சத்தியமாக இந்த வருடம் வந்த லோ பட்ஜெட் படங்களிலேயே இந்த படம் தான் தரமுள்ளதாக இருக்கும். இன்று காலை வரை இப்படி ஒரு படம் வெளியாகிறது என்று எனக்கு தெரியவே தெரியாது. ஆனால் படம் முடிந்ததும் நானே ஐந்து பேருக்கு போனைப் போட்டு படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்திருக்கிறேன்.
துவங்கிய முதல் காட்சியிலேயே பூஜாவின் பரபரப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அந்த ரயில் பிளாட்பாரத்தில் சின்னப்பெண் மாளவிகாவுடன் ஓடி வந்து ஒரு ரயிலில் ஏறி பயணமாகிறார்.
நிற்க, இந்த படத்திற்கு மட்டும் கதையை ப்ளாட்டாக சொல்ல முடியாது. அதே போல் படத்தின் க்ளைமாக்ஸையும் சொல்ல மாட்டேன். படம் பயணிக்கும் வரிசையிலேயே சொல்கிறேன் சஸ்பென்ஸ் கெடாமல்.
ரயிலில் பயணிக்கும் இவர்களை தேடி ஒரு பவர்புல்லான தொழிலதிபரின் கட்டளைப் படி அமரேந்திரன் ஜான் விஜய்யுடன் தேடியலைகின்றனர். பூஜா மும்பைக்குத்தான் பயணமாகியிருப்பார் என கிளம்புகின்றனர். ஆனால் அவர் ஸ்ரீரங்கம் சென்றிருப்பது தெரியவர பயணத்தை திருப்புகின்றனர்.
ப்ளாஷ்பேக். ஊரில் மிகப்பெரிய மனிதர் ஒருவரின் சல்லாப தேவைக்காக அமரேந்திரன் பாலியல் தொழிலாளி பூஜாவுடன் ஒரு 13 வயது பெண்ணை தேடியலைகிறார். ஒரு குழந்தைகளை கடத்தி மும்பையில் விற்கும் மிகப்பெரிய கும்பலிடம் ஒரு குழந்தை இருப்பது தெரிய வர ஒரு நாள் வாடகைக்கு ஒரு சிறுமியை எடுக்கின்றனர்.
அந்த கும்பலின் தலைவன் மிகப்பெரிய அடியாள் குழுவை வைத்து சமூக விரோத செயல்களை செய்து வருகிறான். அப்படி எடுக்கப்படும் சிறுமியை பெரிய மனிதரிடம் கொண்டு செல்கிறார் பூஜா.தவறு நடக்கப் போகும் சமயத்தில் மனம் திருந்தும் அவர் பெரிய மனிதரை கொடூரமாக தாக்கி விட்டு சிறுமியுடன் தப்பிக்கிறார்.
அந்த பெரிய மனிதரின் மகனின் கட்டளையின் படிதான் உயிருக்கு பயந்து பூஜாவை தேடியலைகிறார் அமரேந்திரன். உதவிக்கு மற்றொரு கிரிமினலான ஜான் விஜய்யை சேர்த்துக் கொள்கிறார். இதற்கிடையில் சிறுமி ஸ்ரீரங்கம் வந்து இருப்பது குழந்தை கடத்தும் கும்பலின் தலைவனுக்கு தெரிய வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் வாழும் லக்ஷமி ராமகிருஷ்ணனிடம் தஞ்சமடைகிறார் பூஜா. அவர்களின் இருப்பிடம் தெரிந்ததும் அமரேந்திரன், ஜான் விஜய், பெரிய மனிதரின் மகன், அவருடன் ஒரு ரவுடிக் குழு, பெரிய ரவுடியின் கையாள் எல்லோரும் தனித்தனியாக ஸ்ரீரங்கம் நோக்கி பயணிக்கின்றனர்.
அவர்களிடம் பூஜாவும் சிறுமியும் சிக்கினார்களா, இருவரையும் வில்லன்கள் கொன்றார்களா, அல்லது ஏதேனும் ஒரு பெரிய ஹீரோ பறந்து வந்து எல்லோரையும் தாக்கி நீதியை நிலைநாட்டினாரா அல்லது படத்தின் முடிவு தான் என்ன என்பதை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்னடா படத்தின் கதையை சொல்லி விட்டானே என்று பதற வேண்டாம், இது படத்தில் வரும் கதை தான். ஆனால் இது படத்தின் மெயின் லைன் இல்லை. அந்த மெயின் லைன் படத்தின் இறுதியில் தெரிய வருகிறது.
உண்மையிலேயே இந்த படத்தின் பேப்பர் ஒர்க்குக்காக இயக்குனர் மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்து இருக்க வேண்டும். சரக்குள்ள இயக்குனர், பின்னாளில் பெரிய ஆளாக கூடிய வாய்ப்பு இருக்கிறது. வாழ்த்துக்கள் பாலாஜி கே குமார்.
பாதிக்கப்படும் சிறுமியாக நடித்துள்ள மாளவிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார். முகபாவங்களை முகத்தில் கொண்டு வரத்தெரியாத நடிகர்களை விசிலடித்து ரசிக்கும் நாம் இந்த சிறுமியின் முகபாவனைகளை கண்டு விசிலடித்ததற்கு வெட்கப்பட வேண்டும்.
கோவம், கிண்டல், சிரிப்பு, பயம். அழுகை என எல்லாத்தையும் முகபாவனையிலேயே அழகாக சொல்லிவிடுகிறார் மாளவிகா. வாழ்த்துக்கள் மாளவிகா.
பூஜா இந்த படத்தில் நடித்ததற்காக பெருமையுடன் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். லாட்ஜில் போலீசிடம் மாட்டிக் கொண்டு தலையில் புடவையை போர்த்திக் கொண்டு வரும் போதும், அமரேந்திரனுடன் காரில் பேசிக் கொண்டே பயணிக்கும் போது உரையாடும் தோரணையிலும், சிறுமியுடன் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் போதும், க்ளைமாக்ஸில் சிறுமியை விட்டு விடும்படி கெஞ்சும் போதும் வாரே வாஹ். வாழ்த்துக்கள் பூஜா.
அமைதியான நடிப்பிலும் வசனமே இல்லாமல் முகபாவனையிலும் கொடூரத்தை காட்டும் வில்லனாக வினோத், அசத்தல். ஒரு நாள் பதிவர் சந்திப்பின் போது டிஸ்கவரி புக் பேலஸில் சாதாரணமாக பார்த்த பையன் இவர். இப்போ நடிப்பில் ஆர்ப்பாட்டமில்லாமல் கலக்கியிருக்கிறார்.
சந்தர்ப்பவாத நடிப்பில் அமரேந்திரனும், ஜான்விஜய்யும் அசத்தி இருக்கிறார்கள். ஒரு டீலிலேயே ஜான் விஜய்யின் பாத்திரப்படைப்பை சொல்லியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
லட்சுமி ராமகிருஷ்ணன் கூட அடடா. பாராட்ட ஆரம்பித்தால் கஞ்சா விற்கும் கிழவி வரை தொடர வேண்டியிருக்கும். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
பின்னணி இசையும் படத்தின் மூடுக்கு நம்மை தக்கவைக்கிறது. அதுவும் சிறுமியை பெரிய மனிதர் அறைக்குள் அழைத்துச் சென்றதும் பூஜா பயந்து கொண்டே படியேறும் காட்சியில் தடக் தடக் என இதயத்தின் ஹார்ட்பீட்டை அதிகரிக்கிறது.
மொத்தத்தில் கவனிக்கப்படாமல் இருக்கும் நாம் கவனிக்கவேண்டிய ஒரு படம். அப்படி செய்யாவிட்டால் மற்றவர்களாலும் கவனிக்கப்படாமலேயே போய் விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
நம்மால் முடிந்தது படத்தை பார்த்து விட்டு நம் நண்பர்களுக்கு இது பார்க்க வேண்டிய படம் போய்ப்பார் என்று சொல்வது தான். நான் செய்து விட்டேன் நீங்கள்.
ஆரூர் மூனா