கத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன்று ஏசி புகைந்து விட்டது.
எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமான புதிதில் வாங்கிய 1.5 டன் ஒனிடா ஸ்ப்ளிட் ஏசி, இது வரை செலவே வைத்தது இல்லை. ஆனால் இந்த சம்மருக்கு எனக்கு ஏழரைக்கு பிள்ளையார் சுழி போட்டது விட்டது.
முதல் தளத்தில் வீடு இருப்பதால் வெயில் நேரடியாக உள்ளிறங்கி இரவில் வீடு அனலாக தகிக்கும். மற்றவர்கள் மொட்டை மாடியில் தண்ணி தெளித்து வைத்து ஹாயாக போய் படுத்து விட வீட்டம்மணி அறையை விட்டு வெளியில் வரமுடியாத சூழல். அவருக்கு துணையாக நானும் இருந்தாக வேண்டும்.
முதல் நாள் இரவு வெயிலின் உக்கிரம் புரியாமல் லைட்டாக மகாதியானத்துடன் சென்று படுத்து விட விடியற்காலையில் கிட்னியில் யுரினல் டியுபில் வலி பின்னியெடுக்க ஆரம்பித்தது. அன்று முழுக்க மருத்துவரிடம் செல்லாமல் கைவைத்தியத்தை வைத்தே தள்ளினேன். ஆனால் மாலை வரை வலி நிற்கவேயில்லை.
அப்பா, உடனடியாக கொளத்தூரில் இருக்கும் கிட்னி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவர் என் வலியின் தன்மையை கேட்டறிந்து "இது கிட்னியில் கல் பிரச்சனையாகத்தான் இருக்கும். உடனடியாக ஸ்கேன் எடுக்கவும்" என்று பரிந்துரைத்தார்.
ஸ்கேன் எடுத்து முடித்ததும் கிட்னி வீங்கியிருக்கிறது. கல்லின் அளவு தெரியவில்லை, டியிபி எக்ஸ்ரே எடுக்க வேண்டும்" என்றார்கள். அதையும் பணத்தை கட்டி எடுத்தேன். எக்ஸ்ரேவை பார்த்த மருத்துவர், எந்த ரிப்போர்ட்டையும் என்னிடம் கொடுக்காமல் "கல்லின் அளவு 15மிமி அளவுக்கு இருக்கிறது. கிட்னியும் வீங்கியிருக்கிறது, உடனடியாக கல்லை நீக்கியாக வேண்டும். லேப்ரஸ்கோப்புக்கு 35000 செலவாகும். காலைக்குள் பணத்தை கட்டி சிகிச்சையை தொடங்க வேண்டும்" என்றார்.
நான் "பணத்தை கட்டி விடவா" என்று கேட்க, அப்பா கடுப்பாகி "வா வீட்டுக்கு போகலாம். நாளை ரயில்வே மருத்துவமனையில் பார்த்துக் கொள்ளலாம்" என்றார். எனக்கு ரயில்வே ஆஸ்பிட்டல் கூட்டத்தை நினைத்ததும் சற்று தயக்கமாக இருந்தது.
அப்பாவுக்கு பயந்து கிளம்பி வலியுடனே அன்றைய இரவை அந்த வெக்கை ரூமுக்குள் கடத்த வேண்டியதாக போயிற்று. மறுநாள் காலையிலேயே கிளம்பி மருத்துவமனைக்கு சென்று சர்ஜிக்கல் ஓபி மருத்துவரை பார்த்தேன்.
முதல் நாள் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டையும் எக்ஸ்ரேவையும் பார்த்தவர் என் உடம்பை சோதித்து "நீங்கள் சொல்லும் அறிகுறிகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. கேசுவாலிட்டியில் ஊசி போட்டு இரண்டு மணிநேரம் வைத்துப்பார்த்து முடிவு செய்யலாம்" என்று சொன்னார். ஊசி போட்டு ஒரு மணிநேரத்தில் வலியே இல்லை, எல்லாம் நார்மலாகி விட்டது. பிறகு ஸ்கேன் எழுதி கொடுத்தார்கள்.
ரயில்வே ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுப்பதற்குள் சென்னையிலிருந்து கிளம்பி மதுரை வந்து மாடு பிடித்து திரும்பவும் சென்னைக்கே வந்து விடலாம். முதல் நாள் யுனியனில் ஆளைப் பிடித்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி மறுநாள் காலை எதுவும் சாப்பிடாமல் எட்டு மணிக்கு ஸ்கேனுக்கு சென்றால் எனக்கு ஸ்கேன் எடுக்கும் போது மணி 12, ஆனால் காலை 8 மணிக்கே இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து வயிறு நிரம்ப காத்திருக்க வேண்டும்.
அரை மணி நேரத்தில் ஒன்னுக்கு வந்து அடக்க முடியாமல் போய் விட்டு வந்தால் மறுபடியும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து காத்திருக்க வேண்டும். மறுபடியும் அரைமணிநேரத்தில் ஒன்னுக்கு, மறுபடியும் தண்ணீர் என்று நொந்து நூலாகிப் போனேன். எனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது மாதவா.
அது ரிசல்ட் வந்து மோடி கோலேச்சிய தினம். ஊரே பரபரப்பாக இருக்க நான் மட்டும் 2 லிட்டர் தண்ணியும் பாத்ரூமுமாக இருந்தேன். 12 மணிக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அது 7 மிமி தான் அளவு இருக்கிறது. லேப்ரஸ்கோப் தேவையில்லை, மருந்திலேயே கரைத்து விடலாம் என்றனர்.
நல்லப்பிள்ளையாக அடக்கி வாசித்து மருந்து சாப்பிட்டு அளவுச் சாப்பாட்டு சாப்பிட்டு வந்தேன். நேற்று கல் உடைந்து வெளியேறி விட்டது. பிரச்சனை முடிந்து என்று நினைத்தேன். அப்போது என்னை பார்க்க வந்த டாக்டர் நண்பன் "கல் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும். அடக்கி வாசி மாமே"ன்னு சொல்லிட்டு போயிட்டான்.
அப்ப நான் அடக்கி தான் வாசிக்கனுமா
ஆரூர் மூனா