அதிகாலையில் எழுந்ததும் முதல்நாள் ஊற வைத்த கொண்டைக்கடலையை தின்று விட்டு ரெண்டு பச்சை முட்டையை அலேக்காக தலையில் தட்டி லபக்கென வாயில் கவிழ்த்து கிரவுண்ட்ல .............................
தலைப்பை பார்த்துட்டு இப்படியெல்லாம் நான் டிப்ஸ் கொடுப்பேன்னு நினைச்சிங்கண்ணா சாரி இந்த பதிவு அதைப் பற்றியதல்ல. கஜினி மாதிரி என்னுடைய விடாமுயற்சியும் அதில் நான் பெற்ற அனுபவங்களையும் பற்றிய பகிர்வு இது.
சிறு வயதில் இருந்தே எனக்கு பள்ளியில் பட்டப்பெயர் குண்டா, தடியா தான். ரோட்டில் செல்லும் போது யாராவது யாரையாவது குண்டா தடியா என்று கூப்பிட்டால் அனிச்சையாக திரும்பிப் பார்ப்பேன்.
ஆனால் உடம்பு பிட்டாக இருந்ததால் அது எனக்கு பெரிய விசயமாகவே தோணவில்லை. உடம்பு குண்டாக இருந்த போதும் பத்தாவது படிக்கும் போது ஹாக்கியில் கோல் கீப்பராக இருந்ததால் தினமும் பயிற்சி உண்டு.
அதிகாலையில் கமலாலயம் குளத்தை சுற்றி மூன்று ரவுண்டுகள் ஓடுவேன். அதுக்கப்புறம் திருவிக காலேஜ் கிரவுண்டுக்கு போய் அங்கும் விடாமல் பயிற்சிகள் மேற்கோள்வோம். 12 மணிக்கு பயிற்சி முடிந்த பிறகு சைக்கிளில் வீட்டுக்கு வந்து சாதாரணமாக 25 இட்லி சாப்பிடுவேன்.
அந்த பயிற்சிக்கு அது தேவையானதாக இருந்தது. பத்தாவது பரிட்சை எழுதி முடிந்ததும் நான் என் நண்பர்கள் கணேசன் மற்றும் சண்முகம் ஆகியோர் ஆரூரான் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தோம்.
தினமும் 4 மணிக்கு எழுந்து கமலாலயத்தை சுற்றி ஓடுவோம். 6 மணிக்கு ஜிம்முக்கு போய் பயிற்சிகள் செய்து ஒரு மாதம் வரை அக்குளில் கட்டி வந்த மாதிரியே சுற்றிக் கொண்டு இருந்தோம்.
அதன் பிறகு போரடிக்க ஆரம்பித்தது. காலையில் கணேசன் வீட்டுக்கு வந்து எழுப்பி கூட்டிச் செல்லுவான். கமலாலயம் வந்ததும் முராசன்ஸ் பிள்ளையார் சன்னதியில் உக்கார்ந்து கணேசனிடம் "மாப்ள எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நீ இரண்டு ரவுண்டு ஒடி வா, அதன் பிறகு நான் உன்னுடன் இணைந்து கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு தூங்கி விடுவேன்.
கடைசி ரவுண்டு மட்டும் ஓடி விட்டு ஜிம்முக்கு போய் வந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு அதுவும் போரடித்து அப்படியே இரண்டுக்கும்
ஜூட் விட்டேன்.
அதன் பிறகு கொஞ்ச நாள் இந்த பிட்னஸ் பக்கம் தலைவைக்காமல் இருந்தேன். சில வருடங்களுக்கு பிறகு ஆசை தலை தூக்கியது. அந்த நேரம் நான் ஐசிஎப் கிரவுண்டு எதிரில் உள்ள பள்ளியின் இரண்டாம் தளத்தில் இருந்த மாணவர் விடுதியில் தங்கி அப்ரெண்டிஸ் படித்துக் கொண்டு இருந்தேன்.
காலையில் உடன் தங்கியிருந்த நண்பர்களை அழைத்துக் கொண்டு காலை நாலு மணிக்கு ஐசிஎப் கிரவுண்ட்டில் ரவுண்ட் அடித்துக் கொண்டு இருப்பேன். சில நாட்களில் வழக்கம் போல போர், வழக்கம் போல ஜூட் தான்.
அதுக்கப்புறம் ரொம்ப வருசம் அதுக்குள்ளயே போகல. ஆனால் உடம்பு மட்டும் கட்டுப்பாடில்லாமல் போனது. அந்த காலக்கட்டம் தான் நான் மகாதியானத்தில் மூழ்க ஆரம்பித்த நேரம். 1997ல் 78கிலோ இருந்த நான் 2006ல் 101கிலோவை தொட்டேன்.
எனக்கு ஒரு பெரிய ஆபீசர் இருந்தார். பெரிய என்றால் நான் பணிபுரிந்த கம்பெனியின் தமிழக மண்டல அலுவலகத்தின் மூத்த அதிகாரி. என் எடை எப்போதும் அவருக்கு உறுத்திக் கொண்டே இருக்கும்.
2005 வாக்கில் எனக்கு ஒரு சவால் விடப்பட்டது. அதுவும் அபீசியலாக. ஆமாம். ஜெனரல் மோட்டார் டயட் என்ற டயட்டை நான் பாலோ செய்ய வேண்டும். என்று கம்பெனி எம்டியால் கடிதம் கொடுக்கப்பட்டது.
முதல் முறை நானும் சற்று பயந்து போய் கெடுபிடியாக இருந்தேன். ஒரு வாரத்தில் சட்டென 7 கிலோ இறங்கியது. பிறகு ரெகுலர் டயட். ஒரு வாரத்திற்கு பிறகு மறுபடியும் டயட்.
ஆனால் இந்த முறை பயம் தெளிந்து கிடைத்த கேப்பில் எக்ஸ்ட்ரா உணவுகளை அள்ளி விட ஆரம்பித்தேன். அந்த அளவுக்கு எடை குறையவில்லை, பிறகு ஒரு நாளில் அதுவும் காற்றில் பறக்க விடப்பட்டது.
2007 ஜனவரியில் சென்னை அண்ணா நகரில் உள்ள தல்வாக்கர் என்ற ஜிம்மில் கட்டாயமாக உடம்பை குறைக்க வேண்டுமென உயர் அதிகாரியால் சேர்க்கப்பட்டேன். அதற்கான கட்டணம் ரூ30,000 கம்பெனி கணக்கில் செலுத்தப்பட்டு என் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.
சேர்ந்த அன்று டயட்டிசியன் நாப்பது பக்கத்துக்கு நான் சாப்பிட வேண்டியது சாப்பிடக் கூடாதது லிஸ்ட்டை கொடுத்தது. என் அறையில் இருந்த மற்ற பேச்சிலர் பையன்கள் காலையில் கையேந்திபவனில் ரெண்டு இட்லியை பிய்த்து தின்று விட்டு வேலைக்கு போகும் போது நான் மட்டும் சிறு அடுப்பு வாங்கி வைத்து ஓட்ஸ் கிண்டிக் கொணடு இருப்பேன். கடுப்பாக இருக்கும்.
அந்த சார்ட் படி ஏழு மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும் அதுவும் ரெண்டு சப்பாத்தி மட்டுமே. சாப்பிட்டு பத்து நிமிசத்தில் பசிக்க ஆரம்பித்து விடும். ராத்திரி பசியால் தூங்க முடியாமல் தவிப்பேன்.
ஜிம்மின் உள்ளே செல்லவே எனக்கு மிகுந்த தயக்கமாக இருக்கும். ட்ரெட்மில்லில் திணறித் திணறி ஓடிக் கொண்டு இருப்பேன். பக்கத்து ட்ரெட்மில்லில் சினிமா நாயகி கணக்காக அம்சமான ஒரு பெண் அசால்ட்டாக ஒடிக் கொண்டு இருக்கும். வெட்கமாக இருக்கும்.
ஒர்க்அவுட் செய்யும் போது சில பெண்கள் சில இடங்களில் உள்ள குறிப்பிட்ட சதைப்பகுதியை குறைக்க வேண்டி பக்கத்தில் பயிற்சி செய்து கொண்டு இருப்பார்கள். நான் முழு ஏரியாவையும் குறைக்க பகீர ப்ரயத்தனப்பட்டுக் கொண்டு இருப்பேன்.
இது மட்டுமே சற்று பலனளித்தது. ஏனெறால் காசு கட்டியதால் பல்லைக் கடித்துக் கொண்டு ஜிம்முக்கு போய்க் கொண்டு இருந்தேன். 20 கிலோ வரை குறைந்தேன். அந்த சமயத்தில் காதல் துவங்கி தினமும் நள்ளிரவு போனில் பேசிப் பேசியே நேரத்தை கழித்ததால் அதிகாலை தூங்கி ஜிம்முக்கு போக முடியாமல் போய் அதுவும் பணாலானது.
பிறகு திருமணம் விருந்து என பிஸியானதால் எடை கூட ஆரம்பித்து இப்போது இந்த நிலையை வந்தடைந்திருக்கிறது.
இப்போது ஒரு பேஸ்புக் ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் இணைந்து டயட்டைப் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறேன், ஒரு முறை சோதித்தும் பார்த்து விட்டேன். மற்றவர்களின் டயட் முறைகளை பார்க்கும் போது நானும் டயட்டை துவங்கி குறைத்து விடுவேன் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்த முறை யாரும் என்னை வற்புறுத்தவில்லை. நானாக ஆர்வப்பட்டு ஆரம்பித்திருப்பதால் வந்த நம்பிக்கை இது.
ஆரூர் மூனா