சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, May 31, 2013

இத்தரம்மாயிலத்தோ - தெலுகு சினிமா விமர்சனம்

ஒரு மாதத்திற்கு முன்பு மா டிவியில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா பார்க்க நேர்ந்தது. ஒரு சில பாடல் பிடித்திருந்ததால் படம் வெளியாகும் தினத்தன்றே பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.


இன்று பார்க்கலாம் என்று முடிவு செய்த போது விசாகப்பட்டினத்தை சேர்ந்த நண்பன் சத்யநாராயணா நினைவுக்கு வந்தான். அவனையும் அழைத்துக் கொண்டு அபிராமி மாலுக்கு போனேன்.

ரீக்கிளைனர் டிக்கெட் எடுத்து அமர்ந்தால் இரண்டு பக்கமும் காதல் ஜோடிகள், எல்லாம் தெலுகில் மாட்லாடிக் கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் குலாவிக் கொண்டு இருந்தார்கள். நமக்குத்தான் வயிற்றில் கொஞ்சம் சுர்ரென எரிந்தது.

தெலுகு படத்தில் மகேஷ் பாபு, என்டிஆர், அல்லு அர்ஜூன் வகையறா ஹீரோக்களின் படங்களுக்கென ஒரு பார்முலா இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் ஒரு மாபியா கும்பல் தலைவன் இந்தியாவுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருப்பான். முக்கியமாக தெலுகை கடித்து கடித்து பேசுவான்.


ஹீரோ அவனை வீழ்த்தி ஜெயிப்பார். இது தான் கதை. பேஸ் கதை. அதற்கு சிங்காரிப்பது மட்டும் படத்திற்கு படம் மாறுபடும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை. இந்த படத்தின் ஸ்பெஷல் முழுக்க முழுக்க ப்ரான்ஸிலேயே படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்தரம்மாயிலத்தோ என்றால் இரண்டு பெண்களுடன் என்று அர்த்தம்.

படத்தின் கதை. கதாநாயகி காத்ரினா தெரசா (அன்னை தெரசாவுக்கு வந்த சோதனை) மத்திய அமைச்சரின் மகள். மேற்படிப்புக்காக பாரீஸ் வருகிறார். அவர் தங்கியிருக்கும் வீட்டில் ஏற்கனவே தங்கியிருந்த அமலா பாலின் டைரி கிடைக்கிறது. அதில் அல்லு அர்ஜூன் உடனான காதல் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது.


காதல் கல்யாணத்தில் போய் நிற்கிறது. ஒரு நாள் காத்ரீனா அல்லுவை மட்டும் சந்திக்கிறார். கல்யாணம் என்னவானது என்று டைரியில் எழுதப்பட வில்லை. அல்லுவிடம் விவரங்கள் கேட்கிறார்.

ப்ளாஷ்பேக் தொடர்கிறது. கல்யாணத்திற்கு சில நாட்கள் முன்பு வில்லன்களால் அல்லு கண் முன்பு அமலா பால் குத்தப்படுகிறார். அதற்கு காரணமானவர்களை அல்லு கொன்று விடுகிறார். காரணம் ஒரு நாட்டின் தூதரை வில்லன் கொல்லும் போது எதார்த்தமாக அமலா பால் வீடியோ எடுத்தது தான் என்று தெரிய வருகிறது.

அல்லு மேல் காத்ரினா காதல் வயப்படுகிறார். அல்லுவோ மெயின் வில்லனை தேடி அலைகிறார். இதற்கிடையில் ஒரு நாள் அமலா பாலை உயிருடன் காத்ரினா சந்திக்கிறார். பின்பு என்னவானது என்பது தான் படத்தின் கதை.


ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அல்லு அர்ஜூனுக்கு பெயர் போடுகிறார்கள். அதற்கேற்றாற் போல் கொலையை கூட தலைவர் ஸ்டைலாகத்தான் செய்கிறார். சண்டை காட்சிகள் முதல் பாடல் காட்சிகள் வரை ஸ்டைல் மன்னன் தான் அல்லு.

அமலா பால் அய்யர் வீட்டு பொண்ணாக பாவாடை தாவணியுடன் பாரீஸில் வந்து இறங்குகிறார். சில காட்சிகளில் முடி ஸ்ட்ரெய்ட்னிங் பண்ணி பக்கா நவநாகரீக பெண்ணாகி விடுகிறார். படத்தின் இறுதியில் ஹீரோவுக்கு துணையாக வில்லனை பழி வாங்குகிறார்.

காத்ரீனா தெரசா அமைச்சரின் மகளாக பல பெட்டிகள் டெடி பியர் துணையுடன் பாரீஸ் வருகிறார். அல்லு அமலா காதலின் பால் ஈர்க்கப்பட்டு அல்லுவை காதலித்து படத்தின் இறுதியில் ஹீரோவுக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சல்மான் கான் போல் தொடை வரை ஏறிய ஜீன்ஸ் டவுசருடன் தான் சுற்றுகிறார்.

ப்ரம்மானந்தமும் ஆலியும் காமெடி என்ற பெயரில் மொக்கைப் போட்டு கொல்கிறார்கள். ஆனால் கூட்டம் அதற்கும் கை தட்டுவது தான் ஆச்சரியம். நாசர், தணிகலபரணி, சுப்பாராஜூ, ராவ் ரமேஷ் என கூட்டமே இருக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் பாடல்கள் தான். தேவிஸ்ரீபிரசாத் போட்ட மூன்று பாடல்கள் ஏற்கனவே அதிரிபுதிரி ஹிட்டாகி விட்டது. டாப் லேசிப் போயிந்தி என்ற பாட்டு ஏற்கனவே ரிங்க ரிங்கா பாடல் அளவுக்கு ஹிட். வேறென்ன வேண்டும் டிஎஸ்பிக்கு.

வேறோன்றும் படத்தினை பற்றி சொல்வதற்கு இல்லை. அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் மட்டும் படத்தினை கொண்டாடுவார்கள். பக்கா தெலுகு பார்முலா படம். தமிழில் வர வாய்ப்பே இல்லை. அதனால் நீங்கள் தப்பித்தீர்கள்.

ஆரூர் மூனா செந்தில்
 

Thursday, May 30, 2013

குட்டிப்புலி - சினிமா விமர்சனம்

மற்ற எதிர்ப்பார்ப்புகளுடைய படங்களைப் போல் இந்தப் படத்திற்கும் காலை 9 மணிக்காட்சி என ஏஜிஎஸ்ஸில் போட்டிருந்ததால் காலையிலேயே கிளம்ப முடிவு செய்து நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். சீக்கிரம் என்பதால் ஒருத்தனும் வரவில்லை.


ஆனால் எதிர்ப்பார்ப்புக்குரிய அளவுக்கு டிக்கெட் விற்பனை இல்லாததால் காலையில் மூன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டு முதல் காட்சி 10.30க்கு தான் துவங்கியது. கூட்டமும் அவ்வளவாக இல்லாததால் சிறிய திரையரங்கில் படத்தை போட்டிருந்தார்கள்.

பொதுவாக சுப்ரமணியபுரம் படத்திலிருந்து இன்று வரை சசிக்குமாரின் ஒரு படத்தையும் முதல் காட்சி தவற விட்டதில்லை. பல படங்கள் முதல் காட்சிக்குரிய எதிர்பார்ப்பை சரியாகவே செய்திருந்தன. ஆனால் இந்த படம்?

படத்தின் கதை, ஊருக்குள் சண்டியராக திரியும் மகன் காதலினால் எல்லாத்தையும் கைவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் போது பழைய எதிரிகளால் ஆபத்து நேருகிறது. அவனது அம்மா எல்லாவற்றையும் முடித்து வைத்து மகனை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே படத்தின் கதை.


தமிழ்ப்படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறி வைத்து படம் எடுப்பதை கைவிட்டு பல நாட்கள் ஆகிறது. சசிகுமாரின் படங்கள் மட்டும் ஏன் தேவர் சாதியினை குறி வைத்து எடுக்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இது சாதி பாசமா, இல்லை வெறியா?

நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் கடைசியாக இந்த படம் வரை எல்லாவற்றிலுமே கதாநாயகன் தேவர் சமூகத்தை சேர்ந்தவராகவே வருவதன் ரகசியம் தான் புரியவில்லை. கொஞ்சம் மற்ற சாதியினரையும் காட்டுங்கப்பா.

படம் கதையாக சொல்லும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் பாதி படத்தை சொதப்பி இருக்கிறார்கள். படத்தின் நீளம் வேறு பொறுமையை சோதிக்கிறது.


சசிகுமார் படத்திற்கு படம் நடிப்பில் நன்கு மெருகேறி வருகிறார். படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு திரியும் சண்டியர்த்தனம் பொருந்துகிறது. காமெடியிலும் அசத்தியிருக்கிறார்.

படம் முழுக்க லுங்கியில் வந்தாலும் இடைவேளைக்கு பின்பு ஒரு காட்சியில் மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்துகிறார். தாய்ப்பாசத்தில் மருகும் போது சற்று கலங்க வைக்கிறார்.

லட்சுமி மேனன் வருகிறார் செல்கிறார் அவ்வளவே, முந்தைய படங்களைப் போல் இந்த படத்தில் பெரிதாக நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. மேக்கப்பும் ஓவராக போட்டு கலங்கடிக்கிறார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


படத்தில் மொத்த பலமும் சரண்யா மட்டும் தான். அம்மா வேடத்திற்கு வழக்கம் போலவே பாந்தமாக பொருந்திப் போகிறார். மகனுக்காக கொலையே செய்யும் கேரக்டர். மகனின் எதிரிகள் ஒவ்வொருவரிடமும் சென்று மன்னிப்பு கேட்கும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

படத்தில் மைனஸ் விஷயங்கள் சற்று கூடுதலாக இருப்பது தான் சற்று வருத்தமளிக்கிறது.

சிலம்பாட்டம் என்பது சரியாக இருக்க வேண்டும், சுமாரான அளவில் இருந்தாலும் சொதப்பி விடும். தூறல் நின்னு போச்சு படத்தில் பாக்யராஜ் சிலம்பாட்டம் ஆடியிருப்பது இப்ப வரைக்கும் கண்ணில் நிற்கிறது. தேவர்மகன் படத்தில் கமல் கூட சற்று சிரமப்பட்டு முயற்சித்து இருப்பார்.

மற்ற நடிகர்கள் எல்லாம் கட் ஷாட்களில் மாயாஜாலம் காட்டியிருப்பார்கள். இதிலும் சரியான டெம்போவில் வந்திருக்க வேண்டிய சிலம்பாட்ட சண்டையில் கட் ஷாட் வைத்தே சமாளித்திருக்கிறார்கள்.

படத்தில் ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள் இருக்கிறது. அடுத்த ஆக்சன் ஹீரோவாக முயற்சி என்றால் பார்த்து சாரே, விஷாலை பார்த்து சற்று கவனமுடன் இருக்கவும்.


படத்தின் திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் சென்றிருக்க வேண்டும். ஒரு சில கிளைக் காட்சிகள் இருந்தாலும் எந்த இடத்திலாவது படத்தின் திரைக்கதையில் வந்து இணைய வேண்டும்.

ஆனால் இந்த படத்தில் படத்தின் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் பல காட்சிகள் இருக்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸில் ஏதோ நடக்கப் போகிறது என்று முன்பே தெரிந்து விடுவதால் இது போன்ற சம்பந்தமில்லா காட்சிகள் அந்த டெம்ப்போவை குறைக்கின்றன.

பாலா மற்றும் சில கனா காணும் காலங்கள் நடிகர்கள் படத்திற்கு எந்த வித தேவையுமில்லாமல் வந்து செல்கிறார்கள். அவை எல்லாமே நகைச்சுவை என்ற பெயரில் கடியாகத்தான் உள்ளது.


சுந்தரபாண்டியனின் அதிரடி வெற்றியும் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் தான் இந்த படத்தின் வசூலை பாதிக்கப் போகிறது. இரண்டாம் பாதி மெதுவாக செல்தல், பாடல்கள் உட்பட இன்னும் சில குறைகள் இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தினை ஒரு முறை கண்டு வரலாம்.

ஆரூர் மூனா செந்தில்
 

Saturday, May 25, 2013

பார்ட்டி கலாட்டாவுடன் நடந்த கிரகப்பிரவேசம்

மூன்று மாதத்திற்கு பிறகு சென்ற வாரம் மச்சான் வீட்டு கிரகப்பிரவேசத்திற்காக ஊருக்கு சென்றிருந்தேன். எனக்கும் அவனுக்கும் சமவயது. தானே சம்பாதித்து மன்னார்குடியில் கடை வைத்து நன்கு முன்னேறி சொந்த வீடு கட்டியிருக்கிறான். அதுமட்டுமில்லாமல் மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அவன் தான்.


பல வருடங்களுக்கு பிறகு அந்த ஊருக்கு செல்வதால் மிகுந்த சந்தோஷம் பால்ய வயதில் என் பெரும்பாலான கொட்டங்கள் நடைபெற்றது இங்கு தான். என் அப்பாவின் தங்கை உஷா அத்தையின் மகன். என் அத்தை 20 வருடங்களுக்கு முன்பு ரத்தப்புற்று நோயில் இறந்து விட்டார்கள்.

நான் திருவாரூரில் படித்தது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில். இவர்கள் ஊரில் உள்ள திருமுருகன் உயர்நிலைப் பள்ளி இருபாலர் பயிலும் பள்ளி. அங்கு இவர்கள் 10 வது படிக்கும் வரை அரைக்கால் சட்டை தான் பள்ளிச் சீருடை. மாடு மாதிரியிருப்பவர்கள் எல்லாம் அரைக் கால்சட்டை அணிந்து பள்ளிக்கு சென்று வரும் போது மிகுந்த காமெடியாக இருக்கும்.

கூச்சமில்லாமல் அரைக் கால்சட்டை அணிந்து பெண்களுடன் கடலை போட்டு கொண்டு இருக்கும் போது நான் போய் இவர்களை கிண்டல் செய்து காலி செய்வேன்.


மன்னார்குடியில் லட்சுமி மற்றும் செண்பகம் என்ற தியேட்டர்கள் முன்பு இருந்தன. இப்பொழுது இல்லை. இவற்றில் காலைக் காட்சி என்பது பெரும்பாலும் பலானப் படங்கள் மட்டும் தான்.

இவர்கள் ஊரிலிருந்து நண்பர்கள் குழு சைக்கிளில் வந்து படம் பார்த்து விட்டு செல்வோம். இன்று அந்த திரையரங்குகள் இருந்த இடத்தில் பலமாடி கட்டிடங்கள் எங்களைப் போல் பலரின் நினைவுகளை சுமந்து கொண்டு நிற்கின்றன.

இன்னும் பல கூத்துக்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் இப்பொழுது சொன்னால் நாகரீகமாக இருக்காது. எனக்கு கிடையாதுங்க அது அவனுக்கு நாகரீகமாக இருக்காது. அதனால் இத்துடன் ப்ளாஷ்பேக்கை நிறுத்திக் கொள்வோம்.


கிரகப்பிரவேசத்திற்கு முதல் நாள் காலையில் இருந்தே நண்பர்கள் குழு கூட ஆரம்பித்தது. ரகசியமாக அவ்வப்போது மன்னார்குடிக்கு சென்று தாகசாந்தி செய்து வந்து கொண்டு இருந்தோம். மதியம் நண்பர்கள் வற்புறுத்தலால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் விளையாடினேன்.

கிரிக்கெட் விளையாடும் போது தான் தெரிந்தது நமது ஸ்டாமினா. அரைமணியில் போதை இறங்கி வியர்த்து கொட்டி விட்டது. அதன் பிறகு விளையாடியது வெறும் கூடு தான். விளையாட்டை முடித்து விட்டு போர்செட்டுக்கு சென்று குளித்து விட்டு இரவு கச்சேரிக்கு ஆரம்பமானோம்.

மற்ற உறவினர்கள் வர ஆரம்பித்தனர். என் அத்தைகள், மாமன்கள், சித்தப்பன்கள் அவர்களின் வாரிசுகள் என இடம் களை கட்ட ஆரம்பித்தது. நான் செல்லும் வழியை என் அப்பா அமர்ந்து கொண்டே கவனித்துக் கொண்டு இருந்தார். இந்த முறை சரக்கடித்தால் உதை விழும் என ஏற்கனவே அப்பாவால் எச்சரிக்கப்பட்டு இருந்தேன்.


எல்லோரும் சாப்பிட அமரும் போது அப்பா சாப்பிட வா என்று அழைத்தார். என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கும் போது நண்பர்கள் ப்ளக்ஸ் அடிக்க மன்னார்குடி போகலாம் என்று அழைத்தார்கள்.

காரணம் கிடைத்து விட்டது. அப்பாவிடம் காரணம் சொல்லி கழன்று கொண்டேன். இன்னொரு அத்தானின் பண்ணை வீட்டில் உறவினர்கள் கூட்டம் பார்ட்டிக்கு கூடினோம். வெகுநேரம் சென்ற பார்ட்டி 1 மணிக்கு முடிந்தது.

சாப்பிடுவதற்காக விசேசம் நடக்கும் வீட்டிற்கு சென்றோம். எல்லோரும் தூங்கியிருந்தனர். சாப்பிடும் போது எங்கள் குழுவில் இருந்த சரவணன் என்பவன் திடீரென கூகூகூ என கூவ ஆரம்பித்தான். உள்ளே தூங்கியவர்கள் எழுந்து வெளியே வர ஆரம்பிக்க சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் எழுந்து வெளியே ஒட ஆரம்பித்தோம். ஓடியவர்களில் சித்தப்பா, மாமா, மச்சான், தம்பிகள், என அனைவரும் அடக்கம். எல்லோரும் மனைவிக்கு பயந்து வெளியில் ஒடி வந்தார்கள்.

போதைக்கு தலைக்கேறியதால் சரவணன் மட்டும் ஊளையிட்டுக் கொண்டு இருந்தான். அவன் அம்மா வந்து ரெண்டு சாத்து சாத்தி வெளியில் துரத்தி விட்டார்கள். இரண்டு தெரு தள்ளி இருந்த ஒரு பண்ணையில் காத்திருந்தோம். ஆடிக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் சரவணன்.

செம போதையில் ஒண்ணுக்கு இருக்க குத்துக்காலிட்டு அமர்ந்தவன் பத்து நிமிடம் அப்படியே இருந்தான். என்னவென்று கிட்டே போய்ப் பார்த்தால் அப்படியே தூங்கியிருந்தான். அவனை தூக்கிக் கொண்டு போய் இன்னொரு தம்பி கலை வீட்டு மொட்டை மாடியில் போட்டு விட்டு நாங்களும் அங்கேயே படுத்தோம்.

பசிக்க ஆரம்பித்தது. என்ன செய்யலாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போது சாண்டில்யன் படியேறி வந்தான். கையில் சாம்பார் வாளி, உள்ளே சாம்பாரில் இட்லி மிதந்து கொண்டு இருந்தது. நாகரீகமில்லாதவர்கள் கூட நாகரீகமுடன் சாப்பிட்டு இருப்பார்கள். நாங்கள் சாப்பிட்டது அதை விட கேவலம். அப்படியே படுத்து விட்டோம். படுக்கும் போது மணி 2.

விடியற்காலை 4 மணிக்கு வந்து சித்தி எல்லோரையும் எழுப்பிக் கொண்டு இருந்தார். ஹோமம் துவங்கி விட்டது என்று. குளித்து துணி மாற்ற பையை எடுக்க வீட்டுக்கு சென்றால் என் அம்மா பையை கொடுக்க மாட்டேன் என்றார். இப்படியே போய்த் தொலை என் சத்தம் போட்டார். வெளியில் வந்து முழித்துக் கொண்டு இருந்தேன்.

கடுப்புடன் திரும்பிப் பார்த்தால் என்னுடன் தூங்கிய எல்லோரும் அதே போல் நின்று கொண்டு இருந்தனர். யாரும் குளித்து மாற்ற புதுத்துணி கிடைக்கவில்லை. என்னடா பண்ணுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தோம்.

அப்பொழுது தான் ஊரிலிருந்து இறங்கி இன்னொரு மச்சான் வந்தான். அவனிடம் நிலைமையை விளக்க அவன் உள்ளே சென்று பத்து நிமிடத்தில் யாருக்கும் தெரியாமல் எங்கள் துணிகளை எடுத்து வந்தான். ஆனால் பேஸ்ட், பிரஷ், சோப்பு, துண்டு கிடைக்கவில்லை.

அதையும் எதிர்பார்த்தால் ஒன்னும் நடக்காது என்று தெரிந்ததால் தாமரை குளத்திற்கு வந்து செங்கலை தேய்த்து கிடைத்த மண்ணில் பல் விளக்கி விட்டு சோப்பு போடாமல் குளித்து விட்டு துவட்டவும் துண்டு இல்லை. பழைய துணியில் துவட்டி விட்டு துணிகளை அணிந்து விட்டு சபையினில் அமர்ந்தோம்.

அதன் பிறகு வீடு திரும்பும் வரை நல்ல பிள்ளையாக இருந்து வீடு வந்து சேர்ந்தோம்.

திருவாரூருக்கு திரும்பியதும் அப்பாவும் அம்மாவும் மண்டகப்படி நடத்தியது வேறு விஷயம். இருந்தாலும் இந்த விஷேசம் என் டயரியில் எழுத வேண்டிய இனிய நினைவுகள் தான்.

ஆரூர் மூனா செந்தில்



சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

BE (Instrumentation Engineering) முடித்தவர்கள் தேவை


சம்பளம் 1800 சிங்கப்பூர் டாலர்.


உடனடி தேவை.

-------------------------------------------------

Diploma (Civil) முடித்தவர்கள் Engineer (Civil) வேலைக்கு தேவை.

சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


-------------------------------------------------

BE (Automobile Engineering) முடித்தவர்கள் இஞ்சின் பிரித்து வேலை செய்யத் தெரிந்தவர்கள் தேவை

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------


டிகிரி முடித்தவர்கள் Admin Asst வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


------------------------------------------------------


டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Friday, May 24, 2013

Fast & Furious 6 - சினிமா விமர்சனம்

கொஞ்ச நாளா உங்களையெல்லாம் கவிதை என்ற பெயரில் ஒன்றை கிறுக்கி தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் என நினைக்கிறேன். திங்களன்று மச்சான் கிரகப்பிரவேசத்திற்காக ஊருக்கு சென்றிருந்தேன்.


அப்பொழுது ஒரு நண்பன் "எழுதுவது என்றால் எல்லாத்தையும் தான் எழுதனும். கட்டுரை மட்டும் எழுதி தப்பிச்சிக்கலாம் என்று நினைக்காதே" என்று சீண்ட அதற்காகத்தான் சில கவிதை என்ற பெயரில் கிறுக்கல்கள்.

எனக்கே தெரியும் இந்த வரிகளை வரிசைப்படுத்தி படித்துப் பார்த்தால் கட்டுரை போலவே இருக்கும். இருக்கட்டும். ஆயிரம் பேரை கொன்னாத்தான் அரை வைத்தியன் என்று சொல்வார்கள்.


அது போல் பல ஆயிரம் மொக்கை கவிதைகளை எழுதி பிறகு நல்ல கவிதை எழுத தொடங்குகிறேன். வழக்கம் போல இன்று சினிமா விமர்சனம். பெரிய படங்கள் எதுவும் இன்று வெளியாகாததால் எதிர்பார்ப்பிற்குரிய Fast and furious 6ம் பாகம் பார்க்கச் சென்றேன்.

எனக்கும் ஆங்கிலப் படங்களுக்குமான தொடர்பு எனக்கும் ஆங்கிலத்துக்குமான தொடர்பின் அளவிலேயே இருந்தது. அதாவது படத்தில் ஒரு வசனங்கள் இருக்கும். ஆனால் நானாக ஒரு அர்த்தம் பண்ணிக் கொள்வேன்.


உதாரணம் வேண்டுமானால் ரொம்ப நாட்களாக Van Damme என்ற பெயரை வான் டம்மி என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு தான் அதனை வான் டாம் என்று உச்சரிக்க வேண்டும் என அறிந்தேன்.

ஆங்கிலப் படங்கள் தமிழ்ப்படுத்தி வர ஆரம்பித்த பிறகு தான் நிறைய படங்களை புரிந்து பார்க்க ஆரம்பித்தேன். இந்த படம் கூட 5ம் பாகம் வரும் வரை இந்தப் படத்தை பற்றிய ஆர்வம் பெரிதாக வந்ததில்லை. 5ம் பாகம் வந்த பிறகு தான் மற்ற பாகங்களை பார்த்தேன். அசந்து விட்டேன். கார் ரேசிங் இவ்வளவு விறுவிறுப்பாக எந்த படமும் வந்ததில்லை.


6ம் பாகத்தின் கதை ரஷ்ய நாட்டு ராணுவ ரகசியங்களை வில்லன் கும்பல் கடத்தி சென்று விடுகிறது. அவர்களிடம் இருந்து அதனை மீட்க அமெரிக்க ராணுவ அதிகாரி கடத்தல் கும்பல் தலைவனான வின் டீசலின் உதவியை நாடுகிறார். அவர் அவரது குழுவுடன் லண்டன் வந்து வில்லனுடன் மோதி பல ரேஸ்கள் நடத்தி ஸ்பெயினுக்கு பறந்து க்ளைமாக்ஸூக்கு வருகிறார். வில்லனை வீழ்த்தி படத்தை முடித்து வைத்து அடுத்த பாகத்திற்கும் அடி போடுகிறார்.

வின் டீசல் கட்டுமஸ்தான உடம்பு சும்மா கிண்ணென்று இருக்கிறது. வெறி கொண்டு அடி அடியென்று அடிக்கிறார். கார் ரேஸில் பின்னுகிறார். முடிவில் வில்லனின் கட்டுமஸ்தான அடியாளை தூக்கி ராக் அடிக்க கொடுக்கும் போது விசில் பின்னுகிறது.

தி ராக் என்று அறியப்பட்ட டிவெய்ன் ஜான்சன் மாமிச மலையாக வருகிறார். இந்த திட்டத்திற்கு அடித்தளமிட்டு படத்தை துவக்கி வைக்கிறார்.

முந்தைய பாகங்களில் வந்தவர்கள் அதே போல் வந்து அசத்தி செல்கிறார்கள்.

என்ன தான் இன்டர்நேசனல் படமாக இருந்தாலும் பாட்ஷா படத்தில் இருந்து காட்சியை சுட்டால் நம்மளால் கண்டுபிடிக்க முடியாதா என்ன. பாட்ஷா படத்தில் ரஜினியும் ரகுவரனும் சந்திக்கும் காட்சியில் மாடியில் ஒரு அடியாளை துப்பாக்கியுடன் நிற்க வைத்து சும்மா அங்க பாரு கண்ணா என்று டயலாக் விடுவார்களே, அதை அப்படியே சுட்டு படமாக்கியிருக்கிறார்கள். அய்யோ அய்யோ.

கார் ரேஸ்கள் படு அசத்தலாக படமாக்கப் பட்டு இருக்கிறது. கண்ணுக்கு விருந்து செம.

க்ளைமாக்ஸ் முன்பு வரும் டாங்கி சேஸிங் பைட்டும் க்ளைமாக்ஸில் வரும் விமான பைட்டும் ஏஒன். ஏன் எதற்கு எப்படி சாத்தியம் என்ற கேள்விகளையும் மூளையையும் கழற்றி வைத்து விட்டு படத்திற்கு சென்றால் ஒன்றரை மணிநேரம் பக்கா ஆக்சன் ப்ளாக்குக்கு நான் கியாரண்டி.

மிகப்பெரிய விமானத்தை இரண்டு ஜீப்களை வைத்து ஜஸ்ட் லைக் தட் என வீழ்த்துவது எல்லாம் காதுல பூக்கூடை.

கொஞ்சம் கூட கவலையேப் படாமல் விமானத்தில் இருந்தும் பாலத்தில் இருந்தும் புல்டோசரிலிருந்தும் ஆளாளுக்கு ஜம்ப் பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள்.

படம் முடிந்து வெளியில் வந்ததும் ட்ராபிக்கில் பாய்ந்து பைக்கை ஓட்டி வீட்டுக்கு வந்தது தான் இந்த படத்தின் தாக்கமும் வெற்றியும்.

ஆரூர் மூனா செந்தில்


Thursday, May 23, 2013

தேவதைகள் நிலைப்பதில்லை

தாவணியில் தேவதையாய்
கண்ணுக்கு தோன்றியதால்
தினம் அவளை காணவேண்டி
வேட்டியும் விபூதி பட்டையுமாய்
சாயரட்சை வேளையில்
பெரிய கோவிலில் காத்திருந்தேன்


தோழியுடன் வந்தமரும் அவளை
தரிசனம் செய்ய வேண்டி
எப்பொழுதும் பின்வரிசை
இடத்தினிலே நிரந்தரமாய்
நின்றிருந்தேன் ஒத்தையிலே

கண்கள் மெல்ல மூடி
மெல்லியதாய் மந்திரத்தை
மனமுருகி வேண்டிக் கொண்டே
பிரார்த்திக்கும் அவள் முகத்தை
காண கண் கோடி வேண்டும்

வருடங்களும் செல்லச் செல்ல
தேஜஸ் கூடிய அவள் முகத்தை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே
நின்றிருந்தேன் தனிமரமாய்

காதலை சொல்லி விடும்
தைரியம் தான் வரவில்லை
வேகமாக மறுத்து விட்டாலோ
கோவிலுக்கு வராவிட்டாலோ
மீண்டும் காண வாய்ப்பில்லா

கணங்களை உழண்டு யோசித்து
மனதினிலே ஆசைகளை
புதைத்து வைத்து மரமானேன்
காலங்கள் சென்றிருந்த

நான் அறியா ஒரு தருணம்
மின்னும் வெளிச்சத்தில்
அரைகுறை ஆடையுடன்
நிற்கமுடியா நிறை போதையிலே

குலுக்கலாய் ஆடிக் கொண்டு
நின்றிருந்த என் அவளை
மீண்டும் கண்டதிர்ந்தேன்
நள்ளிரவு பப்பினிலே

கணினியைப் படித்து விட்டு
வேலையிலே சேர்ந்தினால்
பூர்வீகம் மறந்திடுமோ
நிலை அதுவும் மாறிடுமோ

சிறு கீற்றாய் திருநீறை
நெற்றியிலே அளவாய் இட்டு
தெருவிலே நடந்து வந்த
என் ஆசை தேவதையை

உரித்து வைத்து கோழிபோல
காண நேர்ந்ததினால் என்
வருத்தத்தை பகிர்கின்றேன் சபையினிலே
இது நியாயமா சொல்லுங்கள்
என் நட்பு நியாயமாரே

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, May 21, 2013

தண்ணீர் லாரி சாலையில் தேடி

சென்னைக்கு வரும் வரை
கண்டதில்லை இப்படி ஒரு காட்சியை
சாமானியனும் சரி அயிட்டங்காரனும் சரி
கார்ப்பரேசன் தண்ணி லாரியைக் கண்டதும்
சாதுவாக குடங்களுடன் வரிசை கட்டியதை


வூடுகட்டும் வஸ்தாதும் செல்லாக்காசே
இங்கு தண்ணீர் பிடிக்கும் போது
கிளீனர் வண்டியிலிருந்து இறங்கியதும்
மிக லாவகமாக ஐம்பது பைசா வாங்கி
கண்ணாலேயே மிரட்டி தண்ணீர் விடுவதை
வெளியிலிருந்து பார்த்து மிரண்டு விட்டேன்

நாளெல்லாம் பார்த்து ஜொள்ளு விட மாட்டோமா
என ஏங்கிய தேவதைகள் எந்த பந்தாவும்
காட்டாமல் வரிசையில் நிற்பதை
பார்த்து கண்கள் பூத்துப் போகும்
பின்வரிசை பெண்களை வார்த்தைகளால்
மிரட்டும் போது தான் தெரியும்
இவள் பூஜிக்கும் பூவல்ல
பூவின் வேடம் அணிந்த புயல் என்று

இரண்டு தினங்களில் வரிசையில் நின்று
கரெக்ட் பண்ணிய ஆண்ட்டிகள் ஏராளம்
தினமும் புது அனுபவமாய் சென்ற நினைவுகள்
காலங்கள் மாறியதால் கோலங்களும் மாறின
கேன் வாட்டரும் சுலபமாய் கிடைத்ததால்
வரிசையில் நிற்கும் தொல்லை இல்லை

வாழ்க்கை ஒரு வட்டம் என்று
விஜய் சொன்ன வார்த்தைக்கு ஏற்ப
போனவாரம் மீண்டும் கிடைத்தது
ஒரு தண்ணீர் லாரி அனுபவம்
தெருவில் நின்று பொருள் தூக்க
யோசித்த கெளரவம் போய்
தேவைக்காக மீண்டும் குடத்துடன்
தேடியலைந்தேன் தெருக்களில்

தண்ணீர் பிடித்து வரும்பொழுது
நினைவுகளெல்லாம் பின்னோக்கி
மடிப்பு கலையாத தாவணியுடன்
அசைந்து வரும் சிந்தாமணி
ஜன்னலில் கண்ணசைவு காட்டி
வரிசையில் இடம் கொடுத்து
மனதில் பிடித்தேன் இடம்

இன்றும் கண்டேன் அவளை
கலைந்த கேசமும் முடிந்த கூந்தலுமாக
ஓங்கி சத்தமிட்டு வரிசையில் முன்னேறி
தனக்கு மட்டும் பத்து குடம் பிடித்ததை
இன்று கூட மாறவில்லை அவள் குணம்
அன்று நளினமாய் இன்று ஆங்காரமாய்
காரியத்தில் மட்டும் விடாக்கண்டனாய்

நல்ல காலம் தப்பித்தேன்
மயக்கத்தினால் கைப்பிடித்திருந்தால்
அவளுக்கு இணையாக நானும் நின்றிருப்பேன்
தண்ணீர் குடம் கை கொண்டு

ஆரூர் மூனா செந்தில்

Friday, May 17, 2013

அக்கா வந்திருந்தாள்


வருடத்திற்கு ஒரு முறை
ஊருக்கு வந்து போகும்
மூத்த அக்கா
சிறுமியாய் மாறுவது
எங்கள் வீட்டில் தான்


காலையில் நீராகாரம்
குடித்து பெருங்கதை பேசி
வயலுக்கு செல்லும் அப்பாவுக்கு
பழைய சோறு கட்டிக் கொடுத்து
தான் பிரசவம் பார்த்த
எருமைகளை குளிப்பாட்டி

அண்ணனிடம் நுங்கு
பறித்து தரச் சொல்லி
ஆசையாய் தின்று மகிழும்
மதியம் சுடுசோறுடன்
மீன் குழம்பை குழைத்து
அள்ளித் தின்னும்

தான் நட்டு வைத்த
செம்பருத்தி செடியுடனே
மனம் விட்டு கதை பேசும்
மாலையிலே பம்புசெட்டுக்கு
தோழிகளுடன் குளிக்கச் செல்லும்

போகும் வழியில் குறி பார்த்து
கல்லெறிந்து கொடுக்காப்புளி
வீழ்த்தி ஆசையுடன் தின்று செல்லும்

அளவாக நீர் எடுத்து
பதமாக நெல் அவித்து
தங்கையுடன் காய வைத்து
அரிசியாகி கட்டி வைக்கும்
அந்திமாலைப் பொழுதுகள்
அக்காவிற்கு சொர்க்கமாய்

செல்லும் நாளன்று
கன்னுக்குட்டியுடன் முட்டி
விளையாடி உறவாடி
யாருமில்லா தருணத்தில்
மெல்லிய கண்ணீருடன்
சுற்றும் பார்க்கும்

விடுமுறை முடிந்து
புறநகர் சென்னைக்கு
வந்த பின்னால்
அத்தானுக்கு சோறுகட்டி
வேலைக்கு அனுப்பி வைத்து
நாள் முழுதும் தனிமையிலே
அடுத்த விடுமுறைக்கு
காத்திருக்கும் அக்காவே

பட்டணத்து மாப்பிள்ளைக்கு
பார்த்து பார்த்து மணமுடித்த
அப்பாவை குறை சொல்ல
நானும் நினைக்கிறேன்

என் வீடு கிராமம் என்று
எனை கட்ட மறுக்கும்
அத்தை பெண்ணை நினைத்து
நானும் தவிக்கின்றேன்

சொர்க்கம் இருக்குமிடம்
கிராமத்திலா நகரத்திலா
புரியாமலே சிரிக்கின்றேன்

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, May 14, 2013

பாப்பா போட்ட தாப்பா

பதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் மட்டும் தாத்தாவுடன் விவசாயம் நடக்கும் வயலுக்கு சென்று விடுவேன்.


அது போல் சென்ற போது பம்புசெட்டு கூரையின் எரவானத்தில் ஒரு புத்தகம் வெளியில் தெரியாத அளவுக்கு சொருகப்பட்டு இருந்தது. எடுத்துப் பார்த்தால் பிரபல நடிகை மார்பு பகுதியை திமிறிக் கொண்டு நின்றிருந்தார். எனக்கு வியர்த்தது.

யாருக்கும் தெரியாமல் புத்தகத்தை எடுத்து டவுசருக்குள் சொருகிக் கொண்டு கரும்பு கொல்லையை நோக்கி நடையை கட்டினேன். வயலில் தாத்தா வேலையாட்களை விரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருந்தார். யாரும் கவனிக்காத சமயத்தில் கொல்லையில் நுழைந்தேன்.


யாரும் அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு புத்தகத்தை பிரித்தேன். தலைப்பில் மதனமோகினி என்று போட்டிருந்தது. அதுவரை கில்மா புத்தகங்களை படித்ததே கிடையாது. முதல் முதலில் பக்கத்தை புரட்டும் போது உடலில் ஏகப்பட்ட ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது.

முதல் கதையில் ஒரு வயதான நர்சு கிணற்றில் துவைத்துக் கொண்டு இருந்தார். நான் கதையில் கிணற்றை தாண்டுவதற்குள் வியர்த்து வழிய ஆரம்பித்தது. இது என்ன உணர்வு என்று புரியவேயில்லை. கையெல்லாம் நடுங்கியது.

கேள்வி பதில் பகுதியில் சந்தேகங்கள் வில்லங்கமாக இருந்தது. ஏகப்பட்ட வார்த்தைகளுக்கு அர்த்தமே புரியவில்லை. நானா ஒரு அர்த்தம் பண்ணிக் கொண்டு ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன். ஆனால் அதற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவே இல்லை.

சத்தம் போடாமல் படித்த புத்தகத்தை எரவானத்தில் சொருகி விட்டு வந்து விட்டேன். ஆனால் மாலையில் கிரிக்கெட் விளையாடும் போது கவனம் அதில் செல்லவேயில்லை. எந்த சினிமா போஸ்டரை பார்த்தாலும் எனக்கு மட்டும் அதில் உள்ளவர் எனக்கு சிக்னல் கொடுப்பது போலவே இருந்தது.

தினமும் காலை மதியம் என இரு வேளையும் பம்புசெட்டுக்கு போய் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். மற்ற பேரப்பயலுகளுக்கு சந்தேகம் வந்து ஒரு நாள் பின் தொடர்ந்து கண்டுபிடித்து விட்டார்கள்.

அவர்களை சமாதானப்படுத்தி கூட்டணியில் சேர்த்துக் கொண்டு எல்லோரும் குழுவாக படிக்க ஆரம்பித்தோம். பயலுக சம்பந்தமில்லாம அடிக்கடி கரும்பு கொல்லைக்குள் பூந்துக்கிறானுங்களே என்று யோசித்த தாத்தா ஒரு நாள் கையும் களவுமாக பிடித்து விட்டார்.

பிறகென்ன ஆலைக்கரும்பை பேர்த்து அடித்த அடியில் இரண்டு நாட்கள் எல்லோருக்கும் கால்களில் தோல் பிய்ந்து தொங்கியது தான் மிச்சம்.

அதற்காக அசந்து விடுகிற ஆளா நாம். அடுத்த கட்டமாக உண்டியலை உடைத்து காசை எடுத்து நீடாமங்கலத்திற்கு சைக்கிளில் சென்று ஒரு புத்தகத்தை வாங்கி அதனை வைக்கப்போருக்குள் ஓளித்து வைத்து படித்து வந்தோம். ஒரு நாள் தாத்தா மாட்டுக்கு வைக்கோல் புடுங்கிப் போடும் போது திரும்பவும் மாட்டிக் கொண்டு தார்க்குச்சியால் அடி வாங்கியதை தனியாக விளக்க வேண்டுமா என்ன.

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, May 8, 2013

அட்டகத்தி காதல் மன்னன்கள்


பெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக்கு முடிவே இருப்பதில்லை. சற்று ஆசுவாசமாக அதனை பின்நோக்கி அசைபோட்டால் கூட சுகமாகவே இருக்கிறது.


எனக்கு விவரம் தெரிந்து 14 வயதில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த சரளா என்ற பெண்ணைத்தான் சைட் அடிக்க ஆரம்பித்தோம். நான் என்றால் நான், சண்முகம் மற்றும் கணேசன் ஆகிய நண்பர்கள். எல்லோருக்கும் அது தான் முதல் அனுபவம். நாங்கள் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்.

நாங்கள் ஹாக்கி பிளேயர்கள். அவள் கோகோ பிளேயர். நாங்கள் எங்கள் பள்ளியில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவர்கள் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருப்பார்கள்.

கிடைக்கும் இடைவெளியில் நானும் கணேசனும் சைக்கிளில் சென்று அவளை சைட் அடித்துக் கொண்டு இருப்போம். அது வரை அந்தபெண் யாருக்கு என்று எங்களால் முடிவுக்கு வர முடியவில்லை.


யாருக்கு முடிவாகிறதோ மற்றவர்கள் விலகிவிட வேண்டும் என்ற எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் எங்களது முயற்சி ஒரே சைக்கிளில் தொடங்கியது. மூவரும் ஒரே சைக்கிளில் ஒரே பெண்ணைத் தேடி ஒரே முயற்சிக்காக.

இரண்டு மாதங்கள் அலைந்து திரிந்து சைட் மட்டுமே அடித்தோம். ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. ஒரு நாள் சைக்கிளில் வேகமாக வந்த கணேசன் வெற்றி வெற்றி என்று கர்நாடக காங்கிரஸைப் போல் கூவிக் கொண்டே வந்தான்.

பெரிய கோவில் மேல கோபுரம் அருகில் சரளாவுடன் "எங்க போறீங்க" என்று பேசி விட்டதாக அன்று முழுவதும் வெற்றிச் சின்னத்துடன் திரிந்தான். அந்த வார்த்தையைக் கூட கேட்க தைரியமில்லாமல் சோகத்துடன் பிஜேபியைப் போல் இருந்தேன்.


இரண்டு நாட்களுக்கு பிறகு அவளை வேறொரு பையனுடன் பெரிய கோவில் உள்ளே சாயரட்சை பூஜையில் சரளாவைப் பார்த்தோம். மூவருக்கும் ஒரே நேரத்தில் இதயம் வெடித்து சிதறியது. கடைசி வரை நான் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது எனக்கு மட்டும் கூடுதல் வருத்தம்.

இந்த கட்டுரையின் முதல் அட்டக்கத்தி நான் தான். பிறகு என்னைப் போல் வெத்தாய் திரிந்த இன்னும் இரண்டு நண்பர்களைப் பற்றி சொல்கிறேன். படித்து பரவசமடையுங்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு ரொம்பகாலம் நான் எந்த பெண்ணிடமும் காதலை சொல்ல முயற்சிக்கவே இல்லை. சைட் அடிப்பதுடன் சரி.

அப்ரெண்டிஸ்  காலத்தில் என் நெருங்கிய நண்பன் ஆனந்த் இருந்தான். அவனுக்கு ஓரு ராசி ஜெ என்று எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்களையே காதலித்து வந்தான். கடைசிவரை ஒரு ஜெ கூட அவனை திரும்பிப் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் அவன் முயற்சியை கைவிடவே இல்லை.


முதலில் அவன் சைட் அடித்தது ஜெஸ்ஸி என்ற பெண்ணைத் தான். ஜெஸ்ஸி அவன் வழக்கமாக செல்லும் சர்ச்சில் தான் பிரார்த்தனை செய்ய வருபவள். ஆனந்த்துடன் ஒவ்வொரு ஞாயிறும் ஜெஸ்ஸியை சைட் அடிப்பதற்காக மட்டும் எங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விட்டு சர்ச்சுக்கு செல்வான்.

ஆறுமாதம் வரை பையன் வேடிக்கை தான் பார்த்து இருக்கிறான். ஒரு நாள் அவள் தன் அண்ணனுடன் வந்து என்னை காதலிக்கிறாயா என்று கேட்க பயந்து போய் பே பே என் முழித்து சைக்கிள் எடுத்து ஐசிஎப் கிரவுண்ட்டிற்கு வந்து விட்டான்.

அந்த சமயம் அவன் சற்று உஷாராக இருந்திருந்தால் கூட காதலில் விழுந்திருப்பான். பிறகொரு நாளில் தான் தெரிய வந்தது, அண்ணனின் சம்மதத்துடன் காதலை சொல்ல ஜெஸ்ஸி வந்திருந்தாள் என்பது.

அந்த காதலை விட்டு சில நாட்கள் விலகியிருந்த பிறகு எங்கள் பேட்ச்சில் மற்றொரு டிப்பார்ட்மெண்ட்டில் படித்த ஜெயஸ்ரீயை சைட் அடிக்க ஆரம்பித்தான். பிறகு அவளுக்காக உருகி உருகி கவிதைகள் எழுத ஆரம்பித்தான். கவிதைகள் மொக்கையாக இருந்தது வேறு விஷயம்.

ஒரு காதலர் தினத்தன்று சரியான முன்திட்டமிடலுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தான். கையில் காதலை சொல்லும் கார்டு. சற்று தள்ளி ஒரு மரத்தின் பின்னால் நானும் ஏழுமலையும் நின்றிருந்தோம் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன்.

போன முறை கோட்டை விட்ட ஆனந்த் இந்த முறை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கார்டை கொடுத்தான். வாங்கிப் பார்த்த ஜெயஸ்ரீ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலையை தொங்கப் போட்டுக் கொண்டே வந்தான். வந்தவன் சம்சாவும் டீயும் வாங்கிக் கொடுத்து டிரீட் கொடுத்தான்.

அது வரை எதுவும் பேசாத ஆனந்த் பிறகு தான் சொன்னான் ஜெயஸ்ரீ கழுவிக் காறித் துப்பியதை. பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவள் கேட்ட கேள்விகள் "உன்னிடம் சைக்கிள் தான் இருக்கிறது, என்னை பைக்கில் அழைத்து வெளியில் செல்ல முடியுமா, என்னை காபி ஷாப்பிற்கு அழைத்து செல்ல முடியுமா, என்னை ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்ல முடியுமா".

அவள் மறுத்ததை கொஞ்சம் கூட பொருட்படுத்தவே இல்லை. காதல் தோல்வியை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொண்டவனை இப்போது தான் பார்த்திருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் ஜெமி என்ற மற்றொரு பெண்ணை அவன் காதலிக்க முனைந்தது தான் இதில் பெரிய காமெடி.

இதைத் தாண்டி ஒரு அட்டகத்தி இருக்கிறான். அவன் பெயர் அசோக், என்னுடன் ரயில்வேயில் பணிபுரிகிறான். ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தினமும் வருகிறான். முன்னவன் ஜெ ஸ்பெசலிஸ்ட் என்றால் இவன் டீச்சர் ஸ்பெசலிஸ்ட். மனதிற்குள் குட்டி கமலஹாசன் என்ற நினைப்பு.

எப்பொழுதும் லவ் மூடிலேயே இருப்பான். இதற்கு முன்பு மாமன் பொண்ணுகளை எல்லாம் காதலிச்சி ஓய்ந்து போய், இப்பொழுது கூட ஒரு டீச்சரை தான் காதலித்துக் கொண்டு இருக்கிறான். இவனது மாமன் பொண்ணுங்கள் எல்லாம் டீச்சர் என்பது இதில் கூடுதல் விசேசம்.

காதலியிடம் போன் பேசிப் பேசி போனில் சார்ஜ் தீர்ந்து போனவர்களைத் தான் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் அசோக் எப்படிப்பட்டவன் என்றால் எக்ஸ்ட்ராவாக ஒரு பேட்டரியை புல் சார்ஜூடன் வைத்து இருப்பான். ஒரு பேட்டரி சார்ஜ் தீர்ந்ததும் மற்றொரு பேட்டரியைப் போட்டு அது தீரும் வரை பேசும் அதி சாமர்த்தியசாலி.

இன்னும் கூடுதலாக சொல்லலாம், ஆனால் இந்த பதிவை அசோக் படித்து விட்டு வந்து நாளை என்னிடம் சண்டை போட வாய்ப்புள்ளதால் இத்துடன் கதம் கதம்.

ஆரூர் மூனா செந்தில்
 

Saturday, May 4, 2013

எதிர் நீச்சலுக்கு இனிமே போக மாட்டேன்.

படம் பார்க்கிறதுக்கு ஒரு குடுப்பினை வேணும் போல. முதல் நாள் பார்க்க வேண்டிய படமான எதிர்நீச்சல், சில பல காரணங்களால் போக முடியவில்லை. ஆனாலும் மறுநாள் முயற்சித்தேன். அன்று பார்த்து 4 ரயில்பெட்டிகள் கூடுதலாக கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார்கள். நேற்றும் முடியவில்லை.


சரி இன்றாவது போவோம் என்று நினைத்திருந்தேன். அதற்கேற்றாற் போல் இன்று எங்கள் ஏரியாவில் ஷட்டவுன். மாலை 5 மணி வரை கரண்ட் வராது. அது வரை வீட்டில் வியர்வையில் குளித்துக் கொண்டு இருக்கவும் முடியாது.

எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று காலையிலேயே முடிவு செய்து விட்டேன். காலையில் ஒரு வேலையாக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. போன வேலை 1 மணிக்கு முடிந்து விடும் அதன் பிறகு சினிமாவுக்கு போகலாம் என்று எண்ணியிருந்தேன்.

வேலை இழுத்துக் கொண்டு முடியவே 1.30 மணியாகி விட்டது. பிறகு அருகில் இருந்த அபிராமி மாலுக்கு சென்றேன். இவ்வளவு பெரிய திரையரங்கில் பிக்காளி பயலுவ டெம்ரவரி பார்க்கிங் வைக்க மாட்டேங்கிறானுவ. கேட்டா வெளியில் நிறுத்த சொன்னானுங்க. வெளியில் நிறுத்தினால் நோ பார்க்கிங்கில் வண்டியை தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.

வேறு வழியில்லாமல் 20 ரூவாய் கொடுத்து பார்க்கிங் போட்டு மாலுக்குள் நுழைந்து முதல் மாடியில் டிக்கெட் எடுக்கச் சென்றால் ஹவுஸ்புல். பயங்கர கடுப்பு, பார்க்கிங்கிற்காக 20 ரூவாய் பணால்.

சரி 3 மணிக்காட்சிக்காக சங்கம் திரையரங்கிற்கு செல்வோம் என தலை சுற்றி மூக்கைத்த தொடுவது போல அபிராமியிலிருந்து கெல்லீஸ் வந்து சுற்றிக் கொண்டு ஹால்ஸ் ரோட்டுக்கு முன்பு உள்ள ரோட்டில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வந்து திரையரங்கிற்கு சென்று கேட்டால் அங்கேயும் ஹவுஸ் புல்.

பிறகு அக்கம்பக்கம் என இன்னும் சில பல தியேட்டர்கள் சென்று அலைந்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒழுங்காக நான் அயனாவரத்திலிருந்து கிளம்பி கொளத்தூர் வந்திருந்தால் கங்காவில் டிக்கெட் கிடைத்திருக்கும். கொஞ்சம் தூரம் கூடுதலாக சுற்றி வர சோம்பேறித்தனப்பட்டு பக்கத்தில் சுற்றியதற்கு இரண்டு மணிநேரம் சுற்றியும் டிக்கெட் கிடைக்கவில்லை.

இடையில் சுய பச்சாதாபம் வேறு. எப்பொழுதாவது படம் பார்க்கிறவனுங்களுக்கு எல்லாம் டிக்கெட் கிடைக்கிறது. வாரம் மூன்று சினிமா பார்த்து மாதம் 2000 ரூபாய் டிக்கெட்டிற்கு மட்டும் செலவு செய்யும் எனக்கு இன்று இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. இனிமேல் இந்த படத்தை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

பசித்தது போகும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டே வந்தால் தாஸப்பிரகாஷ் அருகில் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் கோகுலம் உணவகம் வந்தது. சாப்பிடச் சென்றால் இனிமேல் இந்தக் கடைப் பக்கமே வரக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு சுகாதாரம் மற்றும் சர்வீஸ்.

தெண்டத்துக்கு மினி மீல்ஸ் என்ற வஸ்துவுக்கு 70 ரூவாய் அழுது விட்டு வீட்டுக்கு திரும்பி 5 மணி வரை வியர்வை மழையில் நனைந்து கொண்டு இருந்தேன். இன்றைய நாளைப் போல் இன்னொரு நாளும் அமைந்தால் நானும் அதிதீவிர பாக்கியசாலி தான்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, May 3, 2013

கேரள மீன் சந்தையும் திருட்டு மீன் வறுவலும்

மீனைப் பார்த்து தான் மீனை வாங்கனும் இது தான் வீட்டில் சொல்லிக் கொடுத்தது. ஆனால் மீன் விற்கும் சேச்சியைப் பார்த்து தான் மீன் வாங்கினோம் கேரளாவில் இருந்தவரை. இது 2005ல் திருவனந்தபுரத்தில் இருந்த போது நடந்த விஷயம்.


அந்த புராஜெக்ட்டில் பெரும்பாலானோர் தமிழர்கள் தான். திருவனந்தபுரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கழக்கூட்டம் என்ற இடத்தில் தான் இருந்தோம். நான் தான் நிர்வாக அதிகாரி என்பதால் அவர்களுக்காக மெஸ்ஸின் நிர்வாகம் என்னிடம் தான் இருந்தது. வாரம் இருமுறை அசைவம் என்பது நடைமுறை.

அதுவும் முதலில் சமையற்காரராக இருந்த ஒரு வயதான மலையாளி பிரமாதமாக கேரள உணவுகளை சமைத்துக் கொடுத்து அசத்திக் கொண்டு இருந்தார். நான் அது வரை மீன் வறுவல் என்பது தோசைக்கல்லில் போட்டு பிரட்டி எடுத்தே சாப்பிட்டு வந்தேன். அவரோ பக்குவமாக நெய்மீனை எண்ணெய்யில் பொறித்து கொடுத்தால் நான் மட்டுமே அதிகமான அளவு பொறித்த மீனைத் தின்பேன். சரக்கும் உண்டு என்பது கூடுதல் சுவாரஸ்யம்.


அங்கு சென்ற புதிதில் ஆபீஸ் அசிஸ்டெண்ட்களிடம் மீன் வாங்க பணம் கொடுத்து அனுப்பிவிடுவேன். சில வாரங்களில் மீன் வாங்க செல்வதற்கு அடிதடியே நடந்தது. என்னடா விஷயம் என்று விசாரித்தால் மீன்சந்தையில் விற்கும் கேரளபெண்கள் பழைய சினிமாவில் பார்ப்பது போல் லுங்கியும் ஜாக்கெட்டும் மேலே துண்டு மட்டும் அணிந்திருப்பார்கள் என்று தெரிய வந்தது. நம்மூர் போல் ஆண்களும் சந்தைக்கு விற்க வரமாட்டார்கள். விற்பனை முழுவதும் பெண்கள் வசம் தான்.

அதற்கு தான் பசங்க மாலை வேளைகளில் மீன் சந்தைக்கு செல்ல அடித்துக் கொள்கிறார்கள் என்று புரிந்ததும் நானும் கோதாவில் இறங்கினேன். இன்று தப்பு என்று தோன்றினாலும் 24 வயதில் கிளுகிளுப்பாகத்தான் இருந்தது.


புதனன்றும் சனியன்றும் மாலையானால் ஒரு ஜீப்பில் ஆறு பேர் மீன் வாங்கச் செல்வோம். நியாயமாகப் பார்த்தால் டிரைவரை மட்டும் ஜீப்பில் அனுப்பினால் போதும் மீன் வாங்க. சபலம் யாரை விட்டது. அது போன்ற கேரளத்து சேச்சிகளை பார்ப்பதற்காகவே ஜீப் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

சில வாரங்களில் நாங்கள் ஒரு கம்பெனியில் பணிபுரிபவர்கள் என்றும் வாரம் இரண்டு முறை 20 கிலோவுக்கு மேல் மீன் வாங்க வருகிறோம் என்று தெரிந்தவுடன் எங்கள் ஜீப்பிற்கு மீன்சந்தையில் வரவேற்பு அதிகமானது.


உள்ளே நுழையும் போதே ஒவ்வொருவனையும் ஒரு சேச்சி வரு வரு என்று வரவேற்று கடைக்கு அழைத்து செல்வார். அந்த கடையில் உள்ள மீனை ஒருத்தனும் பார்க்க மாட்டான். முடிந்த வரை வழிந்து பேசி விலையை விசாரித்து விட்டு பிறகு என்னிடம் வருவார்கள். நானும் ஒரு கடையில் சேச்சியுடன் ஜொள்ளு விட்டு விலையை விசாரித்துக் கொண்டு இருப்பார்கள்.

பிறகு ஒரு கடையில் வாங்கிச் சென்றால் மற்ற கடையில் உள்ள சேச்சிகள் எல்லாம் சாபம் விட்டு திட்டுவார்கள். பொழுது நன்றாக போனதால் சிரித்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மற்றொரு நாளில் மீண்டும் வரவேற்பும் திட்டும் கிடைத்துக் கொண்டே இருந்தது.

ஒரு பிரச்சனையில் கேரள சமையற்காரர் வேலையை விட்டு நின்று விடவே ஊரிலிருந்து கருணாநிதி என்ற சமையற்காரரை அழைத்து வந்தேன். அவர் ஏற்கனவே வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் துணை சமையற்காரராக இருந்தவர். பயங்கர ஜொள்ளு பார்ட்டி. 45 வயதாகியும் அவருக்கு திருமணமாகவில்லை.

வந்த புதிதில் ஒழுங்காக சமைத்துக் கொண்டிருந்த கருணா நாங்கள் மீன் வாங்க போய் ஜொள்ளு விட்டு வரும் மேட்டரை தெரிந்து கொண்டு நானும் வருவேன் என அடம் பிடிக்க ஆரம்பித்தார். சரி போனால் போகிறது என்று அழைத்துச் செல்ல ஆரம்பித்தோம்.

கொஞ்ச நாட்களிலேயே ஒரு மீன் விற்கும் பெண்மணியை கரெக்ட் செய்து விட்டார். நாங்கள் போய் வாங்கி வந்த காலம் போய் அந்த பெண்மணியே சரியாக மீன் வாங்கும் நாட்களில் எங்கள் மெஸ்ஸிற்கு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.

ஜொள்ளு விட முடியாதது சற்று வருத்தமாக இருந்தாலும் ஒரு வேலை குறைந்தது சற்று ஜாலியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் ஆப்பு வைப்பது போல் ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு ஞாயிறு அன்று நாள் அலுவலகத்தின் பின்புறமுற்ற மிளகு தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தோம். ஒரு ஒதுக்குப்புறத்தில் சத்தம் வரவே நாங்கள் சத்தம் போடாமல் சென்று பார்த்தால் கருணா அந்த மீன்கார பெண்மணியை மடியில் அமர வைத்து கொஞ்சிக் கொண்டு இருந்தார். (அந்த சம்பவத்தை இதை விட கெளரவமாக எழுத முடியாது).

அவரு அந்த பெண்மணியை என்ன செய்தாலும் நாங்கள் அப்படியே விட்டு இருப்போம். அந்தாளு ஜொள்ளு பார்ட்டின்னு முன்னமே தெரியும். ஆனால் கடுமையான கோவம் வந்ததற்கு காரணம் அவர்களின் அருகில் ஒரு தட்டு முழுக்க மீன் வறுவல் இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமையென்பதால் நாங்கள் போதையில் இருந்தோம். அவரை அப்படியே எழுப்பி செவுட்டிலேயே நாலு விட்டு அந்த பெண்மணியை துரத்தி விட்டோம். அதன் பிறகு ஒரு மாதம் வரை எங்கள் மெஸ்ஸில் சிக்கனும் மட்டனுமே அசைவமாக இருந்தது.

ஆரூர் மூனா செந்தில்

Thursday, May 2, 2013

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை.

சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

B.Com M.Com with Tally முடித்த பெண் வேலைக்குத் தேவை.

சம்பளம் 1200 + 200 சிங்கப்பூர் டாலர்.

-------------------------------------------------

நல்ல முன் அனுபவமுள்ள டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த Air con Technicianகள் தேவை.

அடிப்படை சம்பளம் 1100 சிங்கப்பூர் டாலர்.

தங்குவதற்காக 200 சிங்கப்பூர் டாலர்.

வாரம் 48 மணிநேரம் அடிப்படை நேர வேலை.

OT 48 மணிநேரம் உண்டு.

-------------------------------------------------

அனுபவமுள்ள கிளாஸ் 4 டிரைவர் தேவை.

சம்பளம் 2500 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த நர்சுகள் 100 பேர் தேவை

சம்பளம் $2000 to $3000 சிங்கப்பூர் டாலர்.

டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த பார்மசிஸ்ட்கள் 50 பேர் தேவை

சம்பளம் $2000 to $3000 சிங்கப்பூர் டாலர்.

50 Radiographist தேவை.

சம்பளம் $2000 to $3000 சிங்கப்பூர் டாலர்.

10 Doctors தேவை.

சம்பளம் $5000 to $20000 சிங்கப்பூர் டாலர்.

10 Physiotheraphist தேவை.

சம்பளம் $2000 above சிங்கப்பூர் டாலர்.

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் Admin Asst வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

------------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

--------------------------------------------------

System Analyst cum Web Developer (5 days work week) (Jurong)

    Gather user requirements
    Perform feasibility studies and technical design and coding on Microsoft .Net platform.
    Provide day to day support for existing systems and technical specifications for new system solution
    Work closely with colleagues and liaise with internal users to deliver solutions with business value.

Requirements:

    Degree in Computer Science, Information System, Information Technology or related discipline
    Minimum 3 years of hands-on experience in analysis and implementation of ASP.NET, C# solution
    Must have hands-on experience in HTML, JavaScript, and SQL
    Preferably with hands-on experience in ASP.NET MVC and JSON; and experience / knowledge in   Oracle PL/SQL, WCF would be an advantage
    Completed at least one system life cycle
    Strong analytical, inter-personal and communication skills




விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Wednesday, May 1, 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்

காலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.


AGSக்கு போனால் கூட்டம் அலைமோதியது. எப்பொழுதும் வாரா வாரம் இரண்டு டிக்கெட் எடுத்து தியேட்டரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் எனக்கே டிக்கெட் இல்லை என்று சொல்லி விட்டார்கள். விடுமுறை தினம் கூட்டமா வந்தா ரெகுலர் கஸ்டமர்களை கவனிக்கமாட்டீர்களா, நல்லாயிருங்கடே.

பிறகு கொளத்தூர் கங்கா திரையரங்கிற்கு சென்றோம். இரண்டு படங்களும் 11.30க்கு காட்சி நேரம் இருந்தது. அவனை எதிர்நீச்சல் படத்திற்கு அனுப்பி விட்டு நான் சூது கவ்வும் படத்திற்கு சென்றால் அரங்கு நிறைந்திருந்தது.

முதல் விஷயம் லாஜிக் பார்க்கக்கூடாது. அதனை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படத்தை பாருங்கள்.


படம் புது ரக படம். நல்லவன் கெட்டவன் என இருவர், கெட்டவன் வில்லன், நல்லவன் ஹீரோ, ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின், நகைச்சுவைக்கென தனியே ஒரு காமெடியன் என எந்த பார்முலாவும் இல்லாமல் வந்திருக்கும் படம் தான் இது. அதற்கே இயக்குனருக்கு பூங்கொத்து அனுப்பலாம்.

ஒரு அறையில் வேலையில்லாத மூன்று நண்பர்கள் தங்கியுள்ளனர். விஜய்சேதுபதியுடன் ஒரு ஒயின்ஷாப் சண்டையில் ஒன்று சேர்கிறார்கள். பிறகு சிறுசிறு கடத்தல்களை சீரியசாக செய்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு தான் பார்க்க செம காமெடியாக இருக்கிறது.


ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சரின் மகனையே கடத்தி 2கோடி பெறும் திட்டம் உருவாகிறது. கடத்தி பணத்தையும் அமைச்சர் மகனின் உதவியுடன் பெறுகிறார்கள். ஆனால் பணத்துடன் போகும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அதனை பயன்படுத்தி அமைச்சரின் மகன் பணத்தை தூக்கிச் சென்று விடுகிறார்.

பணமும் போய் ஒரு முரட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரும் துரத்துவதால் கோர்ட்டில் சரணடைகிறார்கள். பிறகு என்னவானது, பிரச்சனையில் இருந்து தப்பினார்களா என்பதே படத்தின் கதை.


படத்தில் கதாநாயகனாக இல்லாமல் இயல்பான கதையின் முக்கிய கதாபாத்திரம் செய்ததற்காகவே விஜய்சேதுபதிக்கு ஒரு பூச்செண்டு அனுப்பலாம். சற்று மனநலம் பிறழ்வு கொண்ட கதாபாத்திரம். கடத்துவதற்கு ஆறு சட்டங்களை போட்டு அதனை கடத்துபவர்களுக்கு பாடமாக எடுக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.

முதல் காட்சியே ஒரு பெண்ணை கடத்த முயற்சித்து அந்த பெண்ணிடமே அடி வாங்கி தப்பித்து ஒடும் காட்சியில் ஆரம்பிக்கும் அவரது அட்டகாசம் படம் இறுதி வரை குறையாமல் இருக்கிறது.

கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி. தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் அஞ்சலியின் தோழியாக அறிமுகமாகி கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துடன் நடித்தவர். அப்படிப்பட்டவரா இவர் என கேட்கும் வகையில் மாடர்ன் உடையில் எப்பொழுதும் விஜய்சேதுபதியின் உடன் வரும் கதாபாத்திரம். சற்று அலுப்பு ஏற்படும் போது பாதி படத்துடன் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

வேலையில்லாத நண்பர்கள் கதாபாத்திரத்தில் ஒருவராக சிம்ஹா. ஊரில் நயன்தாராவுக்கு கோயில் கட்டி அதனால் பிரச்சனை ஏற்பட்டு ஊரே அடித்து துரத்தி சென்னைக்கு பிழைக்க வருகிறார். இன்ஸ்பெக்டருக்கு பயந்து உதட்டில் சிகரெட் துடிக்க பயந்து இருக்கும் காட்சியில் தியேட்டரே அலறுகிறது.

மற்றொரு நண்பராக ரமேஷ். காலையில் சரியாக எட்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளித்து விபூதி வைத்து டேபிளில் அமர்ந்து நிதானமாக சரக்கு அடிக்கும் கேரக்டர். டார்க் ரூமில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்து அடித்து துவைக்கும் போது "இதுக்கு பேரு தான் இருட்டு அறையில் முரட்டு குத்தா" என்று அலறும் போது தியேட்டரில் விசில் சத்தம் தான். கவனிக்கப்பட வேண்டிய நடிகர். சரியான படங்கள் அமைந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

கடைசி நண்பராக அசோக்செல்வன் வேலை பார்க்கும் இடத்தில் சைட் அடிக்கும் பெண்ணை கண்டு பயந்து விலகி ஒடும் கேரக்டர். அந்த பெண் காதலிக்க சொல்லி மிரட்டி கையை அறுத்துக் கொள்ள போய் இவரது கையில் வெட்டுபட்டு நிற்கும் போது சிரிப்பில் அலறுகிறது தியேட்டர்.

இன்னும் படத்தில் கவனிக்க பலர் பெயர் தெரியாத நடிகர்கள் இருக்கின்றனர். வேட்டையாடு விளையாடு படத்தில் ஜோதிகாவின் முதல் கணவனாக நடித்து இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர், உடன் வரும் கான்ஸ்டபிள், இயக்குனர் டாக்டர், அமைச்சரின் மகன் இன்னும் பலர் இருக்கின்றனர். இவர்களுடன் அனுபவமிக்க ராதாரவியும் எம்.எஸ். பாஸ்கரும் இருக்கின்றனர்.

போலீஸ் பாலோ செய்து வரும் போது இரண்டு கோடி பணத்துடன் அமைச்சரின் மனைவி வரும் போது அவரிடம் இருந்து பணத்தை எடுக்கும் காட்சியில் பிரமாதமான காட்சியமைப்பு. எதிர்பாராத ட்விஸ்ட் அது. லாஜிக் பார்க்காமல் படத்தை பார்த்தால் சிறந்த எண்டர்டெயினர் படம் இது.

ஆரூர் மூனா செந்தில்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...