சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, February 18, 2012

கஸ்தூரிபாய் காந்தியின் கடைசி நாள்...





ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்த காந்தி, சிறையில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். இது சம்பந்தமாக, அவருக்கும் வைஸ்ராய்க்கும் நடந்த கடிதப்போக்குவரத்து வெற்றி பெறவில்லை. இதனால் காந்தி திட்டமிட்டபடி 1943 பிப்ரவரி 10ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கினார்.

அவர் உடல் நிலை நாளுக்கு நாள் நலிந்தது. பிப்ரவரி 16ந்தேதி அவர் நிலை மோசமாகி விட்டதாக, 6 டாக்டர்கள் கொண்ட குழு அறிவித்தது. இந்தச் செய்தி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. காந்தியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, பாராளுமன்றத்தில் பலர் வற்புறுத்தினர்.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அரசின் போக்கைக் கண்டித்து, வைஸ்ராயின் நிர்வாக சபையில் இருந்து சர்.எச்.பி. மோடி, சர்.என்.ஆர்.சர்க்கார், எம்.எஸ்.ஆனே ஆகிய மூவரும் ராஜினாமா செய்தனர். பிப்ரவரி 18ந்தேதி பேசும் சக்தியை காந்தி இழந்துவிட்டார் என்று டாக்டர்கள் அறிவித்தனர்.

காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி, டெல்லியில் பிப்ரவரி 19, 20 தேதிகளில் அனைத்திந்திய தலைவர்கள் மாநாடு நடந்தது. அதில் ராஜாஜி, தேஜ் பகதூர் சாப்ரூ, ஜெயகர், புலாபாய் தேசாய் உள்பட 20க்கு மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மகாத்மாவை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யும்படி, மாநாட்டில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறியது.

ஆனால் இந்த வேண்டுகோளை வைஸ்ராய் நிராகரித்தார். காந்தியை விடுதலை செய்யுமாறு நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தலைவர்கள் அறிக்கை விடுத்தனர். "காந்தியை கைதுசெய்தது மாபெரும் தவறு. அதற்காக பிரிட்டிஷ் அரசு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்" என்று இங்கிலாந்து நாட்டுப் பேரறிஞர் பெர்னாட்ஷா அறிக்கை விடுத்தார்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. காந்தி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். தமது மனோதிடத்தால், 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மார்ச் 3ந்தேதி வெற்றிகரமாக முடித்தார். தண்ணீர் கலந்த ஆரஞ்சு பழரசத்தை கஸ்தூரி பாய் கொடுக்க, அதை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

காவலில் இருந்த கஸ்தூரிபாய்க்கு 1943 டிசம்பர் கடைசியில் இருதயக் கோளாறு ஏற்பட்டது. நாளுக்கு நாள் உடல் நலிந்து, படுத்த படுக்கையில் வீழ்ந்தார். அவரை விடுதலை செய்யும்படி, லண்டனில் உள்ள பிரபுக்கள் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்க இந்திய விவகார மந்திரி அமெரி மறுத்துவிட்டார்.

கஸ்தூரிபாயின் உடல் நிலை மோசம் அடைந்தது. மனிதாபிமானத்தை மதித்து, அவரை விடுதலை செய்யுமாறு அனைத்துக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்க பிரிட்டிஷார் மறுத்ததுடன், "கஸ்தூரிபாய் இப்போது இருக்கும் இடம் அவருக்குப் பாதுகாப்பானது" என்று கூறியது.

1944 பிப்ரவரி மாதத்தில், தன் முடிவு நெருங்கிவிட்டதை கஸ்தூரிபாய் உணர்ந்து கொண்டார். தன் பேரன், பேத்திகளைக் காண விரும்பினார். அவருடைய இறுதி விருப்பப்படி பேரன் பேத்திகள், நெருங்கிய உறவினர்கள் ஆகாகான் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1944ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு, கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம் கஸ்தூரிபாய் காலமானார்.

அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி, மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண் கலங்கினார். 62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன் சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின் பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை.

கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன் உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால் நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும். அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி, இறுதிச்சடங்குகளை செய்தார்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, February 17, 2012

சிங்கப்பூர் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு


1, ஜெனரல் ஒர்க்கர் (General Worker)
கல்வித்தகுதி முக்கியமில்லை, பாஸ்போர்ட் இருந்தால் போதும்.
தங்குமிடம் இலவசம்
விசா இரண்டு வருடம்.

2, வெல்டர் 6G (6G welder) (Singapore Experience, Freshers)
ITI Welder
தங்குமிடம் இலவசம்
விசா இரண்டு வருடம்.

3, வெல்டர் (3G welder) (Singapore Experience, Freshers)
ITI Welder
தங்குமிடம் இலவசம்
விசா இரண்டு வருடம்.

வரும் 24ம் தேதியன்று சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 8883072993


ஆரூர் மூனா செந்தில்

Thursday, February 16, 2012

ஆட்டோ சங்கர் - மரண தண்டணை - வழக்கு விசாரணை - பகுதி 5


சங்கரின் முரட்டுத்தனம் தாங்காமல் லலிதா அவனை விட்டு ஓடுவதற்கு திட்டம் போட்டாள். இதற்கு அவள் சுடலையின் உதவியை நாடினாள். சுடலை லலிதாவை கடத்திக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக வைத்து இருந்தான்.

இதை சங்கர் தெரிந்து கொண்டு சுடலையிடம் சமாதானமாகப் பேசி, லலிதாவை மீண்டும் பெரியார் நகருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினான். சுடலையோடு ஓடியதற்காக லலிதாவையும் சங்கர் கொன்று தீர்த்தான். ஆட்டோ சங்கரின் அடாவடிதனத்துக்கு அவனுடைய தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும்தான் தளபதிகளாக இருந்து செயல்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையின்போது மோகன் கூறியதாவது:-

சுடலையின் ஆலோசனையின் பேரில்தான் சங்கர் திருவான்மியூரில் விபசார விடுதி தொடங்கினான். சுடலை ஏராளமான அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்துக்கொண்டு வருவான். சில அழகிகளை பணத்துக்கு சங்கரிடம் விற்று விடுவான். சுடலை ஒரு பெண் ராசிக்காரன். அவனிடம் சிக்காத விபசார அழகிகளே கிடையாது என்று சங்கர் அடிக்கடி சொல்வான். எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு அழகியை சங்கரிடம் சுடலை அறிமுகப்படுத்துவான்.

விபசார விடுதிக்கு வரும் நல்ல அழகிகளை சங்கர் அவன் கைவசப்படுத்திவிடுவான். அழகிகளிடம் சங்கரைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது. அழகிகள் அவனுக்கு மட்டும்தான். அதன் பிறகு அவளுக்கு தனி வீடு. சில நாட்கள் கழித்து அவள் கழுத்தில் சங்கர் தாலி கட்டி மனைவியாக்கி விடுவான்.

ஜெகதீசுவரியை சங்கர் காதலித்தான். பெற்றோருக்கு தெரியாமல் அவளை வேலூரில் இருந்து சென்னைக்கு காரில் தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து கொண்டான். வேறு வழி இல்லாமல் சங்கரிடம் ஜெகதீசுவரி மனைவியாக வாழ்க்கையை தொடங்கினாள். ஜெகதீசுவரியை சங்கர் குடும்பப் பெண் போல நடத்தினான்.

அதன்பிறகுதான் சங்கரின் விபசார விடுதிக்கு 1981ம் வருடம் அக்டோபர் மாதம் கீதசுந்தரி வந்தாள். அவளை சுடலை அறிமுகம் செய்து வைத்தான். அவள் மிகவும் அழகாக இருந்தாள். கீதசுந்தரியை பார்த்தவுடன் அவளிடம் மனதை பறி கொடுத்து விட்டதாக எங்களிடம் சங்கர் கூறினான்.

கீதசுந்தரியுடன் சங்கர் குடிபோதையில் தாறுமாறாக நடந்து கொண்டான். இதனால் சங்கர் மீது கீதசுந்தரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. திருமணம் ஆன ஒரு வருடத்தில் சங்கருக்கும், கீதசுந்தரிக்கும் தகராறு முற்றியது. 1982ம் வருடம் அக்டோபர் மாதம் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கீதசுந்தரி தீக்குளித்தாள். மாலை 4 மணி அளவில் அவள் பிணமானாள்.

கீதசுந்தரியின் மரணம் சங்கருக்கு பெரிய இழப்பாக இருந்தது. அவள் மீது சங்கர் வைத்திருந்த அன்பின் காரணமாக சங்கர், பெரியார் நகரில் கட்டிய பங்களாவுக்கு "கீதசுந்தரி" என்று பெயர் சூட்டினான். அதை கீதசுந்தரியின் நினைவு இல்லம் போல் வைத்து இருந்தான். அடுத்து சுமதி 3வது மனைவியும், பெங்களூர் லலிதா 4வது மனைவியும் ஆனார்கள். இவர்களையும் சுடலைதான் கடத்தி வந்தான்.

சங்கர் சாராயம் குடித்து வந்து கும்மாளம் போடுவது லலிதாவுக்கு பிடிக்கவில்லை. சங்கரின் முரட்டுத்தனத்துக்கு லலிதாவினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் அவள் சங்கரிடம் இருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டினாள். இதே நேரத்தில் லலிதா மீது சுடலைக்கு மோகம் ஏற்பட்டது. சங்கர் வெளியே போன நேரம் பார்த்து லலிதா சுடலையுடன் ஓடிவிட்டாள்.

இருவரும் பல்லாவரத்தில் தங்கி இருந்தார்கள். பிறகு நாங்கள் பல்லாவரம் சென்று சமாதானம் பேசி அவளை அழைத்து வந்தோம். 1987ம் வருடம் அக்டோபர் மாதம் சுடலை சங்கர் வீட்டுக்கு வந்தான். அன்று அமாவாசை தினம். சுடலையை பார்த்ததும் சங்கருக்கு சரியான ஆத்திரம். அவனை தீர்த்துக்கட்டும்படி என்னிடமும், எல்டினிடமும் கூறினான். அவனுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றி கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அவன் பிணத்தை சங்கர் வீட்டிலேயே எரித்தோம்.

இதைத்தொடர்ந்து ஜனவரி (1988ம் வருடம்) மாதம் லலிதாவை பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று 11 மணிக்கு இரவு அவளை கழுத்தை நெரித்து சங்கர் கொலை செய்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் செத்து சுருண்டு விழுந்தாள். "நான் தொட்டவளை இனிமேல் எவனும் தொடக்கூடாது" என்று சங்கர் வெறியுடன் பேசினான்.

சங்கர், பெரியார் நகரில் அம்மன் கோவில் கட்டினான். இலவசமாக சிறுவர்களுக்கு இரவு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தான். இலவசமாக எல்லோருக்கும் சாராயம் குடிக்கக் கொடுப்பான். செலவுக்கு பணம் கொடுப்பான். சிறுவர் சிறுமியர்களுக்கு பிஸ்கட், சாக்லெட்களை அள்ளி அள்ளி வீசுவான். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த நன்கொடை கொடுப்பான்.

திருவான்மியூரில் உள்ள பெரியார் நகர் மக்கள் மத்தியில் சங்கர் ஒரு பெரிய மனிதனாக நடமாடினான். அவனுடைய கொலை ரகசியங்கள் எல்லோருக்கும் தெரியாது. எங்களைச் சேர்ந்த ஒரு சிலருக்குத்தான் தெரியும்."

இவ்வாறு மோகன் கூறினான்.

ஆட்டோ சங்கரின் தந்தை பெயர் தங்கராஜ். தாய் ஜெயலட்சுமி. வேலூரைச் சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்தார்கள். ஜெயலட்சுமி கணவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். ஆட்டோ சங்கருக்கு சீதாலட்சுமி என்கிற கவிதா, ஹேமசுந்தரி என்ற 2 மகள்களும், சீனிவாசன், டெல்லி சுந்தர் என்ற 2 மகன்களும் இருந்தனர்.

6 பேர்களை கொலை செய்த ஆட்டோ சங்கர், சிறையில் இருந்து தப்பி ஓடினான். ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 21.08.1990 அன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. அதற்கு முந்தின நாள் போலீசுக்கு பெரிய அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது.

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, February 14, 2012

விகடன் அதிபர் S.S.வாசனின் கடைசி நாள்...



சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும், மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தை அடைந்தவர், வாசன். எஸ்.எஸ்.வாசன் மனைவி பெயர் பட்டம்மாள். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே மகன் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒரே மகள் லட்சுமி ஜெமினியின் நிர்வாக இயக்குனராக இருந்த வாசன், இணை நிர்வாக இயக்குனர் பொறுப்பை பாலசுப்பிரமணியனுக்கு வழங்கினார்.

அலுவலகத்தில் அப்பா, மகன் என்ற பந்தமே இருந்ததில்லை. அலுவலகத்தில் எல்லோரும் வாசனை "பாஸ்" என்றே கூறுவார்கள். எனவே, பாலசுப்பிரமணியனும் அவரை "பாஸ்" என்றே அழைக்கலானார். வாசனின் இறுதி நாட்கள் பற்றி ஒரு கட்டுரையில் பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:-

"தன் பொருட்டு யாரும் துன்பப்படவோ, அனுதாபப்படவோ கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் அவர் (வாசன்). அவருக்கு வயிற்றில் புற்று நோய் வந்ததே எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. 1968 ஏப்ரலில்தான் எனக்குத் தெரியும். எங்கள் குடும்ப டாக்டர் எம்.எஸ்.வெங்கட்ராமன் என்னை அழைத்து, விஷயத்தைச் சொன்னார்.

"இது நோய் முற்றிய நிலை. ஆபரேஷனுக்காக வயிற்றைத் திறந்து பார்த்தபோது, நானே பயந்துவிட்டேன். `இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்' என்று அவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், சொல்லாமல் இருக்க முடியவில்லை" என்றார், டாக்டர். அதன் பிறகு, பாஸ் முகத்தைப் பார்த்தேன்.

எதுவுமே நடக்காதது போல் அவர் வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தார். அதையும் மீறி அவரிடம் ஒரே சோர்வு தென்படுவதை அப்போதுதான் ஊன்றி கவனித்து உணர்ந்தேன். ஒரு நாள் `பாஸ்' என்னைக் கூப்பிட்டார். தனக்கு என்ன என்பதை அவராகவே சொல்லிவிட்டார். முன்கூட்டித் தெரியும் என்று நானும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேன்.

"பாலு! திறமையுள்ள, தகுதியுள்ள மனிதர்கள் பலரிடமும் கருத்துக் கேட்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் வைத்து ஓர் இறுதி முடிவை எடுத்து அதன்படி செய்வது என் வழக்கம். வாழ்க்கையில் அடுத்தடுத்து எனக்குக் கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் அதுதான் காரணம். ஆனால், என் சொந்த உடல் நலம் பற்றிய விஷயத்தில் அதையே செய்தது தவறு என்று இப்போது புரிகிறது.

ஒன்றரை வருடத்துக்கு முந்தியே டாக்டர் வெங்கட்ராமன் என்னை ஆபரேஷன் செய்து கொள்ளச் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்னும் சில காலத்துக்கு என் ஆயுள் நீண்டிருக்கும். பலரிடம் கருத்துக் கேட்டுக் காலத்தைக் கடத்தியதுதான், என் உயிரையே விலையாகக் கேட்கிறது" என்றார்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, "இந்த விஷயங்கள் எதையும் நீ அம்மாவிடம் சொல்லாதே" என்று என் வாயை கட்டிப் போட்டார். ஆனால், அம்மாவிடம் சொல்லாமல் இருக்க எனக்குத் தைரியமில்லை. தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்லிவிட்டு, "தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாதீர்கள்" என்றேன்.

எப்படித்தான் என் தாயார் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டாரோ, அவர் எதுவும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் வளைய வந்தார். வீட்டுக்குள்ளேயே ஒரு கொடுமையான, வேதனையான கண்ணாமூச்சி நடந்து கொண்டிருந்தது. மறைவதற்கு சில மாதங்களுக்கு முன், ரங்கா நர்சிங் ஹோமில் ஒரு நாள் அவருக்கு `டிரிப்ஸ்' ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

மருந்தில் ஏதோ தவறு நடந்து, உடம்பு தூக்கிப்போட ஆரம்பித்தது. படுக்கையில் இருந்தபடி ரொம்ப அவஸ்தைப்பட்டிருக்கிறார். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு, வேறு `டிரிப்ஸ்' பாட்டில் பொருத்தப்பட்டதில் உடல் நடுக்கம் சரியாகிவிட்டது. இது நடக்கும்போது, இரவு 8 மணி இருக்கும். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ரங்கா நர்சிங் ஹோம் பறந்தோடிப்போய் அவர் முன்னால் நின்றேன்.

என்னைப் பார்த்தவர், "நடந்ததைக் கேள்விப்பட்டிருப்பாயே... எனக்கு ராத்திரி ஏதாவது ஆகிப்போனால், உடனே போன் செய்து யாருக்கும் தகவல் சொல்ல வேண்டாம். இரவு வேளையில் யாரையும் தொந்தரவு செய்யாதே. எதுவானாலும், காலை ஆறு மணிக்கு மேல் சொல்லு" என்றார். இதற்கு அவர் என்னிடம் எதிர்பார்த்த ஒரே பதில், "யெஸ் சார்". அதையே நானும் சொன்னேன்.

அவ்வாறு இல்லாமல், நான் உணர்ச்சிவசப்பட்டு, "ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்று சொல்லியிருந்தால், அவருக்குப் பிடிக்காது. நான் அமைதியாக நிற்க, "மாதவன் (உதவியாளர்) இங்கே என்னுடன் இருப்பான். நீ இப்போது புறப்படு" என்றார். அதற்கும் "யெஸ் சார்" சொல்லிவிட்டு, கனத்த இதயத்துடன் வெளியே வந்தேன்.

1969 ஆகஸ்டு 26ந்தேதி காலையில் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். அப்போது ஏழரை மணி இருக்கும். நான் எதிரில் போய் நின்றேன். அவரால் பேச முடியவில்லை. மிகவும் நலிந்து போயிருந்தார். அன்றைய காலைப் பத்திரிகையைக் கொடுத்து, "இதைப்படி" என்று வலது கையால் சுட்டிக் காட்டினார். "காங்கிரசில் பிளவு மறைகிறது" என்ற தலைப்பிட்டு வெளியாகி இருந்த செய்தி அது.

காமராஜருக்கும், இந்திராவுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பு மறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அந்தச் செய்தி சொன்னது. தன் உயிர் மூச்சாக அவர் கருதிய காங்கிரசில் பிளவு ஏற்பட்ட போது, அவரால் தாங்க முடியவில்லை. அந்தப் பிளவு மறைகிறது என்ற செய்தியைப் பார்த்ததும் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. சிரிக்க முடியாத அளவுக்கு பலவீனம்.

ஆனாலும் உதடுகள் லேசாக நெளிந்து ஒரு புன்னகையை வெளிப்படுத்த முயன்றன. அன்று காலை 9.20 மணி. நான் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேன். கண் மூடிப்படுத்திருந்தவரின் இடது கை மட்டும் `முடியவில்லை, முடியவில்லை' என்பது போல் இரு முறை அசைகிறது.

அதன்பின் எந்தச் சலனமும் இல்லை. பதறிப்போய் நாடி பிடித்துப் பார்க்கிறேன். துடிப்பு இல்லை. டாக்டரை அழைக்க எழுந்து ஓடுகிறேன். டாக்டரே அப்போது உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார். பரிசோதித்துப் பார்த்துவிட்டு, `உயிர் பிரிந்து விட்டது' என்று டாக்டர் அறிவித்தார்."

இவ்வாறு பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

வாசன் மறைந்தபோது தமிழக முதல் அமைச்சராக கருணாநிதி இருந்தார். அவர், மற்ற அமைச்சர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். வாசன் மரணச்செய்தி பரவியதும், சென்னையில் உள்ள எல்லா ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் அனைவரும் வாசன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் முதல் அமைச்சர் பக்தவச்சலம், மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆரும், மற்றும் பல நடிகர், நடிகைகளும், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மேக்கப்பைக்கூட கலைக்காமல், விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர். வாசன் உடலைப்பார்த்து எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். வாசனுடன் நீண்ட காலம் பழகிய ஜெமினிகணேசன் கதறி அழுதார்.

நடிகைகள் தேவிகா, வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா ஆகியோர் கண்ணீர் விட்டபடி நின்றனர். சிவாஜிகணேசன் சோகமே உருவாக இருந்தார். பானுமதி, பத்மினி, ஜெயலலிதா, சவுகார்ஜானகி, டி.ஆர்.ராஜகுமாரி, ஏவி. எம்.ராஜன், முத்துராமன், பி.எஸ்.வீரப்பா, சந்திரபாபு, ரவிச்சந்திரன், பாலாஜி, நாகேஷ், பட அதிபர்கள் ஏவி.மெய்யப்பசெட்டியார், நாகிரெட்டி, ஏ.எல். சீனிவாசன், டைரக்டர்கள் ஸ்ரீதர், ப.நீலகண்டன், திருலோகசந்தர், மாதவன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, கணவர் "கல்கி" சதாசிவத்துடன் வந்து மரியாதை செலுத்தினார். மாலையில் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம், மைலாப்பூர் எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (இன்றைய ராதாகிருஷ்ணன் சாலை) உள்ள வாசன் இல்லத்தில் இருந்து புறப்பட்டது. எம்.ஜி.ஆர், பட அதிபர்கள் ஏவி.மெய்யப்ப செட்டியார், சுந்தர்லால் நகாதா, முன்னாள் அமைச்சர்கள் கக்கன், பூவராகன், தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம் மற்றும் திரை உலகப் பிரமுகர்கள் ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

உடலை சுமந்து செல்ல, ஜெமினிகணேசன் தோள் கொடுத்தார். ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலம், கிருஷ்ணாம்பேட்டை மயானத்தை அடைந்தது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. "சிதை"க்கு வாசனின் ஒரே மகன் பாலசுப்பிரமணியன் தீ மூட்டினார்.

வாசன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில், சென்னை நகரில் எல்லா சினிமா கொட்டகைகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆபீசில், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

ஆரூர் மூனா செந்தில்


நன்றி : விகடனின் வாசன் நூற்றாண்டு மலர், மாலைமலரின் காலச்சுவடுகள்


Sunday, February 12, 2012

நானும் எனது ஊரும் (தொடர் பதிவு)

(கோயிலின் எழில்மிகு தோற்றம்)

நானாகவே எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சங்கவி அழைத்ததனால் உடனே எழுத துவங்குகிறேன். சங்கவிக்கு நன்றி. எனது ஊர் திருவாரூர். இன்று அது மாவட்ட தலைநகர், நகரில் மத்திய பல்கலைக்கழகம், அரசு மருத்துவக்கல்லூரி என ஏகமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனால் நான் வளர்ந்த காலத்தில் அது மிகச்சிறிய நகரம் அவ்வளவே.

திருவாரூர் என்பது அதனை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் சந்தை என்றளவில் வளர்ந்த பெரு கிராமம். இங்கு வர்த்தகமோ, தொழிற்சாலைகளோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே கிடையாது. இது விவசாயப்பகுதி. விவசாய செய்பொருட்களின் சந்தையாக திகழ்கிறது. என் அப்பாவும் அது போன்ற அரசின் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் என்ற விவசாய உதிரி பொருட்கள் மொத்த விற்பனையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். நீங்கள் எல்லாம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நெல் விளையும் பெரும்பாலான நிலங்கள் தற்போதைய திருவாரூர் மாவட்டத்திலேயே உள்ளன.
(அப்பா, அம்மாவுடன் நானும் தம்பியும் திருவாரூரில் உள்ள மூர்த்தி ஸ்டுடியோவில் எடுத்தது)

திருவாரூர் சோழ அரசின் புராதன தலைநகர். பசுவின் கன்றை அறியாமல் கொன்றதற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற மனுநீதிசோழன் தலைநகராக ஆண்ட ஊர் இது. இன்றும் அந்த சம்பவம் நடந்த இடத்தில் நினைவுச்சின்னம் இருக்கிறது. நான் படித்த காலத்தில் பள்ளியில் ஒரு கட்டிடமாக இருந்தது அரண்மனை. தற்போது இடிக்கப்பட்டு விட்டது. பழைய நகராட்சி அலுவலகமும் அரண்மனையின் ஒரு கட்டிடத்தில் தான் இயங்கி வந்தது.
(எங்கள் ஊரின் பெருமக்குரிய ஆழி்த்தேர்)

அது போல் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் திருக்கோயில். இந்து மதத்தில் பெரிய கோவில் என்ற சொல்லுக்குரிய கோவில். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு முன்பே கட்டப்பட்ட கோயில் இது. அப்பொழுதெல்லாம் கூட்டம் மிகக்குறைவாக இருக்கும். நாங்கள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை கோயிலின் உள்ளே கிரிக்கெட் விளையாடியோ பட்டம் விட்டோ தான் கழிப்போம். அது போல் நவக்கிரகங்களும் ஒரே திசையை நோக்கி உள்ள கோயிலும் இது தான். எவ்வளவோ எழுத்தாளர்கள் தனிமையில் சிந்தித்து எழுத கோயிலையே பயன்படுத்தி வந்தனர். தற்போது சர்வதோஷ பரிகாரஸ்தலம் என்ற பெயரில் வியாபார நோக்கில் பிரச்சாரம் செய்யப்படுவதால் கூட்டம் அதிகமாகி விட்டது. எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் வந்து தங்கள் தோஷத்திற்கு பரிகாரம் செய்து விட்டு செல்வதால் நவக்கிரக பகுதி மட்டும் நல்ல கூட்டமாகவே இருக்கிறது.
(நான் ஊரில் ஒரு தருணத்தில்)

அடுத்தது திருவாரூர் ஆழித்தேர். இந்தியாவிலேயே மிகப்பெரிய தேர். தேர்த்திருவிழா நடக்கும் கால கட்டம் தான் எங்கள் ஊருக்கு திருவிழா. எவ்வளவு மக்கள் இழுத்தாலும் தேரை ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாது. பின்பக்கமிருந்து புல்டோசர் தள்ளினால் தான் தேர் நகர ஆரம்பிக்கும். பழங்காலங்களில் தேர்த்திருவிழா 10 நாட்கள் வரை நடக்குமாம். 1950களில் ஒரு பெரிய தீவிபத்து ஏற்பட்டு பெரிய தேர் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. தற்போதுள்ள பெரிய தேர், கமலாம்பாளுக்குரியது. இந்தத்தேரை 1990களில் நிலையடியிலிருந்து இழுத்து சென்று நான்கு வீதியும் சுற்றிய பின் நிலையடிக்கு வந்து சேர இரண்டு நாள் ஆகும். இரண்டு நாட்களும் மனது நிலை கொள்ளாத மகிழ்ச்சியில் இருக்கும். நண்பர்கள் குழு ஒன்று சேர்ந்து தேர் இழுப்போம். சிறிது தூரம் இழுத்த பின்பு கிடைக்கும் கால இடைவெளியில் ஒருவனை பத்து பேர் சேர்ந்து தூக்கிப் போட்டு பிடிப்போம். ஒரு முறை சண்முகம் என்ற நண்பனை தூக்கிப் போட்டு பிடிப்பதற்கு முன் பச்சைக் கொடி என்று அறிவிப்பு வந்ததால் அவனை அப்படியே விட்டு விட்டு வடம் பிடித்து விட்டோம். தொப் என்று கீழே விழுந்தான். பிறகு அவனை சமாதானப்படுத்தியதெல்லாம் பெரிய கதை. இரண்டு நாட்களும் சுற்று கிராமப்பகுதியிலிருந்து பெண்கள் தேர் வருவதை பார்த்துக் கொண்டிருக்கும் போது வடம் பிடிக்கும் பகுதியிலிருந்து பேப்பர் ராக்கெட்டுகள் விடுவோம். அங்கிருந்து பெண்கள் பறக்கும் முத்தம் தனக்கு பிடித்த ஆண்களைப் பார்த்து தருவர். ஆனால் தற்போதெல்லாம் போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாகி இந்த சீண்டல்கள் குறைந்து விட்டன. இன்றும் சரி என்றும் சரி, எப்பொழுது தேர்த்திருவிழா நடந்தாலும் நான் எந்த ஊரில் இருந்தாலும் ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எங்கள் ஊரின் கெளரவம் அது.

எனது காலத்தில் திரையரங்குகள் தைலம்மை, சோழா, நடேஷ், செங்கம், பேபி மற்றும் புலிவலத்தில் இருந்த கருணாநிதி என மொத்தம் ஆறு இருந்தன. அவற்றில் செங்கம், பேபி, கருணாநிதி மூடப்பட்டு பாக்கியுள்ளவை மட்டுமே உள்ளன. அவையும் ஏனோ தானோ வென்று தான் நடந்து கொண்டிருக்கின்றன. நான் பள்ளியில் படித்த காலத்தில் தியேட்டர்களுக்கு செல்வது மட்டுமே பொழுதுபோக்கு. மதிய வேளை பெரும்பாலும் ஏதாவது ஒரு தியேட்டரில் தான் இருப்போம்.

கலைஞர் அவர்கள் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் நானும் படித்தேன். பள்ளியைப் பற்றி நான் தனித் தொடராக வெளியிட்டுக் கொண்டிருப்பதால் பள்ளி விவரங்கள் மட்டும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கலைஞரை அவரின் தற்போதைய அரசியல் காரணமாக எனக்கு பிடிக்காமல் போனாலும் அவரால் தான் எனது ஊர் இந்தளவுக்கு வளர்ந்தது என்பதால் அவரை தலை குனிந்து வணங்குகிறேன். என்ன வருத்தம் என்றால் ஊர் பழைய அமைதியை இழந்து பரபரப்புக்குள் தலையை விட்டுக் கொண்டுள்ளது.

1997ல் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு ஊரில் இருந்தால் உருப்பட மாட்டேன் என்று வலுக்கட்டாயமாக சென்னைக்கு பஸ் ஏற்றப்பட்டேன். அதிலிருந்து ஊருக்கு செல்வது வாரம் ஒரு முறை என்று இருந்தது. பிறகு மாதம் ஒரு முறை என்று மாறி இப்பொழுது இரு மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. இப்பொழுது ஊருக்கு சென்றாலும் கிளம்பி சென்னைக்கு வரும் அன்று மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.

நானும் இந்த தொடர் பதிவை தொடர

கேஆர்பி செந்தில்
நாய் நக்ஸ் நக்கீரன்
பிலாசபி பிரபாகரன்
அஞ்சாசிங்கம் செல்வின்
மனோ நாஞ்சில் மனோ
கோவை நேரம் ஜீவானந்தம்
புன்னகை மன்னன் தஞ்சை குமணன்
காங்கேயன் தஞ்சை சங்கர்
முல்லைவனம் மயில்வாகனா
சினிமா சினிமா ராஜ்

ஆகியோரை அழைக்கிறேன்.


ஆரூர் மூனா செந்தில்

Friday, February 10, 2012

ருத்ரபூமி - Journey 2 The Mysterious Island - சினிமா விமர்சனம்



ஏற்கனவே பலர் தோனி படம் பார்த்து விமர்சனம் எழுதி விட்டதால் அதனை தவிர்த்து இன்று 8 படங்கள் ரிலீசாகியிருந்தன, சரி நம்ம ராக் நடிச்ச படமாச்சே என்று Journey 2 - The Mysterious Island (ருத்ரபூமி) படத்திற்கு சென்றேன். இது 3D படம்.

படத்தின் கதை, கதாநாயகன் சேன் அவனது அம்மா மற்றும் அம்மாவின் இரண்டாவது கணவர் ஹாக் (தி ராக்(Dwayne Johnson)) ஆகியோருடன் வசித்து வருகிறான். அவனுக்கு ஹாக்கை பிடிக்கவில்லை. சேனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதனை மொழிப்பெயர்க்க ஹாக் உதவுகிறார். அந்த மெசேஜின் படி ஒரு தீவுக்கு அவர்கள் செல்ல முயல்கின்றனர். அதற்கு அவர்களை கொண்டு விட ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி அதில் சேன், ஹாக், பைலட் மற்றும் அவரது மகள் ஆகியோர் செல்கின்றனர். ஹெலிகாப்டர் சூறாவளியில் சிக்கி உடைந்து கடலில் விழுகின்றது, அனைவரும் நீந்தி அந்த தீவுக்கு செல்கின்றனர். அந்த தீவு வினோதமானது, மிகச்சிறிய விலங்குகள் மிகப்பெரியதாகவும், மிகப்பெரிய விலங்குகள் மிகச்சிறியதாகவும் இருக்கின்றன. அங்கு சேனின் தாத்தா இருக்கிறார். அந்த தீவு 140 வருடங்களுக்கு கடலின் உள்ளேயும் 140 வருடங்களுக்கு கடலுக்கு மேலேயும் இருக்கிறது. ஹாக் அந்த தீவு இரண்டு நாட்களுக்குள் கடலில் மூழ்கப் போவதை கண்டுபிடிக்கிறார். அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா என்பதே கதை.

காதில் பூவை சுற்றிக் கொண்டு லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய பேன்டஸி படம் இது. அது 3Dல் படம் அள்ளுகிறது. குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

அவர்கள் அந்த தீவுக்குள் நுழைந்தவுடன் தென்படும் மிகச்சிறிய யானையை பார்த்ததும் பிரமிப்புக்குள் மூழ்குகிறோம். அது போல் மிகப்பெரிய பல்லி, மிகப்பெரிய தேனீ, மிகப்பெரிய எறும்பு எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

ராக் சேனுக்கு காதலியை கவர்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் போது அவரது மார்பில் ஒரு காயை எடுத்து அடிக்க அது எகிறி வந்து நம் முகத்தில் விழுவது போல் வருவது, தான் பலசாலி என்று கூறி மிகப்பெரிய பல்லியை முகத்தில் குத்தி பல்லியை கோவப்படுத்துவது என ராக் அசத்துகிறார். அது போல் சேனாக வரும் (Josh Hutcherson) நன்றாக நடித்துள்ளார். அந்த பைலட்டாக வரும் (Luis Guzman) காமெடியில் அசத்துகிறார். பைலட்டின் பெண்ணும் (Vanessa Hudgens) ஜொள்ளு விட வைக்கும் அளவுக்கு இருக்கிறார்.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் சென்றால் ரசித்து வரலாம். படமும் மிகச்சிறிய படம் தான் மொத்தமே 01.30 மணிநேரம் தான் ஓடுகிறது.

ஆரூர் மூனா செந்தில்


Thursday, February 9, 2012

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...



தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56வது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார். மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.

உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார். "என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்" என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது. தேவர் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம், 30ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ணதேவர், சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன், எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள்.

அண்ணா பேசுகையில் கூறியதாவது:_
"தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர். எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல்லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார். ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். "உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட்சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்" என்று பதில் அளித்தேன்."

இவ்வாறு அண்ணா கூறினார்.

தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், "தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரியத்துடன் சொல்லக்கூடியவர்" என்று குறிப்பிட்டு இருந்தார். சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், "நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்" என்று கூறியிருந்தார்.

முத்துராமலிங்கதேவர், 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் இந்திராணி அம்மாள். பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். 1927ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார். வெள்ளைக்காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார்.

அப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு "பிளாக்" கட்சியில் சேர்ந்தார். முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகு 1947ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1952ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1957ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939ம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்.

கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார். 1957 செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது.

அப்போது இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முத்துராமலிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர்.

தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார்.

33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : காலையில் ஆனந்த விகடன் வாங்கியதும் மாலையில் படித்துக் கொள்ளலாம் என அசட்டையாக இருந்து விட்டேன். ஆனால் அதன் இலவச இணைப்பான என் விகடனில் ஒரு பழகிய முகம் தெரிந்தது, ஆர்வமுடன் எடுத்துப் பார்த்தால் நம்ம கேபிள் சங்கர் அண்ணன். அவரைப் பற்றியும் அவரது வலைத்தளத்தைப் பற்றியும் இரண்டு பக்கத்திற்கு கட்டுரை வந்துள்ளது. மிகுந்த சந்தோஷம். வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே. மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியாக ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவைப் பற்றி போடப் போவதாகவும் அதில் அறிவிப்பு வந்துள்ளது. இனிமேல் நமது வலையுலக நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் விகடனின் அங்கீகாரம் என்பது கூடுதல் கொண்டாட்டம் தான் போங்கள். வலையுலகத்தினர் தங்களுடைய வலைப்பதிவு பற்றிய விவரங்கள் விகடனில் இடம் பெற வேண்டும் என விரும்பினால் தங்களுடைய சுய அறிமுகத்துடன் தங்களது வலைப்பதிவு பற்றிய விவரங்களை chennai@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் அவற்றில் சிறந்த வலைப்பதிவு, ஒவ்வொரு வாரமும் என் விகடன் சென்னை பதிப்பில் வெளியிடப்படும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...