சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, June 27, 2012

தகுதியில்லாத பட்டதாரிகள்

இன்றைய காலக்கட்டத்தில் பட்டதாரிகள் ஏகப்பட்ட பேர் உருவாகி வருகிறார்கள். ஆனால் இது ஆரோக்கியமான வளர்ச்சியா என்று பார்த்தால் ப்ச்ச் ஒன்றுமேயில்லை. ஆட்டு மந்தைகளாகத்தான் உருவாகி வருகிறார்கள். சென்னையில் இருப்பவர்கள் பரவாயில்லை, பள்ளியில் படிக்கும் போதே தான் என்னவாகப் போகிறேன் என்ற முடிவு செய்து தன் மேற்படிப்பையும் அதற்கேற்றாற் போல் வடிவமைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் தன் எதிர்காலத்தைப் பற்றிய எந்த எதிர்ப்பார்ப்பும் கனவுமில்லாமல் ஏதோ பள்ளிப்படிப்பை முடித்தோம். அதன் பிறகு கிடைத்த பட்டப்படிப்பை படித்தோம் என்று இருக்கிறார்கள். ஆனால் படித்து முடித்த இவர்கள் சமுதாயத்திற்கு பயன்பட போகிறார்கள் என்றால் சந்தேகமே.

நான் சில ஆண்டுகள் திருவாரூரிலிருந் போது அரசுப் பணிகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்து கொடுத்துக் கொண்டிருந்தேன். அதில் வங்கிப் பணியாளர் தேர்வுக்காக விண்ணப்பிக்க வரும் M. Com வரை படித்த மாணவர்கள் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வருவார்கள்.

அவர்களிடம் வங்கிக்கு சென்று நுழைவுத்தேர்வு கட்டணத்திற்காக வங்கி வரைவோலை (DD) எடுத்து வாருங்கள் என்று சொன்னால் அவர்களுக்கு அந்த வரைவோலை விண்ணப்பத்தை கூட நிரப்பத் தெரியாது. விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு என்று கடைக்கு வந்து என்னை நிரப்பச் சொல்லி கேட்பார்கள்.

அது போல் B.A (History), B.A (Tamil Lit) போன்ற படிப்புகளை படித்தவர்கள் தான் அதிகமாகத்தான் இருப்பார்கள். பட்டப்படிப்பு முடித்து ஒரு ஆண்டு கழித்துப் பார்த்தால் திருவாரூரில் உள்ள ஏதோ துணிக்கடையில் மாதம் ரூ.2000./ சம்பளத்திற்கு பனியன் ஜட்டி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

நான் ஏதோ பட்டப்படிப்பு முடித்தவர்கள் அனைவரும் அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. பெரும்பாலான சிறுநகரத்து மற்றும் கிராமத்து மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இவர்களின் அறியாமையை பார்த்து தான் எனக்கு வருத்தம்.

இதில் என்னக் கொடுமை என்றால் இந்த படிப்புகளின் வரிசையில் தற்போது BEயும் சேர்ந்து கொண்டிருப்பது தான். நான் பள்ளி இறுதியாண்டு படிக்கும் காலத்தில் திருவாரூரில் BE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கூட கிடையாது. அதனை படிக்க அருகில் உள்ள தஞ்சாவூருக்குத்தான் செல்ல வேண்டும். இன்று கிராமங்களில் கூட பொறியியல் கல்லூரிகள் தோன்றிய பின் அதற்கான மவுசும் குறைந்து விட்டது.

படித்தவனுக்கு வேலையில்லை என்று புலம்பிக் கொண்டிப்பது எல்லாம் வெட்டிப்பயலின் செயலாகி விட்டது. உண்மையில் தான் படித்த படிப்புக்கு தகுதியில்லாத பட்டதாரிகள் தான் தமிழகத்தில் நிறைந்து கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கத்தில் அதுவும் ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு எவ்வளவு அருமையான வேலை கொடுக்கிறார்கள் தெரியுமா? மாதம் ரூ.20000./ சம்பளம், ட்ரெயின் பாஸ், ரயில்வே குவாட்டர்ஸ், இலவச ரயில்வே ஆஸ்பத்திரி. ஆனால் நடப்பது என்ன தெரியுமா இவற்றில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக இருப்பது தான்.

நான் எழுதிய ரயில்வே தேர்வு சமயத்தில் என்னுடன் சேர்ந்து பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் பணிபுரிய தேர்ச்சி பெற்றவர்கள் 100 பேர். அதில் தமிழர்கள் 8 பேர் மட்டுமே. மீதமுள்ளவர்கள் வடநாட்டிலிருந்து வந்துள்ளார்கள். தமிழர்களுக்கு வேலை கொடுப்பதில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. அவன் ஐடிஐ படித்துள்ளான் சரியான தேர்வை எழுதுகிறான், தேர்ச்சி பெறுகிறான்.

ஆண்டுக்கு 15000 காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் ரயில்வேயினால் நிரப்பப்படுகிறன்றன. ஆனால் அவற்றில் மிகப்பெரும்பான்மையாக தமிழர் இல்லை என்பது தான் வருத்தம். இந்த ஆண்டு கூட 12000 பணியிடங்களுக்கான தேர்வுகள் ரயில்வே தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐ படித்தவர்கள் அம்பத்தூரிலும், கோயம்புத்தூரிலும், திருப்பூரிலும் ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் 5000 அல்லது 6000 சம்பளத்தில் பணிபுரிந்தவர்கள் அதிலிருந்து வெளியே வந்து இது போன்ற தேர்வுகளுக்கு முயற்சிப்பதில்லை என்பது மட்டும் கசப்பான உண்மை.

ஐடிஐ மட்டுமல்ல டிப்ளமோ படித்தவர்களுக்கும் இதே நிலமை தான். மிக மிக சொற்பமானவர்களே இந்த சக்கரத்தில் சிக்காமல் தப்பித்து வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கி கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் BE சிவில் முடித்தவர்கள் எவ்வளவு பேர் ஊரி்ல் உள்ள சிறு காண்ட்ராக்டர்களிடம் 5000 சம்பளத்தில் வேலை செய்து சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள் தெரியுமா. ஆனால் இவர்களுக்கு பெரிய தனியார் நிறுவனங்களில் ஆரம்ப சம்பளமே 10000க்கு மேல் கொடுத்து வேலை நிரந்தரமும் தருகிறார்கள். ஆண்டுக்கு குறைந்த பட்சம் 2000 வரை சம்பள உயர்வும் கொடுக்கிறார்கள். ஆனால் இவர்கள் அந்த கம்பெனிக்காக வெளிமாநிலங்களுக்கு கூட சென்று வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பது தான்.

வாய்ப்புகள் இருந்தும் பயன்படுத்திக் கொள்ளாத மாணவர்கள் ஒருபுறம் தகுதியிருந்தும் அதற்கு ஏற்ற வாய்ப்புகள் இல்லாத மாணவர்கள் ஒருபுறம் இருந்தாலும் எதிலுமே சேர்த்தியில்லாது டிகிரியை மட்டும் கையில் வைத்துக் கொண்டு அதற்கேற்ற திறமையும் வாய்ப்பும் இல்லாது தவிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் தயாராகி கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

ஆரூர் மூனா செந்தில்


3 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...