சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, August 30, 2012

பஞ்சேந்திரியா - என்னை இருட்டடிப்பு செய்த கேபிள் சங்கர்

அது ஒண்ணுமில்லீங்க. பதிவர் சந்திப்பு முடியும் சமயம் விழா ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தனர். முதலில் ஏறிய நான் ஒரு போட்டோவில் மட்டுமே தெரிந்தேன். மற்றவர்களையும் அழைத்த போது வந்தவர்கள் மேடை முழுவதும் நிறைந்து நின்றனர்.

அப்போது கேபிள் அவர்கள் அவரது அருகில் நின்ற என்னை விட்டு விட்டு சற்று உயரத்தில் குறைந்த திடம்கொண்டு போராடு சீனுவை அவர் தோளில் கைபோட வாகாக எனக்கு முன் நிறுத்தி என்னை பின்னால் தள்ளினார்.

கேபிளின் பின்னாடி இருளோன்னு ஒரு முகம் தெரியுதில்லயா, அதுதான் நான்

நாம வேற ஏற்கனவே ரோஸ் கலராச்சா. விளக்கு வெளிச்சமும் படாமல் கேபிளின் பின்னால் ஒரு இருட்டு உருவம் நிற்பது போல் ஆகிவிட்டது. குரூப் போட்டோவை எல்லோரும் வெளியிடுகின்றனர். அதில் நான் இருக்கும் இடம் இருளோன்னு இருப்பதால் நானும் இருப்பது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

எனவே நான் அழகாக புகைப்படத்தில் தெரியக்கூடாது என்று கேபிள் அவர்கள் திட்டமிட்டு செய்திருக்கிறார். நான் வேறு அடுத்த விஜயகாந்த் மாதிரி இருக்கிறேன் என்று அனைவரும் பதிவர் மாநாட்டிற்கு வந்த அனைவரும் சொல்கின்றனர். யாராவது என் படத்தை பார்த்து விட்டு சினிமாவுக்கு அழைப்பு விடுக்க கூடாது என்றே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றேன்.

இதனை கண்டித்து கேபிளின் முன்பாக நானும் என் நண்பர்களும் உண்ணும்விரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(கேபிளே தன்னை கலாய்க்குமாறு கேட்டுக் கொண்டதால் இந்த சதிவேலையை பகிரங்கப்படுத்துகிறேன், அப்பாடா பத்த வச்சாச்சு)

--------------------------------

இந்த வார தத்துவம்


-------------------------------------------

நேற்று முன்தினம் மக்கள் தொலைக்காட்சியிலிருந்து போன் வந்தது. நான் படித்த புத்தகம் என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றும், நான் இருக்கும் இடத்திற்கே வந்து படப்பிடிப்பு நடத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

நாம பார்க்க தான் ஆஜாகுபானுவாக தெரிகிறோமே தவிர பயங்கர டக்கு பார்ட்டி. ஒரே சமயத்தில இருபது இட்லியை சாதாரணமாக முழுங்குகிறதும், பத்து நெல்மூட்டையை சட்டென வண்டியில் ஏற்றுவதும், கபடியில் சர்வசாதாரணமாக எதிராளியை தூக்கி வீசுவதும், களத்தில் முன்னாடி நின்று சண்டை செய்வதும் சாதாரணமான எனக்கு மேடையிலோ அல்லது காமிராவின் முன்நின்றோ பேசச் சொன்னால் பேஸ்மெண்ட், பில்டிங் ரெண்டுமே வீக்காகி ஆடும். கை கால் உதறும். நாக்கு வறண்டு போய் விடும். இதற்கு காரணம் நிறைய உண்டு. முதலாவது நான் குண்டு என்ற தாழ்வு மனப்பான்மை, அடுத்தது முன்பின் மேடையில் பேசி பழக்கமில்லாதது. எந்த கல்யாணத்திற்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்க மேடையேற சொன்னாலும் நாசூக்காக அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுவேன்.

நானும் மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு பேசச் சென்றேன். படப்பிடிப்பும் துவங்கியது. முதல் புத்தகத்திற்கான விளக்கவுரைக்கே நான்கைந்து கட் விழ இயக்குனர் என்னை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றார்.

அவரை சிரமப்படுத்த விரும்பாமல் இது ஒன்றே போதும். நான் தெளிவாக பேச வேண்டியதை மனப்பாடம் செய்த பிறகு உங்களுக்கு போன் செய்கிறேன், பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரும் மிகுந்த சந்தோஷத்துடன் அப்பாடா தொல்லை விட்டது என்று மனசுக்குள் மகிழ்ந்து கொண்டு சம்மதித்தார்.

நான் கண்டிப்பாக இது அரங்கேறாது. இப்படியே விட்டு விடுவார்கள் என்றே நினைத்தேன். ஆனால் நேற்று இரவு அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் எடிட் செய்த பிறகு பார்க்கும்படியாக இருக்கிறது என்று கூறினார். அவ்வளவு சிரமப்பட்டு நான் கொடுத்த விளக்கவுரை நாளை காலை 08.45 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

எந்த நேரமும் மீடியாவில் இருக்கும் நண்பர்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் மீடியாவுடன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நான் திரையில் தோன்றுவது அத்தைக்கு மீசை முளைத்தால் மட்டுமே சாத்தியம்.

பார்த்து விட்டு குறையையும் நிறையையும் என்னுடன் பகிர்நது கொள்ளுங்கள்.

--------------------------------------

என்னுடைய மினியேச்சர்


-----------------------------------------

நண்பர்களே தெற்கு ரயில்வேயில் கலாசி வேலைக்கு ஆள் எடுக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. மத்திய அரசு வேலைக்கு மிகசிறந்த வாய்ப்பு. கடைசி நாள் 25.09.2012. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பியுங்கள். சந்தேகமுள்ளவர்கள் எந்த வித தயக்கமுமின்றி என்னை தொடர்பு கொள்ளலாம். என்னால் முடிந்த விளக்கத்தை தங்களுக்கு அளிக்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, August 28, 2012

பதிவர் சந்திப்பும் வெள்ளைச் சட்டையும்


பதிவர் சந்திப்பு பற்றி அனைவரும் பதிவெழுதி பொங்கலிட்டு விட்டார்கள். நாம் இனிமேல் சொல்ல புதுசா என்ன இருக்கு. ஆனா ஒன்னு இருக்கு. யாருக்கும் தெரியாமல் என் பொருளை காப்பாற்ற நான் செய்த தில்லாலங்கடி தான்.

பதிவர் சந்திப்புக்கு என்னிடமிருந்த கதர் வெள்ளைச் சட்டையை போட்டுக் கொண்டு போவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் பாருங்க, முதல் நாள் இரவு முழுவதும் கடும் மழை பெய்து சென்னையில் எங்கும் சேறும் சகதியுமாகி விட்டது.

சட்டையை போட்டுக் கொண்டு அம்பத்தூர் எஸ்டேட் வழியாக லூகாஸ் செல்லும் சாலையில் நாம் என்னதான் பிரயத்தனப்பட்டாலும் எவனாவது டபக்கென்று சாலையில் இருக்கும் சேற்றை எடுத்து சட்டையில் கோலம் போட்டு விடுவான்.

என் வீட்டம்மா வெள்ளைச் சட்டை வேணாம் என்று கண்டிப்பாக கூறினார். பிறகு அவரை சமாதானப்படுத்தி வெள்ளைச் சட்டையை போட்டு செல்வது போலவே திரும்ப வருவேன் என்று உறுதியளித்து சமாதானப்படுத்தினேன். ஏனென்றால் துணி துவைப்பது அவர் தானே.

காலையில் 8 மணிக்கு மழை வேறு பெய்து கொண்டிருந்தது. கதர் கலர் வேஷ்டி, வெள்ளை சட்டை, நெற்றியில் பட்டை, கூலிங்கிளாஸ், ஹெல்மெட்டுடன் ரெயின் கோட்டையும் போட்டுக் கொண்டு மேல் பாதியில் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கைப் போலவும், கீழ்ப்பாதியில் சபரிமலைக்கு மாலை போட்ட பக்தனைப் போலவும் காட்சியளித்தேன்.

தஞ்சை குமணன் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வீட்டிற்கு வந்திருந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு ஜெமினி சர்க்கஸ்ஸில் சாகசம் செய்யும் பைக்காரனைப் போல சாகசங்கள் செய்து ஒரு வழியாக பதிவர் சந்திப்பு திருவிழா நடக்கும் மண்டபத்தை அடைந்தேன்.

அப்பாடா ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்ற இறுமாப்பை அடைந்தேன். வெளியிலேயே வேஷத்தை கலைத்து விட்டு காவி உடை தரித்த நல்லவனைப் போல மண்டபத்தில் உள்ளே நுழைந்தேன். நாற்காலியில் அமரும் போது கூட பார்த்து பார்த்து அமர வேண்டியதாயிற்று. என்னா கஷ்டம்டா.

பதிவர் சந்திப்பு சிறப்பாக துவங்கி நடைபெற்று மதிய இடைவேளை வந்தது. மற்றவர்கள் உணவருந்திய பின்பே விழா ஏற்பாட்டாளார்கள் சாப்பிட வேண்டுமென கலந்தாய்வில் கேட்டுக் கொண்டதால் கடைசி பந்தியில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம்.

இலை வந்தவுடன் தண்ணீர் தெளிக்க வந்தவர் தண்ணியை சற்று வேகமாக தெளிக்க பாதி தண்ணீர் பளிச்சென்று சட்டையில் விழுந்தது. விதி விளையாட துவங்குகிறதோ என்ற பதைபதைப்புடன் லேசாக முறைத்தேன். ஹி ஹி ஹி சாரி என்று சொல்லிவிட்டு கடந்து சென்றார்.

பறிமாறியவர்களில் ஒருவர் ஐஸ்கிரீம் டம்ளரில் கிரேப் ஜூஸை வைத்து விட்டு சென்றார். பின்னாடியே சாம்பார் சாதம் பரிமாறியவர் என் இலைக்கு பரிமாறும் போது சிறிது சாதம் டம்பளரில் உள்ள கிரேப் ஜூஸில் விழுந்தது. கிரேப் ஜூஸ் சில்லென்று சட்டையில் தெளித்தது. விதி மீண்டும் சிரித்தது.

அதன் பிறகு பரிமாற வந்தவர்களை முன்பே மெதுவாக பறிமாறும்படி எச்சரித்து அரைகுறையுடனே சாப்பிட்டு எழுந்தேன். சட்டையை சுத்தம் செய்து காய்ந்ததும் கறை தெரியவில்லை. நிம்மதியாக இருந்தது. இடைவேளைக்கு பின் மீண்டும் துவங்கியது திருவிழா.

பட்டுக்கோட்டை பிரபாகர் வந்ததும் விழா களை கட்ட துவங்கியது. கடைசி நேரத்தில் போண்டா வந்தது. நான் இப்பொழுது பரிமாற துவங்க வேண்டாம். பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பேசி முடித்ததும் போண்டாவை கொடுக்கலாம் என்று கூறினேன். அதற்கு மறுத்த பதிவு நண்பர் ஒருவர் போண்டா சூடு ஆறிவிடும். நாம் தட்டில் வைத்து அனைவரிடமும் சென்று கொடுப்போம் என்றார்.

நானே சட்டையில் சட்னி பட்டு விடும் என்று பயந்து போண்டாவை வேண்டாம் என்று ஒதுக்கினால் விதி தேடி வந்து தள்ளுதே என்று புலம்பியபடியே தட்டில் வைத்து கொடுக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் போண்டா கொடுக்கும் இடத்தில் கூட்டம் சேர ஆரம்பிக்கவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சுரேகா அவர்கள் அனைவரையும் அமரும்படியும் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசியதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அழைக்க அனைவருக்கும் கொடுத்து மட்டுமே கொண்டிருந்த நான் வழிந்து கொண்டே அமர வந்தேன்.

என்னை போண்டா கொடுக்கும்படி பணித்த நண்பர் பக்கத்தில் அமர்ந்து சிரித்துக் கொண்டே போண்டா தின்று கொண்டிருந்தார். என் கெரகம் அப்படினு நினைத்துக் கொண்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தேன்.

விழா இனிதே நிறைவடைந்தது. வெற்றிகரமாக நடந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. முடிந்து செல்லும் போது முக்கால்வாசி நண்பர்கள் நடத்திக் காட்டியதற்கு நன்றி தெரிவித்து சென்றனர். நக்கீரனும் கிளம்பி விட்டார். அப்பாடா என்று அகமகிழ்ந்தேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியை நடத்திய நண்பர்கள் மற்றும் சில சீனியர் பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி சிறு மீட்டிங் போட்டோம். அதுவும் முடிந்து 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். வரும்வழியெங்கும் சட்டையில் எதுவும் படக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒட்டி வந்தேன்.

வீட்டின் அருகில் வந்ததும் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்தேன். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது பாழாய்ப்போன ஆப்பாயில் வரும் வரை. ஆர்வத்தில் ஆப்பாயிலை எடுத்து வாயில் போட முயற்சிக்கும் போது வழியில் உடைந்து சட்டையில் மஞ்சள் கரு கொட்டியது.

இதன் பிறகு வீட்டில் நடந்ததை சொன்னால் உலகம் என்னை வெளியில புலி வீட்ல எலி என்று பரிகாசம் செய்து கைகொட்டி சிரிக்கும். தலையில் வாங்கிய அடி புடைத்துக் கொண்டு வலித்தது. சத்தியமாக விதி வலியது.

ஆரூர் மூனா செந்தில்

Saturday, August 25, 2012

குடிக்கணுமா. ஒரு மெயில், அனைத்தும் ரெடி.
மக்களே சென்னையில் பதிவர்கள் யாருக்காவது இன்றிரவு குடிக்க வேண்டுமென்றால் என்னை மெயிலில் தொடர்பு கொள்க. இலவசமாக ஊத்தித் தரப்படும். மு...........கா பயலுகளுக்கும் உண்டு. பாகுபாடு கிடையாது. ஒரு மெயில், ஓஹோன்னு குடி.


ஆரூர் மூனா செந்தில்

Thursday, August 23, 2012

பஞ்சேந்திரியா - சாம்பிள் பிரியாணியும் பதிவர் சந்திப்புக்கான முன்பதிவும்பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் அப்ரெண்டிஸ் படிப்பதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இது ஐடிஐ மற்றும் அப்ரெண்டிஸ் இரண்டும் சேர்ந்த படிப்பு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு. குறைந்தபட்ச வயது 15. விண்ணப்பக் கட்டணம் ரூ40. SC/ST க்கு கட்டணம் ஏதுமில்லை.

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அப்ரெண்டிஸ் முடித்தால் இரண்டு வருடத்தில் ரயில்வேயில் குறைந்தபட்சம் கலாஸி வேலை வழங்கப்பட்டு விடும். பட்டப்படிப்பு முடித்தவர்களே அரசுவேலைக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற தலையால் தண்ணி (இதிலும் தண்ணியா) குடித்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் சரியான வயதில் உங்களது பசங்களை இதில் சேர்த்து விட்டால் அவனுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்க.

அரசு வேலையை பற்றிய விவரங்கள் குறைவா பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்கின்றனர். நானும் என் குடும்பத்தில் முதல் தலைமுறை ஆளாக ரயில்வே வேலையில் சேர்ந்தவன். எனக்கு கிடைத்த விவரம் அறியாத மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று தான் பகிர்ந்து கொண்டுள்ளேன். இதில் வேறு எந்த வணிக நோக்கமும் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்க. என்னால் இயன்ற விவரங்களை தருகிறேன்.

-----------------------------------------

சத்தியமா இவர் பதிவர் சந்திப்புக்கு வரமாட்டாருங்க சகோ


-----------------------------------

பெரம்பூர் கேரேஜ் மற்றும் லோகோ நுழைவாயில் முன்பாக 50 வருடங்களுக்கு மேலாக இருந்த டீக்கடைகள், பெட்டிக்கடைகள், இட்லிக்கடைகள் மற்றும் கேண்டீன்கள் ஆகியவைகளை இடித்து தள்ளிவிட்டனர். இடம் ரயில்வே இடமாக இருந்தாலும் பல வருடங்களை கடை வைத்து பிழைப்பு நடத்திய ஏழைகள் அவர்கள்.

இத்தனை நாட்களாக கோர்ட்டில் ஸ்டே ஆர்டர்கள் இருந்ததால் வெயிட் பண்ணிய ரயில்வே நிர்வாகம் ஸ்டே முடிந்த அன்றே அனைத்து கடைகளையும் இடித்து தள்ளி விட்டது. ஊழியர்கள் வேலை முடிந்ததும் டீ குடிக்க வெளியில் வரும் தொழிலாளர்கள் இப்பொழுது பல கிமீ தள்ளி சென்று தான் டீ கூட குடிக்க முடிகிறது.

சட்டப்படி பார்த்தால் ரயில்வே இடம் தான். அவர்கள் காலி பண்ணியதும் சரியானது தான். ஆனால் தொழிலாளர்களின் வசதியையும், ஏழை மக்கள் அன்றாடம் நூறு, இருநூறு சம்பாதித்ததில் மண்ணை அள்ளி போட்டு விட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ரயில்வே யூனியன்களும் கேட் மீட்டிங்குகளை நடத்தி வருகின்றனர்.

என்ன நடக்க போகிறதோ காலத்திற்கே வெளிச்சம்.

-------------------------------------

ராங் கனக்சன்


-----------------------------------

சாம்பிள் வாங்கி சாப்பிடுவது, வடிவேலு காமெடியிலும் மயில்சாமி காமெடியிலும் சூப்பர்ஹிட்டானது. அது போல் இன்றும் எனக்கு நடந்தது. நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன். எங்களது கேங்கில் இருக்கும் ஒருவர் இந்த மாதத்துடன் ரிட்டையராக இருக்கிறார்.

ரிட்டையர்மெண்ட் பார்ட்டியாக சக தொழிலாளிகள் ஒவ்வொருவருக்கும் குவாட்டரும் கோழிபிரியாணி தருவதும் வழக்கம். ஏற்கனவே பிரியாணிக்கு ஒரு பார்சல் ரூ70 வீதம் ஒரு ஆளிடம் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தனர்.

நேற்று நான் வேலை முடிந்து வரும் போது வில்லிவாக்கத்தில் ஒரு கடையில் ஆப் பிரியாணி வாங்கினால் ஆப் பிரியாணி இலவசம் என்று போர்டு மாட்டியிருந்தது. உடனே உள்ளே சென்று ஆப் பிரியாணி சாப்பிட்டு விட்டு ஆப் பிரியாணி பார்சல் வாங்கி வந்தேன். அதனை எங்களது சக ஊழியரிடம் தெரிவித்த போது உடனடியாக அதனையே நாம் வாங்கி விடுவோம் என்று சொல்லி என்னையும் அந்த கடைக்கு அழைத்து வந்தார்.

140 பிரியாணிக்கு பணம் கொடுத்து விட்டு சகஊழியர் அவர்களிடம் ஏம்ப்பா இவ்வளவு பிரியாணிக்கு காசு கொடுத்திருக்கோம் சாம்பிள் கொடுக்கமாட்டீங்களா என்று கேட்டார். எனக்கு பயங்கர சிரிப்பாக வந்தது. அவர் முன் காட்ட முடியாதில்லையா, அடக்கிக் கொண்டு அவர்கள் கொண்டு வந்த ஆப் (எப்பா எவ்வளோ ஆப், சத்தியமா இது பிரியாணி மட்டும் தாங்க, வேற ஆப் இல்லீங்க)பிரியாணியை சாப்பிட்டு வந்தேன்.

சாம்பிள் பிரியாணி கூட ருசியாகத்தான் இருந்தது.

----------------------------------------

எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்கப்பா


---------------------------------------

பதிவர் சந்திப்புக்காக வெளியூரிலிருந்து வரும் தோழர்கள் முன்பே தொடர்பு கொண்டு சொன்னால் தான் நன்றாக இருக்கும். இதுவரை நண்டு நொரண்டு, சிபி செந்தில் குமார், திண்டுக்கல் தனபாலன், சங்கவி, நக்கீரன் ஆகியோர் மட்டுமே என்னைத் தொடர்பு கொண்டு அறைக்கான தேவையை உறுதிப்படுத்தியுள்ளனர். வேறு யாராவது சனி இரவு தங்க அறை வேண்டியிருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும். அப்பொழுது தான் அறை முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

சர்ச்சைகள் பல இருந்தாலும் பதிவர் சந்திப்பு இனிதாக நடைபெறும்

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, August 21, 2012

பதிவர் சந்திப்பை குலைக்க நடக்கும் சதிகள்

மிகப்பெரிய பதிவர் சந்திப்பு பல வருடங்களாக சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஒரு சிலரின் ஒத்துழைப்பின்மையால் கைவிடப்பட்டே வந்தது. ஐயா சென்னைப் பித்தன், புலவர் ராமானுஜம், மின்னல் வரிகள் கணேஷ் மற்றும் கவிஞர் மதுமதி ஆகியோரால் மிகச்சிறிய அளவில் பதிவர் சந்திப்பு என்று துவங்கப்பட்டு மற்ற பதிவர்களால் கைதூக்கப்பட்டு மிகப் பெரிய பதிவர் சந்திப்புக்கு அடிக்கோலிடப்பட்டது.

பொதுவாக ஒரு விஷயம் நல்ல முறையில் நடக்க ஆரம்பித்தால் அது உடனடியாக சில கருங்காலிகளால் திட்டமிடப்பட்ட பொய்ப்பிரச்சாரத்தினால் அதன் வீரியத்தை இழந்து விடுவதுண்டு.

இந்த சந்திப்புக்கு சில கருங்காலிகள் திருஷ்டிப்பொட்டு வைக்க முயன்றிருக்கிறார்கள். நண்பர்களே நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் பதிவர் சந்திப்பில் குழப்பம் ஏற்படுத்த உங்களால் முடியாது.

நானும் நக்கீரனும் குடிக்கிறோம். குடியைப் பற்றி எங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறோம் என்பது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். நானோ அல்லது என் நண்பர்களோ குடித்து விட்டு பதிவர் சந்திப்புக்கு வந்ததை பார்த்ததுண்டா?

இரவு தனியறையில் குடித்து விட்டு யாருக்கும் இடைஞ்சல் செய்யாமல் இருப்பவன் நல்லவனா? நான் பெரியவன் என் குழு பெரியது என்று பொது இடத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பேசி கெடுக்க நினைக்கும் நீங்கள் நல்லவர்களா?

ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னையும் என் நண்பரையும் தாக்கி பதிவிட்டு இருக்கிறார். அவர் செய்தது தவறு என்று நான் குற்றம் சாட்டுகிறேன். அந்த உரையாடலில் எந்த சம்மந்தமும் இல்லாமல் அவர் உன் குழுவை சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்.

பதிவர் சந்திப்பை குலைக்கும் வகையில் பேசி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அது வெற்றி பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி முகமது ஆஷிக் போன பதிவில் சம்மந்தம் இல்லாமல் நீ பதிவிட்டு இருக்கும் போதே நினைத்தேன். உங்களது அடுத்த டார்கெட் நானாக இருப்பேன் என்று. செயல்படுத்தி விட்டாய் நன்றி.

ஆரூர் மூனா செந்தில்

Thursday, August 16, 2012

என் விகடனில் நம்ம நாய் நக்ஸ் நக்கீரன்

எனதருமை மக்களே, நம்ம நக்கீரன் அவர்கள் என் விகடன் பாண்டி பகுதியிலிருந்து வெளியிடப்படும் முதல் இணைய என் விகடன் பகுதியில் வலையோசை பகுதியில் வந்திருக்கிறார். இந்த இணைப்பை சொடுக்கி அனைவரும் பார்த்து மகிழுங்கள்...
நக்கீரன் அவர்களின் பதிவு


அண்ணன் நாய் நக்ஸ் நக்கீரன் வாழ்க, வாழ்க.
(இத செய்யலைனா எனக்கு போன் போடுறதா சொல்லியிருக்காருங்க அதான்).


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இந்த பதிவுக்கு ஒட்டு போடாமலும் மற்றும் பின்னூட்டமிடாமலும் இருக்கும் நம் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நக்கீரன் போன் செய்து பேசுவதாக சொல்லியிருக்கிறார்.


Wednesday, August 15, 2012

அட்டக்கத்தி - சினிமா விமர்சனம்


படத்தின் எதிர்ப்பார்ப்புக்கு சான்று அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் இன்று காலைக்காட்சி ஹவுஸ்புல். எங்கு திரும்பினாலும் படத்தின் விளம்பரங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டதே இதற்கு காரணம். பெரிய நடிகர்களின் படங்களே ராக்கி திரையரங்கில் பாதி தான் நிறையும் காலத்தில் விடுமுறை தினம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அரங்கு நிறைந்தது எனக்கு பயங்கர ஆச்சரியத்தை அளித்தது.

இவ்வளவு எதிர்பார்ப்பையும் படம் நிறைவேற்றியிருக்கிறதா என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும். படத்தில் கதை கத்தரிக்காய், மனதை உருக்கும் சென்டிமெண்ட், ஆக்சன் காட்சிகள், சமூகத்திற்கு தேவையான கருத்துகள், அதிர்ச்சியான க்ளைமாக்ஸ் என்று எந்த வெங்காயமும் கிடையாது. அட்டக்கத்தி என்ற பெயர் காரணம் என்னவென்றால் உதார் விடும் வெத்து பசங்களுக்கு வடசென்னை பகுதியில் வைக்கப்படும் பட்டப்பெயர்.

தேடிப்பார்த்து கதையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாயகன் (தினேஷ்) சென்னையின் புறநகரில் வசித்து வருகிறான். அவனது படிப்புக்காக சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது. படிப்பை முடித்து வேலையில் செட்டிலாவதற்குள் 7 அல்லது 8 ஒரு தலை காதல்களை சந்தித்து எல்லாவற்றிலும் தோல்வியடைந்து கடைசியாக காதலித்து கல்யாணம் செய்கிறார். அவ்வளவு தான்.

படத்தின் கதை விவாதத்தின் போது கலந்து கொண்ட உதவி இயக்குனர்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விகளை சொல்ல அதனை இயக்குனர் மேம்படுத்தி ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வந்து அதனை படத்தில் சுவைபட சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒருவனது வாழ்க்கையில் இவ்வளவு காதல் சொதப்பல்கள் இருக்காது. ஒன்னு ரெண்டு சொதப்பல்களிலேயே ஒருவனுக்கு ஞானம் பிறந்து விடும்.

தினேஷ் படத்தின் நாயகனாக வருகிறார். புறநகரில் ருந்து சென்னைக்கு படிக்க வரும் வாலிபனை இயல்பாக கண் முன் நிறுத்துகிறார். அவரது ஊரில் அவரைப் போலவே நான்கு வெட்டி நண்பர்கள். அவர்கள் அனைவரின் லட்சியம் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வது தான். பஸ்ஸ்டாண்டில் ஸ்டைலாய் ட்ரெஸ் செய்து கொண்டு நிற்பது, பஸ்ஸில் வரும் பெண்களின் பார்வைக்காக கையில் உள்ள புக்கைக் கொடுத்துவிட்டு புட்போர்ட் அடிப்பது, ஏரியாவிட்டு ஏரியா போய் அடி வாங்கிக் கொண்டு அழுவது, நிறைய தோல்விகள் கொடுத்த பாடங்களால் காதலை விட்டு விலகி கல்லூரியில் சேர்ந்து “ரூட்டு தலையாகி” அடிதடி ஹீரோயிசமாய் அலையும் போது, கராத்தே மாஸ்டரிடம் சரிமாத்து வாங்கி வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வரும் போது, மச்சான் அமுதாடா என்று சொன்னவுடன் சட்டென திரும்பி பனியனால் முகம் துடைத்துக் கொண்டு சிரிப்பது என தினேஷ் என் கல்லூரி கால நண்பனாக அசத்தியிருக்கிறார்.

படத்தில் நாயகி என்று யாருமில்லை. நாயகி போல் வந்து தினேஷூக்கு அல்வா கொடுப்பவராக நந்திதா. புறநகருக்கு என்று ஒருனி ஸ்லாங் இருக்கிறது. சென்னைத் தமிழை விட சற்று வித்தியாசமாக பேசப்படும் தமிழ். அந்த ஸ்லாங்கில் இயல்பாக பேசி அசத்தியிருக்கிறார். பள்ளி மாணவியாக தினேஷை கொஞ்ச காலம் அலையவிட்டு கடிதம் கொடுக்கவரும் போது அண்ணா என்று சொல்லும் போது தியேட்டர் அதிர்கிறது. கல்லூரிக்கு வந்ததும் சற்று மெச்சூரிட்டி வந்து தினேஷூடன் இயல்பாக பழகும் போதும் கவர்கிறார்.

படத்தில் நாயகிகளாக வருபவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் மனதை கவர்கிறார்கள். அதுவும் அந்த இரட்டை நாயகிகள், தினேஷ் அவர்களிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்னும் போது அவர்கள் அம்பத்தூர் என்றதும் தியேட்டரில் எழுந்த விசில் அடங்க ஐந்து நிமிடம் எடுத்தது.

அதிசயமாக ஒரு புதிய இயக்குனர் படத்தில் புதிய இசையமைப்பாளரின் பாடல் நன்றாக இருக்கிறது. அதுவும் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது. எனக்கு ஆடி போனா ஆவணி பாடல் மிகவும் பிடித்திருந்தது.

என்னை இந்தப்படம் மிகவும் கவர்ந்ததற்கு காரணம் நான் சென்னையில் ஐசிஎப்பில் படித்தவன். என்னுடன் படித்த முக்கால்வாசிப் பேர் திருவள்ளூர் முதல் பட்டாபிராம் வரையுள்ள பகுதிகளிலிருந்து வருபவர்கள் தான். நான் ஹாஸ்டலில் தங்கியிருந்ததால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களின் ஏரியாவுக்கு செல்வேன். படத்தின் காட்சிகள் அனைத்தும் அந்தப் பகுதிகளிலேயே படமாக்கப்பட்டிருக்கின்றன என்பதால் தான். என் நண்பர்கள் கல்லூரிக்கு வரும் போதும் இதே போல் அரட்டையடித்துக் கொண்டு ரயிலில் வரும் பெண்ணை ஒரு தலையாக காதலித்தும் வருவார்கள். அதில் சதீஷ் என்பவன் தான் ரூட்தலை. அதை அப்படியே படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

படத்தின் தனித்துவமே இயல்பான காதல் காட்சிகள் காதல் சொதப்பல் காட்சிகள் தான். சண்டை என்ற பெயரில் ஒரே குத்தில் 50 பேரை அடிக்க முயற்சிக்காமல் இருந்ததற்கு பூங்கொத்தே கொடுக்கலாம். தினேஷின் அப்பாவாக வருபவர் நான் வீரப்பரம்பரை என்று கெத்து காட்டி வாழை மரத்தை வெட்டுவதும், அவர் போதையில் தள்ளாடி சாப்பிடாமல் இருக்கும் போது மனைவி ஊட்டி விடுவதும் இயல்பாக இருக்கிறது.

குறை என்று சொல்லி நம் அறிவுஜீவித்தனத்தை காட்டுவதை விட இது போன்ற நல்ல சின்ன பட்ஜெட் படங்கள் வர வேண்டும் என்று வாழ்த்துவோம். நன்றி.

மொத்தத்தில் அட்டக்கத்தி படம் பார்க்க வேண்டிய படம் தான்.

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, August 14, 2012

கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன் - புத்தக பகிர்வுஇது புத்தக விமர்சனமும் அல்ல, நான் விமர்சனம் எழுதும் அளவுக்கு பெரிய ஆளும் அல்ல. ஒரு புத்தகத்தை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட மகிழ்வையும், ஆர்வத்தையும், படித்து முடித்தவுடன் ஏற்படும் திருப்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த பதிவர் சந்திப்புக்கு சென்ற போது கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபல்ல கிராமம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் என்ற புத்தகங்களை வாங்கினேன். இதில் கோபல்லபுரத்து மக்கள் புத்தகம் சாகித்ய அகாடமி விருது பெற்றதாகும்.

வாங்கிய தினங்களிலிருந்து புத்தகங்களை படிக்க முடியவில்லை. இன்று சீக்கிரமாக வேலை முடித்து வீடு திரும்பினால் வீட்டில் கரண்ட் இல்லை. இன்று ஷட்டவுனாம். சரி ஒரு புத்தகத்தை படித்து முடித்து விடுவோம் என்று முடிவு செய்து கோபல்ல கிராமம் புத்தகத்தை எடுத்தேன்.

புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே தமிழின் மிகச்சிறந்த முதல் பத்து நாவல்களில் முதன்மையான நாவல் என்று போட்டிருந்தது வேறு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படித்து முடித்ததும் எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன. இதோ உங்களுக்காக.

நாவலில் அடிப்படை கருத்தாக இருப்பது முன்பு கம்மாவார்கள் என்றும் தற்போது கம்மா நாயுடு என்றும் அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் எப்படி, எதற்காக தெலுகு பேசும் விஜயநகர பகுதிகளிலிருந்து புறப்பட்டு முன்பு அரவ தேசம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறினார்கள் என்பதை மிகத்தெளிவாக, நாட்டுப்புற வழக்கு நடையில் நாவலை அடித்து நகர்த்தியிருக்கிறார் கி.ராஜநாராயணன்.

நவாப் காலத்திற்கு அடுத்து கும்பெனியார் என்றழைக்கப்படும் ஆங்கிலேயர் காலத்திற்கு முன் ராஜங்கம் இல்லாத காலம் தான் நாவலின் களம். கொள்ளையும், கொலையும் தாண்டவமாடிக் கொண்டிருந்த காலத்தில் கம்மாவார்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நடைபெற இருந்த கொள்ளையையும், நடைபெற்ற கொலையையும் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை கோட்டையார் என்ற குடும்பத்தாரின் மூலமாக விவரிக்கிறது நாவல்.

இதன் முன்கதையை சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த 138 வயதான பூட்டி (பாட்டியின் அம்மா) தான் பழங்கால வரலாற்றின் பிரதிநிதி. அவளுக்கு 9 வயதாகும் போது நடந்த நிகழ்ச்சிகளை ஒரு பகுதி மறதியிலும், ஒரு பகுதி கற்பனையிலும் ஆழ்ந்து கூறுகிறாள்.

மங்கத்தாயரு அம்மாள் என்ற அந்த பூட்டியின் அக்கா சென்னாதேவி. பேரழகியான அவர் குடும்பத்துடன் விஜயநகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தேவராயர் அரசினை வீழ்த்திய முகமதியர்களின் அரசன் சென்னாதேவியின் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். இதனை விரும்பாத அந்த குடும்பத்தார்கள் 80க்கும் மேற்பட்டோர் இரவோடிரவாக அந்த பகுதியை விட்டு வெளியேறுகின்றனர்.

பலகாலம் நடந்தே தெற்கு நோக்கி நகரும் அவர்கள் பல வருடம் கழித்து வருசநாட்டு பக்கம் வந்து ஒரு காட்டுப் பகுதியை அழித்து குடியேற்றம் செய்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் பல்கிப் பெருகி தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் வியாபித்து வாழ்கிறார்கள்.

கதை நடக்கும் காலத்தில் அவர்கள் வந்து குடியேறிய கோபல்ல கிராமத்தில் கோட்டையார் குடும்பம் தான் ஊர்ப் பெரியவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பகுதியில் ஒரு கொலை நடக்கிறது. கொலையை விசாரிக்கும் அவர்கள் கொலையாளியை கழுவில் ஏற்றுகிறார்கள்.

அது போல் ஒரு இரவில் தங்களது கிராமத்திற்கு கொள்ளையர்கள் வரப்போவதாக துப்பு கி்டைக்கிறது. இரவு முன்னேற்பாடுகள் செய்து சாதுர்யமாக கொள்ளையடிக்க வரும் 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்களை கல்லை கொண்டு அடித்தே துரத்துகிறார்கள்.

இவற்றிற்கு பிறகு கும்பெனியார்கள் என்றழைக்கப்படும் வெள்ளையர்கள் அந்த ஊரினை நிர்வாகத்தில் எடுத்துக் கொள்வதில் இந்த நாவலின் அடுத்த பாகமான கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்கு அடிகோலிட்டு நாவல் நிறைவு பெறுகிறது.

நாவலில் மண்ணின் வாசம் இழையோடுகிறது. அந்த காலக்கட்டத்தில் விவசாய முறைகள், மருத்துவ முறைகள், சமையல், கால்நடைகள் பராமரிப்பு போன்றவற்றை நாம் அந்த காலக்கட்டத்துடன் பயணிக்கும்படி நாவலை எழுதியிருக்கிறார்.

நாவலில் காணக்கிடைக்கும் கருத்துக்கள்.

நிலம், குடம்பத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அதிகமாகவோ, குறைவாகவோ, தனிமையுடமையாக இருந்தது. காட்டுப்பகுதியை விளைநிலங்களாக்க காட்டுப்பகுதியை பிரித்து மூன்று வண்டிப்பாதைக்கு அகலம் விட்டு உள்ளடங்கிய பகுதிக்கு தீ வைத்தார்கள். தீ எரிந்து சாம்பலான இடம் கரிசல் நிலமாகியது.

வறுமை காலத்தில் சோற்றுக் கத்தாழைகளை உரித்து நீரில் அலசி கசப்பை நீக்கி உண்டார்கள். அவசியமானால், அது சகல நோய்களையும் போக்கக்கூடியது என்ற புனைக்கதையும் படைத்து நம்பிக் கொண்டார்கள்.

அது போல மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் மங்கம்மா சாலையில் தான் இந்தக் கதையில் வரும் கொலை நடக்கிறது. இந்த மங்கம்மா சாலை காவல் கோட்டம் நாவலிலும் வரும். காவல் கோட்டம் நாவலில் மங்கம்மா சாலை கொள்ளையர்கள் மிகுந்த சாலையாகவும் இரவில் செல்ல முடியாத சாலையாகவும் சித்தரிக்கப்படும். வெள்ளையர் காலத்தில் தான் திருட்டைப் போக்க மங்கம்மா சாலையை தவிர்த்து வைகை ஆற்றை ஒட்டி தற்போதுள்ள மதுரை - ராமநாதபுரம் சாலை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மரியாதை படத்தில் ஆற்றுக்கு அருகே வரும் ரஞ்சனியிடம் இருந்து கல்லுக்குள் ஈரம் ராமநாதன் (சிவாஜியின் மாப்பிள்ளையாக நடித்திருப்பவர்) காதில் உள்ள தங்கட்டியை பறித்து அவரை தண்ணீருக்குள் அமிழ்த்தி கொல்வார். அப்போது ரஞ்சனி ராமநாதனின் கால் கட்டை விரலை வாயில் கடித்து துண்டாக்கியிருப்பார். இந்த சம்பவம் அப்படியே இந்த நாவலில் இருந்து கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்படாமல் எடுக்கப்பட்டது தான்.

கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டிய நாவல் தான். படித்துப் பார்த்து தமிழ்நாட்டில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா செந்தில்


Monday, August 13, 2012

பஞ்சேந்திரியா - சுதந்திர தினமும் ரிட்டையர்மெண்ட் பார்ட்டியும்சுதந்திர தினம் வந்தாலும் வந்தது, எந்த டிவியை பார்த்தாலும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று பத்து நிமிடத்திற்கு ஒரு விளம்பரத்தை போட்டு கழுத்தறுக்கிறார்கள். டப்பாவான படமெல்லாம் சூப்பர் ஹிட் என்ற பந்தா வேறு.

சன், விஜய், கலைஞர் டிவிக்கள் பத்தாது என்று இந்த மெகா, வசந்த், விண் டிவிக்களும் களத்தில் இறங்கி சிறப்பு நிகழ்ச்சிகளை போட்டுக் கொல்லப் போகின்றன. இவனுங்க சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தால் தான் சுதந்திர தினமே நிறைவடையும் போல.

இப்பொழுதெல்லாம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் மட்டுமே கொடியேற்றுவதை கடமையாக நினைத்து செய்கின்றன. முன்புபோல ஒரு தெருவுக்குள் உள்ள நண்பர்கள் எல்லாம் மன்றம் அமைத்து தங்களது சுய ஆர்வத்தில் தெருக்களில் கொடியேற்றி, மிட்டாய் கொடுத்து, தேசிய கீதம் பாடி, தெருவுக்குள் உள்ள சிறுவர்களை அழைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் கொடுத்ததெல்லாம் மலையேறி விட்டன.

எங்கள் டிவியின் நிகழ்ச்சிகளை பார்த்து எங்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள் என்ற ஸ்லோகனுடன் வரும் நிகழ்ச்சி அறிவிப்பைப் பார்த்தால் எனக்கு பற்றிக் கொண்டு வருகிறது. கொஞ்ச நஞ்சம் மக்களுக்கு இருக்கும் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் முயற்சிகளை மட்டுமே டிவிக்கள் செய்கின்றன. வேறென்ன சொல்ல.

----------------------------------------------

இந்தியாவின் மானத்தை தலைநிமிர செய்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள்


-----------------------------------------------

இன்றும் ஒரு ரிட்டையர்மெண்ட் பார்ட்டி. இந்த மாதத்துடன் ஒய்வு பெறும் ஒரு சக ஊழியர் ஒருவர் வைத்தார். என்ன தான் பெரிய பாரில் அமர்ந்து சாவகாசமாக ஏகப்பட்ட சைட்டிஷ்களுடன் குடித்தாலும் இது போன்ற சமயங்களில் சக ஊழியர்களுடன் ஒரு மரத்தடியின் ஒரத்தில் அமர்ந்து கொண்டு ஒரு குவாட்டரை இரண்டே ரவுண்டில் மடக்கென்று குடித்து விட்டு சக ஊழியர்களை கலாய்த்துக் கொண்டு பிரியாணியை சாப்பிடும் கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே இது வேறெங்கும் கிடைக்காது.

என்னை வேலை வாங்கும் JE, அடுத்தடுத்த மாதங்களில் ரிட்டையர்மெண்ட்டாகப் போகும் பெரிசுகள், நடுத்தர வயது ஊழியர்கள் என் வயதையொத்த இளசுகள் என எல்லோரும் கூடி நின்று கலாய்த்துக் கொண்டும், பாசத்தை பகிர்ந்து கொண்டும் இருக்கும் இது போன்ற நிகழ்வுகள் தான் மற்ற ஊழியர்களுடன் நம்மை ஒன்ற செய்து விடுகின்றன.

அடுத்த பார்ட்டி வரும் 27ம் தேதி மற்றொரு ஓய்வு பெறும் ஊழியருக்காக நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் இப்போதே நடக்கிறது. சின்ன சின்ன சந்திப்புகள் தான் பெரிய நட்புக்கு ஆதாரம் என்பது இந்த இடத்தில் தான் நிரூபணமாகிறது, என்னை பொறுத்த அளவில்.

----------------------------------

தலைவரு நடந்தே ஜெயிப்பாரு தெரியும்ல


----------------------------------------

நமக்கு ஒரு வீக்னெஸ் உண்டு. படங்களில் சோகமான காட்சிகள் வந்தால் நான் படத்துடன் ஒன்றி அழுது விடுவேன். சிறுவயதிலிருந்தே இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. நானே விடவேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை.

சிறு வயதில் வீட்டில் வீடியோவில் பாசமலர் படத்தில் கைவீசம்மா கைவீசு என்று சிவாஜி உணர்ச்சி பொங்க வசனம் பேசும் காட்சியைப் பார்த்து கதறி கதறி அழுக வீட்டில் உள்ள எல்லோரும் டிவியை நிறுத்தி விட்டு வந்து என்னை தேற்ற முயற்சித்தனர். இதைப் பார்த்து கடுப்பாகிப் போன என் அப்பா விறகு கட்டையை எடுத்து வந்து சினிமாவில் வரும் காட்சிக்கெல்லாம் அழுவாயா என்று சாத்தி எடுத்தது எல்லாம் வரலாறு.

இப்பக்கூட அங்காடி தெரு படத்திலும் சோகம் தாங்காமல் நான் அழத்தொடங்க இதைப் பார்த்த என் வீட்டம்மா இன்று வரை டிவியில் எந்த சோக காட்சி வந்தாலும் என்னைப் பார்த்து அழுமூஞ்சி என்று கிண்டல் செய்றார்.

நானும் முயற்சி பண்ணிப் பாக்கிறேன் இதை மட்டும் நிறுத்த முடிய மாட்டேங்குது. அதுவும் சரக்கைப் போட்டு படத்தைப் பார்த்தால் அழுகை ரெட்டிப்பாகுது. என்ன வாழ்க்கைடா இது.


-------------------------------------------

லிப்ட் கேட்டா தப்பா
ஆரூர் மூனா செந்தில்

Friday, August 10, 2012

ஜூலாயி - தெலுகு சினிமா

சென்னையில் பரவலாக தமிழ்படங்களுக்கு இணையாக ஜூலாயி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதுவே படத்தின் எதிர்பார்ப்பிற்கு அடிகோலியது. அதுவும் இல்லாமல் ராக்கி காம்ப்ளக்ஸில் பெரிய திரையரங்கான ராக்கியில் சாதாரணமாக தமிழ்ப்படங்களே திரையிட யோசிப்பார்கள். இந்தப்படம் திரையிட்டிருந்ததும் கவனிக்க வைத்தது.

நம்ம வீட்டம்மா வேறு இந்த படத்தின் பாடல்களை ஏற்கனவே இணையத்தில் டவுன்லோட்டிட்டு கேட்டு பிடித்ததால் படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று முன்பே ஆணையிட்டு இருந்தார்கள். நாம் தான் வீட்டம்மா சொல் தட்டாத பிள்ளையாச்சே. நேற்றே குடும்பத்துடன் படத்தை பார்த்தாச்சு. ஆனால் பாருங்கள் நேற்று பதிவு எழுதுவதற்கு நேரமில்லாததால் இன்று எழுத வேண்டியதாகி விட்டது.

அல்லு அர்ஜூனின் மற்ற படங்களை விட எனக்கு ஆர்யா -2 மிகவும் பிடிக்கும். சிம்புவைப் போல் தெலுகில் அல்லு அர்ஜூன் எத்தனை பிளாப்புகளை கொடுத்தாலும் பரபரப்பான ஸீரோ அவரே. அப்படிப்பட்டவரின் திருமணத்திற்கு பிறகு வரும் முதல்படம் இது. இதற்கு முன் வந்த படமான பத்ரிநாத் அட்டர் பிளாப். இவ்வளவு இருந்தும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு குறையவேயில்லை.

படத்தின் இயக்குனரான திரிவிக்ரத்தின் முந்தைய படங்களில் அத்தடு எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டைலிஷ்ஷான மேக்கிங் என்று ஒன்று உள்ளதென்றால் இந்தப் படத்தில் நீங்கள் காண முடியும். அதுபோலவே கலீஜா பெரும்பாலானவர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. படமும் சரியாக போகவில்லை. ஆனால் எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது.

இவ்வளவு எதிர்பார்ப்பிற்கிடையே வெளியா இந்தப் படம் நிறைவேற்றியிருக்கிறதா என்றால் அந்தளவுக்கு இல்லையென்றே சொல்வேன்.

பொதுவாக மனிதர்கள் ஆறறிவு உள்ளவர்கள் என்றால் இந்தப் படத்தில் வில்லனுக்கோ ஏழறிவு. ஹீரோவுக்கோ ஏழரையறிவு. பார்ப்பவர்களுக்கோ ஏழரை. வக்காளி படத்தின் திரைக்கதையை இருவருக்கு மட்டுமே இயக்குனர் சொல்லியிருப்பார் போல. படத்தின் அடுத்த சீன்களை மாற்றி மாற்றி இருவரும் சொல்கிறார்கள். ஹீரோ என்ன செய்வார் என்று வில்லன் சொல்கிறான். வில்லன் என்ன செய்வான் என்று ஹீரோ சொல்கிறான்.

அல்லு விரைவான வழியில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன். அப்பாவிடம் தாங்கள் கொடுக்கும் பத்தாயிரத்தை இரண்டு மணிநேரத்திற்குள் ஒரு லட்சமாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறான். அதற்காக அவன் பெட்டிங் சென்டருக்கு செல்லும் வழியில் வில்லனை(சோனு சூட்) சந்திக்கிறான். அவனின் பேச்சு, நடை, செயல் இவற்றை வைத்து அவன் வங்கியில் பணத்தை திருட போவதை கணிக்கிறான்.

பெட்டிங் சென்டரில் நடக்கும் பிரச்சனையில் போலீசிடம் வங்கி கொள்ளை நடக்கப் போவதை சொல்கிறான். வில்லனின் வங்கிக் கொள்ளை முயற்சி தடுக்கப்படுகிறது. வில்லனின் தம்பி கொல்லப்படுகிறான். பணமும் பறிபோகிறது. இவ்வளவுக்கும் காரணமான அல்லுவையும் அவனது குடும்பத்தையும் கொல்லுவதாக சவால் விடுகிறான். அவன் செய்தானா, அல்லு அதனை தடுத்தாரா என்பதே படத்தின் கதை.

அல்லு அர்ஜூன் பிரமாதமாக நடித்துள்ளார். நடனத்தில் சொல்லவே வேண்டியதில்லை, அசத்துகிறார். காமெடியில் பிரம்மானந்தத்துடன் சேர்ந்து கலக்குகிறார். ஆனால் ஒரு மிடில் கிளாஸ் வாலிபனாக வரும் அவர் எப்படி போலீசின் துப்பாக்கியை எடுத்து அவ்வளவு லாவகமாக சுடுகிறார் என்பது தான் நெருடுகிறது.

கதாநாயகியாக இலியானா, வயதாகிக் கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. போக்கிரியில் இருந்த ப்ரெஷனஸ் இதில் சுத்தமாக இல்லை. நல்லா வியாதி வந்த ஒட்டடைக்குச்சி போல் இருக்கிறார். கதாபாத்திரமும் அந்த அளவுக்கு பெரிதாக இல்லை. வருகிறார் போகிறார் அவ்வளவே.

படத்தில் எல்லோரையும் தாண்டி, ஏன் ஹீரோவையும் தாண்டி வசீகரித்திருப்பவர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே. பயந்தாங்கொள்ளி ஐபிஎஸ் ஆபிசராக வந்து அதகளம் பண்ணியிருக்கிறார். அல்லு அசால்ட்டாக வில்லன் ஒருவனை இவரின் கையில் உள்ள துப்பாக்கியை பிடுங்கி கொன்று விட்டு அவர் கையில் மீண்டும் திணித்ததும் அவர் முழிக்கும் முழி இருக்கிறதே ஏஒன். மேக்கப்பும் அவ்வாறே. ஹீரோயினை விட இவருக்குத்தான் பவுடர் செலவு அதிகமாகி இருக்கும் போல.

பிரம்மானந்தம் காமெடி நடிப்பில் வழக்கம் போல பின்னியிருக்கிறார். ஒரு பெண்மணியிடம் செயின் ராப்ரி பண்ண முயற்சித்து அடி வாங்கும் இடத்தில் விசில் பறக்கிறது. அது போலவே நாராயணனும் அவர் பங்கிற்கு அசத்தியிருக்கிறார்.

வில்லனாக சோனு சூட் ஆரம்பத்தில் அல்லுவுக்கு இணையாக பில்ட் அப் கொடுத்து கடைசியில் சப்பென்று முடித்து கொன்று விடுகிறார்கள். வாய்பேசாத, காசு கேட்காத பெண்ணாக வரும் வில்லியை பயங்கர பில்ட்அப்பாக காண்பித்து பொசுக்கென்று ஆக்கி விடுகிறார்கள்.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே பயங்கர ஹிட். எங்க வீட்டில் மட்டும் சூப்பர் ஹிட். நடனத்தில் பல புதிய ஸ்டெப்களை போட்டு அசத்துகிறார்கள். அடுத்த சிம்பு படத்தில் வந்தாலும் வரும்.

படத்தில் அருமையாக காமெடி எடுபட்டிருக்கிறது. ஆனால் அதற்காக இந்தளவுக்கு கூடை கூடையாக காதில் பூ சுற்றியிருக்கக் கூடாது.

ஜூலாயி - பிடித்திருக்கிறது, ஆனால் பிடிக்கவில்லை.

ஆரூர் மூனா செந்தில்


Wednesday, August 8, 2012

பஞ்சேந்திரியா - கோயம்பேட்டில் நடக்கும் பார்க்கிங் டிக்கெட் மோசடி

சில நாட்களுக்கு முன் காலையில் வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அம்பத்தூரிலிருந்து எஸ்டேட், பாடி வழியாக லூகாஸ் செல்லும் சாலை காலையிலும் மாலையிலும் எப்படி டிராபிக்கில் மாட்டி விழிபிதுங்கும் என்று சொல்ல தேவையில்லை. ஒரு முறை மாட்டியவர்களுக்கே நன்கு தெரியும்.

எஸ்டேட் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சிக்னலில் நிற்கும் போது ஒரு ஆண்ட்டி ஸ்கூட்டியில் சர்ரென்று வந்து நின்றது. சிக்னல் விழுந்த அடுத்த வினாடி ஸ்கூட்டி பறந்தது. அந்த வினாடி எனக்குள் இருந்த ஆணாதிக்க மனப்பான்மை துடித்தெழுந்தது. எப்படி ஒரு பெண்மணி நம்மை முந்திச் செல்லலாம் என்று.

நானும் பைக்கை எடுத்துக் கொண்டு பின்னாடி விரைந்தேன். பிரிட்டானியா வரை துரத்தி சென்றேன். ம் ஹூம். வண்டியை நெருங்கக் கூட முடியவில்லை. பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் ஏற்பட்ட டிராபிக்கில் ஸ்கூட்டி நின்றது. நானும் நின்றேன். ஒரு நிமிடம் தான் கிடைத்த கேப்புக்குள் ஸ்கூட்டி சர் சர்ரென்று நுழைந்து போய்க் கொண்டே இருந்தது.

நானும் விடாமல் பின்னாடி துரத்தி சென்றேன். நான் லூகாஸ்ஸில் நேரே செல்ல வேண்டும். ஆனால் ஸ்கூட்டி வலப்புறம் அண்ணாநகர் நோக்கி திரும்பியது. நான் எப்படியாவது அவரை முந்திச் செல்ல வேண்டும் என்று எண்ணி நான் சாலையிலிருந்து பிரியும் இடம் வரை நெருங்க முடியாததால் ஸ்கூட்டியை முந்திச் சென்ற பின்பே மீண்டும் வேலைக்கு செல்வது என்று முடிவு செய்து வலப்புறம் வண்டியை திருப்பினேன்.

கொஞ்ச தூரத்திற்கு டிராபிக் இல்லாததால் வேகமாக சென்று ஸ்கூட்டியை அண்ணா நகர் 6வது மெயின் ரோட்டில் முந்தினேன். ஸ்கூட்டியில் வந்த ஆண்ட்டியை வென்று விட்ட திருப்தி. பிறகு அங்கிருந்து திருமங்கலம் சாலை வழியாக சென்று நாதமுனியில் திரும்பி வழக்கமான சாலையை அடைந்து வேலைக்கு சென்றேன்.

அன்று முழுவதும் திமிருடன் தான் திரிந்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு நான் செய்தது தப்போ என்று மனம் சிந்திக்க ஆரம்பித்தது. பிறகு தான் என்ன ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தோம் என்று புரிந்தது. அதன் பிறகு இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். பாடியில் மற்றுமொரு ஆண்ட்டி ஸ்கூட்டியில் என்னை முந்தி சென்றது. அடுத்த வினாடி எனக்குள் இருந்த ஆணாதிக்க மனப்பான்மை துடித்தெழுந்தது. என் வண்டியை முடுக்கினேன். அய்யோ யாராவது சொல்லுங்களேன், நான் நல்லவனா? கெட்டவனா?

-------------------------------

தமிழகத்தை நெருங்குகிறது தண்ணீர் பஞ்சம்


-----------------------------------------

பொதுமக்கள் அரசு அலுவலகத்திற்கு ஏதாவது வேலையாக சென்றால் ஊழியர்கள் அலட்சியப்படுத்துவது தாமதப்படுத்துவது தமிழகமெங்கும் சகஜமாக நடப்பதொன்றாக ஆகிவிட்டது. நமக்கும் பழகிப் போய் அது போல் அவர்கள் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்றாகி விட்டது.

இந்த மாதம் என் சம்பளத்தில் D.A விடுபட்டு போய்விட்டது. அதனை சரிசெய்து பணத்தை வாங்க வேண்டுமென்றால் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸீல் உள்ள வேஜஸ் செக்சனுக்கு சென்று அதற்கென்று உள்ள அதிகாரியைப் பார்த்து தான் செய்ய வேண்டும். சென்ற வாரம் வியாழக்கிழமை சென்றால் அந்த அதிகாரி லீவு என்றும் அடுத்த வாரம் வாருங்கள் என்றும் சொன்னார்கள்.

ஒருவர் வரவில்லையென்றால் அத்துடன் அந்த பணிகள் நின்று விடுமா என்று கடுப்படித்துக் கொண்டே வந்தேன். ஆனால் பதில் தான் கிடைக்கவி்ல்லை. நேற்று காலை 11 மணிக்கு மீண்டும் சென்றேன். அந்த அதிகாரி அதுவரை வேலைக்கு வரவில்லை.

நான் சென்று அரைமணிநேரம் கழித்து தான் வேலைக்கு வந்தார். வந்தவுடன் கேட்டால் இப்பத்தானே வந்திருக்கிறேன் என்று கடுப்படித்தார். பிறகு அரைமணி நேரம் கழித்து மீண்டும் சென்று என் சம்பளத்தில் ஏற்பட்டுள்ள பிழையை சொன்னேன். சம்பள பில்லை வாங்கிப் பார்த்தவர் அப்படி உக்காரு கூப்பிடுறேன் என்றார்.

மணி 12.30 ஆகியது. என்னை அழைத்து கம்ப்யூட்டர் ஆன் ஆகவில்லை. மெக்கானிக் வரவேண்டும். நீ போயிட்டு லஞ்ச் டைமுக்கு அப்பறம் வா என்று சொன்னார். நாள் தள்ளிக் கொண்டு போகிறதே என்று கடுப்பாகி நான் உட்கார்ந்து முடித்து கொண்டு தான் போவேன் என்றேன். பிறகு முனகிக் கொண்டே கம்ப்யூட்டரை ஆன் செய்து செய்து கொடுத்தார்.

அடப்பாவி்ங்களா நானும் ரயில்வே ஊழியன், அவனும் ரயில்வே ஊழியன். என்னைப் போல் தான் சம்பளம் வாங்குகிறான். ஆனால் இந்த HR மற்றும் அக்கவுண்டஸ் ஊழியர்கள் மட்டும் எந்த ஏரியாவில் வேலை செய்தாலும் இப்படித்தான் இருப்பார்கள் போல. இவனுங்களை திருத்தவே முடியாதா?

---------------------------------

ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் பதிவர்கள்


-----------------------------------------

இன்று என் அப்பா அவசர வேலையாக சென்னை வந்திருந்தார். வந்தவர் அவரது வேலைக்காக வெளியில் சென்று விட்டு மதியம் போன் செய்து வேலை முடிந்து விட்டது. எனக்கு இன்றிரவு திருவாரூர் செல்வதற்கு டிக்கெட் எடுத்து விடு என்றார். கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திற்கு சென்றேன்.

நுழைவாயிலில் ஒருவர் அதிகாரமாக நிப்பாட்டி 5ரூபாய் கொடு என்று சீட்டு கொடுத்தார். எப்பொழுதுமே கேள்வி கேட்காமல் காசை எடுத்து கொடுக்கும் நான் இன்று யதார்த்தமாக சீட்டைப் பார்த்தேன். அதில் எந்த இடத்திலும் இரு சக்கர வாகனத்திற்கு என்று அச்சிடப்படவில்லை. கார்களுக்கு மட்டும் என்று போட்டிருந்தது.

அவரிடம் இது பற்றி கேட்டேன். அவர் இது தான் டிக்கெட்டு காசை எடு என்றார். ஐயா நான் பணம் கொடுக்க தயங்கவில்லை. பைக்கிற்குரிய சீட்டை கொடுத்து விட்டு காசை பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். சிறிது நேரம் என்னை முறைத்துப் பார்த்தவர் சத்தம் போடாமல் சென்றார். அப்பொழுது தான் புரிந்தது. இத்தனை ஆண்டுகளாக பல நூறு முறை அவர்களிடம் நான் காசை கொடுத்து ஏமாந்திருக்கிறேன் என்று.

இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். யாரும் கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் செல்ல நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. யாராவது உங்களிடம் கேட்டால் டிக்கெட்டை கேளுங்கள். அதில் இருசக்கர வாகனத்திற்குரிய சீட்டு என்று அச்சிடப்பட்டு இருக்காது.

அதனை அவர்களிடம் கூறினால் நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டாயிரம் பைக்குகள் உள்ளே சென்று திரும்புகின்றன. ஒரு பைக்கிற்கு 5ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட தினம் பத்தாயிரம் வீதம் மாதம் மூன்று லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள். உஷார்.

ஆரூர் மூனா செந்தில்


Monday, August 6, 2012

விபத்துகள் பலவிதம் கவனம் வேண்டும் தினம் தினம்.

நேற்று ஐசிஎப் அருகில் வண்டியில் போய் கொண்டு இருக்கும் போது ஸ்கூட்டி ஒன்று விர்ர்ரென்று சென்றது. சற்று தூரத்தில் சென்று விபத்துக்குள்ளானது அந்த வண்டி. அவசர அவசரமாக சென்று பார்த்தால் ஓட்டிச் சென்றவன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். கை கால்களில் நல்ல அடி.

எல்லோரும் அவனை திட்டி விட்டு சென்றார்கள். நான் அங்கேயே இருந்து அவன் அப்பாவின் போன் நம்பரை வாங்கி போன் செய்து விவரம் சொல்லி விட்டு நன்றாக திட்டியும் விட்டு வந்தேன். வரும் வழியில் எனக்கு நினைவுகள் பின்னோக்கி சென்றது.

சிறுவயதில் நான் புதிதாக டூவீலரை ஓட்டக் கற்றுக் கொண்டது, அதன் பிறகு எந்த டூவீலர் வீட்டிற்கு வந்தாலும் எடுத்துக் கொண்டு ரெண்டு சுற்று சுற்றிய பிறகு தான் தாகம் அடங்கும். வண்டி ஓட்டும் வேகம் சரியான வயதிற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். நானும் அதனை தெரிந்து கொண்டேன் நான்கைந்து விபத்துகளை சந்தித்த பிறகு.

முதல் முதலாக என் அப்பா வாங்கியது TVS 50 வண்டி. திருவாரூருக்குள் அந்த வண்டியை வைத்துக் கொண்டு சுற்றாத தெருவே கிடையாது. அப்பொழுது நாங்கள் திருவாரூர், தியாகராஜ நகரில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருந்தோம். என் அம்மா ஒரு உதவிக்காக ரேவதி அக்காவை வடக்கு வீதியிலிருந்து அழைத்து வர சொல்லியிருந்தார்கள். நான் TVS 50யை அப்பாவுக்கு தெரியாமல் எடுத்துக் சென்று ரேவதி அக்காவை அமர வைத்து படுவேகமாக துர்காலயா ரோட்டில் வந்து கொண்டிருந்தேன்.

திடீரென்று எதிரில் லாரி வந்ததும் உடனே பிரேக்கை அழுத்திப் பிடித்தேன். அடுத்த வினாடி வண்டி நிலை தடுமாறி நான் கீழே வண்டி என் மேலே கிடந்தது. ரேவதி அக்காவை காணவில்லை. எழுந்து பார்த்தால் சாலையோரம் இருந்த வேலியின் மீது விழுந்து கிடந்தார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் காயத்துடன் வீட்டிற்கு சென்றோம். பிறகென்ன வீட்டில் எங்க அப்பா கட்டி வைத்து சோத்துக்கத்தாழை செடியாலேயே அடித்து என் தோலை உரித்து விட்டார்.

அடுத்ததாக நான் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் திருத்துறைப்பூண்டியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கம்பெனிக்கு சொந்தமான ஸ்கூட்டர் ஒன்று திருவாரூரில் உள்ள சர்வீஸ் சென்டரில் விடப்பட்டிருந்தது. வண்டி ரெடியானதும் நான் சென்று வண்டியை எடுத்துக் கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந்து கொண்டிருந்தேன்.

ஆலத்தம்பாடி என்ற ஊரின் அருகே வந்த போது வண்டி ஆடியது. சரி வண்டி பஞ்சாகி கொண்டிருக்கிறது போல. வேகமாக சென்றால் திருத்துறைப்பூண்டிக்கு சென்று விடலாம் என்று வண்டியை முடுக்கினேன். சிறிது தூரம் சென்ற பிறகு தடாலென்று சத்தம் மட்டும் கேட்டது. நான் ரோட்டின் எதிர்ப்புறம் கிடந்தேன். வண்டியைப் பார்த்தால் முன் சக்கரத்தை காணவில்லை.

தூரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் ஒடி வந்தனர். என்னை தூக்கி விட்டு வயலின் நடுவில் கிடந்த சக்கரத்தை கொண்டு வந்து கொடுத்தனர். எனக்கு கை முறிந்திருந்தது. வண்டியை அங்கேயே சைடு லாக் செய்து விட்டு வழியில் வந்த வண்டியில் ஏறி அலுவலகம் சென்றேன்.

பிறகு என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் சேர்ந்து பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ஒரு மருத்துமனைக்கு என்னை அழைத்து சென்றனர். எனக்கு எக்ஸ்ரே எடுத்து முறிந்த இடத்தை அறிந்து கட்டு கட்டி விட்டார் ஒரு நர்ஸ். மற்றவர்கள் அலுவலகம் சென்று விட சந்துரு மட்டும் என்னுடன் இருந்தான்.

சிறிது நேரத்தில் அவனை காணவில்லை. கைவலி அதிகமாகவே நர்ஸை அழைத்தேன். அவரையும் காணவில்லை. கத்தி கத்திப் பார்த்து தூங்கி விட்டேன். நடுஇரவில் இயற்கை உபாதைக்காக எழுந்து பார்த்தால் கட்டிலின் கீழே தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்பி எங்கேடா போன என்றேன். அவன் வெட்கப்பட்டுக் கொண்டே நர்ஸை காதல் பார்வை விட்டு கவிழ்த்த கதையை சொன்னான். கருமம் என்று திட்டினேன். சில மாதங்களுக்கு பிறகு சந்துரு நர்ஸை திருமணம் செய்து கொண்டது தனிக்கதை.

அதற்கடுத்தாக சென்னைக்கு வந்து விட்டிருந்தேன். என் அலுவலகத்திலிருந்து புதிதாக என் கம்பெனிக்காக தாம்பரத்தில் எடுக்கப்பட்டிருந்த கெஸ்ட் ஹவுஸ்க்காக சில பொருட்களை எடுத்துக் கொண்டு என்னுடன் சக நண்பன் ஒருவனை அழைத்துக் கொண்டு வண்டியில் சென்று கொண்டிருந்தேன்.

ஆலந்தூர் ஆசர்கானாவை அடுத்த பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக வேகமாக சென்று கொண்டிருந்த நான் வண்டியை திருப்பினேன். அங்கே ரோட்டில் கொட்டியிருந்த மணலில் சறுக்கி தேய்ந்து கொண்டே போய் விழுந்தோம். எழுந்து பார்த்தால் நெஞ்சு முழுக்க சிராய்ப்பு. தலை மற்றும் இடதுகையில் சிராய்ப்பு. உடல்நலம் சரியாக பதினைந்து நாட்கள் ஆனது. அதன் பிறகு படிப்படியாக வேகமாக செல்வது 80kmphலிருந்து 60kmph ஆக குறைத்துக் கொண்டேன்.

பிறகு கேரளாவில் ஒரு கட்டுமானத்திற்காக பணிபுரிந்து கொண்டிருந்த போது பஜாஜ்M80யில் சென்று கொடிருந்தேன். எதிரில் படுவேகமாக வந்த நாதேரி ஒருத்தன் சட்டென்று பிரேக் பிடிக்க முயன்று முடியாமல் சாதுவாக வந்து கொண்டிருந்த என் மீது மோதி விட்டான். இடது கையில் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு வேகமாக செல்வது 60kmphலிருந்து 40kmph ஆக குறைத்துக் கொண்டேன்.

எல்லோருக்கும் அந்த ப்ரேக்கிங் பாயிண்ட் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு வந்து விட்டால் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளலாம். கண்டிப்பாக அதிக வேகம் என்பது விபத்து நடப்பதற்கான சாத்தியக்கூறை அதிகமாக்குகிறது. அதுவும் சரக்கடித்து விட்டால் அது இரட்டிப்பாகிறது.

அடுத்ததாக ஒரு விபத்து ஏற்பட்டால் வண்டியின் வேகத்தை நான் 10kmph ஆக குறைக்க வாய்ப்பிருப்பதால் இனிமேல் விபத்து ஏற்படக்கூடாது என்று கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை.

ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...