சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, September 23, 2011

ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள நாக விகாரை பௌத்த சங்கம் அதிர்ச்சிகரமான ஓர் அறிவித்தலை வெளியிட்டிருந்தது. யுத்தம் காரணமாக வீடழிந்த மக்கள் தமது காணிகளில் புத்த விகாரைகளை அமைக்க இடமளித்தால் அவர்களுக்கு மிக வசதியாக ஆறு லட்சம் ரூபா செலவில் வீடு அமைத்துத் தருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாண நகரத்தில் உள்ள நாக விகாரையும் ராணுவத்தினரும் இதன் அனுசரணையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்தம் காரணமாக நொந்து நலிந்து வீடற்று அழிவின் வெளியில் தவிக்கும் ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. புத்தர் சிலைகளைப் பரவலாக நட்டு பௌத்தத்தைப் பரப்பும் இந்த நடவடிக்கை எத்தகைய கொடுமையானது? இதை அறிவிக்கும் அளவிற்குத் தமிழர் நிலத்தில் சிங்கள இனவாதமும் பௌத்த மதவாதமும் தலையெடுத்திருக்கிறது.

இன்று ஈழத் தமிழர்கள் எல்லாவற்றையும் கண்டு அஞ்ச வேண்டிய காலத்தில் வாழ்கிறார்கள். யுத்தத்தால் அழிவு, ஆக்கிரமிப்பால் ராணுவ மயம், அதனால் அச்சம் மிகுந்த வாழ்க்கை முதலியவற்றோடு எதிர் காலத்தையும் இருப்பையும் பயமுறுத்தும் புத்தர் சிலைகளும் பௌத்த மத வாசனையை வீசிக்கொண்டு ஈழத் தமிழரது நிலம் நோக்கி படையெடுக்கின்றன.

பௌத்த சமயம் இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தோன்றியதாக வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. முழுக்க முழுக்க ஞான போதனைகளையும் தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மதம். இந்தியாவில் உருவாகிய இந்த மதம் மத்திய ஆசியா, இலங்கை, ஜப்பான், திபெத், கொரியா, மங்கொலியா போன்ற நாடுகளுக்குப் பரவியிருக்கின்றன. இதில் இலங்கையில் சிங்கள மக்கள் பௌத்தத்தையும் சிங்களத்தையும் இணைத்துப் பார்த்து மதம் என்பதற்கு அப்பால் வெறியாக வளர்த்து வருகிறார்கள். ஈழத் தமிழ் மக்கள் மீதான போரின்போதும் ஈழத் தமிழ் மக்கள்மீதான அரசியல் நடவடிக்கைகளின்போதும் புத்தரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டும் பிக்குகளின் ஆசிபெற்றும் நடத்துவதாக சிங்கள அரசியல் தலைவர்களும் ராணுவத்தினரும் குறிப்பிடுகின்றனர்.

யுத்தம் முடிவுறுத்தப்பட்ட இன்றைய காலத்தில் பௌத்த மதத்தை எப்படியாவது பரப்ப வேண்டும் என்னும் தீவிர நோக்கத்துடன் பல செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்கிறது. போர் வேலைப் பளுக்கள் இல்லாத இன்றைய நிலையில் சிங்கள பௌத்த அடையாளங்களையும் உருவாக்கும் முயற்சியில் ராணுவத்தினர் மும்முரமாக ஈடுபடுகின்றனர். போரால் கைப்பற்றப்பட்ட இடங்களில் எவ்வளவு வேகமாக அந்த இடங்களில் உள்ள ஈழத் தமிழர்களின் பண்பாட்டு வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டனவோ அதே வேகத்திலேயே புத்தர் சிலைகள் நடப்பட்டன. போர் முடியும் முன்னரும்கூடக் கைப்பற்றப்பட்ட இடங்களில் புத்த சிலைகளை நடும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்றிருக்கின்றன.

ஞானம், போதனை, அமைதி ஆகிய பிரகடனத்துடன் கண்களை மூடிக்கொண்டு உறைந்திருக்கிற புத்தர் ஏன் தமிழ் மக்களின் அமைதியைக் குலைப்பவராகவும் இருப்பிடங்களைவிட்டுத் துரத்துபவராகவும் இருக்க வேண்டும்? புத்தர் சிலை என்றால் ஈழத் தமிழர்கள் கலவரம் கொள்கிறார்கள். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் புத்தர் மீதான எல்லா ஞான, தத்துவச் சிந்தனைகளும் உடைந்து பல வருடங்களாகின்றன. இப்போது புத்தர் இலங்கைப் படைகளின் சீருடை அணிந்த ராணுவத்தைப் போல இருக்கிறார். இலங்கை ஜனாதிபதியின் கழுத்தில் உள்ள சிவப்புப் பட்டியணிந்த சிங்களத் தலைவரைப் போல இருக்கிறார். புத்தர் கண்களை மூடிக்கொண்டு எல்லா அநியாயங்களுக்கும் கட்டளையிடுபவரைப் போல இருக்கிறார். புத்தரின் பெயராலேயே எமக்கெதிரான எல்லா அநியாயங்களும் இழைக்கப்படுகின்றன என்று ஈழத் தமிழர்கள் உணர்வதும் நம்புவதும் தற்போதைய நிலைமைகளாலும் காலங்களாலும் ஏற்பட்டிருக்கின்றன.

போரின் பிறகு ஈழத் தமிழர்களின் நிலம் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. பெருமளவான பகுதிகளுக்குச் சென்றபோது புத்தர் சிலைகளைப் பார்க்கத் தவறவில்லை. அரச மரங்கள் இருந்த இடங்களிலெல்லாம் புத்தர் வந்து அமர்ந்திருக்கிறார். அவரது சிலைகள் கிராமங்கள்தோறும் தெருக்கள்தோறும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நகரங்கள் தோறும் பெரும் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும் கனகராயன்குளத்திலும் வவுனியாவிலும் யுத்தத்திற்குப் பிறகு பெரும் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடையாளங்கள் முழுக்க முழுக்க எங்களுக்குப் புறம்பானவை. கனகராயன்குளம், முல்லைத்தீவு நகரம் போன்ற சில இடங்களில் மக்களின் எதிர்ப்பால் புத்தர் சிலை நடுகை தடைபட்டிருக்கிறது.

வன்னி இன்று பௌத்த நிலத்தைப் போல பௌத்த நகரங்கள் கொண்டிருக்கும் அடையாளங்களோடு இருக்கிறது. இந்த உணர்வும் திணிக்கப்பட்ட அடையாளங்களும் மிகுந்த பதற்றத்தையும் மனவுளைச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்தப் புத்தர் சிலைகள் நடப்பட்டுச் சில வருடங்கள் கழியும்போது பெரும் வரலாற்றைக் கொண்டவையாகப் பௌத்தவாதிகளால் சொல்லப்படும். பௌத்த பூமி சிங்கள பூமி என்னும் வரலாறு கட்டப்படும். இதனால் ஈழத் தமிழ் நிலம் ஆபத்தையே எதிர்கொள்ளப் போகிறது. ஏற்கனவே சிங்கள இனவெறி பிடித்த பௌத்த பிக்குகள் வடக்கு கிழக்கு என்னும் ஈழம், பௌத்த சிங்கள நாடு என்பதற்கு அங்கே தடயங்கள் இருந்தன என்றும் அதைப் புலிகள் அழித்துவிட்டார்கள் என்றும் நாம் அவற்றைக் கிண்டிக் கண்டு பிடிப்போம் என்றும் ஊடகங்களில் பரபரப்பு அறிக்கைகளை விட்டு மக்களை நோகடித்தார்கள்.

புத்தர் ஞானத்தையும் அமைதியையும் எங்களுக்குப் போதிக்கிறார். அவரை நாம் வணங்க வேண்டும் அவரைப் பின்பற்ற வேண்டுமென்றும் சொல்கிறது ராணுவத்தரப்பு. பௌத்தத்திற்கும் இந்து மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ராணுவம் சொல்கிறது. புத்தரை வணங்கும் உங்களிடத்தில் ஞானத்தையும் அமைதியையும் நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லையே? துப்பாக்கியை வைத்துக்கொண்டு கொலைவெறி பிடித்தலைவதைத்தானே பார்த்திருக்கிறோம். உங்களால் மிகக் கொடுமையாக நிகழ்த்தப்பட்ட பேரழிவுகளைத் தாமே பார்த்திருக்கிறோம். அதனால் ஏற்பட்ட பெருந்துயரங்களைத்தாமே பார்த்திருக்கிறோம். புத்தரின் கைகளில் துவக்குகள் இருப்பதைப் போலவும் அவர் போர்த் தாங்கிகளில் நகர்வதைப் போலவுமே இருக்கிறது. இதில் ஞானமும் அமைதியும் எங்கிருக்கிறது?

புத்த விகாரை அமைக்க இடமளித்தால் ஆறுலட்சம் ரூபா பெறுமதியான வீடு என்னும் திட்டம் மக்களால் முறியடிக்கப்பட்டது. அதன் பிறகு எப்படிப் பௌத்தத்தைப் பரப்புவது என்பது தொடர்பில் சிந்திக்கப்பட்டுத் தொடர்ந்தும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்தில் பௌத்த சங்கத்தை அமைத்ததுடன் யாழ்ப்பாணம் பௌத்த இந்து பண்பாட்டுப் பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இவை பௌத்த ஜெயந்தி தினத்திற்கு அண்மையாக மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணத்திலும் யாழ் பல்கலைக்கழகத்திலும் எதற்குப் பௌத்த சங்கம்? பௌத்த பேரவை? தமிழர்களின் நிலத்தில் பௌத்த பேரவையும் புத்தர் சிலையும் எதற்கு என்பதுதான் ஈழத்தில் எழுந்த பிரச்னையாக இருக்கிறது.

இதே காலத்தில் பௌத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 28 புத்தர் சிலைகள் ராணுவத்தினரின் அழைப்பின் பேரிலேயே யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அவை யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி படைத்தளத்தைச் சுற்றிய பகுதிகளில் வைக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. இந்தச் செய்தி யாழில் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. பின்னர் அவற்றைப் பலாலி படைத்தளத்தில் உள்ள அரச மரம் ஒன்றின் கீழாக வைத்தனர். புத்தரின் வெவ்வேறான ஞான நிலைகளைக் குறித்த அந்தப் புத்தர் சிலைகள் வைக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. யாழ் நகரத்தில் வைத்திய சாலைக்குப் பின்புறமான வீதி சுமார் 20 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டபோது இதேபோலவே சின்னச்சின்ன புத்தர் சிலைகள் பல அரச மரங்களின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் ராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தது முதல் நடப்பட்டு வந்தமையால் இந்த அரச மரங்களில் பல இந்த 20 வருடங்களில் வளர்த்தெடுக்கப்பட்டவை போலவே இருக்கின்றன. பலாலி படைத்தளத்தைப் போல அனைத்துப் படைத்தளங்களிலும் இந்த அபாயச் சிலைகளை நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

யாழ் பல்கலைக்கழகமும் தொல்லியல் அமைச்சும் இணைந்து கந்தரோடையில் தொல்லியல் மையங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அத்தோடு இதே அணியினர் பழமையும் வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்த யாழ் கோட்டையையும் ஆய்வுசெய்து புனரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆய்வின்போது இயல்பாகவே வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த ஆதாரங்கள் உள்ளன என வாய்க்கு வந்தபடி கூறும் சிங்கள ஆராய்ச்சியாளர்களும் பௌத்த பிக்குகளும் உண்மையான முடிவுகளை வெளியிட விடுவார்களா? பௌத்த பிக்குகள் உட்படத் தெற்கு மாணவர்களும் ஈழத்துத் தொல்லியல் மாணவர்களும் ஆய்வில் ஈடுபட்டுவந்தார்கள். ஆய்வுக் களத்தில் ஆய்வுக்கு முன்பாகவே இவை சிங்கள பௌத்தத் தடங்கள் உள்ள இடம் என்று பிக்குகள் தெரிவித்திருந்தது ஈழத்துத் தொல்லியல் மாணவர்களிடம் ஆய்வு நடவடிக்கைகளில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருந்தன.

ஆய்வுக்குப் பொறுப்பு வகித்த சிங்கள ஆராய்ச்சியாளர் கந்தரோடையில் சிங்கள பௌத்தத் தடங்கள் உள்ளன என்று சிங்களப் பத்திரிகை ஒன்றிற்குத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து ஈழத்தில் பதற்றத்தை உருவாக்கியது. அவருடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் இதை மறுத்தோ இதற்கு விளக்கமளித்தோ கருத்துத் தெரிவிக்கவில்லை. கந்தரோடையில் உள்ள பழம் பெரும் பௌத்த விகாரைகள் தமிழ் பௌத்தத்திற்கு உரியவை என்ற கருத்தை ஆய்வுசெய்த வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துவந்திருந்தார்கள். இன்று ஈழத் தமிழர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட தொல்லியல் மையங்கள் மீதும் விடுதலைப் புலிகள் காலத்து நினைவு மையங்கள்மீதும் சிங்கள வரலாற்றுக் கதைகள் திணிக்கப்படுகின்றன. குறித்த மையங்கள் சிங்களவர்களின் சுற்றுலாத்தளங்களாவதுடன் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அவர்களைப் படையெடுக்கத் தூண்டி அவர்களிடத்தில் வடக்கு கிழக்கு நிலத்தின் மீது கவர்ச்சியை ஏற்படுத்திக் குடியமரத் தூண்டும் நடவடிக்கைகளில் அரசும் ராணுவமும் செயற்படுகின்றன. இந்த அணுகு முறையே கந்தரோடையிலும் நிகழ்ந்தது.

திருமலையில் புத்தர் சிலைவைக்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்றம் வரை அதிர்வை ஏற்படுத்தியது. அதை எதிர்த்த வ.விக்கினேஸ்வரன் திருமலை நகரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் குறித்த புத்தர் சிலை ஆயுதம் தரித்த ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டது. பின்னர் திருமலையின் பல இடங்களிலும் புத்தர் சிலைகள் பெருகிப்போயின. மாங்குளம், நயினாதீவு விகாரை, யாழ் நாக விகாரை என்று முழு விகாரைகளின் முன்பாகவும் ஆயுதம் ஏந்திய படைகள் காவல்செய்கின்றன. இந்தப் பாதுகாப்பில் இன்று வடக்கு கிழக்கு என்கிற ஈழமெங்கும் புத்தர் சிலைகள் பெருகிவிட்டன. அரச மரங்கள் உள்ள இடங்களிலெல்லாம் புத்தர் சிலைகளும் அரச மரங்கள் இல்லாத இடங்களிலும் அவை புதிதாக நடப்பட்டுத் தண்­ர் ஊற்றியும் வளர்க்கப்படுகின்றன.

நிலத்திற்காகப் போராடிய இனம் இன்று பெரும் போரை எதிர்கொண்டு பேரழிவுகளைச் சந்தித்து நலிந்து எஞ்சியிருக்கிறது. இருக்கும் உயிரையும் வதைக்கும் விதமாகவும் காயப்பட்ட காலத்தை அச்சுறுத்தும் விதமாகவும் எதிர்காலத் தலைமுறைகளை எச்சரிக்கும் விதமாகவும் நகரும் இந்தப் புத்தர் சிலைகள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிருக்கின்றன. தடுக்க முடியாதபடி ராணுவப் பாதுகாப்பும் அரச கட்டளையும் வளர்ந்துகொண்டிருப்பதுடன் இனவாதமும் ராணுவ வெற்றியும் புத்தரின் படை யெடுப்பை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. மிக நீளமான கால்களால் மிக அகலமாகக் கால்களை நீட்டி வைத்துக்கொண்டு புத்தர் ஈழத்து நிலமெங்கும் படையெடுப்பை நடத்தி நிலத்தைக் கைப்பற்றுகிறார்.

நன்றி: காலச்சுவடு

ஆரூர் முனா செந்திலு



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...