சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, March 31, 2012

சவுதி அரேபியா வேலை வாய்ப்பு விவரங்கள்

பட்டப்படிப்பு மற்றும் ASP Dot Net முடித்தவர்கள் வேலைக்கு தேவை.

சென்னையில் நேர்முகத்தேர்வு அடுத்த வாரம் நடைபெறும்.

சம்பளம் : 5000 சவுதி ரியால்

-----------------------

B.Com மற்றும் Tally முடித்தவர்கள் அக்கவுண்டன்ட் வேலைக்கு தேவை.

சென்னையில் நேர்முகத்தேர்வு அடுத்த வாரம் நடைபெறும்.

சம்பளம் : 3000 சவுதி ரியால்

----------------------

Stock Clerk வேலைக்கு பள்ளிப்படிப்பு அல்லது கல்லூரிப் படிப்பு முடித்தவர்கள் தேவை.

சென்னையில் நேர்முகத்தேர்வு அடுத்த வாரம் நடைபெறும்.

சம்பளம் : 2150 சவுதி ரியால்

-----------------------

ஜெனரல் ஒர்க்கர் வேலைக்கு ஆட்கள் தேவை.

சென்னையில் நேர்முகத்தேர்வு அடுத்த வாரம் நடைபெறும்.

சம்பளம் : 1700 சவுதி ரியால்

----------------------

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள
தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

ஆரூர் மூனா செந்தில்


Friday, March 30, 2012

3 - சினிமா விமர்சனம்


காலையில் ராக்கி தியேட்டரில் 8 மணிக்காட்சிக்கு நேற்று டிக்கெட் எடுத்து விட்டேன். ஆனால் பேசாமல் படுத்து தூங்கி விட்டு சினிமாவுக்கு சென்றிருக்கலாம். நேற்றிரவு ஒரு நண்பனை வழியில் பார்த்து வினையை கூட்டிக் கொண்டேன். குவாட்டரில் ஆரம்பித்து ஆப் தாண்டி எப்ப வீட்டுக்கு வந்தேன்னே தெரியலை. காலையில் எந்திரிக்கவே முடியலை. படம் பார்க்க ஒக்கார்ந்தா ஒரே தலைவலி வேற. இதிலிருந்து அறியப்படும் நீதி என்னவென்றால் விடியற்காலை சினிமாவுக்கு செல்ல வேண்டுமென்றால் முதல் நாள் இரவு குவாட்டருடன் நிப்பாட்டிக் கொள்ள வேண்டும் (தக்காளி அப்பக்கூட குடிக்கிறத விட மாட்ட). தியேட்டருக்கு போனா ஒரு பயலும் குளிக்காம, கக்கா போகா ஙேன்னு முழிச்சிக்கிட்டு நிக்கிறானுங்க(நானும் தாங்க). விமர்சனத்தை முன்னாடி போடனும்கிறதுக்காக எவ்வளவு கொடுமையத்தான் தாங்குறது.

படத்துக்குள்ள வருவோம். படம் ஏற்கனவே பயங்கரமான எதிர்பார்ப்புகளுக்கிடையே ரிலீசாகுது. அதுலயும் பல சிரமம் இருக்கு. இது மாதிரி நிறைய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே போய் உட்கார்ந்தா காதுலேயிருந்து கழுத்து வரைக்கும் பிளேடு போட்டு அனுப்பிச்சிடுவானுங்க. ஹேராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆளவந்தான், பாபா, நரசிம்மா (இயக்குனர் இறந்தது தான் எதிர்பார்ப்புக்கு காரணம் சத்தியமா கேப்டன நம்பி போகல)உட்பட பல, கடைசியா ராஜபாட்டை வரைக்கும் பார்த்தாச்சு. பயந்துகிட்டே படத்துக்கு போனேன்.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக படம் நல்லாயிருக்கிற மாதிரியிருந்தது. பள்ளி இறுதியாண்டு படிக்கும் தனுஷூம், ஸ்ருதிஹாசனும் காதலிக்கின்றனர், பல வருடங்கள் கழித்து கல்லூரி படிப்பெல்லாம் முடிந் பிறகு திருமணம் செய்து கொள்கின்றனர், சந்தோஷமாக இருக்கின்றனர், நிற்க. (அதுக்காக நிக்கக்கூடாது உட்கார்ந்தே பிளாக்கை படிங்க) இடைவேளை வருகிறது. படம் சூப்பர், நாம விமர்சனத்துல அருமையா பாராட்டி எழுதனும்னு நினைச்சிருந்தேன். இதுல நைட்டு அடிச்ச மப்பு தெளியாம தலைவலி வேற உயிர எடுத்துக்கிட்டு இருந்தது. இடைவேளை முடிந்து படம் துவங்கி சில நிமிடங்களில் கொலவெறி பாட்டு வந்தது. அத்தோட வெளியில வந்திருந்தன்னா ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும். ஆனால் அதற்கப்புறம் வரும் காட்சிகள் அனைத்தும் மயக்கம் என்ன படத்தின் நீட்சி.

கொலைவெறி பாடல் வரை படம் பார்த்து விட்டு வந்து விட்டால் படம் சூப்பர். படம் முடியும் வரை படம் பார்த்து விட்டு தான் வருவேன் என்று பிடிவாதமாக ஒக்கார்ந்து படம் பார்த்தால் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. பொறுமையை ரொம்பவே சோதித்திருக்கிறார்கள். ஏற்கனவே இதே போன்ற கேரக்டரை மயக்கம் என்ன படத்தில் பார்த்து விட்டதால் கடுப்படிக்கிறது. என்னுடன் படம் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் தீவிர ரசிகர்கள். அவர்களே படம் இந்த பாட்டுக்கு பிறகு மொக்கை என்று சொல்கிறார்கள்.

ஒருத்தனுக்கு மெண்டல் டிஸ்சார்டர் இருக்கு என்பதை அவன் மனைவிக்கே தெரியாமல் இருக்கிறது என்பது பார்ப்பவர்களின் எல்லோர் காதிலும் பூச்சுற்றுவது போல் இருக்கிறது. கொஞ்சம் நம்புற மாதிரி எடுங்கப்பா. ஏதோ ஒரு பத்திரிக்கையில தலைவர் ரஜினி ஒரு காட்சியில் வருகிறார் என்று படித்தேன். அதனால் எங்காவது தலைவர் வருவாரா என்று தேடித்தேடி களைத்தது தான் மிச்சம்.

படத்தில் தனுஷ் அருமையாக நடித்துள்ளார் என்று நாம் சொல்லக்கூடாது. அனைவரும் அவரின் நடிப்பு பற்றி தெரியும். தேசிய விருது வேற வாங்கியிருக்கிறார். ஆனால் என்ன செய்ய எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. கோவப்படும் காட்சிகள், டியூசன் சென்டரில் ஸ்ருதியை கவர செய்யும் முயற்சிகள், மனநிலை பாதிக்கப்பட்ட பின்பு அதனை ஸருதிக்கு தெரியாமல் மறைக்கும் முயற்சி, தற்கொலை செய்ய கத்தியுடன் முயற்சிப்பது என தூள் கிளப்பியிருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் மனதை கொள்ளையடிக்கும் அழகு, கமலஹாசனையே எல்லாருக்கும் பிடிக்கும். அவர் பொண்ணை எப்படி புடிக்காமல் போகும். ஆச்சரியம் நன்றாக நடிக்கவும் செய்கிறார். என் இடைவேளைக்கு பிறகு அழுதுகொண்டே இருப்பது தான் கடுப்படிக்கிறது.

அது இன்னாயா காட்சிக்கு காட்சி மூக்குக்கே மாத்தி மாத்தி முத்தம் கொடுத்துகிறாங்க. பொண்டாட்டி இயக்குனர் என்பதால் தான் மூக்கோட நிப்பாட்டிக்கிட்டார் போல. ஆனாலும் தனுஷூக்கு மச்சம்யா. ஸ்ருதியை சும்மா போட்டு பிரட்டி எடுத்திருக்கார்.

சிவகார்த்திகேயன் முதல்பாதியில் தனுஷை விட அப்ளாஸ் அதிகம் வாங்குகிறார். சரியான பாதையில் சென்றால் அடுத்த சந்தானமாகி விடுவார். நல்ல எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். அவரின் ஒவ்வொரு கமெண்டுக்கும் தியேட்டரே அதிர்கிறது. படம் முழுக்க வந்தால் பெயரை தட்டிக் கொண்டு சென்று விடுவார் என்பதால் இடைவேளையுடன் கழட்டி விட்டு விட்டனர்.

பிரபு, பானுப்பிரியா, ரோகிணி ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். முக்கியமாக நண்பனாக வரும் சுந்தர் இடைவேளைக்கு பிறகு அதிக காட்சிகளில் வருகிறார். படத்தின் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே மிகப்பிரபலமாகி விட்டது. கொலைவெறி பாட்டு எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப்படவில்லை.

படம் முடிந்து வெளிவந்த ஒரு ரசிகர் பட்டாளம் வெளியில் அடுத்த காட்சிக்கு நின்றிருந்தவர்களிடம் வீட்டுக்கு போகச்சொல்லி கொண்டிருந்தனர். விட்டால் நான் அனைவரையும் போகச் சொல்லி காலில் விழுந்தாவது கதறியிருப்பேன், ஆனால் தியேட்டர்காரர்கள் அடிப்பார்களே என்று தான் பேசாமல் வந்து விட்டேன்.

படம் சொல்ல வரும் நீதி என்ன? தற்கொலை செய்யாதீர்கள், மனநோய் தீர்க்கக்கூடியதே என்பது தான். ஆனால் இடைவேளைக்கப்புறம் படம் பார்ப்பவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். நீதி எதிர்விளைவாகிடுச்சி.

ஆரூர் மூனா செந்தில்


Thursday, March 29, 2012

மக்கள் இயக்குனர் சேரன் - பகுதி 1


ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை அதிகமாக கிண்டலடிக்கப்படும் திரையுலகினரில் இயக்குனர் சேரனும் ஒருவர். ஆனால் எனக்கு மட்டும் மனிதனின் வாழ்வியலை படம் பிடித்து காட்டும் சிறந்த இயக்குனராக படுகிறார். படங்களின் வியாபாரத்திற்காக காம்பரமைஸ் செய்து கொள்ளாத இயக்குனர் என்பதால் மேலும் உயர்ந்தவராக என் மனதில் படுகிறார்.

இயக்குனர் சேரன் அவர்களின் முதல் படமான பாரதி கண்ணம்மா நான் 12ம் வகுப்பு படிக்கும் போது வெளிவந்தது. அப்பொழுதும் எந்தப்படமானாலும் நண்பர்களுடன் முதல் நாளே செல்வது வழக்கமாக இருந்தது. ஒரு தினத்தில் எந்தப்படமும் கிடைக்காமல் எந்தவித எதிர்ப்பார்ப்புமில்லாமல் திருவாரூர் தைலம்மை திரையரங்கிற்கு சென்றேன். படம் துவங்கியதிலிருந்து காமெடியில் நம்மை அசத்திக் கொண்டிருந்த படம் நேரம் செல்லச் செல்ல அந்த காதலுக்குள் நம்மை இழுத்துச் சென்று பார்த்திபன் உடன்கட்டை ஏறும் காட்சியில் கதறி கதறி அழவும் வைத்து விட்டது. அதன் பிறகு அந்தப்படத்தை நான் ஐந்து முறைக்கு மேல் தியேட்டரில் பார்த்தேன். கண்டிப்பாக இந்த இயக்குனர் கவனிக்கப்பட வேண்டியவர் என்று முடிவு செய்தேன். அன்று முதல் சேரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரானார்.

சேரனின் அடுத்த படமான பொற்காலம் வெளிவந்தபோது நான் பட்டயப்படிப்பிற்காக சென்னை வந்து விட்டேன். ஆனால் அது பொங்கலன்று வெளியானதால் திருவாரூரில் தான் பார்த்தேன். அந்த படமும் கலங்க வைத்து விட்டது. அழுது கொண்டே தான் பார்த்தேன். ஹீரோயிசம் இல்லாத மிக உண்மையாக உழைப்பவனும் ஒரு மாற்று திறனாளி பெண்ணின் அண்ணனுமாக முரளி நடித்திருந்த படம். மிக நேர்மையான இயக்குனராகவும், இந்த காலத்திலும் ஒவ்வொரு படத்திலும் ஒரு மெசேஜ் சொல்லும் இயக்குனராகவும் என் மனதில் உயர்ந்து நின்றார்.

அடுத்த படம் தேசியகீதம். அந்தப்படம் சங்கத்தில் பார்த்தேன். அந்தப் படம் பார்த்த போது நடந்த சுவாரஸ்யம் என்னவென்றால் நான் திருவாரூரிலிருந்து வந்தவன். அதிகமாக கட்சித்தலைவர்களை நேரில் பார்த்திராதவன். நான் படம் பார்க்க சங்கம் தியேட்டர் சென்ற அதே காட்சியை பார்க்க ஜி.கே.மூப்பனார் வந்திருந்தார். அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் வந்திருந்தனர். நான் அமர்ந்திருந்த நான்கு வரிசை முன்பாக அவர் அமர்ந்து பார்த்தார். தியேட்டர் முழுவதும் அவரது கட்சியினரே அமர்ந்திருந்தனர். படம் பார்த்ததே வித்தியாசமான அனுபவம். படமும் நக்கலும் நையாண்டியுமாக இன்றைய அரசியல்வாதிகளை கிண்டலடித்து எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சரியாக போகவில்லை.

அடுத்த படமாக வெற்றிக் கொடிகட்டு வந்தது. இது வரை வந்த சேரனின் படங்களில் நல்ல மெசேஜ் சொன்ன படம் இது தான். கொளத்தூர் குமரன் தியேட்டரில் பார்த்தேன். பிரச்சனைகளை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வையும் மிக எளிமையாக சொன்ன படம். பார்த்திபன் - முரளியின் இயல்பான நட்பு, மனோரமாவின் தாய்ப்பாசம், மீனாவின் தன்னம்பிக்கை என மனிதர்களின் பாசிடிவ் பக்கங்களை சொன்ன படம். சார்லியின் நடிப்பு மிகப்பிரமாதமாக இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

ஆரூர் மூனா செந்தில்

தொடரும்...

Wednesday, March 28, 2012

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு விவரங்கள்

டிப்ளமோ கெமிக்கல் இஞ்சினியரிங் முடித்தவர்கள் கெமிக்கல் சூப்பர்வைசர் வேலைக்கு தேவை.

இன்று சென்னையில் நேர்முகத்தேர்வு

சம்பளம் : 1400 சிங்கப்பூர் டாலர்

-----------------------

பட்டப்படிப்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 1200 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------

பட்டப்படிப்பு முடித்தவர்கள் டிரைவர் வேலைக்குத் தேவை.

லைட் டிரைவர் சம்பளம் : 1000 சிங்கப்பூர் டாலர்

ஹெவி டிரைவர் சம்பளம் : 1500 சிங்கப்பூர் டாலர்

தங்குமிடம் இலவசம்

-----------------------

வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை.

சம்பளம் : 400 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள
தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, March 27, 2012

கிராமத்து பொண்ணு அம்பிகாவிடம் வாங்கிய பல்பு

புதுகோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் எனது பெரியம்மா வீடு இருந்தது. நான் கோடை விடுமுறையில் வருடம் தவறாமல் அங்கு செல்வேன். என் பெரியம்மா வீட்டின் பக்கத்து வீட்டில் முத்துவீறு என்ற நண்பன் இருந்தான். நான் எப்பொழுதும் கறம்பக்குடி சென்றால் முத்துவீறுவுடன் தான் பொழுதைக்கழிப்பேன். அங்குள்ள கருப்பையா சுவாமி கோயில் திருவிழா மிகப்பிரசித்தம். சிறு வயதில் அங்கு கலர்கலரா கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகள் பார்க்கவே மிகப்பிரமாதமாக இருக்கும். அதை இரண்டு ரூபாய்க்கு வாங்கி இரவு முழுவதும் வள்ளித்திருமணம் நாடகத்தை பார்த்துக்கொண்டே தின்போம். பிறகு அங்கிருக்கும் குளத்தில் குளிப்பது, வயலில் ஓணான் பிடித்து அதன் வாயிலில் நாராயணன் கடையில் வாங்கிய சுருட்டை பற்ற வைத்து அதன் வாயில் சொருகி அதை மயக்கமுற செய்வது என அங்கிருக்கும் நாட்களில் நாங்கள் செய்த சேட்டைகள் ஏராளம்.

அப்பொழுது எனக்கு வயது 19. அவனுக்கும் தான். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை கால திருவிழாக்களில் நடைபெறும் கரகாட்டம் ஏக பிரசித்தம். ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த கரகாட்டத்தில் காபரேவுக்கு இணையான காட்சிகள் நடைபெறும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். நானும் முத்துவீறுவும் அருகில் இருக்கும் கிராமத்தில் கரகாட்டம் நடைபெறுவதால் அங்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். என் பெரியம்மாவிடம் திருவிழாவுக்கு சென்று மறுநாள் காலை வருவதாக கூறி செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கு சென்ற மாட்டு வண்டியில் தொற்றிக் கொண்டோம்.

அந்த ஊர் திருவிழாவில் நடைபெற்ற கரகாட்டத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கு என் கண்ணில் எதச்சையாக அவள் பட்டாள். அடிக்கடி என்னையே ஜாடையாக அவள் பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது. சரி அவளை கரெக்ட்டு செய்யலாம் என்று மெல்லிய குரலில் சிக்னல் அனுப்பினேன். அந்த பக்கம் இருந்தும் சிக்னல் வந்தது. நமக்கு அதுதான் முதல் முறையென்பதால் தயங்கி கொண்டே அவள் பின் சென்று மிக மெல்லிய குரலில் "உன் பெயர் என்ன" என்று கேட்டேன். அவள் அம்பிகா என்று கூறினாள்.

முத்துவீறுவு இதையெல்லாம் பார்த்தவுடன் பயம் ஏற்பட்டது. என்னிடம் வந்து "வாடா நாம் வீட்டிற்கு செல்வோம்" என்று கூறினான். நான் அவனை சமாதானப்படுத்தினேன். "இருடா நாம் அவளை கொஞ்சம் தயார் செய்து இருட்டில் வயல்காட்டிற்கு கொண்டு சென்றால் முதலில் நான், பிறகு நீ" என்றேன். முத்துவீறு சபலப்பட்டான். கூடவே பயமும் அவனுக்கு இருந்தது. பிறகு ஒரு வழியாக அவனை சமாதானம் செய்து கரகாட்டத்தின் இடையே அவ்வப்பொழுது யாருக்கும் தெரியாமல் அம்பிகாவுக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுப்பது, கையால் சைகை செய்வது, இடையில் கரகாட்டத்தையும் ரசிப்பது என நள்ளிரவு வரை காத்திருந்தோம்.

கரகாட்டம் முடிந்து அடுத்தது கிளப் டான்ஸ் குழுவின் ஆட்டம் ஆரம்பித்தது. அந்த சமயம் தான் சரி யென்று முடிவு செய்து அம்பிகாவிடம் கிளம்பலாம் என்று சைகை செய்தேன். முத்துவீறுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

அம்பிகா அவளது வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் ஒதுக்குப்புறம் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினாள். முத்துவீறுவுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவனை கூட்டிக்கொண்டு நானும் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். வெளிச்சமெல்லாம் குறைந்து இருள் சூழ்ந்த பகுதிக்கு வந்தோம். அவளிடம் வயல்காட்டிற்குள் செல்லலாம் என்று கூறினேன். அவள் நன்கு விளைந்திருந்த நெல்வயல்காட்டிற்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி நுழைந்தாள். நான் அவளை பின் தொடர்ந்தேன். முத்துவீறு என்னை பின்தொடர்ந்தான். அந்த இடத்தில அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு நடுக்கத்துடன் அவளை முத்தமிட்டேன். அவளும் என்னை . . . . . . . பிறகு அவளது இடுப்பில் கை வைத்தேன்.

ரோட்டில் இருந்து அம்பிகா என்று குரல் வந்தது. நாங்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு திசைக்கு ஓடினோம் . அவளது அம்மா அவளை காணும் என்று தேடி வந்திருந்தார்கள். அவள் கரையேறி ஓடிவிட்டாள். அந்த சமயம் பார்த்து ஆவென்று முத்துவீறு அலறினான். அம்பிகாவின் தாயார் சட்டென்று உஷாராகி அவர்களது உறவினர்களை அழைக்க ஆரம்பித்தார். நான் முத்துவீறு குரல் வந்த இடம் நோக்கி நகர்ந்தேன். அவன் ஒரு பாம்பை மிதித்து விட்டு அது சீறியதால் அலறியதாக கூறினான். அதற்குள் ரோட்டில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த அம்மா அம்பிகாவிடம் என்வென்று அடித்து கேட்டார்கள். அவள் ஒதுங்கும் போது உள்ளிருந்து ஒருவன் கையைப் பிடித்து இழுத்ததாக அழுது கொண்டே கூறினாள். முத்துவீறுவைப்போல் எனக்கும் நடுங்க ஆரம்பித்தது.

அவர்கள் எல்லாம் ரோட்டில் இருந்து டார்ச் லைட் அடித்து தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் நெல் கதிருக்குள் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். நேரம் ஆக ஆக அவர்களும் ரோட்டை விட்டு நகர்வது போல் தெரியவில்லை. நாங்கள் வேறு வழியில்லாமல் நெல் கதிருக்குள்ளேயே முட்டிப்போட்டு செல்ல ஆரம்பித்தோம். முத்துவீறு அழுது கொண்டே வந்தான். விடியற்காலை வரை நகர்ந்ததில் நாங்கள் கறம்பக்குடி செல்லும் பாதை அருகில் வந்திருந்தோம். பிறகு அங்கிருந்து நடந்து வீட்டிற்கு சென்றோம். இருவருக்கும் கால் முட்டி பாளம் பாளமாக வெடித்திருந்தது. இருவரது வீட்டிலும் என்னவென்று கேட்டார்கள். நாங்கள் ஏற்கனவே பேசி வைத்தது போல் மாட்டு வண்டி குடை சாய்ந்து விட்டதால் அடிபட்டதாக கூறினோம். விடுமுறை முடிந்து நான் எனது ஊரான திருவாரூருக்கு வந்து விட்டேன் .

அடுத்த வருடம், அதேபோல் விடுமுறை, அதே முத்துவீறு, அதேபோல் திருவிழா, ஆனால் வேறொரு ஊர், அதே போல் ஒரு பெண் அவளிடம் சைகைலேயே பெயர் என்னவென்று கேட்டேன் . அவள் முத்தம்மா என்றாள். "என்னடா முத்துவீறு ரெடியா" என்று கேட்டு திரும்பிப் பார்த்தேன். அவன் தலைதெறிக்க கறம்பக்குடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இது ஒரு மீள்பதிவு.

Sunday, March 25, 2012

பஞ்சேந்திரியா - 25.03.2012


சும்மா கலவையா எழுத ஒரு பொருத்தமான தலைப்பு தேடிக்கிட்டு இருந்தப்ப எங்க வூட்டு ஆத்தா ஒன்று பஞ்சேந்திரியா தான் முக்கியம் முக்கியம்னு கூவிக்கின்னு இருந்தது. அதுகிட்ட அர்த்தம் கேட்டப்ப அப்படின்னா பஞ்சபூதம் என்று சொன்னது, உடனே தலைப்பு கிடைத்ததா பட்சி உள்ளே கூவிச்சு. அதனால் இனிமேல் வாரம் ஒரு முறை ஐந்து செய்திகளுடன் கூடிய பஞ்சேந்திரியா உண்டு.

------------------------------------------

வெற்றிகரமாக ஆசிய கோப்பையை வென்ற பிறகு தாயகத்திற்கு திரும்பிய அப்ரிடி விமான நிலையத்தில் வரவேற்பதற்காக நின்றிருந்த ரசிகர்களில் சிலரை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியது.


ஆனால் அப்ரிடியோ தன் மகள் தன்னை வரவேற்க காத்திருந்த போது ரசிகர்களின் முட்டல் மோதலில் சிக்கி காயம் பட்டதாகவும் அவளை காப்பாற்றவுமே தான் தாக்கியதாகவும் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது அவருடைய சொந்த விஷயம் எனவும் தாங்கள் தலையிட முடியாது எனவும் கூறி விட்டது.

பாகிஸ்தான் நாட்டின் ஜனநாயகம் சில சம்பவங்களிலேயே சந்தி சிரிக்கிறதே.

--------------------------------

கூடங்குளத்தில் என்னதான் நடக்கிறது. நாளொருமேனியாக புதுப்புது தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு நாள் ஜெர்மன் உளவாளி நாகர்கோவிலில் இருந்து உதவியாக இருக்கின்றன என்று தகவல்கள் வருகின்றன. மறுநாள் இது நக்சலைட்கள் உதவுவதாக செய்திகள் வருகின்றன. என்ன தாங்க நடக்கிறது.

அரசாங்கமோ கடலோர காவல், விமானப்படை காவல், அதிரடிப்படை காவல், உளவுத்துறை என அளவுக்கதிகமான பாதுகாப்பை அள்ளிக்குவிக்கிறது. விளம்பரங்களில் மிகப்பிரபலங்கள் மூலம் இது பாதுகாப்பானது என்பதை தெரிவிக்கிறது.

திருப்பூர், கோவை மற்றும் பல பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இந்த அணுஉலை எதிர்ப்பால் கரண்ட் கிடைக்காமல் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கிறது என சொல்கிறார்கள்.

என்னைப் போல் நடுநிலையான இது பற்றிய போதிய அறிவற்ற மக்கள் ஙே ஙே என காதல் பரத் போல் திரிய வேண்டியது தான் போல இருக்கிறது.

-------------------------------

எனக்கு மகேஷ்பாபுவை மிகவும் பிடிக்கும் என்பதால் இன்று ஜெமினி டிவியில் ஒளிபரப்பான கலீஜா படத்தை பார்த்தேன். இந்த ஆந்திராகாரர்களுக்கு எதையுமே கொஞ்சம் காரசாரமாக கூடுதலாக செய்தால் தான் பிடிக்கும் போல இருக்கிறது.

இன்று அப்படத்தின் காட்சியில் ஒரு ஸ்கார்ப்பியோ கார் வந்து மகேஷ்பாபுவின் மீது மோதுகிறது. அப்படியே எகிறி போய் எதிரில் இருக்கும் கயிற்றுக் கட்டிலில் விழும் அவர் ஸ்பிரிங் போல் எகிறி வந்து மீண்டும் அதே காரின் பேனட்டில் குதிக்க இரண்டு முன் டயர்களும் பக்கவாட்டில் எகிறி விழுகின்றன. நான் அப்படியே ஷாக்காயிட்டேன். இது போல் அபத்தங்கள் நிறைய தெலுங்கு சினிமாவில் பார்த்திருக்கிறேன். அவற்றை வரும் வாரங்களில் விவரிக்கிறேன். நீங்களும் முடிந்தால் பார்த்து மெய் சிலிருங்கள். தமிழ் சினிமா இன்னும் வளரணும் என்பது மட்டும் புரிந்தது. என்னா ஜம்ப்புடா சாமி...

----------------------------------

இந்த வார ஹீரோ


----------------------------------

சென்னையில் கேபிளில் ஜெமினி மற்றும் மா டிவி மட்டுமே வருகிறது. இரண்டிலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தினம் ஐந்து என இரண்டு டிவிக்களில் ஒரு நாளைக்கு பத்து படம் என மொத்தம் 20 படங்கள் ஒளிபரப்பாகின்றன. உலகம் தாங்காதுடா சாமி.

இதுக்கு தமிழ் சேனல்கள் எவ்வளவோ தேவலாம் போல, பாதிக்கு மேல் கேம் ஷோ தான் வருகிறது. ஒரு சேனலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு படம் மட்டுமே ஒளிபரப்பாகிறது கேடிவி தவிர.

----------------------------------

இந்த வார தத்துவம்

காதல் என்பது கார்ப்பரேசன் கக்கூஸ் மாதிரி

வெளியே இருப்பவன் உள்ளே வர துடிக்கிறான்
உள்ளே இருப்பவன் வெளியே வர தவிக்கறான்

--------------------------------

ஆரூர்
மூனா செந்தில்

Saturday, March 24, 2012

டில்லி பொண்ணு சைந்தவியிடம் வாங்கிய பல்பு

பள்ளி இறுதிஆண்டு படிக்கும் காலத்தில் ஒரு நாள் காலை என் வகுப்புத்தோழன் தொப்பையப்பன் ரமேஷ் (பெயர் காரணம் : அவன் பரிட்சையில் எப்போதும் தொப்பையப்பர் துணை என்று எழுதி விட்டு தான் பரிட்சை எழுத துவங்குவான்) வந்து திடீர்னு "உனக்கு சிட்னி ஷெல்டன் தெரியுமா?ன்னு கேட்க நான் அதுக்கு "அது என்னடா ஆஸ்திரேலியாவுல இருக்கும் நகரின் பெயரா" என்று விவஸ்தையில்லாமல் கேட்டு தொலைக்க ஏளனமாக சிரிக்க ஆரம்பிச்சான்.

தொப்பை திடீர்ன்னு இப்படி பீட்டர் விட்டா டில்லியில் இருந்து அவன் மாமா குடும்பம் ரயிலை புடிச்சு என் வயித்தெரிச்சலை கொட்டிக்க வந்து இறங்கியிருக்குன்னு அர்த்தம். அதுக்கு பின்னே அவன் "டேய் திவாகரன் மாமா குடும்பத்துடன் ஊரிலிருந்து வந்திருக்கார் . அவர் பொண்ணு நம்ம பேட்ச் தான். ஆனா நம்மை விட உசரம். நம்ம ஊர் மாதிரி இல்லை. நம்மள மாதிரி இட்லியில சாம்பாரை ஊற்றி குழப்பி அடிக்காமல் நல்ல கோதுமை சாப்பிட்டு அதே கலர்ல நல்ல குதிரை மாதிரி இருக்கா.

அவ தான் வாசலில் உள்ள தாத்தா சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுகிட்டு சிட்னி ஷெல்டன் பெயர் போட்ட புத்தகம் படிச்சிக்கிட்டு இருந்தா. நமக்கு தான் is was been, go went fone, read red red தாண்டி இங்கிலீஷ் தெரியாதே, சும்மா சமாளிச்சிட்டு என் நண்பன் வீட்டில் இன்னும் நிறைய புத்தகங்கள் இருக்குன்னு சொல்லியிருக்கேன். அவ வர்றன்னு சொன்னாடா, உனக்கு அந்த பெயர் எல்லாம் தெரியுமான்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன், ஆங்கிலப்புத்தகங்களை நான் எஸ்தர் அக்கா வீட்டிலிருந்து கொண்டு வந்து உன்கிட்ட தர்றேன் என்றான். அது மட்டுமில்லாமல் அவன் "அந்த சிட்னி ஷெல்டன் புக் வெரி நைஸ், ஒன்லி டூ பேஜஸ் தான் ரீட் பண்ணினேன். இட் ஒன்டர்புல்" என அவனுக்கு தெரிந்த அத்தனை ஆங்கில வார்த்தையையும் அந்த வாக்கியத்தில் நுழைத்தான்.

அவன் அதுக்கு மேல் விட்ட புரூடா எல்லாம் மனசில் ஏறலை. நான் எஸ்தர் அக்காவின் புத்தகங்களை படித்து அவளிடம் பீட்டர் விடுவது போலவும் அவ என் தலைமுடியில் கையை நுழைத்து "ஸோ நைஸ் ஆஃப் யூ" என சொல்வது போலவும் தொப்பையப்பன் காதில் புகை வருவது போலவும் மனதில் கற்பனை குதிரை தட்டிவிட்டு எழுந்து என் புத்தக அலமாரி பக்கம் வந்தேன். தி. ஜானகிராமன், கல்கியின் புத்தகங்களை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏத்திவிட்டேன். ஒன்லி எஸ்தர் அக்கா வீட்டு இங்கிலீஷ் புக் தான் என முடிவு செய்தேன். எஸ்தர் அக்கா வீட்டுக்கு சென்று அவரின் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவர்கள் அலமாரியிலிருந்து நானாக இருபது புத்தகங்கள் எடுத்து வந்து என் அலமாரியின் முன்பக்கமாக அடுக்கி வைத்தேன். நான் ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்து படிக்க முயற்சி செய்தேன். ஆனால் படிக்க படிக்க ஒரு எழவும் புரியலை. தொப்பை அவன் மாமா பொண்ணை அழைத்து வந்து காட்டும் போது எல்லா புத்தகமும் என் பெயரில் இருக்க வேண்டுமென எல்லாப்புத்தகத்தின் முதல் பக்கத்திலும் என் பெயரை பென்சிலில் எழுதி வைத்தேன். பின்னே பேனாவில் எழுதினால் எஸ்தர் அக்காவிடம் திருப்பிக் கொடுக்கும் போது அடி வாங்க முடியாதில்லையா?

மாண்ரெக் காமிக்ஸ் இருக்கா என கேட்டு வந்த தொப்பையிடம் "what???" என 220 வாட் கரண்ட் பாய கத்தினேன். ஸ்பீக்கிங் ஒன்லி இன் இங்கிலீஷ் என அவனிடம் பொளந்து கட்டினேன். ஆனால் நான் பேசியதில் பாதி தி ஹைனா என்ற சம்மரியில் வந்தது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். மறுநாள் தொப்பை மாமா பையனோடு வீட்டுக்கு வந்தான். வரும் போதே அவனிடம் தொப்பை "டேய் பாலா இங்கு இருப்பதெல்லாம் நான் படித்த புத்தகங்கள், இவன் படிப்பதற்காக என்னிடம் இருந்து வாங்கிச் சென்றது" என சொல்லி என் புத்தக அலமாரியை காட்டினான். கோபத்தை அடக்கி கொண்டேன். போனா போகுது பாலா ஆம்பளை பையன் தானே என்று.

மூன்று நாள் கழித்து தொப்பை என்னிடம் "டேய் மாமா பொண்ணு சைந்தவியை மாலை பெரிய கோயிலுக்கு நாங்க சாயரட்சைக்கு போயிட்டு வரும் போது வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்"ன்னு சொன்ன உடனே அந்த புத்தக அலமாரி எல்லாம் துடைச்சு வச்சு எங்கம்மா புடவையை பாதியாக கிழித்து ஸ்கிரீன் போல் செய்து அலமாரியில் மாட்டி விட்டேன், அங்கு வந்த அம்மா அதைப் பார்த்து விட்டு விளக்கமாத்தை எடுத்து வந்து மாத்து மாத்தென்று மாத்தியது. வீரனுக்கு இதெல்லாம் சகஜம் என்று துடைத்து விட்டுக் கொண்டேன்.

சாயரட்சை முடிந்த பிறகு தொப்பை சைந்தவியுடன் ஆஜரானான். அவளிடம் என் புத்தக ஆர்வத்தையெல்லாம் பெரிதாக சொல்லி விட்டு என் ஆங்கில ஆர்வத்தை புட்டு புட்டு வைத்து விட்டு என் புத்தக அலமாரியை காட்டிய போது அவள் எல்லா புத்தகங்களையும் பார்த்து விட்டு குசும்பாக சிரித்தாள். ஒரு பொண்ணை ப்ரெண்ட் புடிக்க இப்படியா சொதப்பலாக செய்வார்கள், என்ன ரமேஷ் உன் ப்ரெண்டு ஜொள்ளு பார்ட்டியா என கேட்டு விட்டு வீட்டுக்கு சென்று விட்டாள். கடைசி வரை எனக்கு மட்டும் புரியவேயில்லை, கடவுளே நமக்கு மட்டும் ஏண்டா தொடங்கும் போதே ஊத்திக்கிது என நொந்துகிட்டு அவர்கள் திருவாரூரிலிருந்து திரும்ப செல்லும் வரை தொப்பை பார்க்கவுமில்லை, அவர்கள் வீட்டுக்கு போகவுமில்லை.

அவர்கள் ஊருக்கு சென்ற விவரத்தை சுண்டி தியாகு மூலம் தெரிந்து கொண்டு மறுநாள் தொப்பையை பார்த்து ஏண்டா அன்று என்னைப் பார்த்து அப்படி சிரித்தாள், என்னடா பிரச்சனை என்று கேட்டேன். அவன் நக்கலாக சிரித்து விட்டு சொன்னான் எஸ்தர் அக்கா வீட்டிலிருந்து நான் எடுத்து வந்ததெல்லாம் அக்காவின் காலேஜில் கொடுத்த B.Sc (Zoology) புத்தகங்களாம். ஆண்டவா என்னைப் போன்ற அரைவேக்காட்டு பயலுவகிட்ட இருந்து இந்த ஊரு பொண்ணுங்கள எல்லாம் காப்பாத்து.

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, March 21, 2012

பரோட்டா மாமாவும் புட் பிளாசாவும்...

சாதனையாளர்கள் என்றால் நாட்டின் பொருளாதரத்தை அசைத்துப் பார்த்தவர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமில்லை, எடுத்துக் கொண்ட தொழிலை சாதாரண நிலையிலிருந்து உயரத்திற்கு கொண்டு சென்று அதன் தாக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் "இருந்தும் இல்லாமல் இரு" என்ற கொள்கைக்கு ஏற்ப வாழ்பவர்களும் தான்.அந்த வழியில் மன்னார்குடி என்ற சிறு நகரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பரோட்டா மாமா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் அவரின் பெயர் சதீஸ், என்னுடைய அத்தைப் பையன். இவரைப் பற்றி ஏகப்பட்ட வில்லங்க விஷயங்களை போட்டு வாரிய பதிவுகளை மன்னார்குடியில் நிறைய பேர் படித்து அவரிடமே அந்த பதிவுகளைப் பற்றி கிண்டலடித்து விட்டனர். அவர் என் நல்ல விஷயங்களை எழுத மாட்டியா என்று அலுத்துக் கொண்டதால் அவருடைய நிறை பக்கத்தை இன்று பார்க்கப் போகிறோம். ஆனால் இந்த ஒரு பதிவு மட்டுமே நிறை பக்கத்தை கொண்டிருக்கும் மற்றபடி அவரது ரகசியங்கள் அடங்கிய பதிவுகள் இன்னும் பல வர இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சதீஸின் சிறு வயதிலேயே அவருடயை அம்மா ரத்தப்புற்று நோயில் இறந்து விட்டதால் அவருக்கு 21 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டனர். பிரதிஷா என்ற பெண் குழந்தையும் பிறந்து விட்டது. DHMCT (Diploma in Hotel Management & Catering Technology) முடித்த அவர் வேலைக்காக துபாய்க்கு சென்று சில மாதங்களிலேயே குடும்பத்தை பிரிந்திருக்க முடியாமல் திரும்பி வந்து விட்டார்.

இங்கு வந்து மன்னார்குடி பேருந்து நிலையத்தின் எதிரில் 5 பார்ட்னர்களுடன் சேர்ந்து புட் பிளாசா என்ற உணவகத்தை துவக்கினார். சில மாதங்களில் மற்ற பார்ட்னர்களின் பங்கினை அவர்களுக்கு கொடுத்து விட்டு தானே முழு ஓனரானார். அன்றிலிருந்து இன்று அவரை அயராது உழைக்கிறார். உணவகம் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் இருப்பதால் நன்றாக போகிறது.

அடுத்ததாக TATA ACE வண்டி ஒன்று வங்கிக்கடனில் வாங்கினார். அதனை ஒழுங்காக ஒட்டி முழு கடனையும் அடைத்து விட்டதால் அதே வங்கியில் மீண்டும் லோன் எடுத்து Tavera Chevrolet வண்டி ஒன்றும் எடுத்து டிராவல்ஸ் ஒன்றை துவக்கி அதனையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கிராம கவுன்சிலருக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் களப்பணி செய்து மக்களிடையே நல்லப் பெயரை பெற்று 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றிப்பெற்று ஊராட்சி மன்ற துணைத்தலைவரானார்.

இன்றும் தான் பெரிய ஆள் என்ற நினைப்பில்லாமல் ஹோட்டலில் மாஸ்டர் வரவில்லையென்றால் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் எல்லாம் அவர் தான் போடுகிறார். டிரைவர் வரவில்லையென்றால் பல நாட்கள் கண் விழித்து வண்டி ஒட்டுகிறார். இன்று வரை பத்து பைசா கையூட்டு வாங்காமல் ஊராட்சி மக்களுக்கு என்ன தேவையென்றாலும் முன் நின்று செய்கிறார்.

கண்டிப்பாக இன்னும் சில வருடங்களில் மன்னார்குடியில் நல்ல தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் வருவார் என்பதில் சந்தேகமில்லை. என் மச்சான் என்பதால் பல முறை அவரை கலாய்த்து பதிவுகள் போட்டுள்ளேன். அதற்காக கோவப்பட்டதும் இல்லை. சிரித்துக் கொண்டே ஏன்டா நான் தான் கிடைத்தேனா என்று சொல்லிச் செல்வார்.

உயரம் என்பது பத்தாவது மாடியில் மட்டும் இல்லை, முதல் செங்கலில் இருந்தே அது துவங்குகிறது என்பதை அவரைப் போல் நாமும் புரிந்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

டிஸ்கி 1 : சதீஸ் அவர்களே இந்த ஒரு பதிவு மட்டும் உங்களைப் பற்றி ஒழுங்காக வரும் என்பதையும் மீண்டும் தாங்கள் கலாய்க்கப்படுவீர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(இது நாய் நக்ஸ் இல்லீங்க)

டிஸ்கி 2 (சென்னைப் பதிவர்களுக்கு மட்டும்) : நம்ம நாய் நக்ஸ் நக்கீரன் அவர்கள் வரும் வெள்ளியன்று சென்னை வருவதாக இருக்கிறார். சென்னையில் உள்ள பதிவர்கள் எல்லோரும் வியாழன் இரவே எதாவது பஸ் பிடித்து ஆந்திரா அல்லது கேரளா பக்கம் சென்று விடுமாறோ அல்லது வெள்ளி மட்டும் தங்களது அலைபேசியை அணைத்து வைத்து விடுமாறோ கேட்டுக் கொள்ளப்படுகிறது. இல்லையென்றால் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. தெரியாத்தனமாக நான் மாட்டிக் கொண்டேன். மேற்கொண்டு கேபிள் அண்ணனும் மாட்டிக் கொண்டதாக கேள்விப்பட்டேன். மற்றவர்களாவது தப்பிக்கட்டுமே என்று தான் இதனை வெளி்ப்படையாக அறிவிக்கிறேன். ஹி ஹி ஹி.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, March 20, 2012

இளம்பெண்கள் காதலின் விளைவுகள்


இந்த பொண்ணுங்க இருக்காங்களே அய்யய்யய்யோ, ஒரு குடும்பத்தினை சுழற்றி எறிந்து விட்டு கொஞ்சம் கூட யோசிக்காமல் காதலன் நல்லவனா இல்லையா என்று விசாரிக்காமல் ஓடுவதில் கில்லாடிகள்.

என் சகோதரனின் திருமணத்திற்காக திருப்பதி சென்றிருந்த போது இந்திரனை பார்த்தேன். இந்திரன் என்னை விட எட்டு வயது இளையவன். திருவாரூரில் நாங்கள் இருந்த தெருவிலேயே குடியிருந்தவன். அவனது அண்ணன் சந்திரன். ஒரே தங்கை சுஜாதா, அப்பா சிறுவயதிலேயே இறந்து விட்டார். அவனது அம்மா எங்கள் வீடு உட்பட சில வீடுகளில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். சந்திரன் ஒரு வெல்டிங் கடையில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பிறகு சொந்தமாக கடை வைத்து, திருவாரூரில் ஒரு கட்சியில் பதவியும் பெற்று குடும்பத்தை உயர்த்தினான்.

இந்திரன் வயதில் இளையவனாக இருந்தாலும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். நான் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்தால் நான் ஊருக்கு திரும்பும் வரை என்னுடன் தான் இருப்பான். நான் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த போது இந்திரனை சென்னைக்கு கூட்டி வந்து வேலை வாங்கிக் கொடுத்து பார்த்தேன். சில நாட்களிலேயே எனக்கு திருவாரூரே போதும்ணே என்று கூறி ஊருக்கு சென்றவன். ஊரில் சிறிது சிறிதாக தண்டல் விட ஆரம்பித்து அவனும் திருவாரூரில் பைனான்சியராக ஒரளவுக்கு செட்டிலாகி விட்டான். சந்திரன் திருமணமாகி விட்டதால் தனியாக வசித்து வந்தான். இரண்டு வருடங்களாக இந்திரனையும் அவன் அம்மா, தங்கையையும் பார்க்கவே முடியவில்லை.

திருப்பதியில் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. அவனிடம் என்ன செய்கிறாய், குடும்பம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தேன். சுஜாதா முதுநிலை பட்டப்படிப்பு சென்னையில் படிப்பதாகவும் அதன் படிப்பு காரணமாக சென்னையில் வீடு பார்த்து அம்மா தங்கையுடன் வந்து விட்டதாகவும், தான் ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிவதாகவும் கூறினான். சந்தோஷமாக ஊருக்குள் பொறுப்பின்றி திரிந்து கொண்டு தினம் ஒரு சண்டை வலித்துக் கொண்டிருந்த ஒருவன் பொறுப்பாக குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அன்று முழுவதும் என்னுடன் இருந்தவன் சென்னையில் என்னை சந்திப்பதாக கூறி திருப்பதியில் விடை பெற்றுக் கொண்டான்.

நேற்று வந்து என்னை வீட்டில் சந்தித்தான். நேற்று இரவு தாகசாந்தி நடைபெற்றது. ரெண்டு ரவுண்டு உள்ளே போனதும் தான் சென்னை வந்த காரணத்தை தெரிவித்தான். எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் சுஜாதா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது உடன் படித்தவனுடன் பதிவுத்திருமணம் செய்து கொண்டு அவனுடன் ஊரை விட்டு கம்பி நீட்டி விட்டாள். வெளியில் தெரிந்தால் தூக்கு போட்டு சாக வேண்டும் என்று பயந்து குடும்பம் இரவோடிரவாக வீட்டை காலி செய்து சென்னை வந்து விட்டார்கள், ஊரில் இருப்பவர்கள் கேட்டால் அந்தப் பெண் படிப்பிற்காக சென்னை வந்ததாக கூறி வருகிறார்கள். இந்த மாதிரி பொண்ணுங்களையெல்லாம் என்ன செய்யலாம். கேட்டவுடன் எனக்கே அரிவாளை எடுத்து வெட்டிப்போடணும் போல கோவம் வருகிறதே. அந்த குடும்பத்திற்கு எப்படியிருக்கும்.

அடுத்த சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு மிகநெருங்கிய சொந்தத்தில் நடந்தது. எனக்கு மிகநெருங்கிய உறவுக்காரப்பெண். பெயர் செண்பகம். சென்னையில் அப்பா அம்மாவுடன் வசித்து வந்தாள். வீட்டிற்கு ஒரே பெண். மிகுந்த செல்லம். கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தனர். கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போது ஒரு நடிகையின் தம்பியுடன் ஒடிப்போய் பதிவுத்திருமணம் செய்து கொண்டாள். போலீஸ் நிலையத்தில் பஞ்சாயத்து வரை போய் அவனுடன் சென்றாள். இரண்டு மாதத்தில் அவன் சரியில்லை என்று திரும்பி வந்து விட்டாள். அவளுக்காக அவளது பெற்றோர்கள் சென்னையை காலி செய்து விட்டு திருச்சி சென்று செட்டிலாகி விட்டனர்.

முதல் சம்பவத்தில் பிறந்ததிலிருந்து கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த ஒரு குடும்பம் தலையெடுத்து ஊருக்குள் மதிக்கிற மாதிரி வந்து கொண்டிருந்த போது அந்த பெண் செய்த தவறால் இரவோடு இரவாக வாழ்ந்த ஊரை விட்டு காலி செய்ய வேண்டியிருந்தது. இரண்டாவது சம்பவத்தில் பெண் தேர்வு செய்த பையனின் குடும்பமே விபச்சாரம் செய்து கொண்டிருந்தது. நாங்கள் எல்லாம் சொல்லி உறைக்காத உண்மை அவள் கண்ணால் பார்த்த பிறகு தான் புரிந்தது. இன்றைக்கு எவனாக இருந்தாலும் இந்த விஷயம் புரிந்தால் அவளை தப்பாகத்தானே பார்ப்பான்.

பசங்க இருக்கானுங்களே ஒரு பொண்ணை பார்த்தவுடனே காதலில் விழுகின்றனர். அவளுக்காக உயிரையும் கொடுக்க தயாராகின்றனர். ஆனா பொண்ணுங்க தன் பின்னால் சுற்றுபவர்களில் ஒருவனை கவனமுடன் பரிசீலித்து தேர்வு செய்கிறாள். ஆனால் அவன் கண்டிப்பாக தப்பானவனாக இருக்கிறான். தனது படிப்பையெல்லாம் முடித்து விட்டு தனக்கென ஒரு நிலை வந்தவுடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டால் என்ன குடியா முழுகி விடும். இனிமேலாவது திருந்த முயற்சிங்க. பசங்களை ஏமாத்திட்டாவது போங்க. பரவாயில்லை. கொஞ்ச நாள் தாடி வச்சிருப்பானுங்க, அடுத்த பொண்ணை பார்த்தான் என்றால் உன்னை மறந்துடுவான். குடும்பம் முக்கியம் என்பதை மட்டும் மறந்து விடாதே.

ஆரூர் மூனா செந்தில்


Monday, March 19, 2012

ஆனந்த விகடனின் அங்கீகாரம்

கொஞ்சம் சாரிங்கப்பா, இது போன வாரமே போட்டிருக்க வேண்டிய பதிவு. ஆனால் திருவாரூரில் 15 நாட்கள் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இன்று தான் சென்னை வர முடிந்தது. அங்கு திருமண ஏற்பாடுகள், வரவேற்பு ஏற்பாடுகள், கறி விருந்து ஏற்பாடு என ஏக பிஸி. சகோதரன் திருமணத்திற்காக திருப்பதி சென்று விட்டு புதன் இரவு முழுவதும் கார் ஓட்டி விட்டு வியாழன் அன்று காலை திருவாரூரில் இறங்கினேன்.

மெட்ராஸ் பவன் சிவக்குமாரிடம் இருந்து போன் வந்தது. என்னவென்று தெரியாமல் போனை எடுத்தேன். சிவா தான் ஆனந்த விகடனில் என் போட்டோவைப் போட்டு எனது வலைப்பூ பற்றி என் விகடன் சென்னை பதிப்பு வலையோசையில் வந்திருப்பதை சொன்னார். சந்தோஷமாக இருந்தது. உடனடியாக அங்கு யாரிடமும் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. திருவாரூரில் சென்னைப் பதிப்பு கிடைக்காததால் அதனைப் பற்றி விரிவாக சொல்ல முடியவில்லை. சென்னையில் இருந்த சக நண்பர்களுக்கு போன் செய்தால் எல்லாம் முதல் நாள் இரவு தண்ணியடித்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தனும் போனை எடுக்கவில்லை, பிறகு தான் சிவா தன்னுடைய நண்பேன்டா வலைப்பூவில் பகிர்ந்திருப்பதை சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.

எழுத்தாளர்கள், எழுத வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாக வைத்திருப்பவர்கள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளர்கள், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வி எழுதி பதில் வாங்குபவர்கள் என பலருக்கும் தன்னுடைய புகைப்படம் மற்றும் தன்னுடைய எழுத்துக்கள் ஒரு பெரிய பத்திரிக்கையில் அதுவும் விகடன் போன்ற பத்திரிக்கையில் வர வேண்டும் என்பது மிகப்பெரிய அவாவாக இருக்கும். நான் இது வரை எந்த பத்திரிக்கைக்கும் வாசகர் கடிதம் கூட போட்டதில்லை. நகைச்சுவைத்துணுக்குகள் எழுதியதில்லை. அந்த பக்கமே நான் வந்ததில்லை. புத்தகங்களை படிப்பதோடு சரி. ஆனால் அதில் மட்டும் நான் மிகப்பெரிய ஆள். ஒரு புத்தகம் வாங்கி விட்டால் அலுவலகத்திற்கு லீவு போட்டாவது படித்து முடித்து விடுவேன். என்னிடம் இருக்கும் அனைத்து புத்தகங்களும் நான் படித்து முடித்தவை தான்.

எழுதுவதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. அதுமட்டுமில்லாம நாம பேசிக்கலா கொஞ்சம் (கொஞ்சமா இல்ல அதிகமாவே ஹி ஹி ஹி) சோம்பேறி. அதனால் முயற்சிக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு வலைப்பூ என்று ஒன்று இருக்கிறது என்று தெரிந்த பிறகு அதனை படிக்க ஆரம்பித்த பிறகு அதில் பலரது கட்டுரைகளை படித்த பிறகு தான் நானும் எழுதலாம் என்று தைரியம் வந்தது. சும்மா ரெண்டு வரி, மூணு வரி போட்டு எல்லாம் பதிவெழுதினேன். அதற்கு மேல் எழுத வரவில்லை. பிறகு கொஞ்ச கொஞ்சமாக வளர்த்து கொண்டு இன்று எனக்கு பிடித்த மாதிரியாக எழுதுகிறேன். இன்னும் நன்றாக எழுத முயற்சிக்க வேண்டும். அவ்வளவு தான். நமக்கு அண்ணா நகர் பிளாட் எல்லாம் வேண்டாங்க.

அதுவும் நம்ம பதிவர்களில் சிலர் கூட நானாக எழுதிப் போட்டு தான் ஆனந்த விகடனில் வந்ததாக கூறினார்களாம். நான் அப்படி எழுதிப் போடவேயில்லை. அவர்களாகத்தான் என் மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பி விவரங்கள் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். இன்னும் சிலர் இதற்கு முன் வலையோசையில் வந்தவர்கள் எல்லாம் பல வருடங்கள் பதிவெழுதியதால் விகடனில் வந்திருக்கார்கள். நான் தான் ஒரு வருடத்திலேயே வந்து விட்டதாக கூறினார்களாம். நானா போய் விகடனில் அவசரமாக போடுங்கள் என்று கேட்டேன். அவர்களாக போட்டார்கள். அவ்வளவு தான்.
(திருப்பதியில் மச்சான் சதீஸ் மற்றும் அவரின் மகள்களுடன்)

அந்த விஷயத்தை விடுங்கள். இன்று காலை தான் சென்னையில வந்து இறங்கினேன். விகடனில் போட்டோ வந்திருந்ததால் சென்னையில் உள்ளவர்கள் அனைவருக்கும் நம்மை தெரிந்திருக்கும், கோயம்பேட்டில் இறங்கியதும் யாராவது ஒருவர் வந்து நீங்க தானே ஆனந்த விகடனில் வந்தவர் என்று கையைக் கொடுப்பார்கள், ஆட்டேகிராப் (சும்மா ஒரு பேராசை தான்) என்று நம்பினேன். ஆனால் பாருங்கள். நான் வந்து இறங்கியது விடியற்காலை 4 மணிக்கு, எனவே கூட்டமில்லை, அதனால் யாரும் நம்மை வரவேற்கவில்லை என்று மனதை தேத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். யாரும் என்னை அடையாளம் தெரியவில்லை என்று வருத்தமாகத்தான் இருக்கிறது. (அப்பாடா இன்னிக்கி ராத்திரி சரக்கடிக்க காரணம் கிடைத்து விட்டது.)

----------------------------------------------

கூடுதல் செய்தி என்னவென்றால் வடசென்னைப் பக்கம் வரும் சவுத் இந்தியன் போஸ்ட் என்ற பத்திரிக்கையிலும் என்னைப் பற்றியும் விகடனில் வந்துள்ளதைப் பற்றியும் வந்துள்ளது. இரண்டாவது பத்திரிக்கை செய்தி. சந்தோஷம், மகிழ்ச்சி.


அதுவும் என் நண்பன் முன்பே பார்த்து விட்டு போன் செய்தான், எடுத்து வைடா என்று சொல்லி விட்டு இன்று காலை அவனிடம் போன் செய்து பேப்பரைக் கொடுடா என்றால் அவன் வடையில் எண்ணெய் துடைத்த மாதிரி ஒரு பேப்பரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றான். வெளங்கிடும்.
-------------------------------

நாளை முதல் தினமும் வழக்கம் போல் பதிவெழுதி உங்களை படிக்க வைத்து கொல்வது என்று முடிவெடுத்து விட்டேன். நன்றி

சிவாவின் பதிவில் வந்து பின்னூட்டமிட்டு வாழ்த்திய நாய் நக்ஸ் நக்கீரன், விக்கியண்ணன், சிபி அண்ணன், மோகன் குமார் அண்ணன், வீடு சுரேஷ், பன்னிக்குட்டி ராமசாமி, வெளங்காதவன், ராஜ் மற்றும் போனில் வாழ்த்திய மோகன் குமார் அண்ணன், அஞ்சாசிங்கம் செல்வின், உணவு உலகம் சங்கரலிங்கம் அய்யா, பிலாசபி பிரபா (யோவ் பிரபா போன் பண்ணி வாழ்த்து சொன்னியா இல்ல கலாய்ச்சியா அன்னைக்கு போதையில் இருந்தால் ஒன்னும் வெளங்கலய்யா), மற்றும் இதனை படித்து விட்டு பின்னூட்டமிடப் போகும் அனைவருக்கும் , முக்கியமா பதிவெல்லாம் போட்டு கலக்கிய மெட்ராஸ் பவன் சிவாவுக்கு ஸ்பெஷல் நன்றி நன்றி நன்றி.

ஆரூர் மூனா செந்தில்

Sunday, March 4, 2012

சீக்கியர்களின் தனிநாடு கோரிக்கை - காலிஸ்தான் தீவிரவாதம் - இறுதிப் பகுதிதீவிரவாதிகளுடன் சீக்கியர் கட்சி தலைவர் லோங்கோவாலும் சேர்ந்து கொண்டார். "பஞ்சாப் மாநிலத்தில் விளையும் தானியங்களை ஜுன் 3ந்தேதிக்குப்பிறகு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பமாட்டோம்" என்று அறிவித்தார். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்ததால், பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்ப இந்திரா காந்தி முடிவு செய்தார். பொற்கோவிலுக்குள் "ஹர்மந்திர் சாகிப்" என்ற இடம் மிக முக்கியமானது. அங்குதான், சீக்கியர்களின் புனித புத்தகம் (கிரந்தம்) 200 ஆண்டுகளுக்கு மேலாக படிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்துக்கு சேதம் ஏற்படக்கூடாது என்றும், மொத்தத்தில் பொற்கோவிலுக்கு அதிக சேதம் இல்லாதபடி தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்றும் ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.

பொற்கோவிலுக்கு ராணுவம் அனுப்பப்படுவது, டெல்லியில் ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், பிந்தரன்வாலேயின் "ஒற்றர்படை" மிகத்திறமையாகச் செயல்பட்டு, அதைக் கண்டுபிடித்து விட்டது. "பொற்கோவிலுக்கு ராணுவம் வரப்போகிறதாம். வரட்டும், வரட்டும்! அவர்களை தூள் தூளாக்குகிறேன்" என்று கொக்கரித்தான் பிந்தரன்வாலே. 1984 ஜுன் 5ந்தேதி மாலை 4 மணி. பொற்கோவிலை ராணுவம் சுற்றி வளைத்துக்கொண்டது. இந்த ராணுவ டிவிஷனுக்கு தலைமை தாங்கியவர் மேஜர் ஜெனரல் குல்திப்சிங் பரார். இவர் ஒரு சீக்கியர். உள்ளே இருக்கும் தீவிரவாதிகள் அனைவரும் வெளியே வந்து சரண் அடையும்படி, ஒலிபெருக்கி மூலம் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. பொற்கோவிலில் வழிபடுவதற்காக வந்தவர்கள் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் 126 பேர் மட்டும் வெளியே வந்தனர்.

தீவிரவாதிகள் எவரும் வரவில்லை. சீக்கியர் கட்சி தலைவர் லோங்கோவாலும், அவருடைய ஆதரவாளர்களும் (தீவிரவாதி அல்லாதவர்கள்) பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்தனர். அவர்களை வெளியேற்ற ராணுவத்தின் கமாண்டோ படையினர், அன்றிரவு கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்களை நோக்கித் தீவிரவாதிகள் சுட்டதில், ஏறத்தாழ 40 கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். எனினும், லோங்கோவாலும், அவருடைய ஆதரவாளர்களும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர். ஜுன் 6ந்தேதி காலை "ஆப்பரேஷன் புளூ ஸ்டார்" என்று வர்ணிக்கப்படும் "பொற்கோவில் போர்" தொடங்கியது. கோவிலுக்குள் நுழைந்த ராணுவத்தினரை நோக்கி, தீவிரவாதிகள் துப்பாக்கியாலும், பீரங்கியாலும் சுட்டனர். ஏவு கணைகளையும் வீசினர். முதல் கட்டத்திலேயே நூற்றுக்கு மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பெரிய சுவர்போல அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, தொடர்ந்து இயந்திரத்துப்பாக்கிகளால் தீவிரவாதிகள் சுட்டனர். இதனால் டாங்கிகளுடனும், கவச வண்டிகளுடனும் ராணுவத்தினர் பொற்கோவிலுக்குள் நுழைந்து தாக்கினர். இருதரப்புக்கும் இடையே பயங்கரப்போர் நடந்தது. டாங்கிப் படையினரின் சரமாரி தாக்குதலால், தீவிரவாதிகள் செத்து விழுந்தனர். சில மணி நேரம் நடந்த இந்த போரில், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். உள்ளே சென்ற ராணுவத்தினர், பிந்தரன்வாலேயை தேடினர். அவன் மற்ற தீவிரவாதிகளுடன் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப் போரில் 493 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் மொத்தத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறின.

பொற்கோவிலின் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. முக்கிய இடமான ஹர்மந்திர் சாகிப், அதற்கு அடுத்த முக்கிய இடமான அகல் தகத் ஆகிய இடங்களும் சேதம் அடைந்தன. அங்கு 300 இடங்களில் குண்டுகள் துளைத்து சென்ற அடையாளம் தெரிந்தது. சீக்கிய குருமார்கள் கையினால் எழுதி வைத்திருந்த புனித நூல்கள் எரிந்துபோயின. பொற்கோவிலைப் பார்வையிட்டு, அமைதி திரும்ப ஆவன செய்யுமாறு ஜனாதிபதி ஜெயில் சிங்கை இந்திரா காந்தி கேட்டுக்கொண்டார். அதன் பேரில் 9ந்தேதியன்று, பொற்கோவிலுக்கு ஜனாதிபதி சென்று பார்வையிட்டார். அப்போது எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த ஒரு துப்பாக்கிக்குண்டு, ஜனாதிபதியை உரசிக் கொண்டு சென்று, அருகில் நின்று கொண்டிருந்த பாதுகாவலரின் தோளில் பாய்ந்தது.

பொற்கோவில் வளாகம் மிகப்பெரியது. பல கோபுரங்களைக் கொண்டது. ராணுவத்தினரின் தாக்குதலுக்குத் தப்பி, ஏதோ ஒரு கோபுரத்தில் ஒளிந்திருந்த தீவிரவாதி, ஜனாதிபதியை நோக்கி சுட்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. பொற்கோவில் சேதம் அடைந்த நிகழ்ச்சிக்கு வருந்துவதாகவும், பொற்கோவிலை மத்திய அரசு விரைவில் புதுப்பிக்கும் என்றும் ஜனாதிபதி ஜெயில்சிங் தெரிவித்தார்.

பொற்கோவில் போருக்குப்பிறகு, தன் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று இந்திரா காந்தி எண்ணினார். இதுபற்றி ராஜீவ் காந்தியிடமும், சோனியாவிடமும் தெரிவித்தார். ராஜீவ் காந்தியின் மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோர் ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தனர். அவர்களை இனி ஹாஸ்டலுக்கு அனுப்பவேண்டாம் என்று கூறி, வீட்டிலிருந்தே பள்ளிக்கூடத்துக்கு போய் வரச்சொன்னார். வீட்டிலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே போகவேண்டாம் என்று கூறினார். இந்திரா காந்தியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று ராணுவ மந்திரி விரும்பினார். "உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை, போலீசாரிடம் இருந்து ராணுவத்துக்கு மாற்ற வேண்டும்" என்று அவர் இந்திராவிடம் யோசனை தெரிவித்தார். அதற்கு இந்திரா சம்மதிக்கவில்லை.

"நான் பிரதமராக இருப்பது ஒரு ஜனநாயக அரசுக்கு. ராணுவ அரசாங்கத்துக்கு அல்ல" என்று கூறிவிட்டார். அக்டோபர் மாதத்தில் இந்திரா காந்தி திடீரென்று காஷ்மீர் செல்ல விரும்பினார். "இப்போது காஷ்மீரில் சூழ்நிலை சரியில்லை. பிறகு வரலாமே" என்று கவர்னர் ஜக்மோகன் தெரிவித்தும் அதைக் கேட்காமல், பேரக்குழந்தைகள் ராகுல், பிரியங்கா ஆகியோரை அழைத்துக்கொண்டு காஷ்மீர் சென்றார்.

மலர்கள் நிறைந்த பகுதியில் நடந்து சென்றார். கவர்னர் தடுத்தும் கேளாமல், பேரக்குழந்தைகளுடன் மார்க்கெட்டுக்குச் சென்றார். குழந்தைகளுக்குப் பழங்கள் வாங்கிக் கொடுத்தார். காஷ்மீரில் 36 மணி நேரம் மட்டுமே தங்கியிருந்து விட்டு, டெல்லி திரும்பினார். இந்திராவை அவர் சிநேகிதி புபுல் ஜெயக்கர் சந்தித்தார். "புபுல்! மரணம் என்னை நெருங்குகிறது!" என்று இந்திரா கூறினார்.

"இப்போது மரணம் பற்றி அடிக்கடி பேசுகிறாயே, ஏன்?" என்று கேட்டார், புபுல். "நான் மரணத்தைப்பற்றி பயப்பட வில்லை. ஆனால், நான் கொலை செய்யப்படுவேன் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. இதுபற்றி ராஜீவிடம் கூறியிருக்கிறேன். என் அஸ்தியை, இமயமலைச் சாரலில் தூவும்படி சொல்லியிருக்கிறேன்" என்று இந்திரா கூறினார். புபுல் ஜெயக்கரின் கண்கள் கலங்கின. இந்திராவைக் கட்டித் தழுவிக்கொண்டு, "விபரீதம் எதுவும் நடக்காது" என்று கூறினார்.

ஆனால் அனைவரும் பயந்த சம்பவம் நடந்தே விட்டது, ஆம் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது பற்றி தனியாக படிக்க இந்திரா காந்தியின் கடைசி நாள் படிக்கவும்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, March 2, 2012

அரவான் - சினிமா விமர்சனம்காவல் கோட்டம் நாவல் புத்தகத் கண்காட்சியில் வாங்கி வந்து 15 நாட்கள் வீட்டை வீட்டு வெளியே போகாமல் (வெட்டிப்பயலுக்கு வெளியில என்ன வேலைன்னு கேக்கப்பிடாது) என் மனைவி என்னை புத்தகமே கதியாக கிடக்கிறாயே கடைக்கு கூட போக மாட்டேங்கிறீயே என்று கழுவி கழுவி ஊத்தினாலும் துடைச்சிப் போட்டு படிப்பதையே குறிக்கோளாக கொண்டு (மெடலை குத்துங்கப்பா) படித்து முடித்தேன். எந்த இடத்திலும் நாம் கவனம் சிதறினாலும் நாவலின் முக்கிய சம்பவங்கள் புரியாமல் போய்விடும். அதுபோல் நாம் படிக்கும் நாவல் சில இடங்களில் போரடித்தாலும் பாதியுடன் நிறுத்தி விடுவோம். ஆனால் எந்த இடத்திலும் போரடிக்காத நாவல் அது. இந்தப்படத்தின் டிரெய்லரைப் பார்த்ததும் இது நாவலில் எந்தப் பகுதி என்பதும் தெரிந்து விட்டது. எனவே கதையைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அது சிதைக்கப்படாமல் படமாக்கப்பட வேண்டும் என்று மட்டுமே யோசித்திருந்தேன்.

அது போல் வசந்தபாலன் படங்களுக்கும் எனக்கும் பலப்பல விஷயங்களில் ஒத்துப் போகும். வெயில் படம் ஒரு தோத்தவனின் கதை. யாரும் கவனிக்காத அந்தப் படம் வெளி வந்த காலம் நான் தோத்தவனாக இருந்தேன். கமாடிட்டி டிரேடிங் நிறுவனம் துவங்கி சொந்த முதலீடும் நண்பர்களின் முதலீடுமாக ரூ 75 லட்சங்களை இழந்திருந்தேன். அது வரை ஏழு வருடம் நான் வேறொரு துறையில் சம்பாதித்த பணம் அது. கிட்டத்தட்ட பிளாட், கார் உட்பட எல்லாம் இழந்திருந்தேன். திரையில் பசுபதியை நானாகவே பார்த்தேன்.

அந்த கட்டங்களிலிருந்து மீள எனக்கு 2 வருடங்களானது.

அடுத்ததாக அங்காடிதெரு படம். அது வரை சரவணா ஸ்டோர்ஸில் வேலை பார்க்கும் ஊழியர்களை மனிதர்களாக அனைவரையும் நினைக்க வைத்தப்படம். அதன் பிறகு நான் எப்பொழுது சரவணா ஸ்டோர்ஸ் போனாலும் இளம்வயது ஊழியர்களை சகோதரத்துவத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். இன்று வரை நான் பார்த்த மிகச்சில சிறந்த படங்களில் அங்காடித்தெருவும் ஒன்று. அந்த காதலும் என் வாழ்வில் நடந்து போலவே தான் இருந்தது. கண்டிப்பாக அரவான் படம் நாவலில் வந்த கதைப்படி வரும் என்று நினைத்திருந்தேன். சில விஷயங்களைத் தவிர கதைப்படியே படம் வந்துள்ளது.

வேம்பூர் கள்ளர் வம்சத்தை சேர்ந்த பசுபதி களவாடுவதில் வல்லவனாக இருக்கிறான். அவர்களது ஊர் பெயரை பயன்படுத்தி ஒத்தையாளாக ஒருவன் திருடுவதை அறிகிறான். அவனை சில நாட்களில் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனது திறமையறிந்து அவனை தனது குழுவில் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் அவனது வாழ்வில் மர்மம் இருப்பதை அறிகிறான். ஆனால் அதனை அவனிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஜல்லிக்கட்டில் பசுபதியை காப்பாற்ற தான் யார் என்ற உண்மையை சொல்கிறான். அவன் யார், அவனது பிளாஷ்பேக் என்ன என்பதே கதை. கதையை இத்துடன் முடித்துக் கொள்வோம். முழுக் கதையை சொல்ல வலையுலகில் பலர் இருக்கின்றனர்.

படம் எப்படி என்பதை பற்றிப் பார்ப்போம். ஒரு விஷயத்தை டீடெய்லிங் என்று சொல்லுவார்கள். அதாவது படத்தின் துவக்கத்தில் கன்னம் வைத்து திருடும் போது கல்லை எடுத்ததும் ஒரு கம்பில் துணியை தலைப்பாகைப் போல் சுற்றி உள்ளே அனுப்புவது. இது நாவல் மற்றொரு பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அந்த காலகட்டங்களில் கன்னம் வைத்து திருடும் போது கல்லை எடுத்ததும் ஒருவன் உள் நுழைந்து கொல்லைக்கதவை திறந்து விட அனைவரும் உள்ளே வந்து திருடி செல்வர். ஒரு முறை அது போல் கன்னம் வைக்க கல்லை நகர்த்த முயற்சிக்கும் போது உள்ளே சத்தம் கேட்டு வீட்டில் இருப்போர் விழித்து விடுகின்றனர். சரியாக முதல் நபர் தலையை உள்ளே நுழைக்கும் போது அரிவாளால் தலையை சீவி விடுகின்றனர். திருட வந்த மற்ற நபர்கள் முண்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒடி விடுகின்றனர். அன்று முதல் கன்னம் வைத்து திருடுபவர்கள் செத்தவனை வேண்டிக் கொண்டு முதலில் கம்பில் தலை போல் செய்து முதலில் விடுவர், உள்ளே யாராவது விழித்துக் கொண்டிருந்தால் கம்பு மீதே தாக்குவர். அப்படி யாரும தாக்கவில்லை என்றால் வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருக்கின்றனர் என அர்த்தம். இது போல் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தை கூர்ந்து கவனித்தால் மட்டுமே அனைத்தும் புரிய வரும். ஏன் அந்தப்புறத்தில் அரவாணிகளை மட்டும் தான் பணியாளாக வைப்பர் என்பதை கூட பார்த்து பார்த்து செய்திருக்கின்றனர்.

நானே திருவாரூர் நகர காவல் நிலையத்தில் குண்டாஸ் ஆக்ட்டின் படி கைது செய்யப்படும் நபருக்குரிய ஆவணங்களை எனது கம்ப்யூட்டர் சென்டரில் நிறைய டைப் செய்து கொடுத்திருக்கிறேன். அதில் கன்னம் வைத்து திருடுதல் என்ற வார்த்தை வரும். ஆளில்லா வீட்டில் திருடுதல் போல என்று தான் நினைத்து வந்தேன். இந்த படம் பார்த்த பிறகு தான் அது வீட்டில் சுவரில் ஓட்டைப் போட்டு திருடுதலே அது என்பது தெரிய வந்தது.ஆதி அந்த பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். சரியான அளவில் பெறப்பட்ட நடிப்பு. அதுபோல் பசுபதி, என்ன சொல்ல அவரைப்பற்றி. அனைவருக்கும் தெரியும் அவர் நல்ல நடிகர் என்று. தன்ஷிகா, அர்ச்சனா கவி, கரிகாலன், ஸவேதா மேனன், ஹேமாமாலினி, டி.கே.கலா உட்பட அனைவரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.

பாடல் அனைத்தும் ஏற்கனவே கேட்டு கேட்டு பழகியதால் பார்க்கவும் அருமையாக இருக்கிறது.

கடைசியில் கதைப்படி வரும் தலையை கொய்தும் காட்சியை இயக்குனர் மாற்றியிருப்பார், யாராவது எதுக்குடா உயிர்ப்பலி போங்கடா போய் புள்ளக்குட்டிய படிக்க வைங்கடா என்று வசனம் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் படத்தின் முடிவு கதைப்படியே எடுக்கப்படுள்ளது.

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் இது நாள் வரை நமக்கு எழுத்து ஆவணமாக மட்டுமே இருந்து வந்துள்ளது. தைரியமாக சொல்லலாம் இந்தப்படம் ஒரு காணொளி ஆவணம் என்று. சற்றும் மிகைப்படுத்தப்படாமல் உடைகள், உரையாடல், காட்சிப்படுத்துதல் அனைத்தும் 18ம் நூற்றாண்டை நினைவுப்படுத்துகிறது. எனக்கு ஒரு பழக்கம் உண்டு ஒரு நாவலைப் படித்தால் அதனை காட்சியாக கற்பனை செய்வேன். இந்த நாவலைப் பற்றிய என் கற்பனைகள் படமாக வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியையே தந்துள்ளது.

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.

ஆரூர் மூனா செந்தில்


Thursday, March 1, 2012

சீக்கியர்களின் தனிநாடு கோரிக்கை - காலிஸ்தான் தீவிரவாதம் - பகுதி 11981ம் ஆண்டில், சீக்கிய தீவிரவாதிகள் "தனி நாடு" வேண்டும் என்று கோரி, பிந்தரன்வாலே தலைமையில் வன்முறையில் ஈடுபட்டனர். பிந்தரன்வாலே இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு சஞ்சய் காந்தியும் காரணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர் கட்சி ("அகாலி தளம்") அசுர வேகத்தில் வளர்ந்து வந்தது. 1977 தேர்தலில் அந்த மாநிலத்தில் காங்கிரசை அகாலி தளம் தோற்கடித்தது. பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி ஜெயில்சிங் (பிற்காலத்தில் ஜனாதிபதி ஆனவர்) சஞ்சய் காந்தியிடம் ஒரு யோசனையைத் தெரிவித்தார்.

"பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வளரவேண்டுமானால், அகாலி தளம் கட்சியை உடைக்க வேண்டும். அகாலி தளத்தில் உள்ள இளைஞர்களைப் பிடித்து ஊக்கம் கொடுத்து, அவர்களைக் கொண்டு அகாலி தளத்தைப் பிளக்க வேண்டும்" என்பதே ஜெயில்சிங் தெரிவித்த யோசனை. அப்போது சஞ்சய் காந்தியால் அடையாளம் காணப்பட்ட சீக்கிய இளைஞன்தான் பிந்தரன்வாலே. 1980 தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் 3 தொகுதிகளில் அவன் காங்கிரசை ஆதரித்துப் பிரசாரம் செய்தான். இந்திரா காந்தியுடன் ஒரே மேடையில் பேசினான். தீவிரவாதிகளின் தலைவன் பிந்தரன்வாலேயின் புகழ் பரவியது. சீக்கியர்களின் "ஹீரோ" ஆனான். அவன் போக்கும் மாறியது.

சீக்கியர்களுக்கு தனி சுதந்திர நாடு ("காலிஸ்தான்") வேண்டும் என்று குரல் எழுப்பினான். தீவிரவாதிகளைத் திரட்டி வன்முறையில் ஈடுபட்டான். பிந்தரன்வாலேயின் போக்கைக் கண்டித்து எழுதி வந்த லாலா ஜெகத் நாராயணன் என்ற பஞ்சாப் பத்திரிகை ஆசிரியர், 1981 செப்டம்பர் 9ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் இருந்தவன் பிந்தரன்வாலே என்று தெரிந்து, அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிந்தரன்வாலேக்கு ஆதரவாக சீக்கியர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அதனால் அவன் விடுதலை செய்யப்பட்டான். அவனுக்கு சீக்கியர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இதன்பின் பிந்தரன்வாலேயின் அட்டூழியம் அதிகமாகியது. இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பசுக்களின் தலைகளை வெட்டி இந்து கோவில்களுக்குள் தீவிரவாதிகள் வீசினர். பத்திரிகையாளர் லாலா ஜெகத்நாராயணனின் மகனையும் தீவிரவாதிகள் கொலை செய்தனர்.

தனி சீக்கிய நாடு வேண்டும் என்பதற்காக, ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளைக் கொண்ட படையை திரட்டினான், பிந்தரன்வாலே. அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இருந்தன. அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில், புனித இடமாகப் போற்றப்படுவதாகும். அதை பிந்தரன்வாலே கைப்பற்றிக்கொண்டான். உள்ளே ஆயுதங்கள் குவிக்கப்பட்டன.

சீக்கியர் பொற்கோவில், தீவிரவாதிகளின் "கோட்டை"யாக மாறியது. பொதுமக்களை கொன்று குவித்துவிட்டு, அங்கு ஓடி ஒளிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டார்கள் தீவிரவாதிகள். 1984 ஜனவரியில் பாராளுமன்ற கூட்டம் நடந்தபோது, "சீக்கிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்கிறது" என்று இந்திரா காந்தி குற்றம் சாட்டினார். அப்போது, உள்துறை மந்திரியாக இருந்த பி.சி.சேத்தி பேசுகையில், "சீக்கியர் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம். சீக்கியர்களின் புனித இடமான பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள். ஆயினும், பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழையாது" என்று கூறினார்.

சஞ்சய் காந்தியைப்போல ராஜீவ் காந்தி அரசியல் வியூகங்கள் வகுப்பதில் வல்லவர் அல்ல என்று தொடக்கத்தில் அனைவரும் கருதினர். ஆனால் அரசியலில் குதித்த பிறகு, ராஜீவ் காந்தி மெல்ல மெல்ல அரசியல் நுட்பங்களில் நிபுணராக மாறி வந்தார். சீக்கிய தீவிரவாதிகளின் வன்முறை அவருக்குக் கவலை அளித்தது. அவர்களை எப்படி ஒடுக்கலாம் என்று அருண் நேருவுடன் ஆலோசனை நடத்தினார்.

"பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பினால்தான், "தீவிரவாதிகளை ஒடுக்க முடியும்" என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். அதற்கான திட்டத்தை ரகசியமாகத் தயாரித்தார்கள். இப்படி ஒரு திட்டம் தயாராவது உள்துறை மந்திரி பி.சி. சேத்திக்கு தெரியாது; அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங்குக்குக்கூடத் தெரியாது. இந்திரா காந்திக்கு இதுபற்றித் தெரியும் என்றாலும், "பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. சீக்கியர் பிரச்சினைக்கு வேறு வழிகளில் சமரசத்தீர்வு காண முடியும்" என்று கருதினார்.

பொற்கோவில், சீக்கியர்களின் புனித இடம். அங்கு ராணுவத்தை அனுப்புவதால், விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதற்கிடையே இந்திரா காந்தியை அவருடைய நீண்ட கால தோழி புபுல் ஜெயக்கர் சந்தித்தார். அப்போது இந்திரா மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். "புபுல்! நான் நிம்மதியாகத் தூங்கி நீண்ட காலம் ஆகிறது. அடிக்கடி கெட்ட கனவுகள் வருகின்றன" என்று இந்திரா கூறினார். "கவலைப்படாதே! எல்லாம் சரியாகிவிடும்!" என்று புபுல் ஆறுதல் கூறினார். தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. 1984 பிப்ரவரியில் இருந்து 4 மாத காலத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 400ஐ தாண்டியது.

ஆரூர் மூனா செந்தில்

Ref : Kalisthaan - Published in 2001, Khalistan: the only solution, காலச்சுவடு - மாலை மலர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...