சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, April 23, 2012

எவெஸ்ட் சிகரத்தை அடைந்த ஹில்லரி மற்றும் டென்சிங்.

இமயமலையில் உள்ள 29,118 அடி உயர சிகரம் எவரெஸ்ட் இமய மலையை அளவிடும் பணியைச் செய்த இங்கிலாந்து `சர்வே, நிபுணர் ஜார்ஜ் எவரெஸ்ட் நினைவாக, சிகரத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. பனியால் உறைந்த இமய மலையில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி செய்தவர்கள் பலர். அவர்களில் பெரும்பாலோர் நடுவழியிலேயே திரும்பினார்கள்.

மீதி பேர், குளிர் தாங்காமல் இறந்து போனார்கள்.இச்சிகரத்தை மனிதன் வெற்றி கொண்ட நிகழ்ச்சி, 1953ம் ஆண்டு மே மாதம் 29ந்தேதி நிகழ்ந்தது. இச்சாதனையை நிகழ்த்தியவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் (வயது 39) மற்றும் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லரி (வயது 34).

டென்சிங் 1914 மே மாதம் நேபாளத்தில் பிறந்தவர். சாதாரணக் கூலி தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர். எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி மேற்கொண்ட மலை ஏறும் கோஷ்டிகளுடன் மூட்டை சுமக்கும் போர்ட்டராகப் பல முறை இமயமலை மீது ஏறி அனுபவம் பெற்றவர். அவரே 6 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்று தோல்வி அடைந்தார்.

1935ல், சார்லஸ் வாரன் என்ற வெள்ளைக்காரர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோல்வி அடைந்தார். அப்போது அவருடன் டென்சிங்கும் மலை ஏறினார். அவருடைய துடிப்பும், திறமையும் சார்லசுக்குப் பிடித்திருந்தன. அவர், டென்சிங்குக்கு ஹில்லரியை அறிமுகம் செய்து வைத்தார். ஹில்லரி, நியூசிலாந்து நாட்டில் 1919 ஜுலை 20ந்தேதி பிறந்தவர்.

மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர். டென்சிங்கும், ஹில்லரியும் நெருங்கிய நண்பர்களானார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற, பல காலம் முயற்சி செய்தார்கள். அவர்களுடைய இடைவிடாத முயற்சி கடைசியில் வெற்றி பெற்றது. 1953 மே 29ந்தேதி பகல் 11.30 மணிக்கு, டென்சிங்கும், ஹில்லரியும் எவரெஸ்ட் உச்சியை அடைந்தனர்.

அங்கு பிரிட்டிஷ் கொடியையும், இந்தியக் கொடியையும், நேபாளக் கொடியையும், ஐ.நா.சபைக் கொடியையும் பறக்க விட்டனர். அவர்களுடைய சாதனையை உலகமே பாராட்டியது. "ஹில்லரி, டென்சிங் ஆகிய இருவரில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் முதலில் காலடி வைத்தது யார்? என்று சர்ச்சை நீண்ட காலம் இருந்தது.

"இருவரும் உச்சியை நெருங்கிவிட்டோம். ஹில்லரி முதலில் காலடி வைத்தார். அடுத்து என் காலடி பதிந்தது" என்று டென்சிங் அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். டென்சிங், 1954ல் டார்ஜிலிங்கில் உள்ள மலை ஏறுவோர் பயிற்சி நிலையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1986 மே 9ந்தேதி, தமது 72வது வயதில் மரணம் அடைந்தார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைவதில் வெற்றி கண்ட ஹில்லரி, 1958ல் பனிப்பாறைகளால் சூழப்பட்ட தென் துருவத்தை (அன்டார்டிக்கா) அடையும் முயற்சியில் ஈடுபட்டார். அவரும் விவயன் பபூக்ஸ் என்பவருடன் வெவ்வேறு திசையிலிருந்து பயணம் செய்து, தென் துருவத்தில் சந்தித்து கை குலுக்கினார்.

தென் துருவம், உலகின் நிலப்பரப்பில் 10 சதவீதத்தைக் கொண்டது. உலகில் உள்ள ஐஸ் கட்டிகளில் 90 சதவீதம் அங்கு உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனை மேல் சாதனை புரிந்த ஹில்லரிக்கு, பிரிட்டிஷ் அரசு "சர்" பட்டம் வழங்கிக் கவுரவித்தது.

டிஸ்கி : ரயில்வே தேர்வுக்காக தயாரான போது புத்தகத்தில் படித்த கட்டுரை இது. புதிய தகவல்களாக இருந்ததனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...