சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, September 24, 2011

நிலக்கொள்ளையால் நெருங்கும் உணவுப்பஞ்சம்

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்திணை அழித்திடுவோம்" என்று பாரதி பாடி ஒரு நூற்றாண்டு முடியவில்லை. அதற்குள் தனிமனிதர்கள் சிலர் சேர்ந்து ஜகத்தினை பட்டினியால் அழிக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மக்களைப் பட்டினி போடும் அரசுகளைக் கொண்ட நாடுகள், லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலத்தை அடிமாட்டு விலைக்கு அன்னியரிடம் விற்று செயற்கையாக பஞ்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் மடியப் போவது உறுதியாகத் தெரிந்தும் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்நாடுகளிலுள்ள விளை நிலங்களை வாங்கிக் குவித்து வருகின்றன "பன்னாட்டுக் கம்பெனிகள்" எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள். அப்படியாவது பிற நாடுகளில் சென்று விளைநிலம் வாங்க வேண்டிய அவசியமென்ன? சொந்த நாட்டு மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றப் போகிறார்களாம்!

இந்த "மனிதநேயர்கள்" ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் மட்டுமே இருப்பதாக தவறாக எண்ணிவிடக் கூடாது. ஜப்பான், அரபு நாடுகள் ஒன்றியம், சவூதி அரேபியா, தென் கொரியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் நில அபகரிப்புப் போட்டியில் முன்னணியில் உள்ளன. எந்த நாடு உலகின் எப்பகுதியில் எவ்வளவு நிலத்தை அபகரித்துள்ளது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் பார்க்கலாம்.

நீண்டதோர் பட்டியலின் ஒரு சிறு பகுதியே இது. இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் எந்தளவுக்கு நில அபகரிப்பில் இறங்கியுள்ளன என்பதைக் காட்டவே இந்தப் பட்டியல் இங்கு இடம்பெறுகிறது.

தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளின் விளை நிலங்களை அதிவேகமாக வாங்கிக் குவித்து வருகின்றன பல பன்னாட்டுக் கம்பெனிகள். ஏற்கெனவே நாட்டு மக்களைக் கூட்டங்கூட்டமாக பட்டினியால் சாகவிடும் அரசுகள், ரகசியமாக காதும் காதும் வைத்தாற்போல பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு வருகின்றன. இவ்வாறு விளைநிலங்கள் பன்னாட்டு முதலாளிகள் வசமாகி எதிர்காலத்தில் உணவு என்பதே சாமானிய மனிதருக்கு எட்டாத கனியாகி விடும் அபாயம் நெருங்குகிறது. வெளிநாடுகளில் உணவை உற்பத்தி செய்து உள்நாட்டில் பெரும் லாபத்திற்கு விற்கும் உரிமை கார்ப்பரேட் நிறுவனங்களின் வசமாவதால் உலகில் என்னென்ன கேடுகள் விளையும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

நிலஅபகரிப்புப் போட்டியினால் உடனடியாக பெருமளவு பாதிப்பைச் சந்திக்கப் போவது ஆப்பிரிக்க நாடுகளே. ஏற்கெனவே எத்தியோப்பியாவில் ஆயிரக் கணக்கில் மக்கள் பஞ்சத்தில் மடிந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. அந்த நிலையில், "எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்" என பல நாடுகள் போட்டி போட்டு எத்தியோப்பிய விளைநிலங்களை அபகரித்து வருகின்றன.

எத்தியோப்பியாவில் 6 லட்சம் ஹெக்டேர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.150 லிருந்து ரூ.500 வரை விலை தரப்பட்டுள்ளது. அங்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 2 ஹெக்டேர் நிலம் உளளது. இந்த நில அபகரிப்பால் ஏறக்குறைய 3 லட்சம் குடும்பங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அபகரிக்கப்பட்ட நிலங்களில் இயந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்யப்படுவதால், வெறும் 20000 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

நிலப்பறிப்புப் போட்டியில் முதலிடம் வகிப்பது இந்தியா.

கருதூரி குளோபல் லிமிடெட் என்ற பெங்களூர் கம்பெனி ஒன்று மட்டுமே 3,50,000 ஹெக்டேர் நிலத்தை அபகரித்துள்ளது. இந்திய அரசின் கடனுதவியோடு இதுவரை 30,000 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. உணவு தானியங்கள், கரும்பு, பாம் ஆயில் போன்றவற்றை விளைவித்து அவற்றை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்போவதாக அறிவித்துள்ள கருதூரி குளோபல் கம்பெனி, "உலகிலேயே பெரிய விவசாய நிலப்பரப்பு" தன்னிடம் உள்ளதாக மார்தட்டிக் கொள்கிறது. உணவுப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென்ற நிபந்தனையோடு இதுவரை எத்தியோப்பியாவுக்கு இந்திய அரசு 50 கோடி பவுண்ட் கடனுதவி அளித்துள்ளது.

எத்தியோப்பியாவில் மட்டுமே 80 இந்திய கம்பெனிகள் நில அபகரிப்புப் போட்டியில் இறங்கியுள்ளன. எத்தியோப்பியாவில் மட்டுமின்றி கானா, மாலி, மட காஸ்கர், மொசாம்பிக், சூடான், டான்சானியா ஆகிய நாடுகளிலும் இந்திய கம்பெனிகள் விளை நிலங்களைப் பறித்து வருகின்றன.

ஆப்பிரிக்க விளை நிலங்களை அபகரித்து, புதியமுறை காலனியாதிக்கத்திற்கு இந்தியா வழிகோலியுள்ளது என்ற குற்றச்சாட்டை வேளாண் அமைச்சர் சரத் பவார் மறுத்துள்ளார். "சில கம்பெனிகள் சர்க்கரை உற்பத்திக்கென விளை நிலங்களை வாங்கி, விளைச்சலை சர்வதேசச் சந்தையில் விற்கப் போகின்றன - அவ்வளவு தான்" என்கிறார் அவர்.

இந்தியாவில் விளையும் பாசுமதி அரிசியை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். எனவே, பிறவகை அரிசியை சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்ய ஏதுவாக ஆப்பிரிக்க விளை நிலங்களில் முதலீடு செய்யுமாறு இந்தியாவின் "யெஸ் பேங்க்" முதலாளிகளுக்கு அறிவுரை வழங்குகிறது.

அதேபோல தற்போது இந்தியாவில் மாமிச உணவுக்கான தேவை அதிகரித்துள்ள போதிலும் மாட்டுத் தீவனமாக மக்காச்சோளம் விளைவிக்க இந்திய அரசு உதவி ஏதும் செய்யவில்லை. ஆனால், ஆப்பிரிக்காவில் சோளம் விளைவிக்க இந்திய கம்பெனிகளுக்கு இந்திய அரசின் கடனுதவி அளிக்கிறது. எத்தியோப்பியாவில் மட்டுமே இதுவரை இந்தியா 430 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. விரைவில் இத்தொகை ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற அநியாயமான நில பறிப்பால் எத்தியோப்பியாவில் ஏற்கெனவே பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலை என்னவாகும்? எத்தியோப்பியாவின் கிழக்கு, தெற்கு பகுதிகளில் மட்டுமே 52 லட்சம் மக்கள் உணவுக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல - ஏற்கெனவே சர்வதேச சமூகத்தின் உதவியால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலைத்திட்டம் தான் பட்டினியால் சாகும் அபாயமுள்ள 80 லட்சம் கிராமப்புற மக்களை காப்பாற்றி வருகிறது. கோடிக் கணக்கான மக்களை பட்டினியில் சாகவிட்டுவிட்டு விளைச்சலை அந்நிய முதலாளிகளிடம் விற்பதை என்னவென்று சொல்வது?

பனை எண்ணெய்க்காகவும், தாவர டீசல் எண்ணெய் உற்பத்திக்காகவும் பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் விளைநிலங்கள் காவு கொடுக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள நாசத்தை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

அடுத்தபடியாக நில அபகரிப்பு காரணமாக சூழலியல் பாதிப்புக்கு இரையாகப் போவது அண்டை நாடான பாகிஸ்தான். கத்தார் நாடு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 16 லட்சம் ஹெக்டேரில் உணவு உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது. இதனால் 25,000 கிராமங்களில் மக்கள் தங்கள் விளைநிலங்களையும் வாழ்விடங்களையும் விட்டு துரத்தப்படுவார்கள். சவூதி அரேபியாவும் பாகிஸ்தானில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. பாகிஸ்தானின் வேளாண் நிலங்களை கம்பெனிகளுக்கு வாரி வழங்கும் படலம் முசரப் ஜனாதிபதியாக பொறுப்பிலிருந்த காலத்தில் வேகமெடுத்தது. அதற்கு முன்பே பாகிஸ்தானில் விவசாயம் மிக மோமான நிலையில் தான் இருந்து வந்தது.

1967இலேயே பாகிஸ்தான் மெக்சிகோவிலிருந்து 47,000 டன் குட்டைரக கோதுமையின் "உயர் தரமான" விதைகளை இறக்குமதி செய்திருந்தது. (அதற்கு முன் 1966இல் இந்தியா மெக்சிகோவிலிருந்து 18,000 டன் கோதுமை விதையை இறக்குமதி செய்துதான் பசுமைப் "புரட்சியை"(!) தொடங்கியிருந்தது). விவசாயத்தை தாராளச் சந்தை அழிப்பது ஏன், எவ்வாறு என்று ஆராய வேண்டுமானால், அதற்குச் சரியான இடம் பாகிஸ்தான் என்று அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்களே கூறுகின்றனர்.

தனிநாடுகளின் இந்த நிலைமை தொடர்ந்தால் உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் பலவும் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அபாயநிலை ஏற்படும். இதனைத் தடுக்க சர்வதேச அமைப்புகள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளன?

உலகெங்கிமுள்ள 16 சர்வதேச வேளாண் ஆராய்ச்சி நிலையங்களின் நிர்வாக அமைப்புதான் "சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு". முதலில் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிலையம் நில அபகரிப்பு நடவடிக்கையில் கம்பெனிகளுக்கு நடைமுறை விதிகளை ஏற்படுத்துவது குறித்துப் பேசியது. இப்போது சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் அதிகமாக அரிசி விளைவிப்பதற்காக சவூதி அரேபியாவின் கம்பெனிகளுடன் பல ஒப்பந்தங்களை செய்திருக்கிறது! சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு சிறு விவசாயிகளுக்கு உதவும் கடமையைக் கைவிட்டு நீண்டகாலமாகி விட்டது. தற்போது பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அமைப்பு உள்ளிட்ட பெருங் குழும முதலாளிகளுக்கு எந்தெந்த நாடுகளில் நிலங்களைப் பறித்து விவசாய உற்பத்தி செய்யலாம் என்று அறிவுரை வழங்கி வருகிறது.

ஒருபுறம் வங்கிகளும், காப்பீட்டுக் கழகங்களும் பெரு முதலாளிகளின் நில அபகரிப்புக்கு எவ்வித உத்தரவாதமும் பெறாமல் கடனுதவி அளிப்பதற்காக சாதாரண மக்களின் சேமிப்புகளை வீணாக்கி வருகையில், மறுபுறம் ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் புவி வெப்பமாதல் பற்றியும் உணவு உற்பத்திப் பெருக்கம் பற்றியும் ஓயாமல் பேசி வருகின்றன. "எதிர்வரும் அபாயத்தை நாம் உணருமுன்பே நம் காலடியில் உள்ள நிலம் கைமாறிப் போயிருக்கும்! எனவே இந்த உணவுக் கொள்ளையர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்கிறார் உணவுக் கொள்கை ஆய்வாளரான தேவீந்தர் சர்மா.

உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாக்வெஸ் தியோஃப், "உள்நாட்டின் உணவு மற்றும் பிற வேளாண் பொருட்களின் உற்பத்திக்காக அந்நிய நாடுகளில் நிலம் வாங்கினால் கச்சாப் பொருட்களுக்கான விலையும், அவற்றின் உற்பத்தியாளர்களுக்கான கூலியும் அநியாயமாகக் குறைந்து புதுக் காலனி ஆதிக்கம் ஏற்பட ஏதுவாகும்" என்று கூறினார்.

ஆனால் இதற்கு எதிராக உணவுப் பொருள் வணிகத்துக்கு ஆதரவாக வாசிங்டனிலுள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹொவாச்சிம் வான் பிரவுன் பின்வரும் பதிலைக் கூறினார்:

"சர்வதேசச் சந்தையை அண்டியிருப்பதால் இறக்குமதி செய்யும் நாடுகள் விலை உயர்வால் மட்டுமின்றி முக்கியமாக - பொருட்களின் வரத்து தடைப்படுவதாலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அந்நாடுகள் தடையற்ற உணவுப் பொருள் வரத்துக்கு உத்தரவாதம் இருக்க வேண்டுமெனக் கருதுகின்றன".

மேற்கூறியவற்றைப் பார்க்கும்போது, உள்நாட்டு மக்களுக்கான உணவை உற்பத்தி செய்வதற்காக அந்நிய மண்ணில் உற்பத்தி செய்வது ஏற்கெனவே பட்டினிக்கு ஆளான மக்கள் வாழும் ஏழை நாடுகளை மேலும் சுரண்டுவதுதான் என்பது தெளிவாக விளங்கும். நிலங்களைக் கையகப்படுத்தும் பன்னாட்டுக் கம்பெனிகள் வேளாண் உற்பத்தியை பெரும் லாபத்திற்கு வேறு நாட்டில் விற்பனை செய்வதால், உள்நாட்டில் மக்கள் உணவுக்குப் போதுமான நிலம் இல்லாமல் பஞ்சத்தில் மாள்வதை அறிந்தே இந்த நிலக் கொள்ளைக்கு சுரண்டல்வாத அரசுகள் வழிய மைத்துக் கொடுக்கின்றன. அது மட்டுமின்றி விளை நிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விற்பனை செய்வது, "வேளாண் உற்பத்தியில் தனியார் முதலீட்டை அதிகளவில் ஊக்குவிக்கும்" என்றும், "பொறுப்புள்ள சர்வதேச வேளாண் முதலீட்டை நல்ல முறையில் ஊக்குவிக்க நடைமுறை விதிகளை உருவாக்க வேண்டும்" என்றும் ஐ.நா. சபையும் உலக வங்கியும் இதற்கு சப்பைக் கட்டு கட்டுகின்றன.

2008ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் தொடங்கி உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளை இன்றுவரை அனுபவித்து வருகிறோம். விளை நிலங்களின் பரப்பளவு குறைவதால் உலகெங்கும் உணவுப் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. முதலாளிகளுக்கு இந்த இரண்டு பற்றாக்குறைகளும் சேர்ந்து புதியதோர் லாபகரமான தொழிலுக்கு வழியமைத்துள்ளன. பொருளாதார நெருக்கடியால் மலிவாகிவிட்ட விளைநிலம், குறைந்த கூலியில் கிடைக்கும் உழைப்பு, அதிக விலைக்கு விற்கக்கூடிய உணவை விளைவிக்கும் நிலத்தை வாங்கக் கிடைக்கும் கடனுதவி - இவையாவும் பெருமுதலாளிகளை நிலக் கொள்ளைத் தொழிலை நோக்கி கவர்ந்திழுக்கின்றன.

உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், மறுகட்டமைப்புக்கும் வளர்ச்சிக்குமான ஐரோப்பிய வங்கி போன்ற பகாசுர நிதி நிறுவனங்கள் நில அபகரிப்புக்கு பெரும் தொகைகளை கடனாக அளிக்கின்றன. இதற்காக அரசுகளை நில உரிமைக் கொள்கைகளை மாற்றியமைக்குமாறு வற்புறுத்தி வருகின்றன. (அண்மையில் இந்திய அரசு அயல் நாட்டவர் இந்தியாவில் விளைநிலம் வாங்கலாம் என்ற சட்டத்தை முன் வைத்ததும், அதனை எதிர்த்து வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் தஞ்சையில் ஏப்ரல் 17 அன்று தாளாண்மை உழவர் இயக்கம், தமிழக உழவர் முன்னணி, த.தே.பொ.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி, தஞ்சையிலுள்ள பல்வேறு உழவர் சங்கங்கள் இவை யாவும் ஒன்றிணைந்து தஞ்சையில் எதிர்ப்பு மாநாடு நடத்தியது நினைவிருக்கலாம்).

நிலப் பறிப்பில் உலக வங்கி போன்ற கொள்ளை லாபம் ஈட்டும் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, 2008 பொருளாதார நெருக்கடியில் திவாலாகி, பின்பு வட அமெரிக்க அரசின் நிதி உதவியால் பிழைத்துப் போன மார்கன் ஸ்டான்லி, டாயிச் வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியவை பெருமளவு முதலீடு செய்துள்ளன. மக்களின் இயல்பான உரிமையாக இல்லாமல் பொருள் படைத்தவரின் தனியுரிமையாக உணவை மாற்றும் சூதாட்டத்தில் கொழுத்த லாபம் அடைவதற்காக உலகெங்கிலும் விளை நிலங்களை இந்நிறுவனங்கள் அபகரித்துள்ளன.

பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் மட்டுமின்றி, தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஹென்தினா, உருகுவாய், பராகுவாய் ஆகியவற்றிலும் விளை நிலங்களை வாங்க இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் போட்டியில் இறங்கியுள்ளன. தென் அமெரிக்காவில் விளை நிலங்களை வாங்குமாறு இந்திய அரசு இந்திய முதலாளிகளை ஊக்குவித்து வருகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நாட்டின் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமான சிறுதுண்டு நிலங்களையெல்லாம் பிடுங்கி பெருமுதலாளிகளின் வசம் ஒப்படைக்கும் இந்திய அரசு, அதே மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற வெளிநாடுகளில் நிலம் வாங்கும்படி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் உணவு உற்பத்தியை நாட்டை ஆளும் பெருமுதலாளிகளுக்கு வாங்கித் தரும் தரகு வேலையைத்தான் இந்திய அரசு முழு வேகத்தில் செய்து வருகிறது.

டாட்டாவிற்கு நிலத்தை தாரைவார்க்க சிங்கூரில் மக்களை வேட்டையாடிய மேற்கு வங்க அரசும், அதே டாட்டாவிற்கு தூத்துக்குடியில் நிலத்தை விற்க முயன்ற தமிழ்நாட்டின் அரசும், பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று கமிசனை அள்ளும் இந்திய அரசும், நமது "மக்கள் பிரதிநிதிகள்" தரகு வேலையில் கைதேர்ந்தவர்கள் என்பதையே பறைசாற்றுகின்றன. நாட்டை ஆள்வது காங்கிரஸ் கட்சி அல்ல - கம்பெனிகளே என்றும் உறுதி செய்கின்றன.

தூத்துக்குடியில் டைட்டானியம் ஆக்ஸைட் அகழ்ந்தெடுக்கும் டாட்டாவின் திட்டம் பொதுமக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரகசியமாக பல பகுதிகளில் ஓசைப்படாமல் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியின் கீழுள்ள சிங்கூரில் போலீசும் துணை ராணுவப் படைகளும் மக்களை வேட்டையாடின. தற்போது வடமாநிலங்களில் ராணுவமும் போலீசும் பழங்குடி மக்களை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு, கனிமங்களை கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வாரி வழங்க முற்படுகின்றன.

வருகின்ற 10-15 வருடங்களில் பருப்பு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற அறிவிப்போடு அரியானா முதலமைச்சர் தலைமையிலான செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு ஜூன் 6ஆம் நாள் ஒரு வரைவு அறிக்கையை அளித்துள்ளது. இக்குழுவில் மேற்குவங்க முதல்வர், பீகார் முதல்வர், பஞ்சாப் முதல்வர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வறிக்கை கனடா, அர்ஹென்தினா, ஆஸ்திரேலியா, பர்மா ஆகிய நாடுகளில் நிலம் வாங்கி பருப்பு விளைவிக்க இந்தியக் கம்பெனிகளை ஊக்குவிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறது. இதே அறிக்கை எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க ஆசிய நாடுகளில் நிலம் அபகரிக்க அறிவுறுத்துகிறது.

நிலப்பறிப்பு அரசியல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க அரசும் சேர்ந்திருப்பது சீரழிவின் புதிய நி€ல் ஆபத்தின் புதிய வளர்ச்சி. மிகப்பெரும் ஜனநாயக நாடு, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து வல்லரசாக மாறி சர்வதேச அரங்கில் அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வல்லரசுகள் மேற்கொள்ளும் அனைத்துவித மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது இந்திய அரசு.

உணவை உற்பத்தி செய்யும் விளைநிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால், மண்ணைத் தின்று வாழும் ஹைத்தி மக்களைப் போல, எத்தியோப்பிய மக்களைப் போல நாமும் பட்டினியால் கூட்டங் கூட்டமாக மடியும் நாள் வெகு தூரத்திலில்லை. எனவே இந்திய விளை நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதையும், வெளிநாடுகளில் இந்திய கம்பெனிகள் விளை நிலங்களை வாங்கிக் குவிப்பதையும், எதிர்த்து தெரடர் போராட்டங்களை முன் னெடுப்பது நமது அவசரமான, அவசியமான கடமை. ஏனெனில் இவை ஒரே பிரச்சினையின் இரண்டு கூறுகள். வேளாண் வல்லாதிக்கத்தின் இரண்டு முனைகள்.


இணையத்தில் படித்தது

ஆரூர் முனா செந்திலு



1 comment:

  1. pannattu companykalin kai ongumitathil ellam meendum oru fidal castro thondruvar

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...