சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, January 31, 2014

ரம்மி - சினிமா விமர்சனம்

எந்த படம் பார்ப்பதற்கு முன்னாலும் டிரெய்லர் அல்லது படத்தினைப் பற்றிய செய்திகளை படிப்பதுண்டு. இந்த படம் பார்க்க அரங்கினுள் அமரும் வரை எந்த செய்தியும் கேள்விப்படவில்லை. அதனால் இது எந்த மாதிரி படம் என்ற ஆவலுடன் தான் அமர்ந்தேன். படத்தின் பெயர் போடும் போது பின்னணியில் ஒலிக்கும் இசை ஒரு மாதிரி லீட் எடுத்துக் கொடுத்து ஒரு வேளை த்ரில்லர் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்தது.


படத்தின் ஆகப்பெரும்பலம் ப்ராப்பர்ட்டி கன்டினியுட்டி தான். படம் நடக்கும் காலகட்டமான 1987 - 90 வரை புழக்கத்தில் இருந்த ப்ராப்பர்ட்டியை வைத்து படமாக்கியிருப்பது அவர்களின் உழைப்பைக் காட்டுகிறது. அந்த ரெனால்ட்ஸ் பேனா, இங்க் பேனா, கட்டம் போட்ட சட்டை, எஸ்விஎஸ் பஸ், பெரியார் பேருந்து நிலையம், இனிகோவின் சிகையலங்காரம், முட்டை போண்டா, திரையரங்க கழிவறை ஜோ மல்லூரியின் கார் என பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

படத்தில் நடக்கும் சில விஷயங்கள் நமது பால்யத்தை நினைவுப்படுத்தி நம்மை அதற்குள் இழுத்தால் அந்த படம் நமக்கு பிடிக்க ஆரம்பித்து விடும். எனக்கு அதுதான் நடந்தது. 


ஐஸ்வர்யாவுக்கும் விஜய்சேதுபதிக்கும் ஏற்படும் காதல் போன்றே எனக்கும் பதினேழு வயதில் அரும்பியது. பிறகு நான் படிப்பதற்கு சென்னை வந்து விட்டதால் அந்த காதல் காற்றோடு போய் விட்டது. ஐஸ்வர்யாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த பெண்ணின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அதனாலயே எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதையும் தாண்டி விமர்சனம் செய்ய முயல்கிறேன்.

கல்லூரியில் படிப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து விஜய்சேதுபதியும் புதுக்கோட்டையிலிருந்து இனிகோவும் சிவகங்கை வட்டாரத்திற்குள் நுழைகிறார்கள்.


காதலை வெறுக்கும் ஊர்த்தலைவரை கொண்ட பூலாங்குறிச்சியில் வந்து தங்குகிறார்கள், முறையே ஆளுக்கு ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள். எந்த காதல் ஜோடி ஊர்த்தலைவரிடம் மாட்டிக் கொள்கிறது. எந்த ஜோடி காதலில் ஜெயிக்கிறது என்பதை சற்று சஸ்பென்சுடன் சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய விறுவிறுப்புக்கு காரணம் எப்பொழுது எந்த ஜோடி மாட்டிக் கொள்ளப் போகிறதோ என்ற மாதிரியே காட்சிகளை கொண்டு சென்றிருப்பது தான். ஆனால் அதுவே ஓவர்டோஸாகிற போது சற்றே கண்ணை கட்டுகிறது.


வன்முறைக்கு நிறைய வாய்ப்பிருந்தும் அதனை கையில் எடுக்காதது படத்திற்கு பெரும்பலம். அப்படி ஆகியிருந்தால் நண்பனின் மரணத்திற்கு பழிவாங்கிய சுப்ரமணியபுரத்தின் வெர்ஷன் 2.0 ஆக மாறியிருக்கும் படம்.

விஜய்சேதுபதிக்கு இருக்கும் மார்க்கெட் வேல்யுவுக்கு இந்த படம் தேவையே இல்லை. ஆனால் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கிற்கு விஜய்சேதுபதி தேவைப்பட்டு இருக்கிறார். நண்பர்களுக்காக நடித்துக் கொடுத்து இருப்பார் என நினைக்கிறேன்.

இனிகோ துணைக் கதாப்பாத்திரம், நாயகனின் நண்பன், குணசித்திரம் என படிப்படியாக வளர்ந்து நாயகனாகி விட்டார். நன்றாக நடிக்கிறார். சரியான வகையில் படங்கள் அமைந்தால் இன்னொரு விஜய்சேதுபதி, இல்லாவிட்டால் இன்னோரு விதார்த்.

நாயகிகளாக காயத்ரியும், ஐஸ்வர்யாவும். இருவருக்குமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து அதற்கேற்றாற் போல் அசத்தியும் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா சரியான திராவிட முகம். பார்க்கும் போது மனசுக்குள் சில் என்று சாரல் அடிக்கிறது. காயத்ரி இன்னும் கொஞ்சம் சதைப் பத்தா இருந்தா இன்னும் தைரியமா ஒரு ரவுண்ட் வரலாம்.

சூரி படத்திற்கு தேவைப்படும் காமெடியை அந்த அளவுக்கே வழங்கியிருக்கிறார். பிறகு குணச்சித்திரத்தில் அசத்துகிறார்.

முதலில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படம் ஒரு கட்டத்திற்கு பிறகு சோர்ந்து போய் விடுகிறது. அதன் பிறகு பரபர க்ளைமாக்ஸ் வந்து படத்தை விறுவிறுப்பாக முடித்து வைக்கிறது. 

முதலில் இந்த க்ளைமாக்ஸை முடிவு செய்து விட்டு தான் அதற்கு ஏற்றாற் போல் கதையை தயார் செய்திருப்பார்கள் போல. இன்றைய நாற்பது வயதுகாரர்கள் அவர்களது இளம்பருவ காலகட்டத்தினை கண்முன்னே பார்த்து மகிழ்வார்கள்.

பாடல்கள் கூட எண்பது காலக்கட்டங்களில் வந்து போலவே இருக்கிறது. கேட்க நன்றாகவும் இருக்கிறது. ஒன்றிரண்டு பாட்டு பெரிசா ஹிட்டடிக்கவும் செய்யும்.

ரம்மி அடிச்சாச்சி டிக்கு ஆனால் சுமாரான ஆட்டமே.

ஆரூர் மூனா

Thursday, January 30, 2014

இங்க என்ன சொல்லுது - சினிமா விமர்சனம்

ஒரு படத்தில் ஒன்று நல்லாயிருக்காவிட்டால் மற்றொன்று சுமாராகவாவது இருக்கும். ஆனால் எனக்கு தெரிந்து ஹீரோ, ஹீரோயின், படமாக்கம், இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகலமும்  படு மொக்கையாக இருந்தது இந்த படத்தில் தான்.


இன்னிக்கின்னு பார்த்து நான் மூணு பேரை சினிமாவுக்கு கூட்டிக்கிட்டு போனேன். ஆக 500ஓவா எனக்கு இந்த படம் பார்த்த வகையில டஸ்சு. அடங்கொன்னியா காசு இருக்குன்றதுக்காக இப்படி ஒரு படத்தை எடுத்துட்டு படம் பார்க்க வந்த அப்பாவிகளை கொலையா கொல்றது என்னய்யா நாயம்.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற தங்கர்பச்சானின் படத்தை பெரிசா டிங்கரிங் பார்த்து இந்த படத்திற்கு கதை என்ற ஒரு வஸ்துவை உருவாக்கியிருக்கிறார்கள்.


வயது அறுபதை கடக்கும் தோற்றத்தில் இருக்கும் நாயகன், பொறுப்பற்றவனாக இருக்கிறார். நிலையில்லாத வேலை. இந்த சூழ்நிலையில் ஐடி கம்பெனியில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஹீரோயினி திடீரென்று இவரை திருமணம் செய்து கொள்கிறார். 

திருமணத்திற்கு பிறகு பொண்டாட்டி காசில துன்ட்டு வெட்டியா ஊரைச் சுத்திக் கொண்டு இருக்கும் நாயகன் சொந்தப் படம் எடுக்கிறேன் என்று மனைவியின் வீட்டை அடகு வைக்கிறார். படம் எடுக்கப்படாமலே போகிறது. குதிரைப் பந்தயத்திற்காக மனைவியின் நகைகளையெல்லாம் அடகு வைக்கிறார். அந்த பணமும் அம்பேல். 


ஹீரோயினி கர்ப்பமாகிறார். வீடு ஏலத்திற்கு வருகிறது. அவமானம் தாங்காமல் ஹீரோயினி தற்கொலைக்கு முயல்கிறார். அதன் பிறகு திருந்தும் ஹீரோ மனைவியுடன் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துகிறார். அவ்வளவு தான் உருவப்பட்ட கதை.

இயக்குனர் என்ற ஒருவர் இந்த படத்திற்கு இருக்கிறாரா என்று சந்தேகமே, படத்தின் முக்கால்வாசி காட்சிகள் தொங்கலாகவே இருக்கிறது. மலையாள பிட்டு படங்களில் ஒரு விதம் இருக்கும். ஒரு மொக்கை மலையாளப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு பத்து நிமிடத்திற்கு பிட்டைப் போட்டு மறுபடியும் அந்த படத்தின் தொடர்ச்சியை போடுவார்கள்.


பிட்டு முடிந்ததும் பெரும்பாலான கலாரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறி விடுவார்கள். ஆனால் சில சூரர்கள் படம் முடியும் வரை அரங்கில் அமர்ந்து ஆப்பரேட்டரின் பொறுமையை சோதிப்பார்கள்.

அந்த படத்தின் காட்சியமைப்பை விட படு மொக்கையான காட்சியமைப்பு இந்த படத்தில். ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் லிங்க்கே இல்லை. ஆங்கிள்களும் அப்படித்தான் இருக்கிறது.

நாயகனாக விடிவி கணேஷ். அடங்கப்பா உமக்கு அசாத்திய தைரியம்யா. ஆனா படம் முழுக்க இந்த முகத்தை பார்த்தால் எங்களுக்கு தான்யா கிலியடிச்சிப் போகுது. எதுக்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் இங்கிலீஷ் டயலாக்கு. மொக்கை கிராமரோடு. இந்த டயலாக் டெலிவரியும் மாடுலேஷனும் கடுப்பேத்துகிறது.

அதுலயும் அடிக்கடி இந்த முகத்தை குளோசப் வேறு வைத்து அரங்கில் இருக்கும் குழந்தைகளை கதறியழவைக்கிறார்கள். இதுல இவரை மீரா ஜாஸ்மின் ரொமாண்டிக்காக பார்த்து முதலிரவில் விளக்கை அணைக்கும் போது அடிவயிறு பொறாமையில் பற்றி எரிந்தது. 

நாயகியாக பொலிவிழந்த மீராஜாஸ்மின். ரன்னில் பட்டையை கிளப்பிய மீராவா இது. ரன் வந்த சமயத்தில் எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவருமே பொண்ணு மீரா மாதிரி இருக்கனும்னு அலைந்து கொண்டு இருந்தார்கள். இப்போது பார்த்தால் சப்பிப் போட்ட மாங்கொட்டை மாதிரி முகம் இருக்கிறது. அய்யகோ, ஐஸ்வர்யா ராயும் ஒரு நாள் கிழவியாவார் என்ற நிஜம் சுடுகிறது.

பாடல்கள் எல்லாம் படுமொக்கை, சூரமொக்கை. வேற ஒன்னும் சொல்றதுக்கில்லை.

கௌரவத் தோற்றத்தில் சிம்பு. எல்லாம் காலக் கெரகம். ஆண்ட்ரியா ஒரு சீனில் வந்து போகிறார். சாயிபாபாவின் மறுஉருவமாக சந்தானம். சந்தானம் இவ்வளவு மொக்கையாக வேறு எந்த படத்திலும் நடித்ததேயில்லை.

சொர்ணமால்யா வேறு இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழகத்தின் இளைஞர்களை ஜொள்ளு விட வைத்த அவர் காலத்தின் கோலத்தால் வடிவமே மாறியிருக்கிறார். இந்த உடற்கட்டோடு லெக்கின் போட்டு வருகிறார். பாக்கிறவன் எல்லாம் தெறிச்சி ஒடுறானுங்க.

காலையிலேயே பட்சி இந்த படம் வேணாம்னு சொல்லுச்சு. ஆனா ரெண்டு வாரமா சினிமாவுக்கு போகலையேன்னு இந்த படத்துக்கு போனேன். போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிது, இந்த படத்துக்கு செலவு பண்ண காசுக்கு நாலு குவார்ட்டரை வாங்கி எட்டு பிச்சைக்காரனுக்கு கொடுத்து இருக்கலாம்னு.

ஆரூர் மூனா

Wednesday, January 29, 2014

புது ஏரியாவும் புத்தகங்களின் சிறு விமர்சனமும்

ஒரு சின்ன கேப் விட்டால் அது அப்படியே வளர்ந்து பெரிய கேப்பாக மாறி விட்டது. நான் என்ன செய்ய, சொந்தப் பணிகளுக்கிடையே புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை படிக்க வேண்டிய அவசியமும் இணைந்துக் கொண்டதால் எழுதவே முடியவில்லை.


நிறைய நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருந்ததால் இன்று பதிவிடுகிறேன். நாளையும் நாளை மறுநாளும் இரண்டு சினிமா விமர்சனங்களும் தொடர்ந்து படம் பார்க்க போன கதையும் வர இருப்பதால் நீங்கள் தப்பிக்க வழியே இல்லை.

சில மாதங்களாகவே வேலை முடிந்தால் வீடு, வீட்டு வேலை என்று இருந்த நான், தம்பி மற்றும் பங்காளிகளின் கூட்டு முயற்சியுடன் மறுபடியும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை தம்பியின் பெயரில் துவங்கி இருக்கிறேன். அதனால் சற்று வேலைப் பளு அதிகமாக இருந்தது.

போன முறை தேங்காய் ஏற்றுமதி நல்ல முறையில் செய்து வந்து ஒரு மலையாளியின் துரோகத்தால் 5 லட்ச ரூபாய் பட்டை நாமம் விழுந்து கம்பெனியை மூடினேன். எனது 13 தோல்விகளில் அந்த நிறுவனமும் ஒன்று.

முயன்று கொண்டே இருப்பது தான் மனிதனின் செயல். அதற்கேற்ப இந்த முறை தவறுகளை களைந்து விட்டு கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இருக்கிறோம். நல்ல முறையில் முன்னேறுவோம் என்ற நம்பிக்கையின் அடுத்த படி இது.

புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை புயல் வேகத்தில் படித்து முடித்து வருகிறேன். மரப்பல்லியை முதலில் படித்த நான் வாமுகோமுவின் பால் ஈர்க்கப்பட்டு அவரின் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன்.

மரப்பல்லி சரோஜாதேவி டைப் புத்தகங்களை எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் நிற்க வைக்கும். மனிதர் கலா ரசனை உள்ளவர். நாகரீகமாக ஜில்பான்ஸை நுழைக்கிறார். முழுப் புத்தகத்தையுமே நீங்கள் சிலாகித்து படிக்க வேண்டியிருக்கும். வக்கிரம் எங்குமே எட்டிப் பார்க்கவில்லை. சின்னப் பசங்களுக்கு மட்டும் படிக்க கொடுத்துடாதீங்க.

ராஜீவ்காந்தி சாலை சாரு கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறாரே என்று முதல் நாளே படித்து முடித்து விட்டேன். படிக்க படிக்க கோவம் தான் வந்தது. எழுதியவரின் மனம் முழுக்க வக்கிர புத்தி என்பது வார்த்தைகளில் தெரிகிறது. இருப்பதை தான் எழுதினேன் என்று சொன்னால் கழிவறையும் இருப்பது தான் அதையும் உட்கார்ந்து ரசித்து எழுத வேண்டியது தானே. 

இது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் தான் இந்த புத்தகத்தை வாங்க வைக்கிறது என்பதால் இத்துடன் இதன் விமர்சனத்தை நிறுத்திக் கொள்கிறேன்.

வா.மணிகண்டனின் லிண்ட்சேலோஹன் புத்தகம் சில சிறுகதைகள் நன்றாக இருந்தது. சில யோசிக்க வைக்கிறது. சில வெகுசுமாராகவே இருக்கிறது. ஆனாலும் கொடுத்த காசுக்கு மோசமில்லை.

புத்தக கண்காட்சியில் வாங்கிய சுஜாதாவின் அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன். எப்போதும் போல தலைவர் தலைவர் தான். ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் அவரின் புத்தகங்களை அதிகம் வாங்கி படித்து விட்டால் ஒரு நேரத்தில் அவர் புத்தகங்களில் படிக்காதவையே இல்லையே என்னும் நிலை வரும்போது தான் வெறுமை வரப் போகிறது. 


தினமும் இரவு 9 மணியிலிருந்து நள்ளிரவு 2, 3 மணிவரை புத்தகம் படிக்கிறேன். மறுநாள் வேலைக்கு போக சிரமமாக இருந்தாலும் படிக்கும் போது கிடைக்கும் சுகானுபவம் படிப்பதை கைவிடாதே என்று இழுக்கிறது. ஒரு நாளைக்கு 4 புத்தகங்கள் வரை படித்து விடுகிறேன்.

தி.ஜாவின் வெறி பிடித்த ரசிகர் நான். அவரின் மோகமுள் நாவலை ஒரு முறை முழுதாக படிப்பதற்கே நான்கு நாட்கள் வரை ஆகும். நான் அந்த புத்தகத்தை இது வரை 20 முறைக்கு மேல் படித்து இருக்கிறேன். எனது படிப்பு ஆர்வத்துக்கு தீனி போடும் மனிதர் அவர் தான். 

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. படிக்கும் போது களத்திற்குள் கற்பனையிலேயே புகுந்து விடுவேன். மோகமுள் நாவல் நடக்கும் அந்த காலத்து கும்பகோணத்தில் கதாபாத்திரங்களுடன் நான் பயணிப்பது போலவே எண்ண வைக்கும் அவரது எழுத்து. பக்கத்து வீட்டு வயதான கிழவரின் இளவயது மனைவி நடுராத்திரியில் நாயகனின் அறைக் கதவை நள்ளிரவில் தட்டி இருவரும் இணையும் காட்சியை படிக்கும் போது எனக்குள்ளே உணர்வுகள் பரவசமடையும். வாரே வாஹ் என்ன ஒரு பீலிங்.

இந்த முறை வாங்கிய அம்மா வந்தாள் நாவல் படிக்கும் போதும் எனக்கு அதே உணர்வுகள் தான் ஏற்பட்டது. இளவயது நாயகனும் சிறுவயதில் விதவையான நாயகியும் தனித்து ஒரு வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நாயகியின் சலனத்தையும் நாயகனின் ஒழுக்கத்தையும் மிக நுட்பமாக பதிவு செய்திருப்பார் தி.ஜா. நான் கூட அந்த வீட்டின் நெல் மூட்டைகளுக்குப் பின்னால் இருந்து கவனிப்பது போலவே நினைத்துக் கொண்டேன்.

இதே இப்போது வக்கிரமாக எழுதும் ஆட்கள் கையில் இந்த கரு சிக்கியிருந்தால் மிகவும் தரம் தாழ்ந்த நாவல்களுள் ஒன்றாக இது ஆகியிருக்கும். பிராமண குடும்பங்களே அவரது பாத்திரங்களாக படைக்கப்பட்டு இருக்கும். என்னவோ எனக்கு அந்த பகுதி சம்பாஷணைகளும் பழக்க வழக்கங்களும் புதிதாக ஈர்ப்பது போலவே இருக்கும்.

இப்போது தான் ஜெமோவின் வெள்ளையானையை கையில் எடுத்து இருக்கிறேன். ஜெமோவின் சின்னச் சின்ன கட்டுரைகள் படித்து இருந்தாலும் அவரின் முழு நாவலை படித்ததில்லை. இந்த நாவலில் அவரின் உவமைகளும் காட்சி விவரிப்பும் சுதந்திரத்துக்கு முந்தைய சென்னைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இன்று இரவுக்குள் முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன். 

இன்னும் படிக்காமல் மிச்சமிருக்கும் பெரிய நாவல் ஓநாய் குல சின்னம் தான். மற்றபடி பெரும்பாலான நாவல்களை படித்து முடித்து விட்டேன். இது தவிர பெரியார் புத்தக நிலையத்தில் வாங்கிய புத்தகங்கள் மற்றும் ரெட்டீ, வெலிங்ட்டன், இன்ன பிற சிறிய புத்தங்கள் தான் மிச்சமிருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்திற்குள் எல்லாத்தையும் முடித்து விடுவேன். பிறகென்ன எல்லாத்துக்கும் விமர்சனப் பதிவு போட்டு உங்களை கதற வைக்காமல் விட மாட்டேன்.

புத்தக திருவிழாவில் நான் நிறைய புத்தகங்களை வாங்குவது பார்த்து இவன் வீண் செலவு செய்கிறான். பணத்தை இறைக்கிறான் என்று என் அப்பா திட்டுவதைப் போல் பலரும் திட்டலாம். இது அப்படி அல்ல. நான் வருடம் முழுவதும் இதற்கென சிறு தொகையை சேர்க்கிறேன். 

மாதம் 800 ரூபாய் எடுத்து இதற்கென வைத்து இருக்கும் தனி பேங்க அக்கவுண்ட்டில் போட்டு விடுகிறேன். புத்தக கண்காட்சி வரும்போது எடுத்து புத்தகங்களும் இன்ன பிற செலவுகளும் இதிலேயே அடங்கி விடுவதால் புத்தகங்கள் நிறைய வாங்க முடிகிறது.

நீண்ட நாள் கழித்து எழுதுவதால் எந்த தங்கு தடையுமின்றி வார்த்தைகள் வந்து விழுகின்றன. எழுதுவதும் ஒரு வகையில் எனக்கு சுகானுபவமே, ஆனால் அதை படிப்பது தான் உங்களுக்கான நரகானுபவம்.

ஆரூர் மூனா

Monday, January 20, 2014

புத்தக கண்காட்சியும், வாங்கிய புத்தகங்களும்

சனிக்கிழமை சிவா, பிரபாவுடன் இணைந்து புத்தக கண்காட்சியில் வேறு எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் புத்தகங்களை வாங்கினோமா வீட்டுக்கு திரும்புவோமா என்று இருந்தோம். அது போல் பதிவுலக நண்பர்களையும் அதிகம் பார்க்கவில்லை. நாகராஜசோழனுடன் சிறிது நேரம் கலாய்த்து விட்டு பிறகு குடும்பத்தினருடன் சிராஜை பார்த்து அளவளாவி விட்டு ஏரியாவை விட்டு கிளம்பினோம்.


ஞாயிறு அன்று பெரிய ஜமா கூடி விட்டது. நான், செல்வின், சிவா, பிரபா, புலவர் ஐயா, கவியாழி, பாலகணேஷ், ஸ்கூல்பையன், சீனு, ரூபக்ராம், போலி பன்னிக்குட்டி, ஆர்வி.சரவணன், செல்லப்பா மற்றும் பல பதிவுலக நண்பர்கள் ஒன்று கூடி கலாய்த்துக் கலாய்த்து  பொழுது நன்றாக கழிந்தது.

பல மணிநேரங்கள் நடந்து விட்டு ஓய்வெடுக்க ஜீவா சிற்றரங்கு அருகில் அமர்ந்து கொண்டு இருந்த போது 6174வை விட மிக அற்புதமாக அறிவியலையும் நடைமுறை கால இயல்பு வாழ்க்கையையும் இணைத்து ஒரு நாவலை எழுதி வருவதாக செல்வின் தெரிவித்தார். 


அதனைப் பற்றிய விவரங்களை அவரது வாயில் இருந்து பிடுங்க நானும் சிவாவும் ஏகப்பட்ட வார்த்தை ஜாலங்களை காட்டி முயற்சித்தது தோல்வியில் தான் முடிந்தது. 

பிறகு காலச்சுவடு அரங்கிற்கு சென்று கிருஷ்ணபிரபுவை சந்தித்து புத்தங்களைப் பற்றி கேட்டோம். பெருமாள் முருகனின் நிழல் முற்றம் வாங்குங்கள் என்று சொன்னார். "யாரு பெருமாள் முருகன்" என்று கேட்டது தான் தாமதம். மனிதர் காய்ச்சி எடுத்து விட்டார். பெருமாள் முருகன் யாரென்று தெரியாதது ஒரு குற்றமா. அடங்கப்பா.

ஐந்து மணிக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று கூடி கும்மாளமிட்டு நிறைவு வேளையில் எல்லோரும் சேர்ந்து குல்ப்பி ஐஸ் வாங்கி சப்பினோம். வாங்கித் தந்த ஆர்.வி. சரவணன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

இந்த வருட புத்தக திருவிழாவுக்கு டாட்டா காண்பித்து விட்டு சபையை கலைத்து புறப்பட்டோம்.

இந்த வாரம் வாங்கிய புத்தகங்கள்

1, அர்த்தமற்ற இந்துமதம் பாகம் 1 - மஞ்சை வசந்தன்
2, அர்த்தமற்ற இந்துமதம் பாகம் 2 - மஞ்சை வசந்தன்
3, கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன் - தந்தை பெரியார்
4, சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
5, பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
6, ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் - தந்தை பெரியார்
7, தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
8, புரோகிதர் ஆட்சி - ந.சி.கந்தையா பிள்ளை
9, சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததேன் - தந்தை பெரியார்
10, கருஞ்சட்டைப் படை - புலவர். பு.செல்வராஜ்
11, இராமாயண பாத்திரங்கள் - தந்தை பெரியார்
12, எழுத்துச் சீர்திருத்தம் - தந்தை பெரியார்
13, தமிழா நீ ஓர் இந்துவா - மஞ்சை வசந்தன்
14, கரையோர முதலைகள் - பாலகுமாரன்
15, கண்ணாடி கோபுரங்கள் - பாலகுமாரன்
16, அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
17, நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
18, ஆயிரத்தில் இருவர் - சுஜாதா
19, பெண் இயந்திரம் - சுஜாதா
20, தண்ணீர் - அசோகமித்திரன்
21, ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா
22, அனிதா இளம் மனைவி - சுஜாதா
23, வெல்லிங்டன் - சுகுமாரன்
24, அனிதாவின் காதல்கள் - சுஜாதா
25, பாதி ராஜ்யம் - சுஜாதா
26, ஒரு விபத்தின் அனாடமி - சுஜாதா
27, மாயா - சுஜாதா
28, காயத்ரி - சுஜாதா
29, விதி - சுஜாதா
30, மேற்கே ஒரு குற்றம் - சுஜாதா
31, மேலும் ஒரு குற்றம் - சுஜாதா
32, உன்னைக் கண்ட நேரமெல்லாம் - சுஜாதா
33, மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
34, அம்மன் பதக்கம் - சுஜாதா
35, மெரீனா - சுஜாதா
36, புகார்... புகார்... புகார்... - சுஜாதா
37, ஐந்தாவது அத்தியாயம் - சுஜாதா
38, தமிழ் சினிமாவின் பொக்கிஷம் - பிலிம் நியுஸ் ஆனந்தன்
39, பேரறிவாளனின் உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் - டிவிடி
40, அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால் - அனுஸ்ரீ
41, இலக்கியம் மாறுமா - அ.ஞா. பேரறிவாளன்

ஆரூர் மூனா

Friday, January 17, 2014

வீரம் - சினிமா விமர்சனம்

கொஞ்சம் லேட்டான விமர்சனம் தான். போட வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனாலும் சில வாசக நண்பர்கள் விமர்சனம் போடுங்கள் என்று தனி மெயிலிலும் உள்டப்பியிலும் கேட்டதால் இந்த பதிவை பகிர்கிறேன். (டேய் செந்திலு, போதும் சுயதம்பட்டம் பதிவுக்கு போ)


கதையெல்லாம் ஏகப்பட்ட பதிவுகளில் கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டு விட்டார்கள். அதனால் அந்த பக்கம் போக வேண்டாம், எனக்கு படம் எப்படி இருந்தது, மற்றும் நான் ரசித்த காட்சிகளை தங்களுடன் பகிர்கிறேன். நன்றி.

மாட்டுப் பொங்கல் அன்று மதியம் நண்பன் போலி பன்னிக்குட்டி டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு சினிமாவுக்கு வா வா என்று அழைத்துக் கொண்டு இருந்தான். இரவு தாத்தாவுக்கு அனைத்து அசைவ வகைகளையும் வைத்து படையல் போட வேண்டியிருந்தது, அந்த வேலைகளை காலையில் இருந்து செய்து கொண்டு இருந்தேன். மதியம் வீட்டுக்கே வந்து அழைத்ததால் ஒன்றும் சொல்ல முடியாமல் திரையரங்கிற்கு போய் விட்டேன்.


கடந்த நான்கைந்து படங்களாக எப்போதும் விரைத்துக் கொண்டே திரியும் அஜித்தைப் பார்த்து சற்று அலுப்படைந்திருந்தேன். ஆனால் இந்த படத்தின் துவக்கத்தில் இருந்தே இயல்பான நடிப்புக்கு வந்து ரசிக்க வைத்தார். 

பக்கா மசாலா தான் என்று தெரிந்தும் பல இடங்களில் அஜித்தின் ஆக்சன் காட்சிகளில் விசிலடித்து கைதட்டி மகிழ்ந்தேன். அதே மாதிரி பல இடங்களில் புகையவும் வைத்தார்.


இடையில் ஒரு விஷயம், இணையத்தில் ஜில்லாவை புறந்தள்ளி விட்டு வீரம் படத்திற்கு ஏகப்பட்ட புரமோசன்கள். படம் வராமலேயே படத்தின் கதை இது தான் என்று ஆளாளாளுக்கு கலந்து கட்டி அடித்தார்கள். இதன் காரணமாக முன்பதிவு நேரத்தில் ஜில்லாவுக்கு டிக்கெட் தாராளமாக கிடைத்தது. வீரம் எங்கு பார்த்தாலும் ஹவுஸ்புல்.

கடைசியில் பார்த்தால் இரண்டுமே மாற்றான் படத்து சூர்யா போல தான் என்று தெரிய வந்த போது நொந்தே போனேன். இணையத்தில் அஜித்தை புடிச்சவன் கூட குறைவா தான் இருப்பான். விஜய்யை புடிச்சவன் ஒருத்தன் கூட கிடையாது போல. வர்றவன் போறவன் எல்லாம் ஜில்லாவை கண்டமேனிக்கு கழுவி ஊத்துறானுங்க.


தமன்னா நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் பார்ப்பதால் ப்ரெஷ்ஷாக தெரிந்தார். அஜித்துடன் ஒப்பிடும் போது தான் சற்று தொங்கலாக இருந்தது. தமன்னாவின் கொச்சச்சன் போலவே அஜித் தெரிந்தார்.

முதல் பாதியில் எந்தவித இடையூறும் இல்லாமல் கலகலவென படத்தை நகர்த்தி இருந்தார்கள். சந்தானத்தின் காமடி சிறிது நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரிப்பது போல் இருந்தது. இப்படியே நடிச்சிட்டு வாங்க, இல்லைன்னா விவேக் கதி தான், உங்களுக்கும்.

விதார்த்தை போட்டு வீணடித்து இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் தமிழில் பீலாவாசு சாரி பீ.வாசு இயக்கத்தில் காதல்கிசுகிசு படத்தில் நாயகனாக நடித்த பாலாவும் படத்தில் வந்து போகிறார். 

இடைவேளைக்கு பிறகு எனக்கு என்டிஆர் படத்தை பார்த்த மாதிரியே இருந்தது. இருந்தாலும் தெலுகு படங்களையே அசால்ட்டாக கடந்து வந்தவனுக்கு முன்னால் இந்த படம் எம்மாத்திரம்.

தம்பிராமையா ரொம்பவே கடுப்பேத்துகிறார். என்ன வகை நடிப்பு, இந்த ஸ்டீரியோ ரக கத்தல். போங்க சார். போய் புள்ளக்குட்டிகள படிக்க வையுங்க. அது மாதிரி பேராசிரியர் பெரியார்தாசனுக்கு இது தான் கடைசி படம். திரையில் பார்க்கும் போது என்னவோ செய்தது.

அது என்னய்யா ரயிலு மேல சண்டை. ஏன் செயினை புடிச்சி இழுத்து காட்டுக்குள்ள இறங்கி சண்டை போட வேண்டியது தானே. தயாரிப்பாளருக்கு செலவாவது குறைஞ்சிருக்கும்.

படம் பார்த்து ரெண்டு நாள் ஆயிடுச்சா, அதான் பல காட்சிகளும், பார்க்கும் போது நான் எழுத நினைத்த பாயிண்ட்டுகளும் மறந்து விட்டது. சீக்கிரம் சிட்டுக்குருவி லேகியம் தின்னு ஞாபக சக்தியை அதிகப்படுத்திக்கனும். நினைவில் இருப்பதை வைத்து விமர்சனம் மாதிரி இருக்குமளவுக்கு ஒப்பேத்தி உள்ளேன், ஏதோ பாத்து செய்யுங்க.

ஆரூர் மூனா

Thursday, January 16, 2014

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

இந்த பதிவை போன மாத இறுதியில் எழுதியிருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காலத்தில் திருவாரூரில் இருந்து மகாதியானத்தை தொடர்ந்து வந்ததால் போன மாத இறுதியில் பதிவே எழுத முடியவில்லை. இப்போது கொஞ்சம் நேரம் கிடைத்ததால் எழுதுகிறேன்.


இது சாதா ரக பிரியாணி இல்லை. சென்னையின் புகழ்பெற்ற கல்யாணபவன் பிரியாணி கடைகளில் கிடைக்கும் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி. நார்மல் சிக்கன் பிரியாணி 150 ரூபாய் எனில் இந்த ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி 200 ரூபாய் இருக்கும்.

தேவையான பொருட்கள்
8 லிட்டர் கொள்ளளவுள்ள அலுமினிய குண்டான் - 1
குண்டான் வாய் அளவுக்கு சரியான மூடி - 1
நாலுஅடி உயரமுள்ள டேபிள் - 1
இரண்டு அடி உயரமுள்ள ஸ்டூல் - 1
பல்லாரி வெங்காயம் - 1/4 கிலோ
ஹட்சன் தயிர் - 1/2 லிட்டர்
உப்பு 1 கிலோ பாக்கெட் - 1
ரேபான் கூலிங்கிளாஸ் - 1
வெட்டும் பலகை - 1
கத்தி - 1
சிறிய பீங்கான் கிண்ணம் - 1
போர்க் ஸ்பூன் - 1
குஸ்கா - ஆப் பிளேட்
(மன்னார்குடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள புட் பிளாசா கடையில் கிடைக்கும் குஸ்காவாக இருந்தால் நலம் - நம்ம மச்சான் கடை தான், அதான் ஒரு வெளம்பரம்)
சிக்கன் 65 - 1 பிளேட்
(பிளேட்டில் எக்ஸ்ட்ராவாக இருக்கும் வெங்காயம், எலுமிச்சம்பழ துண்டு முதலியவற்றை எடுத்து விடவும்)
வெள்ளைக் கலர் பீங்கான் பிளேட் - 1


முதலில் டேபிளை எடுத்து நடுஹாலில் வைக்கவும். அதைவிட முக்கியமான ஒரு காரியம். வேலை செய்யும் போது வியர்க்கும் அதனால் சீலிங்பேனை போட்டுக் கொள்ளவும்.

டேபிளுக்கு எதிரில் உட்காரும் விதத்தில் ஸ்டூலை போட்டு வைக்கவும். வேலை செய்யும் போது களைப்பாக உணர்ந்தால் சிறிது உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.


டேபிளின் மீது குண்டானை வைக்கவும். கவரைப் பிரித்து குஸ்காவை குண்டான் உள்ளே கொட்டவும். சிக்கன் 65ஐ எடுத்து குண்டானில் போடவும். மூடி போட்டு மூடி கையில் எடுத்து மேலுக்கு கீழாக ஐந்து முறை குலுக்கவும். கீழிருந்து மேலாக ஐந்து முறை குலுக்கவும். 

வலமிருந்து இடமாக ஐந்து முறை. இடமிந்து வலமாக ஐந்து முறை குலுக்கவும். டேபிளின் ஓரத்தில் குண்டானை வைத்து விட்டு டேபிளில் வெட்டும் பலகையை வைத்து அதன் வலது புற ஓரத்தில் கத்தியை வைக்கவும். அப்போது தான் விரைவாக எடுத்து வெட்ட வசதியாக இருக்கும்.

வெங்காயத்தை எடுத்து உரிப்பதற்கு முன் ரேபான் கூலிங்கிளாஸை போட்டுக் கொள்ளவும். (கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு உரித்தால் கண்ணில் நீர் வராது, எல்லாம் டெக்னாலஜி, டெக்னாலஜி) பிறகு தோலை உரித்து சரியாக 2 எம் எம் அளவுக்கு நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

பீங்கான் கிண்ணத்தில் வெட்டிய வெங்காயத்தை போட்டு அதில் ஹட்சன் தயிர் பாக்கெட்டை பிரித்து வெங்காயம் மூழ்கும் வரை ஊற்றவும். உப்பு பாக்கெட்டை பிரித்து அதில் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையே தாங்கும் அளவுக்கு உப்பை எடுத்து அதில் போடவும். மிச்சமிருக்கும் உப்பு பாக்கெட்டை வீட்டு உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளவும்.

போர்க் ஸ்பூன் பயன்படுத்தி நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். ஆள்காட்டி விரலில் தொட்டு நக்கிப் பார்த்துக் கொள்ளவும். உப்பு சரியாக இருந்தால் விட்டு விடவும். இல்லையென்றால் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையே தாங்கும் அளவுக்கு உப்பை எடுத்து மீண்டும் போட்டு நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது மறுபடியும் நாம் ஓரமாக வைத்து இருந்த குண்டானை எடுத்து மறுபடியும் நாலு திசையிலும் குலுக்கி வைத்துக் கொள்ளவும். ஸ்பெஷல் பிரியாணி தயாராகி விட்டது. இப்போது ஸ்டூலில் ஐந்து நிமிடம் உக்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.

பீங்கான் பிளேட் எடுத்து அதில் பிரியாணியை கொட்டி அதன் ஓரத்தில் தயிர் பச்சடியை சைட்டிஷ்ஷாக வைத்து பரிமாறினால் சுவையான ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி தயார்.

ஆரூர் மூனா

Sunday, January 12, 2014

புத்தக கண்காட்சி 2ம் நாளும், வாங்கிய புத்தகங்களும்

புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவு போடலன்னா சாமி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்துவதாலும் நேற்று வாங்கிய புத்தகங்களை பட்டியலிடவும் என்று பிலாசபி பிரபா கேட்டதாலும் தான் இந்த பதிவு.


நேற்று முன்தினமே சிவா போன் செய்து சனியன்று மாலை புத்தக கண்காட்சிக்கு வந்து விட வேண்டுமென்றும் பிரபாவையும் செல்வினையும் கூப்பிடுவதாகவும் சொன்னார்.

அதன் படி நேற்று மதியம் வீட்டு வேலைகளை முடித்து விட்டு புத்தக கண்காட்சிக்கு கிளம்ப தயாராக இருந்தேன். தனியாக செல்ல யோசனையாக இருந்தது. நண்பர் போலி பன்னிக்குட்டிக்கு போனடித்தேன். பேச்சுத் துணைக்கு அவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.


வழியில் ஸ்கூல் பையன் போன் செய்து அரங்கினுள் காத்திருப்பதாகவும் வந்து இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

கண்காட்சி வளாகம் உள்ளே நுழைந்ததும் பிரபாவும் சிவாவும் டீக்கடையில் இருந்தார்கள். அவர்களுடன் சிறிது நேரம் அளவளாவி விட்டு எல்லோரும் அரங்கினுள் நுழைந்தேன்.

--------------------------------------------------

நேற்று வாங்கிய புத்தகங்கள்
1, வெள்ளையானை - ஜெயமோகன்
2, கொசு - பா.ராகவன்
3, ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
4, பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
5, நாயுருவி - வா.மு.கோமு
6, திப்புசுல்தான் முதல் விடுதலைப் புலி - மருதன்
7, காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை - ராவ்
8, தலைகீழ்விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
9, முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - ஜனனி ரமேஷ்
10, மாவோ என் பின்னால் வா - மருதன்
11, கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
12, உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
13, எம்,கே. தியாகராஜ பாகவதர் - இரா.செழியன்
14, மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்முட்டி
15, அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - முகில்
16, மார்டின் லுதர் கிங் கருப்பு வெள்ளை - பாலு சத்யா
17, சர்வம் ஸ்டாலின் மயம் - மருதன்
18, கலைவாணி ஒரு பாலியல் தொழிலாளியின் கதை - ஜோதி நரசிம்மன்
19, என் வானம் நான் மேகம் - மா. அன்பழகன்
20, கலைந்த பொய்கள் - சுஜாதா
21, விழுந்த நட்சத்திரம் - சுஜாதா
22, கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
23, படிப்பது எப்படி - சுஜாதா
24, 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - வா.மு.கோமு
25, 100 நாற்காலிகள் - ஜெயமோகன்
26, லிண்ட்சேலோஹன் - வா.மணிகண்டன்
27, ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
28, அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
29, எட்றா வண்டிய - வா.மு.கோமு
30, எரியும் பனிக்காடு - பி.எச். டேனியல்
31, மரப்பல்லி - வா.மு.கோமு
32, நளினி ஜமீலா - குளச்சல் மு.யூசுப்

-------------------------------------------------------

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. புத்தகம் வாங்கத் தொடங்கினால் கண்ணு மண்ணு தெரியாமல் அளவுக்கு அதிகமாக புத்தகங்களை வாங்கி விடுவேன். அதனால் இந்த முறை நிறைய வாங்கக் கூடாது என்பதற்காகவே வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கைவசம் வைத்திருந்தேன்.


பிரபாவிடம் இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். உள்ளே நுழைந்து வெறும் 5 நிமிடத்தில் ஆயிரம் ரூபாயும் காலி. இனனும் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நிறையவே இருந்தது. வேற என்ன பண்றது.

பிறகு எங்கெல்லாம் டெபிட்கார்டு அனுமதியிருக்கிறதோ அங்கெல்லாம் தான் புத்தகங்கள் வாங்கினேன். கிழக்கு பதிப்பகம் மற்றும் டிஸ்கவரி ஸ்டால்களில் ஏகப்பட்ட புத்தகங்களை அள்ளி விட்டேன். 

கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிக் கொண்டு இருக்கும் போது ரூபக்ராம், கோவை ஆவி, ஸ்கூல் பையன் ஆகியோர் எங்களுடன் இணைந்து கொண்டனர். பிறகு கலாட்டாவுடன் தான் அரங்கஉலா நகர்ந்தது.

நேற்று டிஸ்கவரி ஸ்டாலில் தான் முதன் முறையாக வா.மணிகண்டனை சந்தித்தேன். நான் கூட மற்றவர்களிடம் பேச சற்று தயக்கம் காட்டுவேன். நெருங்கி விட்டால் தான் நம்மைப் பற்றி மற்றவர்களுக்கு புரியும். ஆனால் வா.மணிகண்டன் என்னை கண்டதும் தானாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்தார். இந்த பழக்கம் எனக்கு வரமாட்டேங்குதே என்று வருத்தமாக இருந்தது.

அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு அகநாழிகை ஸ்டால் நோக்கி நகர்ந்தோம். வழியில் கேபிளை சந்தித்து விட்டு மணிஜியுடன் சிறிது நேரம் அளவளாவினோம். எட்டு மணிக்கு மேலானதால் சபையை கலைத்து விட்டு கிளம்பினோம்.

தினமும் வந்தால் என் பட்ஜெட் எகிறி விடும். அதனால் வரும் சனிக்கிழமை தான் அடுத்த புத்தக கண்காட்சி விசிட்.

ஆரூர் மூனா

Friday, January 10, 2014

நேனொக்கடைனே - தெலுகு

பொதுவா தெலுகுல மாஸ் ஹீரோக்கள் ஒரே டெம்ப்ளேட்ல தான் படத்தை எடுத்துத் தள்ளுவாங்க. காமெடி, ஹீரோயிசம், சென்ட்டிமெண்ட், ஆக்சன் பாடல்கள் எல்லாம் சரிவிகிதத்தில் கலக்கப்பட்டு 15 நிமிடத்திற்கு ஒன்று என செட் செய்யப்பட்டு பறிமாறப்படும்.


மகேஷ்க்கு கூட பிஸினஸ்மேன் வரை அப்படித்தான் படங்கள் அமைந்து கொண்டு இருந்தது. சீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு படத்தில் அத்தனை மாஸ் விஷயங்களையும் தூக்கிப் போட்டு விட்டு காஸ்ட்யூம் கூட சாதாரண சட்டை பேண்ட் போட்டு தான் நடித்தார். 

இங்கு விஜய் அஜித்துக்கு உள்ள மாஸை விட மகேஷ்க்கு ஆந்திராவில் அதிகம். அந்த நிலையில் சீதம்மா படம் எல்லாத்தரப்பு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படம் பெருவெற்றி பெற்றது. எனக்கும் கூட மிகவும் பிடித்தது.

நான் மகேஷ்க்கு தீவிர ரசிகன். இந்த ரசிப்புத்தன்மை எங்கு துவங்கியது என்று பின்னோக்கி யோசித்துப் பார்க்கிறேன். திருப்பதிக்கு நான் ஒரு திருமணத்திற்காக 2001ல்  சென்றிருந்த போது வித்தியாசமான பேனரை கண்டேன். 


பெரிய அளவு முத்துக்களால் தெலுகில் எழுதப்பட்டு பார்வைக்கு வித்தியாசமாக இருந்தது. நண்பனிடம் கேட்ட போது மகேஷ் பற்றிய விவரங்களை கூறினான். அந்த சமயத்தில் எனக்கு தெலுகில் ஒரு வார்த்தை கூட தெரியாது.

பேனர் வசீகரித்ததால் பார்த்த படம் முராரி. ஆனால் படம் முடிந்து வந்ததும் நான் மகேஷ்க்கு தீவிர ரசிகனாகி விட்டேன். அதன் பிறகு எப்பொழுது மகேஷ் படம் வந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவேன். தெலுகு கற்றுக் கொண்ட பிறகு ரசிப்புத்தன்மை இன்னும் கூடியது.


காதில் பூ சுற்றுகிற சமாச்சாரம் என்றாலும் அது தெலுகு படம் என்பதாலும் நடித்திருப்பது மகேஷ் என்பதாலும் லாஜிக் பற்றி யோசிக்காமல் ரசித்துப் பார்ப்பேன். இத்தனை ரசிகனான என்னை இந்த படம் திருப்தி படுத்தியிருக்கிறதா என்பதை பார்ப்போம்.

ஒரு வருடம் கழித்து மகேஷ் படம் வந்திருப்பதால் நான் எதிர்பார்த்து போனது தூக்குடு மாதிரியான படத்தை தான். ஆனால் இது முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை உடைய அப்நார்மல் தெலுகு திரைப்படம்.

பெரும்பாலான மகேஷ் ரசிகர்களுக்கு படம் பிடிக்குமா என சந்தேகம் தான். படத்தில் நகைச்சுவைகள் இல்லை. பதிலுக்கு பதில் ஆக்சன் இல்லை. இன்னும் நிறைய இல்லை. படத்தின் முதல் பாதி முழுக்க காற்றில் கத்தி வீசுகிறார்.அதுவே அலுப்பை தட்டுகிறது.


படம் துவங்கியதும் நடக்கும் கொலை கற்பனை என்று தெரிய வந்ததும் அதற்கடுத்த காட்சிகளில் இது நிஜமா கற்பனையா என நம் ஜேம்ஸ்பாண்டு மூளை யோசிக்கத் தொடங்குவதால் படத்தின் விறுவிறுப்பு அடிபட்டு போகிறது. இன்டர்வெல் மர்டர் மட்டுமே நாம் பார்ப்பது மகேஷ் படம் என்பதை நினைவுபடுத்துகிறது.

இந்த படம் ஒரு வகையில் தமிழில் வெளிவந்த சமர் படத்துக்கு தூரத்து சொந்தம் தான். 

தனது தாய் தந்தையை கொன்ற மூவரை தான் கொன்று விட்டதாக மகேஷ் காவல்நிலையத்தில் சரணடைகிறார். ஆனால் அவர் சொன்னது பொய் என்பதும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனவும் தெரிய வருவதால் மகேஷ்க்கு மனநோய் என மற்றவர்கள் நம்பத் தொடங்குகிறார்கள்.

அதற்கேற்றாற் போல் இவருக்கு நடக்கும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு தெரிய வராததால் அவை அனைத்தும் மகேஷின் கற்பனை என்றே மற்றவர்களால் நம்பப் படுகிறது. ஒரு கட்டத்தில் இவரை காதலிக்கும் ஹீரோயினுக்கு ஒரு பிரச்சனை வர அவரை மகேஷ் காப்பாற்றுவதால் ஹீரோயின் நம்புகிறார். 

அதன் பிறகு அந்த மூவர் யார், அவர்களுக்கு என்னவானது தனது பெற்றோர் யார் என்பதை லண்டன் சென்று தேடி கண்டுபிடிக்கிறார் மகேஷ். நடந்தது எல்லாம் கற்பனை. கற்பனையாக அவர் நினைப்பது எல்லாம் நடந்தது என மண்டையை காய வைத்து இருக்கிறார்கள்.

படத்தில் சிறுவயது மகேஷ்ஷாக அவரது சொந்த மகன் கௌதம் நடித்துள்ளார். ஒரு வாரிசு உருவாக தொடங்கியுள்ளது. இப்படித்தான் கிருஷ்ணா அவரது படங்களில் சிறுவயது மகேஷை நடிக்க வைத்து ஹீரோ மெட்டீரியலாக உருவாக்கினார்.

நாயகி க்ரிடிசனான் என்னா பிகரு என்னா கலரு, தெலுகுகாரனுங்க கொடுத்து வச்சவனுங்க. நல்ல நல்ல நாயகிகளையெல்லாம் வளைத்துப் போட்டு விடுகிறார்கள்.

முதல் பாதியில் ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்க வைத்து இரண்டாம் பாதியில் சொதப்பலாக சொல்லியிருப்பதால் படம் சுமார் தான். எனக்கு தலையை வலிக்கிறது. இதுக்கு மேல யோசிக்க முடியலை. அதனால் இந்த பதிவை விமர்சனம்னு நீங்களே நினைச்சிக்கங்க.

ஆரூர் மூனா

ஜில்லா - சினிமா விமர்சனம்

இணையமும் மக்களும் வீரம் படத்திற்கு முன்னால் ஏன் ஜில்லாவை குறைத்து மதிப்பீட்டார்கள் என்று தான் தெரியவில்லை. கங்கா காம்ப்ளக்ஸில் முன்பதிவு துவங்கிய அன்று நான் டிக்கெட் வாங்க சென்றது வீரம் படத்திற்கு தான் கவுண்ட்டரில் இருந்தவன் அசால்ட்டாக வீரம் முன்பதிவு முடிந்து விட்டது, வேணும்னா ஜில்லா வாங்கிக்க என்று சொன்னான். 


இணையத்தில் மக்களும் முடிந்த அளவுக்கு ஜில்லாவை காலி செய்தனர். எனக்கு கூட சந்தேகமாவே இருந்தது.................... போதும் இத்துடன் நிறுத்திக்குவோம். இது எல்லாம் படம் பார்த்த கதை பதிவில் எழுத வேண்டும். அதனால் நேரடியாக படத்துக்கு போய் விடலாம்.

பெரிசா மனதை உலுக்கும் கதை, நெஞ்சை பிழியும் செண்ட்டிமெண்ட், வித்தியாசமான திரைக்கதை இந்த ஒரு புண்ணாக்கையும் இந்த படத்துல எதிர்பார்க்க முடியாது. 

போக்கிரி ஸ்டைல்ல படம் இருக்கிறது. அதாவது ஒரு சண்டை, அது முடிந்த பின்னால் அறிமுகப்பாடல், பிறகு நகைச்சுவை, பிறகு சண்டை, பிறகு காதல், பிறகு பாட்டு, பிறகு சண்டை.


இந்த டெம்ப்ளேட்டை இம்மி பிசகாமல் படத்தை எடுத்து இருக்கின்றனர். ஆனால் படம் பார்கக ஒரளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது என்பது தான் ஆச்சரியம். போக்கிரி அளவுக்கு எல்லாம் படம் ஓடாது. ஆனால் ஓடும், பெப் முடியும் வரை ஓடும்.

படத்தின் முதல் ஆச்சரியம் ஓவர் பில்டப் இல்லாத விஜய். படத்திற்கு ஏற்ற ஹீரோயிசம் மட்டும காட்டியிருக்கிறார். வழக்கம் போல காமடி, நடனத்தில் அசத்துகிறார். சண்டைக்காட்சியில் நிஜம் போல பல்டிகள் அடித்து பிரமிக்க வைக்கிறார். 


படத்தின் கதைக்கு போவோம். மதுரையில் உள்ள டான் மோகன்லால். அவரது வளர்ப்பு மகன் விஜய். போலீசுடன் லாலுக்கு உரசல் ஏற்பட தனது தேவைக்காக போலீசே பிடிக்காத விஜய்யை அசிஸ்டெண்ட் கமிசனராக்குகிறார். 

போலீசான விஜய்க்கு லால் செய்வது தவறு என புரிய வருகிறது. அதனால் அவரை திருந்த வைக்க முயற்சிக்கிறார். பிடிவாதம் பிடிக்கும் லாலேட்டன், படம் துவங்கி மூன்று மணிநேரமாகி விட்டதே என்று கவலைப்பட்டு க்ளைமாக்ஸில் திருந்துகிறார்.


இதற்கு இடையே மானே தேனே பொன்மானே எல்லாம் பொருத்தமான இடத்தில் போட்டு ஓரளவுக்கு ரசிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

எந்த இடத்திலும் எதற்காகவும் லாஜிக் பார்க்கக் கூடாது. பார்த்தால் நாம் மடையனாகி விடுவோம். இதனை நம்பி படக்குழுவும் நம் தலையில் நல்லா மசாலா அரைத்து இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு இரவில் கமிசனர் நினைத்தால் வேலைக்கு புதிதாக சேர்ந்த அசிஸ்டெண்ட் கமிசனரை டெபுடி கமிசனராக்குவது எல்லாம் ரொம்ப ஓவர்.

லாலேட்டன் மீண்டும் தமிழில். லாலேட்டனை நம்பி நான் பார்த்த தமிழ்ப்படம் பாப்கார்ன். அது இரண்டாம் ஆட்டம் போய் படம் முடிந்து தலைவலி தாங்க முடியாமல் ப்ளாக்கில் சரக்கு வாங்கி விடிய விடிய குடித்தவன். அதன் பிறகு அவரது மலையாள படம் என்றாலும் நிலவரம் தெரிந்து தான் படத்திற்கு போவேன். ஆனால் இந்த முறை காப்பாற்றி இருக்கிறார்.

ஊறுகாயாக தொட்டுக் கொள்ள காஜல். யம்மாடி நீ வர்றதே கவர்ச்சிக்காக மட்டும் தான். இந்த மேக்கப்பையாவது ஒழுங்கா போட்டு வந்தா என்னவாம். ஏன் இப்படி ஒரு மேக்கப், இப்படி ஒரு காஸ்டியும், சகிக்கல போ.

பாடல்கள் நான் இதற்கு முன்பு கேட்கவில்லை. படத்தில் கேட்கும் போது காது வலிக்கிறது. கண்டாங்கடி சேலை பாட்டு மட்டும் ஓகே. ரீரெக்காடிங் நன்றாக இருக்கிறது. ஆக்சன் சீக்வன்ஸில் விஜய்க்கு வரும் ஆர்ஆர் நன்றாக இருக்கிறது. 

சூரி முயற்சிக்கிறார். வேறென்ன சிரிக்க வைக்கத்தான். நாம் தான் சிரிக்க மாட்டேங்கிறோம். ரவிமரியாவுக்கு சர்க்கார் படத்தில் வரும் ரவிகாலேவை மனதில் வைத்து மொட்டை போட்டு இருப்பார்கள் போல. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் இருக்கிறது.

விஜய்யும் காஜலும் மாறி மாறி பின்பக்கத்தில் புடித்துக் கொள்கிறார்கள். இது என்ன தமிழ்சினிமாவின் புது பேசனா. ஆனாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஹிஹி.

படத்தில் போரடிக்கும் விஷயமென்றால் கடைசி அரைமணிநேரம் ஜவ்வு மாதிரி இழுக்கிறது தான். வில்லன் யாரென்று தெரிந்த பிறகு அவரை விட்டு வைப்பதில் ஹீரோயிசம் அடிபட்டு போகிறது. அப்புறம் தம்பி செத்ததும் பொங்குறது பொருத்தமா இல்லை.

மற்றபடி ஒரு முறை பார்க்கலாம், தப்பில்லே

ஆரூர் மூனா

Thursday, January 9, 2014

பாட்டியின் மரணத்திலும் தவிர்க்க முடியாத பிரியாணி

போன வருசம் அக்டோபர் மாசம் என் நண்பர் குழாமில் உள்ள ஒரு நண்பனுக்கு திருமணம் முடிந்திருந்தது. மற்றொரு நண்பனான சத்தியமூர்த்தி வீட்டில் கறிவிருந்து ஏற்பாடு செய்திருந்தோம்.


எங்கள் நண்பர் குழாமில் ஒரு  பழக்கம் உண்டு. நண்பர்களுக்கு திருமணம் முடிந்ததும் தம்பதி சகிதம் ஒரு வெயிட்டான விருந்து வைப்பது. அப்போது தான் புதிதாக வந்திருக்கும் பெண்ணும் எங்கள் நட்பைப் பற்றியும் எங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வாரென இந்த ஏற்பாடு.

மற்றவர்கள் அரிசி காய்கறி வாங்குவது மற்ற நண்பர்கள் குடும்பத்துடன் வருவதற்கு வண்டி அனுப்புவது என பிஸியாகி விட நான் மட்டும் காலை கடைக்குச் சென்று பார்த்து பார்த்து சிக்கன் மட்டன் எல்லாம் வாங்கி வந்தேன். 

திருமுல்லைவாயில் ஏரியாவிலேயே புகழ்பெற்ற ஒரு இஸ்லாமிய சமையற்காரரை பிடித்து மணக்க மணக்க பிரியாணியும் சிக்கன் குருமாவும் இதர பதார்த்தங்களும் செய்தாகி விட்டது. நான் தான் கிச்சன் சூப்பர்வைசர்.


எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பெண்களையும் குழந்தைகளையும் நண்பன் வீட்டில விட்டதும் அவரவர்கள் அரட்டையையும் விளையாட்டையும் ஆரம்பித்து விட்டனர். 

நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து யானை மிதிக்குமளவுக்கு மகாதியானம் செய்தால் பிரியாணியை நன்றாக சாப்பிட முடியாது என்பதால் எறும்பு கடிக்கும் அளவுக்கே தியானத்தை லைட்டாக முடித்து விட்டு பிரியாணியை சாப்பிட பந்தியில் அமர்ந்தோம்.

பார்வையாலேயே பிரியாணியை காதலித்துக் கொண்டு இருந்தேன். மாப்பிள்ளையும் பெண்ணும் சாப்பிட்ட பிறகு தான் நாங்கள் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட துவங்கியதும் எனக்கு போன் வந்தது.


அப்பா அழைத்தார். அழைப்பை எடுத்தேன். அந்த பக்கமிருந்து அப்பா கதறி அழுதார். என்னவோ ஏதோ என்று எனக்கு பயமாகி விட்டது. இரண்டு நிமிடம் அப்பா அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன். 

முடித்ததும் அப்பா சொன்னார் என் பாட்டி இறந்து விட்டாரென. என் அப்பாவின் அம்மா, என் 85 வயது பாட்டி. மூப்பு காரணமாக இறந்து விட்டார். "நான் உடனே கிளம்புகிறேன் நீங்கள் மற்ற ஏற்பாடுகளை கவனியுங்கள்" என்று அப்பாவிடம் கூறி விட்டு போனை கட் செய்தால் நண்பர்கள் எல்லோரும் எனக்கு போன் வந்ததை கூட கவனிக்காமல் பிரியாணியை வெளுத்துக் கொண்டு இருந்தனர்.

என் பாட்டி இறந்து விட்டார். நான் உடனடியாக ஊருக்கு கிளம்ப வேண்டும். இலையில் அமர்ந்து இருக்கிறேன். நண்பர்களிடம் விவரம் கூறினால் என்னை சாப்பிடக் கூட விடாமல் கிளப்பி விட்டு விடுவர். என்ன செய்வது. பாட்டியின் நினைவு வேறு வந்து என்னை சிரமப்படுத்தியது.

என்னை சிறு வயதிலிருந்து பாலும் தேனும் கொடுத்து வளர்த்த பாட்டி. பாசமிக்கவர். 14 பிள்ளைகளை பெற்ற பெரிய குடும்பத்தின் மூத்த வேர். எனக்கு அழுகையும் வேறு வந்தது. இடையில் பிரியாணி மணம் குறுக்கிட்டது.

பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி.

பதினைந்து நிமிடத்திற்கு பாட்டியை ஒத்திப் போடுவது, பிரியாணியை முடித்து விட்டு விஷயத்தை சொல்லாம் என்று முடிவு செய்து பிரியாணியை புல் கட்டு கட்டி விட்டு கை கழுவியதும் தான் நண்பர்களிடம் விவரம் சொன்னேன் பாட்டி இறந்து விட்டாரென.

என் துக்கத்தை  சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்வார்கள் என எதிர்பார்த்தால் அவனவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான். என் வீட்டம்மாவோ என்னை கழட்டி எடுக்கிறாள். 

"என்ன ஆள் நீ. பாட்டி செத்துப் போயிருக்கிறார். உக்காந்து வக்கனையா பிரியாணியை சாப்டுருக்க, வெக்கமாயில்லையா" என. உண்மையிலேயே எனக்கு வெக்கமா இல்லை. அதை எப்படி பொதுவில் சொல்ல முடியும்.

ஒரு சோகத்தை முகத்தில் போலியாக உருவாக்கிக் கொண்டு சொன்னேன், "அப்படியில்ல, பாட்டி செத்துப் போயிட்டார். கருமாதி முடியும் வரை அசைவம் சாப்பிட விட மாட்டார்கள். இப்ப விட்டா 15 நாட்கள் காத்திருக்க வேண்டும் அதனால் தான்".

அதுக்கு அப்புறம் எனக்கு மண்டையில் வீங்கியிருந்தது நிலைப்படியில் இடித்துக் கொண்டதால் தான் என் வீட்டம்மா ஒன்னுமே செய்யலை என்று சொன்னா நீங்க நம்பவா போறீங்க.

ஆரூர் மூனா

டிஸ்கி : நாளை காலை எட்டு மணிக்கு ஜில்லா சினிமா விமர்சனம் நமது வலைத்தளத்தில்

Wednesday, January 1, 2014

2014ம் ஆண்டிற்கான சபதங்கள்

அன்பு நண்பர்களே, அன்பர்களே, மகாதியான அடியார்களே, வாசக நண்பர்களே, தோத்தவண்டா வலைத்தள ரசிகர்களே, என் மீது வன்மம் கொண்டவர்களே, எதிர் முகாம்வாசிகளே உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


என்னிடம் அருமையான 7 பதிவிற்குரிய விஷயங்கள் சிந்தனையில் இருந்தன. இடைப்பட்ட காலத்தில் ஊருக்கு போக வேண்டிய கட்டாயம் இருந்ததாலும் போன இடத்தில் பட்டறையைப் போட்டு மகாதியானத்தை வளர்த்ததாலும் பதிவு பக்கமே வர முடியவில்லை.

அந்த விஷயத்தை இனிமேல் யோசித்து சில நாட்களுக்குள் பதிவாக எழுத வேண்டும். இல்லையென்றால் மறந்து போய் விடவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் சமூகத்திற்கு என்னால் ஆற்ற முடிந்த கடமையை தவற விட்டதாகுமல்லவா.

சரி சென்ற 2013ம் ஆண்டு எப்படி இருந்தது என்றும் எடுத்த சவால்களை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறேன் என்பதையும் இந்த ஆண்டுக்கான சவால்களையும் பார்ப்போம்.


சென்ற ஆண்டு பெரிய சவால்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இரண்டே இரண்டு தான் எடுக்கப்பட்டது. ஒன்று அதுவரை இருந்த என் கடனை அடைப்பது, ஒரு நல்ல விஷயத்தை உருவாக்குவது.

நல்ல விஷயம் ஆண்டின் முதல் பாதியில் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி நல்ல படியாக இரண்டாம் பாதியில் அமைந்தது. எல்லா பிரச்சனைகளையும் எளிதாக சமாளிக்க ஊக்கமாக அது இருந்தது.

கடன் தான் நான்கு மடங்கு எகிறி பத்து லட்சத்தை அனாயசமாக தாண்டி விட்டது. மிக முக்கியமான தேவையின் பொருட்டு வாங்கிய கடன் தான் என்பதால் மன திருப்தியுடன் அதனை அடைத்தாக வேண்டிய வேலையை தொடங்க வேண்டும்.


எடையை குறைக்க வேண்டுமானால் டயட்டை கடைபிடிக்க வேண்டும். நல்ல விஷயத்திற்காக டயட் சாப்பாடை செய்து கொடுக்க சிரமம் இருந்ததனால் சென்ற ஆண்டு டயட்டை துவங்கி ஒரு வாரத்திலேயே கைவிட வேண்டியது ஆகிற்று.

இரண்டு நாட்களுக்கு முன் முழு மகாதியானத்தில் வயக்காட்டில் மல்லாக்கப் படுத்து சிந்தித்ததில் உதயமானது இந்த ஆண்டிற்கான சபதங்கள்.

முதல் சபதம் தேவையில்லாமல் கோவப்படுவதை கைவிடுவது தான். சும்மாவே பொங்குவது, எங்கு பார்த்தாலும் காலரை ஏத்தி விட்டு திரிவது, வம்புக்கு வாங்கடா என்று வலியப்போய் எல்லாப் பிரச்சனையிலும் முன்னாடி நிற்பது என்று முன்னர் செய்த அலப்பறைகளை நிறுத்துவது தான். 


சற்று யோசித்துப் பார்த்தால் இது எல்லாமே அனாவசியம் என்று தோன்றியது. அதனால் இனிமேல் எங்கேயும் பொங்கலே கிடையாது. எல்லா இடத்திலும் சமாதானம் தான், அரே ஓ சாம்பா.

எந்த ஒரு வேலையை எடுத்துக் கொண்டு செயல்படுத்தத் துவங்கினாலும் அதனை பாதியில் நிறுத்துவதற்கும் ஆர்வமின்றி தொடர வேண்டியிருப்பதற்கும் முக்கியமான காரணம் மகாதியானம் தான். 

இதனால் கடந்த பத்தாண்டுகளில் நான் இழந்தது ஏகப்பட்ட தொழில் வாய்ப்புகள், எனவே மகாதியானத்தை இந்த ஆண்டு முழுவதும் நிறுத்துவது என்று முடிவு செய்து நேற்றிரவே கமண்டலத்தின் மீது சத்தியம் செய்தாகி விட்டது.

சத்தியத்தை தொடர வேண்டியது தான் எனக்கான சவால். நினைத்த இலக்கை அடைந்தவுடன் வேண்டுமானால் தொடர்ந்து கொள்ளலாம் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு உள்ளேன்.

அடுத்தது கட்டுக்கடங்காமல் போன கடனை வரையறைப்படுத்தி படிப்படியாக அடைக்கத் தொடங்க வேண்டும். இந்த ஆண்டுக்குள் இந்த சவாலை வெற்றிகரமாக முடித்து விடுவேன் என்றே எண்ணுகிறேன்.

அடுத்தது எனக்கு மிகுந்த சிரமமான சவால், வேறென்ன வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி உடம்பை குறைப்பது தான். டயட்டை தொடர முடியாத காலத்தில் சாதாரண உணவுப்பழக்கத்திலும் டயட்டை தொடர முடிந்த காலத்தில் ஸ்ட்ரிக்ட்டான டயட்டிலும் இருந்து உடம்பை குறைப்பேன் என்று என் கணினி மீது சத்தியம் செய்கிறேன்.

சிறிது கூட பயிற்சி இல்லாமல் விளையாட்டாக பதிவெழுத துவங்கிய நான் இப்போது சொல்லிக் கொள்ளும்படி எழுதுவதே பெரிய விஷயமாக எண்ணுகிறேன். இதனை இன்னும் வளர்த்துக் கொண்டு எழுத்தின் தரத்தை உயர்த்த நிறைய பயிற்சி எடுத்து குறைவாக எழுதினாலும் தரமாக எழுத முயற்சிப்பேன் என்று உறுதி எடுக்கிறேன்.

குறும்பட ஆர்வம் பெரிதாக ஆரம்பித்து நான்கு படங்களுக்கு இதுவரை பக்கா ஸ்டோரிபோர்டு எழுதி வைத்தாகி விட்டது. ஆனால் என் வீட்டில் இருக்கும் அத்தியாவசிய வேலையின் காரணமாக படபிடிப்பு சில மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

அதனையும் நல்லபடியாக எடுத்து முடிப்பேன் என்று உறுதி எடுக்கிறேன். ஒரு கைக்குட்டையும் சில காதல்களும் என்ற குறும்படத்தில் நாயகனாக நடிக்க இருக்கும் மயிலனை சில மாதங்கள் காத்திருக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி சென்னையில் சொந்த வீடு, சென்னையில் சொந்த மகிழுந்து, ரயில்வே உத்யோகத்தில் உயர்வு போன்ற இப்போதைக்கு அத்தியாவசியமிலலாத இலக்குகளை எல்லாம் சில வருடங்களுக்கு தள்ளி வைக்கிறேன்.

இத்தனை காலம் என்னையும் என் எழுத்துக்களையும் பொறுத்துக் கொண்டு ஆதரவையும் விமர்சனங்களையும் வழங்கிக் கொண்டு இருக்கும் பாசமிகு நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்பே சிவம்

ஆரூர் மூனா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...