ரம்மி படம் பார்த்ததனால் வந்த விளைவு இந்த பதிவு. எனக்குள் இருந்த சிறு வயது காதல்களுள் ஒன்றை கிளறி விட்டது படம் ஐஸ்வர்யா மூலமாக.
அப்போது எனக்கு 16 வயது இருக்கும் என நினைக்கிறேன். திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் நீடாமங்கலத்தின் அருகில் உள்ள ஆதனூர் கிராமம் என் அம்மா வழி தாத்தாவின் ஊர்.
வாரத்தின் சனி, ஞாயிறுகளில் இந்த கிராமத்தில் தான் பொழுது கழியும். பத்தாவது படிக்கும் காலக் கட்டத்தில் தான் பெண் சைட் அடிக்கத்தக்கவள் என்ற விவரம் புரிந்து பார்க்கும் பெண்ணையெல்லாம் என் பிகர் என்று மற்ற டவுசர் நண்பர்களுடன் சண்டை போட்ட காலம்.
ஆதனூர் சினிமாவில் காட்டப்படுவது சாதிக் கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமம். அங்கு குறிப்பிட்ட சாதி தான் மெஜாரிட்டி என்று கிடையாது. தெருவுக்கு ஒரு சாதி என்ற கணக்கில் நிறைய சாதிக்காரர்கள் உண்டு. அதனால் நிறைய காதல்களும் மோதல்களும் சகஜம்.
இந்த காலத்தில் தான் அதுவரை விகல்பமில்லாமல் என்னுடன் சினேகம் வைத்திருந்த பூரணா(பெ,மா) அழகாக தெரிய ஆரம்பித்தாள். அவள் படித்தது கோவில்வெண்ணி கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில். அதற்கு பிறகு அவளை சைட் அடிப்பதற்காகவே ஆதனூர் கோவில்வெண்ணி கிராமங்களுக்கு இடையில் உள்ள ரயில்வே கேட்டில் அமர்ந்து இருப்பேன்.
அவளை கடக்கும் போது ஒரு புன்னகை புரிவேன், புன்னகைனு சொல்லக் கூடாது, அது கவுண்டமணி ஸ்டைலிலான ரொமாண்ட்டிக் லுக் என்று பின்னாளில் தான் தெரியவந்தது.
அதைத் தவிர அவளிடம் பேச என்னிடம் வார்த்தைகள் இருந்தது இல்லை. ஆறு மாதம் சனிக்கிழமைகளில் வேறு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்போது எனக்கு காதலில் அட்வைஸ் கொடுப்பதற்காக ஒரு ஜீவன் வந்து சேர்ந்தது. அந்த ஜீவனுக்குப் பெயர் மாயாண்டி, என் மாமன் மகன் தான்.
அவனுக்கு 20 வயது ஆகியிருந்தது. அதற்கடுத்த முன்னேற்றங்களுக்கு ஐடியா கொடுத்த பெருமைக்குரியவன் அவன் தான். ஒன்பதாவது பெயிலாகி விட்டு விவசாயத்தில் தாத்தாவுக்கு உதவியாக இருந்தான். தாத்தாவும் சும்மாதான் இருந்தார் என்பது வேறு விஷயம்.
அவனது ஐடியாபடி பத்தாவது படித்து முடித்து விடுமுறையில் இருந்த நான் பதினொன்றாவது படித்து முடித்த பூரணாவிடம் புத்தகங்களை வாங்குவது போல் பேசி மனதை கவர வேண்டும்.
ஆனால் நான் பத்தாவதில் என்ன மார்க் எடுப்பேன், என்ன குரூப்பில் சேருவேன் என எனக்கே தெரியாது, அந்த விஷயத்தையே தெரியாத அறிவாளி மாயன் ஐடியாபடி ஒரு நாள் எங்கள் பம்புசெட்டில் தோழிகளுடன் அவள் குளித்துக் கொண்டிருந்த போது மாடு ஓட்டிக் கொண்டு போய் குளிப்பாட்டுவது போல நின்று பாசாங்கு செய்தபடி புத்தகம் கடன் கேட்டேன்.
அவள் சிரித்துக் கொண்டே முதல்ல பத்தாவது பாஸ் பண்ணு, பிறகு புத்தகம் கேளுங்க படிப்பாளி என்று கூறி விட்டு ஓடி விட்டாள். அன்று இரவு மாயாண்டிக்கு செம மாத்து விட்டேன்.
இரண்டு நாட்களுக்கு பிறகு பக்கத்து ஊரான முன்னாவல்கோட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் பாவடை தாவணியில் துன்னூரு பூசிக் கொண்டு நடந்து வந்த போது என் கண்ணுக்கு தேவதையாக தெரிந்தாள் கோதுமைநிறத்தழகி.
இரவெல்லாம் அவளுடன் கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் பாட்டுக்கு நடனமாடிக் கொண்டே இருந்தேன், அம்மத்தா வந்து என்னை எழுப்பும் வரை.
இப்படியாக ஒரு ஆறுமாதம் ஓடி விட்டிருந்தது. அவள் பனிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்ததால் படிப்பில் பிஸியாக இருந்தாள். பார்க்கவே முடியவில்லை.
இதே சமயத்தில் திருவாரூரில் சரளா என்ற பெண்ணும் என் கண்ணுக்கு அழகாக தெரிந்தாள் என்பதும் அவளிடம் பேசி கரெக்ட் செய்யும் சமயத்தில் என்னுடன் துணைக்கு வந்துக் கொண்டு இருந்த கணேஷ் அவளை லவட்டிக் கொண்டு போனதும், கொஞ்ச நாள் தாடி முளைக்காத தேவதாஸ் போல் நான் சுற்றிக் கொண்டு இருந்ததும் இந்த கட்டுரைக்கு தேவையில்லாத விஷயம்.
ஒரு வழியாக பூரணா பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை எழுதி முடித்து இருந்தாள். எனக்கும் முழுப் பரிட்சை முடிந்து இருந்தது. அவள் விடுமுறையில் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தட்டச்சு நிலையத்தில் லோயர் அடிக்க சென்றுக் கொண்டு இருந்தது மாயாண்டி லவ்வர்(சுரிதார் போட்ட ஜக்கு) மூலம் தெரிய வந்தது.
பிறகென்ன அவளுடன் அந்த மூணு கிலோமீட்டர் சைக்கிளில் இணைந்து பயணித்தால் கைகூட கொஞ்சம் வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. அவளுக்காக சாமந்தாங்கரையில் சைக்கிளுடன் காத்திருப்பேன்.
அவள் ஊரிலிருந்து மெயின்ரோட்டுக்கு வந்ததும் அவளுடன் இணைந்துக் கொள்வேன். தட்டச்சு நிலையத்தின் வாசலில் ஒரு மணிநேரம் காத்திருந்து பிறகு ஊர் வரை பேசிக் கொண்டு வருவேன். இரண்டு மூன்று நாட்களில் நடந்த உரையாடலில்அவளுக்கும் என் மீது விருப்பம் இருப்பது தெரிய வந்தது.
கிராமத்தில் என்னுடன் சுற்றிக் கொண்டு இருந்த கிரிக்கெட் நண்பர்களை லாவகமாக கழட்டி விட்டு மேற்கே உள்ள பம்புசெட்டில் இருந்த பெரிய கிணற்றுப்படிக்கட்டில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசுவோம்.
இரவுகளில் அப்போது பாட்டு மாறி தில்லானா தில்லானா நீ தித்திக்கிற தேனா என்று அவளுடன் ஜங்கு ஜங்கு என்று குதித்து ஆடிக் கொண்டு இருந்தேன். ஒருநாள் மாயாண்டியின் ஐடியாபடி ரோஜாவைக் கொடுத்து வச்சி விடட்டுமா என்றேன். தலையை குனிந்து நாணத்துடன் சிரித்தாள். அந்த நாணம் தந்த களிப்பூட்டும் போதையில் என்ன வேணும்னாலும் அவளுக்காக செய்யலாம் என்று தோன்றியது.
பெண்ணின் அழகு அவர்களின் அங்கங்களில் இல்லை. நாணச் சிரிப்பில், கள்ளப் பார்வையில், தாவணி கட்டும் அழகில், துன்னூரு பூசும் லாவகத்தில், தண்ணீர் குடம் எடுத்துப் போகும் நடையில், மஞ்சள் தேய்த்த முகத்தில், முரட்டு மாட்டை கையாளும் பலத்தில், நெல் அவித்துக் கொட்டும் பொறுப்பில் என ஏகப்பட்ட விஷயங்களில் இருக்கிறது. அதையெல்லாம் அவளிடத்தில் நான் கண்டேன்.
அவள் பள்ளிப் படிப்பை முடித்ததும் படித்தது போதும் என வீட்டிலேயே வைத்துக் கொண்டார்கள். அவள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளிலும், அம்மாவுக்கு துணையாக சமையல் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
நான் அவளுக்காகவே சனி, ஞாயிறுகளில் ஆதனூருக்கு வந்து விடுவேன். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பேசி மகிழ்வோம், நன்றாக கவனிக்கவும் பேசி மட்டுமே மகிழ்வோம்.
பிறகு ஒரு நாள் நடந்த அந்த அதிர்ச்சியான சம்பவத்தால் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று பயந்த என் அப்பாவினால் வலுக்கட்டாயமாக கம்பன் எக்ஸ்பிரஸ்ஸில் ஏற்றி சீர்மிகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். ரொம்ப நாள் அவளின் நினைவு வாட்டி எடுத்தது. நாளாக நாளாக சென்னைப் பெண்கள் என் கவனத்தை திருப்பியதால் அவளின் நினைவுகள் குறைந்தது.
ஒரு நாளில் அவளுக்கு திருமணமும் முடித்து வைத்து விட்டார்கள். அதன் பிறகு இன்று வரை அவளை நான் பார்க்கவேயில்லை. அவள் மீது எனக்கு இருந்தது காதலா அல்லது இனக்கவர்ச்சியா என்று இன்று வரை எனக்கு புரியவே இல்லை.
அப்புறம் முக்கியமான விஷயம் அந்த சம்பவம் என்று ஒரு பாராவுக்கு முன் குறிப்பிட்டேன் அல்லவா, அது என்னவென்றால் படிக்கும் நேரங்களில் எல்லாம் அவளுடன் பேசியே பொழுதைக் கழித்ததால் அந்த ஆண்டு நான் பனிரெண்டாவதில் பெயில்.
ஆரூர் மூனா
டிஸ்கி : இந்த ஒரு பதிவு எழுதவே எனக்கு ரெண்டரை மணிநேரம் ஆகியிருக்கிறது என்றால், நானெல்லாம் எப்போது தான் தேர்ந்த எழுத்தாளர் ஆவது. ச்ச்சே.
சலிச்சுக்காதீங்க... நல்லாத்தான் இருக்கு...
ReplyDeleteஅப்படிங்கிறீங்க
Deleteஎன்னுடைய பழைய நினைவுகளையும் கிண்டிவிட்டீங்களே... எழுதுடா சரவணா ஒரு பதிவை.....
ReplyDeleteவிட்டா இது தொடர் பதிவாகிடும் போல இருக்கே.
Deleteஅடுத்து என்ன எழுதுவது என்று யோசிச்சிகிட்டு இருந்தேன்... உங்க பதிவ படிச்சதும் அடுத்து 4 பதிவுக்கு தயாராகிவிட்டேன் நன்றி மச்சி... அடுத்து மோட்டார் ரூமுக்குள் என்ற கதை தயாராகுது மச்சி...
Deleteமச்சி உங்க கதை ஆட்டோகிராப் மாதிரி இருக்கும் போல இருக்கே. ஹாஹா.
Deleteசுவாரசியமா இருக்கு
ReplyDeleteநன்றி மதி
DeleteHumorous entry.
ReplyDeleteநன்றி நண்பா
Deleteபிளாஷ் பேக் ஹிஸ்டரி ஓகே பாஸ்.ரம்மி ராக்ஸ்
ReplyDeleteநெசமாலுமே ரம்மி ராக்ஸ், நன்றி சரவணன்
Deleteஇதையெல்லாம் போகிற போக்கில் எழுதிவிட முடியாது. நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteகொஞ்சம் கற்பனையையும் கலந்து இருக்கலாம்
அது தான் நமக்கு வரமாட்டேங்கிறது. நன்றி முரளிதரன் சார்.
Deleteபெண்ணின் அழகை நீங்கள் ரசித்த விதம் அருமை ...நிறத்திலும் இல்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் !
ReplyDeleteத ம 4
ஆம் நீங்கள் சொன்னது சரி, நன்றி பகவான்ஜி.
Deleteலவ்வாப்பழம் புடுங்கித்தந்து நைஸு பண்ண பார்த்தேன் பார்த்தேன்...
ReplyDeleteஅவ கொய்யாப்பழம் வேணுமின்னு கொனத்திக்கிட்டு போனா போனா...
கொய்யாப் புடுங்கித்தந்து எடக்கு பண்ண பார்த்தேன்...
அவ புளியம்பிஞ்சு வேணுமின்னு சிலுத்துகிட்டு போனா...
புளியம்பிஞ்சு புடுங்கித்தந்து குசும்பு பண்ண பார்த்தேன் பார்த்தேன்...
அவ புளிச்சமாங்கா வேணுமின்னு வெறச்சிகிட்டு போனா போனா...
அட புளிச்சமாங்கா புடுங்கித்தந்து சரசம் பண்ண பார்த்தேன்...
அவ கடலைபிஞ்சு வேணுமின்னு மொறச்சிகிட்டு போனா...
கடலைபிஞ்சு புடுங்கித்தந்து கணக்கு பண்ண பார்த்தேன் பார்த்தேன்...
அவ மல்லிகைப்பூ வேணுமின்னு மயக்கத்துல கேட்டா கேட்டா...
அட மல்லிகைப்பூ வாங்கிக்கிட்டு மசங்கையில போனேன்...
அவ அக்கம்பக்கம் பார்த்துபுட்டு வச்சிவிட சொன்னா...!
பிரபா, உனக்குக் கூட பிளாஷ்பேக் ஓப்பன் ஆகிடுச்சி போல.
Deleteரெண்டரை மணிநேரம் எவ்வளவோ பரவாயில்லையே... ஒரு பதிவு எழுத ஒரு வாரம் ஆகிறது... பெண்ணின் அழகு ரசனை சூப்பர்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteசெந்தில், ரம்மி படம் விமர்சனம் படிச்சா உங்க அட்டை கத்தியா இருக்கே!
ReplyDeleteஇது புது பார்வையா இருக்கே
DeleteYou miss Anni??
ReplyDeleteஅய்யய்யோ, அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க. இப்ப என் வீட்டுக்காரம்மா படிச்சா என்னை மிஸ்டேக்காக்கி விடுவா.
Deleteசெந்தில் இயக்கத்தில் ஆட்டோகிராஃப் பார்ட் டூன்னு கூடிய சீக்கிரம் படம் வெளி வரப்போகுது! ஹீரோவா மட்டும் நடிச்சுடாதேப்பு!
ReplyDeleteநம்ம ஒன்லி ஸ்கீரீன்ப்ளே டைரக்ஷன் தான் அக்கோவ்.
Deleteநடந்தவற்றை எழுதவேண்டுமென்றால்...
ReplyDeleteரெண்டரை மணி நேரம் எப்படி பத்தும்?
நாம் ஒன்றை எண்ணும்போது அதோடு தொடர்புடைய "பல"வும் ஞாபகத்தில் வந்துவிடுகிறதே!
அதையும் எழுதினால்...
பிறகு படிப்பது யாரு?
அதான, பிறகு நானே பதிவெழுதி நானே படிச்சிக்க வேண்டியது தான்.
Deleteமலரும் நினைவுகள் அருமை !!!
ReplyDeleteநன்றி மணிகண்டன்
Deleteஇவ்வளவு பின்னுாட்டங்கள் தங்களை பாராட்டி வருவதை விட தங்களுக்கு அந்த இரண்டரை மணி நேரம்தான் பெரிதாகி போகிவிட்டதா?கபர்தார்
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
திரு.மோடிக்கு ஆதரவு தாருங்கள்
நன்றி தேவதாஸ்
Delete:) ரசனை.
ReplyDeleteநன்றி மாதேவி
Delete"ஒன்பதாவது பெயிலாகி விட்டு விவசாயத்தில் தாத்தாவுக்கு உதவியாக இருந்தான். தாத்தாவும் சும்மாதான் இருந்தார் என்பது வேறு விஷயம்."
ReplyDeleteHA HA HA!!!
நன்றி சத்யா
Deleteஆட்டோகிராஃப் படம் சேரனே மிரண்டு போகுமளவுக்கு மெகா ஹிட் ஆனதற்கு காரணமே ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளயும் இப்படி ஏதோ ஒரு நினைவு ஆழமா புதைஞ்சு கிடக்குறதுதான். ரெண்டரை மணி நேரத்துல எழுதுறதுக்கு இவ்வளவு விஷயம் ரீகால் ஆனதே எந்த அளவு இந்த சம்பவங்கள் உங்க மனசுக்குள் பதிஞ்சுருக்குன்னு தெரியுது.
ReplyDeleteஆருர் மூணா, இதே போன்று தொடர்ந்த ஒரு கதை தான் இன்றைய என் மனைவி. என் வயது 63. சுகமான வாழ்க்கை. இதை சொல்ல எனக்கு இரண்டு நிமிடமே.இன்றுதான் என் மனைவியிடம் சொன்னேன்.
ReplyDeleteஅன்று என் மனது மட்டும் போதுமென்றாய்
இன்று பணம் மட்டும் போதுமென்றால்
நான் எதற்கு?
இரண்டுமே முன்று எழுத்து,
மூன்றாவது உன் பெயரும் முன்று எழுத்து,
அன்பு கிரிசாவே இது என் தலை எழுத்து
காசோலையில் போடு ஒரு கை எழுத்து.