இன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் போடுவதற்கு குறைந்தது ஒரு மணிநேரமாகும். ஆனால் இன்று பணம் போடுவதற்கு மிசின் வைத்திருக்கிறார்கள். ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்து விட்டது. பிறகென்ன நேரம் நிறைய இருந்ததால் வண்டியை சினிமாவுக்கு விட்டேன்.
இது சரியாக எல்லோராலும் கணிக்க முடியாத படம், சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. இன்னும் சிலரை மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்து விடும். எனவே இந்த விமர்சனம் எனது பார்வையில் மட்டுமே.
பனிமலை என்ற ஊரில் வாழ்ந்து வரும் மக்களிடையே ஒரு அபூர்வ நோய் பரவுகிறது. அதாவது வைரஸ் கிருமி தாக்குதலால் பேசும் தன்மையை மக்கள் இழக்கத் தொடங்குகின்றனர். அரசாங்கம் சுகாதாரத்துறை அமைச்சரை அனுப்பி தீர்வு காண பார்க்கிறது.
ஆனால் நோய் முற்றி மரணம் வரை செல்கிறது. வாயைத் திறந்து பேசியதால் மரணம் சம்பவித்தது தெரிய வருகிறது. இதனால் பீதியாகும் அரசு பனிமலையில் மக்கள் வாயைத் திறந்து பேச தடை விதிக்கிறது. மக்கள் பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டு சைகையாலேயே பேசிக் கொள்கின்றனர்.
இறுதியில் அரசு இதற்கு மருந்து கண்டுபிடித்து மக்களுக்கு நோயை குணமாக்குகிறது. இது தான் கதை.
அய்யய்யோ இது தான் கதைன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு, இது கதையல்ல, இது தான் படத்தின் ப்ளாட்பார்ம்.
இந்த பிளாட்பார்ம்மில் துல்கரும் நஸ்ரியாவும் ஓட்டும் அழகான காதல் கதை தான் படம். கூடவே ரோபோ சங்கர் மற்றும் குழுவினர் ஒரு தள்ளுவண்டியும், இயக்குனர் நியுஸ் சானல் அறிவிப்பாளராக ஒரு தள்ளுவண்டி, ஜான்விஜய் ஓட்டும் ஒரு தள்ளுவண்டி, அர்ஜுனன் காதல் கதை ஒரு தள்ளுவண்டி, வினுசக்கரவர்த்தி அவர் இடத்தில் நடக்கும் அனாதை இல்லம் ஒரு தள்ளு வண்டி என எல்லாம் கலந்து கட்டி ஓடுகிறது.
எவ்வளவு தான் விழிப்பாக இருந்து பார்த்தாலும் ஒரு வித அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் வித்தியாசமான முயற்சி தான்.
துல்கர் சல்மான் தமிழுக்கு இனிய வரவு. அந்த ப்ரெஷ்னஸ் தான் அவரது பலம். உற்சாகமான நடிப்பு அவர் முகத்தில் துள்ளி விளையாடுகிறது. டயலாக் டெலிவரி, சிறுபுன்னகை, பாஸிட்டிவ் மனோபாவம், துறுதுறுப்பு என டிஸ்டிங்சனில் பாஸாகிறார். சரியான படத்தை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கான எதிர்காலம் தமிழ்சினிமாவில் பிரகாசமாகவே இருக்கிறது.
நஸ்ரியா அமைதியான மருத்துவர். அனாவசியமாக பேசாதவர், வேறொருவனை காதலிக்கும் அவர் துல்கரை கண்டால் உற்சாகமடைவதும் மற்றவர்களை கண்டால் சோகமாக இருப்பதுமாய் இருக்கிறார். சாக்லேட் சாப்பிடும் போது காட்டும் எக்ஸ்பிரசன் சூப்பர். நமக்கும் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையே வருகிறது.
அர்ஜுனன் காதல் எபிசோடுகள் படத்தின் ஆகப்பெரும்பலம். ஒவ்வொரு முறையும் அவர் காதலை சொல்ல முயற்சித்து பிறகு வார்த்தை குழறி கெட்ட வார்த்தை பேசுவதும், காதலியிடம் காதலை சொல்லப் போய் பேசும்திறன் இழந்து அதனால் காதலை பெறும்போதும் பட்டையை கிளப்புகிறார். இன்னொசன்ட் முகம் தான் அவர் பலம்.
ரோபோ சங்கர் குடிகாரர்களின் சங்கத் தலைவனாக வந்து படம் முழுக்கவே சரக்கடித்து அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார். சினிமா நாயகனாக வந்து மொக்கைப் படங்களாக நடித்து கடுப்பேற்றும் பாத்திரத்தில் ஜான் விஜய், வெல்டன்.
பாண்டியராஜன் அப்பாவி அமைச்சராக வந்து மக்களிடையே பேச முடியாமல் பேசமுடியாதது போல் நடித்து இறுதியில் பரிசோதனை முயற்சியில் குரலையே இழக்கிறார்.
மதுபாலா நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில், பெரிய ஈர்ப்பு ஒன்றுமில்லை. நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்துங்கம்மா இப்படியெல்லாம் இருந்தா நம்ம ஆட்களுக்கு பிடிக்காது.
பாடல்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, பார்க்க நல்லாயிருக்கிறது. அவ்வளவு தான். பெரிய திருப்பங்களோ ஆச்சரியங்களோ இல்லாத திரைக்கதை இடைவேளை தாண்டி சற்று நொண்டியடிக்கிறது. தியேட்டரில் இருப்பவன் எல்லாம் கடுப்பாகி புலம்ப ஆரம்பித்து விட்டான்.
எனக்கு இரண்டாம் பாதி சைகை மொழி பிடித்து இருந்தது. க்ளைமாக்ஸ்க்கு முன்பு வரை படத்தில் கை, கண் அசைவு மொழி தான்.
ந்ல்ல ஒரு காதல் படம் வித்தியாசமான ப்ளாட்பார்மில், சினிமா ஆர்வலர்கள் ரசிக்கலாம். இல்லையென்றால் கழுவி ஊற்றலாம். எனக்கு டபுள் ஓகே.
ஆரூர் மூனா