சில சமயம் நமக்கு எதிர்பாராமல் அதிர்ச்சிகள் நடப்பதுண்டு. நேற்று எனக்கும் அப்படி தான் ஆனது. சில நாட்களுக்கு முன் டிவிடிக்கள் வாங்குவதற்காக பர்மா பஜார் சென்றிருந்தேன்.
பல ஆங்கில படங்களின் டிவிடிக்களை வாங்கி வந்தேன். ஆனால் அந்த படங்கள் பற்றிய முன் அறிமுகமோ விமர்சனமோ கண்டதில்லை. நேற்று முன்தினம் இரவு ப்ரே என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். நடுக்காட்டில் சிங்கங்களுக்கிடையில் மாட்டிக் கொள்ளும் குடும்பத்தின் கதை. நன்றாக தான் இருந்தது. ஆனால் ஸ்பெஷல் எதுவும் இல்லை.
நேற்று இரவு தி லோன் ரேஞ்சர் என்ற படம் பார்த்தேன். எனது சினிமா பசிக்கு சரியான தீனி இந்த படம். நமக்கு ஆங்கில அறிவு கம்மி என்பதால் ஆங்கில படங்களின் டிவிடியை பார்ப்பதற்கு முன்னால் நமது நண்பர்களின் சினிமா விமர்சனங்களை படித்து தெளிவுபடுத்திக் கொள்வது வழக்கம்.
ஆனால் இந்த படம் எந்த வகையான ஜானர் என்று கூட தெரியாமல் பார்த்தேன். படம் புரியவே எனக்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. நாயகனின் சகோதரனின் மரணத்திற்கு காரணமான ஒருவனை பழிவாங்கும் கதை தான், ஆனால் சொன்ன விதத்தில் சூப்பரோ சூப்பராக இருந்தது படம்.
டோண்டோ என்ற செவ்விந்தியன் பொருட்காட்சியில் காட்சிப் பொருளாக நிற்கிறான், அங்கு வரும் ஒரு சிறுவனிடம் தி லோன் ரேஞ்சர் என்ற வீரனின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறான்.
1869ல் நடக்கிறது. ரயிலில் தூக்குத் தண்டனை கைதியாக சென்றுக் கொண்டு இருக்கும் காவன்டிஷ்ஷை அவரது ஆதரவாளர்கள் தப்பிக்க வைக்கின்றனர். அதே ரயிலில் சக கைதியாக வருபவர் டோண்டோ. வக்கீலுக்கு படித்து விட்டு ஊருக்கு திரும்பும் ஜான் ரீட், டோண்டோவுடன் இணைந்து காவன்டிஷ் ஆட்களை பிடிக்க முயற்சிக்கிறான்.
ஆனால் அனைவரும் தப்பிச் சென்று விட விபத்துக்குள்ளாகப் போகும் ரயிலில் இருந்து மக்களை ஒரு வழியாக ஜான் ரீட், சகோதரனின் உதவியுடன் காப்பாற்றுகின்றான். ஜான் ரீட்டும், அவனது சகோதரனும் டோண்டோவை சிறைப்பிடிக்கின்றார்கள்.
காவன்டிஷ்ஷை பிடிக்க அந்த ஊர் வேட்டைக்காரர்கள் குழு செல்கிறது. அவர்களை நடுக்காட்டுக்குள் சுட்டுக் கொல்கிறது காவன்டிஷ் குழு. சிறு காயத்துடன் ஜான் ரீட் மயங்கி கிடக்கிறான்.
உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் அவனது சகோதரனின் உடலை கிழித்து இதயத்தை பிய்த்து தின்கிறான் நரமாமிசம் சாப்பிடுபவனான காவன்டிஷ்.
அனைவரும் இறந்து விட்டார்கள் என்று நினைத்து காவன்டிஷ் குழுவினர் சென்று விட அங்கு வரும் டோண்டோ அவர்களை புதைக்கிறான். மயக்கத்தில் இருக்கும் ஜான்ரீட்டை காப்பாற்றுகின்றான்.
இருவரும் இணைந்து காவன்டிஷ்ஷை பிடித்து அழிக்க புறப்படுகின்றனர். டோண்டோ ஆலோசனைப் படி ஜான் ரீட் முகமூடியணிந்து லோன் ரேஞ்சர் என்ற பெயருடன் வருகிறான்.
இதற்கிடையில் ஜான் ரீட்டின் சகோதரனின் மனைவியான ரெபேக்காவை அடைய வேண்டி அவரையும் அவரது குழந்தையையும் கடத்துகிறார், ரயில் கார்ப்பரேஷன் தலைவரான போல்.
ஜான்ரீட் டோண்டோவுடன் இணைந்து ரெபேக்காவையும் அவரது குழந்தையையும் எப்படி காப்பாற்றினார், வில்லன்களான கோல்லையும், காவன்டிஷ்ஷையும் எப்படி வீழ்த்தினார் என்பதை டிவிடியில் கண்டு மகிழ்க.
படம் முழுக்க ஒரு மெல்லிய நகைச்சுவையை போர்த்திக் கொண்டு இருப்பது தான் ஆகப் பெரும் பலம். படத்தில்கிராபிக்ஸ் கிராபிக்ஸ் இருப்பது கொஞ்சம் கூட தெரியாதது தான் இன்னொரு ப்ளஸ்.
பைரேட்ஸ் ஆப் தி கரீபியனில் அசத்திய ஜானி டெப் தான் இதில் டோண்டோ. படத்தின் கலகலப்புக்கு முழு பொறுப்பையும் இவர் தான் எடுத்துக் கொண்டு உள்ளார். படம் முழுக்க இவர் முகத்தில் வெள்ளை பெயிண்ட் பூசிக் கொண்டு வருவதால் யாரென்றே தெரியவில்லை. இன்று தான் இணையத்தில் பார்த்து தெரிந்துக் கொண்டேன்.
படத்தின் முக்கால்வாசிக்கு பிறகு தான் தன் இனமே அழிக்கப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்த பிறகு டோண்டோவின் மேல் நமக்கு வரும் பரிதாபம் தான் அந்த பாத்திரத்தின் பலம்.
ஜான்ரீட்டாக வரும் ஆர்மி ஹேம்மர் புதியவர், இதற்கு முன் எந்த படத்திலும் இவரை பார்த்திராததால் எந்த சாயலும் இல்லாமல் இவரின் நடிப்பை ரசிக்க முடிகிறது. சுமாரான சுமாரான திறமை கொண்ட இவர் டோண்டோவின் தூண்டுதலால் சூப்பர் ஹீரோவாகி மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இன்னொசன்ட்டான நடிப்பில் கவர்கிறார்.
அந்த நரமாமிசம் சாப்பிடும் கொடூர வில்லன் அருவருக்க வைக்கிறார். அது தான் அவரது கதாபாத்திரத்தின் வீரியம். எந்த நிமிடமும் அவர் சாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் கடைசி வரை தப்பித்து வந்து க்ளைமாக்ஸில் சாவது சினிமாத்தனம்.
தமிழ் சினிமாவின் மசாலா போல் படம் முழுக்க அபத்தங்கள் தூவப்பட்டு இருக்கின்றன. அதாவது மேலிருந்து ஏகப்பட்ட பேர் சுடும் போது நாயகன் மட்டும் குண்டடிபடாமல் தப்பிப்பது. நேருக்கு நேர் நடக்கும் சண்டையில் குண்டடிபடாதது, பறக்கும் குதிரை, என ஏகப்பட்டது இருக்கிறது. ஆனால் எல்லாமே சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
க்ளைமாக்ஸில் வரும் ரயில் சேசிங்கும் சண்டையும் தான் எல்லாவற்றிலும் உச்சம். கிராபிக்ஸில் அசத்தியிருக்கின்றனர். இது வரை பார்க்காதவர்கள் கண்டிப்பாக டிவிடியில் பார்த்து மகிழுங்கள்.
ஆரூர் மூனா
டிஸ்கி : படத்தின் விமர்சனத்தைப் பார்த்து விட்டு நான் சொன்ன காட்சிகளிலும் கதையிலும் விளக்கம் சொல்ல முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் எனக்கு உள்ள ஆங்கில அறிவை வைத்து ஒருவாறாக படத்தின் கதையை நானாக யூகித்துக் கொண்டேன். அதனால் சின்னப் பையன் என்று விட்டு விடவும்.
அபத்தங்கள் தூவப்பட்டு உள்ளதால், தமிழ் சினிமா பார்த்து எடுத்திருப்பார்களோ...?
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம் அசத்துறீங்களே தனபாலன்
Deleteபல ஆங்கில படங்களின் டிவிடிக்களை வாங்கி வந்தேன்......அப்போ உங்களுக்கும் சினிமா எடுக்கும் ஆசை வந்துவிட்டதா?
ReplyDeleteஎடுக்கலாம் தான், மற்ற இயக்குனர்கள் எல்லாம் பாவம்னு தான் விட்டு வச்சிருக்கேன்
Delete215 மில்லியன் டாலர் செலவில் எடுத்த இந்த படத்தின் மொத்த கலக்ஷன் வெறும் 90 மில்லியன் டாலர்! டிஸ்னிக்கு பெரிய ப்ளாப் இந்த படம்!
ReplyDeleteஅப்படிங்களா, ஆனால் விக்கிப்பீடியாவில் இந்த படத்தின் கலெக்சன் 250 மில்லியன் டாலர்னு போட்டு இருந்ததே.
DeleteIMDB பாருங்க. விக்கியில் யாரும் எதுவேண்டுமானாலும் எழுதலாம் என்பதால் எழுதியிருப்பார்களோ என்னவோ!
Deleteபர்மா பஜாரில் டி வி டி வாங்கிய கதையையும் பதிவாகப் போடலாமே?
ReplyDeleteஅய்யா, ஏன் இந்த கொலைவெறி
Deleteவிமர்சனம் நன்று !!! ஆனா, கதாநாயகி பத்தி சொல்லவே இல்ல....
ReplyDeleteஅது சுமாராத்தான் இருக்கு
Deleteவீரம்-ஜில்லாவை விடவா நல்லாயிருக்கு?!
ReplyDeleteஇதுவும் அதே போன்ற மசாலா தான்
Deletethe guillitiones Parunga brother nalla irukku
ReplyDeleteகண்டிப்பாக பார்க்கிறேன்
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்