சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, May 27, 2014

அலற வைத்த கத்திரி தினங்கள்

கத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன்று ஏசி புகைந்து விட்டது. 


எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமான புதிதில் வாங்கிய 1.5 டன் ஒனிடா ஸ்ப்ளிட் ஏசி, இது வரை செலவே வைத்தது இல்லை. ஆனால் இந்த சம்மருக்கு எனக்கு ஏழரைக்கு பிள்ளையார் சுழி போட்டது விட்டது. 

முதல் தளத்தில் வீடு இருப்பதால் வெயில் நேரடியாக உள்ளிறங்கி இரவில் வீடு அனலாக தகிக்கும். மற்றவர்கள் மொட்டை மாடியில் தண்ணி தெளித்து வைத்து  ஹாயாக போய் படுத்து விட வீட்டம்மணி அறையை விட்டு வெளியில் வரமுடியாத சூழல். அவருக்கு துணையாக நானும் இருந்தாக வேண்டும்.


முதல் நாள் இரவு வெயிலின் உக்கிரம் புரியாமல் லைட்டாக மகாதியானத்துடன் சென்று படுத்து விட விடியற்காலையில் கிட்னியில் யுரினல் டியுபில் வலி பின்னியெடுக்க ஆரம்பித்தது. அன்று முழுக்க மருத்துவரிடம் செல்லாமல் கைவைத்தியத்தை வைத்தே தள்ளினேன். ஆனால் மாலை வரை வலி நிற்கவேயில்லை.

அப்பா, உடனடியாக கொளத்தூரில் இருக்கும் கிட்னி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவர் என் வலியின் தன்மையை கேட்டறிந்து "இது கிட்னியில் கல் பிரச்சனையாகத்தான் இருக்கும். உடனடியாக ஸ்கேன் எடுக்கவும்" என்று பரிந்துரைத்தார். 


ஸ்கேன் எடுத்து முடித்ததும் கிட்னி வீங்கியிருக்கிறது. கல்லின் அளவு தெரியவில்லை, டியிபி எக்ஸ்ரே எடுக்க வேண்டும்" என்றார்கள். அதையும் பணத்தை கட்டி எடுத்தேன். எக்ஸ்ரேவை பார்த்த மருத்துவர், எந்த ரிப்போர்ட்டையும் என்னிடம் கொடுக்காமல் "கல்லின் அளவு 15மிமி அளவுக்கு இருக்கிறது. கிட்னியும் வீங்கியிருக்கிறது, உடனடியாக கல்லை நீக்கியாக வேண்டும். லேப்ரஸ்கோப்புக்கு 35000 செலவாகும். காலைக்குள் பணத்தை கட்டி சிகிச்சையை தொடங்க வேண்டும்" என்றார்.

நான் "பணத்தை கட்டி விடவா" என்று கேட்க, அப்பா கடுப்பாகி "வா வீட்டுக்கு போகலாம். நாளை ரயில்வே மருத்துவமனையில் பார்த்துக் கொள்ளலாம்" என்றார். எனக்கு ரயில்வே ஆஸ்பிட்டல் கூட்டத்தை நினைத்ததும் சற்று தயக்கமாக இருந்தது. 


அப்பாவுக்கு பயந்து கிளம்பி வலியுடனே அன்றைய இரவை அந்த வெக்கை ரூமுக்குள் கடத்த வேண்டியதாக போயிற்று. மறுநாள் காலையிலேயே கிளம்பி மருத்துவமனைக்கு சென்று சர்ஜிக்கல் ஓபி மருத்துவரை பார்த்தேன். 

முதல் நாள் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டையும் எக்ஸ்ரேவையும் பார்த்தவர் என் உடம்பை சோதித்து "நீங்கள் சொல்லும் அறிகுறிகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. கேசுவாலிட்டியில் ஊசி போட்டு இரண்டு மணிநேரம் வைத்துப்பார்த்து முடிவு செய்யலாம்" என்று சொன்னார். ஊசி போட்டு ஒரு மணிநேரத்தில் வலியே இல்லை, எல்லாம் நார்மலாகி விட்டது. பிறகு ஸ்கேன் எழுதி கொடுத்தார்கள்.

ரயில்வே ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுப்பதற்குள் சென்னையிலிருந்து கிளம்பி மதுரை வந்து மாடு பிடித்து திரும்பவும் சென்னைக்கே வந்து விடலாம். முதல் நாள் யுனியனில் ஆளைப் பிடித்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி  மறுநாள் காலை எதுவும் சாப்பிடாமல் எட்டு மணிக்கு ஸ்கேனுக்கு சென்றால் எனக்கு ஸ்கேன் எடுக்கும் போது மணி 12, ஆனால் காலை 8 மணிக்கே இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து வயிறு நிரம்ப காத்திருக்க வேண்டும்.

அரை மணி நேரத்தில் ஒன்னுக்கு வந்து அடக்க முடியாமல் போய் விட்டு வந்தால் மறுபடியும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து காத்திருக்க வேண்டும். மறுபடியும் அரைமணிநேரத்தில் ஒன்னுக்கு, மறுபடியும் தண்ணீர் என்று நொந்து நூலாகிப் போனேன். எனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது மாதவா.

அது ரிசல்ட் வந்து மோடி கோலேச்சிய தினம். ஊரே பரபரப்பாக இருக்க நான் மட்டும் 2 லிட்டர் தண்ணியும் பாத்ரூமுமாக இருந்தேன். 12 மணிக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அது 7 மிமி தான் அளவு இருக்கிறது. லேப்ரஸ்கோப் தேவையில்லை, மருந்திலேயே கரைத்து விடலாம் என்றனர். 

நல்லப்பிள்ளையாக அடக்கி வாசித்து மருந்து சாப்பிட்டு அளவுச் சாப்பாட்டு சாப்பிட்டு வந்தேன். நேற்று கல் உடைந்து வெளியேறி விட்டது. பிரச்சனை முடிந்து என்று நினைத்தேன். அப்போது என்னை பார்க்க வந்த டாக்டர் நண்பன் "கல் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும். அடக்கி வாசி மாமே"ன்னு சொல்லிட்டு போயிட்டான். 

அப்ப நான் அடக்கி தான் வாசிக்கனுமா

ஆரூர் மூனா

Friday, May 23, 2014

ஆட்டோகிராப்பும் எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பும்

2003-04ல் சென்னையின் குடிநீர்த் தேவைக்கான வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கியிருந்தது. அதற்கான பணிஆணை 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டு இருந்தது. வீராணம் ஏரியில் தொடங்கும் குழாய் பதிக்கும் பணி போரூர் ஏரியில் அந்த நீரை சுத்திகரித்து வழங்குவதில் முடியவடையும்.


இதில் நான் வேலை பார்த்த நிறுவனம் மேல்மருவத்தூரில் இருந்து போரூர் சுத்திகரிப்பு நிலையம் வரை குழாய் பதிக்கும் பணிஆணையை பெற்றிருந்தது. இதில் வண்டலூர் முதல் போரூர் வரை உள்ள இடத்தில் குழாய்களை தொழிற்சாலையில் இருந்து கொண்டு வந்து இறக்கும் பொறுப்பு என்னுடையது.

எனக்கு உதவியாக ஆறு பேர், 25 கண்டெய்னர் லாரிகள் மற்றும் ஒரு டவர் கிரேன். இந்த பணிக்காக எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. வண்டலூரில் இருந்து தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை வரை மண்ணுக்குள் வரும் குழாய் புறவழிச்சாலை தொடங்கியதும் சிறுபில்லர் அமைக்கப்பட்டு மண்ணுக்கு மேலேயே பயணிக்கும்.

பில்லர் போடுவது, குழாயை வெல்டிங் அடிப்பது இடையில் பட்டர்ப்ளை வால்வுகள் பொருத்துவது, இடையில் வரும் சாலைகளை கடக்க சுரங்கம் அமைப்பது, அனகாபுத்தூரில் உயர்மட்ட பாலம் அமைப்பது போன்ற இன்ன பிற பொறியாளர்களிடமும் அலுவலர்களிடமும் கொடுக்கப்பட்டு இருந்தன.

10 டன் எடையுள்ள மாபெரும் குழாய்கள் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்டு புறவழிச்சாலையில் இருந்து டவர் கிரேன் மூலம் கீழே இறக்கி வைக்க வேண்டும்.

இப்பொழுது உள்ளது போல் நடுவில் சென்டர் மீடியன் உள்ள நான்கு வழிச்சாலை அப்போது கிடையாது. இருவழிச்சாலை மட்டும் தான். நடுவில் தடுப்பு கூட கிடையாது. எந்நேரமும் 100 கிமீக்கும் அதிகமான வேகத்தில் வரும் வாகனங்களை வேகம் குறைக்க வைத்து அனுப்ப வேண்டும்.

ஏனென்றால் டவர் கிரேன் சாலையின் முக்கால் பகுதி இடத்தை அடைத்துக் கொள்ளும். மீதியுள்ள சாலையை இருபக்க வாகனங்களும் கடக்க வேண்டும். தொழிற்சாலையில் குழாயை எடுப்பதில் தொடங்கி இவ்வளவு சிக்கல்களையும் கடந்து குழாயை புறவழிச்சாலையின் பக்கவாட்டில் அடுக்க வேண்டும்.

எங்கள் குழு குழாயை வைத்து முடித்ததும் அடுத்த குழு பில்லரில் குழாயை வைத்து வெல்டிங்கை துவக்கும். இது ஒரு செயின் லிங்க் ஒர்க். பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இருள் தொடங்கியதும் புறவழிச்சாலையில் குழாய்கள் வைக்கும் பணி நிறுத்தப்பட வேண்டும்.

கடைசி நேரத்தில் மேலிடத்தின் அழுத்தத்தினால் வேலை அசுர வேகத்தில் நடைபெற தொடங்கின. எனக்கென்று வேலை நேரம் கிடையாது. 24 மணிநேரமும் புறவழிச்சாலையில் தான் இருக்க வேண்டும்.

இருக்கும் 25 கண்டெய்னர் லாரிகளை வைத்து இடைவெளி விடாமல் குழாய்களை இறக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேரம் முழுவதும் மொத்த வண்டிகளையும் தொழிற்சாலைக்கு அனுப்பி குழாய்களை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

காலை ஆறு மணிக்கு குழாய்களை இறக்கத் தொடங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு எங்கள் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் தலைவராக இருந்தார். எனக்கு அவர் குரு மாதிரி. மிகச்சாதாரண ஆளாக இருந்த என்னை வளர்த்து நல்ல பொறுப்பில் வைத்திருந்தார்.

அவருக்கு மேல்மருத்தூர் முதல் போரூர் வரை வேலையிருக்கும். எங்கள் பகுதிக்கு அவர் வரும் போது நான் இருக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையாக சத்தம் போடுவார். அவரது பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது, மொத்த குழுவும் அவரைப் பார்த்து நடுங்குவர்.

நிற்க. தலைப்புக்கும் இதுவரை சொல்லிய கதைக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறீர்களா, கதையை சொல்வதற்கு முன்பு கால சூழ்நிலையை உங்களிடம் சேர்த்தால் தான் சம்பவத்தின் வீரியம் உங்களுக்கு புரியும்.

இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் கிடைக்கும் கேப்பில் எஸ்கேப்பாகி சினிமாக்களை முடிந்த வரை முதல் காட்சி பார்த்து விடுவேன். சரக்கும் எப்படியாவது அடித்து விடுவேன். என் தலைவர் வரும் நேரம் கொஞ்சம் வெடவெடவென்று நடுக்கமாக இருக்கும்.

ஒரு கணக்கு உண்டு, அவர் எங்கள் பகுதியை சுற்றிப் பார்த்து விட்டு கிளம்பி விட்டால் மறுபடியும் அதே இடத்திற்கு வர குறைந்தது 8 மணிநேரம் ஆகும். மேல்மருவத்தூர் வரை சென்று வழியில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து விட்டு திரும்ப வர வேண்டுமே.

ஆட்டோகிராப் படம் வெளியான அன்று முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். காலையில் முதல் லோடு குழாய்களை இறக்கி வைத்து விட்டு லாரிகளை அனுப்பி படம் பார்த்து வருவதற்குள் குரோம்பேட்டை வெற்றியில் படம் பார்த்து விட்டு வந்து விடலாம் என திட்டம் போட்டேன்.

லாரிகளை அனுப்பி வைத்து விட்டு தொழிற்சாலையில் உள்ள என் நண்பனிடம் "ஏதாவது காரணம் சொல்லி ஒரு இரண்டு மணிநேரம் இடைவெளி விட்டு குழாய்களை லாரியில் ஏற்று" என்று சொல்லி விட்டு தியேட்டருக்கு வந்து விட்டேன்.

நான் திரையங்கிற்கு போன சமயம் எங்கள் தலைவர் தொழிற்சாலைக்கு சென்றிருக்கிறார். லாரிகள் லோடு ஏற்றாமல் நிற்கவே அவனை கூப்பிட்டு சத்தம் போட்டு "இன்னும் பதினைந்து நிமிடத்திற்குள் லாரிகள் கிளம்ப வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

அவன் பதற்றத்தில் எனக்கு சொல்லாமல் ஏற்றி அனுப்பி வைத்து விட்டான். லாரிகள் ஊரப்பாக்கம் பக்கம் ரோட்டில் நின்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்த தலைவர் லாரிகள் நிற்பதை பார்த்து எனக்கு போன் போட்டிருக்கிறார்.

அவரது போனிலிருந்து எனக்கு கிடைக்காமல் போகவே பக்கத்தில் இருந்த டெலிபோன் பூத்தில் இருந்து போன் அடித்தார். நான் படம் துவங்கி அரைமணிநேரம் வரை ஜாலியாக படம் பார்த்துக் கொண்டு இருக்க லோக்கல் நம்பரில் இருந்து போன் வரவும் மிகவும் அசால்ட்டாக போனை எடுத்து "யாரு" என்று நக்கலாக தியேட்டரின் உள்ளேயே அமர்ந்து பேசினேன்.

சில நொடிகளில் நான் தியேட்டரில் இருப்பதை கண்டுபிடித்து விட்டார். கடுமையாக சத்தம் போட்டு "இன்னும் அரைமணிநேரத்திற்குள் லாரிகளில் உள்ள குழாய்கள் இறக்கப்பட்டு தொழிற்சாலைக்கு திரும்பாவிட்டால் நீ வேலையை விட்டு அனுப்பப்படுவாய்" என்றதும் எனக்கு சர்வமும் நடுங்கி விட்டது.

தியேட்டரை விட்டு வெளியே வந்தால் தியேட்டர்காரன் பைக்கை எடுக்க விட மாட்டேங்கிறான். படம் முடியாமல் எடுக்க முடியாது. கதவையும் திறக்க முடியாது என்று சத்தம் போடவே வெற்றி தியேட்டரின் பெரிய கதவை ஏறி குதித்து வெளியில் வந்து ஒரு ஆட்டோவை பிடித்து ஊரப்பாக்கம் வந்தேன்.

லாரிகளை எடுத்துக் கொண்டு புறவழிச்சாலைக்கு வந்து அவசர அவசரமாக குழாய்களை இறக்கி லாரிகளை அனுப்பி வைத்ததும் தான் நிம்மதி வந்தது. படம் முடியும் நேரம் தியேட்டருக்கு போய் பைக்கை எடுத்து வந்தேன். மறுநாள் காலை திட்ட அலுவலர்கள், பொறியாளர்களுக்காக ஆலோசனை கூட்டம் நடந்தது.

என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டே உள்ளே அமர்ந்தேன். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் கலையும் போது ஒரு நிமிடம் என்று எல்லோரையும் அமர வைத்த தலைவர் என் கதையை சொல்லி "இப்படிப்பட்ட பொறுக்கிகளையும் வைத்து தான் இந்த திட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது" என்று முடித்தார்.

நல்ல வேளை பிரச்சனை அத்துடன் முடிந்ததே என்ற திருப்தி எனக்கு. அதற்காக அடுத்த வாரம் சினிமாவுக்கு போகாமல் இருந்திருப்பேன் என்றா நினைக்கிறீர்கள், ஹி ஹி.

ஆரூர் மூனா 
 
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

Friday, May 2, 2014

பஞ்சேந்திரியா - கலைஞர் வீட்டு தரிசனமும், எட்டு ரூவா இட்லியும்

2004 காலக்கட்டங்களில் சென்னையில் பாச்சிலராக தங்கியிருந்த போது ஈக்காட்டுத்தாங்கலில் ஹீரோ ஹோண்டா ஷோரூம் பக்கத்து சந்தில் உள்ள கையேந்திபவனில் தான் தினமும் நாஷ்டா துன்னுவேன்.

என்னுடன் எனது அறை நண்பர்கள் எல்லோரும் காலை எட்டு மணிக்கு அங்கு ஜமா கூடுவோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அக்கவுண்ட். நான் இரண்டு இட்லி, இரண்டு வடை சாப்பிடுவேன். ரெகுலர் சாப்பாடு அதுதான். தினம் ஒரு மெனு என மாற்றமெல்லாம் இருக்காது.

இரண்டு இட்லி, இரண்டு வடைக்கு எட்டு ரூபா. என்னடா இது எட்டு ரூபா காலை சாப்பாட்டுக்கே ஆகிறதே என்று யோசித்து இதை விட விலை குறைவாக கடை இருக்குமா என தேடினோம். ஓரளவுக்கு சுகாதாரமாக இதை விட குறைந்த விலைக்கு வேறு கடை அந்த ஏரியாவில் சிக்கவில்லை.

இன்று காலை வீட்டில் சமைக்கவில்லை. வேலைக்கு போகும் போது கேரேஜ் ஸ்டேசன் எதிரில் இட்லி விற்கும் அம்மாவிடம் இட்லி பார்சல் வாங்கினேன். ஒரு இட்லி எட்டு ரூபா.

நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லை. இனி பாச்சிலர் பாடு அவ்வளவு தான்.

------------------------------------------------------------------

நம்ம டிபார்ட்மெண்ட் தான்


-------------------------------------------------------

சில விளம்பரங்கள் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் போல் இருக்கும். சப்ஜெக்ட்டும் கண்ணியமாக இருக்கும். விளம்பரங்களில் வித்தியாசமாக செய்கிறேன் என்று சிலர் அபத்தங்களாக எடுத்து தள்ளியிருப்பார்கள்.

உதாரணத்திற்கு தனுஷ் நடித்த சென்டர் ப்ரஷ் விளம்பரம். அதே போல் நேற்று எப்எம்மில் ஒன்று கேட்டேன். கடுப்பாகி விட்டது. ஏண்டா உங்க அலப்பறைக்கு ஒரு அளவே கிடையாதா.

விளம்பரத்தை உன்னிப்பாக கவனிக்கவும்.

அப்பா  : என்னம்மா உன் கல்யாணத்திற்கு செலவுகள் கச்சிதமா இருந்ததா

மகள் : ஆமாம்ப்பா, என் கணவர் வீட்டில் எல்லாரும் அசந்துட்டாங்க, முக்கியமா ஏசி தாம்ப்பா.

அப்பா  : அதுக்காத்தான் பாத்துப் பாத்து கேரியர் ஏசி வாங்கினேம்மா

மகள் : கேரியர் ஏசி போட்டதுனாலதாம்ப்பா மாப்ள சில்லுன்னு குஷியாகி என்னை சீக்கிரமாகவே கேரியிங் ஆக்கிட்டாருப்பா.

டேய் டேய் விளம்பரதாரர்களா நல்லாயிருங்கடா.

-------------------------------------------------------

இவுக ஜப்பான்ல பொறந்துருக்கலாம்


------------------------------------------------------

ஒரு மருத்துவ வேலையாக நான், அம்மா, வீட்டம்மா எல்லாரும் காரில் மயிலாப்பூர் சென்றிருந்தோம். சென்ற மாதம் இதே போல் ராதாகிருஷ்ணன் சாலையில் போகும் போது அம்மாவிடம் இங்கு தான் ஜெயலலிதா வீடு இருக்கிறது. இங்கு தான் கலைஞர் வீடு இருக்கிறது. என்று வழியை காட்டிச் சென்றிருந்தேன். 

என் குடும்பமே அதிதீவிர திமுக ஆதரவாளர்கள் தான். அப்பா வழி சித்தப்பன்கள் முதல், அம்மா வழி மாமன்கள் வரை. அம்மாவுக்கு கலைஞர் வீடு அந்த இடத்திற்குப் பக்கத்தில் தான் இருக்கிறது என்று தெரிந்த பிறகு என்னை அவர் வீட்டு வழியாக அழைத்து செல்லும்படி நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

நானே இப்ப சுத்தமாக திமுகவிலிருந்து விலகி வந்து அரசியல் துறவறமும் பூண்டு விட்டேன். இப்ப வந்து அங்கெல்லாம் போறதுக்கு கொஞ்சம் சங்கோஜமா இருந்தது. இது வேற எதிர்க்கட்சிக்காரனுக்கு தெரிஞ்சா என்னைப் பத்தி என்ன நினைப்பான்னு யோசனையாகவும் இருந்தது.

அம்மா கெஞ்ச ஆரம்பித்து விட்டார். இதற்கு பிறகு தர்க்கம் பண்ணினால் நன்றாக இருக்காது என்று தயக்கத்திற்கு பிறகு வண்டியை கோபாலபுரத்திற்கு விட்டேன். கலைஞர் வீடு வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி அம்மா இறங்கி பார்த்து விட்டு வீட்டின் முன்பு போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள்.

நான் காரை விட்டு இறங்கவேயில்லை. எல்லாம் முடித்து அம்மா வண்டியில் ஏறியதும் ஊருக்கு போன் பண்ணி அப்பா, மாமாக்கள், அத்தைகள் எல்லாருக்கும் கலைஞர் வீட்டு முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டதையும் வீட்டை நேரில் பார்த்ததையும் பெருமைப்பட சொல்லிக் கொண்டு இருந்தார்.

இது போன்ற அப்பாவி திமுக ஆதரவாளர்கள் தான் திமுகவின் பலமே. நான் திமுக தலைமையின் பச்சோந்தித்தனத்தை சொல்லி அம்மாவை திருத்தவும் முடியாது. புரிந்து கொள்ளும் மனநிலையும் அவர்களுக்கு கிடையாது. எப்பவும் எங்க வீட்டில் நான் மட்டும் தான் தனி. என்னைத் தவிர எல்லா ஓட்டுக்களும் திமுகவுக்கு தான். 

வௌங்கிடும்.

ஆரூர் மூனா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...