபதி வி.வி.கிரியும் ஆஸ்பத்திரிக்கு சென்று, காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். விமான விபத்தில் மரணம் அடைந்த மோகன் குமாரமங்கலம், முன்னாள் மத்திய மந்திரி சுப்பராயனின் மகன். புகழ் பெற்ற வக்கீலாக விளங்கியவர்.

கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தார். பிறகு இ.காங்கிரசில் சேர்ந்து பாண்டிச்சேரி தொகுதியில் இருந்து எம்.பி.யாகி 1971ல் மத்திய மந்திரியானார். மோகன் குமாரமங்கலத்தின் குடும்பம் பல சிறப்புகளை பெற்றது. ராணுவ தளபதியாக இருந்த பி.பி.குமாரமங்கலம் இவரது அண்ணன்.

அவரது சகோதரி பார்வதி கிருஷ்ணன், கம்யுனிஸ்டு தலைவர்களில் ஒருவர். பிற்காலத்தில் மோகன் குமாரமங்கலத்தின் மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் மத்திய மந்திரியாக இருந்தார். பாலதண்டாயுதம் பொள்ளாச்சியில் பிறந்தவர். சிறுவயது முதலே கம்யுனிஸ்டு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். பல தடவை சிறை சென்றவர்.

1971 தேர்தலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் வ.கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த விமான விபத்தில் சென்னை சுங்க இலாகா கலெக்டர் கவுசல்யா நாராயணன் (வயது 41), சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற கேரளாவைச் சேர்ந்த டாக்டர் சாக்கோ (61) மற்றும் சென்னையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் மோரிஸ் (23) ஆகியோரும் பலியானர்கள்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, February 24, 2012

ஆட்டோ சங்கர் - மரண தண்டனை - இறுதிப் பகுதி



தண்டனை பெற்ற 8 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் கொண்டு செல்லப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். தங்கள் மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

"அடையாளம் கண்டுபிடிக்க முடியாத எலும்புக்கூடுகளை வைத்துக்கொண்டு காணாமல் போனவர்களின் எலும்புக்கூடுகள் என்று ஊக அடிப்படையில் கூறி, அவர்களை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று வேண்டும் என்றே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே, நிரபராதியான எங்களை விடுதலை செய்யவேண்டும்" இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

நீதிபதிகள் கே.எம்.நடராஜன், டி.சோமசுந்தரம் ஆகியோர் இந்த அப்பீல் வழக்கை விசாரித்தார்கள். 4 மாதம் 6 நாட்கள் இந்த அப்பீல் மனு மீது வக்கீல் வாதங்கள் நடந்தன. இந்த அப்பீல் வழக்கில் 17.07.1992 அன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு செசன்சு கோர்ட்டு விதித்த தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். இதேபோல ஜெயவேலு, ராமன், ரவி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். குற்றம் நிரூபிக்கப்படாததால் பழனி, பரமசிவம் ஆகிய 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறி இருந்ததாவது:-

"கொலை செய்யப்பட்டவர்களில் 5 பேர் எலும்புக்கூடுகளை வைத்து, இவர்கள்தான் ஆட்டோ சங்கரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்பதை ஏற்க முடியாது" என்று ஆட்டோ சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையொட்டி 5 பேரின் மண்டை ஓடுகளும் "சூப்பர் இம்பொசிசன் டெக்னிக்" என்ற நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களும், மண்டை ஓடுகளும் ஒன்றாக பொருந்தி இருப்பதை தடய இயல் நிபுணர் சந்திரசேகர் ஐகோர்ட்டில் நிரூபித்துக் காட்டியதை இக்கோர்ட்டு ஏற்கிறது. மேலும், செசன்சு கோர்ட்டு நீதிபதி இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி தெளிவான முறையில் தீர்ப்பு கூறியதை இக்கோர்ட்டு பாராட்டுகிறது."

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தார்கள்.

இந்த வழக்கில் துப்பு துலக்கிய குற்றப்பிரிவு ரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுகத் அலி மற்றும் வக்கீல்களுக்கும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தார்கள். தீர்ப்பு மொத்தம் 371 பக்கங்களில் இருந்தது. ஐகோர்ட்டில் கூறப்பட்ட கிரிமினல் வழக்கு தீர்ப்புகளில் இதுவே மிகவும் பெரிய தீர்ப்பாக அமைந்தது.

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆட்டோ சங்கரும், மற்றவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் "அப்பீல்" செய்தனர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜெயசந்திரரெட்டி, ஜி.என்.ரே ஆகிய 2 நீதி பதிகள் விசாரித்தனர். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் 05.04.1994ல் தீர்ப்பு கூறப்பட்டது.

ஆட்டோ சங்கர், எல்டின், ஆகிய 2 பேருக்கும் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். மற்றும் சிவாஜி, ஜெயவேலு, ராமன், ரவி ஆகிய 4 பேர்களுக்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. போலீஸ் தரப்பில் அரசாங்க வக்கீல்கள் சுப்பிரமணியம், கே.வி.வெங்கடராமன், அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ரெட்டி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் ஆட்டோ சங்கர் மற்றும் எல்டின் சார்பாக ஆஜராகிய வக்கீல்கள், "வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த உள்ளூர் சினிமா படங்களின் பாதிப்பு காரணமாகவே இந்த குற்றங்கள் நடந்துள்ளன. எனவே, இதற்கு காரணமான, அந்த சினிமா தயாரிப்பாளர்களே இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும்" என்று வாதாடினார்கள். இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் 76 பக்க தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

"வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் நிறைந்த சினிமா படங்களினால் குற்றம் ஏற்படுகிறது என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால், ஆட்டோ சங்கர் மற்றும் எல்டினைப் பொறுத்தவரையில், வன்முறை மற்றும் ஆபாச சினிமாக்கள் தான் அவர்களை குற்றவாளிகளாக மாற்றியது என்று சொல்லுவதற்கு இல்லை. ஏனென்றால் அவர்கள் இதற்கு முன்பாகவே கொடூரமான குற்றவாளிகளாக இருந்தனர்.

சினிமா என்றால் கதாநாயகிகள், வளைவு, நெளிவுடனும், அதிகப்படியான கவர்ச்சியுடனும் தோன்ற வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. அதேபோல, கொடூர செயலில் ஈடுபடும் வில்லன்களை கொடூரமாக பழிவாங்கும் கதாநாயகர்கள் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத நடைமுறையா என்பதும் தெரியவில்லை.

சினிமா என்பது கலையையும் கலாசாரத்தையும் வளர்க்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கம் கொண்டது ஆகும். ஆனால், அந்த கலை கலாசாரத்தை ஆபாசமாகவும் வன்முறை காட்சிகளாகவும் சித்தரிப்பதால், அந்த நோக்கத்துக்காகத்தான் சினிமா எடுக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது."

இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினார்கள்.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஆட்டோ சங்கரும், எல்டினும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, சேலம் ஜெயிலில் ஆட்டோ சங்கரை 27.04.1995 அன்று காலை 05.30 மணிக்கும், எல்டினை மதுரை மத்திய சிறையில் 28.04.1995 அன்று காலை 05.30 மணிக்கும் தூக்கில் போட உத்தரவிடப்பட்டது. தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று இருவர் சார்பிலும் கவர்னர் சென்னாரெட்டியிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதுதவிர ஆட்டோ சங்கர் மனைவி ஜெகதீசுவரி, எல்டின் மனைவி சாந்தி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.நடராஜன் மூலம் 2 `ரிட்' மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், "இருவரையும் தூக்கில் போட தடை விதிக்கவேண்டும். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும்" என்று கூறி இருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிவராஜ்படேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வக்கீல் ஜோதி, எதிர்தரப்பில் வக்கீல் ஏ.நடராஜன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். பிறகு 2 மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:-

"தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கைக்கு, ஐகோர்ட்டில் மனு செய்ய முடியாது. அரசியல் சட்டம் 32வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டில் தான் மனு செய்யவேண்டும். மேலும் மனுதாரர்கள் கூறும் காரணங் கள் போதுமானதாக இல்லை. தூக்கில் போடுவதற்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது."

இவ்வாறு நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

ஆட்டோ சங்கர் தூக்கில் போடப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு, அவனுடைய மனைவி ஜெகதீசுவரி, குழந்தைகளுடன் சென்று சந்தித்தாள். "ஆட்டோ" சங்கர் துயரமிகுதியால் கண்ணீர் வடித்தான். குடும்பத்தினர் கதறி அழுதனர். பிறகு இரவு 7 மணி வரை தனது கடைசி ஆசை, உயில் ஆகியவை பற்றி குடும்பத்தினருடன் பேசினான்.

இலவச சட்ட ஆலோசனை உதவிக்குழுவை சந்திக்க ஆட்டோ சங்கர் விரும்பினான். இதன்படி இந்த குழுவினர் ஜெயிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது "நான் இறந்த பிறகு எனது கண்களை தானம் செய்ய விரும்புகிறேன்" என்று கூறினான். அதில் சில சட்ட பிரச்சினை இருந்ததால் அவனது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சேலம் ஜெயிலில் ஆட்டோ சங்கர் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். கோர்ட்டு மூலம் தடை உத்தரவு வந்து விடும் என்று 26ந்தேதி மாலை 6 மணி வரை எதிர்பார்த்து இருந்தான். ஆனால் தகவல் எதுவும் வராததால், மறு நாள் தூக்கில் போடப்படுவது உறுதி என்பதை தெரிந்து கொண்டான். யாருடனும் பேசவில்லை. இரவில் தூங்கவும் இல்லை.

அதிகாலை 04.30 மணி அளவில் ஜெயில் அதிகாரியும், போலீஸ் அதிகாரியும் அவன் இருந்த அறை பக்கம் சென் றனர். "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டனர். அதற்கு, "மகளுக்கு கடிதம் எழுதிக்கொண்டி ருக்கிறேன்" என்று ஆட்டோ சங்கர் பதில் அளித்தான்.

பின்னர் சிறிது நேரத்தில் அவனுக்கு குடிக்க "காபி" வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கரை தூக்கு மேடைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவன், கைதிகள் அணியும் உடையை அணிந்திருந்தான். முகம் சவரம் செய்யப்படாமல் இருந்தது. அவன் நடந்து சென்றபோது, அவனது நடையில் தளர்வோ, தள்ளாட்டமோ இல்லை. வழக்கம் போல மிடுக்காக நடந்து சென்றான்.

தூக்கு மேடையில் போய் நின்றதும், முகம் நீல நிற துணியால் மூடப்பட்டது. கை, கால்கள் கட்டப்பட்டன. கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கு மேடையைச் சுற்றிலும் ஜெயில் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், தாசில்தார், டாக்டர்கள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். சரியாக அதி காலை 05.14 மணிக்கு தூக்கு மேடை அருகேயிருந்த ஒரு கருவி இயக்கப்பட்டது. ஆட்டோ சங்கர் நின்று கொண்டிருந்த பலகை விலகியது. ஆட்டோ சங்கர் தூக்கில் தொங்கினான். உயிர் பிரிந்த அந்த நேரத்திலும் கூட அவன் உடலில் துள்ளலோ, உதறலோ, அசைவுகளோ இல்லை. மரண ஓலமும் இல்லை. முக்கல், முனகலும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். பிறகு அவன் அணிந்திருந்த ஜெயில் உடைகள் அகற்றப்பட்டு, உடலில் வெள்ளைத்துணி போர்த்தி கீழே கிடத்தப்பட்டது. 7 மணி அளவில், உடல் அவனது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆட்டோ சங்கரின் தாய் ஜெயலட்சுமி, மனைவி ஜெகதீசுவரி மற்றும் மகள் ஆகியோர் ஜெயிலுக்கு வந்திருந்தனர். ஆட்டோ சங்கரின் உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கோட்டூர்புரத்தில் இருக்கும் ஆட்டோ சங்கரின் தந்தை வீட்டில் உடல் வைக்கப்பட்டது. அவன் நெற்றியில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் நாமம் இடப்பட்டிருந்தது. மனைவி ஜெகதீசுவரியும் முழுக்க மஞ்சள் பூசிக்கொண்டு அழுது ஓய்ந்தவளாய் சோகத்தோடு அமர்ந்திருந்தாள்.

மறுநாள் கோட்டூர்புரம் மயானத்தில் ஆட்டோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் 1977ம் ஆண்டு வாக்கில் ஒரு கொலை வழக்கில் தந்தை மகன் ஆகிய 2 பேர் தூக்கில் போடப்பட்டனர். அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து ஆட்டோ சங்கர் தூக்கில் போடப்பட்டான்.

28ந்தேதி அதிகாலை மதுரை ஜெயிலில் எல்டினுக்கு தூக்கு நிறைவேற்றப்பட வேண்டும். அன்று காலை 4 மணிக்கு அவனுடைய அறைக்கு ஜெயில் அதிகாரிகள் சென்றபோது, அவன் தூங்காமல் கண் விழித்தபடியே இருந்தான். அதிகாரிகளைப் பார்த்ததும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. பிறகு அவனை குளிக்கச் செய்து, கைதிகள் உடை அணிவித்து தூக்கு மேடைக்கு அழைத்து சென்றனர்.

தூக்கு போடுவதற்கு முன்பு, "உனக்கு கடைசி ஆசை ஏதாவது உண்டா?" என்று கேட்டனர். அதற்கு அவன் "என்னுடைய மனைவிக்கு அரசு உதவி செய்யவேண்டும். ஒரே மகனின் படிப்புக்கும் உதவி செய்யவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான்.

பிறகு 05.22 மணிக்கு தூக்கில் போடப்பட்டான். 2 நிமிடத்தில் உடல் துடிப்பு அடங்கியது. அவனுடைய உயிர் பிரிந்தது. எல்டின் உடல் அவனுடைய மனைவி சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. எல்டின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. ஆட்டோ சங்கரின் குடும்பம் தற்போது புயலில் சிக்கிய படகு போல தள்ளாடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையை நகர்த்த பெரும் கஷ்டப்பட்டு வருவதாக ஆட்டோ சங்கரின் மனைவி ஜெகதீசுவரி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இத்துடன் கட்டுரை முடிவடைகிறது. இந்த கட்டுரைக்காக நான் இருபக்க விமர்சனமும் பெற்றேன். காப்பி அடிக்கிறான் என்று சிலரும் ஒரு முக்கிய சம்பவத்தை நினைவுப்படுத்தியதாக பலரும் குறிப்பிட்டிருந்தனர். அது அவரவர்களுடைய எண்ணம். மற்றபடி இதுவரை இந்த தொடருக்கு ஆதரித்தோ எதிர்த்தோ பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. இந்த தொடருக்காக நான் பரீசீலித்தவை மாலைமலரின் காலச்சுவடுகள், நக்கீரனின் மரண வாக்குமூலம் ஆனால் இது முழுக்க முழுக்க ஆட்டோ சங்கரின் சார்பாக அமைந்திருக்கும். எனவே விவரங்களை மட்டும் சேகரித்துக் கொண்டேன். என்சைக்ளோபீடியாவிலிருந்து சில கட்டுரைகள். உண்மையில் இந்த கடைசி கட்டுரையை எழுதும் போது வாழும் போது ராஜாவாக வாழ்ந்தாலும் சமநிலை தடுமாறி தவறுகள் செய்ய ஆரம்பித்தால் அவர்களது நிலை இப்படித்தான் என்று தெளிவாக புரிந்தது. எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஆட்டோ சங்கர் வாழ்க்கை ஒரு பாடம்.

Thursday, February 23, 2012

காதலில் சொதப்புவது எப்படி - சினிமா விமர்சனம் கொஞ்சம் லேட்டாக


எப்பொழுதும் முதல் நாள் முதல் காட்சி பார்த்தே விமர்சனம் எழுதி பழக்கபட்ட நான் இந்த வாரம் சில நாட்கள் கழித்தே சினிமாவுக்கு செல்ல முடிந்தது. காதலில் சொதப்புவது எப்படி பார்க்க நீண்ட நாட்களுக்கு பிறகு அபிராமிக்கு சென்றேன். ஒரு காலக்கட்டத்தில் அபிராமி தான் எங்களுக்கு சொர்க்கபுரி. ஐசிஎப்பில் நான் படிக்கும் பொழுது சைக்கிளில் வந்து விடுவோம். முதல் முதலாக நான் அபிராமியில் பார்த்த படம் அஜித்தின் ராசி. கடைசியாக பார்த்த படம் ஆனந்தம். அந்த மூன்று ஆண்டுகளும் வாரம் நான்கு முறை நான் கண்டிப்பாக அபிராமியில் தான் இருப்பேன். அதற்கு பிறகு நான் வேலை கிடைத்து அசோக் நகர் பக்கம் குடி வந்து விட்டதால் அந்த இடத்தை உதயம் காம்ப்ளக்ஸ் பிடித்து விட்டது.

அப்பொழுது அபிராமி தியேட்டரின் முன்பு மிகப்பெரிய காலியிடம் இருக்கும். இப்பொழுது பார்த்தால் கண்ணாபின்னாவென்று கட்டிடங்கள் எழுப்பி அசத்தியிருக்கின்றனர். என் மனைவியும் என்னுடன் வந்திருந்ததால் முதலில் டிக்கெட் எடுத்து விட்டு பிறகு சாப்பிட்டு விட்டு படத்திற்கு செல்லலாம் என்று டிக்கெட் கவுண்ட்டருக்கு சென்றேன். டிக்கெட் விலை 200, 180 அதற்கப்புறம் தான் 120 என்றனர். என்னடா சத்யம் எஸ்கேப்பிலேயே அதிகபட்ச விலை 120 தான். இங்கோ இவ்வளவு கேட்கின்றனரே என்று சந்தேகத்துடன் கேட்டேன். 200 மசாஜ் சேர் டிக்கெட், 180 ரீக்களைனர் சீட் டிக்கெட் என்றனர். இரண்டு 200 ரூபாய் டிக்கெட் எடுத்து விட்டு மீண்டும் தரைத்தளத்திற்கு சென்றேன்.

அங்கிருந்த டேபிளில் அமர்ந்தவுடன் 10 பேர் நம்மை சூழ்ந்து கொண்டு என்ன சாப்பிடுவது என்று யோசிக்கக் கூட விடாமல் மெனு கார்டை காட்டி தொல்லை செய்தனர். ஒரு வழியாக சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டும் முடித்து விட்டோம். படம் துவங்கி விட்டது. சாப்பிடும் போது தொல்லை செய்தவன் பில்லை கொடுக்க வரவில்லை. அப்புறம் சத்தம் போட்டு பில்லை செட்டில் செய்து விட்டு தியேட்டரின் உள் நுழைவதற்குள் படம் துவங்கி விட்டது. அபிராமியில் படம் பார்க்க செல்வோருக்கு ஒரு ஆலோசனை. தயவு செய்து அங்கு சாப்பிடுவது என்று முடிவு செய்தால் ஒரு மணிநேரம் முன்பாக சென்று விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் படத்தின் துவக்கத்தை மிஸ் செய்து விடுவீர்கள்.

--------------------------

படத்தின் கதை என்ன?
ஏற்கனவே படம் பார்த்த பதிவர்கள் அனைவரும் சொல்லி விட்டனரே அதனால் நான் என்னத்தை சொல்ல. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோ மோதலே கதை. இதில் நிறைய விஷயங்கள் எனக்கும் என் மனைவிக்கும் ஒத்துப் போகிறது. அதனால் நன்கு ரசித்தோம். பிறகு நண்பர்களிடம் படம் பற்றி பகிர்ந்து கொண்டேன். பிறகு தான் தெரிந்தது. அவர்களும் அதே போல் தான் ரசித்தார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தின் சம்பவங்கள் பெரும்பாலான காதலர்கள் மற்றும் திருமணமானவர்களுக்கு ஒத்து போவதால் தான் என்று நினைக்கிறேன்.

படத்தின் பெரும்பலமே கதாபாத்திரத்தேர்வு தான். சித்தார்த், அமலா பால் கச்சிதமாக பொருந்துகின்றனர். பெண்களிடம் மாட்டி அல்லோலப்படும் வெகுஜன பிரதிநிதியாக அனைவரின் மனதிலும் ஒட்டிக் கொள்கிறார். நைஸ் அமலாபால் அவரது ஹேர்ஸ்டைல், டிரெசிங் நன்றாக இருந்தது. சுரேஷ், ரவி ராகவேந்திரர் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் சித்தார்த்தின் நண்பர்களாக வரும் இருவர் வரும் காட்சியிலும் சிரிப்பு வந்து விடுகிறது.

ரண்டக்க ரண்டக்க என்று சித்தார்த் நினைத்துக் கொண்டு இருக்க அரைமணிநேரமாக என்ன யோசித்தாய் என்று அமலா பால் கேட்டு சண்டை வரும் இடம் அசத்தல், நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டுள்ளேன்.

யோசித்துப் பார்த்தால் படத்தின் ஹைலைட் படம் முழுவதுமே தான். முழுவதும் சொன்னால் இது வரை பார்க்காமல் இருப்பவர்களுக்கு சஸ்பென்ஸ் தேவை என்பதால் விமர்சனத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நேரில் கண்டுகளியுங்கள். உங்கள் கதாபாத்திரம் தான் படத்தில் நாயகனாகவோ நாயகியாகவோ உள்ளது என்பதை அறிவீர்கள்.

ஆரூர் மூனா செந்தில்

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 4



பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நண்பர்கள் குழு புதியதாக தோன்றியது. அதுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் குரூப் மாறி வேறு வகுப்புகளுக்கு சென்றார்கள். நான் படித்த பயாலஜி தமிழ் வகுப்புக்கு அது வரை சற்று தூரத்தில் இருந்த நண்பர்கள் நெருக்கமானார்கள். கிரிக்கெட் வெறித்தனமாக மாறியது. புதுப்புது பெண்களை சைட் அடிக்க முயற்சிகள் துவங்கின.

அந்த நண்பர்கள் குழுவை நான் என்றுமே மறக்க மாட்டேன். அவர்களில் சிலரை குறிப்பிடுகிறேன். இதனை நண்பர்களில் யாராவது படித்தால் உடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். தினேஷ் தற்போது சீனாவில் பிஸினஸ் செய்கிறான். மஞ்ச ரொட்டி விஜயன் திருவாரூரிலேயே ஸ்டீல் ஆர்டர்கள் எடுத்து செய்து கொண்டுள்ளான். சீனிவாசலு இன்று வரை நெருக்கமாக என்னுடன் தொடர்பில் இருப்பவன். சிங்கப்பூருக்கு செல்ல ஆட்கள் ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டுள்ளான். தொளுத்தி அந்தோணிராஜ் திருவாரூரிலேயே ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டுள்ளான். காட்டான் அருண் சிங்கப்பூரில் பெரிய பணியில் இருக்கிறான்.

பாக்கியுள்ள பச்ச மொளகா நாகேஸ்வரன், தொப்பை ரமேஷ், அப்துல் மாலிக், பாரதிராஜா, முருகானந்த ராஜா அம்மையப்பன் பாலாஜி, மாட்டு பாலாஜி, ஸ்ரீதர், அமாவாசை சரவணன் மற்றும் பலர். இவர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. என் மிகச்சிறந்த நண்பனாக இருந்த சுதாகர்ராஜ் திருவாரூரில் சிவில் இஞ்சினியராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டான். அப்புறம் இப்பொழுதும் தொடர்பில் உள்ள ராஜேஷ், அருண் பி.எஸ் (வாத்துன்னு சொன்னா அடிப்பான்), நரேந்திரன், சுரேன் ஆகியோர் படிக்கும் போது சரியான செட்டாக இருந்தது.

அப்பொழுதெல்லாம் மதிய வேளைகளில் கட் அடித்து விட்டு சிங்களாஞ்சேரி கேட் அருகில் உள்ள ஒரு கால்வாய் மதகுக்கு குளிக்க சென்று விடுவோம். 5 மணி வரை குளித்து விட்டு பிறகு கிரவுண்டிற்கு வந்து இருட்டும் வரை கிரிக்கெட் விளையாடி விட்டு தான் வீட்டிற்கு செல்வோம். இது வழக்கமான செயல். வாரத்தில் மூன்று நாட்கள் கண்டிப்பாக சினிமா. ஒரு சமயம் செங்கம் தியேட்டரில் டிக்கெட்டுக்கு கொடுக்க பணம் பத்தாமல் சிலர் மட்டும் காம்பவுண்டு ஏறிக்குதித்தெல்லாம் சினிமாவுக்கு சென்றதுண்டு.

ஒரு சம்பவம் சரியாக 1995 டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டம், அது வரை எந்த பகுதியிலும் போலீஸ் காவல் குறைவாக இருந்த காலக்கட்டம். ஏனென்றால் 1996 ஜனவரி 1லிருந்து தான் திருவாரூர் தனி மாவட்டமாகிறது. இரவு முழுவதும் நண்பர்கள் குடித்து விட்டு விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தத்தில் கூத்தடித்துக் கொண்டு அந்த வழியாக வந்து போகும் வண்டியையெல்லாம் நிறுத்தி ஹாப்பி நியூ இயர் என்று கத்தி கலாட்டா செய்வதுமாக இருந்தோம். எங்களில் அருண் என்ற நண்பன் சரக்கடித்து மட்டையாகி அங்கு படுத்திருந்தான். நாங்கள் இருபது பேர் ரோட்டில் கத்திக் கொண்டு இருந்தோம். ஒரு கார் வந்தது. நாங்கள் நிறுத்தச் சொல்லி கூச்சலிட வண்டி நிற்கவில்லை. நண்பர்கள் கல்லெடுத்து எறிந்து சத்தம் போடவே வண்டி சரக்கென்று நின்றது. ரிவர்ஸில் வந்தது. சற்று வெளிச்சத்துக்கு வந்ததும் தான் தெரிந்தது. அது புதிய எஸ்பியின் கார்.

டேய் போலீஸ் என்று சத்தம் மட்டும் தான் கேட்டது. கார் வந்து நிற்பதற்குள் அந்த இடத்தில் ஒருத்தனையும் காணும் என்னையும் சேர்த்து. காரிலிருந்து எஸ்பி உட்பட நான்கு பேர் இறங்கி இடத்தை சல்லடை போட்டு தேடுகிறார்கள். ஒருவனும் சிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து கார் சென்றது. அதன் பிறகு ஒருத்தன் ஒருத்தனாக தலையை வெளிக்காட்டுகின்றனர். அது மிகப்புதிதாக வளர்ந்து வரும் புறநகர் பகுதி. இருவர் ஒரு வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வருகின்றனர். ஒரு வேலிப்பகுதியிலிருந்து இருவர் வருகின்றனர். எதிர்பக்கம் இருந்த வயல் முழுவதும் மழைத்தண்ணீர் நிரம்பியிருந்தது. அதில் மூழ்கிப்படுத்திருந்த பலர் எழுந்து வந்தனர். நான் எங்கிருந்தேன் என்று கேட்கிறீர்களா, அதற்கடுத்த பிளாட்டில் கட்டுவதற்காக மணல் கொட்டியிருந்தது. அதனுள் நுழைந்து கொண்டிருந்தேன். எல்லோருக்கும் வந்தபின்பு ஒருவனை பற்றி சந்தேகம் இருந்தது.

மட்டையாகி படுத்திருந்த அருண் எங்கே அவன் சைக்கிள் எங்கே என்று. பிறகு கேசவன் தான் சொன்னான், அவன் ஒடும் முன்பு அருணையும் அவன் சைக்கிளையும் பேருந்து நிறுத்தத்தின் மேலே ரூப்பில் தூக்கி போட்டு விட்டு சென்றாக. இன்று வரை எத்தனையோ புத்தாண்டு கொண்டாட்டத்தை பாரத்து விட்டேன். அது போல ஒரு திரில் கிடைக்கவேயில்லை. அன்று யாராவது ஒருவர் மாட்டியிருந்தால் போதும் அத்தனை பேரின் ஜாதகமும் போலீஸ் கையில் போயிருக்கும்.

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, February 22, 2012

ஆட்டோ சங்கர் - மரண தண்டணை - தீர்ப்பு விவரம் - பகுதி 7



விசாரணைக்காக சங்கரையும் தேவியையும் 7 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி பெற்றார்கள். கோர்ட்டு விசாரணை முடிந்ததும் ஆட்டோ சங்கரும், தேவியும் ஐ.ஜி. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

6 பேர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஆட்டோ சங்கர் உள்பட 10 பேர் மீது சைதாப்பேட்டை 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 26.12.1988 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகை 1,100 பக்கம் கொண்டதாக இருந்தது. ஆட்டோ சங்கர் உள்பட 10 பேர் மீதும் இ.பி.கோ. 320 பி (சதி செய்தல்), 147 (கூட்டமாக சேர்ந்து கல வரம் செய்தல்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல்), 364 (கொலை செய்வதற்கு ஆட்களை கடத்துதல்), 302 (கொலை), 201 (கொலைகளுக்கான சாட்சியங்களை மறைத்தல்) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

28.10.1987 அன்று சுடலைவும், 08.01.1988 அன்று லலிதாவையும், 15.03.1988 அன்று ரவியும், 29.05.1988 அன்று சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகியோரும் கொலை செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் இந்த வழக்கு செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி மோகன்தாஸ் வழக்கை விசா ரித்தார். முதலாவதாக அப்ரூவர் பாபு சாட்சியம் அளித்தார். அதைத்தொடர்ந்து 9 மாஜிஸ்திரேட்டுகள், 5 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் உள்பட மொத்தம் 134 பேர் சாட்சியம் அளித்தனர்.

சினிமா நடிகை புவனி மற்றும் விபசார அழகிகள் அனிதா, கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பில் வக்கீல்கள் கம்பம் சுப்பிரமணியம், எஸ். கோபாலகிருஷ்ணன், பால்ராஜ் ஆகியோர் வாதாடினார்கள். ஆட்டோ சங்கர் தரப்பில் வக்கீல் நடராஜன், அவருக்கு உதவியாக கணேஷ், மனோகர் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இந்த வழக்கில் 31.05.1991 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக இருந்ததால் அவர்கள் மீதான வழக்கு விசாரணை தனியாகப் பிரித்து நடைபெற்றது. எனவே, ஆட்டோ சங்கர் உள் பட 8 பேரும் கை விலங்கு மாட்டி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

தீர்ப்பு கூறும் முன் அவர்களிடம் நீதிபதி, "உங்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. நீங்கள் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஆட்டோ சங்கர், "நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று பதில் அளித்தான். மற்றவர்களும் அதையே கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரிடமும் "நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று எழுதப்பட்டிருந்த ஒரு வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. 10.49 மணிக்கு நீதிபதி எழுந்து அவரது அறைக்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குற்றவாளிகளின் அங்க அடையாளங்களை கோர்ட்டு ஊழியர்கள் சரிபார்த்து குறித்துக்கொண்டனர்.

பகல் 11.45 மணிக்கு நீதிபதி மீண்டும் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தார். ஒரே நிமிடத்தில் அதாவது 11.46 மணிக்கு தனது தீர்ப்பை கூறிவிட்டு உடனடியாக அவரது அறைக்கு சென்றுவிட்டார். "ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கிறேன். இவர்களை அழைத்துக்கொண்டு போகலாம்" என்று மட்டுமே நீதிபதி கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் மீண்டும் கைகளில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆட்டோ சங்கர் கோர்ட்டுக்கு வரும்போது சிரித்தபடியே வந்தான். பத்திரிகை நிருபர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்துக்கொண்டான். போட்டோ கிராபர்களுக்கு சிரித்தபடியே போஸ் கொடுத்தான்.

கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டபின் ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளை பார்த்து சிரித்துக்கொண்டான். அவனது முகத்தில் எந்தவித கவலையும் தெரியவில்லை. ஆட்டோ சங்கரின் தாய் ஜெயலட்சுமி கோர்ட்டுக்கு வந்திருந்தார். நீலநிற தோல் பையை தோளில் தொங்க விட்டிருந்த அவள் ஆட்டோ சங்கரைப் பார்த்து கண்ணீர் விட்டார். வேனில் ஏறி ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்ட போது, ஆட்டோ சங்கர் தனது தாயைப் பார்த்து கை அசைத்தபடியே சென்றான். நீதிபதி தமது தீர்ப்பை 238 பக்கங்களில் எழுதியிருந்தார். தீர்ப்பின் முக்கிய பகுதிகள் வருமாறு:-

"எதிரிகள் 8 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. இம்மாதிரி கொலைகளை செய்தவர்களுக்கு தக்கபடி தண் டனை அளித்தால்தான் நீதியின் நலன் விளங்கும். இல்லை யேல் அக்கிரமங்கள் ஆனந்த கூத்தாடும். அநியாயங்கள் தலைவிரித்தாடும். இப்படியே சென்றால் நாடு நாடாக இருக்காது. நாடு காடாகிவிடும். அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்காவிட்டால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், காவல் துறையின் மீதும் நம்பிக்கையே இல்லாமல் போய்விடும். நாடு அமைதியான சூழ்நிலையில் இருக்கவேண்டுமானால் இம்மாதிரியான கொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும். அவ்வாறு தக்க தண்டனை அளித்தால்தான் இது மற்றவர் களுக்கு பாடமாக அமையும். இந்த எதிரிகளின் கொலையை பார்க்கும்போது தனக்கு எதிராக இருக்கும் நபர்களை அடியோடு அதாவது வேரோடு அழித்து அவர்களை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

சட்டத்தை தன் கையிலேயே எடுத்துக்கொண்டு "சட்டம் என் கையில்" என்று இவர்களே ஒரு தனி கூட்டமைப்பு அமைத்து அவர்களுக்கு எதிரானவர்களை பழி வாங்கி இருக்கும் கொலையை பார்க்கும்போது அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அளிப்பதுதான் நீதியின் நலனுக்கு உகந்தது. அவ்வாறு தண்டனை அளித்தால்தான் நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகும். அனைவரும் அமைதியுடன் வாழ வழி ஏற்படும். எனவே, நீதியின் நலன் கருதியும், வழக்கின் தன்மையை கருதியும் சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அளிக்கிறேன்.எதிரிகள் ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவம் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்.

எதிரிகள் சங்கர், எல்டின், சிவாஜி மூவரும் சாகும் வரை தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும். இவர்களுக்கு அளிக் கப்பட்டுள்ள மரணதண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தினரால் உறுதி செய்யப்படவேண்டும். 30 நாட்களுக்குள் மேல் முறையீடு (அப்பீல்) செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.

ஆரூர் மூனா செந்தில்

Monday, February 20, 2012

இலங்கை முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் கடைசி நாள்...



இலங்கையில் 1988ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசா வெற்றி பெற்றார். பிரேமதாசாவுக்கு 25,69,199 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திருமதி பண்டாரநாயகாவுக்கு 22,99,770 ஓட்டுகளும் கிடைத்தன.

தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரேமதாசா 1989ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி அதிபராக பதவி ஏற்றார். பிரேம தாசா புத்த மதத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்.

மே தினத்தை முன்னிட்டு, இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, கொழும்பு நகரில் 01.05.1993 அன்று ஒரு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊர்வலத்துக்கு பிரேமதாசா தலைமை தாங்கி ஒரு "ஜீப்"பில் சென்றார். நகரின் மையப்பகுதியான ஆர்மர் தெரு வில் பகல் 12.45 மணி அளவில் ஊர்வலம் போய்க்கொண்டு இருந்தது.

அப்போது உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதன் பிரேமதாசாவின் "ஜீப்" மீது மோதுவதற்காக நெருங்கினான். பாதுகாப்பு படையினர் அவனை தடுத்து நிறுத்தியபோது, அவன் தன் உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தான்.

குண்டு வெடிப்பில் சிக்கி பிரேம தாசா உடல் சின்னாபின்னமாகி மரணம் அடைந்தார். குண்டை வெடிக்கச் செய்த மர்ம மனிதனும், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் சிதைந்து செத்தான். குண்டு வெடிப்பில் பிரேமதாசாவின் பாதுகாவலர்கள் 6 பேர் உள்பட 40 பேர் பலியானார்கள். இவர்களில் 16 பேர் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதறிப்போய்விட்டன. 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.

குண்டு வெடித்த ஆர்மர் தெரு ஒரே ரத்தக் களறியாக காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் பீறிட்டு அடித்த ரத்தமும், மனித தசைகளுமாக காணப்பட்டன. பிரேமதாசாவுக்கு பின்னால் கார்களில் வந்து கொண்டிருந்த மந்திரிகள் உயிர் தப்பினார்கள். குண்டு வெடிப்பில் பிரேமதாசா காயத்துடன் தப்பி விட்டதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அவர் என்ன ஆனார் என்று அரை மணி நேரம் குழப்பம் நிலவியது. பிறகு அவரது உடல் சின்னா பின்னமாக சிதறிப் போய்விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குண்டு வெடித்த மர்ம மனிதன் மோட்டார் சைக்கிளில் வந்தான் என்றும், நடந்து போய் பிரேமதாசாவை நெருங்கினான் என்றும் மாறுபட்ட தகவல்கள் தெரிவித்தன. இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கொழும்பு நகரில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். அதன் பிறகே டெலிவிஷன் மூலம் பிரேமதாசா படுகொலை செய்தி அறிவிக்கப்பட்டது. இலங்கை பிரதமராக இருந்த விஜயதுங்கே தற்காலிக அதிபராக (ஜனாதிபதி) நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பிரேமதாசா படுகொலை குறித்து ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, துணை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோர் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தார்கள். இலங்கை தற்காலிக ஜனாதிபதிக்கு ஒரு அனுதாப செய்தி அனுப்பினார். பிறகு 6ந்தேதி பிரேமதாசா இறுதிச்சடங்கு நடந்தது.

பிரேமதாசா கொலை செய்யப்பட்ட இடத்திலேயே கொலைகாரனின் துண்டித்த தலை கைப்பற்றப்பட்டது. அந்த தலை எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது. கண்கள் மூடிய நிலையிலும், வாய் திறந்த நிலையிலும் இருந்தது. தூங்கும் ஒரு மனிதன் போல அந்த தலை காணப்பட்டது.

துப்பறியும் போலீசார் அந்த தலை படத்தை பத்திரிகைகளில் வெளியிட்டனர். இலங்கை ரூபவாகினி டெலிவிஷனிலும் அந்த தலை காண்பிக்கப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கை மூலம் கொலையாளி யார் என்ற அடையாளம் தெரிந்து விட்டது. பிரேமதாசாவின் வீடு, கொழும்பு நகரில் `சுசரிதா' என்ற பகுதியில் இருந்தது. கொலையாளியும் அதே பகுதியில் 2 ஆண்டுகளாக வசித்து வந்தவன் என்பது தெரியவந்தது.

கொலையாளியின் பெயர் பாபு. இவன் ஓட்டலில் பகுதி நேர வேலை பார்த்து வந்தான். பிரேமதாசாவின் வீட்டில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் பாபு தங்கியிருந்தான். அந்த வீட்டின் சொந்தக்காரரான ஓட்டல் அதிபர் ஒருவரும், பக்கத்து வீட்டுக்காரரும் பாபுவை அடையாளம் காட்டினார்கள். ஆனாலும் கொலைக்கான காரணம் தெரியவராமல் மர்மமாகவே இருந்தது.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி 1 : இந்த காலகட்டத்தில் எனக்கு 14 வயது நான், என் குடும்பத்தார் அனைவரும் ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலாவுக்கு சென்றிருந்தோம். மைசூர் உள்ளே நுழைகையில் ராணுவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். சாதாரண செக்யூரிட்டி செக்கப்பாகத்தான் நினைத்தோம். ஆனால் அவர்கள் எங்களிடம் இருந்த புளிசோறு இருந்த குண்டானையும் பிரட்டி போட்டு சோதனை செய்தனர். அப்போது எங்களுக்கு காரணம் புரியவில்லை. மைசூர் நகரில் உள்ளே நுழைந்த பிறகு தான் ஒரு டீக்கடைக்காரர் சொன்னார். இந்த மாதிரி பிரேமதாசா கொல்லப்பட்டார் என்று. இப்பொழுது பதிவெழுத பக்கங்களை புரட்டும் போதுதான் தெளிவான விவரங்கள் தெரிய வந்தன. அதனை தங்களுக்கு பகிர்கிறேன். நன்றி

டிஸ்கி 2 : இந்த கட்டுரையில் தகவல் மாறுபட்டிருந்தாலோ அல்லது கூடுதல் தகவல் இருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவித்தால் அதனையும் கட்டுரையில் இணைத்து வெளியிடுகிறேன்.

Sunday, February 19, 2012

ஆட்டோ சங்கர் - மரண தண்டணை - வழக்கு விசாரணை - பகுதி 6


20.08.1990 அன்று நள்ளிரவு சென்னை மத்திய சிறையில் இருந்து ஆட்டோ சங்கர், அவனது தம்பி மோகன், கூட்டாளி செல்வராஜ் ஆகியோர் தப்பிவிட்டனர். இவர்களுடன் அதே ஜெயில் அறைக்குள் (செல்) இருந்த மற்றொரு கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீல் ராஜா, சுண்டல் குமார் ஆகியோரும் ஓடிவிட்டனர்.

இந்த 5 பேரும் தப்புவதற்கு ஜெயில் ஊழியர்கள் சிலரும், வக்கீல் ராஜாவின் நண்பனான உதயா (ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வந்து தலைமறைவாக திரிந்தவன்) என்பவனும் உதவியாக இருந்தார்கள். உதயா, சம்பவத்தன்று நள்ளிரவில் காரில் மத்திய சிறைச்சாலை அருகே சென்று மரத்தில் ஏறி நின்று ஜெயில் காம்பவுண்டுக்குள் கயிற்றைப் போட்டான். அந்த கயிறு வழியாக 5 பேரும் ஏறி வெளியே குதித்து தப்பினார்கள்.

தப்பிய 5 கைதிகளையும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். ஒரு வாரத்தில் வக்கீல் ராஜா, சுண்டல் குமார் இரு வரும் பெங்களூரில் சிக்கினார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆட்டோ சங்கர் தன்னுடைய புதிய காதலி தேவியுடன் ஒரிசா சென்று இருப்பதாக தெரியவந்தது. அதோடு ஆட்டோ சங்கருக்கு தேவியுடன் ஏற்பட்ட தொடர்பு மற்றும் அவனைப்பற்றிய காதல் விவகாரங்களும் வெளிவந்தன. ஜெயில் பறவையாக இருக்கும் போது ஆட்டோ சங்கரே இவற்றை ஜெயில் நண்பர்களிடம் கூறி இருக்கிறான்.

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஆட்டோ சங்கரின் காதல் வலையில் தேவி சிக்கினாள். தேவி, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவள். அவளுடைய கணவன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை பார்க்க தேவி வந்தபோது, ஆட்டோ சங்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தேவிக்கு ஆட்டோ சங்கர் அவனுடைய பெயர் பதித்த மோதிரத்தை பரிசாக வழங்கினான். அதேபோல், தேவியும் அவளுடைய பெயர் பதித்த மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்தாள்.

இப்படி 6 மாத காலமாக ஆட்டோ சங்கர் தேவிக்கு ஜெயில் காதலனாக இருந்தான். காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆட்டோ சங்கர் தப்பினான் என்றும் தெரியவந்தது. இதன் பேரில் போலீசார் வக்கீல் ராஜா, சுண்டல் குமார் ஆகியோருடன் ஒரிசாவில் உள்ள ரூர்கேலாவுக்கு சென்றனர். ரூர்கேலா நகரம் அருகே ஒரு குடிசை வீட்டில் ஆட்டோ சங்கர் அவனுடைய காதலியுடன் தங்கியிருப்பதாக போலீ சுக்கு தகவல் கிடைத்தது. அங்கு தேவி கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்தான்.

அந்த கிராமத்தின் முக்கிய புள்ளிகள் உதவியுடன் போலீசார் மாறுவேடத்தில் சென்று ஆட்டோ சங்கரையும், காதலி தேவியையும் மடக்கி பிடித்தார்கள். ஆட்டோ சங்கர் கைவிலங்கு மாட்டி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டான்.

போலீசில் சிக்கிக்கொண்டதும் ஆட்டோ சங்கர் அதிர்ச்சியில் உறைந்துபோனான். எதுவும் பேசவில்லை. தேவி தேம்பி தேம்பி அழுதாள். தப்பி ஓடிய 12 நாட்களில் போலீசார் அவனை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், கூட்டாளி செல்வராஜ் ஆகிய 2 பேரும் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் பாட்னா விரைந்தனர். அங்கு மோகனும், செல்வராஜூம் சி.ஐ.டி. போலீசிடம் வசமாக சிக்கினார்கள்.

ஒரிசாவில் இருந்து சென்னைக்கு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் சங்கரும், தேவியும் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆட்டோ சங்கர் பாண்ட், முழுக்கை சட்டை அணிந்திருந்தான். சட்டையின் இரு கைகளையும் மடக்கி விட்டு ஸ்டைலாக வந்தான். போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டி.ஜி.பி) துரை முன்பு ஆட்டோ சங்கரை ஆஜர்படுத்தினர். அப்போது ஆட்டோ சங்கரை நிருபர்கள் பார்த்தார்கள். சங்கரை போட்டோ படம் எடுத்தனர். மறுநாள் சங்கரும், தேவியும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

ஆரூர் மூனா செந்தில்

Saturday, February 18, 2012

கஸ்தூரிபாய் காந்தியின் கடைசி நாள்...





ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்த காந்தி, சிறையில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். இது சம்பந்தமாக, அவருக்கும் வைஸ்ராய்க்கும் நடந்த கடிதப்போக்குவரத்து வெற்றி பெறவில்லை. இதனால் காந்தி திட்டமிட்டபடி 1943 பிப்ரவரி 10ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கினார்.

அவர் உடல் நிலை நாளுக்கு நாள் நலிந்தது. பிப்ரவரி 16ந்தேதி அவர் நிலை மோசமாகி விட்டதாக, 6 டாக்டர்கள் கொண் குழு அறிவித்தது. இந்தச் செய்தி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. காந்தியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, பாராளுமன்றத்தில் பலர் வற்புறுத்தினர்.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அரசின் போக்கைக் கண்டித்து, வைஸ்ராயின் நிர்வாக சபையில் இருந்து சர்.எச்.பி. மோடி, சர்.என்.ஆர்.சர்க்கார், எம்.எஸ்.ஆனே ஆகிய மூவரும் ராஜினாமா செய்தனர். பிப்ரவரி 18ந்தேதி பேசும் சக்தியை காந்தி இழந்துவிட்டார் என்று டாக்டர்கள் அறிவித்தனர்.

காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி, டெல்லியில் பிப்ரவரி 19, 20 தேதிகளில் அனைத்திந்திய தலைவர்கள் மாநாடு நடந்தது. அதில் ராஜாஜி, தேஜ் பகதூர் சாப்ரூ, ஜெயகர், புலாபாய் தேசாய் உள்பட 20க்கு மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மகாத்மாவை நிபந்தனையின்றிடனடியாக விடுதலை செய்யும்படி, மாநாட்டில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறியது.

ஆனால் இந்த வேண்டுகோளை வைஸ்ராய் நிராகரித்தார். காந்தியை விடுதலை செய்யுமாறு நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த. தலைவர்கள் அறிக்கை விடுத்தனர். "காந்தியை கைதுசெய்தது மாபெரும் தவறு. அதற்காக பிரிட்டிஷ் அரசு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்" என்று இங்கிலாந்து நாட்டுப் பேரறிஞர் பெர்னாட்ஷா அறிக்கை விடுத்தார்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. காந்தி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். தமது மனோதிடத்தால், 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மார்ச் 3ந்தேதி வெற்றிகரமாக முடித்தார். தண்ணீர் கலந்த ஆரஞ்சு பழரசத்தை கஸ்தூரி பாய் கொடுக்க, அதை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

காவலில் இருந்த கஸ்தூரிபாய்க்கு 1943 டிசம்பர் கடைசியில் இருதயக் கோளாறு ஏற்பட்டது. நாளுக்கு நாள் உடல் நலிந்து, படுத் படுக்கையில் வீழ்ந்தார். அவரை விடுதலை செய்யும்படி, லண்டனில் உள்ள பிரபுக்கள் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்க இந்திய விவகார மந்திரி அமெரி மறுத்துவிட்டார்.

கஸ்தூரிபாயின் உடல் நிலை மோசம் அடைந்தது. மனிதாபிமானத்தை மதித்து, அவரை விடுதலை செய்யுமாறு அனைத்துக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்க பிரிட்டிஷார் மறுத்ததுடன், "கஸ்தூரிபாய் இப்போது இருக்கும் இடம் அவருக்குப் பாதுகாப்பானது" என்று கூறியது.

1944 பிப்ரவரி மாதத்தில், தன் முடிவு நெருங்கிவிட்டதை கஸ்தூரிபாய் உணர்ந்து கொண்டார். தன் பேரன், பேத்திகளைக் காண விரும்பினார். அவருடைய இறுதி விருப்பப்படி பேரன் பேத்திகள், நெருங்கிய உறவினர்கள் ஆகாகான் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1944ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு, கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம் கஸ்தூரிபாய் காலமானார்.

அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி, மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண் கலங்கினார். 62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன் சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின் பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை.

கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன் உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால் நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும். அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி, இறுதிச்சடங்குகளை செய்தார்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, February 17, 2012

சிங்கப்பூர் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு


1, ஜெனரல் ஒர்க்கர் (General Worker)
கல்வித்தகுதி முக்கியமில்லை, பாஸ்போர்ட் இருந்தால் போதும்.
தங்குமிடம் இலவசம்
விசா இரண்டு வருடம்.

2, வெல்டர் 6G (6G welder) (Singapore Experience, Freshers)
ITI Welder
தங்குமிடம் இலவசம்
விசா இரண்டு வருடம்.

3, வெல்டர் (3G welder) (Singapore Experience, Freshers)
ITI Welder
தங்குமிடம் இலவசம்
விசா இரண்டு வருடம்.

வரும் 24ம் தேதியன்று சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 8883072993


ஆரூர் மூனா செந்தில்

Thursday, February 16, 2012

ஆட்டோ சங்கர் - மரண தண்டணை - வழக்கு விசாரணை - பகுதி 5


சங்கரின் முரட்டுத்தனம் தாங்காமல் லலிதா அவனை விட்டு ஓடுவதற்கு திட்டம் போட்டாள். இதற்கு அவள் சுடலையின் உதவியை நாடினாள். சுடலை லலிதாவை கடத்திக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக வைத்து இருந்தான்.

இதை சங்கர் தெரிந்து கொண்டு சுடலையிடம் சமாதானமாகப் பேசி, லலிதாவை மீண்டும் பெரியார் நகருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினான். சுடலையோடு ஓடியதற்காக லலிதாவையும் சங்கர் கொன்று தீர்த்தான். ஆட்டோ சங்கரின் அடாவடிதனத்துக்கு அவனுடைய தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும்தான் தளபதிகளாக இருந்து செயல்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையின்போது மோகன் கூறியதாவது:-

சுடலையின் ஆலோசனையின் பேரில்தான் சங்கர் திருவான்மியூரில் விபசார விடுதி தொடங்கினான். சுடலை ஏராளமான அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்துக்கொண்டு வருவான். சில அழகிகளை பணத்துக்கு சங்கரிடம் விற்று விடுவான். சுடலை ஒரு பெண் ராசிக்காரன். அவனிடம் சிக்காத விபசார அழகிகளே கிடையாது என்று சங்கர் அடிக்கடி சொல்வான். எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு அழகியை சங்கரிடம் சுடலை அறிமுகப்படுத்துவான்.

விபசார விடுதிக்கு வரும் நல்ல அழகிகளை சங்கர் அவன் கைவசப்படுத்திவிடுவான். அழகிகளிடம் சங்கரைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது. அழகிகள் அவனுக்கு மட்டும்தான். அதன் பிறகு அவளுக்கு தனி வீடு. சில நாட்கள் கழித்து அவள் கழுத்தில் சங்கர் தாலி கட்டி மனைவியாக்கி விடுவான்.

ஜெகதீசுவரியை சங்கர் காதலித்தான். பெற்றோருக்கு தெரியாமல் அவளை வேலூரில் இருந்து சென்னைக்கு காரில் தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து கொண்டான். வேறு வழி இல்லாமல் சங்கரிடம் ஜெகதீசுவரி மனைவியாக வாழ்க்கையை தொடங்கினாள். ஜெகதீசுவரியை சங்கர் குடும்பப் பெண் போல நடத்தினான்.

அதன்பிறகுதான் சங்கரின் விபசார விடுதிக்கு 1981ம் வருடம் அக்டோபர் மாதம் கீதசுந்தரி வந்தாள். அவளை சுடலை அறிமுகம் செய்து வைத்தான். அவள் மிகவும் அழகாக இருந்தாள். கீதசுந்தரியை பார்த்தவுடன் அவளிடம் மனதை பறி கொடுத்து விட்டதாக எங்களிடம் சங்கர் கூறினான்.

கீதசுந்தரியுடன் சங்கர் குடிபோதையில் தாறுமாறாக நடந்து கொண்டான். இதனால் சங்கர் மீது கீதசுந்தரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. திருமணம் ஆன ஒரு வருடத்தில் சங்கருக்கும், கீதசுந்தரிக்கும் தகராறு முற்றியது. 1982ம் வருடம் அக்டோபர் மாதம் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கீதசுந்தரி தீக்குளித்தாள். மாலை 4 மணி அளவில் அவள் பிணமானாள்.

கீதசுந்தரியின் மரணம் சங்கருக்கு பெரிய இழப்பாக இருந்தது. அவள் மீது சங்கர் வைத்திருந்த அன்பின் காரணமாக சங்கர், பெரியார் நகரில் கட்டிய பங்களாவுக்கு "கீதசுந்தரி" என்று பெயர் சூட்டினான். அதை கீதசுந்தரியின் நினைவு இல்லம் போல் வைத்து இருந்தான். அடுத்து சுமதி 3வது மனைவியும், பெங்களூர் லலிதா 4வது மனைவியும் ஆனார்கள். இவர்களையும் சுடலைதான் கடத்தி வந்தான்.

சங்கர் சாராயம் குடித்து வந்து கும்மாளம் போடுவது லலிதாவுக்கு பிடிக்கவில்லை. சங்கரின் முரட்டுத்தனத்துக்கு லலிதாவினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் அவள் சங்கரிடம் இருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டினாள். இதே நேரத்தில் லலிதா மீது சுடலைக்கு மோகம் ஏற்பட்டது. சங்கர் வெளியே போன நேரம் பார்த்து லலிதா சுடலையுடன் ஓடிவிட்டாள்.

இருவரும் பல்லாவரத்தில் தங்கி இருந்தார்கள். பிறகு நாங்கள் பல்லாவரம் சென்று சமாதானம் பேசி அவளை அழைத்து வந்தோம். 1987ம் வருடம் அக்டோபர் மாதம் சுடலை சங்கர் வீட்டுக்கு வந்தான். அன்று அமாவாசை தினம். சுடலையை பார்த்ததும் சங்கருக்கு சரியான ஆத்திரம். அவனை தீர்த்துக்கட்டும்படி என்னிடமும், எல்டினிடமும் கூறினான். அவனுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றி கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அவன் பிணத்தை சங்கர் வீட்டிலேயே எரித்தோம்.

இதைத்தொடர்ந்து ஜனவரி (1988ம் வருடம்) மாதம் லலிதாவை பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று 11 மணிக்கு இரவு அவளை கழுத்தை நெரித்து சங்கர் கொலை செய்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் செத்து சுருண்டு விழுந்தாள். "நான் தொட்டவளை இனிமேல் எவனும் தொடக்கூடாது" என்று சங்கர் வெறியுடன் பேசினான்.

சங்கர், பெரியார் நகரில் அம்மன் கோவில் கட்டினான். இலவசமாக சிறுவர்களுக்கு இரவு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தான். இலவசமாக எல்லோருக்கும் சாராயம் குடிக்கக் கொடுப்பான். செலவுக்கு பணம் கொடுப்பான். சிறுவர் சிறுமியர்களுக்கு பிஸ்கட், சாக்லெட்களை அள்ளி அள்ளி வீசுவான். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த நன்கொடை கொடுப்பான்.

திருவான்மியூரில் உள்ள பெரியார் நகர் மக்கள் மத்தியில் சங்கர் ஒரு பெரிய மனிதனாக நடமாடினான். அவனுடைய கொலை ரகசியங்கள் எல்லோருக்கும் தெரியாது. எங்களைச் சேர்ந்த ஒரு சிலருக்குத்தான் தெரியும்."

இவ்வாறு மோகன் கூறினான்.

ஆட்டோ சங்கரின் தந்தை பெயர் தங்கராஜ். தாய் ஜெயலட்சுமி. வேலூரைச் சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்தார்கள். ஜெயலட்சுமி கணவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். ஆட்டோ சங்கருக்கு சீதாலட்சுமி என்கிற கவிதா, ஹேமசுந்தரி என்ற 2 மகள்களும், சீனிவாசன், டெல்லி சுந்தர் என்ற 2 மகன்களும் இருந்தனர்.

6 பேர்களை கொலை செய்த ஆட்டோ சங்கர், சிறையில் இருந்து தப்பி ஓடினான். ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 21.08.1990 அன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. அதற்கு முந்தின நாள் போலீசுக்கு பெரிய அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது.

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, February 14, 2012

விகடன் அதிபர் S.S.வாசனின் கடைசி நாள்...



சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும், மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தை அடைந்தவர், வாசன். எஸ்.எஸ்.வாசன் மனைவி பெயர் பட்டம்மாள். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே மகன் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒரே மகள் லட்சுமி ஜெமினியின் நிர்வாக இயக்குனராக இருந்த வாசன், இணை நிர்வாக இயக்குனர் பொறுப்பை பாலசுப்பிரமணியனுக்கு வழங்கினார்.

அலுவலகத்தில் அப்பா, மகன் என்ற பந்தமே இருந்ததில்லை. அலுவலகத்தில் எல்லோரும் வாசனை "பாஸ்" என்றே கூறுவார்கள். எனவே, பாலசுப்பிரமணியனும் அவரை "பாஸ்" என்றே அழைக்கலானார். வாசனின் இறுதி நாட்கள் பற்றி ஒரு கட்டுரையில் பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:-

"தன் பொருட்டு யாரும் துன்பப்படவோ, அனுதாபப்படவோ கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் அவர் (வாசன்). அவருக்கு வயிற்றில் புற்று நோய் வந்ததே எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. 1968 ஏப்ரலில்தான் எனக்குத் தெரியும். எங்கள் குடும்ப டாக்டர் எம்.எஸ்.வெங்கட்ராமன் என்னை அழைத்து, விஷயத்தைச் சொன்னார்.

"இது நோய் முற்றிய நிலை. ஆபரேஷனுக்காக வயிற்றைத் திறந்து பார்த்தபோது, நானே பயந்துவிட்டேன். `இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்' என்று அவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், சொல்லாமல் இருக்க முடியவில்லை" என்றார், டாக்டர். அதன் பிறகு, பாஸ் முகத்தைப் பார்த்தேன்.

எதுவுமே நடக்காதது போல் அவர் வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தார். அதையும் மீறி அவரிடம் ஒரே சோர்வு தென்படுவதை அப்போதுதான் ஊன்றி கவனித்து உணர்ந்தேன். ஒரு நாள் `பாஸ்' என்னைக் கூப்பிட்டார். தனக்கு என்ன என்பதை அவராகவே சொல்லிவிட்டார். முன்கூட்டித் தெரியும் என்று நானும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேன்.

"பாலு! திறமையுள்ள, தகுதியுள்ள மனிதர்கள் பலரிடமும் கருத்துக் கேட்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் வைத்து ஓர் இறுதி முடிவை எடுத்து அதன்படி செய்வது என் வழக்கம். வாழ்க்கையில் அடுத்தடுத்து எனக்குக் கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் அதுதான் காரணம். ஆனால், என் சொந்த உடல் நலம் பற்றிய விஷயத்தில் அதையே செய்தது தவறு என்று இப்போது புரிகிறது.

ஒன்றரை வருடத்துக்கு முந்தியே டாக்டர் வெங்கட்ராமன் என்னை ஆபரேஷன் செய்து கொள்ளச் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்னும் சில காலத்துக்கு என் ஆயுள் நீண்டிருக்கும். பலரிடம் கருத்துக் கேட்டுக் காலத்தைக் கடத்தியதுதான், என் உயிரையே விலையாகக் கேட்கிறது" என்றார்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, "இந்த விஷயங்கள் எதையும் நீ அம்மாவிடம் சொல்லாதே" என்று என் வாயை கட்டிப் போட்டார். ஆனால், அம்மாவிடம் சொல்லாமல் இருக்க எனக்குத் தைரியமில்லை. தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்லிவிட்டு, "தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாதீர்கள்" என்றேன்.

எப்படித்தான் என் தாயார் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டாரோ, அவர் எதுவும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் வளைய வந்தார். வீட்டுக்குள்ளேயே ஒரு கொடுமையான, வேதனையான கண்ணாமூச்சி நடந்து கொண்டிருந்தது. மறைவதற்கு சில மாதங்களுக்கு முன், ரங்கா நர்சிங் ஹோமில் ஒரு நாள் அவருக்கு `டிரிப்ஸ்' ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

மருந்தில் ஏதோ தவறு நடந்து, உடம்பு தூக்கிப்போட ஆரம்பித்தது. படுக்கையில் இருந்தபடி ரொம்ப அவஸ்தைப்பட்டிருக்கிறார். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு, வேறு `டிரிப்ஸ்' பாட்டில் பொருத்தப்பட்டதில் உடல் நடுக்கம் சரியாகிவிட்டது. இது நடக்கும்போது, இரவு 8 மணி இருக்கும். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ரங்கா நர்சிங் ஹோம் பறந்தோடிப்போய் அவர் முன்னால் நின்றேன்.

என்னைப் பார்த்தவர், "நடந்ததைக் கேள்விப்பட்டிருப்பாயே... எனக்கு ராத்திரி ஏதாவது ஆகிப்போனால், உடனே போன் செய்து யாருக்கும் தகவல் சொல்ல வேண்டாம். இரவு வேளையில் யாரையும் தொந்தரவு செய்யாதே. எதுவானாலும், காலை ஆறு மணிக்கு மேல் சொல்லு" என்றார். இதற்கு அவர் என்னிடம் எதிர்பார்த்த ஒரே பதில், "யெஸ் சார்". அதையே நானும் சொன்னேன்.

அவ்வாறு இல்லாமல், நான் உணர்ச்சிவசப்பட்டு, "ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்று சொல்லியிருந்தால், அவருக்குப் பிடிக்காது. நான் அமைதியாக நிற்க, "மாதவன் (உதவியாளர்) இங்கே என்னுடன் இருப்பான். நீ இப்போது புறப்படு" என்றார். அதற்கும் "யெஸ் சார்" சொல்லிவிட்டு, கனத்த இதயத்துடன் வெளியே வந்தேன்.

1969 ஆகஸ்டு 26ந்தேதி காலையில் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். அப்போது ஏழரை மணி இருக்கும். நான் எதிரில் போய் நின்றேன். அவரால் பேச முடியவில்லை. மிகவும் நலிந்து போயிருந்தார். அன்றைய காலைப் பத்திரிகையைக் கொடுத்து, "இதைப்படி" என்று வலது கையால் சுட்டிக் காட்டினார். "காங்கிரசில் பிளவு மறைகிறது" என்ற தலைப்பிட்டு வெளியாகி இருந்த செய்தி அது.

காமராஜருக்கும், இந்திராவுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பு மறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அந்தச் செய்தி சொன்னது. தன் உயிர் மூச்சாக அவர் கருதிய காங்கிரசில் பிளவு ஏற்பட்ட போது, அவரால் தாங்க முடியவில்லை. அந்தப் பிளவு மறைகிறது என்ற செய்தியைப் பார்த்ததும் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. சிரிக்க முடியாத அளவுக்கு பலவீனம்.

ஆனாலும் உதடுகள் லேசாக நெளிந்து ஒரு புன்னகையை வெளிப்படுத்த முயன்றன. அன்று காலை 9.20 மணி. நான் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேன். கண் மூடிப்படுத்திருந்தவரின் இடது கை மட்டும் `முடியவில்லை, முடியவில்லை' என்பது போல் இரு முறை அசைகிறது.

அதன்பின் எந்தச் சலனமும் இல்லை. பதறிப்போய் நாடி பிடித்துப் பார்க்கிறேன். துடிப்பு இல்லை. டாக்டரை அழைக்க எழுந்து ஓடுகிறேன். டாக்டரே அப்போது உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார். பரிசோதித்துப் பார்த்துவிட்டு, `உயிர் பிரிந்து விட்டது' என்று டாக்டர் அறிவித்தார்."

இவ்வாறு பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

வாசன் மறைந்தபோது தமிழக முதல் அமைச்சராக கருணாநிதி இருந்தார். அவர், மற்ற அமைச்சர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். வாசன் மரணச்செய்தி பரவியதும், சென்னையில் உள்ள எல்லா ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் அனைவரும் வாசன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் முதல் அமைச்சர் பக்தவச்சலம், மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆரும், மற்றும் பல நடிகர், நடிகைகளும், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மேக்கப்பைக்கூட கலைக்காமல், விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர். வாசன் உடலைப்பார்த்து எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். வாசனுடன் நீண்ட காலம் பழகிய ஜெமினிகணேசன் கதறி அழுதார்.

நடிகைகள் தேவிகா, வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா ஆகியோர் கண்ணீர் விட்டபடி நின்றனர். சிவாஜிகணேசன் சோகமே உருவாக இருந்தார். பானுமதி, பத்மினி, ஜெயலலிதா, சவுகார்ஜானகி, டி.ஆர்.ராஜகுமாரி, ஏவி. எம்.ராஜன், முத்துராமன், பி.எஸ்.வீரப்பா, சந்திரபாபு, ரவிச்சந்திரன், பாலாஜி, நாகேஷ், பட அதிபர்கள் ஏவி.மெய்யப்பசெட்டியார், நாகிரெட்டி, ஏ.எல். சீனிவாசன், டைரக்டர்கள் ஸ்ரீதர், ப.நீலகண்டன், திருலோகசந்தர், மாதவன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, கணவர் "கல்கி" சதாசிவத்துடன் வந்து மரியாதை செலுத்தினார். மாலையில் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம், மைலாப்பூர் எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (இன்றைய ராதாகிருஷ்ணன் சாலை) உள்ள வாசன் இல்லத்தில் இருந்து புறப்பட்டது. எம்.ஜி.ஆர், பட அதிபர்கள் ஏவி.மெய்யப்ப செட்டியார், சுந்தர்லால் நகாதா, முன்னாள் அமைச்சர்கள் கக்கன், பூவராகன், தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம் மற்றும் திரை உலகப் பிரமுகர்கள் ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

உடலை சுமந்து செல்ல, ஜெமினிகணேசன் தோள் கொடுத்தார். ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலம், கிருஷ்ணாம்பேட்டை மயானத்தை அடைந்தது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. "சிதை"க்கு வாசனின் ஒரே மகன் பாலசுப்பிரமணியன் தீ மூட்டினார்.

வாசன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில், சென்னை நகரில் எல்லா சினிமா கொட்டகைகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆபீசில், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

ஆரூர் மூனா செந்தில்


நன்றி : விகடனின் வாசன் நூற்றாண்டு மலர், மாலைமலரின் காலச்சுவடுகள்


Sunday, February 12, 2012

நானும் எனது ஊரும் (தொடர் பதிவு)

(கோயிலின் எழில்மிகு தோற்றம்)

நானாகவே எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சங்கவி அழைத்ததனால் உடனே எழுத துவங்குகிறேன். சங்கவிக்கு நன்றி. எனது ஊர் திருவாரூர். இன்று அது மாவட்ட தலைநகர், நகரில் மத்திய பல்கலைக்கழகம், அரசு மருத்துவக்கல்லூரி என ஏகமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனால் நான் வளர்ந்த காலத்தில் அது மிகச்சிறிய நகரம் அவ்வளவே.

திருவாரூர் என்பது அதனை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் சந்தை என்றளவில் வளர்ந்த பெரு கிராமம். இங்கு வர்த்தகமோ, தொழிற்சாலைகளோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே கிடையாது. இது விவசாயப்பகுதி. விவசாய செய்பொருட்களின் சந்தையாக திகழ்கிறது. என் அப்பாவும் அது போன்ற அரசின் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் என்ற விவசா உதிரி பொருட்கள் மொத்த விற்பனையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். நீங்கள் எல்லாம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நெல் விளையும் பெரும்பாலான நிலங்கள் தற்போதைய திருவாரூர் மாவட்டத்திலேயே உள்ளன.
(அப்பா, அம்மாவுடன் நானும் தம்பியும் திருவாரூரில் உள்ள மூர்த்தி ஸ்டுடியோவில் எடுத்தது)

திருவாரூர் சோழ அரசின் புராதன தலைநகர். பசுவின் கன்றை அறியாமல் கொன்றதற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற மனுநீதிசோழன் தலைநகராக ஆண்ட ஊர் இது. இன்றும் அந்த சம்பவம் நடந்த இடத்தில் நினைவுச்சின்னம் இருக்கிறது. நான் படித்த காலத்தில் பள்ளியில் ஒரு கட்டிடமாக இருந்தது அரண்மனை. தற்போது இடிக்கப்பட்டு விட்டது. பழைய நகராட்சி அலுவலகமும் அரண்மனையின் ஒரு கட்டிடத்தில் தான் இயங்கி வந்தது.
(எங்கள் ஊரின் பெருமக்குரிய ஆழி்த்தேர்)

அது போல் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் திருக்கோயில். இந்து மதத்தில் பெரிய கோவில் என்ற சொல்லுக்குரிய கோவில். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு முன்பே கட்டப்பட்ட கோயில் இது. அப்பொழுதெல்லாம் கூட்டம் மிகக்குறைவாக இருக்கும். நாங்கள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை கோயிலின் உள்ளே கிரிக்கெட் விளையாடியோ பட்டம் விட்டோ தான் கழிப்போம். அது போல் நவக்கிரகங்களும் ஒரே திசையை நோக்கி உள்ள கோயிலும் இது தான். எவ்வளவோ எழுத்தாளர்கள் தனிமையில் சிந்தித்து எழுத கோயிலையே பயன்படுத்தி வந்தனர். தற்போது சர்வதோஷ பரிகாரஸ்தலம் என்ற பெயரில் வியாபார நோக்கில் பிரச்சாரம் செய்யப்படுவதால் கூட்டம் அதிகமாகி விட்டது. எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் வந்து தங்கள் தோஷத்திற்கு பரிகாரம் செய்து விட்டு செல்வதால் நவக்கிரக பகுதி மட்டும் நல்ல கூட்டமாகவே இருக்கிறது.
(நான் ஊரில் ஒரு தருணத்தில்)

அடுத்தது திருவாரூர் ஆழித்தேர். இந்தியாவிலேயே மிகப்பெரிய தேர். தேர்த்திருவிழா நடக்கும் கால கட்டம் தான் எங்கள் ஊருக்கு திருவிழா. எவ்வளவு மக்கள் இழுத்தாலும் தேரை ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாது. பின்பக்கமிருந்து புல்டோசர் தள்ளினால் தான் தேர் நகர ஆரம்பிக்கும். பழங்காலங்களில் தேர்த்திருவிழா 10 நாட்கள் வரை நடக்குமாம். 1950களில் ஒரு பெரிய தீவிபத்து ஏற்பட்டு பெரிய தேர் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. தற்போதுள்ள பெரிய தேர், கமலாம்பாளுக்குரியது. இந்தத்தேரை 1990களில் நிலையடியிலிருந்து இழுத்து சென்று நான்கு வீதியும் சுற்றிய பின் நிலையடிக்கு வந்து சேர இரண்டு நாள் ஆகும். இரண்டு நாட்களும் மனது நிலை கொள்ளாத மகிழ்ச்சியில் இருக்கும். நண்பர்கள் குழு ஒன்று சேர்ந்து தேர் இழுப்போம். சிறிது தூரம் இழுத்த பின்பு கிடைக்கும் கால இடைவெளியில் ஒருவனை பத்து பேர் சேர்ந்து தூக்கிப் போட்டு பிடிப்போம். ஒரு முறை சண்முகம் என்ற நண்பனை தூக்கிப் போட்டு பிடிப்பதற்கு முன் பச்சைக் கொடி என்று அறிவிப்பு வந்ததால் அவனை அப்படியே விட்டு விட்டு வடம் பிடித்து விட்டோம். தொப் என்று கீழே விழுந்தான். பிறகு அவனை சமாதானப்படுத்தியதெல்லாம் பெரிய கதை. இரண்டு நாட்களும் சுற்று கிராமப்பகுதியிலிருந்து பெண்கள் தேர் வருவதை பார்த்துக் கொண்டிருக்கும் போது வடம் பிடிக்கும் பகுதியிலிருந்து பேப்பர் ராக்கெட்டுகள் விடுவோம். அங்கிருந்து பெண்கள் பறக்கும் முத்தம் தனக்கு பிடித்த ஆண்களைப் பார்த்து தருவர். ஆனால் தற்போதெல்லாம் போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாகி இந்த சீண்டல்கள் குறைந்து விட்டன. இன்றும் சரி என்றும் சரி, எப்பொழுது தேர்த்திருவிழா நடந்தாலும் நான் எந்த ஊரில் இருந்தாலும் ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எங்கள் ஊரின் கெளரவம் அது.

எனது காலத்தில் திரையரங்குகள் தைலம்மை, சோழா, நடேஷ், செங்கம், பேபி மற்றும் புலிவலத்தில் இருந்த கருணாநிதி என மொத்தம் ஆறு இருந்தன. அவற்றில் செங்கம், பேபி, கருணாநிதி மூடப்பட்டு பாக்கியுள்ளவை மட்டுமே உள்ளன. அவையும் ஏனோ தானோ வென்று தான் நடந்து கொண்டிருக்கின்றன. நான் பள்ளியில் படித்த காலத்தில் தியேட்டர்களுக்கு செல்வது மட்டுமே பொழுதுபோக்கு. மதிய வேளை பெரும்பாலும் ஏதாவது ஒரு தியேட்டரில் தான் இருப்போம்.

கலைஞர் அவர்கள் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் நானும் படித்தேன். பள்ளியைப் பற்றி நான் தனித் தொடராக வெளியிட்டுக் கொண்டிருப்பதால் பள்ளி விவரங்கள் மட்டும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கலைஞரை அவரின் தற்போதைய அரசியல் காரணமாக எனக்கு பிடிக்காமல் போனாலும் அவரால் தான் எனது ஊர் இந்தளவுக்கு வளர்ந்தது என்பதால் அவரை தலை குனிந்து வணங்குகிறேன். என்ன வருத்தம் என்றால் ஊர் பழைய அமைதியை இழந்து பரபரப்புக்குள் தலையை விட்டுக் கொண்டுள்ளது.

1997ல் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு ஊரில் இருந்தால் உருப்பட மாட்டேன் என்று வலுக்கட்டாயமாக சென்னைக்கு பஸ் ஏற்றப்பட்டேன். அதிலிருந்து ஊருக்கு செல்வது வாரம் ஒரு முறை என்று இருந்தது. பிறகு மாதம் ஒரு முறை என்று மாறி இப்பொழுது இரு மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. இப்பொழுது ஊருக்கு சென்றாலும் கிளம்பி சென்னைக்கு வரும் அன்று மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.

நானும் இந்த தொடர் பதிவை தொடர

கேஆர்பி செந்தில்
நாய் நக்ஸ் நக்கீரன்
பிலாசபி பிரபாகரன்
அஞ்சாசிங்கம் செல்வின்
மனோ நாஞ்சில் மனோ
கோவை நேரம் ஜீவானந்தம்
புன்னகை மன்னன் தஞ்சை குமணன்
காங்கேயன் தஞ்சை சங்கர்
முல்லைவனம் மயில்வாகனா
சினிமா சினிமா ராஜ்

ஆகியோரை அழைக்கிறேன்.


ஆரூர் மூனா செந்தில்

Friday, February 10, 2012

ருத்ரபூமி - Journey 2 The Mysterious Island - சினிமா விமர்சனம்



ஏற்கனவே பலர் தோனி படம் பார்த்து விமர்சனம் எழுதி விட்டதால் அதனை தவிர்த்து இன்று 8 படங்கள் ரிலீசாகியிருந்தன, சரி நம்ம ராக் நடிச்ச படமாச்சே என்று Journey 2 - The Mysterious Island (ருத்ரபூமி) படத்திற்கு சென்றேன். இது 3D படம்.

படத்தின் கதை, கதாநாயகன் சேன் அவனது அம்மா மற்றும் அம்மாவின் இரண்டாவது கணவர் ஹாக் (தி ராக்(Dwayne Johnson)) ஆகியோருடன் வசித்து வருகிறான். அவனுக்கு ஹாக்கை பிடிக்கவில்லை. சேனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதனை மொழிப்பெயர்க்க ஹாக் உதவுகிறார். அந்த மெசேஜின் படி ஒரு தீவுக்கு அவர்கள் செல்ல முயல்கின்றனர். அதற்கு அவர்களை கொண்டு விட ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி அதில் சேன், ஹாக், பைலட் மற்றும் அவரது மகள் ஆகியோர் செல்கின்றனர். ஹெலிகாப்டர் சூறாவளியில் சிக்கி உடைந்து கடலில் விழுகின்றது, அனைவரும் நீந்தி அந்த தீவுக்கு செல்கின்றனர். அந்த தீவு வினோதமானது, மிகச்சிறிய விலங்குகள் மிகப்பெரியதாகவும், மிகப்பெரிய விலங்குகள் மிகச்சிறியதாகவும் இருக்கின்றன. அங்கு சேனின் தாத்தா இருக்கிறார். அந்த தீவு 140 வருடங்களுக்கு கடலின் உள்ளேயும் 140 வருடங்களுக்கு கடலுக்கு மேலேயும் இருக்கிறது. ஹாக் அந்த தீவு இரண்டு நாட்களுக்குள் கடலில் மூழ்கப் போவதை கண்டுபிடிக்கிறார். அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா என்பதே கதை.

காதில் பூவை சுற்றிக் கொண்டு லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய பேன்டஸி படம் இது. அது 3Dல் படம் அள்ளுகிறது. குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

அவர்கள் அந்த தீவுக்குள் நுழைந்தவுடன் தென்படும் மிகச்சிறிய யானையை பார்த்ததும் பிரமிப்புக்குள் மூழ்குகிறோம். அது போல் மிகப்பெரிய பல்லி, மிகப்பெரிய தேனீ, மிகப்பெரிய எறும்பு எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

ராக் சேனுக்கு காதலியை கவர்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் போது அவரது மார்பில் ஒரு காயை எடுத்து அடிக்க அது எகிறி வந்து நம் முகத்தில் விழுவது போல் வருவது, தான் பலசாலி என்று கூறி மிகப்பெரிய பல்லியை முகத்தில் குத்தி பல்லியை கோவப்படுத்துவது என ராக் அசத்துகிறார். அது போல் சேனாக வரும் (Josh Hutcherson) நன்றாக நடித்துள்ளார். அந்த பைலட்டாக வரும் (Luis Guzman) காமெடியில் அசத்துகிறார். பைலட்டின் பெண்ணும் (Vanessa Hudgens) ஜொள்ளு விட வைக்கும் அளவுக்கு இருக்கிறார்.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் சென்றால் ரசித்து வரலாம். படமும் மிகச்சிறிய படம் தான் மொத்தமே 01.30 மணிநேரம் தான் ஓடுகிறது.

ஆரூர் மூனா செந்தில்


Thursday, February 9, 2012

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...



தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56வது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார். மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.

உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார். "என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்" என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது. தேவர் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம், 30ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ணதேவர், சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன், எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள்.

அண்ணா பேசுகையில் கூறியதாவது:_
"தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர். எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல்லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார். ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். "உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட்சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்" என்று பதில் அளித்தேன்."

இவ்வாறு அண்ணா கூறினார்.

தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், "தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரியத்துடன் சொல்லக்கூடியவர்" என்று குறிப்பிட்டு இருந்தார். சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், "நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்" என்று கூறியிருந்தார்.

முத்துராமலிங்கதேவர், 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் இந்திராணி அம்மாள். பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். 1927ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார். வெள்ளைக்காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார்.

அப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு "பிளாக்" கட்சியில் சேர்ந்தார். முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகு 1947ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1952ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1957ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939ம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்.

கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார். 1957 செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது.

அப்போது இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முத்துராமலிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர்.

தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார்.

33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : காலையில் ஆனந்த விகடன் வாங்கியதும் மாலையில் படித்துக் கொள்ளலாம் என அசட்டையாக இருந்து விட்டேன். ஆனால் அதன் இலவச இணைப்பான என் விகடனில் ஒரு பழகிய முகம் தெரிந்தது, ஆர்வமுடன் எடுத்துப் பார்த்தால் நம்ம கேபிள் சங்கர் அண்ணன். அவரைப் பற்றியும் அவரது வலைத்தளத்தைப் பற்றியும் இரண்டு பக்கத்திற்கு கட்டுரை வந்துள்ளது. மிகுந்த சந்தோஷம். வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே. மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியாக ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவைப் பற்றி போடப் போவதாகவும் அதில் அறிவிப்பு வந்துள்ளது. இனிமேல் நமது வலையுலக நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் விகடனின் அங்கீகாரம் என்பது கூடுதல் கொண்டாட்டம் தான் போங்கள். வலையுலகத்தினர் தங்களுடைய வலைப்பதிவு பற்றிய விவரங்கள் விகடனில் இடம் பெற வேண்டும் என விரும்பினால் தங்களுடைய சுய அறிமுகத்துடன் தங்களது வலைப்பதிவு பற்றிய விவரங்களை chennai@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் அவற்றில் சிறந்த வலைப்பதிவு, ஒவ்வொரு வாரமும் என் விகடன் சென்னை பதிப்பில் வெளியிடப்படும்.

Wednesday, February 8, 2012

ஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4



ஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆவார். இந்த வழக்கு முக்கியமாக கருதப்பட்டதால் மாநில ரகசிய குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி, விசாரணையை மேற்கொண்டார்.

ஆட்டோ சங்கர் தனது தொழிலுக்கு போட்டியா இருந்தவர்களையும், தனக்கு வேண்டாதவர்களையும் கொலை செய்தது எப்படி என்பது பற்றி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தான். சங்கரின் வாக்குமூலம் வருமாறு:-

"எனது பெயர் கவுரிசங்கர் என்ற சங்கர். நான் இளமையில் பெற்றோர்களுடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தேன். என் தந்தை சென்னையில் டீக்கடை நடத்தினார். என்னை கல்லூரியில் பி.யு.சி. வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு எனக்கு படிப்பு வரவில்லை. இதனால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

படித்துக்கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவர்கள் பலர் எனக்கு நண்பர்கள். அவர்கள்தான் எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுத்தந்தனர். அதன் பிறகு நான் தனியாக ஒரு வருடம் ஆட்டோ வாடகைக்கு வாங்கி ஓட்டி வந்தேன். ஒரு நாளைக்கு சாப்பாடு போக எனக்கு 15 ரூபாய் கிடைக்கும்.

திருவான்மியூரில் இருந்து கோவளத்துக்கு வாடிக்கையாக கள்ளச்சாராயம் ஏற்றிக்கொண்டு போவதற்கு ஒரு சாராய வியாபாரி என்னை அழைத்தார். அதிக பணம் தருவதாகச் சொன்னார். இதனால் நான் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்தினேன். எனக்கு அதிகப்பணம் கிடைத்தது.

இதனால் நான் தினமும் சாராயம் குடித்துவிட்டு விபசார விடுதிக்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நானே சொந்தமாக கள்ளச்சாராய வியாபாரம் செய்தேன். அதில் எனக்கு பணம் அதிகம் கிடைத்தது. இதனால் நான் ஆட்டோ ஓட்டும் வேலையை விட்டுவிட்டு சாராய வியாபாரி ஆனேன்.

ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வருவதற்கு சுடலை என்ற ஆட்டோ டிரைவரை ரவி அறிமுகப்படுத்தினான். சுடலை மிகவும் தைரியமானவன். "நான் மதுரைக்காரன். எதையும் துணிந்து தைரியமாக செய்வேன். வேலைக்கு தகுந்தாற்போல் சம்பளம் கொடுத்துவிடு" என்று என்னிடம் அடிக்கடி சுடலை சொல்வான்.

சுடலையின் தைரியத்தில் நான் திருவான்மியூரில் குடிசை வீட்டில் அழகிகளை அழைத்து கொண்டுவந்து விபசார தொழில் நடத்தினேன். கோடம்பாக்கம் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்து வருவதில் சுடலை கில்லாடி. அவனை வைத்துத்தான் எனது விபசார விடுதி ஓகோ என்று ஓடியது. இதனால் நான் சுடலையை நம்பினேன். எனது தொழில் ரகசியங்கள் அத்தனையும் அவனுக்கு தெரியும்.

நான் தாலி கட்டிய மனைவியின் பெயர் ஜெகதீசுவரி. அதன் பிறகு விபசார விடுதிக்கு வந்த அழகி சுந்தரி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவளை விபசார விடுதிக்கு அனுப்பாமல் தனியாக வீடு எடுத்து அவளை தங்கச் செய்தேன். அவளை தாலி கட்டி மனைவியாக்கினேன். அதன் பிறகு சுமதி என்ற அழகியையும் நான் மனைவியாக சேர்த்துக் கொண்டேன்.

என் காதலி என்னைத்தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது என்ற கொள்கையுடையவன் நான். யாராவது காதலியுடன் பேசினால் எனக்கு பொல்லாத கோபம் வரும். சுடலைதான் சுந்தரி, சுமதி ஆகியோரை விபசார விடுதிக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தியவன். இதனால் அவன் அவர்களிடம் கள்ளத்தனமாக பேசிக்கொண்டு வந்தான். இதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன். ஒருநாள் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது சுந்தரியை சுடலை கட்டாயப்படுத்தி கற்பழித்ததை பார்த்துவிட்டேன். அன்று அமாவாசை தினம். நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்போது நான் அதிகமாக குடிப்பேன். ஒருநாள் அமாவாசை தினத்தில் சுடலை என்னை வந்து சந்தித்து, அழகிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் கேட்டான். அவனுக்கு நான் பிராந்தி கொடுத்தேன். இஷ்டம் போல குடித்தான். போதையில் அவன் தரையில் சாய்ந்தபோது அவனை கழுத்தை நெரித்து கொன்றேன். அவன் மூச்சு நின்றது. நான் நினைத்தபடி அவனை வஞ்சம் தீர்த்தேன். எனக்கு எதிராக விபசார விடுதி நடத்தியவனும், எனது காதலியை கற்பழித்தவனும் தொலைந்தான் என்று பெருமூச்சு விட்டேன். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

அப்போது என்னுடன் இருந்த எனது தம்பி மோகன், மச்சான் எல்டின் ஆகியோர் சரியான `ஐடியா' கொடுத்தனர். "ஏன் தயக்கம்? காருக்கு வாங்கி வைத்துள்ள பெட்ரோல் கைவசம் இருக்கிறது. ஊற்றி எரித்து கணக்கை தீர்த்துவிடலாம்" என்று கூறினார்கள். அவர்கள் 2 பேரும் சுடலையின் உடலில் பெட்ரோலை ஊற்றினார்கள். நான் பாண்ட் பாக்கெட்டுக்குள் வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து `குச்சி'யை பொருத்திப்போட்டேன். சுடலையின் சடலத்தை எரித்து தீர்த்தோம். அதன் பிறகு சாம்பலை முட்டுக்காடு கோவளம் கடற்கரையில் கரைத்தேன். நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன்.

ஒரு வாரம் கழித்து சுடலையை தேடி அவனது நண்பன் ஆட்டோ டிரைவர் ரவி வந்தான். அவனையும் கொலை செய்துவிட முடிவு செய்தோம். ரவியை மோகனும், எல்டினும் நைசாக குடிசை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். வழக்கம்போல ரவிக்கு சாராயம் ஊற்றிக்கொடுத்து அவனை மயங்க வைத்தனர். அப்போது நான் வீட்டில் இருந்தேன். மோகனும், எல்டினும் என்னிடம் வந்து, "ரவி தம்பி பயணத்துக்கு ரெடியாக இருக்கிறான். காரியத்தை முடிச்சுட வேண்டியதுதான்" என்று சொன்னார்கள்.

உடனே நான், மோகன், எல்டின் ஆகியோருடன் சென்றேன். அப்போது இரவு 11 மணி இருக்கும். ரவி காக்கிப் பேண்ட், முழுக்கை சட்டை, சிகப்பு தொப்பியுடன் தரையில் குடிபோதையில் மயங்கிக் கிடந்தான். நாங்கள் 3 பேர்களும் சேர்ந்து ரவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். உடலை வீட்டிற்குள் புதைத்து விட்டோம்.

இதேபோல்தான் மைலாப்பூர் சம்பத், மோகன், கோவிந்தராஜா ஆகிய 3 பேர்களும் என்னிடம் வந்து "ஓசி"யில் அழகிகளை அனுபவித்துவிட்டு பணமும் தராமல் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் 3 பேர்களை "சிவப்பு ரோஜாக்கள்" சினிமா பாணியில் கதையை முடித்தோம். ஒரே வீட்டில் 3 பேர்களையும் குழி தோண்டி புதைத்தோம். இதற்கு பாபு மிகவும் உதவியாக இருந்தான்."

இவ்வாறு சங்கர் போலீசாரிடம் கூறியிருந்தான்.

ஆரூர் மூனா செந்தில்

இதன் முந்தைய பாகங்கள் பகுதி 1 / பகுதி 2 / பகுதி 3Link
(தொடரும். . .)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...