சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, May 25, 2013

பார்ட்டி கலாட்டாவுடன் நடந்த கிரகப்பிரவேசம்

மூன்று மாதத்திற்கு பிறகு சென்ற வாரம் மச்சான் வீட்டு கிரகப்பிரவேசத்திற்காக ஊருக்கு சென்றிருந்தேன். எனக்கும் அவனுக்கும் சமவயது. தானே சம்பாதித்து மன்னார்குடியில் கடை வைத்து நன்கு முன்னேறி சொந்த வீடு கட்டியிருக்கிறான். அதுமட்டுமில்லாமல் மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அவன் தான்.


பல வருடங்களுக்கு பிறகு அந்த ஊருக்கு செல்வதால் மிகுந்த சந்தோஷம் பால்ய வயதில் என் பெரும்பாலான கொட்டங்கள் நடைபெற்றது இங்கு தான். என் அப்பாவின் தங்கை உஷா அத்தையின் மகன். என் அத்தை 20 வருடங்களுக்கு முன்பு ரத்தப்புற்று நோயில் இறந்து விட்டார்கள்.

நான் திருவாரூரில் படித்தது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில். இவர்கள் ஊரில் உள்ள திருமுருகன் உயர்நிலைப் பள்ளி இருபாலர் பயிலும் பள்ளி. அங்கு இவர்கள் 10 வது படிக்கும் வரை அரைக்கால் சட்டை தான் பள்ளிச் சீருடை. மாடு மாதிரியிருப்பவர்கள் எல்லாம் அரைக் கால்சட்டை அணிந்து பள்ளிக்கு சென்று வரும் போது மிகுந்த காமெடியாக இருக்கும்.

கூச்சமில்லாமல் அரைக் கால்சட்டை அணிந்து பெண்களுடன் கடலை போட்டு கொண்டு இருக்கும் போது நான் போய் இவர்களை கிண்டல் செய்து காலி செய்வேன்.


மன்னார்குடியில் லட்சுமி மற்றும் செண்பகம் என்ற தியேட்டர்கள் முன்பு இருந்தன. இப்பொழுது இல்லை. இவற்றில் காலைக் காட்சி என்பது பெரும்பாலும் பலானப் படங்கள் மட்டும் தான்.

இவர்கள் ஊரிலிருந்து நண்பர்கள் குழு சைக்கிளில் வந்து படம் பார்த்து விட்டு செல்வோம். இன்று அந்த திரையரங்குகள் இருந்த இடத்தில் பலமாடி கட்டிடங்கள் எங்களைப் போல் பலரின் நினைவுகளை சுமந்து கொண்டு நிற்கின்றன.

இன்னும் பல கூத்துக்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் இப்பொழுது சொன்னால் நாகரீகமாக இருக்காது. எனக்கு கிடையாதுங்க அது அவனுக்கு நாகரீகமாக இருக்காது. அதனால் இத்துடன் ப்ளாஷ்பேக்கை நிறுத்திக் கொள்வோம்.


கிரகப்பிரவேசத்திற்கு முதல் நாள் காலையில் இருந்தே நண்பர்கள் குழு கூட ஆரம்பித்தது. ரகசியமாக அவ்வப்போது மன்னார்குடிக்கு சென்று தாகசாந்தி செய்து வந்து கொண்டு இருந்தோம். மதியம் நண்பர்கள் வற்புறுத்தலால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் விளையாடினேன்.

கிரிக்கெட் விளையாடும் போது தான் தெரிந்தது நமது ஸ்டாமினா. அரைமணியில் போதை இறங்கி வியர்த்து கொட்டி விட்டது. அதன் பிறகு விளையாடியது வெறும் கூடு தான். விளையாட்டை முடித்து விட்டு போர்செட்டுக்கு சென்று குளித்து விட்டு இரவு கச்சேரிக்கு ஆரம்பமானோம்.

மற்ற உறவினர்கள் வர ஆரம்பித்தனர். என் அத்தைகள், மாமன்கள், சித்தப்பன்கள் அவர்களின் வாரிசுகள் என இடம் களை கட்ட ஆரம்பித்தது. நான் செல்லும் வழியை என் அப்பா அமர்ந்து கொண்டே கவனித்துக் கொண்டு இருந்தார். இந்த முறை சரக்கடித்தால் உதை விழும் என ஏற்கனவே அப்பாவால் எச்சரிக்கப்பட்டு இருந்தேன்.


எல்லோரும் சாப்பிட அமரும் போது அப்பா சாப்பிட வா என்று அழைத்தார். என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கும் போது நண்பர்கள் ப்ளக்ஸ் அடிக்க மன்னார்குடி போகலாம் என்று அழைத்தார்கள்.

காரணம் கிடைத்து விட்டது. அப்பாவிடம் காரணம் சொல்லி கழன்று கொண்டேன். இன்னொரு அத்தானின் பண்ணை வீட்டில் உறவினர்கள் கூட்டம் பார்ட்டிக்கு கூடினோம். வெகுநேரம் சென்ற பார்ட்டி 1 மணிக்கு முடிந்தது.

சாப்பிடுவதற்காக விசேசம் நடக்கும் வீட்டிற்கு சென்றோம். எல்லோரும் தூங்கியிருந்தனர். சாப்பிடும் போது எங்கள் குழுவில் இருந்த சரவணன் என்பவன் திடீரென கூகூகூ என கூவ ஆரம்பித்தான். உள்ளே தூங்கியவர்கள் எழுந்து வெளியே வர ஆரம்பிக்க சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் எழுந்து வெளியே ஒட ஆரம்பித்தோம். ஓடியவர்களில் சித்தப்பா, மாமா, மச்சான், தம்பிகள், என அனைவரும் அடக்கம். எல்லோரும் மனைவிக்கு பயந்து வெளியில் ஒடி வந்தார்கள்.

போதைக்கு தலைக்கேறியதால் சரவணன் மட்டும் ஊளையிட்டுக் கொண்டு இருந்தான். அவன் அம்மா வந்து ரெண்டு சாத்து சாத்தி வெளியில் துரத்தி விட்டார்கள். இரண்டு தெரு தள்ளி இருந்த ஒரு பண்ணையில் காத்திருந்தோம். ஆடிக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் சரவணன்.

செம போதையில் ஒண்ணுக்கு இருக்க குத்துக்காலிட்டு அமர்ந்தவன் பத்து நிமிடம் அப்படியே இருந்தான். என்னவென்று கிட்டே போய்ப் பார்த்தால் அப்படியே தூங்கியிருந்தான். அவனை தூக்கிக் கொண்டு போய் இன்னொரு தம்பி கலை வீட்டு மொட்டை மாடியில் போட்டு விட்டு நாங்களும் அங்கேயே படுத்தோம்.

பசிக்க ஆரம்பித்தது. என்ன செய்யலாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போது சாண்டில்யன் படியேறி வந்தான். கையில் சாம்பார் வாளி, உள்ளே சாம்பாரில் இட்லி மிதந்து கொண்டு இருந்தது. நாகரீகமில்லாதவர்கள் கூட நாகரீகமுடன் சாப்பிட்டு இருப்பார்கள். நாங்கள் சாப்பிட்டது அதை விட கேவலம். அப்படியே படுத்து விட்டோம். படுக்கும் போது மணி 2.

விடியற்காலை 4 மணிக்கு வந்து சித்தி எல்லோரையும் எழுப்பிக் கொண்டு இருந்தார். ஹோமம் துவங்கி விட்டது என்று. குளித்து துணி மாற்ற பையை எடுக்க வீட்டுக்கு சென்றால் என் அம்மா பையை கொடுக்க மாட்டேன் என்றார். இப்படியே போய்த் தொலை என் சத்தம் போட்டார். வெளியில் வந்து முழித்துக் கொண்டு இருந்தேன்.

கடுப்புடன் திரும்பிப் பார்த்தால் என்னுடன் தூங்கிய எல்லோரும் அதே போல் நின்று கொண்டு இருந்தனர். யாரும் குளித்து மாற்ற புதுத்துணி கிடைக்கவில்லை. என்னடா பண்ணுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தோம்.

அப்பொழுது தான் ஊரிலிருந்து இறங்கி இன்னொரு மச்சான் வந்தான். அவனிடம் நிலைமையை விளக்க அவன் உள்ளே சென்று பத்து நிமிடத்தில் யாருக்கும் தெரியாமல் எங்கள் துணிகளை எடுத்து வந்தான். ஆனால் பேஸ்ட், பிரஷ், சோப்பு, துண்டு கிடைக்கவில்லை.

அதையும் எதிர்பார்த்தால் ஒன்னும் நடக்காது என்று தெரிந்ததால் தாமரை குளத்திற்கு வந்து செங்கலை தேய்த்து கிடைத்த மண்ணில் பல் விளக்கி விட்டு சோப்பு போடாமல் குளித்து விட்டு துவட்டவும் துண்டு இல்லை. பழைய துணியில் துவட்டி விட்டு துணிகளை அணிந்து விட்டு சபையினில் அமர்ந்தோம்.

அதன் பிறகு வீடு திரும்பும் வரை நல்ல பிள்ளையாக இருந்து வீடு வந்து சேர்ந்தோம்.

திருவாரூருக்கு திரும்பியதும் அப்பாவும் அம்மாவும் மண்டகப்படி நடத்தியது வேறு விஷயம். இருந்தாலும் இந்த விஷேசம் என் டயரியில் எழுத வேண்டிய இனிய நினைவுகள் தான்.

ஆரூர் மூனா செந்தில்



7 comments:

  1. டைரியில் எழுதவேண்டியதை இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டீங்களே... ஆனாலும் நீங்க ரொம்ப ஆய் பிள்ளை, உங்க ப்ரண்ட்சும் ரொம்ப ஆய் பசங்க.... நான் உங்க கூட சேரமாட்டேன்...

    ReplyDelete
  2. டைரியில் எழுதவேண்டியதை இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டீங்களே... ஆனாலும் நீங்க ரொம்ப ஆய் பிள்ளை,///ஸ்கூல் பையன் இப்படியெல்லாம் சொல்லகூடாது

    ReplyDelete
  3. எல்லாவற்றையும் இப்பொழுது சொன்னால் நாகரீகமாக இருக்காது. எனக்கு கிடையாதுங்க அது அவனுக்கு நாகரீகமாக இருக்காது.// ஹி ஹி .. எப்புடி இப்படி எல்லாம்!!!

    ReplyDelete
  4. சரவணன் என்பவன் திடீரென கூகூகூ என கூவ ஆரம்பித்தான்.//பேட் பாய். இனிமே இவர ஆட்டத்துல சேர்த்துக்காதீங்க.

    ReplyDelete
  5. அடங்கரதா ஐடியா வே இல்லையா? அடங்க மறு அத்து மீறு?!!!! ஹிஹி..

    ReplyDelete
  6. சுமார் ஒருவாரமாகத் தான் உங்கள் பதிவுகளை படிக்கின்றேன்.ஈழத்தில் இருந்து அகதியா வ‌ந்த எ‌னக்கு ஒரு வருடல்.

    ReplyDelete
  7. செம டோஸ் வாங்கியிருப்பீங்க போல.சுவாரசியமான அனுபவஙுங்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...