சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, February 2, 2012

லால் பகதூர் சாஸ்திரியின் கடைசி நாள்...




வரலாற்று சிறப்பு மிக்க தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்தில், லால்பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் திடீரென்று காலமானார். ரஷியாவில் உள்ள தாஷ்கண்ட் நகரில், பிரதமர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெற்று, 1966 ஜனவரி 10ந்தேதி இரவு சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டெல்லியில் இருந்த மூத்த மந்திரி நந்தாவுக்கு டெலிபோன் செய்து சாஸ்திரி பேசினார். இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் டெல்லியில் இருந்த தன் மனைவி லலிதா தேவியுடன் டெலிபோனில் பேசினார். "பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. நாளை டெல்லி திரும்புகிறேன்" என்று தெரிவித்தார். நள்ளிரவு 3 மணிக்கு (அப்போது இந்தியாவில் நேரம் இரவு 2 மணி) சாஸ்திரிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. டாக்டர் வந்து பரிசோதித்தார். சாஸ்திரியின் நாடித்துடிப்பு தளர்ந்திருந்தது. டாக்டர் ஊசி போட்டார். மற்றும் பல டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் பலன் இல்லை. சாஸ்திரி மரணம் அடைந்தார். உயிர் பிரிவதற்கு முன் அவர் உதடுகள் "ஹரே ராம்" என்ற வார்த்தையை முணுமுணுத்தன. சாஸ்திரி மரணம் அடைந்ததை அறிந்து, பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், ரஷிய பிரதமர் கோசிஜின் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து சென்று சாஸ்திரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அயூப்கானும், ஜோசி ஜின்னும் கண் கலங்கினார்கள்.

11ந்தேதி காலை, தாஷ்கண்டில் இருந்து சாஸ்திரி உடல் விமானம் மூலமாக டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது. சாஸ்திரி உடல் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. சாஸ்திரியின் உடல் அவர் தங்கியிருந்த மாளிகையில், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ரஷியப் பிரதமர் கோசிஜின் கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் சாஸ்திரி உடல், ஒரு பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, தாஷ்கண்ட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுக சுமார் 10 லட்சம் பேர், சோகத்துடன் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தாஷ்கண்ட் விமான நிலையத்துக்கு சாஸ்திரி உடல் கொண்டு செல்லப்பட்டதும், 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. சாஸ்திரி உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டி, விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அயூப்கானும், கோசி ஜின்னும் தோள் கொடுத்து சுமந்தனர். சாஸ்திரியுடன் தாஷ்கண்ட் சென்றிருந்த மந்திரிகள் ஒய்.பி.சவான், சுவரண்சிங் ஆகியோரும் சவப்பெட்டியை சுமந்தனர். சாஸ்திரி உடலைப் பெற்றுக்கொள்வதற்காக, டெல்லி விமான நிலையத்தில் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கையில் மலர் வளையத்துடன் காத்திருந்தார்.

சாஸ்திரி மரணச் செய்தியை அறிந்ததும், காங்கிரஸ் தலைவர் காமராஜர் விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்தார். சாஸ்திரி உடல் வந்து சேருவதற்கு முன்பே டெல்லியை அடைந்து, விமான நிலையத்தில் காத்திருந்தார்.

மத்திய மந்திரிகள், தலைவர்கள், வெளிநாடுகளின் தூதர்கள், சாஸ்திரி குடும்பத்தினர் ஆகியோரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். சாஸ்திரி உடலுடன் தனி விமானம் பிற்பகல் 2.31 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. சாஸ்திரியின் உடலை இறக்க, 6 ராணுவ அதிகாரிகள் விமானத்துக்குள் சென்றனர். சாஸ்திரியின் மகன் அரிகிஷணை மந்திரி சவான், விமானத்துக்குள் அழைத்துச்சென்றார். சாஸ்திரியின் உடலைப் பார்த்து, அரிகிஷண் கதறி அழுதார்.

சாஸ்திரி உடல், பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு அவர் வீட்டுக்கு கொண்டு போகப்பட்டது. கணவரின் உடலைப் பார்த்து லலிதா சாஸ்திரி கதறி அழுதார். பல லட்சக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மறுநாள், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே சாஸ்திரியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. "சிதை"க்கு, சாஸ்திரியின் மூத்த மகன் அரிகிஷண் தீ மூட்டினார். இறுதிச் சடங்குக்கு ரஷிய பிரதமர் கோசிஜின், அமெரிக்க துணை ஜனாதிபதி அம்ப்ரே, அமெரிக்க வெளிவிவகார மந்திரி டீன்ரஸ்க், ராணி எலிசபெத்தின் தூதராக மவுண்ட்பேட்டன் பிரபு, இங்கிலாந்து உதவிப்பிரதமர் பிரவ்ன், பாகிஸ்தான் வர்த்தக மந்திரி பரூக் மற்றும் பல அயல்நாட்டுத் தலைவர்கள் வந்திருந்தனர். இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஆரூர் மூனா செந்தில்


2 comments:

  1. He was murdered by USSR to pave the
    way for Indira to become Indian P.M.
    Sasthri is a tough statesman who will
    not compromise Indian Sovereignty for any thing.That is the reason he
    was murdered.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...