சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, April 21, 2014

குவாட்டரும் கோழிபிரியாணியும்

தேர்தல் காலத்தில் காலையிலிருந்து சைக்கிளில் கட்சிக் கொடி கட்டி ஊரையெல்லாம் சுற்றி தொண்டை கிழிய கத்தி வாக்கு சேகரித்து விட்டு மதியம் பசிநேரத்தில் வார்டு செயலாளரின் வீட்டில் ஒரு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி பொட்டிக் கடையில் ஒரு பாக்கெட் ஊறுகாய், ஒரு வாட்டர் பாக்கெட், ஒரு கிளாஸ் வாங்கிக் கொண்டு பிடாரி கோயிலின் குளத்துப் படிக்கட்டில் ஒய்யாரமாக அமர்ந்து, பதமாய் பாதி கிளாஸ் மருந்தும் கால் கிளாஸ் தண்ணீரும் ஊற்றி ஒரு ரவுண்டு சாத்தி ஊறுகாய் பாக்கெட்டின் முனையை கிள்ளி ஆள்காட்டி விரலில் ரவையூண்டு பிதுக்கி எடுத்து நடுநாக்கில் தேய்த்து மேனி சிலிர்த்து பிரியாணி பொட்டலத்தை பிரித்து ஒரு வாய் பிரியாணியும் லெக்பீஸின் சிறு துண்டு சேர்த்து எடுத்து வாயில் வைத்து சுவைத்தால் உச்சி மண்டையில் ஜிவ்வென்று தெரியுமே ஒரு ருசி, அதற்கு நிகராக எந்த தலப்பாக்கட்டி பிரியாணிகளும் லா மார்ட்டின் லார்ஜ்களும் வர முடியாது.


இந்த அனுபவத்திற்காகவே அம்மா திட்டி உறவினர்கள் வீட்டு விசேஷத்திற்கு சென்று வர சொன்னாலும், அப்பா ஈபி கார்டுக்கு பணம் கட்டச் சொன்னாலும், நண்பர்கள் காரைக்காலுக்கு சரக்கடிக்க கூப்பிட்டாலும் அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு மறுநாள் காலை வார்டு செயலாளரின் வீட்டில் கட்சிக் கொடிக் கம்புடன் கோஷம் போட மனது நிற்க வைக்கும்.

இது எனக்கு மட்டுமல்ல, பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்கும் அத்தனை கட்சித் தொண்டனுக்கும் கிடைத்த வரப்பிரசாதம். கட்சியில் என்ன தான் வட்டம், மாவட்டம் என்று உயர்ந்து தேர்தல் செலவுகளில் ஒரு பகுதியை கமிஷன் அடித்தாலும் அடி மட்ட தொண்டனின் இந்த சிறு ஆசைக்குட்பட்ட அனுபவம் பதவிகளில் கோலேச்சிக் கொண்டு இருப்பவர்களுக்கு அமையாது.


என்றைக்கு திமுக, ஈழ விஷயத்தில் கழுத்தறுத்ததோ அத்துடன் தீவிர அரசியல், கட்சி, கலைஞர், உதயசூரியன் எல்லாத்துக்கும் ஒரு சலாம் போட்டு கூடாரத்தை விட்டு வெளியேறி வருடம் ஐந்தாச்சி. இப்ப மிஞ்சி இருக்கிறது நினைவுகள் தான்.

சிறு வயதில் விவரமே இல்லாமல் 1989 சட்டமன்ற தேர்தலில் என் மாமாவின் வற்புறுத்தலுக்காகவும் நண்பர்களுடன் ஒரு ஜாலி அனுபவத்திற்காகவும் கையில் கை சின்னம் பதாகையை எடுத்துக் கொண்டு "போடுங்கம்மா ஓட்டு கை சின்னத்தைப் பார்த்து" னு கத்திக் கொண்டே வடக்கு வீதி, பிடாரி கோயில் தெரு, வடக்கு மடவிளாகம், மேட்டுத் தெரு, நடவாகனத் தெருன்னு வீதி வீதியாக சுற்றி வருவோம்.


1991 தேர்தலிலும் காங்கிரஸ்க்கு தான் ஓட்டு கேட்டுள்ளேன். பிறகு விவரங்கள் புரிய ஆரம்பித்து கலைஞரின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு 1996 தேர்தலில் விளமல் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டு சேகரிப்பது, பிட் நோட்டீஸ் வினியோகம் செய்வது சாலையை கடக்கும் இரு சக்கர வாகனங்களை மடக்கி உதயசூரியன் ஸ்டிக்கரை வலுக்கட்டாயமாக ஒட்டி அனுப்புவது போன்ற வேலைகளை செய்து வந்தேன்.

ஓட்டுப் பதிவு அன்று மதியம் வரை யாரெல்லாம் ஓட்டு போடவில்லையோ அவர்கள் வீட்டுக்கு சென்று கையோடு அழைத்து வந்து ஓட்டுப் போடச் செய்வோம். மதியம் தாண்டியதும் விட்டுப் போன ஓட்டுக்களை நாங்களே போட்டு தேர்தலை சுபமாக முடித்து வைத்தோம். 


அந்த காலகட்டத்தில் மகாதியானப் பழக்கம் இல்லாததால் இந்த அனுபவங்கள் கிட்டியதில்லை. பிறகு 2001 தேர்தல் காலக்கட்டத்தில் இன்னும் திமுக வெறியேறி இருந்தது. எவனாவது திமுகவையோ கலைஞரையோ குறை சொன்னால் அவன் பல்லை பேத்து விட்டு தான் மறுவேலை பார்க்கிறது.

பிறகு 2004 பாராளுமன்ற தேர்தல், 2006 சட்டமன்ற தேர்தல் போன்றவற்றில் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னால் முடிந்த அதிக பட்ச உழைப்பை கொட்டினேன். அப்போது எனக்கு திருப்தியளித்தது திமுகவுக்காக ஓட்டுப் கேட்டதைத்தான். அல்ப ஆசை என்பது குவாட்டரும் கோழிபிரியாணியும் தான்.

2009 தேர்தலில் தான் கடைசியாக ஒரு தொண்டனாக பங்கு கொண்டேன். ஈழ விவகாரத்தில் திமுகவின் சுயநல வெளிப்பாடு தெரிந்தவுடன் எல்லா திமுக சம்பந்தப்பட்ட எல்லா போட்டோக்களையும் எரித்து மிச்சத்தை குப்பைத் தொட்டியில் போட்டு என்னை நானே காறித் துப்பிக் கொண்டு வெளியில் வந்து விட்டேன். 

பதிவு எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ செல்கிறதே என்று உங்களுக்கு தோணலாம். ஆனால் பதிவின் நோக்கம் இந்த தேர்தலில் யாருக்கு ஓட்டு இல்லை என்பதைப் பற்றி, சத்தியமாக என் ஓட்டு திமுகவுக்கு கிடையாது. இது என் மனநிலை மட்டுமல்ல.

ஆரூர் மூனா

10 comments:

  1. மனம் திறந்து உண்மையை சொன்ன தெளிவான முடிவு + மன வலியுடன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  2. கோழிப்பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் நீங்க பிரச்சாரத்துக்கு போனீங்கன்னா, உங்க ராஜி அக்கா, வெறும் அஞ்சு பைசா ஆரஞ்ச் மிட்டாய்க்காக எதோ கட்சிக்காக கோஷம் போடப் போய், இப்படி கை நீட்டுவியான்னு கேட்டு அப்பா கையால சூடு வாங்கி இருக்காங்க.

    தேர்தலே கை நீட்டி வாங்குறதுக்காகத்தான் புரியாத அந்த அப்பா, போட்டு சூட்டோட தழும்பு இன்னும் உங்க ராஜி அக்கா கையில் இருக்கு.

    ReplyDelete
  3. அபி அப்பாவுக்கு link அனுப்புங்க ப்ளீஸ்

    ReplyDelete
  4. naanum ungala maathuri yaarukku illangaratha mudivu pannitten, but yaarukku podarathunnu innum mudivu pannala

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. திமுக வுக்கு ஓட்டு இல்லை என்ற முடிவு மிகுந்த காலதாமதமான முடிவு.
    அது ஒழிக்கப்பட வேண்டிய,அழிக்கப்பட வேண்டிய கல(ழ)கம்.
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  7. குடும்பக்கட்சி பற்றிய உங்கள் மதிப்பீடு எனக்கு. ஏற்புடையதே. அதேபோலத்தான் ஹெலிகாப்டர் பார்த்து தரையில் விழுந்து கும்பிடு கட்சியும் சுயநலம் மிக்கது.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...