சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, February 25, 2014

பஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்

நான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு லிஸ்ட் போட்டார்கள். மற்றவர்கள் எல்லாம் தெறிச்சி ஓடி விட, அப்பாவியாய் நின்றிருந்த என் பெயரை மட்டும் என் முதுநிலை பொறியாளர் எழுதிக் கொண்டு சென்று விட்டார்.

நானும் நேற்று அதற்கான ஆவணங்களை கொடுத்து விட்டு பாரம்மில் கையெழுத்தும் போட்டு வந்து விட்டேன்.வந்த பிறகு ஆளாளுக்கு இதற்கு முன்பு தேர்தலில் நடந்த சண்டைகளை சொல்லி பயமுறுத்துகிறார்கள். இதற்கு மேல் பின்வாங்கவும் முடியாது. 

நான் பணிபுரிய போகும் வாக்குச்சாவடி புளியந்தோப்பு, வியாசர்பாடி பகுதிகளில் வருகிறது. சாதாரணமாகவே அந்த ஏரியாவுல சட்டைய கிழிச்சிக்குவாங்க, தேர்தல் வேற வந்தா கிழிஞ்சது கிருஷ்ணகிரி தான்.

என்ன இருந்தாலும் இதுக்கெல்லாமா அசர்ற ஆள் நாம, தைரியமா களத்துல இறங்கி ஒரு கை பார்த்துட வேண்டியது தான். எவனாவது வந்து கள்ளவோட்டு போட்டான், அப்படியே புடிச்சி கொடுத்துட வேண்டியது தான். பிறகு வரும் பிரச்சனைகளை போலீஸ்ஜீப்பில் பதுங்கியபடி பார்த்துக் கொள்ளலாம்.

------------------------------------------------------

நக்கீரன் வீட்டு ஐபாட்



--------------------------------------------------------

பார்த்த திரைப்படம்

Jolly LLB (ஹிந்தி)

இந்த படத்தை இத்தனை நாள் எப்படி தவறவிட்டேன் என்றே தெரியவில்லை. அபத்தமான சில காட்சியமைப்புகள் இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அட்டகாசமான திரைப்படம் இது. 

ஒரு கோடீஸ்வர வீட்டு பையன் நள்ளிரவில் குடித்து விட்டு ப்ளாட்பாரத்தில் படுத்திருந்த ஏழைகள் மேல் ஏற்றிக் கொன்று விடுகிறான். அந்த வழக்கை ராம் ஜெத்மலானி போன்ற ஒரு பெரிய வக்கீலான பொமன் இரானி சாதுர்யமாக வாதாடி அவனை குற்றமற்றவன் என வெளியில் கொண்டு வந்து விடுகிறான்.

வாதாட வழக்குகள் இல்லாமல் ஈயடித்துக் கொண்டு இருக்கும் சாதாரண வக்கீல் அர்ஷத் வர்சி தான் படத்தின் நாயகன். அம்ரிதா ராவ்வை காதலித்துக் கொண்டு இருக்கிறார். தான் பிரபல வக்கீலை எதிர்த்து வாதாடினால் தனக்கு கேஸ் வரும் என்று, இந்த கார் ஏற்றிய வழக்கு சம்பந்தமாக ஒரு பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்கிறார் அர்ஷத்.

அந்த கோர்ட்டின் நீதிபதியான சவுரப் சுக்லாவோ பொமன் இரானியின் நண்பர். இந்த கேஸை கைவிட்டால் இருபது லட்சம் லஞ்சம்  கொடுப்பதாக இரானியிடம் இருந்து வந்த ஆட்கள் சொல்லி அட்வான்சாக இரண்டு லட்சம் லஞ்சம் கொடுக்கிறார்கள். 

லஞ்சம் வாங்கியவன் வேண்டாம் என்று அம்ரிதா ராவ் அர்ஷத்தை விட்டு விலகி செல்கிறார். பிறகு லஞ்சம் வேண்டாம் என்று மறுக்கும் அர்ஷத் இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி எப்படி இந்த கேஸை நடத்தி ஜெயிக்கிறான் என்பதை சுவாரஸ்யமாகவே எடுத்துச் சென்று இருக்கிறார்கள். 

மெய்ன் ஹூன் நா வில் இரண்டாம் நாயகியாக வந்த அம்ரிதா ராவா இவர். இளைத்துப் போய் இளமை போய் சொய்ங்கென இருக்கிறார். 2004ல் மெய்ன் ஹூன் நா பார்த்து விட்டு கிறுக்குப்புடிச்சுப் போய் திரிந்த கூட்டத்தில் நானும் ஒருவன். கூடுதலாக சுஷ்மிதாவையும் பார்த்து எனக்கு ப்ரச்சோதகம் ஏற்பட்டது இந்த கட்டுரைக்கு அவசியமில்லாத விஷயம்.

நீதிபதியாக வரும் சவுரப் சுக்லாவின் நடிப்பு ஏஒன். ஹேராமில் முதல் பாடலான ராமரானாலும் பாபரானாலும் பாடலுக்கு கமல் ஷாருக் இருவருடனும் இணைந்து ஒரு குண்டான நடிகர் நடனமாடியிருப்பாரே அவர் தான் இவர். இருக்கையில் அமர்ந்ததும் டீ சாப்பிட்டுக் கொண்டே கண் அருகில் பேப்பரை வைத்துப் பார்த்து கேஸ் பற்றிய ஒப்பீனியன் சொல்லும் தோரணை அருமை.

ஒரு பஞ்சாயத்தை சாப்பாத்தியை பிய்த்து சாம்பாரில் நனைத்து சாப்பிட்டுக் கொண்டே தீர்த்து வைக்கும் காட்சியிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். 

கொஞ்சம் மெதுவாக சென்றாலும் சுவாரஸ்யமான படமே. அவசியம் ஒரு முறை பார்க்கலாம். 

-----------------------------------------------------

எங்க போனாலும் நம்மாளுங்க இப்படித்தான்



---------------------------------------------------------

படித்த புத்தகம்

லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய உப்பு நாய்கள் என்று ஒரு நாவலை படித்தேன். வடசென்னையின் கறுப்புபக்கத்தை, வக்கிரத்தை உச்சம் கொண்டு படைத்திருக்கும் புத்தகம் இது. 

நாயகன் ஒருவன், அர்மேனியன் தெருவில் வளர்கிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அங்கு சர்ச்சில் இருக்கும் கன்னியாஸ்திரிகளை மேட்டர் செய்கிறான். அதில் ஒருவள் கர்ப்பமாகிறாள். தினமும் ஆணுறை அணிந்து தானே செய்கிறோம் எப்படி கர்ப்பமானாள் என்று குழப்பமாகிறான். பிறகு தான் தெரிகிறது. இதற்கு காரணம் பாதிரியார் என்று பிறகு தெரிய வருகிறது.

நாயகனின் அம்மாவும் நாயகனின் நண்பரும் சல்லாபமாக இருக்கிறான். இதனை நேரில் பார்க்கும் நாயகன் நண்பனின் ஆணுறுப்பை வெட்டி விடுகிறான். 

பிக்பாக்கெட் அடிக்கும் பெண்ணும் போலி மருத்துவர் பெண்ணும் லெஸ்பியன் உறவு கொள்கிறார்கள். 

ஒரு  சேட்டு வீட்டுப் பெண் கணவருடன் சினிமா பார்த்துக் கொண்டு இருக்கிறாள், பக்கத்தில் இருக்கும் வாலிபன் அந்த பெண்ணை உஷார் செய்து அரங்கிலேயே அவள் கையில் விந்தை பீச்சுகிறான்.

என்னடா ஒரே கவுச்சியாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். இவ்வளவும் இந்த புத்தகத்தில் உள்ள வரிகள். இதனை ரசித்து மட்டுமல்ல அருவறுப்புடன் கூட படிக்க முடியாது. ராஜீவ்காந்தி சாலைக்கு கொஞ்சமும் குறைவில்லாத வக்கிரம் இதிலும் நிறைந்திருக்கிறது.

காமம் கலந்து நாசூக்காகவும் கிளர்ச்சியாகவும் எழுதுவது வேறு. சரோஜாதேவி டைப் புத்தகங்களை தாண்டும் அளவுக்கு வக்கிரம் புடித்து எழுதுவது வேறு. 

இந்த மாதிரி அரைகுறை எழுத்தாளர்கள் வாமுகோமுவைப் பார்த்து எப்படி பட்டும்படாமலும் எழுதுவதை என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கூட திட்டலாம் தான், ஆனால் அதனால் இந்த புத்தகத்தின் சர்க்குலேசன் இன்னும் அதிகமானால் என்ன செய்வது. அதனால் இத்துடன் விட்டு விடுகிறேன்

ஆரூர் மூனா

Monday, February 24, 2014

கேரளாவில் ரஜினி படங்களின் அலப்பறைகள்

டிஸ்கி : ரொம்ப நாளாக பதிவெழுதவே இல்லை. உடல் நலக்குறைவும், வேலைப்பளுவும் போட்டு பொரட்டி எடுக்கின்றன. இன்று ஒரு பத்து நிமிசம் ஓய்வாக கிடைத்தது. அதற்குள் எல்லாம் மண்டையைப் போட்டு கசக்கி ஒரு பதிவு எழுதிவிட முடியாது. அதனால் மனத்திருப்திக்காக ஒரு மீள்பதிவு.
 
நான் இரண்டு முறை கேரளாவில் ரஜினி படம் வெளியீட்டின் போது இருந்துள்ளேன். ஒரு முறை படையப்பா வெளியீட்டின் போது திருச்சூரில் இருந்தேன். சந்திரமுகி வெளியீட்டின் போது திருவனந்தபுரத்தில் இருந்தேன். எங்கு இருந்தாலும் தலைவர் தலைவர் தான் என்பதை முதல் நாள் முதல் காட்சியின் போது கண்டவன் என்ற முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(வட்டத்துலநான்தான்பா)

படையப்பா வெளியீட்டின் போது நான் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்பரன்டிஸ் பயிற்சியில் இருந்தேன். அப்பொழுது திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழாவுக்காக ரயில்வே ஸ்டால் போட்டிருந்தார்கள். அந்த பணிக்காக ரயில்வே அப்ரெண்டிஸ் குழுவினர் இங்கிருந்து திருச்சூர் சென்றோம்.

சென்று இறங்கிய மூன்றாவது நாள் படையப்பா ரிலீஸ். எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று என்னுடன் இருந்த நண்பர்களுடன் இணைந்து திரையரங்கிற்கு சென்றேன். அப்பப்பா அந்த தெருவின் உள்ளேயே நுழைய முடியவில்லை. கேரளாவில் ரஜினிக்கு இருக்கும் Grace கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். ஒரு வழியாக மாட்னி ஷோ வுக்கு டிக்கெட் கிடைத்தது.
மிகப்பெரிய திரையரங்கம். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள். அவர்களே வசனம் புரியாவிட்டாலும் தலைவர் வரும் காட்சியில் எல்லாம் கை தட்டி விசிலடித்து ஆரவாரம் செய்தார்கள். படம் சூப்பர் ஹிட். அன்று தான் தலைவர் தமிழ்நாட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. தென்னகத்துக்கே அவர்தான் என்று புரிந்தது.

அடுத்தது சந்திரமுகி ரிலீஸ் போது நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். முன்பே தலைவருக்கு கேரளாவில் இருக்கும் மாஸ் தெரிந்ததால் சென்னையில் திட்டமிடுவது போல் ஒரு வாரத்திற்கு முன்பே எப்படி சினிமாவுக்கு செல்வது என்று பிளான் செய்து விட்டோம்.

படம் ரிலீஸ் அன்று மம்மூட்டி, மோகன்லால், திலீப் ஆகியோரின் படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் டாகுடர் விஜய்யின் சச்சின் ரிலீஸ். ஆனால் மற்ற படங்கள் எல்லாம் ஒரு தியேட்டரில் தான் ரிலீஸ். சந்திரமுகி மட்டும் 6 தியேட்டரில் ரிலீஸ். எங்களுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்களின் பெரிய நடிகர்களின் படம் ஒரு தியேட்டரில் வருகிறது. சூப்பர் ஸ்டாரின் படத்தை 6 தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்களே என்று.இரவு காட்சிக்கு தியேட்டருக்கு சென்றால் செமகூட்டம். நிறைய தமிழர்களும் இருந்தார்கள். அவகளிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் நாகர்கோயிலில் இருந்து வந்திருப்பதாகவும் அங்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். ஆச்சரியப்பட்டு போனேன்.

உள்ளுர் மலையாளி ஒருவன் வரிசையில் நிற்கும் எங்கள் தோளின் மீது ஏறி டிக்கெட் எடுப்பதற்காக முன் சென்றான். அவ்வளவு தான். ஏற்கனவே மலையாளிகளின் மீதான கடுப்பும் சேர்ந்து அவனை கீழே இழுத்துப் போட்டு செம மொத்து மொத்தினோம். பாரபட்சமில்லாமல் எல்லாத் தமிழர்களிடம் இருந்தும் அவனுக்கு அடி விழுந்தது.

படம் முழுக்க ஆரவாரம் தான். மொழி கடந்து, மாநிலம் கடந்து எங்கும் தலைவர் தலைவர் தான்.

ஆரூர் மூனா

Friday, February 21, 2014

பிரம்மன் - சினிமா விமர்சனம்

தொழிற்சாலையில் நேற்று குடித்த குடிநீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்படாததால் நேற்றிலிருந்து காய்ச்சல், சளி, த்ரோட் இன்பெக்ஷன், பேப்பரை சுருட்டி ஓவராக காது குடைந்ததால் காதுவலி, கூடவே வீரசாகசம் காட்டுகிறேன் என்று நேற்று ரயில் பெட்டியில் இருந்து குதித்ததால் கால் பிசகி ஒருசேர பெரும் நோயாளியாகி ரெஸ்ட்டில் இருந்தேன். இன்று சினிமாவுக்கு போகும் மூடெல்லாம் இல்லை.


ஆனால் பாருங்கள் நேற்று போட்ட மாத்திரைகளில் விளைவாக காலையில் எல்லாமே லேசாக குறைந்திருந்தது. பத்து மணிக்கு உடலில் பலம் சேர்ந்ததால் டொய்ங்கென்று மண்டையில் கொம்பு முளைத்தது. வீட்டில் யாரிடமும் சினிமாவுக்கு போகிறேன் என்று சொல்லாமல் கிளம்பி அரங்குக்கு வந்து விட்டேன். 

அது என்னமோ தெரியவில்லை, சசிக்குமாரின் எல்லாப் படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுகிறேன். சுப்ரமணிபுரம் முதலே நடந்து வரும் விஷயம் இது. ஆனால் பெரும்பாலான படங்கள் ஏமாற்றியதில்லை. ஆனால் இந்த படம் கொஞ்சம் அதிகமாகவே நெஞ்சை நக்கி விட்டது.


படம் எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய சென்ட்டிமெண்ட் + லாலாலா லாலா லாலாலா விக்ரமன் டைப் சாக்ரிபைஸிங் படம் இது. சுவாரஸ்யமாக எடுத்து இருப்பதால் தப்பி விடுகிறது. ஆனாலும் கழுத்தில் ரத்த காயம் தான்.

திரையரங்கை லீசுக்கு எடுத்து அந்த தொழிலில் முன்னேற கடுமையாக உழைக்கும் கூடவே டைம்பாஸ்க்கு காதலிக்கும் ஹீரோ. அவரை எப்போதுமே தண்டச்சோறு, வெட்டி ஆபீசர் என்று கலாய்க்கும் குடும்பம். அவரையும் எண்ணி மருகி மருகி காதலிக்கும் நாயகி.


திரையரங்கிற்கும் காதலுக்கும் பணத்தேவையின் காரணமாக சிக்கல் வர நாலாம் வகுப்பு வரை உடன் படித்த நண்பன் சினிமாவில் பெரிய இயக்குனராக இருப்பதை அறிந்து அவரிடம் உதவி கேட்க சென்னை வரும் ஹீரோ, எதேட்சையாக இயக்குனராகிறார். 

நண்பனுக்காக அந்த வாய்ப்பையும், தன் காதலியையும் விட்டுத் தருகிறார். மீண்டும் அந்த திரையரங்கமும் காதலியும் நாயகனுக்கு கிடைப்பதை கொட்டாவி விட வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

வழக்கம் போல நண்பர்களுக்காகவே வாழும் நாயகனாக சசிக்குமார். இந்த ஒரு அடிப்படை விஷயத்தை சொல்லியே எல்லோரும் இவர்கிட்ட கால்ஷீட் வாங்கிடறாங்க போல.


தனக்கு வராத ஏரியாவான ரொமான்ஸ், நடனம் போன்றவற்றிலும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார். சில இடம் நம்மை கஷ்டப்படுத்தினாலும் பல இடத்தில் அசால்ட்டாக பாஸ் செய்து கடந்து போகிறார்.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். அந்த சதைப்பத்து இல்லாத கன்னத்திலும் குழி விழுவது அழகாக இருக்கிறது. அதை தாண்டி எதுவும் சொல்வதற்கில்லை.

சந்தானம் ஒன்லைனர்களால் திரையரங்கில் சிரிப்பு வெடி பற்ற வைக்கிறார். கடைசி அரைமணிநேரத்தில் பெர்மார்மன்ஸிலும் பின்னுகிறார்.சூப்பர் சந்தானம்.

சென்னையில் நான் பார்த்த பல உதவி இயக்குனர்களின் பிம்பமாக சூரி. அப்படியே இயல்பாக நடித்துள்ளார். நான் எதிர்பார்த்தது சந்தானம் சூரி இருவருக்கும் இடையே நிறைய காட்சிகளைத்தான். ஆனால் இருவரையும் ஒரு இடத்தில் கூட ஒன்று சேர்க்கவில்லை இயக்குனர். என்ன பஞ்சாயத்தோ என்ன அரசியலோ யாமறியேன் பராபரமே.

அரங்கில் பிட்டு படம் ஓட்டியாவது சம்பாதித்து தியேட்டர்  ஊழியர்களுக்கு உதவ நினைக்கும் சந்தானம், அந்த இயக்குனர் நண்பரின் தியாகம், தியேட்டர் வரி கட்டாமலேயே திரும்பக் கிடைப்பது, தங்கையின் சென்ட்டிமெண்ட், அம்மா அப்பாவின் கண்ணீர் எல்லாமே பக்கா நாடகத் தன்மையுடன் இருக்கிறது. 

திருப்பதி பயணமும், அங்கு ஒரு சினிமாவும், தேவையில்லாத சண்டைக் காட்சியும் நேரத்தை கடத்த மட்டுமே பயன்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே சில முறை கேட்டதால் பாடல்கள் ஒன்றிரண்டு பிடிக்கிறது. 

போதும் இதற்கு மேல் விம் வைத்து விளக்க எதுவுமில்லை. எனக்கும் பசிக்கிறது, அதனால் இத்துடன் எல்லாத்தையும் முடித்துக் கொள்வோம்.

படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்துக் கொள்ளலாம். 

ஆரூர் மூனா

Friday, February 14, 2014

இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்

ஒரு பேமிலி எண்டர்டெயினர்னா என்ன வேணும், வயசுக்கு வந்த பொண்ணுங்க குடும்பத்துடன் அரங்கிற்கு போய் அமர்ந்தால் முகம் சுளிக்கவைக்காமல், தந்தைக்கு மகள் பக்கத்தில் இருந்தால் நெளிய வைக்காமல் இருக்க வேண்டும். 


நான் என் பதினைந்து வயதில் என் அப்பா, பெரியப்பா, அக்காக்கள், மாமன் பொண்ணுகள், அம்மா, பெரியம்மா, புதிதாய் திருமணமான அக்கா, அத்தான் சகிதம் பெரிய குடும்பமே திருவாரூர் தைலம்மை அரங்கிற்கு பெரிய குடும்பம் என்ற படம் பார்க்க சென்றிருந்தோம்.

படத்தின் காட்சிகளை பார்த்து பெரியப்பா நெளிய எங்கப்பா என்னை உட்டு ராவ பெரிய ஏழரையாகி விட்டது. குடும்பத்தினர் எல்லோரும் என்னை காறித்துப்பினர். ஏனென்றால் குடும்பமே ஆசை படத்துக்கு போகனும் என்று சொல்ல நான் தான் வற்புறுத்தி இந்த படத்திற்கு அழைத்து வந்தேன். எல்லாம் என் கெரகம்.


உதயநிதிக்கு அது சரியாக புரிந்திருக்கிறது. தன்னால் ஆக்சனோ, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காமெடியோ, ரப்பர் டான்ஸோ, எக்ஸ்பிரசன் நிரம்பிய நடிப்போ வராது என்று தெரிந்த பின்னர் தன் வழியை பேமிலி எண்டர்டெயினர் சினிமா பக்கம் திருப்பி விட்டார். 

கண்களில் எக்ஸ்பிரசன் வராது என்று முடிவெடுத்த காட்சிகளில் ரேபன் கிளாஸை வைத்து சமாளித்தது கூட புத்தசாலித்தனமான ஐடியா தான்.


படம் அந்த வகையில் வெற்றிப்படம் தான். இன்று அரங்கிற்கு வந்த பெரும்பாலான காதலர்கள், சில குடும்பத்தினர் கைதட்டி ரசித்து சிரித்தனர். இந்த லெவல் படத்திற்கு இது போதும்.

படத்தின் கதை என்னன்னா, அக்காவின் குடும்ப பிரச்சனையை தீர்க்க மதுரையைச் சேர்ந்த ஆஞ்சநேய பக்தரான உதயநிதி கோவை வருகிறார். அங்கு நயன்தாராவை சந்தித்து காதல் கொள்கிறார். சில பல கலாட்டாக்களுக்கு பிறகு காதல் கைகூடுகிறது.


குடும்பத்தினரின் எதிர்ப்பை சமாளித்து காதலியை கைப்பிடிப்பதே படத்தின் கதை. ஆனால் சரியான விகிதத்தில் எல்லாவற்றையும் கலந்து சொன்ன விதத்தில் இயக்குனர் அசத்தியிருக்கிறார். சில நெருடல்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை.

எனக்கு ஒரு திறமை உண்டு. அது எதுலனா சமையலில். நான் பெரிய கை தேர்ந்த சமையற்காரன் கிடையாது. பத்து வகை பதார்த்தங்களுக்கு மேல் சமைக்கத் தெரியாது. இன்னும் உப்புமாவுக்கு சரியான அளவில் தண்ணீர் ஊற்றத் தெரியாது. ஒன்னு கெட்டியாகிடும், இல்லைனா கஞ்சி மாதிரி இருக்கும்.

ஆனால் மற்ற பதார்த்தங்களில் சுவையை அடிச்சிக்கவே முடியாது. எந்த ஒரு தெரியாத வகை சமையலையும் அசத்தி விடலாம். இரண்டு மூன்று மசாலா பார்முலா, இதை புரிந்து கொண்டால் சுவையான சாப்பாட்டிற்கு நீங்கள் கியாரண்ட்டி. 

அது போல் இயக்குனருக்கு சினிமாவின் மசாலா பார்முலா கை வந்த கலையாக இருக்கிறது. எது எதை எந்த இடத்தில் வைத்தால் ரசிக்கும் படி கொடுக்கலாம் என்று தெரிந்திருக்கிறது. 

எனக்கு எப்படி உப்புமாவோ அது போல் இயக்குனருக்கு பாடல் வைக்கும் இடமும் படமாக்கும் விதமும். இன்னும் பார்முலா பழகவேண்டும். லேடீஸ் கூட தம்மடிக்க  வெளியில் கிளம்புகிறார்கள்.

உதயநிதிக்கு கண்டிப்பாக இது அடுத்த லெவல் தான். ஒரேடியாக ஐம்பதடி தாண்டிக் குதிக்காமல் ஐந்து அடியை தாண்டி குதித்து இருக்கிறார். நடனம், நடிப்பு, டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் உட்பட. ஆனால் இது பத்தாது. அடுத்த படத்திற்கு பத்து அடி தாண்டவும்.

நயன்தாரா எப்போதும் போல் அழகாக இருக்கிறார். ஆனால் சற்று முத்தலாக தெரிகிறது. முகத்தை மட்டும் தான் சொன்னேன்.  மற்றபடி ஒன்றும் சொல்வதற்கில்லை. எனக்கு ஏக்கத்தை கொடுத்தவர் சாயாசிங் தான். ம்ம்ம். நம்மால் ஏக்கப் பெருமூச்சு மட்டும் தான் விட முடியும்.

சந்தானம் கவுண்ட்டர் காமெடியில் வழக்கம் போல் கஜகஜ தான். ஆனால் அடிக்கடி கண்ணாடியை நகர்த்தும் மானரிசம் கடுப்படிக்கிறது. இந்த படத்தில் மட்டும் ஐம்பது முறைக்கு மேல் பண்ணியிருப்பார். மற்றபடி காமெடி களை கட்டுகிறது. அதுவும் க்ளைமாக்ஸ்க்கு முன்பு மாத்திரை விழுங்கும் இடம் ஏஒன்.

படத்தின் துவக்கத்தில் வந்து மருத்துவமனையில் சேர்க்கும் இடத்தில் தெரிந்து விட்டது. இது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வருவது போல சந்தானமாகத்தான் இருக்கும் என. 

படத்தின் குறை என்று எனக்கு தெரிந்தது இசை தான். பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி வெகு சுமார் தான். சரண்யா, நரேன், வனிதா, ஜெயப்பிரகாஷ் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள். 

இது கதிர்வேலன் காதல் குடும்ப சென்ட்டிமெண்ட் நிரம்பிய காதல் படம். குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்.

ஆரூர் மூனா

Wednesday, February 5, 2014

தி லோன் ரேஞ்சர் - ஆங்கிலம்

சில சமயம் நமக்கு எதிர்பாராமல் அதிர்ச்சிகள் நடப்பதுண்டு. நேற்று எனக்கும் அப்படி தான் ஆனது. சில நாட்களுக்கு முன் டிவிடிக்கள் வாங்குவதற்காக பர்மா பஜார் சென்றிருந்தேன்.


பல ஆங்கில படங்களின் டிவிடிக்களை வாங்கி வந்தேன். ஆனால் அந்த படங்கள் பற்றிய முன் அறிமுகமோ விமர்சனமோ கண்டதில்லை. நேற்று முன்தினம் இரவு ப்ரே என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். நடுக்காட்டில் சிங்கங்களுக்கிடையில் மாட்டிக் கொள்ளும் குடும்பத்தின் கதை. நன்றாக தான் இருந்தது. ஆனால் ஸ்பெஷல் எதுவும் இல்லை.

நேற்று இரவு தி லோன் ரேஞ்சர் என்ற படம் பார்த்தேன். எனது சினிமா பசிக்கு சரியான தீனி இந்த படம். நமக்கு ஆங்கில அறிவு கம்மி என்பதால் ஆங்கில படங்களின் டிவிடியை பார்ப்பதற்கு முன்னால் நமது நண்பர்களின் சினிமா விமர்சனங்களை படித்து தெளிவுபடுத்திக் கொள்வது வழக்கம்.


ஆனால் இந்த படம் எந்த வகையான ஜானர் என்று கூட தெரியாமல் பார்த்தேன். படம் புரியவே எனக்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. நாயகனின் சகோதரனின் மரணத்திற்கு காரணமான ஒருவனை பழிவாங்கும் கதை தான், ஆனால் சொன்ன விதத்தில் சூப்பரோ சூப்பராக இருந்தது படம்.

டோண்டோ என்ற செவ்விந்தியன் பொருட்காட்சியில் காட்சிப் பொருளாக நிற்கிறான், அங்கு வரும் ஒரு சிறுவனிடம் தி லோன் ரேஞ்சர் என்ற வீரனின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறான்.

1869ல் நடக்கிறது. ரயிலில் தூக்குத் தண்டனை கைதியாக  சென்றுக் கொண்டு இருக்கும் காவன்டிஷ்ஷை அவரது ஆதரவாளர்கள் தப்பிக்க வைக்கின்றனர். அதே ரயிலில் சக கைதியாக வருபவர் டோண்டோ. வக்கீலுக்கு படித்து விட்டு ஊருக்கு திரும்பும் ஜான் ரீட், டோண்டோவுடன் இணைந்து காவன்டிஷ் ஆட்களை பிடிக்க முயற்சிக்கிறான். 


ஆனால் அனைவரும் தப்பிச் சென்று விட விபத்துக்குள்ளாகப் போகும் ரயிலில் இருந்து மக்களை ஒரு வழியாக ஜான் ரீட், சகோதரனின் உதவியுடன் காப்பாற்றுகின்றான். ஜான் ரீட்டும், அவனது சகோதரனும் டோண்டோவை சிறைப்பிடிக்கின்றார்கள்.

காவன்டிஷ்ஷை பிடிக்க அந்த ஊர் வேட்டைக்காரர்கள் குழு செல்கிறது. அவர்களை நடுக்காட்டுக்குள் சுட்டுக் கொல்கிறது காவன்டிஷ் குழு. சிறு காயத்துடன் ஜான் ரீட் மயங்கி கிடக்கிறான். 

உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் அவனது சகோதரனின் உடலை கிழித்து இதயத்தை பிய்த்து தின்கிறான் நரமாமிசம் சாப்பிடுபவனான காவன்டிஷ். 


அனைவரும் இறந்து விட்டார்கள் என்று நினைத்து காவன்டிஷ் குழுவினர் சென்று விட அங்கு வரும் டோண்டோ அவர்களை புதைக்கிறான். மயக்கத்தில் இருக்கும் ஜான்ரீட்டை காப்பாற்றுகின்றான். 

இருவரும் இணைந்து காவன்டிஷ்ஷை பிடித்து அழிக்க புறப்படுகின்றனர். டோண்டோ ஆலோசனைப் படி ஜான் ரீட் முகமூடியணிந்து லோன் ரேஞ்சர் என்ற பெயருடன் வருகிறான்.

இதற்கிடையில் ஜான் ரீட்டின் சகோதரனின் மனைவியான ரெபேக்காவை அடைய வேண்டி அவரையும் அவரது குழந்தையையும் கடத்துகிறார், ரயில் கார்ப்பரேஷன் தலைவரான போல்.

ஜான்ரீட் டோண்டோவுடன் இணைந்து ரெபேக்காவையும் அவரது குழந்தையையும் எப்படி காப்பாற்றினார், வில்லன்களான கோல்லையும், காவன்டிஷ்ஷையும் எப்படி வீழ்த்தினார் என்பதை டிவிடியில் கண்டு மகிழ்க.

படம் முழுக்க ஒரு மெல்லிய நகைச்சுவையை போர்த்திக் கொண்டு இருப்பது தான் ஆகப் பெரும் பலம். படத்தில்கிராபிக்ஸ் கிராபிக்ஸ் இருப்பது கொஞ்சம் கூட தெரியாதது தான் இன்னொரு ப்ளஸ்.

பைரேட்ஸ் ஆப் தி கரீபியனில் அசத்திய ஜானி டெப் தான் இதில் டோண்டோ. படத்தின் கலகலப்புக்கு முழு பொறுப்பையும் இவர் தான் எடுத்துக் கொண்டு உள்ளார். படம் முழுக்க இவர் முகத்தில் வெள்ளை பெயிண்ட் பூசிக் கொண்டு வருவதால் யாரென்றே தெரியவில்லை. இன்று தான் இணையத்தில் பார்த்து தெரிந்துக் கொண்டேன்.

படத்தின் முக்கால்வாசிக்கு பிறகு தான் தன் இனமே அழிக்கப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்த பிறகு டோண்டோவின் மேல் நமக்கு வரும் பரிதாபம் தான் அந்த பாத்திரத்தின் பலம்.

ஜான்ரீட்டாக வரும் ஆர்மி ஹேம்மர் புதியவர், இதற்கு முன் எந்த படத்திலும் இவரை பார்த்திராததால் எந்த சாயலும் இல்லாமல் இவரின் நடிப்பை ரசிக்க முடிகிறது. சுமாரான சுமாரான திறமை கொண்ட இவர் டோண்டோவின் தூண்டுதலால் சூப்பர் ஹீரோவாகி மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இன்னொசன்ட்டான நடிப்பில் கவர்கிறார்.

அந்த நரமாமிசம் சாப்பிடும் கொடூர வில்லன் அருவருக்க வைக்கிறார். அது தான் அவரது கதாபாத்திரத்தின் வீரியம். எந்த நிமிடமும் அவர் சாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் கடைசி வரை தப்பித்து வந்து க்ளைமாக்ஸில் சாவது சினிமாத்தனம்.

தமிழ் சினிமாவின் மசாலா போல் படம் முழுக்க அபத்தங்கள் தூவப்பட்டு இருக்கின்றன. அதாவது மேலிருந்து ஏகப்பட்ட பேர் சுடும் போது நாயகன் மட்டும் குண்டடிபடாமல் தப்பிப்பது. நேருக்கு நேர் நடக்கும் சண்டையில் குண்டடிபடாதது, பறக்கும் குதிரை, என ஏகப்பட்டது இருக்கிறது. ஆனால் எல்லாமே சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

க்ளைமாக்ஸில் வரும் ரயில் சேசிங்கும் சண்டையும் தான் எல்லாவற்றிலும் உச்சம். கிராபிக்ஸில் அசத்தியிருக்கின்றனர். இது வரை பார்க்காதவர்கள் கண்டிப்பாக டிவிடியில் பார்த்து மகிழுங்கள்.

ஆரூர் மூனா

டிஸ்கி : படத்தின் விமர்சனத்தைப் பார்த்து விட்டு நான் சொன்ன காட்சிகளிலும் கதையிலும் விளக்கம் சொல்ல முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் எனக்கு உள்ள ஆங்கில அறிவை வைத்து ஒருவாறாக படத்தின் கதையை நானாக யூகித்துக் கொண்டேன். அதனால் சின்னப் பையன் என்று விட்டு விடவும்.

Tuesday, February 4, 2014

என் கிராமத்துக் காதலி

ரம்மி படம் பார்த்ததனால் வந்த விளைவு இந்த பதிவு. எனக்குள் இருந்த சிறு வயது காதல்களுள் ஒன்றை கிளறி விட்டது படம் ஐஸ்வர்யா மூலமாக. 


அப்போது எனக்கு 16 வயது இருக்கும் என நினைக்கிறேன். திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் நீடாமங்கலத்தின் அருகில் உள்ள ஆதனூர் கிராமம் என் அம்மா வழி தாத்தாவின் ஊர். 

வாரத்தின் சனி, ஞாயிறுகளில் இந்த கிராமத்தில் தான் பொழுது கழியும். பத்தாவது படிக்கும் காலக் கட்டத்தில் தான் பெண் சைட் அடிக்கத்தக்கவள் என்ற விவரம் புரிந்து பார்க்கும் பெண்ணையெல்லாம் என் பிகர் என்று மற்ற டவுசர் நண்பர்களுடன் சண்டை போட்ட காலம்.

ஆதனூர் சினிமாவில் காட்டப்படுவது சாதிக் கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமம். அங்கு குறிப்பிட்ட சாதி தான் மெஜாரிட்டி என்று கிடையாது. தெருவுக்கு ஒரு சாதி என்ற கணக்கில் நிறைய சாதிக்காரர்கள் உண்டு. அதனால் நிறைய காதல்களும் மோதல்களும் சகஜம்.


இந்த காலத்தில் தான் அதுவரை விகல்பமில்லாமல் என்னுடன் சினேகம் வைத்திருந்த பூரணா(பெ,மா) அழகாக தெரிய ஆரம்பித்தாள். அவள் படித்தது கோவில்வெண்ணி கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில். அதற்கு பிறகு அவளை சைட் அடிப்பதற்காகவே ஆதனூர் கோவில்வெண்ணி கிராமங்களுக்கு இடையில் உள்ள ரயில்வே கேட்டில் அமர்ந்து இருப்பேன்.

அவளை கடக்கும் போது ஒரு புன்னகை புரிவேன், புன்னகைனு சொல்லக் கூடாது, அது கவுண்டமணி ஸ்டைலிலான ரொமாண்ட்டிக் லுக் என்று பின்னாளில் தான் தெரியவந்தது.

அதைத் தவிர அவளிடம் பேச என்னிடம் வார்த்தைகள் இருந்தது இல்லை. ஆறு மாதம் சனிக்கிழமைகளில் வேறு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்போது எனக்கு காதலில் அட்வைஸ் கொடுப்பதற்காக ஒரு ஜீவன் வந்து சேர்ந்தது. அந்த ஜீவனுக்குப் பெயர் மாயாண்டி, என் மாமன் மகன் தான்.


அவனுக்கு 20 வயது ஆகியிருந்தது. அதற்கடுத்த முன்னேற்றங்களுக்கு ஐடியா கொடுத்த பெருமைக்குரியவன் அவன் தான். ஒன்பதாவது பெயிலாகி விட்டு விவசாயத்தில் தாத்தாவுக்கு உதவியாக இருந்தான். தாத்தாவும் சும்மாதான் இருந்தார் என்பது வேறு விஷயம்.

அவனது ஐடியாபடி பத்தாவது படித்து முடித்து விடுமுறையில் இருந்த நான் பதினொன்றாவது படித்து முடித்த பூரணாவிடம் புத்தகங்களை வாங்குவது போல் பேசி மனதை கவர வேண்டும். 

ஆனால் நான் பத்தாவதில் என்ன மார்க் எடுப்பேன், என்ன குரூப்பில் சேருவேன் என எனக்கே தெரியாது, அந்த விஷயத்தையே தெரியாத அறிவாளி மாயன் ஐடியாபடி ஒரு நாள் எங்கள் பம்புசெட்டில் தோழிகளுடன் அவள் குளித்துக் கொண்டிருந்த போது மாடு ஓட்டிக் கொண்டு போய் குளிப்பாட்டுவது போல நின்று பாசாங்கு செய்தபடி புத்தகம் கடன் கேட்டேன்.


அவள் சிரித்துக் கொண்டே முதல்ல பத்தாவது பாஸ் பண்ணு, பிறகு புத்தகம் கேளுங்க படிப்பாளி என்று கூறி விட்டு ஓடி விட்டாள். அன்று இரவு மாயாண்டிக்கு செம மாத்து விட்டேன். 

இரண்டு நாட்களுக்கு பிறகு பக்கத்து ஊரான முன்னாவல்கோட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் பாவடை தாவணியில் துன்னூரு பூசிக் கொண்டு நடந்து வந்த போது என் கண்ணுக்கு தேவதையாக தெரிந்தாள் கோதுமைநிறத்தழகி.

இரவெல்லாம் அவளுடன் கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் பாட்டுக்கு நடனமாடிக் கொண்டே இருந்தேன், அம்மத்தா வந்து என்னை எழுப்பும் வரை.

இப்படியாக ஒரு ஆறுமாதம் ஓடி விட்டிருந்தது. அவள் பனிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்ததால் படிப்பில் பிஸியாக இருந்தாள். பார்க்கவே முடியவில்லை. 

இதே சமயத்தில் திருவாரூரில் சரளா என்ற பெண்ணும் என் கண்ணுக்கு அழகாக தெரிந்தாள் என்பதும் அவளிடம் பேசி கரெக்ட் செய்யும் சமயத்தில் என்னுடன் துணைக்கு வந்துக் கொண்டு இருந்த கணேஷ் அவளை லவட்டிக் கொண்டு போனதும், கொஞ்ச நாள் தாடி முளைக்காத தேவதாஸ் போல் நான் சுற்றிக் கொண்டு இருந்ததும் இந்த கட்டுரைக்கு தேவையில்லாத விஷயம்.

ஒரு வழியாக பூரணா பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை எழுதி முடித்து இருந்தாள். எனக்கும் முழுப் பரிட்சை முடிந்து இருந்தது. அவள் விடுமுறையில் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தட்டச்சு நிலையத்தில் லோயர் அடிக்க சென்றுக் கொண்டு இருந்தது மாயாண்டி லவ்வர்(சுரிதார் போட்ட ஜக்கு) மூலம் தெரிய வந்தது.

பிறகென்ன அவளுடன் அந்த மூணு கிலோமீட்டர் சைக்கிளில் இணைந்து பயணித்தால் கைகூட கொஞ்சம் வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. அவளுக்காக சாமந்தாங்கரையில் சைக்கிளுடன் காத்திருப்பேன். 

அவள் ஊரிலிருந்து மெயின்ரோட்டுக்கு வந்ததும் அவளுடன் இணைந்துக் கொள்வேன். தட்டச்சு நிலையத்தின் வாசலில் ஒரு மணிநேரம் காத்திருந்து பிறகு ஊர் வரை பேசிக் கொண்டு வருவேன். இரண்டு மூன்று நாட்களில் நடந்த உரையாடலில்அவளுக்கும் என் மீது விருப்பம் இருப்பது தெரிய வந்தது.

கிராமத்தில் என்னுடன் சுற்றிக் கொண்டு இருந்த கிரிக்கெட் நண்பர்களை லாவகமாக கழட்டி விட்டு மேற்கே உள்ள பம்புசெட்டில் இருந்த பெரிய கிணற்றுப்படிக்கட்டில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசுவோம். 

இரவுகளில் அப்போது பாட்டு மாறி தில்லானா தில்லானா நீ தித்திக்கிற தேனா என்று அவளுடன் ஜங்கு ஜங்கு என்று குதித்து ஆடிக் கொண்டு இருந்தேன். ஒருநாள் மாயாண்டியின் ஐடியாபடி ரோஜாவைக் கொடுத்து வச்சி விடட்டுமா என்றேன். தலையை குனிந்து நாணத்துடன் சிரித்தாள். அந்த நாணம் தந்த களிப்பூட்டும் போதையில் என்ன வேணும்னாலும் அவளுக்காக செய்யலாம் என்று தோன்றியது.

பெண்ணின் அழகு அவர்களின் அங்கங்களில் இல்லை. நாணச் சிரிப்பில், கள்ளப் பார்வையில், தாவணி கட்டும் அழகில், துன்னூரு பூசும் லாவகத்தில், தண்ணீர் குடம் எடுத்துப் போகும் நடையில், மஞ்சள் தேய்த்த முகத்தில், முரட்டு மாட்டை கையாளும் பலத்தில், நெல் அவித்துக் கொட்டும் பொறுப்பில் என ஏகப்பட்ட விஷயங்களில் இருக்கிறது. அதையெல்லாம் அவளிடத்தில் நான் கண்டேன்.

அவள் பள்ளிப் படிப்பை முடித்ததும் படித்தது போதும் என வீட்டிலேயே வைத்துக் கொண்டார்கள். அவள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளிலும், அம்மாவுக்கு துணையாக சமையல் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

நான் அவளுக்காகவே சனி, ஞாயிறுகளில் ஆதனூருக்கு வந்து விடுவேன். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பேசி மகிழ்வோம், நன்றாக கவனிக்கவும் பேசி மட்டுமே மகிழ்வோம்.

பிறகு ஒரு நாள் நடந்த அந்த அதிர்ச்சியான சம்பவத்தால் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று பயந்த என் அப்பாவினால் வலுக்கட்டாயமாக கம்பன் எக்ஸ்பிரஸ்ஸில் ஏற்றி சீர்மிகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். ரொம்ப நாள் அவளின் நினைவு வாட்டி எடுத்தது. நாளாக நாளாக சென்னைப் பெண்கள் என் கவனத்தை திருப்பியதால் அவளின் நினைவுகள் குறைந்தது.

ஒரு நாளில் அவளுக்கு திருமணமும் முடித்து வைத்து விட்டார்கள். அதன் பிறகு இன்று வரை அவளை நான் பார்க்கவேயில்லை. அவள் மீது எனக்கு இருந்தது காதலா அல்லது இனக்கவர்ச்சியா என்று இன்று வரை எனக்கு புரியவே இல்லை.

அப்புறம் முக்கியமான விஷயம் அந்த சம்பவம் என்று ஒரு பாராவுக்கு முன் குறிப்பிட்டேன் அல்லவா, அது என்னவென்றால் படிக்கும் நேரங்களில் எல்லாம் அவளுடன் பேசியே பொழுதைக் கழித்ததால் அந்த ஆண்டு நான் பனிரெண்டாவதில் பெயில்.

ஆரூர் மூனா

டிஸ்கி : இந்த ஒரு பதிவு எழுதவே எனக்கு ரெண்டரை மணிநேரம் ஆகியிருக்கிறது என்றால், நானெல்லாம் எப்போது தான் தேர்ந்த எழுத்தாளர் ஆவது. ச்ச்சே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...