சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, September 28, 2012

தாண்டவம் - சினிமா விமர்சனம்

இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ராக்கியில் காலை 8 மணிக்கு சிறப்பு காட்சி போட்டிருந்தார்கள். நானும் போக நினைத்தேன். வேலை காரணமாக போக முடியவில்லை. ஆனால் வேலைக்கு போகும் போது பார்த்தால் கூட்டம் பட்டையை கிளப்பிக் கொண்டு இருந்தது. சரி 11.30 காட்சிக்காவது போகலாம் என்று நினைத்திருந்தேன். வேலையை முடித்து கிளம்பிக் கொண்டு இருக்கும் போது சக ஊழியர் கண்ணை சிமிட்டினார்.

படமா சரக்கா என்று பட்டி மன்றம் நடந்ததில் அடுத்த காட்சிக்கு கூட போகலாம் என்று படத்தை ஒத்தி வைத்து பாருக்கு கிளம்பி வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு 3 மணிக்கு காட்சிக்கு டிக்கெட் எடுக்க வந்தால் மொத்தமே 50 பேர் தான் இருந்தார்கள். நான் அப்போதே உசாராகியிருக்க வேண்டும். போதை சற்று கண்ணை மறைத்ததால் தடுமாறி விட்டேன். படம் பார்த்து விட்டு வெளியில் வந்தால் தக்காளி தலைவலி தான் மிச்சம். வீட்டுக்கு போய் வீட்டம்மாகிட்ட திட்டு வாங்கி்ட்டு தூங்கியிருந்தா கூட நல்லாயிருந்திருக்கு்ம் என்ற ஞானம் படம் முடிந்த பின்பே வந்தது.

உலகசினிமாவின் காப்பியாக இருந்தாலும் நான் முன்பே பார்க்காததால் தெய்வத்திருமகள் பிடித்திருந்தது. இந்த படம் எந்த ஒரு புதுமையும் இல்லாமல் சப்பென்று வந்தது தான் கொடுமையாகி விட்டது. அரதப்பழசான கதையை லண்டன், கண்பார்வையற்றவர் என்று கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள். மனைவியை கொலை செய்த வில்லன்களை துவம்சம் செய்யும் அதே பழைய குரோதம் டைப் கதை தான்.

வழக்கம் போல் விக்ரம் நடிப்பு அருமை. கண்ணில்லாத ஒருவன் செய்யும் அனைத்து செயல்களையும் அதே இயல்புடன் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் தூள் தான். ஒரு சண்டையில் வில்லன்கள் சட்டையை கிழித்து உடம்பை காட்டும் காட்சியில் என்னை மறந்து விசிலடித்தேன். சில சமயங்களில் கழுத்துப் பகுதியில் தோல் தளர்ந்து வயதானது அப்பட்டமாக தெரிகிறது.

அனுஷ்கா முகமும் சரி, உடல் வனப்பும் சரி பார்ப்பவர்களையெல்லாம் ஜொள்ளு விட வைக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் முயற்சித்து இருக்கிறார். ஒரு காட்சியில் ஆபரேசன் முடிந்து ஒரு ஆண்ட்டி டாக்டரும் இவரும் வரும் போது இவரும் ஆண்ட்டி போலவே தெரிகிறது தான் மைனஸ்.

எமிஜாக்சன் அம்சமாக இருக்கிறார். இவர் தமிழில் பேசுவது கொச்சையாக இல்லாமல் இயல்பாகவே இருக்கிறது. மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார்கள் போல. விக்ரமை ஒருதலையாக காதலித்து காத்துகொண்டே இருக்கிறார். நமக்கெல்லாம் இது போல் வாய்க்காது போல.

சந்தானம் முதல் காட்சியிலிருந்து அதகளத்தை துவக்கி விடுகிறார். படத்தின் டென்சனை குறைத்து கலகலப்பாக மாற்றுகிறார். இவரது வசனங்கள் படபடவென திரையரங்கிற்குள் பட்டாசை வெடிக்க வைக்கின்றன.

நாசர் இலங்கை தமிழர் போலீஸ். ஓரு நாட்டை பூர்வீகமாக கொண்டவருக்கு எப்படி மற்றொரு நாட்டில் காவல்துறையில் உயரதிகாரி வேலை கொடுக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. வசனம் தமிழில் அமைய வேண்டும் என்பதற்காக இருக்குமோ.

ஜெகபதிபாபு நல்லவராக அறிமுகமாகி வில்லனாவது தான் எதிபாராத ட்விஸ்ட். லட்சுமி ராயும் துக்கடா கேரக்டரில் வந்து போகிறார். தம்பிராமையா, டெல்லிகணேஷ், சரண்யா போன்றோரும் இருக்கிறார்கள்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் உயிரின் உயிரே பாடலுக்கு பெண்கள் கூட தம்மடிக்க எழுந்து போகிறார்கள். கணவர் காவல்துறையில் என்னவாக இருக்கிறார் என்று கூட தெரியாமல் அனுஷ்கா இருப்பதெல்லாம் பூச்சுற்றும் வேலை.

அதுக்காக படத்தை மோசம், வேஸ்ட் என்று ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது. கொஞ்சம் பார்க்கிறார் போல கொடுத்திருக்கார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாமல் திரையரங்கிற்கு சென்றால் ஒருமுறை பார்க்கலாம்.


ஆரூர் மூனா செந்தில்

Friday, September 21, 2012

சாட்டை - சினிமா விமர்சனம்

 
உண்மைத் தமிழன் அண்ணனுடைய ப்ளஸ்ஸை பார்த்ததும் நேற்றே முடிவு பண்ணியாச்சி, படத்தை பாக்கணும்னு. அதுக்காக காலையில் திட்டங்கள் தீட்டி கிளம்பும் போது நண்பன் ஒரு அலைபேசினான். இன்றிரவு நடக்க இருக்கும் மற்றொரு நண்பனின் திருமண வரவேற்பிற்கு கலந்து கொள்வதைப் பற்றி.

திருமணமாகப் போகும் நண்பன், என்னுடன் 16 ஆண்டுகாலமாக நெருங்கிய நட்பில் இருப்பவன். எனவே நாங்கள் இரவு செய்யப் போகும் அலப்பறை, கலாட்டா பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது இப்போது எங்கிருக்கிறாய் என அவன் கேட்டான். நான் சினிமா செல்லவிருப்பதை கூறியதும் நானும் உன்னுடன் வருகிறேன். ஏஜிஎஸ் திரையரங்குக்கு போவோம் என கூறினான்.

அவன் பேச்சைக் கேட்டு காத்திருந்தால் தக்காளி 11.30 அவனே அழைத்து வரமுடியாத சூழ்நிலையென்றும் மாலையில் வரவேற்பில் சந்திப்பதாகவும் கூறினான். ஏற்கனவே சுந்தர பாண்டியன் படத்தின் துவக்கத்தை தவற விட்டு விட்டதால் இந்த படத்தை தவற விடக்கூடாது என்று முடிவு செய்து ரயில்வே குவாட்டர்ஸ் பக்கம் வந்தால் போஸ்டரில் கோபிகிருஷ்ணா தியேட்டர் என்றும் காலைக் காட்சி 12 மணி என்றும் போட்டிருந்ததால் அதற்கே செல்லலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.

திரையரங்கில் இருந்தவர்கள் மொத்தம் 5 பேர். டிக்கெட் ரூபாய் 50. எனக்கோ ஆச்சரியம் சிட்டியின் நடுவில் அயனாவரத்தில் 50 ரூபாய்க்கு முதல் காட்சி. மற்ற திரையரங்கில் படம் பார்ப்பவர்கள் எல்லாம் ஏமாளிகள் என நினைத்துக் கொண்டு உள்ளே சென்றால் ஆப்பு எனக்கே திரும்பியது தான் கொடுமை. படத்தில் வெளிச்சமே இல்லை. புரொஜக்டரில் கார்பன் குறைந்தால் அரையிருட்டில் படம் தெரியுமே, அது போல் தான் படம் முழுவதையும் பார்த்தேன். இதுக்கு 20 ரூபாயே அதிகம்.

அதிகமா புலம்பியாச்சு. படத்திற்கு வருவோம். படத்தின் கதை, உருப்படாமல் இருக்கும் ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாக வரும் ஆசிரியர் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் திருத்தி பள்ளியை மாவட்டத்திலேயே முதல் இடத்திற்கு கொண்டு செல்கிறார்.

கேட்பதற்கு சுவாரஸ்யமான கதை தான். ஆனால் எடுத்த விதத்தில் தான் படுஅமெச்சூர்த்தனம். என்னடா இவனுக்கு படம் எடுப்பதைப் பற்றி எதுவுமே தெரியாமல் இப்படி விமர்சனம் பண்ணுறானே என்று நினைக்க வேண்டாம். C கிளாஸ் ரசிகனான எனது பார்வையில் உறுத்தியது, பகிர்ந்து கொள்கிறேன்.

படத்தின் துவக்கம் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளிலும், தம்பிராமையாவின் அதிகப்படியான நடிப்பிலும், அந்த பழநி, அறிவு காதல் சொல்லப்பட்ட விதத்திலும், ஒரே பாட்டில் சாம்பியன்ஷிப் ஆவதிலும் இயக்குனரின் குறைகள் அப்பட்டமாக தெரிகிறது.

படத்தின் பலங்கள் இரண்டு. ஒன்று சமுத்திரகனியின் நடிப்பு, மற்றொன்று வசனம். டீசர்களில் வந்த சமுத்திரகனியின் நடிப்பை பார்த்து தான் நல்லாயிருக்கும் போல என்று முடிவு செய்திருந்தேன். அதை பிசகாமல் செய்திருக்கிறார்.

படம் ரொம்ப நாளைக்கு முன்பே ஷூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். படத்தில் ப்ளாக் பாண்டி ரொம்ப சின்னப்பையனாக இருக்கிறார். படத்தில் தம்பி ராமையாவின் காட்டுக் கத்தல் தான் ரொம்ப படுத்தி எடுத்திருக்கிறது.

படத்தின் ஹீரோ ஒரு ஆசிரியர். ஒரு பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார். திருத்தி விட்டு திரும்ப செல்கிறார். யார் அவர், எப்படிப்பட்டவர், குடும்பத்துடன் உள்ள பிணைப்பு என்ன ஒன்றுமே தெரியவில்லை.

இதுக்கும் மேலே சொல்லி படத்தை கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சாட்டை சினிமாவாக எடுக்கப்பட்ட 7C (விஜய்டிவியில் வரும் நாடகம்.)

ஆரூர் மூனா செந்தில்


Monday, September 17, 2012

சுவையான சாப்பாடு சாப்பிட - ஆறுபடையப்பா செட்டிநாடு உணவகம்


ஆளாளுக்கு சாப்பாட்டு கடைய பத்தி எழுதுறாங்க. நான் எவ்வளவு பெரிய சாப்பாட்டு பிரியன். நான் எழுதலைனா சாமி கண்ண குத்திடாதா. இதோ துவங்கிட்டேன். இந்த கட்டுரை படிக்கிறவங்களுடைய ருசியை தூண்டி விட்டா தோத்தவண்டா நிர்வாகம் பொறுப்பல்ல.

நேற்று வீட்டம்மாவுடன் ஷாப்பிங் சென்றிருந்தேன். ஷாப்பிங் முடிய 4 மணியாகி விட்டது. சாப்பிடாமல் இருந்ததால் பசித்தது (சாப்பிட்டா பசிக்குமான்னு கேள்விலாம் கேக்கப்பிடாது).அண்ணாநகரின் வழியாக வரும் போது சிந்தாமணி சிக்னலுக்கு அருகில் முதல் மெயின் ரோட்டில் ஆறுபடையப்பா செட்டிநாடு உணவகம் கண்ணில் பட்டது.

கடையின் பெயர் வித்தியாசமாக இருந்ததை தவிர வேறு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கடைக்குள் நுழைந்தோம். படிக்கட்டே வி்த்தியாசமாக இருந்தது. அண்டர்கிரவுண்டில் கடை இருந்தது. நுழைந்ததும் அருமையான உள்கட்டமைப்பு பார்க்கவே நன்றாக இருந்தது.

எல்லா இடங்களிலும் எல்சிடி டிவி துல்லியமான இசை. அரையிருட்டில் லைட்டிங். நல்ல சோபா செட் என எல்லாம் கவர்ந்தது. அருமையாக லாமினேட் செய்யப்பட்ட மெனு கார்டு. எழுத்துக்கள் எல்லாம் டைம்ஸ் நியு ரோமனில் இட்டாலிக்கில் படிக்க அருமையாக இருந்தது. ஒவ்வொரு பக்கமாக திருப்பி முழுவதும் படித்து விட்டு ஆர்டர் செய்தோம்.

எனக்கு நண்டு ரசம், மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரை, வான்கோழி பிரியாணி, மொகலாய் சிக்கன் மசாலா. என் வீட்டம்மா சைவமாதலால் டொமேட்டோ சூப், பனீர் டிக்கா, செஸ்வான் ப்ரைடு ரைஸ், பேபிகார்ன் மசாலா.

சர்வர் முதலில் டாட்டா வாட்டர் ப்ளஸ் வாட்டர் பாட்டிலை கொண்டு வந்து வைத்தான். பிறகு சர்வர் கொண்டு வந்த நண்டு ரசத்தை ருசித்தேன். சிறிய நண்டு காலுடன் அதில் இருந்தது. நண்டின் காலில் கொடுக்கு இருந்தது அதிர்ச்சியை அளித்தது. சமாளித்துக் கொண்டேன். மசாலாவும் பெப்பரும் தூக்கலாக இருந்தது. சிறிது சிறிதாக சுவைத்தேன். நல்ல சுவையாக இருந்தது. (ஏம்ப்பா நான் சரியாத்தான் எழுதுறேனா)

நண்டு நன்றாக வெந்திருந்தது. சுவையாகவும் இருந்தது. கடித்து நொறுக்கி சாப்பிட்டவுடன் எங்கே துப்புவது என்று பார்த்தேன். எந்த மூலையும் அசுத்தமாக இல்லை. அடடே ஆச்சரியமாக இருந்தது. மேசையில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த டிஸ்யூ பேப்பரை விரித்து வைத்து அதில் துப்பி அழகாக மடித்து தட்டின் அருகிலேயே வைத்துக் கொண்டேன். சர்வர் அதனை கவனிக்காதது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இடையில் பனீர் டிக்காவை வீட்டம்மாவின் தட்டிலிருந்து எடுத்து சுவைத்தேன். வெளியில் சூடு குறைவாக இருந்தது. அவர்கள் கொடுத்திருந்த பச்சை சாஸில் முக்கி எடுத்து ஒரு கடி. ஆ, அடப்பாவிகளா என் நாக்கில் சுட்டு விட்டு விட்டது. வெளியில் சூடு குறைவாகவும் உள்ளே கடும் சூட்டுடன் இருந்த ஒரு டிஷ்ஷை இப்போது தான் பார்த்தேன்.

பிறகு சர்வர் வந்து சதுரமான வெள்ளைக்கலர் பீங்கான் பிளேட்டை வைத்தார். நன்கு பளிச்சென்று இருந்தது அது. மற்ற அயிட்டங்களும் வந்து சேர்ந்தது. பிளேட்டில் பிரியாணியை கொட்டி விரவி விட்டு அதன் மீது மொகலாய் சிக்கன் கிரேவியை அளவோடு கொட்டி பரப்பினேன். கிரேவியில் அவித்த முட்டையை துருவி போட்டிருந்தது பார்க்க கண்ணுக்கு விருந்தாக இருந்தது.

இரண்டையும் கலந்து அதில் சிறிது ப்ரெயின் ப்ரையை வைத்து முதல் கவளத்தை வாயில் வைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை சென்றடைந்தது. இதயம் சிலிர்த்தது. கண்கள் பனித்தது. அட அட அடடா தெய்வீக சுவையப்பா இது.

அடுத்த கவளம் எடுத்து சுவைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை மீண்டும் சென்றடைந்தது. இதயம் மறுக்கா சிலிர்த்தது. கண்கள் ரெண்டாவது வாட்டி பனித்தது. அட அட அடடா மறுபடியும் தெய்வீக சுவையப்பா இது.

மூன்றாவது கவளம் எடுத்து சுவைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை மீண்டும் சென்றடைந்தது. இதயம் மறுக்கா சிலிர்த்தது. கண்கள் மூன்றாவது வாட்டி பனித்தது. அட அட அடடா மறுபடியும் தெய்வீக சுவையப்பா இது.

நான்காவது கவளம் எடுத்து சுவைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை மீண்டும் சென்றடைந்தது. இதயம் மறுக்கா சிலிர்த்தது. கண்கள் நான்காவது வாட்டி பனித்தது. அட அட அடடா மறுபடியும் தெய்வீக சுவையப்பா இது.

தட்டில் பிரியாணி காலியாகி இருந்தது. ஒரு கிளாஸ் டாட்டா வாட்டர் பிளஸ் தண்ணீரை முழுவதும் குடித்தேன். அரை வயிறு திருப்தியாக நிறைந்திருந்து. மறுபடியும் பிளேட்டில் பிரியாணியை கொட்டி விரவி விட்டு அதன் மீது மொகலாய் சிக்கன் கிரேவியை அளவோடு கொட்டி பரப்பினேன்.

முதல் கவளம்... அய்யோ அடிக்காதீங்கப்பா முடிச்சிக்கிறேன். சத்தியமாக சொல்கிறேன். சுவையான சாப்பாடு என்றால் அதுதான். சாப்பிட்டதில் மிகவும் சுவையை கொடுத்தது மொகலாய் சிக்கன் கிரேவி தான். முந்திரி பருப்பை அரைத்து செய்யப்பட்ட மசாலா ராயலான சுவையை சிக்கனுக்கு அளித்தது.

நீங்கள் சாப்பிட சென்றால் கூட ப்ளெயின் பிரியாணியையும் மொகலாய் சிக்கன் கிரேவியையும் வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் இலகுவாக கலந்து சாப்பிட்டு பாருங்கள். சுவையை உணர்வீர்கள்.

அது போலவே முட்டையை செமி பாயில்டாக மட்டன் ப்ரெயினுடன் கலந்து இருந்தது சுவையை கூட்டிக் கொடுத்தது. நேற்று சாப்பிட்டதன் ருசியை இப்பொழுது வரை உணர்ந்து கொண்டுள்ளேன் என்பதிலேயே உணவின் தரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

விலை தான் சற்று கூடுதலாக ரூ.900/- வந்தது. அதில் நான் கேட்காமலேயே கொண்டு வந்து வைத்த ரெண்டு வாட்டர் பாட்டிலுக்கும் நாற்பது ரூபாய் போட்டிருந்தது. அடடா பிரமாதம் போங்கள்.

நான் ஏழைப் பதிவர் என்பதால் கையில் காமிரா இல்லாததால் உணவத்தையோ, உணவையோ புகைப்படம் எடுக்க முடியவில்லை. எனவே இன்று புகைப்படமில்லா பதிவு மட்டுமே.

இந்த கட்டுரை கேபிள் சங்கரையோ மோகன் குமாரையோ நினைவுபடுத்துவதாக உங்களுக்கு தெரிய வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது.

ஆரூர் மூனா செந்தில்

Friday, September 14, 2012

சுந்தர பாண்டியன் - சினிமா விமர்சனம்

நான் படம் பார்க்க போனதையே ஒரு படமா எடுக்கலாம் போல. இன்னைக்கு பாத்து என்னை படம் பாக்க விடா விதி இடைஞ்சல் செய்ய அதை தாண்டி வந்து சிறிது குறைபாடோட படத்தை பார்த்தேன்.

காலையிலேயே சினிமாவுக்கு போகனும் என்று முடிவு செய்து இன்றைய வேலைகளை சீக்கிரம் செய்ய வேண்டி செக்சனுக்கு வந்தால் வண்டி வேலைகளை ரன்னர் (ரயில்வே ஒர்க்கர்களுக்கு வேலையை பிரித்து தருபவர்) எங்கள் குழுவிற்கு ஆறு ரயில்பெட்டிகளை தள்ளி விட்டார்.

சரசரவென்று வேலையை முடித்து நிமிர்ந்தால் 11 ஆகி விட்டது. வெளியில் வந்தால் நேரமாகி விட்டது என கேட்டில் ஆர்பிஎப் நிறுத்தி விட்டார். 11.30 வரை காத்திருந்து வெளியில் வரும் போது என் ச ஊழியர் போன் செய்து "அவசரமாக பணம் தேவைப்படுகிறது. சம்பளம் வாங்கியதும் தருகிறேன்" என்று கேட்டார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுத்து கிளம்பினால் 11.50 ஆகி விட்டது.

அம்பத்தூரும் போக முடியாது, வில்லிவாக்கம் நாதமுனியிலும் படம் போட்டிருப்பான். பொதுவா ஏஜிஎஸ்ஸில் 12 மணிக்கு காட்சி துவங்கும் என அங்கு சென்றால் அவர்களும் 11.30க்கே படத்தை போட்டு விட்டனர். படம் போட்டு 20 நிமிடம் சென்ற பிறகே படத்தை பார்க்கத் தொடங்கினேன். எனக்கு படம் போட்ட பின் பார்ப்பது என்பது ஆப்பாயில் இல்லாமல் சரக்கு சாப்பிடுவது போல. சாப்பிட்ட திருப்தி இருக்காது.

படத்திற்குள் வருவோம். இந்தப் படமும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி வரிசையில் நண்பர்களைப் பற்றியது தான். இந்த ஆண்டு இதுவரை காமெடி படங்கள் ஹிட்டாகி வந்த போது நல்ல பரபரப்பான இந்தபடம் சிறந்த என்டர்டெயின்மண்ட் படமாக அமைந்துள்ளது. விளம்பரம் குறைவு என்பது திரையரங்கிலேயே தெரிந்தது. வில்லிவாக்கம் ஏஜிஎஸ் திரையரங்கு பாதி அளவே நிறைந்திருந்தது.

எல்லோரையும் எல்லாத்தையும் பாசிட்டிவாகவே நினைக்கும், நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணிந்த ஹீரோவின் கதை இது. நண்பனின் காதலுக்காக ஹீரோயினிடம் தூது போகிறார் சசிகுமார். போன இடத்தில் ஹீரோயின் சசியையே காதலிப்பதாக சொல் அவரும் ஏற்றுக் கொள்கிறார்.

ஹீரோயினுக்காக சண்டை போடப் போய் விபத்தாக ஒரு கொலை நடந்து விடுகிறது. கொலைப்பழி சசியின் மேல். காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கு தெரிந்து அவசர அவசரமாக மற்றொருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இவ்வளவையும் சமாளித்து ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் தோராயமான கதை.

ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்த சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நண்பனின் காதலுக்கு ஜடியா கொடுத்து அதற்காக விதவிதமான முறையில் பேருந்தில் ஏறும் போது தியேட்டர் கலகலக்கிறது.

ஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே தெரிந்தார். ஆனால் ஸ்கிரீன் பிரசன்ஸ் அருமையாக இருக்கிறது. அந்த அம்மை தழும்பை இயல்பாக விட்டிருப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு தான் கவர்கிறது.

சூரி படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் முன்பாதியை குத்தகைக்கு எடுத்து கலாய்க்கிறார்.

விஜய் சேதுபதி தனியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போது இதில் எப்படி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தின் வெற்றி முக்கியமான விஷயங்களில் ஒன்று படத்தின் வசனம் தான். இறுதியில் நண்பன் குத்தினால் சாகும் போது கூட காட்டி கொடுக்காதது தான் நட்பு, இது போல் பல.

பாடல்களில் ஏற்கனவே கேட்காததால் வரிகள் நினைவுக்கு வரவில்லை. ஆனால் படத்தில் வரும் இரண்டு மாண்டேஜ் பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன்.

சுப்ரமணியபுரத்திலிருந்து நண்பனின் துரோகம், நாடோடிகளில் இருந்து நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கான்செப்ட், தூங்கா நகரத்திலிருந்து கிளைமாக்ஸ் என பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு வலிந்து திணித்தது போல் இல்லாமல் இயல்பாக இருக்கிறது.

படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்ன சிபி செந்தில் மாதிரி மனப்பாடம் செய்து வசனம் போடும் அளவுக்கு எல்லாம் என் ஞாபக சக்தி கிடையாது. இந்த விமர்சனத்தில் கூட ஹீரோயின் என்றே போட்டு இருக்கிறேன். படத்தில் ஹீரோயினி்ன் பெயர் கூட ஞாபகம் இல்லை. இது தான் நம்ம லட்சணம்.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். நானே இன்னொரு முறை வீட்டம்மாவையும் அழைத்து சென்று பார்க்க இருக்கிறேன். சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை குறிப்பிட்டு சொல்வது எல்லாம் தேவையில்லாத ஒன்று.

சுந்தர பாண்டியன் - குடும்பத்துடன் பார்க்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு படம்

ஆரூர் மூனா செந்தில்

Sunday, September 9, 2012

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்திற்கு அலுவலக உதவியாளர் வேலைக்கு பட்டப்படிப்பு முடித்து குறைந்தது 3 வருட முன்அனுபவம் உள்ளவர்கள் தேவை.

தங்குமிடம இலவசம்

சம்பளம் : 1300 சிங்கப்பூர் டாலர்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 88830 72993 என்ற எண்ணிலும் senthilkkum@gmail.com என்ற மெயிலிலும் தொடர்பு கொள்ளவும்.

--------------------------

ரயில்வேயில் கலாசி வேலைக்கு ஆள் எடுக்கின்றார்கள். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு. மத்திய அரசு வேலைக்கு அரிய வாய்ப்பு. மேலும் விவரங்கள் அறிய www.rrcchennai.org.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

--------------------------

பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு தெற்கு ரயில்வே பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் அப்ரெண்டிஸ் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மூன்று வருட அப்ரெண்டிஸ் முடித்தால் ரயில்வேயில் சீனியாரிட்டி முறையில் வேலை வழங்கப்படுகிறது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, September 7, 2012

முட்டா மேஸ்திரியின் கடைசி முக்காமணிநேரம்


கடந்த திங்களன்று குடவாசல் அருகில் இருந்த என் சொந்தக்காரர் வீட்டுக்கு போயிருந்தேன். அவர்கள் வீட்டில் சன்டைரக்ட் வைத்து இருந்தார்கள். நான்கு ஆயாக்கள் அமர்ந்து சன்டிவியில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியில் அன்று பார்த்து டிஷ்ஷில் சிக்னல் சரிவர கிடைக்காமல் போகவே அவர்களுக்கு வேறு பொழுது போக்கும் இல்லாமல் இஷ்டம் போல் சிக்னல வந்த சானல்களை உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

என் அம்மா, என் வீட்டம்மா, அந்த வீட்டு அத்தை ஆகியோர் அங்கிருந்து கிளம்பி தோட்டத்திற்கு கீரை பறிக்க போயிருந்தார்கள். நான், என் அப்பா, மாமா மற்றும் நாலு ஆயாக்கள் மட்டுமே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். சானலை அப்படி மாற்றிக் கொண்டு வரும் போது ஜெமினி டிவியில் முட்டா மேஸ்திரி படம் போய்க் கொண்டிருந்தது.

வேறு வழியில்லாமல் அந்தப் படத்தையே பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே நான் என்னுடைய பதினாலு, பதினைந்து வயதில் மாண்புமிகு மேஸ்திரி என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்ட படமாக பார்த்திருந்தேன். அந்த வயதில் சினிமாவைப் பற்றிய அறிவு குறைவாக இருந்ததால் மோசமான தாக்கம் ஏற்படவில்லை.

நான் ஒரு நிறுவனத்தில் இதற்கு முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு வேலை பார்த்த ஆந்திரக்காரர்கள் "ஈ பேட்டைக்கு நேனே மேஸ்திரி, முட்டா மேஸ்திரி" என்ற பாட்டை முணுமுணுத்துக் கொண்டு இருப்பார்கள். நான் பயங்கர ஹிட்டான படம், தெலுகு சினிமாவில் சிறந்த கதையம்சமுள்ள படம் போல என்று நினைத்திருந்தேன்.

ஒட்டு மொத்த எண்ணத்தையும் நான் பார்த்த கடைசி முக்கால் மணிநேர படம் மாற்றியது. நம்ம வீட்டம்மா தெலுகு அம்மாயி, சிரஞ்சீவி ரசிகை வேறு. நான் இப்படி கலாய்த்து எழுதுவது தெரிந்தால் நமக்கு வேப்பிலையோ நமஹ மந்திரம் தான். படிக்க மாட்டார் என்ற எண்ணத்துடன் தான் இதனை எழுதுகிறேன்.

நான் பார்க்க ஆரம்பித்த சமயம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வில்லனின் மகன் ஸ்ரீஹரி ஒரு குற்றம் செய்து விட வழக்கில் முக்கிய சாட்சியாக முன்னாள் மேஸ்திரியும் அமைச்சருமான சிரஞ்சீவீ சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் குற்றம் நடந்த சமயத்தில் ஸ்ரீஹரி வேறு ஒரு நிகழ்ச்சியில் இருந்தார் என்று வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்கள்.

அதனை மறுக்க முடியாத சிரஞ்சீவி தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வர முயற்சிக்கிறார். அப்பொழுது ஒரு இஸ்லாமியர் கோர்ட்டுக்கு வெளியே தொழுகை நடத்திக் கொண்டிருப்பதை பார்க்கிறார். டக்கென் அவருக்கு ஒரு ஐடியா முளைக்கிறது!!! (தலைக்கு மேல இல்லைங்க, உள்ளேயே தான்).

மீண்டும் அதே வீடியோவை போடும் படி நீதிபதியை வற்புறுத்துகிறார். நீதிபதி சொல்லவே வீடியோ திரையிடப்படுகிறது. வீடியோவில் நிகழ்ச்சி நடக்கும் பின்புலத்தில் மசூதியில் தொழுகை நடத்தும் சத்தம் கேட்கிறது. உடனே சிரஞ்சீவி இசுலாமியர்கள் எப்பொழுதுமே 11 மணிக்கு தொழுகை நடத்த மாட்டார்கள். எனவே குற்றம் நடந்த 11 மணிக்கு எப்படி தொழுகை நடத்தும் சத்தம் கேட்கும் என்று நீதிபதியையே மடக்கி ஸ்ரீஹரியை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

இதனை கண்டு கொதித்தெழும் வில்லன் சிரஞ்சீவியின் தங்கையான யுவராணியை ஒரு பார்ட்டியில் மயக்க மருந்து கொடுத்து விபச்சார வழக்கில் சிக்க வைக்கிறார். விஷயம் கேள்விப்பட்டு சிரஞ்சீவி கோர்ட்டுக்கு வருவதற்குள் நீதிபதி தீர்ப்பை வழங்கி விடுகிறார். துக்கம் தாங்காத யுவராணி கோர்ட்டில் காவலுக்கு இருந்த கான்ஸ்டேபிளின் துப்பாக்கியிலிருந்து கத்தியை எடுத்து ஒரு நிமிடம் யோசித்து பார்க்கிறார்.

பிளாஷ்பேக்கில் சிரஞ்சீவி அம்மா நம்ம குடும்பம் ஆஸ்தி இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஊரில் ஒழுக்கமான குடும்பம் நம்முடையது தான். அதற்கு ஆபத்து ஏற்பட்டால் என்று முடிக்கிறார். பிளாஷ்பேக்கை யோசித்த யுவராணி சிரஞ்சீவி வரும் வரை காத்திருந்து வந்ததும் கத்தியை எடுத்து தன் வயிற்றில் குத்திக் கொண்டு செத்துப் போகிறார்.

உடனே புலனாய்வு செய்து காரணகர்த்தாவை கண்டுபிடிக்கும் சிரஞ்சீவி ராஜினாமா கடிதத்தை எழுதி அருகில் வேர்கடலை விற்றுக் கொண்டிருந்தவனிடம் கொடுத்து முதல்வரிடம் கொடுக்கச் சொல்லி ஒரு மணிநேரத்தில் தாடி வளர்த்து லுங்கி கட்டி வில்லனின் கையாளான இன்ஸ்பெக்டர் மன்சூரலிகானை அடித்து துவைக்கிறார்.

அந்தப்பக்கம் தேமே என்று கதைக்கு சம்பந்தமேயில்லாத இரண்டு கான்ஸ்டேபிள்களை மன்சூரலிகானின் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொல்கிறார். பத்து குத்து, பதினைந்து உதை வாங்கியதும் வில்லனின் மகனை தப்ப வைக்க வில்லன் முயற்சிக்கும் விவரத்தை மன்சூரலிகான் சொல்கிறார்.

அது டவர் கிரேன் வந்த சமயம் என்று நினைக்கிறேன். அதனை படத்தில் வைத்து புதுமை காட்ட முயற்சித்து இருக்கிறார்கள். தசரா ஊர்வலம் நடந்து கொண்டு இருக்கும் போது இந்த வழியாக வரும் போலீஸ் வேனை மடக்கி வில்லனின் ஆட்கள் அப்பாவி போலீஸ்கள் 50 பேரை சுட்டுக் கொன்று விட்டு ஸ்ரீஹரியை தப்ப வைக்கிறார்கள்.

நம்ம சென்னையில் ஸ்ட்ரீட் லைட் ரிப்பேர் செய்ய ஒரு கூண்டுடன் கிரேன் இருக்குமே. அதனை எடுத்து டவர் கிரேனுடன் இணைத்துக் கட்டி ஸ்ரீஹரியை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிக்கும் போது சிரஞ்சீவி எண்ட்ரி கொடுக்கிறார். அவருக்கு தோதாக பக்கத்தில் ஒரு தட்டில் குங்குமம் இருக்கிறது.

சிரஞ்சீவி வில்லனை பொளேரன்று அடிக்க அவர் தட்டின் மீது விழுகிறார். திரையெங்கும் குங்குமம் பறக்கிறது. அடுத்த தட்டு மஞ்சள் பவுடர், தடுமாறி எழும் வில்லனை ஒரே கும்மாங்குத்து குத்த வில்லன் மஞ்சள் தட்டு மீது விழுகிறார். மஞ்சள் தூள் பறக்கிறது. ஒரு பக்கம் சிவப்பு நிறம், மறுபக்கம் மஞ்சள் நிறம் நடுவில் சீரஞ்சீவி நடந்து வருகிறார்.

எனக்கே தொண்டை கிழிய விசிலடிக்க வேண்டும் போல் தோன்றியது. அப்பா அருகில் இருக்கிறார் என்பதற்காக அடக்கிக் கொண்டேன். பிறகென்ன ரொம்ப நேரம் கழித்து கிரேன் டிரைவரை அடித்து விட்டு அலேக்காக ஸ்ரீஹரியை தன்பக்கம் கொண்டு வந்து இருவரையும் கொன்று விட்டு மீண்டும் மார்க்கெட்டுக்கே வந்து மேஸ்திரியாகி தனது வேலையை பார்க்கிறார்.

முதலமைச்சர் அவரைத் தேடி அங்கேயே வருகிறார். அவரிடம் சிரஞ்சீவி "கடலை விற்பவரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தேனே உங்களுக்கு வரவில்லையா" என்று கேட்க அவரோ "கொடுத்தானப்பா, கொடுக்கும் போது அதில் கொஞ்சம் கடலையையும் மடித்து கொடுத்தான், கடலையை தின்று விட்டு கடிதத்தை தூக்கி எறிந்து விட்டேன் நீ மீண்டும் அரசியலுக்கு வா, இந்த முறை அமைச்சராக அல்ல, முதலமைச்சராக" என்று சொல்கிறார்.

அதற்கு சிரஞ்சீவி "நான் இப்பொ எழுபத்தைந்து பேருக்கு மேஸ்திரியாக இருக்கிறேன். காலம் சம்மதித்தா ஏழரை கோடி பேருக்கும் மேஸ்திரியாகி விடுவேன், இப்ப இந்த பதவி வேண்டாம்" என்று சொல்லி விட்டு மீனாவையும், ரோஜாவையும் அழைத்துக் கொண்டு போய் யானை வெடியின் மீது கலர் பவுடரை கொட்டி வைத்து அதனை வெடிக்க செய்து டமக்கு டப்பான் என்று டான்ஸ் ஆடி படத்தை முடித்து வைக்கிறார்.

படம் முடிந்ததும் உக்காந்திருந்தவர்களில் யாருக்குமே எழுந்து போக வேண்டும் என்று தோணவேயில்லை. ராஜேந்திர குமாரின் ஸ்டைலில் ஙே என்று முழித்துக் கொண்டு மோட்டுவளையை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

சத்தியமா சொல்றேன், இப்பக்கூட பாத்ததை மட்டுமே எழுதணும்னு தோணுது. எப்படி கலாய்ச்சி எழுதுறதுன்னு யோசிச்ச உடனே மஞ்சள் புகையும் சிகப்பு புகையும் சூழ சிரஞ்சீவி என்னை நோக்கி வந்து கலவரப்படுத்துற மாதிரி திகிலாவே இருக்குது. டேய் ஆந்திர மனவாடுகளா நல்லாயிருப்பீங்கடா.

அதை விட கொடுமை என்னன்னா எங்க ஆயா கூட அன்னைக்கு ராத்திரி தூக்கத்திலேயே அலறுச்சி. அதுக்கு என்ன மாதிரி மெரட்டல் கனவுல வந்துச்சோ.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, September 4, 2012

ஐந்து நாட்களாக இணையத்தில் இல்லை, அதுவே தொல்லை

ஞாயிறு முதல் ஒரு அவசர வேலையின் காரணமாக திருவாரூரில் இருக்கிறேன். சில நாட்களாக இணையம் பக்கம் வராமல் பயங்கர போரடிக்கிறது. ஞாயிறன்று முகமூடியை நடேஷ் திரையரங்கில் பார்த்தேன். படத்தை விட பார்த்த திரையங்கைப் பற்றி பதிவே எழுதலாம்.

ஆம், சென்னைக்கு வந்ததும் முதல் பதிவே அது தான். ஒய்வு நேரங்களில் உக்காந்து யோசிச்சதில் பல பதிவுகளுக்கான தலைப்புகளும் பதிவிற்குரிய கருத்துக்களும் பிடிபட்டிருக்கின்றன. எழுத வேண்டியது என் சுயசொறிதலுக்காக. படித்து இ(து)ன்பமுற வேண்டியது என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டதால் உங்க தலையெழுத்து.

வரும் வாரங்களில் எழுதப் போகும் பதிவுகளின் தலைப்புகள்

சட்டையில்லாமல் நான் பார்த்த முகமூடி

நான் ஏன் எதிலும் Perfect இல்லை

முட்டா மேஸ்திரியின் கடைசி முக்காமணி நேரம்

குழந்தை இல்லாத தம்பதிகள் போக வேண்டிய கர்ப்பரட்சாம்பிகை ஆலயம், திருக்கருகாவூர்

நீண்ட இடைவேளைக்கு பிறகு திருவாரூர்

இன்னும் பல ...

ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...