சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, February 23, 2012

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 4பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நண்பர்கள் குழு புதியதாக தோன்றியது. அதுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் குரூப் மாறி வேறு வகுப்புகளுக்கு சென்றார்கள். நான் படித்த பயாலஜி தமிழ் வகுப்புக்கு அது வரை சற்று தூரத்தில் இருந்த நண்பர்கள் நெருக்கமானார்கள். கிரிக்கெட் வெறித்தனமாக மாறியது. புதுப்புது பெண்களை சைட் அடிக்க முயற்சிகள் துவங்கின.

அந்த நண்பர்கள் குழுவை நான் என்றுமே மறக்க மாட்டேன். அவர்களில் சிலரை குறிப்பிடுகிறேன். இதனை நண்பர்களில் யாராவது படித்தால் உடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். தினேஷ் தற்போது சீனாவில் பிஸினஸ் செய்கிறான். மஞ்ச ரொட்டி விஜயன் திருவாரூரிலேயே ஸ்டீல் ஆர்டர்கள் எடுத்து செய்து கொண்டுள்ளான். சீனிவாசலு இன்று வரை நெருக்கமாக என்னுடன் தொடர்பில் இருப்பவன். சிங்கப்பூருக்கு செல்ல ஆட்கள் ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டுள்ளான். தொளுத்தி அந்தோணிராஜ் திருவாரூரிலேயே ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டுள்ளான். காட்டான் அருண் சிங்கப்பூரில் பெரிய பணியில் இருக்கிறான்.

பாக்கியுள்ள பச்ச மொளகா நாகேஸ்வரன், தொப்பை ரமேஷ், அப்துல் மாலிக், பாரதிராஜா, முருகானந்த ராஜா அம்மையப்பன் பாலாஜி, மாட்டு பாலாஜி, ஸ்ரீதர், அமாவாசை சரவணன் மற்றும் பலர். இவர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. என் மிகச்சிறந்த நண்பனாக இருந்த சுதாகர்ராஜ் திருவாரூரில் சிவில் இஞ்சினியராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டான். அப்புறம் இப்பொழுதும் தொடர்பில் உள்ள ராஜேஷ், அருண் பி.எஸ் (வாத்துன்னு சொன்னா அடிப்பான்), நரேந்திரன், சுரேன் ஆகியோர் படிக்கும் போது சரியான செட்டாக இருந்தது.

அப்பொழுதெல்லாம் மதிய வேளைகளில் கட் அடித்து விட்டு சிங்களாஞ்சேரி கேட் அருகில் உள்ள ஒரு கால்வாய் மதகுக்கு குளிக்க சென்று விடுவோம். 5 மணி வரை குளித்து விட்டு பிறகு கிரவுண்டிற்கு வந்து இருட்டும் வரை கிரிக்கெட் விளையாடி விட்டு தான் வீட்டிற்கு செல்வோம். இது வழக்கமான செயல். வாரத்தில் மூன்று நாட்கள் கண்டிப்பாக சினிமா. ஒரு சமயம் செங்கம் தியேட்டரில் டிக்கெட்டுக்கு கொடுக்க பணம் பத்தாமல் சிலர் மட்டும் காம்பவுண்டு ஏறிக்குதித்தெல்லாம் சினிமாவுக்கு சென்றதுண்டு.

ஒரு சம்பவம் சரியாக 1995 டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டம், அது வரை எந்த பகுதியிலும் போலீஸ் காவல் குறைவாக இருந்த காலக்கட்டம். ஏனென்றால் 1996 ஜனவரி 1லிருந்து தான் திருவாரூர் தனி மாவட்டமாகிறது. இரவு முழுவதும் நண்பர்கள் குடித்து விட்டு விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தத்தில் கூத்தடித்துக் கொண்டு அந்த வழியாக வந்து போகும் வண்டியையெல்லாம் நிறுத்தி ஹாப்பி நியூ இயர் என்று கத்தி கலாட்டா செய்வதுமாக இருந்தோம். எங்களில் அருண் என்ற நண்பன் சரக்கடித்து மட்டையாகி அங்கு படுத்திருந்தான். நாங்கள் இருபது பேர் ரோட்டில் கத்திக் கொண்டு இருந்தோம். ஒரு கார் வந்தது. நாங்கள் நிறுத்தச் சொல்லி கூச்சலிட வண்டி நிற்கவில்லை. நண்பர்கள் கல்லெடுத்து எறிந்து சத்தம் போடவே வண்டி சரக்கென்று நின்றது. ரிவர்ஸில் வந்தது. சற்று வெளிச்சத்துக்கு வந்ததும் தான் தெரிந்தது. அது புதிய எஸ்பியின் கார்.

டேய் போலீஸ் என்று சத்தம் மட்டும் தான் கேட்டது. கார் வந்து நிற்பதற்குள் அந்த இடத்தில் ஒருத்தனையும் காணும் என்னையும் சேர்த்து. காரிலிருந்து எஸ்பி உட்பட நான்கு பேர் இறங்கி இடத்தை சல்லடை போட்டு தேடுகிறார்கள். ஒருவனும் சிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து கார் சென்றது. அதன் பிறகு ஒருத்தன் ஒருத்தனாக தலையை வெளிக்காட்டுகின்றனர். அது மிகப்புதிதாக வளர்ந்து வரும் புறநகர் பகுதி. இருவர் ஒரு வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வருகின்றனர். ஒரு வேலிப்பகுதியிலிருந்து இருவர் வருகின்றனர். எதிர்பக்கம் இருந்த வயல் முழுவதும் மழைத்தண்ணீர் நிரம்பியிருந்தது. அதில் மூழ்கிப்படுத்திருந்த பலர் எழுந்து வந்தனர். நான் எங்கிருந்தேன் என்று கேட்கிறீர்களா, அதற்கடுத்த பிளாட்டில் கட்டுவதற்காக மணல் கொட்டியிருந்தது. அதனுள் நுழைந்து கொண்டிருந்தேன். எல்லோருக்கும் வந்தபின்பு ஒருவனை பற்றி சந்தேகம் இருந்தது.

மட்டையாகி படுத்திருந்த அருண் எங்கே அவன் சைக்கிள் எங்கே என்று. பிறகு கேசவன் தான் சொன்னான், அவன் ஒடும் முன்பு அருணையும் அவன் சைக்கிளையும் பேருந்து நிறுத்தத்தின் மேலே ரூப்பில் தூக்கி போட்டு விட்டு சென்றாக. இன்று வரை எத்தனையோ புத்தாண்டு கொண்டாட்டத்தை பாரத்து விட்டேன். அது போல ஒரு திரில் கிடைக்கவேயில்லை. அன்று யாராவது ஒருவர் மாட்டியிருந்தால் போதும் அத்தனை பேரின் ஜாதகமும் போலீஸ் கையில் போயிருக்கும்.

ஆரூர் மூனா செந்தில்

10 comments:

 1. நன்றாக இருந்தது அண்ணா அந்த சம்பவத்தை நினைத்து நினைத்து சிரித்தேன்.

  ReplyDelete
 2. உங்களுக்கு குடிப்பது கூத்தடிப்பது மட்டும் தான் வேலையா?

  ReplyDelete
 3. எப்படி உங்களை போலீசில் பிடிக்காமல் விட்டார்கள்

  ReplyDelete
 4. நினைவுகள் மிக அற்புதமானது...

  இதை மீண்டும் படித்து பாருங்கள் மனதில் ஏற்படும் சந்தோசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...

  ReplyDelete
 5. /// சத்தியமூர்த்தி said...

  நன்றாக இருந்தது அண்ணா அந்த சம்பவத்தை நினைத்து நினைத்து சிரித்தேன் ///

  நன்றி சத்தியமூர்த்தி

  ReplyDelete
 6. /// தஞ்சை குமணன் said...

  உங்களுக்கு குடிப்பது கூத்தடிப்பது மட்டும் தான் வேலையா? ///

  ஹி ஹி ஹி ஆமாங்கண்ணா.

  ReplyDelete
 7. /// மயில்வாகனா said...

  எப்படி உங்களை போலீசில் பிடிக்காமல் விட்டார்கள் ///

  அவர்களுக்கு அது புதிய இடம் என்பதால் நாங்கள் பதுங்கிய இடம் தெரியாமல் போய் விட்டது.

  ReplyDelete
 8. /// சங்கவி said...

  நினைவுகள் மிக அற்புதமானது...

  இதை மீண்டும் படித்து பாருங்கள் மனதில் ஏற்படும் சந்தோசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது... ///

  நீங்கள் சொல்வது சரி தான் சங்கவி.

  ReplyDelete
 9. நண்பா, பள்ளிக்கூட வாழ்க்கையை ரொம்ப அனுபவிச்சு வாழ்ந்துருக்கீங்க. நானும் வ.சோ.ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 1997ஆம்(10th) ஆண்டோடு படிப்பை நிறுத்திட்டு வெளில வந்துட்டேன். அப்புறமா ஆசை வந்து பிளஸ்டூ பிரைவேட்டா எழுதி கிடாரங்கொண்டான் கல்லூரியில பி.காம் படிச்சதெல்லாம் தனி கதை.

  தொடர்ந்து உங்கள் தளத்தை வாசிக்கிறது உண்டு. ஆனால் பின்னூட்டம் இடுறதுக்கோ மின்னஞ்சல் அனுப்புறதுக்கோ நேரம் ஒதுங்குறது இல்லை. நான் வெச்சிருக்கும் அலுவலகத்தில் மட்டுமே இணைய இணைப்பு உண்டு. வீட்டில் உள்ள கணிணியில் வயர்லெஸ் இன்டர் நெட் வேலை செய்வதில்லை. பெரும்பாலான நேரம் மின்வெட்டிலேயே கழிவதால் பணிகளை செய்யவே நேரம் போதவில்லை. அதனால் இணைய உலாவல்களை கிட்டத்தட்ட மறக்கும் நிலைக்கு வந்து விட்டேன்.

  பேபி, செங்கம் ஆகிய தியேட்டர்கள் மூடப்பட்டது மட்டுமில்லை. இடித்து தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. என்ன வருத்தம் என்றால் 1997ல் தொடங்கி சில காலம் செங்கம் தியேட்டரில் ஆப்ரேட்டர் உதவியாளராக வேலை செய்திருக்கிறேன்.பிட்டு படங்களை ஒதுக்கி விட்டு The Rock, Broken Arrow, Speed2, independence day, Jurassic park 3, Air force one, Titanic போன்ற நல்ல படங்கள் எல்லாம் திரையிடப்பட்ட காலம் அது. இப்போதும் அந்த வழியாக கடந்து செல்கையில் நான் அங்கே பணிபுரிந்த காலம் நினைவுக்கு வரும்.

  ReplyDelete
 10. /// திருவாரூர் சரவணன் said... ///

  மிக்க நன்றி சரவணன்.நானும் மாதம் 10 நாட்கள் திருவாரூரில் தான் இருக்கிறேன். நீ்ங்கள் திருவாரூரில் இருந்தால் சொல்லுங்கள் வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...