எப்போதும் முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்கச் செல்லும் நான், கடும் வேலை, அலைச்சல் காரணமாக நேற்று இரவுக் காட்சிக்கு தான் தெகிடி சினிமாவுக்கு செல்ல முடிந்தது. பத்தரை மணிக்கு எஸ்2 பெரம்பூரில். ரொம்ப நாட்களுக்கு பிறகு சென்னையில் இரவுக்காட்சி. மகிழ்ச்சியாக இருந்தது.
2001 முதல் 2007 வரை பெரும்பாலான முன்னிரவுகள் திரையரங்கில் தான் கழியும். உதயம், கமலா, விஜயா, காசி, ஏவிஎம் ராஜேஸ்வரி அரங்குகளில் புல் மகாதியானத்துடன் நுழைந்து உற்சாகமாக படம் பார்த்தது எல்லாம் என் வரலாற்றின் முக்கிய பக்கங்கள்.
படம் பார்த்து வந்ததும் போதை இறங்கி பசி வந்து சாப்பாட்டை தேடியலைந்த இரவுகள் பல. பசியுடன் மட்டும் படுத்ததில்லை. எதாவது ஒரு புண்ணியவான் அந்த இரவுகளில் அன்னமிட்டு விடுவான்.
திருமணத்திற்கு பிறகு இரவுகளில் சினிமாவுக்கு போவதென்றால் தங்கமணியிடம் அனுமதி வாங்குவதற்குள் நம் படம் பார்க்கும் ஆர்வம் புஸ்ஸென்று இறங்கிப் போயிருக்கும். பிறகு படிப்படியாக குறைந்து இப்போதெல்லாம் சென்னையில் இரவுக் காட்சி போவதேயில்லை.
திருவாரூர் சென்றால் மட்டும் இரவுக் காட்சி செல்வதுண்டு. அப்பா, அம்மா இருப்பதால் தங்கமணியின் வசவுகளில் இருந்து தப்பித்துக் கொள்வேன். இப்போது ஊரில் இருந்து சொந்தங்கள் வந்து இருப்பதால் மீண்டும் குஷியாக கிளம்பி ஒரு இரவுக் காட்சியையும் நள்ளிரவில் ஒரு மாநகர உலாவும் வந்தாகி விட்டது.
-----------------------------------------------------------
ஒரு பல்லு புடுங்குனா கூட ஒரு பல்லு புடுங்குறது ப்ரீ
---------------------------------------------------------
படித்த புத்தகம்
கர்ணனின் கவசம் என்ற பெயரைப் பார்த்ததும் பயங்கர பாண்டஸியான புத்தகமாக இருக்கும் என்று நினைத்து ஆர்வமுடன் வாங்கினேன். ஆரம்பம் கூட சற்று சுவாரஸ்யமாகவே இருந்தது. ஆனாலும் நேரம் செல்லச் செல்ல ஒரு அயர்ச்சி வந்து விட்டது.
அளவுக்கு அதிகமான கதாபாத்திரங்கள், கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத காட்சிகள் என ரொம்பவே சலிப்பு. முதல் நான்கைந்து பகுதிகளுக்குள்ளாகவே கதாபாத்திரங்கள் அறிமுகங்கள் முடிந்திருக்க வேண்டும். அல்லது சஸ்பென்சுக்காக ஒன்றிரண்டு பாத்திரங்கள் கடைசி பகுதியில் அறிமுகப்படுத்த வேண்டும். பகுதிக்கு ஐம்பது கதாபாத்திரங்கள் அறிமுகமானால் நமக்கு மண்டை காய்ந்து விடுகிறது.
அதுவும் காலகட்டங்கள் சம்பந்தமில்லாமல், பீஷ்மர், குந்தி ஆரம்பித்து ஆதித்தகரிகாலன், குந்தவை, ரவிதாசன் வழியாக வந்து துரியோதனன், சகுனியையும் தொட்டு வியாசரை கடந்து இன்னும் சமகால மனிதர்களை திரிசங்கு சொர்க்கம் வரை கொண்டு செல்வதை காணும் போது நமக்கு தாவு தீர்ந்து விடுகிறது.
காசு கொடுத்து புத்தகத்தை வாங்கி படிக்கிறவனுக்கு காது குத்துவதற்கும் ஒரு அளவு வேண்டாமா, அடங்கப்பா. நாவலில் வரும் எல்லாப் பாத்திரங்களுக்கும் மற்ற எல்லாப் பாத்திரங்களும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. நமக்குள் இருக்கும் இது போன்ற உணர்வுகளை நான் இது வரை உபயோகப்படுத்தவில்லையோ என்று சந்தேகம் கூட வந்து விட்டது.
அண்டசராசரங்களும் கிடுகிடுக்கும் அளவுக்கு நம் காதில் ஒரு கூடை பூ சுற்றியிருக்கிறார்கள்.
வாழ்க வளமுடன்
---------------------------------------------------------------
நம்ம கிராபிக்ஸ் ஆட்களுக்கு ரசனையே வேற
-----------------------------------------------------
பார்த்த படம்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திருப்தியான படம் பார்த்தேன். கொஞ்சம் கூட போரடிக்காமல் சலிப்புத் தட்டாமல் படம் பார்த்து எவ்வளவு நாளாகி விட்டது. இப்படிப்பட்ட படங்களை எல்லாம் முதல் காட்சியில் பார்க்க தவற விடுவதே என் வழக்கமாகி விட்டது. தேடிச் சென்று ஆப்புகளில் நானே அமர்ந்து கொள்கிறேன்.
தெகிடி படம் பார்த்த ஒருவர் மற்றவருக்கு சுமாராக விவரித்தால் கூட கேட்டவருக்கு படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்து விடும். எனக்கு சொன்னவர் கூட அப்படித்தான் சொன்னார்.
ஒரு நாயகன் டிடெக்டிவ் ஏஜென்ஸியில் வேலைக்கு சேருகிறான். ஐந்து பேரை பற்றிய விவரங்கள் விசாரித்து சொல்லும்படி கம்பெனி சொல்கிறது. நால்வரைப் பற்றி விவரங்கள் தந்து விட்டு ஐந்தாவது ஆளான நாயகியை உளவு பார்க்கிறான். தன்னை மறந்து காதல் கொள்கிறான்.
பிறகு இவன் உளவு பார்த்து சொன்ன அனைவரும் ஒவ்வொருவராக சாகிறார்கள். நாயகியை காப்பாற்றவும் யார் இதை செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவும் நாயகன் போராடுகிறான். அது அவனுக்கு சாத்தியமா என்பது தான் படம். வெகு சுவாரஸ்யமாக சீட் நுனியில் அமர்ந்து பார்க்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.
இது போல் மாதம் ஒரு படம் வந்தால் போதும் என்னைப் போன்ற சினிமாப் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஆரூர் மூனா