சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, April 12, 2013

இன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும்

பேருந்து பயணம் என் வாழ்வின் அங்கமாகிப் போனது எப்படியென்றே தெரியவில்லை. என்னுடன் பழகிய நிறைய நண்பர்களை பார்த்து அதிசயித்து இருக்கிறேன். அவர்கள் செங்கல்பட்டினையே இது வரை தாண்டியதில்லை. சென்னைக்கு தெற்கே தமிழ்நாடு எப்படியிருக்கிறது என்பதை அறியாதவர்கள்.

 (பச்சை சட்டையும் சிகப்பு டவுசரும் அணிந்திருப்பது தான் நான்)

நானோ தமிழ்நாட்டில் செல்லாத மாவட்டமே கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மாதம் வசிக்காத மாவட்டம் தமிழ்நாட்டில் கிடையாது. அந்தளவுக்கு ஊர்சுற்றியே வாழ்ந்து விட்டேன். அப்படி ஊர் ஊராக சுற்றிய பொழுது கிடைத்த பேருந்து பயணத்தின் அனுபவமே இந்த கட்டுரை.

எனக்கு விவரம் தெரிந்த வயதில் அதிகம் சென்ற பேருந்து பயணம் திருவாரூரிலிருந்து என் அம்மா வழி தாத்தா வீடு இருக்கும் ஆதனூர் என்ற கிராமத்திற்குத் தான். தஞ்சாவூர் செல்லும் சாலையில் நீடாமங்கலத்திற்கு அருகில் இருக்கும் அந்த ஊருக்கு வார இறுதியில் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது.

(மகாபலிபுரத்தில் இடுப்பில் துண்டுடன் நான்)

நீடாமங்கலத்தில் ரயில்வே கேட்டு போட்டு விட்டால் அரைமணிநேரத்திற்கு திறக்க மாட்டார்கள். அப்படி நிறுத்தும் போது மாலை நேரமாக இருந்தால் அப்படியே ஓடிச் சென்று பால் திரட்டு வாங்கி தின்று கொண்டே பயணத்தை தொடர்வோம்.

தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொன்னாலும் அதற்கு ஏற்ற நெல் பயிரிடும் நிலங்கள் இந்த சாலையில் தான் அதிகமாக இருக்கும். ஒரு பக்கம் ஆற்றின் கரையும் மறுபக்கம் நெல் விளையும் நிலமாகவும் இருக்கும் அந்த பகுதியில் செல்லும் போது நீர் பாய்ச்சுவது, நாத்து விடுவது, மேட்டில் கதிரடிக்கும் கூட்டம் என இனிய அனுபமாகவே இருக்கும்.

தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினால் ஆதனூரில் நிறுத்த மாட்டார்கள். வேறுவழியில்லாமல் நீடாமங்கலத்தில் இறங்கி அங்கிருந்து 3 கிலோமீட்டர் நடந்தே செல்வோம். எனக்கு இது தான் ஊர், இவர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று நம்பவைக்கப்பட்ட அந்த இடம் இன்று காலத்தின் கோலத்தால் செல்ல முடியாமலே போனது தான் சோகம்.

 (வளர்ந்து கடாவான பிறகு ஒரு குற்றால பயணத்தில்)

அடுத்த பயணம் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு மன்னார்குடி வழியாக செல்வது. திருவாரூரிலிருந்து மன்னார்குடி வரை கடுப்பாக செல்லும் பயணம் மன்னார்குடியில் பேருந்து மாறியதும் குதூகூலமாக மாறிவிடும். காரணம் இளையராஜாவின் பாடல்கள் தான்.

அந்த ரூட்டில் தனியார் பேருந்துகள் தான் அதிகமாதலால் எப்பொழுதும் போட்டி போட்டு தான் பேருந்துகள் செல்லும். அப்படி போகும் போது சன்னலோர இருக்கையில் அமர்ந்து இளையராஜாவின் பாடல்களை ரசித்துக் கொண்டு வேகமாக போகும் போது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்.

இன்று இந்த ரூட்களில் சொந்தகாரர்களின் வீட்டுக்கு காரில் செல்வதே வழக்கமாக இருப்பதால் அந்த பேருந்து பயணத்தின் சுகத்தினை அனுபவிக்க முடியவில்லை.

(அம்மா, தம்பியுடன்)

திருவாரூரில் வடக்கு வீதியில் குடியிருந்த போது தெருவில் உள்ள அனைத்து மக்களும் பரிட்சயமானவர்களாகவே இருந்தார்கள். இன்று பாதி குடும்பங்களுக்கு மேல் அங்கு கிடையாது. வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டார்கள்.

1980 இறுதி காலக்கட்டங்களில் தெருவில் இருக்கும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து திருப்பதி ஆன்மீக சுற்றுலா, கேரளா இன்பச் சுற்றுலா, கர்நாடகா இன்பச் சுற்றுலா செல்வது வழக்கமாக இருந்து. இதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் இருந்தார் அவர் பெயர் டூர் தியாகு.

அவர் தான் பேருந்து ஏற்பாடு செய்து ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பணம் ஆகும் என்றெல்லாம் கணக்குப் போட்டு வசூல் செய்து பயணத்தை திட்டமிடுவார். வடக்குவீதி சித்தி வினாயகர் கோயிலில் கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து பேருந்து புறப்படும். இரவு தூங்கி விழித்ததும் சாத்தனூர் அணையில் இருப்போம். எனக்கு அந்த சமயங்களில் பத்து பதினோரு வயது என்பதால் புது இடங்களை காண்பதில் உற்சாகமாகவே இருக்கும்.

சாத்தனூர் அணையில் குளித்து முதலைப் பண்ணையை சுற்றிப் பார்த்து விட்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு புறப்பட்டால் பேருந்து வேலூர் வழியாக திருப்பதிக்குள் நுழையும். வழியெங்கும் வீட்டிலிருந்து கட்டி எடுத்து வரப்பட்ட புளிசோறும், சப்பாத்தியும் தான் உணவு.

கீழேயே பேருந்தை நிறுத்தி விட்டு ஆந்திர மாநிலத்து பேருந்தில் திருமலைக்கு பயணத்தை தொடரும் போது வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும். பேருந்து மலையில் ஏறத் தொடங்கியதும் பாதிப் பேர் வாந்தி எடுப்பார்கள். எங்கப்பா எனக்கும் என் தம்பிக்கும் ஒரு எலுமிச்சை பழம் கொடுத்து முகர்ந்து கொண்டே வரும்படி சொல்லுவார்.

எனக்கு வாந்தி வராது. ஆனாலும் அப்பாவுக்காக முகர்வது போல் நடித்துக் கொண்டே வருவேன். அம்மாவெல்லாம் கண்ணைச் சுற்றி துண்டை கட்டிக் கொண்டு மயக்கத்திலேயே வருவார். பக்கத்து வீட்டு மாமா குடும்பங்கள், அப்பாவின் நண்பர்கள் குடும்பங்கள் என் எல்லாமே மயக்கத்தில் தான் வரும்.

அப்பா மட்டும் தான் தெம்பாக வருவார். எனக்கு பார்க்கும் போது பெருமையாக இருக்கும். மற்றவர்களிடம் அப்பாவைப் பற்றி பீற்றிக் கொள்வேன். மலையில் காத்திருந்து சாமி பார்த்து விட்டு உண்டியலில் அப்பா தூக்கிக் காட்ட நான் காசு போடுவேன்.

வரிசையில் நின்று லட்டு வாங்கி மீண்டும் பேருந்தில் இறங்கும்போதும் இதே வாந்தி படலம் தான். பேருந்தும் மங்கலான வெளிச்சத்தில் இருப்பதால் ஆந்திரா பேருந்தே பிடிக்காது. தமிழ்நாடு பேருந்து தான் இந்தியாவிலேயே சிறந்த பேருந்து என்று எண்ணத் தோன்றும்.

அப்படியே மீண்டும் பேருந்தில் ஏறினால் சென்னைக்கு சுற்றுலா வருவோம். மெரினா பீச், வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்றிப் பார்த்து விட்டு மாமல்லபுரம் பார்த்து விட்டு இரவோடு இரவாக திருவாரூர் திரும்புவோம். ஏழெட்டு வருடங்களுக்கு இது வழக்கமான பயணமாக இருந்தது.

அப்பொழுது எல்லாம் சாதாரணமாகவும் கடுப்பாகவும் தெரிந்த சுற்றுலா பயணங்கள் இன்று பசுமையான நினைவுகளாக இருக்கிறது. 12 வயதில் 10 பெண்ணைப் பார்த்து சைட் அடித்தது, பேருந்தில் திரும்பும் போது அப்பாவுக்கு தெரியாமல் லட்டை சுரண்டி தின்றது, மயக்கமோ வாந்தியோ வராமல் மற்றவர் கவனம் என் மீது வரவேண்டும் என்பதற்காக மயக்கம் வருவது போல் நடித்தது எல்லாம் இன்று நினைத்து பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

கேரளா இன்பச்சுற்றுலா சென்று எல்லா ஊர்களும் சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும் வழியில் மழம்புழா அணைக்கடுத்து ராஜபாளையம் அருகில் கேரள எல்லையில் நாங்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி ஏகப்பட்ட பேர் காயமடைந்ததால் சுற்றுலா திட்டங்கள் அத்துடன் கைவிடப்பட்டன.

புளிசோறு பயணத்தில் சாப்பிட்டால் தான் அருமையான சுவையை தருகிறது. எப்படி அந்த சுவை என்பது தான் புரியாத புதிர்.

ஆரூர் மூனா செந்தில்
 

16 comments:

 1. தமிழ்நாடு பேருந்து தான் இந்தியாவிலேயே சிறந்த பேருந்து unmai

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுந்தர்மீனாட்சி

   Delete
 2. செந்தில் பழைய நினைவுகள் இனிக்கவே செய்கிறது. திருப்பதி மலையேறும் பொழுது தலைசுத்தல் வாந்தி என்று அந்த பேருந்துகளை நினைத்தாலே இன்றும் குமட்டுகிறது. மலை நடந்து ஏறி செல்லும் சுகம் பேருந்தில் இல்லை தான்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கும்மாச்சி

   Delete
 3. அந்த சிறுபிள்ளைத்தனமான இனிய மறக்க முடியாத நினைவுகள் தான் சுகமே...

  ReplyDelete
 4. நினைவுகள் என்றுமே சுகம் ....

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாப்ள

   Delete
 5. குற்றாலத்தில் எடுத்த போட்டோ 1990-களில் இருக்குமா ??? குற்றால மெயின் அருவி என் வீட்டிலிருந்து நடந்து போகலாம் ( சுமார் 2.5 கி.மீ)
  அடுத்த சீசனுக்கு வாங்க ! ! !

  ReplyDelete
  Replies
  1. அய்யா ஏன் இப்படி போட்டு தாக்கறீங்க. அந்த போட்டோ 2005ல் எடுக்கப்பட்டது. அடுத்த முறை வரும் போது கண்டிப்பாக தெரிவித்து விட்டு வருகிறேன்.

   Delete
 6. பேருந்து பயணங்கள் இனிமையானதே

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே

   Delete
 7. எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜசேகரன்

   Delete
 8. நானும் உங்களை போலவே ஊர் சுற்றிதான்,

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...