சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, February 28, 2013

நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்

சத்தியமா இது என் கட்டுரை கிடையாது. பேஸ்புக்கில் படித்தேன். என் நண்பர்கள் இதைப் படித்து தங்கள் சொந்தங்களை நாமக்கல் பள்ளிக்கு அனுப்பவதை நிறுத்தினால் நான் மகிழ்வேன். அந்த காரணத்திற்காக மட்டுமே பகிர்கிறேன். 

மிக்க நன்றி : டைம் லைன் போட்டோஸ் எழுதியவர் பெயர் இல்லை. யாரா இருந்தாலும் நன்றி நண்பா.

பள்ளிப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் தினசரி செய்தித்தாள்களைக் கவனிக்கும் எவருமே ‘நாமக்கல் பள்ளிகளின்’ விளம்பரங்களை அடிக்கடி காணலாம். நாமக்கல் நகரப் பள்ளிகளின் சார்பாக வெளியாகும் அவ்விளம்பரங்களில் அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வுகளில் அவர்களிடம் படித்த மாணவர்கள் எத்தனை பேர் சாதனை படைத்துள்ளார்கள் என்கிற விவரங்கள், புகைப்படங்களோடு வெளிவந்திருக்கும். கூடவே அந்தப் பள்ளிகளின் இமாலய வசதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும்

அந்த விளம்பரங்களின் சாராம்சம், “எங்களிடம் படிக்கப் போகும் உங்கள் பிள்ளைகளுக்கு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத்தருவது லட்சியம் – இல்லா விட்டால் நல்ல கல்லூரியில் இடம் கிடைப்பதாவது நிச்சயம்” என்பது தான். இந்த லட்சியத்தை எட்டுவதற்கான விலை சில லட்சங்களில் இருக்கும் – அது அந்தந்த பள்ளியின் முந்தைய சாதனைகளையும், பாரம்பரியத்தையும் பொறுத்து கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். இது போக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாநில அளவில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கென தனிச் சலுகைகளும் உண்டு.

நாமக்கல் பள்ளிகள் நடுத்தர வர்க்கப் பெற்றோரின் கனவு. அவர்தம் வாழ்க்கை லட்சியங்களை எட்டுவதற்கான உத்திரவாதமான ஏணி. பல பெற்றோர்கள் இந்த விளம்பரங்களால் கவரப்பட்டு, இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். இது போன்ற பள்ளிகள் மாணவர்களைத் தயாரிக்கும் விதம் தனிச்சிறப்பானது.

இம்மாணவர்கள் உள்ளூரிலேயே இருந்தாலும் பள்ளி விடுதிகளில்தான் தங்க வேண்டும். இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை அதிகாலையில் துவங்கி இரவு வரையில் நீளும். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மாதிரித் தேர்வுகள் இருக்கும். வகுப்பில் உடன்படிக்கும் மாணவர்களோடு பேசத் தடை; ஆசிரியர்களோடு மதிப்பெண் பெறுவதைத் தாண்டி பாட சம்பந்தமான வேறு சந்தேகங்களைக் கூட கேட்கத் தடை; விளையாடத் தடை, சிரிக்கத் தடை, அழத் தடை, டி.வி பார்க்கத் தடை; மாணவர்களைப் பெற்றோர்கள் சுதந்திரமாக வந்து சந்திக்கத் தடை, மதிப்பெண்களைத் தாண்டி வேறெதையும் சிந்திக்கவும் கூட தடை. சுருக்கமாகச் சொன்னால் நாமக்கல் பள்ளிகள் என்பது மதிப்பெண் இயந்திரங்களைத் தயாரிக்கும் கொத்தடிமைக் கூடங்கள்.

இங்கே நடத்தப்படும் மாதிரித் தேர்வின் வினாத்தாள்களைத் தயாரிப்பதும், விடைத்தாள்களைத் திருத்துவதும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். பெரும்பாலும் அந்தந்த வட்டாரங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அரசாங்க சம்பளத்தையும் வாங்கி கொண்டு இது போன்ற பள்ளிகளிலும் பணிபுரிகிறார்கள். ஒரு சில தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மறைமுகமான பங்குதாரர்களாகவும் இருக்கிறார்கள். இது போன்ற ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகளும் நடத்தப்படுகின்றது.

நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் – அதிக மதிப்பெண்கள். ஓரிரு ஆண்டுகள் நீடிக்கும் இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் அதன் பின் ஒளிமயமான ஒரு எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.

இந்தக் கொத்தடிமை வாழ்வின் விதிகள் திணிக்கப்படும் மாணவர்களில் பெரும்பாலானோர் கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும், மாணவர்களின் விடலைப் பருவ வாழ்க்கை கெட்டுப் போகிறது என்றும், இவர்களெல்லாம் உலகமே அறியாத கிணற்றுத் தவளைகளாகவும், ப்ராய்லர் கோழிகளைப் போன்றும் உருவாகிறார்கள் என்றும் சில முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கை செய்கின்றன.

ஆனால் இந்த எச்சரிக்கைகளையும், அதன் விளைவுகளையும் எல்லாம் பெற்றோர்கள் முழுமையாக அறியாதவர்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கு இது போன்ற சின்னச் சின்ன தியாகங்களைப் பிள்ளைகள் சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். மேலும், இப்போது சில லட்சங்களைச் செலவு செய்து விட்டால், பின்னால் மருத்துவமோ பொறியியலோ சேர்க்கும் போது ‘மெரிட்டில்’ சேர்த்து விட முடியும்; எப்படியாவது 90 சதவீதத்திற்கு மேல் தம் பிள்ளை மதிப்பெண்களை வாங்கிவிட்டால் மருத்துவம், பொறியியல் தவிர்த்த வேறு படிப்புகளில் சேர்க்கும் போது செலவு குறைவாக இருக்கும் என்கிறார்கள்.

கடும் உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகும் மாணவர்கள் சிலர், அதன் பின் எதற்கும் பயன்படாத தக்கைகளாக சமூகத்தினுள் துப்பப்படுகிறார்கள். சிலர் தற்கொலை முடிவுகளைக் கூட நாடுகிறார்கள். இந்தப் பள்ளிகளின் கொடுமை தாளாத சில மாணவர்கள் லேசாகச் சுணங்கினாலும், அவனது பெற்றோரை வரவழைத்து ‘இது தேறாத கேசு’ என்கிற பாணியில் பள்ளிகள் அச்சுறுத்துகின்றன. லட்சங்களை அள்ளிக் கொடுத்து, இந்தக் கல்வி வியாபாரிகளின் கொழுப்பு கூட காரணமாய் இருக்கும் பெற்றோர்களோ, இது போன்ற பெற்றோர் – ஆசிரியர்கள் சந்திப்புகளில் பம்மிப் பதுங்கி, பிச்சைக்காரர்கள் போல் சுயமரியாதையற்று நிற்கிறார்கள் என்று இப்பள்ளிகளின் நடைமுறைகளை நன்கு அறிந்த நண்பர் ஒருவர் கூறினார்.

நாமக்கல் பள்ளிகள் என்று இங்கே நாம் குறிப்பிட்டாலும், இதே போல் மதிப்பெண்களைக் குறிவைத்து மாணவர்களைத் தயாரிக்கும் மதிப்பெண் தொழிற்சாலைகள் தற்போது தமிழகமெங்கும் பரவி வருகின்றன. விருத்தாச்சலத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன் தட்சிணாமூர்த்தியின் மரணமே அதற்கு சமீபத்திய உதாரணம்.

எனினும் நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்தப் பள்ளிகள் உத்திரவாதமளிப்பது போல் அதிக மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்ட இரண்டாண்டுகளில் இம்மாணவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர்களை வேறொரு வகையில் உளவியல் ரீதியில் தயார் செய்கின்றது. அடிமைத்தனம், பந்தயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய வெறி, காரியவாதம், சமூக உறவுகளின்மை என்று பலவற்றை அந்த மாணவர்கள் பெறுவதோடு, வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழவும் வேண்டியிருக்கிறது.

இலக்கைத் துரத்தும் இந்த ஓட்டம் பள்ளியோடு மட்டும் நின்று விடுவதில்லை. கல்லூரியில் அது இன்னும் மேம்படுத்தப்பட்டு மெருகூட்டப்படுகிறது. கேம்பஸ் தேர்வில் வெல்வது அங்கே குறிக்கோள். அதுவும் புகழ்பெற்ற பன்னாட்டுக் கம்பெனியின் தேர்வு என்றால் இன்னும் சிறப்புக் கவனம். கல்லூரியில் கேம்பஸ் தேர்வுக்கு மாணவரை அனுப்பும் அதிகாரம் கொண்ட பேராசிரியர்களிடம் (Placement officers) ‘வம்பு’ வைத்துக்கொள்ளக் கூடாது; கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துப் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. மற்றபடி உரிமையைக் கேட்பதைப் பற்றியோ, அதற்காகப் போராடுவதைப் பற்றியோ கற்பனையாகக் கூட சிந்திக்க முடியாது – கூடாது.

இதையும் தாண்டி, இண்டர்னல் மதிப்பெண்கள், ரிக்கார்டு மதிப்பெண்கள், ப்ராஜக்ட் மதிப்பெண்கள் என்று ஒரு மாணவனை அச்சுறுத்தி, அடக்கி வைக்க வேறு பல்வேறு வழிமுறைகளும் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது. நாமக்கல் பள்ளிகளும் சரி, முன்னாள் சாராய ரவுடிகள் நடத்தும் கல்லூரிகளும் சரி, எல்லாமும் எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதில்லை. மாணவர்களிடம் வசூல் அதிகரிப்பதற்கேற்பவே அந்த வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரப்படுகின்றன.

ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவனை இந்த மனப்பான்மைக்கு உளவியல் ரீதியில் தயாரிப்பதில் கல்வி நிறுவனங்கள் பிரதான பாத்திரம் வகிக்கின்றன. இதில் நாமக்கல் பள்ளிகள் ஒரு எடுப்பான உதாரணம் தான். மற்ற இடங்களில் வழிமுறைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நோக்கம் இது தான். பள்ளிகள் பயிற்றுவிக்கும் முறைகளால் உளவியல் ரீதியிலான தாக்குதல் ஒருபுறமென்றால் இதன் பின்னே செய்யப்படும் செலவுகளின் பொருளாதாரத் தாக்குதல் இன்னொரு புறம். பள்ளியில் சேர சில லட்சங்கள் மொய் வைக்கப்படுகிறது என்றால், மருத்துவம் போன்ற உயர் கல்விகளுக்காக பல லட்சங்களில் ஆரம்பித்து சில கோடிகள் வரை செலவு செய்யப்படுகிறது.

தற்போது மதிப்பெண் தொழிற்சாலைகள் வேகமாகப் பெருகி வருவதாலும், பல பெற்றோர்கள் தனிச்சிறப்பான கவனமெடுத்தும் செலவு செய்தும் மாணவர்களைத் தயாரிப்பதாலும் மருத்துவம் போன்ற உயர் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச (Cut&off) மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களின் சதவீதம் கூடியிருக்கின்றது. 96 சதவீதம் எடுக்கும் மாணவன் கூட தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் (management quota) தான் சேர முடிகின்றது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கும் வங்கிகள் அளிக்கும் கல்விக்கடன்கள் தான் ஒரே வாய்ப்பு.

படித்து முடித்து விட்டு, சமூகத்தினுள் காலடியெடுத்து வைக்கும் போதே தலைக்கு மேல் லட்சக்கணக்கில் கடனை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தத்தோடு தான் நுழைகிறார்கள். ஒரு பக்கம் போட்ட காசை சீக்கிரத்தில் எடுத்து விட வேண்டும் என்கிற நெருக்கடி – இன்னொரு பக்கம் பள்ளி, கல்லூரிகளிலிருந்து கற்றுக்கொண்டு வந்துள்ள அடிமைப் புத்தி. இவையிரண்டும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் வளர்த்துக் கொண்டு,முடிவில் காரியவாதமாகவும், தனிநபர்வாதமாகவும் பரிணமிக்கிறது.

மிகச் சரியாக இது போன்ற ‘தயாரிப்புகளைத்’ தான் பன்னாட்டுக் கம்பெனிகள் விரும்புகின்றன. உலகமயமாக்கலின் விளைவாய் சந்தையும், உற்பத்தியும் கூட உலகமயமாகியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவிலோ சென்னையிலோ உள்ள பன்னாட்டுக் கம்பெனியின் கிளையில் இருந்து ஒரு பொருளின் அல்லது ஐ.டி சேவையின் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர், அதன் முழுமையான தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டியது அவசியமற்றதாகின்றது.

ஒரு பொருளின் உற்பத்தின் பல்வேறு கட்டங்கள் சின்னச் சின்ன கட்டங்களாகப் பிரித்து (smaller processes) வெவ்வேறு குழுக்களால் செய்யப்படுகிறது. அதன் உச்சபட்சமான தொழில்நுட்ப இரகசியம் அமெரிக்காவிலோ, வேறு ஐரோப்பிய நாட்டிலோ இருக்கும் தலைமையகத்தில் உள்ளவர்களுக்குத் தான் தெரிந்திருக்கும்.

இந்தச் சூழலில் இங்கே பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், எந்தக் கேள்வி முறையுமின்றி சொன்னதைச் செய்தாலே போதுமானது. சொந்தமான மூளையோ, சிந்திக்க வேண்டிய அவசியமோ தேவையில்லை. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு (Target)நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதை வாராந்திரமாகவோ, தினசரியோ பரிசீலித்து ஊழியர்களை விரட்ட சில கங்காணிகள் இருப்பார்கள். இந்த உலகத்தின் விதிகள் மிகவும் எளிமையானது. சொன்னதைச் செய்ய வேண்டும் – அதில் இலக்கை எட்ட வேண்டும். குறுக்கே கேள்விகள் கேட்பதோ, உரிமைகள் பற்றிப் பேசுவதோ, அதற்காகப் போராடுவதோ கூடவே கூடாது. சுருங்கச் சொன்னால் பஞ்சு மூளைகள் கொண்ட தக்கை மனிதர்களே உலகமயமான உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் போதுமானவர்கள்.

தங்கள் நிலத்தை விற்று, நகை நட்டுகளை அடகு வைத்து, போதாததற்கு வங்கிகளிடம் கையேந்தி கல்விக் கடன் பெற்று, லட்சக்கணக்கில் செலவு செய்து, ’தங்கள் பிள்ளைகளுக்கு இருப்பதிலேயே ஆகச் ‘சிறந்ததைக்’ கொடுக்க வேண்டும்; தனது பிள்ளைகளுக்கு நல்ல அறிவாற்றல் கொண்ட மூளை வேண்டும்’ என்றெல்லாம் கனவு காணும் பெற்றோர்கள், அந்த சிறந்த உலகத்தில் அறிவாற்றலுக்கும், மூளைக்கும் வேலையே இல்லையென்பதை அறிந்திருப்பதில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளால் பொறுக்கியெடுக்கப்படும் தேர்ந்த மதிப்பெண் இயந்திரங்களின் வேலைக்கான உத்திரவாதமென்பது அவர்களது சொந்த உழைப்பினால் விளைந்த பலன் என்று அவர்களே நம்பிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.


நாமக்கல் பள்ளிகளைப் போன்றே நடத்தப்படும் வேறு பல மதிப்பெண் தொழிற்சாலையிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு சமூகத்தினுள் அறிமுகமாகும் ‘தயாரிப்புகள்’ பன்னாட்டு மூலதனத்துக்கு மட்டுமல்ல; அவர்களின் சேவகர்களான இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் மிக உவப்பான குடி மக்கள். இந்த அடிமை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இன்று பழைய சாராய முதலைகளும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுமே பெரும்பாலும் நடத்தி வருகிறார்கள். நல்ல லாபம் கொழிக்கும் இந்தத் தொழிலில் நுழைவதற்குத் தயாராக பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களும் வரிசைகட்டி நிற்கின்றன.

இப்போது முடிவு செய்ய வேண்டியது நாம் தான். நமது பிள்ளைகள் அறிவு பெற கல்வியளிக்கிறோமா அல்லது அடிமையாவதற்காகக் கல்வியளிக்கிறோமா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த பட்சமாகவாவது ஒரு சமூக அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்கு பல்வேறு வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களோடு பழகவும், அவர்களது வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்வது மதிப்பெண்களைப் பெறுவதற்காக மட்டுமா அல்லது மனித ஆளுமையை உருவாக்கிக் கொள்வதற்கா? அதைச் சில முதலாளிகள் தீர்மானிப்பதா ? என்பதைப் பெற்றோர்கள் முடிவு செய்யட்டும்.

Wednesday, February 27, 2013

பஞ்சேந்திரியா - திருச்சி சிவாவின் பேச்சும், என் எழுத்து வெறியும்

ரயில்வே பட்ஜெட்டில் நிறை குறைகள் பல இருந்தாலும் எனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு விமர்சிக்கிறேன். புதியதாக பாலக்காடு உட்பட 10 இடங்களில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை துவங்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். இருக்கிற இடங்களை பராமரித்து வந்தாலே புதிய பெட்டிகள் தயார் செய்யலாம். தொழிற்சாலை துவங்கும் செலவாவது மிச்சமாகும்.

அடுத்த பிரச்சனை ஆள் பற்றாக்குறை. தெற்கு ரயில்வேக்களில் உள்ள தொழிற்சாலைகளில் கலாசி என்று அழைக்கப்படும் உதவியாளர்களே இல்லை. ஏற்கனவே இருந்தவர்கள் பதவி உயர்வு கிடைத்து டெக்னிசியனாக போய் விட்டார்கள். இந்த மாதத்துடன் ஒய்வு பெறுபவர்கள் கேரேஜில் மட்டும் 40 பேர். வரும் ஜூன் மாதம் ஒய்வு பெற இருப்பவர்கள் 250 பேர். கேரேஜின் 150 வருட வரலாற்றில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஒய்வு பெற்றதே கிடையாது.

ஆள்பற்றாக்குறையினால் மொத்த தொழிற்சாலையிலும் உலோகக் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. அப்புறப்படுத்த ஆட்கள் இல்லை. இவற்றினை சரி செய்து இயந்திரங்களை வாங்கிப் போட்டாலே வருடம் 1000க்கும் மேற்பட்ட ரயில்பெட்டிகளை தயார் செய்யலாம்.

ரயில் டிக்கெட்டுகளை விலை ஏற்றுவதை விட இந்தியாவில் உள்ள மாநகரங்களில் பயன்பாட்டில் இல்லாத ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டாலே பற்றாக்குறையினை சமாளிக்கலாம்.

ஒரு காலத்தில் 3000 வீடுகள் இருந்த அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் இன்று 300 வீடுகளே உள்ளன. மற்றவை எல்லாம் இடிந்து விட்டன. இருக்கும் 300 வீடுகளுக்கு சென்னையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் போட்டி போடுகின்றனர். ஒருவர் ஒய்வு பெற்று வீட்டை காலி செய்தால் அந்த ஒரு வீட்டிற்கு 50 பேர் மோதுகின்றனர்.

சீனியாரிட்டி தாண்டி ஏகப்பட்ட சிபாரிசு மூலம் தான் வீடுகள் வழங்கப்படுகின்றன. என்னால் இத்தனை பெரிய ஆட்களுடன் மோத முடியாது என்று போட்டியில் இருந்து வெளியே வந்து விட்டேன். பட்ஜெட்டில் குடியிருப்புகள் கட்டுவதைப் பற்றி எந்த பேச்சும் இல்லை. இடிந்தவற்றை அப்புறப்படுத்தி அங்கேயே கட்டி தரலாம். புதியதாக இடத்தை கையகப்படுத்த வேண்டாம்.

ஆக மொத்தத்தில் பொதுமக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் ஏமாற்றமே.

------------------------------------------

நாய் நக்ஸ் சிவில் இஞ்சினியரா இருந்திருப்பாரோ


----------------------------------------------

கொஞ்ச நாளாக என்னுள் தூங்கிக் கொண்டு இருந்த எழுத்து என்னும் சிங்கம் முழித்துக் கொண்டு பாடாய் படுத்துகிறது. எதை கண்டாலும் கருத்து சொல்ல வேண்டும் என கைகள் பரபரக்கினறன. தினமும் ஒரு பதிவு போட்டாகணும் என்ற வெறி என்னை சொறிகிறது.

தூக்கத்தில் சுஜாதா விருது வாங்குவது போல் கனவு எல்லாம் வருகிறது. தூக்கத்திலும் கைகளை தட்டச்சு செய்வது போல் அசைத்துக் கொண்டே இருக்கிறேனாம். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது பார்க்கும் காட்சிகள் எல்லாம் கவிதை எழுதவும் கட்டுரை எழுதவும் தூண்டுகின்றன.

சிறுகதை எழுது என்று மனது கட்டளையிடுகிறது. கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து இரண்டு வரியில் கதையை துவக்கினால் மைன்ட் ப்ளாங்க் ஆகி ஸ்கிரீன் எல்லாம் கருப்பாக தெரிகிறது. இதனை மட்டும் சரி செய்து விட்டால் சிறுகதை சிங்கம் புதுமைப் பித்தனை நெருங்கி விடுவேன் என்று நினைக்கிறேன்.

இதை கண்டு பயந்து போன நம்ம லக்கி "வேண்டாம் நான் படித்து படித்து டயர்டாகி விட்டேன். ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டு பதிவெழுதவும்" என்றெல்லாம் ஆலோசனை சொல்லிப் பார்த்தார். எனக்கு கூட அப்படியே செய்யலாம் என்று தோன்றியது.

ஆனால் பாருங்கள் குடிகாரர்களுக்கு எல்லாம் சாயந்திரம் ஆனதும் ஒயின்ஷாப்புக்கு செல்வதற்காக கை நடுங்குமே அது போல் எனக்கும் இப்போது நடுங்கியதால் தான் இந்த பதிவே எழுதுகிறேன். சாரி லக்கி. நீங்க படிச்சி தான் ஆகணும் வேற வழியில்லை.

அது மட்டுமில்லாமல் நான் ஒரு வாரம் ஒய்வு எடுக்கப் போகிறேன் என்று பதிலளித்ததும் வாசக நண்பர்கள் (இது வேறயா) நாங்கள் படித்து ரசிக்கிறோம், நிறுத்த வேண்டாம் என்று போனில் ஆதரவு தெரிவித்தார்கள் (வெளங்கிடும்).

நான் எழுத்தை ஒரு தொழிலாக கொண்டவனுமில்லை. நன்றாக எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளவனும் இல்லை. நான் எழுதியதை சிலர் படிக்கிறார்கள் என்ற மமதையில் தான் தொடரவே ஆரம்பித்தேன். இன்று கூட படித்து விட்டு நாலு பேர் நல்லாயிருக்கு என்று சொல்லும வார்த்தைக்காகவே எழுதுகிறேன். இது கூட ஒரு வித போதை தான், இருந்தாலும் குடியை விட இது மேல் அல்லவா.

----------------------------------------

பட்டிக்காட்டான் ஜெய்யின் கைவண்ணம்


------------------------------------------------

ஈழப் பிரச்சனையில் 2009ல் நடந்து கொண்ட விதத்தால் திமுகவின் மேல் ஆயிரம் வெறுப்புகள் இருந்தாலும் இன்று நடந்த விவாதத்தில் திருச்சி சிவாவின் பேச்சு என்னை கவரவே செய்தது. மிக சரியான அளவில் இந்தியா முழுவதும் நம்முடைய வேதனைகளும் சிங்களவனின் கொடுமைகளும் சென்றடையும்.

திருச்சி சிவா ராஜ்யசபாவில் பேசிக்கொண்டு இருக்கின்றார். இலங்கை தமிழர்களுக்காக உரத்த குரல் எழுப்பிக்கொண்டு இருக்கின்றார். பத்து நிமிடத்துக்கு பின்னர் மணி அடிக்கப்படுகின்றது. தற்காலிக சபாநாயகர் உட்கார சொல்கிறார்.

அதற்கு திருச்சி சிவா "எங்கள் உணர்வை கொட்ட விடுங்கள். அடக்கி வைத்தால் வெடித்து விடும் அபாயமும் விபரீதம் உள்ளது. எனவே இந்த உணர்வை இந்த நாடாளுமன்றத்தில் பதியுங்கள். போரில் புறமுதுகு காட்டி ஓடும் கோழை அல்ல வீரத் தமிழன். பாலச் சந்திரனை துளைத்த குண்டுகள் அவன் முதுகில் பாயவில்லை. மாறாக விழுப்புண்களை, வீரத் தழும்புகளை, துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் சுமந்தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன். இது தமிழர்களுக்கே பெருமை . புறநானூறு கூறும் வீரானாகவே சிறுவன் மடிந்தான். பாலச்சந்திரன் வீரத் தமிழர்களின் அடையாளம் .

(மீண்டும் மணி)... "தயவு செய்து..ப்ளீஸ்சர் ப்ளீஸ்சார் " என கெஞ்சிக்கேட்டுக்கொண்டு பேசிக்கொண்டே உணர்வுகளை கொட்டிக்கொண்டே இருக்கின்றார். இதுவரை 5 முறை மணி அடிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மான அவமானங்களை பார்க்கவில்லை. "எங்கள் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை" என கதறிக்கொண்டு இருக்கின்றார். பார்க்கும் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணர்ச்சி வயமான நிலையில் இருக்கின்றனர். மீண்டும் மணி 6 வது முறையாக அடிக்கப்படுகின்றது.

ஆனால் "ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்..." என சொல்லி சொல்ல வந்த விஷயங்களை பதிவு செய்து கொண்டே இருக்க மீண்டும் மீண்டும் மணி அடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதோடு அவைத்தலைவர் மைக் மூலமாக உட்காரச்சொல்லி மிக உரத்த குரலில் சொல்கின்றார். ஏனனில் திருச்சி சிவா அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட இரு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டு சபைக்குறிப்பில் தான் சொல்ல வேண்டியது அத்தனையையும் ஏற்றி விடுகின்றார்.

இன்று மாலையே பாராளுமன்ற செயலர் அலுவலகத்தில் போய் அவர் பேசிய பேச்சின் அத்தனை விபரங்களையும் "அரசாங்க முத்திரை கொண்ட" அரசு காகிதத்தில் வாங்கிக்கொள்ள இயலும்

திருச்சி சிவா அவர்கள் இன்று பதிவு செய்த உணர்சிகரமான விஷயங்களால் கிடைக்கப்போகும் பயன்கள் என்று நினைப்பது

1. அங்கே அமர்ந்திருந்த அகில இந்திய அளவினால பல கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் இந்தியா நிலைப்பாடு எடுக்க வற்புறுத்த செய்ய இயலும்.

1. காங்கிரசை சேர்ந்த சில பல உறுப்பினர்கள் கூட திருச்சி சிவா பேச்சால் தங்கள் கட்சி தலைமைக்கு ஜெனீவாவில் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என சொல்ல வைக்கும் அளவிலான பேச்சு!

3. ஒரு இந்திய பாராளுமன்ற நடவடிக்கையை உலகம் எப்போதும் உற்று நோக்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இலங்கை பிரச்சனையில் ராஜபக்சே அரசு போர்க்குற்றம் செய்தமை இந்த பேச்சுகளால் இந்திய பாராளுமன்றத்தில் பதிவாகும் போது சென்ற முறை இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த கியூபா உள்ளிட்ட சில கம்யூனிச நாடுகள் இந்த பேச்சினால் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க கூடும்.

இப்படி பல பயன்கள் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் கிடைக்கும்.

"பொதுவாழ்க்கைக்கு வந்து விட்டால் மான அவமானங்களை பற்றி நினைத்துக்கொண்டு வருத்தப்பட்டால் சேவை செய்ய இயலாமல் போய்விடும்" என போதித்த பெரியாரின் கொள்கைப்படி அத்தனை இந்திய ஜாம்பவான்கள் இருக்கும் இடத்தில் தன் ஈகோவை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு கெஞ்சி கூத்தாடி தன் ஆதங்கத்தை பதிவு செய்து, தன் கோரிக்கையை அழுத்தமாக சொல்லிவிட்டு அமர்ந்த திருச்சி சிவா அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர் தான்.

ஆரூர் மூனா செந்தில்

கடைசி பகுதியில் பல விஷயங்கள் அண்ணன் அபி அப்பாவின் முகநூல் நிலைத்தகவலில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறேன்.

நன்றி : அபி அப்பா.


Tuesday, February 26, 2013

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்

எல்லா வேலைகளிலும் இந்த கேட்டகிரி உண்டு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் மன்னன் படத்தில் வரும் கவுண்டமணி கேரக்டர். எந்த வேலைக்கும் முன்அனுபவமில்லாமல் அதிர்ஷ்டத்தில் அந்த வேலைக்கு வந்து தகுதியுடன் வந்தவர்களை இளக்காரத்துடன் வேலை வாங்குபவர்கள் இந்த கேட்டகிரிகாரர்கள் தான்.


முதல் உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் தெரியும் என்ற தகுதியுடன் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதில் நன்றாக வேலை செய்ததால் சென்னை மண்டல அலுவலகத்திற்கு மாற்றலானேன்.

அங்கு வந்ததும் தான் என் லட்சணம் எனக்கே தெரிய வந்தது. நான் டெண்டரிங் பிரிவில் உதவியாளாராக இருந்தேன். ஒருநாள் எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்த கம்ப்யூட்டர் டைப்பிஸ்ட் வேலைக்கு வராததால் என் நிர்வாக அதிகாரி ஒரு லெட்டரை எழுதி என்னிடம் தட்டச்சு செய்து தரும்படி கொடுத்தார்.

கையெழுத்து ஆங்கிலத்தில் சேர்த்து சேர்த்து எழுதப்பட்டு இருந்ததனால் எனக்கு சரிவர புரியவில்லை. என்னிடம் அவர் "புரிகிறதா" என்று கேட்ட போது திட்டுவாரோ என்ற "பயத்தில் எல்லாம் புரிகிறது சார், நான் அடித்து தருகிறேன்" என்று கூறி அடித்துக் கொடுத்து விட்டு மதிய உணவு சாப்பிட மெஸ்ஸூக்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தால் அவரே லெட்டர் பேடில் கையால் எழுதிக் கொண்டு இருந்தார்.


என்னவென்று கேட்டால் என்னைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு "லெட்டரில் பிழைகள் இருந்து பார்த்திருக்கிறேன். பிழையான லெட்டரே இன்று தான் பார்க்கிறேன், போதுமடா சாமி, உன் ஆங்கிலத்தில் தீயை வைத்துக் கொளுத்த" என்று சத்தம் போட்டார். அன்று தான் என் ஆங்கில அறிவு அலுவலகத்தில் மற்றவர்களுக்கெல்லாம் தெரிய வந்தது.

பிறகு என்ன கொஞ்ச நாள் பீட்டர்மேன் என்றே மற்றவர்களால் கிண்டலுடன் அழைக்கப்பட்டேன். இந்த தவறுகளை புரிந்து சரியான முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய எனக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது.

நான் தான் இப்படி என்றால் இந்த விஷயத்தில் எனக்கு தாத்தாவெல்லாம் இருக்கிறார்கள் என்பதை பிறகு தான் கண்டு கொண்டேன்.

என் நண்பன் ஒருவன் சந்தோஷ் என்று இருந்தான். படிக்கும் போது நாங்களலெல்லாம் தமிழ்படத்திற்கு மட்டுமே கட்டடித்து செல்வோம். ஆனால் அவன் மட்டும் எல்லா ஹிந்தி படத்துக்கும் செல்வான். ஈகா தியேட்டர் அவனுக்கு மாமியார் வீடு போல. படம் பார்த்து விட்டு எல்லோருக்கும் கதை சொல்வான்.


தில்வாலே துலானியே லே ஜயேங்கே படத்தினை 50 முறைகளுக்கு மேலும் குச் குச் ஹோத்தா ஹை படத்தை 25 முறைகளுக்கு மேல் பார்த்து சாதனை படைத்தவன். அதனாலேயே எங்கள் குரூப்பில் அவனுக்கு தனி மதிப்பு இருந்தது.

நானும் அவனும் லகான், கபி குஷி கபி காம் படத்தை சேர்ந்து பார்த்தோம். படங்களில் எனக்கு வசனத்தில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் அவனை கேட்பேன். சிலவற்றுக்கு விளக்கங்கள் சொல்லுவான் பலவற்றிற்கு கோவப்படுவான். "படம் பார்க்கும் போது இடையில் உன் சந்தேகங்களுக்கு பதில் சொன்னால் என்னால் படத்தை கவனிக்க முடியாது" என்று சத்தம் போடுவான்.


அதன் பிறகு நான் டெல்லிக்கும் ஐதராபாத்திற்கும் வேலைக்கு சென்று சில வருடங்கள் தங்கியிருந்து ஹந்தி நன்றாக பேசக் கற்றுக் கொண்டு சென்னைக்கு மாற்றலான போது அவனை சந்தித்து சினிமாவுக்கு போகலாம் முடிவு செய்து முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்திற்கு போனோம். அதுவரை அவனிடம் எனக்கு ஹிந்தி தெரியும் என்று சொல்லவில்லை.

படம் துவங்கியதும் படத்தின் காமெடி காட்சிகளுக்கு நான் மட்டும் சிரிக்கிறேன். அவன் தேமே என்று உக்கார்ந்து இருந்தான். எனக்கு புரியவில்லை, ஏன்டா சிரிக்கவில்லை என்று கேட்டால் இல்லடா இது ஜோக்கே இல்லை என்றான். எனக்கு சந்தேகம் தோன்றியது. பிறகு அவனிடம் ஒரு காட்சிக்கு விளக்கம் கேட்ட போது சம்மந்தமில்லாமல் வேறு ஒரு அர்த்தம் சொன்னான்.

பிறகு தான் புரிந்தது. இவனுக்கு ஒரு வார்த்தைக்கு கூட அடர்த்தம் தெரியாது என்று. வெளியில் வந்து மூஞ்சியிலேயே குத்தினேன் இத்தனை வருடங்களாக என்னை ஏமாற்றி வந்திருக்கிறானே என்று. நான் நண்பர்களிடம் சொல்லி கிண்டல் செய்ய ஆரம்பித்தேன். அன்றிலிருந்து அவன் ஹந்தி படம் பார்க்க போவதே கிடையாது.

என்னுடன் இம்மானுவேல் என்று ஒருவர் வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து அரட்டை துவங்கியதும் அவர் பேச்சு மட்டும் தான் பெரியதாக இருக்கும். எல்லா விஷயங்களும் தனக்கு மட்டுமே தெரிந்ததாக காட்டிக் கொள்ளுவார். மற்றவர்கள் அவர் பேசுவதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு முறை கார்களுக்கு FCக்கு அனுப்புகிறோம் அல்லவா, FC என்றால் என்னவென்று கேட்டார். மற்றவர்கள் ஒன்றும் தெரியாமல் முழிக்கவே இம்மானுவேல் FC என்றால் புல் செக்கப் என்றார். அப்பவே தெரிந்து விட்டது அவர் ஏகாம்பரம் தான் என்று. பிறகு நான் மற்றவர்களிடம் FC என்றால் பிட்னெஸ் சர்ட்டிபிகேட் என்று விளக்கிச் சொல்லவே அன்றிலிருந்து அவர் தான் எங்களுக்கு காமெடி பீஸ்.

நான் பணிபுரிந்த கம்பெனியில் ரங்காச்சாரி என்ற ஒரு பெரியவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தார். நாங்கள் அப்போது குடி பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போதெல்லாம் தான் ஒரு பயங்கரகுடிகாரர் என்று முக்கால் தனியாக அடித்து வண்டி ஓட்டுவேன் என்றெல்லாம் சொல்லுவார்.

நாங்களும் ரங்கா பெரிய குடிகாரர், நம்மளுடன் சேர்ந்து குடித்தால் நம் சரக்கையெல்லாம் காலி செய்து விடுவார் எனவே நாம் அவரை விட்டே குடிப்போம் என்று முடிவு செய்து அவரை கழற்றி விட்டே குடித்து வந்தோம். பிறகு ஒரு நாள் கம்பெனி பார்ட்டியில் சேர்ந்து குடிக்கும் அனுபவம் கிட்டியது. மனிதர் முதல் லார்ஜை கிளாஸில் எடுத்து வந்து சுவைத்தார்.

பத்து நிமிடம் ஆனதும் ரங்கா பிளாட் ஆகி விட்டார். மகனே அன்று முதல் நாங்கள் குடிக்கும் போதெல்லாம் அவரையும் அழைத்துக் கொண்டு போய் மூடி அளவுக்கு ஊற்றி ஏத்தி விட்டு வேடிக்கை பார்ப்பது தான் பொழுது போக்கு. இந்த மேட்டரில் இவர் தான் ஏகாம்பரம் என்று நான் சொல்லத்தான் வேண்டுமோ.


ஆரூர் மூனா செந்தில்

Monday, February 25, 2013

வெக்கப்படாத வாலிபர் சங்கம்

அது ஒண்ணும் பெரிய சங்கதியில்லை. சாப்பிடுவதற்காக நாக்கை தொங்கப் போட்டு யார் வீட்டிலும் வெக்கப்படாமல் சாப்பிடுவோர் சங்கம் ஒன்று அமைத்து இருந்தால் அதற்கு நான் தான் அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்திருப்பேன்.


படிக்கும் காலத்தில் இருந்தே சாப்பாடு ருசிக்கு ப்ரியனாக இருந்தேன். ருசிக்காக கடைகளில் சாப்பிடுவது குறைவாக இருக்கும். சாதாரண சாம்பாரில் கூட வீட்டுக்கு வீடு கைப்பக்குவம் மாறும். அதனாலேயே மதிய உணவுவேளைகளில் என்றுமே என் வீட்டு சாப்பாட்டை நான் சாப்பிட்டதே கிடையாது.

என் டிபன் பாக்ஸை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு நண்பர்களது டப்பாவை காலி செய்வதிலேயே குறியாக இருப்பேன். அதுவும் என் நண்பன் நஜிமுதீன் டப்பாவைத்தான் முக்கிய குறியாக வைப்பேன். ஏனெனில் மாதத்தில் முக்கால்வாசி நாள் அவன் பிரியாணி தான் கொண்டு வருவான்.

படிப்பதற்காக சென்னை வந்த பிறகு தேடல் இன்னும் அதிகமாகியது. ஏனென்றால் சென்னையில் நான் சொந்தமாக சமைத்து சாப்பிட வேண்டிய சூழல். அதுவரை எனக்கு சமையல் என்றால் என்னவென்றே தெரியாது. சுமாராக பெயருக்கு சமைத்து டப்பாவில் கொண்டு சென்று நண்பர்களுக்கு கொடுத்து விட்டு நான் அவர்களுடைய சாப்பாட்டை சாப்பிடுவேன்.


மிளகுத்தூள் தூக்கலாக போட்டு என் அம்மா வைக்கும் இட்லிசாம்பாருக்கு ஒரு சுவை இருக்கும். இட்லிகளை சாம்பாரில் போட்டு பிசைந்து காலி செய்து விட்டு கடைசியாக சாம்பாரை தட்டில் ஊற்றி குடிக்கும் அளவுக்கு பிரியன். அதே போல் என் அப்பாவின் நண்பரின் மனைவி வைக்கும் கல்யாண வீட்டு சாம்பார் என்றால் கூடுதலாக இரண்டு இட்லிக்களை உள்ளே தள்ளுவேன்.

அதே போல் என் மாமி சமைக்கும் உருளை மற்றும் காரட் போட்டு வைக்கும் இட்லிசாம்பாருக்கோ ருசி வேறு மாதிரி இருக்கும். யார் வீட்டுக்கு சாப்பிடும் நேரத்தில் போனாலும் யோசிக்கவே மாட்டேன். தட்டை வைத்து இரண்டு இட்லிக்களை சாப்பிட்டால் தான் மனசு நிறையும்.

வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பணிபுரிந்த போது என்னிடம் தொழிலாளர்களாக பீகாரிகள் இருந்தனர். அவர்கள் வைக்கும் சப்பாத்திக்கும் டாலுக்கும் பொருத்தமோ பொருத்தம். என்னதான் நாம் முயற்சித்தாலும் அந்த சுவையை நம் வீட்டு ஆட்களால் கொண்டு வரவே முடியாது.


அது போல் கண்டெய்னர் லாரி ஓட்டுபவர்கள் லாரியிலேயே சொந்தமாக சமைத்து சாப்பிடுவார்கள். வித்தியாசமாக உப்புமா செய்து அதனுடன் வாழைப்பழத்தை தொட்டுக் கொண்டு சாப்பிடுவர். காலைநேரம் என்றால் முதல் பிளேட் உப்புமா நான் தான் சாப்பிடுவேன்.

ரைத்தா என்றால் அதுவரை வெறும் வெங்காயத்தை தயிரில் போட்டு சாப்பிடுவது தான் என்று நினைத்திருந்த நான் நண்பன் சந்தோஷ் வீட்டில் வெள்ளரி போட்டு ஒரு ரைத்தாவும் பீட்ரூட் போட்டு ஒரு ரைத்தாவும் சாப்பிட்ட போது ரைத்தாவில் வெரைட்டிகள் புரிந்தது.

மராட்டிய நண்பர்கள் எப்பொழுதும் சாப்பாடு சாப்பிடும் போது பச்சை மிளகாயின் நடுவே உப்பை வைத்து எண்ணெய்யில் பொறித்து சைட்டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவதை பார்த்து நானும் ஒரு நாள் முயற்சித்தேன். கூடுதலாக இரண்டு கவளம் சாதம் உள்ளே சென்றது.


மிளகு பொங்கல் மிகவும் பிடிக்கும். அதுவரை முழு மிளகு போட்டு தான் பொங்கல் சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை நண்பன் தணிகா வீட்டில் மிளகை உரலில் லேசாக இடித்து போட்டு செய்த பொங்கலின் சுவை அமிர்தம். என்னா இன்னோவேட்டிவ்.

அம்மா இராலுடன் சுரைக்காய் போட்டு செய்யும் கூட்டு இட்லிக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். அதுபோல வாழைக்காயுடன் சுண்டைக்காய் போட்டு செய்யும் கூட்டு கூட இட்லிக்கு அருமையோ அருமை.

படிக்கும் போது தோழி பரிமளா அவர்கள் வீட்டில் இருந்து முள்ளங்கி சட்னி வைத்து எடுத்து வருவார். அதுவரை அப்படி ஒரு சட்னி கேள்விப்பட்டிராத நான் சாப்பிட்டுப் பார்த்ததும் நேரே சைக்கிள் எடுத்து அவங்க வீட்டுக்கு போய் பரிமளாவின் அம்மாவிடம் செய்முறை கேட்டு தெரிந்து வந்தேன்.

பிறகு என்ன என் கைவண்ணத்தில் அதே முறையில் கத்திரிக்காய் சட்னி, கேரட் சட்னி முட்டைகோஸ் சட்னி வரை செய்து பார்த்து விட்டேன். சில சட்னிகள் நன்றாக இருக்கும், பல சட்னிகள் கன்றாவியாக இருந்தது தான் நிஜம். என்னால் எங்கள் வீட்டில் உள்ளோரும் இந்த கொடுமையை அனுபவித்தனர்.

மீன் குழம்பு, இதற்கு வகைகளே சொல்ல முடியாது. ஒவ்வொருத்தரின் கைப்பக்குவத்திற்கும் ஒரு ருசி இருக்கும். புளி அதிகம் போட்டு செய்யும் தமிழ்நாட்டு மீன்குழம்புகள் ஒரு வகையாக இருந்தால் தேங்காய் அதிகம் போட்டு செய்யும் கேரள மீன் குழம்பு வேறொரு வகையாக இருக்கும். அதுவும் கப்பாவுடன் மீன் குழம்பு போட்டு சாப்பிடும் போது அதன் சுவை சொல்லவே முடியாது. ருசித்து பார்த்து முடிவு செய்யுங்கள்.

இவ்வளவு சாப்பாடு சொல்கிறேனே அவையனைத்தும் சமைக்கும் வீடுகளுக்கு சாப்பிடும் நேரத்தில் சென்றால் சாப்பிடு என்று யாரும் ஓரு வார்த்தை சொல்ல வேண்டியது இல்லை. நானே அமர்ந்து தட்டில் போட்டு சாப்பிட்டு விடுவேன். பிறகு நான் தான் வெக்கப்படாத வாலிபர் சங்கத்திற்கு தலைவராக முடியும். வேறு யாரப்பா, இருக்கிறார் இது போல் சாப்பிட.

இவையனைத்தும் உச்சம் ஐதராபாத்திற்கு சென்று பிரியாணி சாப்பிட்டது தான். அது 2003 ஆண்டு இருக்கும். நண்பன் எட்வினுடன் விமான நிலையம் அருகில் உள்ள கண்டோண்ட்மெண்ட் மைதானத்தில் சரக்கடித்துக் கொண்டு இருந்தோம். அதிகமாக சரக்கடித்த பிறகு நிதானம் தவறி உடனடியாக பிரியாணி சாப்பிட வேண்டும் அதுவும் ஐதராபாத் பிரியாணி தான் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

இருவரும் பைக்கை விமான நிலைய நிறுத்தத்தில் விட்டு விட்டு டெக்கான் விமானத்தில் டிக்கெட் எடுத்து ஐதராபாத் இரவு 11 மணிக்கு சென்று செகந்திராபாத்தில் பாரடைஸ் பிரியாணி கடையில் சாப்பிட்டு விடியற்காலை பார்சலுடன் சென்னை வந்து வேலைக்கு சென்றோம்.

இந்த செயலுக்கான பணத்தை கிரெடிட் கார்டிலிருந்து எடுத்து விட்டு பிறகு மாதா மாதம் அந்த பணத்தை கட்டுவதற்கு நான் பட்ட சிரமம் எனக்குத்தான் தெரியும். எல்லாம் ருசி படுத்தும் பாடு.

 
ஆரூர் மூனா செந்தில்

Friday, February 22, 2013

ஆதிபகவன் - சினிமா விமர்சனம்

எப்போதுமே படம் ஆரம்பிக்கும் போது பார்த்தால் தான் நமக்கு பார்த்த மாதிரி இருக்கும். அடிக்கடி அதனை தவற விட்டு எரிச்சலடைவது என் பொழுது போக்கு. இன்று கூட அப்படி ஆனது தான் கடுப்பு.

இன்று வேலைக்கு போய் அப்படியே எஸ்ஸாகி ஏஜிஎஸ்சுக்கு போனேன். ஆனால் 9 மணிக்கே படத்தை போட்டு விட்டனர். கால்மணிநேரம் லேட். கடுப்பை அடக்கிக் கொண்டு அரங்கிற்கு நுழைந்தேன்.


படத்தில் ரொம்ப சீரியஸாக பாபு ஆண்டனியும் ரவியும் விவாதித்துக் கொண்டு இருந்தனர். படம் புரியவே பத்து நிமிடம் ஆனது. இனி கதைக்கு வருவோம். ஜெயம்ரவி (ஆதி) பாங்காக்கில் கடத்தல் பிஸினஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நீது சந்திராவை கண்டு காதலில் விழுகிறார். ஒரு மோதலில் நீது ரவியின் உயிரைக் காப்பாற்ற காதல் வலுப்பெறுகிறது. காதலுக்கு சம்மதம் பெறுவதற்காக மும்பைக்கு நீதுவுடன் பயணிக்கிறார்.

இந்த இடம் வரை ஏதோ சாதாரண படம் போலவே போய்க் கொண்டு இருந்தது. படம் சுத்த காலி என்றே நினைத்திருந்தேன். ஆனால் அமீர் அந்த இடத்தில் வச்சாரு பாருங்க டுவிஸ்ட். அதுல ஆரம்பிக்கும் படம் பரபரவென்று செல்கிறது.


உண்மையில் நீது வந்து காதலிப்பது போல் நடித்து ரவியை ஏமாற்றி மும்பை அழைத்து செல்கிறார். எதற்காக என்றால் மும்பையில் ஒரு ரவி இருக்கிறார். அவர் பெயர் பகவான். அவரை மும்பை போலீஸ் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள முயற்சிக்கிறது. அவரை விடுவிப்பதற்காக அவரைப் போல் உருவம் கொண்ட ரவி(ஆதி)யை ஏமாற்றி சிக்க வைக்கிறார் பகவானின் காதலியான நீது. போலீஸில் சிக்கிக் கொண்ட ரவி என்ன செய்கிறார் என்பதே கதை.

இவர்கள் அந்த டுவிஸ்ட்டுக்கு பிறகு உள்ள கதையை முதலில் முடிவு செய்து அதற்கு ஏற்றாற் போல் முன்பாதியை சுமாராக அமைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை சரியாக செய்திருந்தால் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கும். இப்ப ஓகே என்ற அளவில் தான் சொல்ல முடியும்.


ஜெயம்ரவி போன வருடம் முழுவதும் படமே வரவில்லை. அந்த அளவுக்கு இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார். அது திரையில் நன்றாகவே வந்திருக்கிறது. படத்தின் ஸ்பெஷலே பெண்மைத்தனம் உள்ள பகவான் கேரக்டர் தான்.

கொஞ்சம் புரியாமல் பார்த்தால் அரவாணி போல் தெரியும் கதாபாத்திரம் அது. சஸ்பென்சுக்காக அந்த கதாபாத்திரத்தை இதுவரை வெளியிடாமல் இருந்திருக்கிறார்கள். நடிப்பில் பிச்சு உதறியிருக்கிறார் ரவி.

பகவான் கேரக்டரில் பிச்சு உதறியிருக்கிறார் ஜெயம் ரவி. அந்த நளினம் என்ன, நடை என்ன அப்பப்பப்பா, கொஞ்ச காலத்துக்கு எல்லோர் மத்தியிலும் அந்த நடை பேசப்படும். ஒரு சண்டையில் அந்த நளினத்துடன் அடிப்பார் பாருங்க சூப்பரோ சூப்பர். 


நீது சந்திரா ஹீரோயின் என்று சொல்ல முடியாத முக்கிய கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் அருமையாக சண்டையும் செய்கிறார். என்னா காலு, என்னா ஸ்ட்ரக்சரு ப்ப்ப்பா ப்ரச்சோதக பார்ட்டி. நம்மளால வெறும் பெருமூச்சு மட்டும் தான் விடமுடியும்.

முக்கியமாக சொல்ல வேண்டியது படத்தின் இசையைப் பற்றி. ஆரோ 3டியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இரண்டாவது படம். பின்னணி இசையில் தியேட்டர் அதிர்கிறது. ஏஜிஎஸ்ஸிலேயே அப்படி என்றால் சத்யமில் சூப்பராகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர். படம் பார்க்க உண்மையிலேயே ப்ரெஷ்ஷாக இருக்கிறது. படம் முழுவதுமே ஸ்டைலிஷ்ஷாக வரவேண்டுமென்று எடுத்திருக்கிறார்கள். அது போலவே வந்திருக்கிறது.

படத்தின் குறையென்று சொன்னால் முதல்பாதி சவசவ என்று இருப்பது தான். அதனை மட்டும் சரியான முறையில் படமாக்கியிருந்தால் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கும்.  படம் இப்போ ஆவரேஜ் தான். அரைமணிநேரம் லேட்டாக போனாலும் தப்பில்லை.

இந்த படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருப்பதில் அப்பட்டமாக அரசியல் தெரிகிறது. அப்படி ஒன்னும் சொல்லிக் கொள்வது போல் ஆபாச காட்சிகளோ ரத்தம் தெறிக்கும் வன்முறையோ கிடையாது.

அதைவிட முக்கியமாக தியேட்டரில் 18வயதுக்கு மேற்பட்டோரை மட்டும் தான் உள்ளே விடுவோம் என்று எச்சரித்து உள்ளே அனுப்புகிறார்கள். நானெல்லாம் 16 வயசிலேயே அப்பட்டமாக பிட்டு படம் பார்க்க திரையரங்கிற்கு போனேன். அய்யோ அய்யோ.

போலி என்கவுண்ட்டரை அடிப்படையாக கொண்டு கதைகளனை அமைத்திருக்கிறார்கள். இது உண்மையாகக் கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பது தான் சற்று அதிர்ச்சியான விஷயம்.


ஆரூர் மூனா செந்தில்

Wednesday, February 20, 2013

வாஞ்ஜூர் என்னும் கடவுள்பக்தன்

ஏற்கனவே படித்த மாதிரி இருக்கே என்று நீங்கள் நினைக்கக்கூடாது. ஏற்கனவே நான் எழுதியது வாஞ்சூர் பற்றி. இந்த கட்டுரை வாஞ்ஜூர் என்று அழைக்கப்படும் ஒரு தூய கடவுள் பக்தனைப் பற்றி.


இவனும் அதே வாஞ்சூரை சேர்ந்தவன் தான். ஆனால் பிழைப்பதற்காக நீடாமங்கலம் அருகில் இருக்கும் ஆதனூர் என்ற கிராமத்திற்கு வந்து செட்டிலானவன். என் தாத்தா ஊர் அது என்பதால் எனக்கு பழக்கமானவன் அவன். என்னை விட வயதில் பெரியவன்.

ஆள் நல்ல சிகப்பாக இருப்பான். நீண்ட நரைத்த முடி தாடி வைத்திருப்பான். எங்கள் தோட்டத்திற்கு அடுத்த தோட்டம் அவனுடையது. எல்லோரும் வயலில் நெல் போட்டிருந்தால் அவன் மட்டும் கரும்பு போடுவான். மற்றவர்கள் தாளடியில் கரும்பு போடும் போது அவன் மட்டும் நெல்லைப் போட்டிருப்பான்.

வயதில் பெரியவரை அவன் இவன் என்று பேசுகிறானே என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். அவன் வயசு வித்தியாசம் பார்க்காமல் என் செட்டு நண்பர்களுடன் தான் வயலில் சாராயம் குடிப்பான். எங்களுடன் சேர்ந்து சைட் அடிப்பான். பிறகு எங்கிருந்து அவனை நான் மதிப்பது.


இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் மேற்சொன்னது எல்லாம் அல்ல. அவன் கடவுள் பக்தி என்ற பெயரில் அடிக்கும் அட்டகாசத்தைப் பற்றி தான். இவனது குலதெய்வம் ஆதனூர் அருகில் உள்ள கீழப்பட்டு என்ற கிராமத்தில் இருக்கிறது. அதன் பெயரை நான் குறிப்பிட்டால் நான் அவன் சாமியை அவமதிக்கிறேன் என்று போஸ்டர் ஒட்டுவான்.

சொந்தமாக எழுதி போட்டால் கூட பரவாயில்லை, நாளிதழ்களில் வந்த விஷயத்தை எடுத்து தலைப்பு மட்டும் "மற்ற சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்" என்று போட்டு போஸ்டர் ஒட்டுவான்.


அவன் போஸ்டரை படிக்கும் மற்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இவன் ஒரு வெளங்காதவன். சொந்த சரக்கில்லா காலி பெருங்காய டப்பா என்று. ஆனால் அவனது குலதெய்வத்தை கும்பிடும் சிலர் வந்து ஆமாம் பயங்கரவாதிகளுடன் பழகக்கூடாது என்று போஸ்டரில் எழுதி வைத்து செல்வார்கள்.

இவனுக்கு ஒரு குலதெய்வம் இருப்பது போல் தான் எனக்கும் இருக்கிறது. அவன் கும்பிடுவது போல் தான் நானும் கும்பிடுகிறேன். ஆனால் கீழப்பட்டில் இருப்பது மட்டும் சாமியாம். நெடுவாக்கோட்டையில் இருப்பது கல்லாம். என்ன கொடுமை சார் இது.

என்னுடன் எங்கள் குலதெய்வம் கோயில் இருக்கும் நெடுவாக்கோட்டைக்கு வருவான். சாமியாடி வந்து குறி சொல்லும் போது என் அருகில் வந்து இவன் மேல் சாமியே இறங்கவில்லை. நடிக்கிறான் என்று கலாட்டா செய்வான்.


அதே போல் நான் அவனது கோயில் கடாவெட்டுக்கு சென்று இதே போல் சாமியாடியை கலாய்த்தால் எங்கள் சாமியை திட்ட நீ யாரடா. வெளியில் போடா என்று கோயிலை விட்டே விரட்டுவான். என்னவோ இவன் தான் கோயிலுக்கு சொந்தக்காரன் மாதிரி.

உண்மையில் அந்த கோயிலின் நிர்வாகியே என் குடும்ப நண்பராக இருப்பார். அவரே இதனை பொருட்படுத்த மாட்டார். இவனோ கோயிலுக்கு போவதே திருவிழாக் காலங்களில் தான், இந்த காமெடி பீஸை நினைத்து எனக்கு பயங்கர சிரிப்பாக இருக்கும்.

சொந்த சரக்கு இருக்கிறவனே அமைதியாக இருக்கும் போது இவன் ஒரு காப்பிபேஸ்ட் போஸ்டர். இவனுக்கு எதுக்கு இந்த வீராப்புன்னு தான் தெரியலை. கருமம் புடிச்சவன் குளிச்சிருக்கவே மாட்டான். ஆனால் வெளியில் வரும்போது நல்லா செண்ட் அடிச்சு நெத்தியில் திருநீறு பட்டை அடித்து தான் வெளியில் வருவான்.

ஒரு முறை நாங்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தோம். இந்த காமெடி பீஸு வந்து எங்களுடன் இணைந்து விளையாடியது. இவனது அணியில் ஆடியவர்கள் எல்லாம் ரன் அடித்து நல்ல ஸ்கோர் எடுத்திருந்தனர். ஆனால் நம்ம வாஞ்ஜூர் டக்அவுட் ஆகியிருந்தான்.

ஆனால் எங்களிடம் வந்து "நான் விளையாடியதால் தான் இவ்வளவு ஸ்கோர் எடுக்க முடிந்தது. நீங்கள் எல்லாம் தோற்கப் போகிறீர்கள்" என்று எகத்தாளம் பாடிக் கொண்டிருந்தான். நாங்கள் பேட்டிங் ஆரம்பித்ததும் ஆறு ஓவரிலேயே ரன்களை அடித்து ஜெயித்து விட்டோம்.

அப்பக்கூட தாங்கள் விளையாடிய அணி தோற்றது தெரியாமல், "நாங்கள் தான் ஜெயித்தோம், ஆனால் எதிரணியினர் எங்களை விட அதிக ரன்கள் எடுத்து தோற்றனர்" என்று போஸ்டர் ஒட்டிய அறிவாளி.

இவனது பிரச்சனையே இவனது குணாதிசியம் தான். இவனுக்கு கடவுள்பக்தி அதிகமாக இருக்கலாம். அதற்காக மற்றவர்கள் பக்தியில் குறைந்தவர்கள் என்று நினைப்பது அறிவீனம் என்று தெரியாதவன். அது மட்டுமில்லாமல் அடுத்தவர்கள் வீட்டு சுவரில் அனுமதியின்றி தங்கள் குலசாமி தான் உயர்ந்தது என்று போஸ்டர் ஒட்டி சென்று விடுவான்.

ஒரு முறை எங்கள் வீட்டு சுவற்றில் போஸ்டரை ஒட்டி விட்டு சென்றான். மறுநாள் நான் காண்டாகி அவனை வூடு கட்டியதெல்லாம் பெரிய கதை. நான் கூட தான் சாமி கும்பிடுகிறேன், அதற்காக பொதுவெளியில் வந்து நான் வீரனார் பக்தன் என்று நெத்தியில் பச்சைக் குத்திக் கொண்டு திரிவதில்லை.

யாரைப் பார்த்தாலும் ஜெய்ஸ்ரீராம் என்று கூறியே வணக்கம் சொல்லுவான். ஒரு முறை போதையில் அவனைப் பிடித்து "ஏண்டா படவா வணக்கம் என்று நல்ல தமிழில் சொல்லலாம் அல்லவா. எதுக்கு நான் இந்த பிரிவை சேர்ந்தவன் என்று மற்றவர்கள் அறிய ஜெய்ஸ்ரீராம் என்று சொல்கிறாய்" என்று ரைடு விட்டும் பார்த்து விட்டேன், திருந்த மாட்டேன் என்கிறான்.

பக்தியும் பசி போன்ற உணர்வு தான் என்பதை உணர்ந்து கொண்டால்  மற்றவர்களுடன் எந்த உரசலும் ஏற்படாது. இந்த அறிவு கூட இல்லாத இவனை வைத்துக் கொண்டு இனி காலம் தள்ளுவது ரொம்ப சிரமம் என்றே நினைக்கிறேன்.


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : முதன் முறை இட்ட பதிவே போதும் என்று இருந்து விட்டேன். இது நான் எழுத வேண்டும் நினைக்கவேயில்லை. போன பதிவில் வாசக நண்பர் ரான் கண்ணா கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டுள்ளது.

Tuesday, February 19, 2013

பிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி.

ஏற்கனவே பிரபல பதிவராவது எப்படி என்று பார்த்தோம் அல்லவா. அதன் அடுத்த கட்டம் இலக்கிய ஒளிவட்ட பதிவராவது. இதற்கு நாம் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். சில பல வம்பு வழக்குகள் இருக்கும். அதில் சத்தமில்லாமல் சரண்டாகி சமாதானமாகி விடும்.


முதலில் கவிதைகள். பெரிய விஷயமெல்லாம் இல்லை. நாலு வார்த்தைகள் சேர்த்த மாதிரி டைப்படித்து ரெண்டு ரெண்டு வார்த்தைகளுக்கு ஒரு முறை எண்டர் அடித்தால் கவிதை வந்து விடும்.

அடுத்த கட்டமாக எதுகை மோனை பொருத்தமான இரண்டு வார்த்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு அம்மா சும்மா. சோறு போட்டு ஊட்டி விட்டாள் அம்மா, அவளுக்கு முன்னால் எல்லாரும் சும்மா. எப்பூடி. அவ்வளவு தான். இதை வைத்து சில மாதங்கள் ஒட்ட வேண்டும்.

நம்மைப் போல கவிதை என்ற பெயரில் சில பேர் கொலையா கொன்டுகிட்டு இருப்பாங்க. அவங்க பதிவுக்கு போய் கவிதை புரியவில்லை என்றாலும் அருமை சூப்பர் என்று பின்னூட்டமிட்டு ஓட்டையும் போட்டு விட்டு வர வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கியவாதி பதிவரும் உங்களுக்கு ஓட்டு போடுவார்.


கவிதைகளை போட்டு புரட்டி எடுத்து ஒரு வழி ஆக்கிய பின்னர். பின்நவீனத்துவம் என்ற பகுதிக்கு வர வேண்டும். எனக்கு கூட இப்ப வரை பின்நவீனத்துவத்துக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் எந்த பதிவிலும் அந்த வார்த்தை வருகிற மாதிரி பார்த்துக் கொள்கிறேன் அல்லவா, அது தான் பின்நவீனத்துவம்.

பெரிய கவிஞர் ஆகிவிட்டோம் என்று முடிவெடுத்த பின்னால் எழுதிய எல்லா மொக்கைக் கவிதைகளையும் எடுத்து புத்தகமாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கவிதை புத்தக வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும்.

விழாவுக்கு பதிவர்களை அழைக்கும் போது கொஞ்சம் மிரட்டும் தொனியில் பேச வேண்டும். அதாவது விழாவுக்கு வர வேண்டும் அல்லது புத்தகத்தை படித்து விட்டு மதிப்புரை எழுதித்தர வேண்டும் என்று சொன்னால் எல்லாப்பதிவரும் தானாக வந்து விடுவார்கள்.


வந்தவர்களையும் சும்மாவிடக்கூடாது. புத்தகத்தை இலவசமாக கொடுக்கும் போது முதல் பக்கத்தில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும். கூடவே போட்டோவும் எடுத்து பதிவில் போட்டு அசத்த வேண்டும். இப்படி கவிதையை கொலையாக் கொன்ட பிறகு அடுத்தக் கட்டத்திற்கு தாவ வேண்டும்.

ஷகீலா, சிலுக்கு இவர்களைப் பற்றி கட்டுரைகள் எழுத வேண்டும். சும்மா ஹிட்ஸ் பிச்சிக்கிக்கும். நாம் மட்டும் தான் எழுத உரிமை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் இது போல் எழுதினால் ஆபாச பதிவர் என்ற பட்டம் கொடுத்து சிரிக்க வேண்டும்.

வார்த்தைகளை புதிதாக போட்டு அசத்த வேண்டும். ஆகச்சிறந்த, அவதானிப்பு, படுதிராபை போன்ற வார்த்தைகளை எல்லாப்பதிவிலும் இடம் பெறும்படி செய்ய வேண்டும். இன்னும் சிவப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களில் உள்ள வார்த்தைகளை எடுத்து கையாள பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.


இதுவரை நமது பதிவில் பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி சொல்லி வந்த நாம், இனி யாரையும் மதிக்கக்கூடாது. யாருக்கும் பின்னூட்டமும் இடக்கூடாது. நம்மளை எந்த பதிவர் கேள்வி கேட்டாலும் போடா வாடா என்று அழைத்துதான் பதிலளிக்க வேண்டும்.

புத்தங்கள் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஒரு அட்டுத் தொடர் எழுத வேண்டும். இனிப்புத் தண்ணி என்ற பெயரில் எழுத ஆரம்பிக்க வேண்டும். தொடரின் ஒவ்வொரு பகுதியும் நெஞ்சை நக்க வேண்டும். பிறகு ஏதாவது ஒரு இளிச்சவாய ஸ்பான்சரைப் பிடித்து பாதி காசு நாம் போட்டு ஒரு புத்தகத்தை வெளியிட்ட பின்பு அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை நம் பதிவின் வலது மூலையில் இடம் பெறும் படி லேஅவுட் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பதிவர் சந்திப்புக்கு அடிக்கடி வரக்கூடாது. வந்தாலும் எந்த வேலையும் இழுத்துப் போட்டு செய்யக்கூடாது. கலந்து கொண்ட பதிவர்களையும் இளக்காரமாக பார்க்க வேண்டும். பதிவர் சந்திப்புக்கு வரும் போது சரக்கடித்து தான் வர வேண்டும். அடிக்கடி ஹா ஹா என சத்தம் போட்டு சிரிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் எல்லார் கவனத்தையும் நம் பக்கம் ஈர்க்கும்படி செய்து அசத்தி விடலாம்.

ஒரு இலக்கிய அமைப்பை பிடித்து அதன் அமைப்பாளர்களிடம் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்து அவர்கள் கொடுக்கும் ஒரு விருதை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நம் வலைப்பக்கத்தில் வழக்கம்போல மாட்டிக் கொள்ள வேண்டும்.

இனி பதிவுகளில் எழுதுவதை குறைத்துக் கொண்டு ப்ளஸ்ஸில் அதிகம் இடுகைகளை இட வேண்டும். அதுவும் புதிதாக எழுதத் தொடங்கியவர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்க வேண்டும். அவர்களை குண்டான் வாயன், அண்டா வாயன் என்று அழைத்து பரிகாசம் செய்ய வேண்டும்.

முக்கியமாக முன் முகம் நாயின் பின்பக்கம் போல இருக்கு என்று அசிங்கமாக பேசி எதிராளியின் வாயைப்பிடுங்கி அவர்கள் நிதானம் தவறி கெட்ட வார்த்தைகளை விட்டதும் நம்முடைய பின்னூட்டங்களை சத்தம் போடாமல் டெலிட் செய்து விட வேண்டும். அவ்வளவு தான். இனி வரும் எல்லாக் காலங்களிலும் நாம் தான் இலக்கியப் பதிவர்.




ஆரூர் மூனா செந்தில்

Monday, February 18, 2013

குறைந்து வரும் காந்தியிசம்

வினோதினியின் மரணம் ஒருதலை காதலின் குரூரம். இதற்கு காரணம் என்னவென்று கொஞ்சம் ஆலோசித்தோமென்றால் குறைந்து போன மனித நேயம் என்ற காரணம் புலப்படும். இன்று மனிதர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் குறைந்து போய் இருக்கிறது.


மற்றவர்களுக்காக ஒரு விஷயத்தை விட்டுக் கொடுப்பது மிகவும் குறைந்து இன்னும் சொல்லப் போனால் சுத்தமாக நின்று விட்டு இருக்கிறது. இதற்கு காரணங்களை ஆலோசிக்க பல வருடங்கள் முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.

20 வருடங்களுக்கு முன்பு ஒருவர் உண்மையை சொல்ல சிரமப்பட்டதே இல்லை. ஆனால் இன்று பொய் அனைவருக்கும் மிகச்சரளமாக வருகிறது. உண்மையை சொல்லத்தான் சிரமப்படுகிறார்கள்.

வளர்ப்பு முறை மாறியிருப்பதைத் தான் இதற்கு குற்றமாக சொல்ல வேண்டும். குழந்தைகள் அதிகமிருந்த வீட்டில் ஒருவருக்கு ஒருவர் சகோதர பாசத்தில் விட்டுக் கொடுத்து வளர்ந்து வந்தனர். பெரியவர்கள் இருந்த வீட்டில் பொய் சொல்வது கண்டிக்கப்பட்டது. குற்றம் என மனதில் விதைக்கப்பட்டது.


இன்று விசுவாசங்கள் என்பதே காந்திக்கு அடுத்தபடியாக போட்டோவில் தொங்குகிறது. நட்புக்குள் துரோகங்கள் சகஜமாகி விட்டது. இந்த தலைமுறை வாலிபர்களுக்கு இதனை விளக்கிக்கூறி இவற்றிலிருந்து மீட்பது எப்போது.

எனக்கு மிக நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்த சம்பவங்களை நான் உதாரணமாக கூறுகிறேன், ஒப்பிட்டுப் பாருங்கள். எனக்கு சித்தப்பா முறை வரும் சொந்தக்காரர் அவர். அவர்கள் பரம்பரையின் நிர்வாகத்தில் ஒரு கோயில் இருக்கிறது. அவர்களின் தலைமுறையினர் தான் காலம் காலமாக கோயிலை நிர்வகித்து வந்தனர்.

சித்தப்பாவின் அப்பா மிகப்பெரிய ஜமீன்தாரராக இருந்து இறந்து போனார். அவரது மனைவி அந்த காலத்திலேயே திரையிடப்பட்ட மாட்டு வண்டியில் தான் வெளியில் செல்வார். எந்த நேரமும் நகைகள் அணிந்து தான் இருப்பார். ஆனால் காலங்கள் உருண்டோடின.


சித்தப்பாவுக்கு 4 சகோதரர்கள். தந்தை இறப்புக்கு பின்னர் சொத்துக்கள் பிரிக்கப்பட்டன. கோயிலை நிர்வகிக்கும் பிரச்சனையில் அனைவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் போனது. இந்நிலையில் அம்மாவை கவனிப்பது யார் என்ற போட்டியில் யாரும் கவனிக்காமல் விட்டனர்.

கடைசி காலத்தில் நடமாட முடியாமல் கவனிப்பாறின்றி வீட்டுக்குளே மலஜலம் கழித்து நாறிப் போய் இறந்தார். அம்மா வழியில் வந்த சொத்துக்களை பிரித்துக் கொண்ட சகோதரர்கள், அம்மாவை கவனிக்க வக்கின்றி தவிக்க விட்ட கொடுமையை என்னவென்று சொல்வது.

இவர்களின் குழந்தைகளுக்கும் திருமணமாகும். அவர்கள் கண்டிப்பாக இந்த சித்தப்பன்களை நடுத்தெருவில் தான் நிப்பாட்டுவார்கள். மனைவி குழந்தைகள் முக்கியம் என்று தெரிந்த ஆண்களுக்கு அம்மாவை கவனிக்க சற்று சிரமப்பட்டு இருந்தால் அவர்கள் இந்த அவல நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள்.


இத்தனைக்கும் சித்தி எனக்கு மிகநெருங்கிய சொந்தம். இன்று மாமியாரை தவிக்க விட்டாய், இதே போன்ற நிலை உனக்கு ஒரு நாள் வரும். அன்று என்னிடம் வந்து நிற்கக்கூடாது என்று சத்தம் போட்டு நான் அவரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன்.

இதே போல் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, இரு ஆண் குழந்தைகள். நன்றாகத்தான் வளர்ந்தார்கள். எல்லா சுகத்தையும் அப்பாவிடம் பெற்று வளர்ந்த தம்பி பையன் கல்லூரி படிப்பு படிப்பதற்காக கோவை சென்றான். அப்பா கடனில் இருந்த காரணத்தால் அண்ணன் காசில் படித்தான்.

அண்ணன் காசில் படித்தவன் இன்று நல்ல வேலை கிடைத்து நிறைய சம்பளம் வாங்குகிறான். அண்ணன் சொற்ப சம்பளத்தில் வெளியூரில் இருக்க அப்பா, அம்மாவை கவனித்து வரும் தம்பி, அப்பாவையும் அம்மாவையும் மதிப்பதே கிடையாது. அப்பாவை பலமுறை அடிக்கப் போய் தட்டிக் கேட்ட அண்ணனையும் முறைத்துக் கொண்டு பேசுவது கிடையாது.

இன்றைய பெரும் சோகம், அம்மா கடுமையான கால் மூட்டுவலியில் இருக்க மனைவிக்கு சமைத்து தரவில்லை என்பதற்காக சத்தம் போட்டு வேலைக்கு போய் இருக்கிறான். ஒரு வேலைக்காக என்னிடம் வந்தான், உன் குறைகளையெல்லாம் சரி செய்யாமல் என்னிடம் வராதே என்று விரட்டி விட்டேன்.

ஒரு காலத்தில் பள்ளியில் வாழ்வியல், சூழ்நிலையியல் என்றொரு பாடம் இருந்தது. நல்லொழுக்கம், நன்னடத்தை கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய பரபரப்பான காலத்தில் மதிப்பெண் முக்கியமில்லாத இந்த படிப்புகள் பள்ளியில் இருந்தே எடுக்கப்பட்டு விட்டன.

இன்றைய தலைமுறைக்கு வீட்டில் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய தாத்தா, பாட்டிகளோ முதியோர் இல்லத்திலும் பரம்பரை வீட்டில் தனிமையிலும் இருக்கின்றனர். பகிர்ந்து கொள்ள சகோதரர்கள் கிடையாது. பிறகு சுயநலம் இல்லாமல் வேறென்ன இருக்கும்.

இன்று முரட்டுத்தனம் தான் ஹீரோவுக்கு உரிய இலக்கணமாக மாறி விட்டது. ஒரே அடியில் வீழ்த்துவதே ஹீரோயிசம் என்று குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டு விட்டது. நல்லவனாக மட்டுமே வாழக் கற்றுக் கொடுத்த காந்தியிசம் நகைப்புக்குரிய ஒன்றாகி விட்டது.

எம்ஜிஆரின் பாத்திரப்படைப்பு பெரும்பாலும் நல்லவர்களாகவே காட்டப்பட்டு வந்தன. சிறுவர்களும், வாலிபர்களும் அதைப் போன்று வளரவே பெற்றோர்களால் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இன்று மசாலா சினிமா என்ற பெயரில் முரட்டுத்தனம் சிறுவர்களின் மனதில் விதைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.

வினோதினியின் மரணத்தினால் குற்றமிழைத்தவனின் மிருகத்தனம் வெளியில் வந்து விட்டது. ஆனால் இன்றைய தலைமுறையினர் அனைவரிடமும் எந்நேரமும் வெளியில் வரக்கூடிய மிருகம் தூங்கிக் கொண்டு இருக்கிறது. இளைஞர்களே நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

ஆரூர் மூனா செந்தில்




Saturday, February 16, 2013

இஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு


BE (Civil) 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவமுள்ளவர்கள் தேவை.

காலியிடம் பத்து

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 2500 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

--------------------------------------------------

B.Sc (Catering) 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

இரண்டே நாளில் விசா.

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1700 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


--------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1800 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Friday, February 15, 2013

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்


நான் படித்த பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.எனது போதி மரம். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன். கல்வியாண்டு 1990 - 1997 வரை. திருவாரூரில் கமலாலயம் தென்கரையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் ஆண்டுகாலம் நூறாண்டுக்கும் மேல். பள்ளி துவங்கிய போது பள்ளியின் பெயர் போர்டு ஹை ஸ்கூல். எனது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், முரசொலி மாறன், எழுத்தாளர் சின்னக்குத்தூசி, தோழர் தியாகு ஆகியோர். மற்றபடி சொல்லிக்கொள்வது போல் நான் தான் (போதும்டா உன் சுயபுராணம், ஸ்கூலைப் பத்தி மட்டும் சொல்லு).


எனக்கு வீடு வடக்கு வீதியில் இருந்தது. அங்கிருந்து வெட்டவாசப்படி வழியாக பெரிய கோயிலின் உள் நுழைந்து கமலாம்பாள் சன்னதி வழியாக மேலவீதி நுழைவாயிலின் வழியாக வெளி வந்து கமலாலய படிக்கட்டின் வழியாக நடந்து சென்று முராசன்ஸ் பிள்ளையார் சன்னதியில் மேல் ஏறி பள்ளிக்கு செல்வோம். ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் இது நடந்தது. எட்டாம் வகுப்பு தொடங்கியதும் என் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அதன் பள்ளி இறுதி வகுப்பு முடியும் வரை சைக்கிள் பயணம் தான்.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியர் திரு. மகாதேவன் அவர்கள். அவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு அது மணியடிக்கும் முன் வரும் மகாதேவன். அதாவது பள்ளி துவங்கும் நேரம் காலை மணி 10, ஆனால் அவர் 9.30 மணிக்கே வகுப்புக்கு வந்து பாடம் எடுப்பார். பள்ளி மைதானத்தில் பே பே, கிரிக்கெட் மட்டும் தான் விளையாட முடியும். மற்ற பள்ளிகளுக்குரிய எந்த விளையாட்டுகளும் அதாவது வாலிபால், பேஸ்கட் பால் மற்றும் எந்த விளையாட்டுகளும் எங்களுக்கு கி்டையாது. பெரிய கோயிலின் வெளி பிரகாரத்தில் தான் பள்ளி இல்லாத நாட்களில் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த வயதிற்குரிய குறும்பு அவ்வளவே.


ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்புகளில் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் P.G. சுப்பிரமணியன், அந்த காலக்கட்டம் தான் பெண்கள் பற்றிய ஈர்ப்புகளும் அவர்களைப் பற்றிய ரகசிய பேச்சுகளும் துவங்கிய காலம், சைட் அடிப்பதில் துவங்கி பலான புத்தகம் படிப்பது வரை அறிந்து கொண்ட காலம். அப்பொழுது செங்கம் தியேட்டரில் ஜாக்கிசானின் ஆபரேசன் காண்டர் என்றொரு படம் வந்தது. அந்தப்படத்தில் ஒரு நொடிக்காட்சியில் ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் காண்பிக்கிறார்கள் என்று முதல் நாள் தனது அண்ணனுடன் சென்று பார்த்து வந்த சேத்தமடையான் சொன்னான். பிறகென்ன வகுப்பில் இருந்த தினேஷ், பிரகாஷ் மற்றும் நான் ஆகியோர் ஒரு திட்டமிட்டோம்.

முதல் முறையாக ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் திரையில் பார்க்க ஆசைப்பட்டதால் வந்த வினை இது. அப்பொழுது 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்ததால் காலையில் பள்ளி விடுமுறை, மதியம் மட்டுமே பள்ளி உண்டு. மறுநாள் வீட்டில் காலை எங்கள் டியூசன் ஆசிரியரின் வீட்டில் ஆண்டு விழாவுக்காக பெஞ்சு நகர்த்த வேண்டியிருக்கிறது. அதனால் நான் டியூசன் சென்று அதனை முடித்து விட்டு 1மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்கிறேன் என்று என் அம்மாவிடம் கூறி விட்டு நாங்கள் மூவரும் சினிமாவுக்கு 11மணி காட்சிக்கு சென்று விட்டோம். படம் துவங்கியவுடன் கரண்ட் போய் விட்டது.

அந்த தியேட்டரில் ஜெனரேட்டர் கிடையாது. வேறு வழி அந்த சீனை பார்த்தே ஆக வேண்டுமென்று தியேட்டரிலேயே அமர்ந்திருந்தோம். 12.30 க்கு தான் கரண்ட் வந்தது. அந்த சீன் வரும் வரை போக கூடாது என்று முடிவு செய்து அமர்ந்து விட்டோம். படம் முடியும் போது மணி 2. வீட்டிற்கு வந்தால் அம்மா மட்டும் தான் இருந்தார். உள்ளே சென்றதும் முதல் பளார் விழுந்தது, எங்க பொறுக்கிட்டு வந்த என்றார். என்னம்மா ஆச்சு என்றேன். இரண்டாவது பளார். ரைட்டு எஸ்கேப்பாகனும் என்று நினைத்து பள்ளிக்கு நேரமாகி விட்டது கிளம்பனும் என்று கிளம்பி விட்டேன்.

பள்ளிக்கு சென்றால் என் வகுப்பாசிரியர் வகுப்பில் அழுது கொண்டிருந்தார். நான் உள்ளே சென்றதும் நான் உன்னை என் வீட்டிற்கு வர சொன்னேனா என்றார். இல்லை என்று சொல்வதற்கு முன் அவரிமிருந்து பளார் விழுந்தது. அவ்வளவு தான் அரைமணிநேரத்திற்கு என்னை சாத்திவிட்டார். எனது பெஞ்ச்சை பார்த்தேன் என்னுடன் படம் பார்த்த தினேஷூம் பிரகாஷூம் சிரித்து கொண்டிருந்தனர். அன்று முழுவதும் என்னை முட்டி போட சொல்லி விட்டார். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. என் அம்மா எதற்கு அடித்தார். வகுப்பாசிரியர் எதற்கு அடித்தார். என்னுடன் படம் பார்தத இருவரும் எப்படி தப்பித்தனர்.

மாலை வரை முட்டி போட்டு அமர்ந்திருந்தேன். மண்டைக்குள் குடைந்தது காரணம் என்ன என்று. பள்ளி முடிந்ததும் வெளியில் வந்து வகுப்பாசிரியரின் பக்கத்து வீட்டுக்காரனும் என் வகுப்பு தோழனுமான ராமலிங்கத்திடம் கேட்டேன். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. நான் அம்மாவிடம் 1மணிக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தியேட்டரில் அமர்ந்திருந்ததால் போகவில்லை.


01.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து சாப்பிட வந்த என் அப்பாவிடம் அம்மா என்னைக் காணும் என்று சொல்லி அழ அப்பா என் ஆசிரியரின் வீட்டிற்கு 10 பேருடன் சென்று என் செய்தாய் என் மகனை என்று மிரட்டியிருக்கிறார். பயந்து போன ஆசிரியர் தான் அழைக்கவேயில்லை என்பதை சொல்லியிருக்கிறார். அத்துடன் என் அப்பா அலுவலகம் சென்று விட்டிருக்கிறார். இதுவரை இருவரிடம் வாங்கியாகிவிட்டது. அடுத்தது அப்பா தான். ஆனால் அவர் காட்டுத்தனமாக அடிப்பாரே என்று பயம் வேறு. சாயந்திரம் முழுவதும் பயந்து கொண்டே வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். என் அப்பா வந்தார்...

எங்கள் வீ்ட்டில் ஒரு மரக்கட்டில் உண்டு. வீட்டின் கூடத்தின் மூலையில் அது இருக்கும். என்னை தரதரவென்று இழுத்து கட்டிலின் கீழ் தள்ளி விட்டார். அவர் கையில் கிரிக்கெட் பேட். கட்டிலின் கீழிருந்து வெளியேற அனைத்து பக்கமும் அடைபட்டிருந்தது. கட்டிலின் கீழ் என்னை குறி வைக்காமல் அவர் பாட்டுக்கு பேட்டை வீசுகிறார். நான் எந்த பக்கம் சென்றாலும் அடி விழுகிறது. அரைமணிநேரம் அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். பாவம் அவருக்கு கை வலித்திருக்கும் போல.

உடம்பு முழுக்க காயம் வீட்டிலும் யாரும் மருந்து போடக்கூட தயாரில்லை. இரவெல்லாம் அழுது கொண்டே யோசித்தேன். எப்படிடா அப்பாவுக்கு கட்டிலின் அடியில் விட்டு விளாச யோசனை வந்தது. நாமோ அவர் எப்படி அடித்தாலும் இரண்டாவது அடிக்குள் வீட்டை விட்டு வெளியில் ஒடி விடலாம் யோசித்து வைத்திருந்தோமே. கரெக்டாக கட்டிலின் கீழ் லாக் ஆகி விட்டோமே என்று. வீட்டில் அனைவரும் என்னுடன் சரியாக பேச 15 நாட்கள் ஆனது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் நான் தான் வகுப்புத் தலைவன். அது வரை எங்கள் பள்ளியில் Sports Activities என்பதே இல்லாமல் இருந்தது. திரு. இளங்கோவன் அவர்கள் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வந்து சேர்ந்தார். அதன் பிறகு தான் முதல்முறையாக பள்ளிக்கென ஹாக்கி டீம் உருவாக்கப்பட்டது. நான் தான் ஜூனியர், சீனீயர் இரண்டு டீம்களிலும் கோல் கீப்பர். ஏனென்றால் வயது இரண்டுக்கும் சரியாக இருந்தது, உருவமும் கடாமுடாவாக இருந்தது. அது வரை ஹாக்கியை டிவியில் மட்டுமே பார்த்திருந்த நாங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம்.

டீமில் இருந்த அனைவரும் புதியவர்கள். அதுவரை விடிந்தே எழுந்த நான் ஆசிரியரின் கண்டிப்பால் காலை 4 மணிக்கே எழுந்து திருவாரூர் தெப்பக்குளமான கமலாலயத்தை சுற்றி ஒட ஆரம்பித்தேன். குழுவில் இருந்த அனைவரும் தான். ஒரு முறை சுற்றவே 1.5 கி.மீ வரும். ஆறு ரவுண்டு கண்டிப்பாக ஒடவேண்டும். அதன் பிறகு அங்கிருந்து நேராக திரு.வி.க கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்று பயிற்சி. 11 மணி வரை விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தால் சராசரியாக நான் முப்பது இட்லி தின்பேன். இப்பொழுதெல்லாம் நாலுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. எல்லாம் காலம்.

நாங்கள் விளையாட்டு குழுவில் இருந்ததால் பள்ளிக்கு மதியம் அரை நாள் சென்றால் போதும். மூன்று மாதம் பயிற்சிக்கு பிறகு டிவிசனல் லெவல் போட்டிகள் துவங்கியது. ஜூனியர் அணிக்கான போட்டி எங்கள் பள்ளி அணிக்கு எதிராக மன்னார்குடி பின்லே பள்ளி அணி களமிறங்கியது. 0-1 என்று தோல்வி. சில நாட்களுக்கு பிறகு சீனியர் அணிக்கான போட்டி எதிரணி மன்னார்குடி நேஷனல் பள்ளி அணி. அதில் குறிப்பிட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்டில் எனக்கு அடிபட்டதால் எனக்கு பதில் கணேஷ் என்ற நண்பன் கோல் கீப்பராக இருந்தான். அதிலும் 0-1 என்ற கணக்கில் தோல்வி. அத்துடன் பள்ளி விளையாட்டு முடிவுக்கு வந்தது.

அதிலும் ஒரு கலாட்டா நடந்தது. எங்கள் பள்ளிக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ஒரே மேனேஜ்மென்ட் தான். அந்த பள்ளியில் உள்ள ஹாக்கி டீம் தமிழ்நாடு லெவலில் சாம்பியன். நாங்களோ முதல் முதலாக விளையாடுபவர்கள். எங்கள் பள்ளியின் தாளாளர் ஒரு யோசனை சொன்னார். இந்த பசங்களுக்கு பெண்கள் அணியுடன் விளையாட வைத்தால் நல்ல பயிற்சி கிடைக்கும் என்று. பசங்களுக்கோ ஒரு பக்கம் பெண்களுடன் விளையாடுவதனால் கடுப்பும் அதே சமயம் கிளுகிளுப்புமாக இருந்தது. போட்டி கல்லூரி மைதானத்தில் துவங்கியது. அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க கமெண்ட் அடிக்க அது பெண்கள் அணியின் ஆண் கோச்சுக்கு கேட்டு விட்டது. என்னை நோக்கி கோபத்துடன் நடந்து வந்தார்.

நேரே என்னிடம் வந்த கோச் எப்படி நீ இவ்வாறு பேசலாம் என்று கேட்டார் அவ்வளவு தான். அவருக்கு தபதப வென அடி விழுந்தது. அவர் என்னை நோக்கி வந்ததும் ஆட்டக்களத்தில் இருந்த மற்ற நண்பர்கள் எப்படி அந்த கோச் என்னிடம் வந்து பேசலாம் என்று கோபப்பட்டு என்ன ஏதுவென்று விசாரிக்காமல் அவரை பின்பக்கத்திலிருந்து அடி வெளுத்து விட்டார்கள். பிறகு பள்ளித் தாளாளர் வரை பிரச்சனை சென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகே பிரச்சனை முடிந்தது.

பத்தாவது தான், நான் என் நண்பர்களுடன் பிட்டு படங்களுக்கு செல்ல ஆரம்பித்தக் காலம். திருவாரூரில் செங்கம் மற்றும் பேபி ஆகிய தியேட்டர்களில் பிட்டு படங்கள் போடுவார்கள். டிக்கெட் 4 ரூபாய் தான் இருக்கும். முக்கால்வாசி மதிய நேரங்களில் தியேட்டரில் தான் இருப்போம். சில நாட்களில் எங்கள் பள்ளியின் உதவி தலைமையாசிரியாராக இருந்த ராஜமாணிக்கம் வாத்தியாரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்து விடுவார். அவரைப் பார்த்தவுடன் மறைவாக போய் பால்கனியில் அமர்ந்தெல்லாம் படம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அந்த இரண்டு தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன.

அப்பொழுது தான் சிராக்கோ என்ற உலகப்புகழ் பெற்ற ஆங்கில பிட்டுப் படம் வந்தது. திருவாரூரிலேயே 80 நாட்களுக்கு மேலாக ஓடிய படம் அது. கிட்டத்தட்ட அந்தப்படத்தை 40 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். போதும், இதற்கு மேல் அசைவமாக வேண்டாம்.

அதே போல் பெண் பிள்ளைகளை சைட் அடிக்க ஆரம்பித்த நேரமும் இது தான். முதல் பெண்ணின் பெயர் புவனி*. திருவாரூரில் புதுத்தெருவில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறம் அவர்கள் வீடு இருந்தது. அவள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோகோ விளையாட்டில் வீராங்கனையாக இருந்தாள். அவர்கள் தினமும் பயிற்சி செய்யும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளிக்கு நானும் என் நண்பன் கணேசும் சைக்கிளில் செல்வோம். அங்கு அவள் பயிற்சி முடியும் வரை காத்திருந்து அவளுக்கு பின்னாலேயே வீடு வரை வருவோம். ஏன் அவனுடன் என்றால் அவனும் அவளை சைட் அடித்தான். எங்களுக்குள் ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருந்தது. அவள் யாரை நோக்குகிறாளோ மற்றவர் விலகி விடுவது என்று. ஆனால் நடந்ததே வேறு. அவள் வேறு ஒருவனை காதலித்து அந்த வயதிலேயே வீட்டை விட்டு ஒடி விட்டாள்.

சில நாட்கள் நாங்கள் விரக்தியுடன் திரிந்தோம். இந்த பெண் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே. என்று முழுதாக முளைக்காத தாடியை வைத்துக் கொண்டு சோகமாக திரிந்தோம். பிறகு ஒரு நாள் மடப்புரம் தெட்சணாமூர்த்தி மடத்தில் புவனி1*ஐப் பார்த்தோம். பிறகென்ன மீண்டும் ஷேவிங் செய்து கொண்டு மனதில் கனவுகளுடன் வியாழக்கிழமை தோறும் மடத்திற்கு சென்றோம் அவளுக்காக. இந்த கணேஷ் பயலும் என்னுடனே சேர்ந்து அவளுக்காக மடத்திற்கு வந்தான். பிறகு அந்த பிகரும் ஊத்திக் கொண்டது வேறு ஒரு சோகக்கதை.

பத்தாம் வகுப்பில் ஒரு வழியாக முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று பதினொன்றாம் வகுப்பு அதே பள்ளியில் முதல் குரூப்பில் சேர்ந்தேன். ஏற்கனவே இருந்த நண்பர்கள் குழாம் பிரிந்து புதிய நண்பர்கள் குழாம் அமைக்கப்பட்டது. தினேஷூம் மஞ்ச ரொட்டி விஜயனும் என்னுடன் நெருங்கிய சினேகிதர்களானார்கள். தியேட்டரில் பிட்டு படம் பார்த்த காலம் முடிந்து எவன் வீட்டில் உறவினர்களெல்லாம் ஊருக்கு போகிறார்களோ அடுத்த சிலமணிநேரத்திலேயே விசிஆர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த இரவு முழுவதும் பிட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு நாள் அதிலும் எசகு பிசகாக மாட்டிக் கொள்ள இருந்ததை தனி பதிவாக ஏற்கனவே போட்டிருக்கிறேன்.

பதினொன்றாம் வகுப்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு ஒரு சிறப்பு இருந்தது. ஆமாம் அந்த வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பத்தாம் வகுப்பு படித்தாராம். நாங்கள் கூட அதே கடைசி பெஞ்ச்சில் தான் அமர்ந்திருப்போம். பதினொன்றாம் வகுப்பில் காலாண்டுக்கு பிறகு சுத்தமாக மதியம் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டு ஊர் முழுவதும் சுற்ற ஆரம்பித்து வீணாய் போக ஆரம்பித்தேன்.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நண்பர்கள் குழு புதியதாக தோன்றியது. அதுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் குரூப் மாறி வேறு வகுப்புகளுக்கு சென்றார்கள். நான் படித்த பயாலஜி தமிழ் வகுப்புக்கு அது வரை சற்று தூரத்தில் இருந்த நண்பர்கள் நெருக்கமானார்கள். கிரிக்கெட் வெறித்தனமாக மாறியது. புதுப்புது பெண்களை சைட் அடிக்க முயற்சிகள் துவங்கின.

அந்த நண்பர்கள் குழுவை நான் என்றுமே மறக்க மாட்டேன். அவர்களில் சிலரை குறிப்பிடுகிறேன். இதனை நண்பர்களில் யாராவது படித்தால் உடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். தினேஷ் தற்போது சீனாவில் பிஸினஸ் செய்கிறான். மஞ்ச ரொட்டி விஜயன் திருவாரூரிலேயே ஸ்டீல் ஆர்டர்கள் எடுத்து செய்து கொண்டுள்ளான். சீனிவாசலு இன்று வரை நெருக்கமாக என்னுடன் தொடர்பில் இருப்பவன். சிங்கப்பூருக்கு செல்ல ஆட்கள் ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டுள்ளான். தொளுத்தி அந்தோணிராஜ் திருவாரூரிலேயே ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டுள்ளான். காட்டான் அருண் சிங்கப்பூரில் பெரிய பணியில் இருக்கிறான்.

பாக்கியுள்ள பச்ச மொளகா நாகேஸ்வரன், தொப்பை ரமேஷ், அப்துல் மாலிக், பாரதிராஜா, முருகானந்த ராஜா அம்மையப்பன் பாலாஜி, மாட்டு பாலாஜி, ஸ்ரீதர், அமாவாசை சரவணன் மற்றும் பலர். இவர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. என் மிகச்சிறந்த நண்பனாக இருந்த சுதாகர்ராஜ் திருவாரூரில் சிவில் இஞ்சினியராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டான். அப்புறம் இப்பொழுதும் தொடர்பில் உள்ள ராஜேஷ், அருண் பி.எஸ் (வாத்துன்னு சொன்னா அடிப்பான்), நரேந்திரன், சுரேன் ஆகியோர் படிக்கும் போது சரியான செட்டாக இருந்தது.

அப்பொழுதெல்லாம் மதிய வேளைகளில் கட் அடித்து விட்டு சிங்களாஞ்சேரி கேட் அருகில் உள்ள ஒரு கால்வாய் மதகுக்கு குளிக்க சென்று விடுவோம். 5 மணி வரை குளித்து விட்டு பிறகு கிரவுண்டிற்கு வந்து இருட்டும் வரை கிரிக்கெட் விளையாடி விட்டு தான் வீட்டிற்கு செல்வோம். இது வழக்கமான செயல். வாரத்தில் மூன்று நாட்கள் கண்டிப்பாக சினிமா. ஒரு சமயம் செங்கம் தியேட்டரில் டிக்கெட்டுக்கு கொடுக்க பணம் பத்தாமல் சிலர் மட்டும் காம்பவுண்டு ஏறிக்குதித்தெல்லாம் சினிமாவுக்கு சென்றதுண்டு.

ஒரு சம்பவம் சரியாக 1995 டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டம், அது வரை எந்த பகுதியிலும் போலீஸ் காவல் குறைவாக இருந்த காலக்கட்டம். ஏனென்றால் 1996 ஜனவரி 1லிருந்து தான் திருவாரூர் தனி மாவட்டமாகிறது. இரவு முழுவதும் நண்பர்கள் குடித்து விட்டு விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தத்தில் கூத்தடித்துக் கொண்டு அந்த வழியாக வந்து போகும் வண்டியையெல்லாம் நிறுத்தி ஹாப்பி நியூ இயர் என்று கத்தி கலாட்டா செய்வதுமாக இருந்தோம். எங்களில் அருண் என்ற நண்பன் சரக்கடித்து மட்டையாகி அங்கு படுத்திருந்தான். நாங்கள் இருபது பேர் ரோட்டில் கத்திக் கொண்டு இருந்தோம். ஒரு கார் வந்தது. நாங்கள் நிறுத்தச் சொல்லி கூச்சலிட வண்டி நிற்கவில்லை. நண்பர்கள் கல்லெடுத்து எறிந்து சத்தம் போடவே வண்டி சரக்கென்று நின்றது. ரிவர்ஸில் வந்தது. சற்று வெளிச்சத்துக்கு வந்ததும் தான் தெரிந்தது. அது புதிய எஸ்பியின் கார்.

டேய் போலீஸ் என்று சத்தம் மட்டும் தான் கேட்டது. கார் வந்து நிற்பதற்குள் அந்த இடத்தில் ஒருத்தனையும் காணும் என்னையும் சேர்த்து. காரிலிருந்து எஸ்பி உட்பட நான்கு பேர் இறங்கி இடத்தை சல்லடை போட்டு தேடுகிறார்கள். ஒருவனும் சிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து கார் சென்றது. அதன் பிறகு ஒருத்தன் ஒருத்தனாக தலையை வெளிக்காட்டுகின்றனர். அது மிகப்புதிதாக வளர்ந்து வரும் புறநகர் பகுதி. இருவர் ஒரு வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வருகின்றனர். ஒரு வேலிப்பகுதியிலிருந்து இருவர் வருகின்றனர். எதிர்பக்கம் இருந்த வயல் முழுவதும் மழைத்தண்ணீர் நிரம்பியிருந்தது. அதில் மூழ்கிப்படுத்திருந்த பலர் எழுந்து வந்தனர். நான் எங்கிருந்தேன் என்று கேட்கிறீர்களா, அதற்கடுத்த பிளாட்டில் கட்டுவதற்காக மணல் கொட்டியிருந்தது. அதனுள் நுழைந்து கொண்டிருந்தேன். எல்லோருக்கும் வந்தபின்பு ஒருவனை பற்றி சந்தேகம் இருந்தது.

மட்டையாகி படுத்திருந்த அருண் எங்கே அவன் சைக்கிள் எங்கே என்று. பிறகு கேசவன் தான் சொன்னான், அவன் ஒடும் முன்பு அருணையும் அவன் சைக்கிளையும் பேருந்து நிறுத்தத்தின் மேலே ரூப்பில் தூக்கி போட்டு விட்டு சென்றாக. இன்று வரை எத்தனையோ புத்தாண்டு கொண்டாட்டத்தை பாரத்து விட்டேன். அது போல ஒரு திரில் கிடைக்கவேயில்லை. அன்று யாராவது ஒருவர் மாட்டியிருந்தால் போதும் அத்தனை பேரின் ஜாதகமும் போலீஸ் கையில் போயிருக்கும்.

அதன்பிறகு பள்ளிப்படிப்பை முடிப்பேனா என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர்களுக்கும் வந்து விட்டது. எனவே பள்ளிப்படிப்புடன் திருவாரூரில் இருந்தால் உருப்பட மாட்டேன் என்று சென்னைக்கு மூட்டை கட்டி விட்டார்கள். அதன் பிறகு சென்னை வந்து ஐசிஎப்பில் படித்து இன்று வேலைக்கு செல்வது வரை அதிசய வரலாறு தான்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. தம்பி தியாகேசன் திருவாரூரிலிருந்து பள்ளியைப் பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டான். ஏற்கனவே எழுதியதை சொன்னதும், மீள்பதிவு செய்து தரும்படி கேட்டான். தம்பி தியாகேசனுக்காக மீள்பதிவு செய்யப்படுகிறது. ஏற்கனவே மூன்று நான்கு பதிவாக போட்டதை ஒன்றாக இணைத்ததால் கொஞ்சம் பெரிய பதிவாக ஆகி விட்டது, நண்பர்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும்.


Thursday, February 14, 2013

பஞ்சேந்திரியா - அபிஅப்பாவும், காதலில் ஊடலும்

எனக்கு பொதுவாக அபிஅப்பாவின் திமுக சித்தாந்தம் பிடிக்கவே பிடிக்காது. அவரிடமே பல முறை என் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறேன். பல சம்பவங்களை பூசி மெழுகி திமுகவுக்கு சப்போர்ட் பண்ணும் போது அப்படியே அவரை கடல்ல தூக்கிப் போடும் அளவுக்கு கோவமும் வந்ததுண்டு.

ஆனால் அவரின் வாழ்வியல் கட்டுரைகள், நான் அவரை வணங்க காரணம். நான் பதிவுலகிற்கு வரும்போது பெரிய எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. நான் கிறுக்கினதை நாலுபேர் படிக்க வேண்டும். அவ்வளவு தான், அதுவும் சில சமயங்களில் என்ன எழுதுவது என்று கூட தெரியாமல் பல கட்டுரைகளை காப்பியடித்து இருக்கிறேன்.

ஆனால் அபிஅப்பாவின் கட்டுரைகளை படித்த பின்பு தான், நான் எதுவாக ஆக வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அவருக்கே தெரியாமல் அவரின் பல கட்டுரைகளை சுட்டு என்னுடையதாக பல மாற்றங்களுடன் வெளியிட்டு இருக்கிறேன்.

அவரின் பல கட்டுரைகளை எத்தனை முறை படித்து இருப்பேன் என எனக்கே தெரியாது. அதுவும் அந்த ரவா தோசை மேட்டர், விமானத்தில் நம்பர் எழுதிய அப்பாவியை கலாய்த்தது, கேஎப்சியில் போய் சாப்பிட்டது, இன்னும் பல கட்டுரைகள்.

அதிலும் முக்கியமாக போஸ்டர் ஒட்டுவது எப்படி என்ற அவரது முதல் கட்டுரையை படித்து இரண்டு நாட்கள் அவரது காமெடியை ஜீரணிக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் அந்த கட்டுரையை அவர் ஒரு வரிகூட தட்டச்சு செய்யாமல் பேப்பரில் முழுவதும் எழுதிக் கொண்டு அதனை வைத்து மற்றொரு கட்டுரையிலிருந்து ஒவ்வொரு எழுத்தாக காப்பிபேஸ்ட் பண்ணியது என்று தெரிய வந்ததும் அண்ணனின் சமயோசித அறிவை எண்ணி வியந்தேன்.

இன்று இல்லாவிட்டாலும் பத்து வருடம் கழித்தாவது என் கட்டுரைகளில் அபிஅப்பாவின் சாயல் இருக்கும். அவர் அளவுக்கு நகைச்சுவை என் எழுத்தில் இருக்கும். அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன். ஹாட்ஸ் ஆப் டூ அபிஅப்பா என்னும் தொல்ஸ் அண்ணா.

கொஞ்ச நாளாக அபிஅப்பா நகைச்சுவை கட்டுரைகளை எழுதுவதில்லை. திமுக ஆதரவு கட்டுரைகளை மட்டுமே எழுதிக் கொண்டு இருக்கிறார். அது தான் வருத்தமாக இருக்கிறது. இனியாவது வழக்கம் போல நகைச்சுவை கட்டுரைகளை எழுதி அசத்துவார் என காத்திருக்கிறேன்.

--------------------------------------------------

யார்ரா இவன்.


--------------------------------------------------

காதலில் பிரச்சனை ஏற்பட்டா மனதில் வலி வரும்னு சினிமாவில் கேள்விப்பட்டு இருக்கேன். இது எப்படிடான்னு கிண்டல் பண்ணியும் சிரிச்சிருக்கேன்.

சிறு வயதில் ஒரு பெண்ணை காதலித்து தோல்வியடைந்து, அதனால் பொதுப்பணித்துறை அரசாங்க வேலையை விட்டு விட்டு தண்ணியடித்து வீணாப்போய் ஒரு கட்டத்தில் தெளிந்து இன்று கும்பகோணம் வெங்கட்நாராயணா ஹோட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டிருக்கும் என் மாமா காதல் உலகத்துக்கே மிகச்சிறந்த உதாரணமாவார்.

ஆனால் எனக்கு இந்த விஷயம் பட்டுத் தெரிய வேண்டியிருந்தது. என் வூட்டம்மாவிடம் காதலைச் சொல்லி நல்லபடியாக தினம் 500 எஸ்எம்எஸ், குறைந்தபட்சம் 2 மணிநேரம் போனில் அரட்டை என்று போய்க் கொண்டு இருந்தது.

ஒரு நாள் அதற்கு ஒரு வேட்டு வந்தது. ஒரு விஷயத்தில் வாக்குவாதம் பெருகி ஒரு இடைவெளி விழுந்தது. அன்றிலிருந்து 15 நாட்கள் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. அந்த பதினைந்து நாட்களும் நான் பட்ட பாடு இருக்கிறதே, படுத்தால் தூக்கம் வராது. விடிய விடிய விழித்துக் கொண்டு இருப்பேன். விடியற்காலையில் அசந்து தூங்கிப் போய் வேலைக்கு தாமதமாக போய் திட்டு வாங்குவேன்.

சாப்பிடத் தோணவே தோணாது. பைக் ஒட்டிக் கொண்டு வெளியில் சென்றால் நான் எங்கு செல்கிறேன் என்றே தெரியாது. கவனம் சிதறிப் போய் சிக்னலில் போலீஸிடம் மாட்டிக் கொண்டதும் உண்டு. எவ்வளவு சரக்கடித்தாலும் போதை வராது.

ஆனால் நாலு கிளாஸ் தாண்டியதும் அழுகை மட்டும் வரும். பதினைந்து நாளும் நரகத்தில் இருப்பது போலவே இருந்தது. பிறகு சண்டையே போட மாட்டேன் என்று என் நான்கு தலைமுறை முன்னோர் மேல் எல்லாம் சத்தியம் செய்து தான் சமாதானமானேன்.

ஆனால் இன்று எப்படா ஊருக்கு போவாள் என்று மனது ஏங்குகிறது. எழும்பூரில் ரயில் ஏற்றிவிடும் வரை நல்லவன் வேசம் போட்டு ரயில் கிளம்பியதும் ஒரு ஆப் அடித்து விட்டு என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று கத்தத் தோன்றுகிறது. என்ன வாழ்க்கைடா இது.

-------------------------------------------

நோ கமெண்ட்ஸ்.


----------------------------------------------------------

எவ்வளவோ முறை விமானத்தில் சென்றிருக்கிறேன். ஒரு முறை ஓவராக தண்ணியடித்து விட்டு நினைவே இல்லாமல் பிரியாணி திங்கக்கூட விமானத்தில் ஐதராபாத் சென்று இருக்கிறேன். அப்பொழுது கூட இது போல் ஒரு பரவசம் ஏற்பட்டது இல்லை.

ஆனால் சென்ற வாரம் நடந்த ஒன்னு விட்ட தம்பியின் திருமணத்திற்காக ஊருக்கு செல்ல முன்பதிவு செய்ய முயற்சிக்கும் போது அனைத்து வகுப்புகளும் நிறைந்து விட்டது. முதல் வகுப்பு ஏசி மட்டுமே டிக்கெட் அவைலபிள் இருந்தது.

இது வரை போனதில்லை, சரி முயற்சித்து பார்த்து விடுவோம் என்று டிக்கெட் எடுத்து விட்டேன். முன்பதிவு இல்லாத பெட்டியில் செல்ல எனக்கு கட்டணம் கிடையாது. அல்லது 3வது ஏசியில் முன்பதிவு செய்யவும் கட்டணம் கிடையாது. ஆனால் முதல் வகுப்பு ஏசி டிக்கெட் எடுக்க முழுக்காசையும் கட்டியாக வேண்டும். ஒரு டிக்கெட் 1300 ரூவாய். மூன்று முறை பேருந்திலோ அல்லது ஸ்லீப்பர் ரிசர்விலோ போய் வரலாம்.

டிக்கெட் எடுத்ததும் கிளம்பும் நாள் வரை பரவசமாகவே இருந்தது. பார்க்கும் நண்பர்களிடமும், சொந்தக்காரர்களிடமும் இதையே சொல்லிக் கொண்டு இருந்தேன். பந்தாவுக்கு தான் என எனக்கும் தெரியும். டிக்கெட் கிடைத்த பந்தாவை எப்படித்தான் வெளிப்படுத்த முடியும்.

சென்ற வாரம் எழும்பூரில் ரயில் ஏறினேன். ஏறும் போது பயங்கர பெருமிதம். சாதாரணமாக நான் ஊருக்கு செல்ல புறநகர் ரயிலில் ஏறி சென்ட்ரல் வந்து பூங்காவில் ஏறி எழும்பூரில் இறங்கி ஊருக்கு செல்லும் ரயில் பிடிப்பேன்.

அன்று முதல் வகுப்பு ஏசியில் டிக்கெட் எடுத்திருந்ததால் டிராவல்ஸ்ஸில் கார் புக் செய்து 3000ரூவாய் காசு கொடுத்து எழும்பூரில் இறங்கினேன். தெண்ட செலவு என்று எனக்கும் தெரியும் ஆனால் பந்தா யாரை விட்டது.

ரயிலில் ஏறி படுக்கையிலும் படுத்தாகி விட்டது. பெருமையில் தூக்கமே வரலை. ஏசி முதல் வகுப்பு பெட்டி எப்படி தூக்கம் வரும். சில மணிநேரத்திலேயே ஊர் வந்து விட்டது. எனக்கோ சப்பென்று ஆகிவிட்டது. என்னடா இப்பத்தான் ஏறி உக்கார்ந்தோம். அதுக்குள் ஊர் வந்து விட்டது என்று.

ச்சே, அடுத்த முறையாவது நாம் டில்லி போன்ற தொலைதூர ஊருக்கு டிக்கெட் புக் செய்து போவோம். என்று நினைத்தேன். ஆனால் எனக்கு டில்லியில் யாரையும் தெரியாது. சும்மா போய் இறங்கி திரும்ப அடுத்த ரயிலை புடித்து வருவோம் என்று நினைத்தேன். டிக்கெட் புக் செய்ய ஆன்லைனை ஓப்பன் செய்தால் டிக்கெட் விலை 4900 ரூபாய் என்று காண்பித்தது. இந்த கட்டணத்தில் விமானத்திலேயே டிக்கெட் புக் செய்யலாம் என்று தெரிந்தவுடன் சிஸ்டம்மை ஷட்டவுன் செய்து விட்டு தூங்கி விட்டேன்.

இனிமேல் என் பாஸ்(PASS)க்கு எந்த வகுப்போ அதிலேயே பயணிக்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன். ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாதுடா சாமி.

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, February 13, 2013

காதலர் தின அனுபவங்கள்

இன்றைய காலக்கட்டங்களில் சிறுவயது பசங்களுக்கு கூட காதலர் தினம் என்றால் என்னவென்று தெரிகிறது. இன்றைய தொலைக்காட்சிகளும், இந்துத்வா அமைப்புகளும் பிரபலப்படுத்தி விட்டன.


ஆனால் நம்புங்கள் எனக்கு 18வயது வரை காதலர் தினம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. முதல் முதலாக 1998 பிப்ரவரி 14 அன்று தான் அப்படி ஒன்று இருப்பதே தெரிய வந்தது. அதன் பிறகு சென்ற ஆண்டு வரை நானும் என் நண்பர்களும் இந்த காதலர் தினத்தில் படாத பாடு பட்டு இருக்கிறோம்.

1998ம் ஆண்டு காதலர் தினத்தின் போது நடைபெற்ற சம்பவங்களை பகிர்ந்தாலே ஒரு பதிவு வரும் அவ்வளவு கூத்துக்கள் அன்றைய தினத்தில் நடந்தது. என் வகுப்பில் 25 ஆண்கள், 18 பெண்கள் படித்தோம். மொத்த கல்லூரியில் 600 பேருக்கு மேல் படித்தோம்.


அந்த ஆண்டு ஏகப்பட்ட இணைகளுக்கு ஈர்ப்பு மட்டுமே இருந்தது. அதனை காதலாக மாற்ற முயற்சித்தது பிப்ரவரி 14 அன்று. ஆனால் பெரும்பாலானோருக்கு கிடைத்தது பல்பு மட்டுமே. அன்றைக்கு குடிகாரனாவர்கள் ஏராளமானோர். அவற்றில் சில பெண்களும் அடக்கம் என்பது தான் ஜீரணிக்க முடியாத கொடுமை.

ஆனந்த் என்ற நண்பன் ஒருவன் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை அதுவரை மனசுக்குள் காதலித்து வந்தான். ஆனால் அவன் ஒரு கஞ்சன். கையேந்தி பவனில் தின்ன தோசைக்கு காசு கொடுக்கக்கூட யோசிப்பவன். அவன் அன்று காதலை ஜெயஸ்ரீயிடம் சொல்ல முடிவெடுத்து 10 ரூவாய்க்கு கிரீட்டிங் கார்டு வாங்கி வந்தான்.


அதனை கொடுக்கும் போது இங்கிலீஷில் கவிதை சொல்ல முடிவெடுத்தோம். எங்களில் யாருக்கும் இங்கிலீஷில் கவிதை தெரியாததால் பக்கத்து செக்ஷனில் இருந்த ராபர்ட்டிடம் ஒரு கவிதை கடன் வாங்கி அவனுக்கு கொடுத்தோம், அவனும் செய்முறை லேப்பின் பின்புறத்தில் நின்று ஒரு மணிநேரம் மனப்பாடம் செய்து வந்தான்.

வகுப்பு முடியும் போது வாழ்த்து அட்டையை கொண்டு போய் ஜெயஸ்ரீயிடம் கொடுத்து ஆங்கிலத்தில் கவிதை சொல்லி ஐ லவ்யூ என்றான். அதற்கு ஜெயஸ்ரீ "ஆனந்த், நான் உனக்கு சரிப்பட மாட்டேன். உன்னால் என்னை பைக்கில் ஏற்றிக் கொண்டு வெளியில் அழைத்து செல்ல முடியுமா, வாரம் இரண்டு முறை தியேட்டருக்கு அழைத்து செல்ல முடியுமா, தினமும் பிட்ஸா கடைக்கு அழைத்து சென்று வாங்கித் தர முடியுமா" என்று கேட்டதும் அங்கேயே கார்ட்டை கிழித்துப் போட்டு வந்து விட்டான்.


எங்களிடம் வந்து "மாப்ள அது காஸ்ட்லி காருடா என்னால் மெயிண்ட்டெயின் செய்ய முடியாது" என்று கூறி விட்டு ஒயின்ஷாப்புக்கு சென்று குடிக்க ஆரம்பித்தவன் தான். இப்பல்லாம் ஆப் கட்டிங் அடித்தால் தான் பையனுக்கு போதையே ஏறுகிறது.

அதே நாளில் நானும் ஒரு பெண்ணுக்கு கடிதம் கொடுக்க முற்பட்டு மற்ற நண்பர்களின் தோல்விகளை பார்த்து பயந்து போய் அதனை அங்கேயே கிழித்து எறிந்தது எல்லாம் என் வரலாற்றில் வரும். இதே நிலை தான் ஏழுமலை, மணிவண்ணன் மற்றும் கார்த்திக்குக்கும்.

ஆனால் அதே நாளில் காதலை சொல்லி ஜெயித்தவர்களும் உண்டு. சத்தியமூர்த்தி பரிமளாவிடம் சம்மதம் வாங்கினான். தணிகைவேல் கவிதாவிடம் சம்மதம் வாங்கினான். இன்னும் பல காதல்களும் ஜெயித்தது உண்டு. ஆனால் அவை பிறகு தோல்வியடைந்து விட்டதால் அவர்களின் பெயர்கள் வேண்டாம். மேற்கூறிய இரண்டு இணைகளும் பின்னர் திருமணம் செய்து கொண்டு இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு காதலர் தினத்திலும் அந்த சீசனில் நம்முடன் நெருங்கிய நட்பில் இருக்கும் பெண்ணிடம் காதலை சொல்ல முயற்சித்து தயக்கத்தின் காரணமாக பின் வாங்கியதே வழக்கமாக ஆகிவிட்டது.

பத்து வருடத்திற்கு பிறகு வந்த தலைமுறையில் மிகப் பெரும்பாலானோருக்கு காதல் என்பதே சாத்வீகம் என்பதைத் தாண்டி ப்ரோஜகத்திற்கு தான் என்று ஆகி விட்டது.

மூன்று வருடத்திற்கு முன்பு 19 வயதான என் மாமா பையன் ஜானு(ஜானகிராமன்) ஒரு பெண்ணை பார்த்து கரெக்ட் செய்து காதலர் தினத்தன்று கில்மா செய்து விடலாம் என்று திருச்சி பக்கத்தில் உள்ள முக்கொம்புக்கு கொண்டு போய் செடிகளுக்கு மறைவில் மிகத்தீவிரமான ஆராய்ச்சியில் இருக்க அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் இருவரையும் அதே கோலத்தில் எழுப்பி நையப்புடைத்து தாலி கட்டச் சொல்லி மிரட்டியிருக்கின்றனர்.

அவர்கள் அசந்த நேரத்தில் பையன் விட்டால் போதுமென்று அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒடி வந்து இருக்கிறான். மறுநாள் அவனை தேடி வந்த பெண் முகத்தில் காறித் துப்பி விட்டு சென்றாள். அவனோ ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக் கொண்டு அடுத்த பெண்ணிற்கு குறி வைத்தான்.

கடுப்பாகிப் போன நாங்கள் அன்று இரவு அவனை சரக்கடிக்க வா என்று நைசாக பேசி கூட்டிக் கொண்டு போய் நையப்புடைத்தோம். அன்றிலிருந்து நானோ என் தம்பிகளோ இருந்தால் அந்த பக்கமே இன்று வரை வர மாட்டான்.

இவ்வளவு அனுபவத்திற்கு பின்பும் தைரியமாக ஒரு பெண்ணை காதலித்து கரம் பிடித்து விட்டேன். இப்பொழுது கூட ரசித்து ரசித்து காதலர் தின வாழ்த்து அட்டைகள், பரிசுகள் வாங்கிக் கொடுத்து அசத்திக் கொண்டு இருக்கிறேன் என் மனைவிக்கு.


ஆரூர் மூனா செந்தில்

Tuesday, February 12, 2013

கூட்டுக் குடும்பங்கள்

சிறுவயதில் இருந்தே கூட்டுக் குடும்பங்கள் மேல் எனக்கு தீராக் காதல் உண்டு. எதையும் பகிர்ந்து வாழும் வாழ்க்கை என்றுமே சொர்க்கம் தான். ஆனால் எனக்கு தேவையின் காரணமாக அவ்வாறு சிறுவயதில் இருந்தே வீட்டுடன் இருக்க முடியாமல் போய் விட்டது தான் பெரும் வருத்தம்.


இன்று கூட பசுமையாக என் நினைவில் நிற்பது என் தாத்தா வீட்டு வாழ்க்கை தான். அம்மாவின் தாய் வீடு நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூர் என்ற கிராமத்தில் உள்ளது. அந்த ஊரில் உள்ள அனைவருமே எங்கள் சொந்தக்காரர்கள் தான். என் அப்பாவை திருமணம் செய்து கொண்டு திருவாரூர் வந்து விட்ட பிறகும் கூட அம்மாவிற்கு ஆதனூரில் தான் சனி, ஞாயிறு கழியுமாம்.

என் அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு பேர். நான் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு விடுமுறை முழுவதும் ஆதனூரில் தான் கழியும். தாத்தாவிற்கு பிறந்த ஏழு பேர், அவர்களின் துணைகள், வாரிசுகள் என அனைவரும் கோடை விடுமுறைக்கு ஆதனூர் வந்து விடுவர்.


தாத்தா முழு நேர விவசாயி. காலையில் எழுந்து நீராகாரம் குடித்து விட்டு வயலுக்கு சென்று வேலையை துவக்கி வைத்து விட்டு வேப்பங்குச்சியில் பல் துலக்கிக் கொண்டே வீட்டுக்கு வருவார். வந்ததும் பழைய சோத்துடன் முதல்நாள் வைத்த குழம்பை சுண்டக்காய்ச்சியது, நெருப்பில் சுட்டு கருவாடு அல்லது உப்புக்கண்டம் வைத்து திருப்தியாக சாப்பிட்டு விட்டு மீண்டும் வயலுக்கு போய் விடுவார்.

நாங்கள் பேரப்பிள்ளைகள் அனைவரும் அது போலவே அதிகாலையில் அவருடன் எழுந்து வயலுக்கு சென்று விட்டு வயக்காட்டிலேயே காலைக்கடன்களை முடித்து விட்டு தும்பி பிடித்து விளையாடிக் கொண்டு, கொடுக்காப்புளிக்கா எடுத்து தின்று கொண்டு விளையாடிக் கொண்டு இருப்போம்.


தாத்தா போகலாம் என்று சத்தம் போட்டதும் அவருடனே வீட்டுக்கு வரும் வழியில் வேப்பங்குச்சியில் பல்துலக்கிக் கொண்டு வருவோம். அது கசப்பா இருக்கும், முடியாதுன்னு சொன்னா தாத்தா திட்டுவாரேன்னு சும்மா குச்சியை கடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பாட்டியிடம் கொஞ்சம் பேஸ்ட் வாங்கி பல் துலக்கினால் தான் நமக்கு சரிப்பட்டு வரும்.

மாமாக்கள் நால்வரில் மூவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தனர். ஒருவர் மட்டும் சென்னையில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக இருந்தார். என்னதான் இருந்தாலும் வீட்டில் தாத்தாவுக்கு அடங்கிய பிள்ளைகளாகத்தான் இருந்தார்கள். வீட்டில் என்ன சாப்பாடு என்று முடிவு செய்வது முதல் யார் எத்தனை நாட்கள் வீட்டில் இருப்பது என்பது வரை தாத்தா முடிவு தான்.

காலை சாப்பாடு முடிந்ததும் பேரப்பிள்ளைகளான நாங்கள் அனைவரும் தோப்புக்கு விளையாட சென்று விடுவோம். பயங்கர பசியுடன் தான் வீட்டிற்கு வருவோம். மதியம் சாப்பாட்டில் பெரும்பாலும் அசைவம் தான். தாத்தாவின் பேவரைட் கறிக்கோலா உருண்டை குழம்பும் ஆட்டுக்கறி வறுவலும் தான்.


ஒருவேளை இந்த குடும்பம் சாப்பிட ஒரு ஆட்டையே அடிக்க வேண்டியிருக்கும். வீட்டில் கோழி, ஆடு, கின்னிக் கோழி, புறா, வான்கோழி எல்லாமே வளர்ப்பதால் கடையில் வாங்க மாட்டார்கள்.

சாப்பிட்டதும் வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்காக போர்செட்டுக்கு சென்று விடுவோம். ஒவ்வொருத்தருக்கும் எண்ணெய் தேய்த்து ஊறியதும் சீயக்காய் தேய்த்து குளிக்க வைத்து கறையேற்றி விடுவார்கள்.

சாயந்திரம் ஆனதும் தாத்தா குளிக்கப்போகும் போது வீட்டில் உள்ள மாடுகளையும் குளத்திற்கு ஒட்டிச் செல்வார். நாங்களும் ஆளுக்கொரு மாட்டை கொண்டு தேவர்குளத்திற்கு செல்வோம். அதில் எனது பேவரைட் ராமாயி என்ற எருமைமாடு தான்.

குளத்தில் எருமையின் மேல் படுத்துக் கொள்ள கரெக்ட்டாக நான் மூழ்கும் வரை உள்ள அளவுக்கு நீரில் நிற்கும். இருட்டும் வரை குளத்தில் விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்று அனைவரும் வீட்டின் வெளியில் உள்ள புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்போம்.

இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு நெடுநேரம் பேசியிருந்து பிறகு உறங்கிவிடுவோம். இது எனக்கு வருடத்திற்கு இரண்டு மாதம் தவறாமல் நடக்கும். கோடை விடுமுறை முடிந்ததும் திருவாரூர் வந்து விடுவேன். பத்துநாட்களுக்கு மனம் அந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலேயே லயித்துக் கிடக்கும்.

அன்றே முடிவு செய்தேன். நான் மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தை அமைத்து என் தம்பி, ஒன்று விட்ட சகோதரர்கள், அவர்களின் குடும்பங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தான் வாழ வேண்டுமென. ஆனால் மேற்சொன்ன குடும்பமே ஒரு சாவின் காரணமாக அடித்துக் கொண்டு பிரிந்து யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் திசைக்கொருவராக இருப்பது எனக்கு ஜீரணக்க முடியாத சோகம்.

தெலுகில் பத்து வருடங்களுக்கு முன் முராரி என்றொரு படம் வந்தது. இன்று வரை அந்தப் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் நான் இத்தனை முறை விரும்பி பார்த்ததற்கு காரணம் அந்த படத்தில் வரும் இரண்டு அருமையான கூட்டுக் குடும்பங்கள் தான்.

தமிழில் எனக்கு இந்த உணர்வை தந்தது வருஷம் 16. சமீபத்தில் சீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு தெலுகு படம் பார்த்தேன். உணர்ச்சிக் குவியலான அந்த படத்தினை இடைவேளைக்கு பிறகு அழுது கொண்டே தான் படம் பார்த்தேன்.

இன்று வரை எனக்கு என் கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆசை மனதில் பசுமையாக காத்திருக்கிறது. இத்தனை பெரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கையை என் மனதில் வித்திட்ட தாத்தா நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.  மறுபடியும் கூட்டுக்குடும்ப எண்ணம் என் மனதில் துளிர்விட்டு இருக்கிறது. என்றாவது ஒருநாள் என் தம்பிகள் இது புரிந்து ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.




ஆரூர் மூனா செந்தில்

Monday, February 11, 2013

திருவாரூர் பயணக் கட்டுரை - அறியாத தகவல்கள் - அரிய புகைப்படங்கள்


ஆறு நாட்களாக திருவாரூரில் ஜாகை, இன்று இரவு தான் சென்னைக்கு கிளம்புகிறேன். ஒரு முக்கிய கல்யாணம், மிக முக்கிய சாவு என ஆறு நாட்களும் ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு பிஸியோ பிஸி. நாளை சென்னை வந்து இரண்டு நாட்கள் ஒய்வெடுத்தால் தான் உடம்பு சமநிலைக்கு வரும் போல.


ஒன்று விட்ட சகோதரனுக்கு திருமணம், மணப்பெண் எங்க ஊர் என்பதாலும் திருமணத்தை முன்நின்று முடித்தவர் என் அப்பா என்பதாலும் அனைத்து திருமண வேலைகளையும் நாங்களே பார்க்க வேண்டியதாயிற்று.

நாம் சரக்கடிக்காமல், சரக்கடித்த பசங்களுடன் ஒன்று சேர்ந்து திருமணத்திற்கு முன்தின பேச்சிலர் பார்ட்டியை அட்டெண்ட் செய்வதில் இருக்கும் கடுப்பு இருக்கே, அப்பப்பா அதை சொல்லி மாளாது. சில்வண்டு வரைக்கும் ஊறுகாய் எடுத்துத் தரச் சொல்லி கொடுக்கும் டார்ச்சர் இருக்கிறதே, தொண்டை வரைக்கும் கெட்ட வார்த்தைகள் வந்து நிற்கிறது.


விடியற்காலை நாலு மணி வரை குடித்தவனுங்கள் எல்லாம் அதன் பிறகு நகர்வலம் வர ஆரம்பிக்க அதில் சிலரை போலீஸ் விசாரித்து கொண்டிருந்தது. பிறகு அங்கு சென்று விளக்கம் கொடுத்து அவர்களை மீட்டு வந்து அறைக்குள் அடைப்பதற்குள் டங்குவார் அறுந்து விட்டது.

எல்லாரையும் ரூமுக்குள் அடைத்து விட்டு நான் வந்து வீட்டில் படுக்கும் போது மணி 5. 6 மணிக்கெல்லாம் திருமணத்திற்கு செல்ல தயாராக வேண்டுமென்று எழுப்பி விட்டார்கள். திருமணத்திற்கு கிளம்பிக் கொண்டு இருக்கும் போது ஊரிலிருந்து போன் வந்தது என் தாத்தா (அம்மாவின் அப்பா) இறந்து விட்டாரென.


பிறகு அம்மாவை மட்டும் காரில் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு மற்றவர்கள் எல்லாம் திருமணத்திற்கு சென்றோம். அப்பா முன்நின்று நடத்தி வைக்கும் திருமணமென்பதால் தாலி கட்டும் வரை மண்டபத்தில் இருந்து விட்டு பிறகு நாங்களெல்லாம் கிளம்பி தாத்தா ஊரான நீடாமங்கலம் அருகில் இருக்கும் ஆதனூருக்கு சென்றோம்.

தாத்தா பாட்டிகளில் மிச்சமிருந்த கடைசி நபர் இறந்து விட்டார். இனி யாரும் கிடையாது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு ஊருக்குள் சென்றேன். கடைசியாக நான் வளர்ந்த கிராமத்தை கண்கலங்க பார்த்துக் கொண்டே சென்றேன்.


என் தாய்மாமா மொத்தம் 4 பேர். இவர்களில் மூவருடன் பேச்சு வார்த்தை கிடையாது என்பதால் ஊர்பக்கம் வருவதே நின்று விட்டு இருந்தது. தாத்தாவிற்கு காரியங்கள் நடைபெறும் வரை இருந்து விட்டு சுடுகாட்டில் கொள்ளி வைத்ததும் அப்படியே திருவாரூருக்கு கிளம்பி வந்தாச்சு.

நேற்று காலை பால் தெளிப்பு. நானும் தம்பியும் மட்டும் சென்றோம். சுடுகாட்டிற்கு சென்றுவிட்டு பால் தெளிப்பு முடிந்ததும் அப்படியே கிளம்பி விட்டோம். 

நேற்று மதியம் ஒன்று விட்ட தம்பியின் திருமணம் முடிந்து பெண் வீட்டில் கறிவிருந்து. சிலபல குடிகள், சண்டைகள், சமாதானங்களுக்கிடையே பிரியாணியை ருசித்து விட்டு வீட்டுக்கு வந்தாச்சு. 

இன்று பட்டுக்கோட்டையில் மணமகன் வீட்டில் கறிவிருந்து. கிளம்பிக் கொண்டு இருக்கிறேன். அங்கு செட்டிநாட்டு சமையல், அதையும் வெளுத்து வாங்கி விட்டு திரும்ப திருவாரூருக்கு வரவேண்டும். இரவு ரயிலில் கிளம்பி சென்னைக்கு வந்து வழக்கமான வாழ்க்கை முறைக்கு பழக இரண்டு நாள் ஆகி விடும்.

இது போன்ற திருமணங்கள், சாவுகள், கொண்டாட்டங்கள், சின்னச் சின்ன சண்டைகள் தான் இன்னும் என்னைப் போன்ற மனிதர்களை வாழ்வியலுடன் பிணைத்து வைத்திருக்கிறது. இல்லையென்றால் ரோபோ வாழ்க்கை தான் வாழ்ந்தாக வேண்டும்.

அறியாத தகவலையும் அரிய புகைப்படத்தையும் தேடி நீங்கள் வந்தால் அது படிப்பவர்களை உள்ளே வர பிரபல பதிவர்கள் செய்யும் முயற்சி என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன.


ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...