எந்த படம் பார்ப்பதற்கு முன்னாலும் டிரெய்லர் அல்லது படத்தினைப் பற்றிய செய்திகளை படிப்பதுண்டு. இந்த படம் பார்க்க அரங்கினுள் அமரும் வரை எந்த செய்தியும் கேள்விப்படவில்லை. அதனால் இது எந்த மாதிரி படம் என்ற ஆவலுடன் தான் அமர்ந்தேன். படத்தின் பெயர் போடும் போது பின்னணியில் ஒலிக்கும் இசை ஒரு மாதிரி லீட் எடுத்துக் கொடுத்து ஒரு வேளை த்ரில்லர் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்தது.
படத்தின் ஆகப்பெரும்பலம் ப்ராப்பர்ட்டி கன்டினியுட்டி தான். படம் நடக்கும் காலகட்டமான 1987 - 90 வரை புழக்கத்தில் இருந்த ப்ராப்பர்ட்டியை வைத்து படமாக்கியிருப்பது அவர்களின் உழைப்பைக் காட்டுகிறது. அந்த ரெனால்ட்ஸ் பேனா, இங்க் பேனா, கட்டம் போட்ட சட்டை, எஸ்விஎஸ் பஸ், பெரியார் பேருந்து நிலையம், இனிகோவின் சிகையலங்காரம், முட்டை போண்டா, திரையரங்க கழிவறை ஜோ மல்லூரியின் கார் என பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.
படத்தில் நடக்கும் சில விஷயங்கள் நமது பால்யத்தை நினைவுப்படுத்தி நம்மை அதற்குள் இழுத்தால் அந்த படம் நமக்கு பிடிக்க ஆரம்பித்து விடும். எனக்கு அதுதான் நடந்தது.
ஐஸ்வர்யாவுக்கும் விஜய்சேதுபதிக்கும் ஏற்படும் காதல் போன்றே எனக்கும் பதினேழு வயதில் அரும்பியது. பிறகு நான் படிப்பதற்கு சென்னை வந்து விட்டதால் அந்த காதல் காற்றோடு போய் விட்டது. ஐஸ்வர்யாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த பெண்ணின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அதனாலயே எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதையும் தாண்டி விமர்சனம் செய்ய முயல்கிறேன்.
கல்லூரியில் படிப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து விஜய்சேதுபதியும் புதுக்கோட்டையிலிருந்து இனிகோவும் சிவகங்கை வட்டாரத்திற்குள் நுழைகிறார்கள்.
காதலை வெறுக்கும் ஊர்த்தலைவரை கொண்ட பூலாங்குறிச்சியில் வந்து தங்குகிறார்கள், முறையே ஆளுக்கு ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள். எந்த காதல் ஜோடி ஊர்த்தலைவரிடம் மாட்டிக் கொள்கிறது. எந்த ஜோடி காதலில் ஜெயிக்கிறது என்பதை சற்று சஸ்பென்சுடன் சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் முக்கிய விறுவிறுப்புக்கு காரணம் எப்பொழுது எந்த ஜோடி மாட்டிக் கொள்ளப் போகிறதோ என்ற மாதிரியே காட்சிகளை கொண்டு சென்றிருப்பது தான். ஆனால் அதுவே ஓவர்டோஸாகிற போது சற்றே கண்ணை கட்டுகிறது.
வன்முறைக்கு நிறைய வாய்ப்பிருந்தும் அதனை கையில் எடுக்காதது படத்திற்கு பெரும்பலம். அப்படி ஆகியிருந்தால் நண்பனின் மரணத்திற்கு பழிவாங்கிய சுப்ரமணியபுரத்தின் வெர்ஷன் 2.0 ஆக மாறியிருக்கும் படம்.
விஜய்சேதுபதிக்கு இருக்கும் மார்க்கெட் வேல்யுவுக்கு இந்த படம் தேவையே இல்லை. ஆனால் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கிற்கு விஜய்சேதுபதி தேவைப்பட்டு இருக்கிறார். நண்பர்களுக்காக நடித்துக் கொடுத்து இருப்பார் என நினைக்கிறேன்.
இனிகோ துணைக் கதாப்பாத்திரம், நாயகனின் நண்பன், குணசித்திரம் என படிப்படியாக வளர்ந்து நாயகனாகி விட்டார். நன்றாக நடிக்கிறார். சரியான வகையில் படங்கள் அமைந்தால் இன்னொரு விஜய்சேதுபதி, இல்லாவிட்டால் இன்னோரு விதார்த்.
நாயகிகளாக காயத்ரியும், ஐஸ்வர்யாவும். இருவருக்குமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து அதற்கேற்றாற் போல் அசத்தியும் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா சரியான திராவிட முகம். பார்க்கும் போது மனசுக்குள் சில் என்று சாரல் அடிக்கிறது. காயத்ரி இன்னும் கொஞ்சம் சதைப் பத்தா இருந்தா இன்னும் தைரியமா ஒரு ரவுண்ட் வரலாம்.
சூரி படத்திற்கு தேவைப்படும் காமெடியை அந்த அளவுக்கே வழங்கியிருக்கிறார். பிறகு குணச்சித்திரத்தில் அசத்துகிறார்.
முதலில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படம் ஒரு கட்டத்திற்கு பிறகு சோர்ந்து போய் விடுகிறது. அதன் பிறகு பரபர க்ளைமாக்ஸ் வந்து படத்தை விறுவிறுப்பாக முடித்து வைக்கிறது.
முதலில் இந்த க்ளைமாக்ஸை முடிவு செய்து விட்டு தான் அதற்கு ஏற்றாற் போல் கதையை தயார் செய்திருப்பார்கள் போல. இன்றைய நாற்பது வயதுகாரர்கள் அவர்களது இளம்பருவ காலகட்டத்தினை கண்முன்னே பார்த்து மகிழ்வார்கள்.
பாடல்கள் கூட எண்பது காலக்கட்டங்களில் வந்து போலவே இருக்கிறது. கேட்க நன்றாகவும் இருக்கிறது. ஒன்றிரண்டு பாட்டு பெரிசா ஹிட்டடிக்கவும் செய்யும்.
ரம்மி அடிச்சாச்சி டிக்கு ஆனால் சுமாரான ஆட்டமே.
ஆரூர் மூனா
குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமா!?
ReplyDeleteஐஸ்வர்யாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த பெண்ணின் முகம் தான் நினைவுக்கு வந்தது.
ReplyDelete>>
இனி ஒரு வாரத்துக்கு வீட்டுக்குப் போக முடியாது தம்பி!
இந்த மாதிரி படங்களை பார்த்து விமரிசனம் எழுதி எங்களை காக்கும் எல்லை சாமீயே வாழ்க!!!!உம் புகழ் வளர்க !!!
ReplyDelete