சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, August 30, 2012

பஞ்சேந்திரியா - என்னை இருட்டடிப்பு செய்த கேபிள் சங்கர்

அது ஒண்ணுமில்லீங்க. பதிவர் சந்திப்பு முடியும் சமயம் விழா ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தனர். முதலில் ஏறிய நான் ஒரு போட்டோவில் மட்டுமே தெரிந்தேன். மற்றவர்களையும் அழைத்த போது வந்தவர்கள் மேடை முழுவதும் நிறைந்து நின்றனர்.

அப்போது கேபிள் அவர்கள் அவரது அருகில் நின்ற என்னை விட்டு விட்டு சற்று உயரத்தில் குறைந்த திடம்கொண்டு போராடு சீனுவை அவர் தோளில் கைபோட வாகாக எனக்கு முன் நிறுத்தி என்னை பின்னால் தள்ளினார்.

கேபிளின் பின்னாடி இருளோன்னு ஒரு முகம் தெரியுதில்லயா, அதுதான் நான்

நாம வேற ஏற்கனவே ரோஸ் கலராச்சா. விளக்கு வெளிச்சமும் படாமல் கேபிளின் பின்னால் ஒரு இருட்டு உருவம் நிற்பது போல் ஆகிவிட்டது. குரூப் போட்டோவை எல்லோரும் வெளியிடுகின்றனர். அதில் நான் இருக்கும் இடம் இருளோன்னு இருப்பதால் நானும் இருப்பது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

எனவே நான் அழகாக புகைப்படத்தில் தெரியக்கூடாது என்று கேபிள் அவர்கள் திட்டமிட்டு செய்திருக்கிறார். நான் வேறு அடுத்த விஜயகாந்த் மாதிரி இருக்கிறேன் என்று அனைவரும் பதிவர் மாநாட்டிற்கு வந்த அனைவரும் சொல்கின்றனர். யாராவது என் படத்தை பார்த்து விட்டு சினிமாவுக்கு அழைப்பு விடுக்க கூடாது என்றே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றேன்.

இதனை கண்டித்து கேபிளின் முன்பாக நானும் என் நண்பர்களும் உண்ணும்விரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(கேபிளே தன்னை கலாய்க்குமாறு கேட்டுக் கொண்டதால் இந்த சதிவேலையை பகிரங்கப்படுத்துகிறேன், அப்பாடா பத்த வச்சாச்சு)

--------------------------------

இந்த வார தத்துவம்


-------------------------------------------

நேற்று முன்தினம் மக்கள் தொலைக்காட்சியிலிருந்து போன் வந்தது. நான் படித்த புத்தகம் என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றும், நான் இருக்கும் இடத்திற்கே வந்து படப்பிடிப்பு நடத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

நாம பார்க்க தான் ஆஜாகுபானுவாக தெரிகிறோமே தவிர பயங்கர டக்கு பார்ட்டி. ஒரே சமயத்தில இருபது இட்லியை சாதாரணமாக முழுங்குகிறதும், பத்து நெல்மூட்டையை சட்டென வண்டியில் ஏற்றுவதும், கபடியில் சர்வசாதாரணமாக எதிராளியை தூக்கி வீசுவதும், களத்தில் முன்னாடி நின்று சண்டை செய்வதும் சாதாரணமான எனக்கு மேடையிலோ அல்லது காமிராவின் முன்நின்றோ பேசச் சொன்னால் பேஸ்மெண்ட், பில்டிங் ரெண்டுமே வீக்காகி ஆடும். கை கால் உதறும். நாக்கு வறண்டு போய் விடும். இதற்கு காரணம் நிறைய உண்டு. முதலாவது நான் குண்டு என்ற தாழ்வு மனப்பான்மை, அடுத்தது முன்பின் மேடையில் பேசி பழக்கமில்லாதது. எந்த கல்யாணத்திற்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்க மேடையேற சொன்னாலும் நாசூக்காக அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுவேன்.

நானும் மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு பேசச் சென்றேன். படப்பிடிப்பும் துவங்கியது. முதல் புத்தகத்திற்கான விளக்கவுரைக்கே நான்கைந்து கட் விழ இயக்குனர் என்னை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றார்.

அவரை சிரமப்படுத்த விரும்பாமல் இது ஒன்றே போதும். நான் தெளிவாக பேச வேண்டியதை மனப்பாடம் செய்த பிறகு உங்களுக்கு போன் செய்கிறேன், பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரும் மிகுந்த சந்தோஷத்துடன் அப்பாடா தொல்லை விட்டது என்று மனசுக்குள் மகிழ்ந்து கொண்டு சம்மதித்தார்.

நான் கண்டிப்பாக இது அரங்கேறாது. இப்படியே விட்டு விடுவார்கள் என்றே நினைத்தேன். ஆனால் நேற்று இரவு அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் எடிட் செய்த பிறகு பார்க்கும்படியாக இருக்கிறது என்று கூறினார். அவ்வளவு சிரமப்பட்டு நான் கொடுத்த விளக்கவுரை நாளை காலை 08.45 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

எந்த நேரமும் மீடியாவில் இருக்கும் நண்பர்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் மீடியாவுடன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நான் திரையில் தோன்றுவது அத்தைக்கு மீசை முளைத்தால் மட்டுமே சாத்தியம்.

பார்த்து விட்டு குறையையும் நிறையையும் என்னுடன் பகிர்நது கொள்ளுங்கள்.

--------------------------------------

என்னுடைய மினியேச்சர்


-----------------------------------------

நண்பர்களே தெற்கு ரயில்வேயில் கலாசி வேலைக்கு ஆள் எடுக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. மத்திய அரசு வேலைக்கு மிகசிறந்த வாய்ப்பு. கடைசி நாள் 25.09.2012. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பியுங்கள். சந்தேகமுள்ளவர்கள் எந்த வித தயக்கமுமின்றி என்னை தொடர்பு கொள்ளலாம். என்னால் முடிந்த விளக்கத்தை தங்களுக்கு அளிக்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, August 28, 2012

பதிவர் சந்திப்பும் வெள்ளைச் சட்டையும்


பதிவர் சந்திப்பு பற்றி அனைவரும் பதிவெழுதி பொங்கலிட்டு விட்டார்கள். நாம் இனிமேல் சொல்ல புதுசா என்ன இருக்கு. ஆனா ஒன்னு இருக்கு. யாருக்கும் தெரியாமல் என் பொருளை காப்பாற்ற நான் செய்த தில்லாலங்கடி தான்.

பதிவர் சந்திப்புக்கு என்னிடமிருந்த கதர் வெள்ளைச் சட்டையை போட்டுக் கொண்டு போவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் பாருங்க, முதல் நாள் இரவு முழுவதும் கடும் மழை பெய்து சென்னையில் எங்கும் சேறும் சகதியுமாகி விட்டது.

சட்டையை போட்டுக் கொண்டு அம்பத்தூர் எஸ்டேட் வழியாக லூகாஸ் செல்லும் சாலையில் நாம் என்னதான் பிரயத்தனப்பட்டாலும் எவனாவது டபக்கென்று சாலையில் இருக்கும் சேற்றை எடுத்து சட்டையில் கோலம் போட்டு விடுவான்.

என் வீட்டம்மா வெள்ளைச் சட்டை வேணாம் என்று கண்டிப்பாக கூறினார். பிறகு அவரை சமாதானப்படுத்தி வெள்ளைச் சட்டையை போட்டு செல்வது போலவே திரும்ப வருவேன் என்று உறுதியளித்து சமாதானப்படுத்தினேன். ஏனென்றால் துணி துவைப்பது அவர் தானே.

காலையில் 8 மணிக்கு மழை வேறு பெய்து கொண்டிருந்தது. கதர் கலர் வேஷ்டி, வெள்ளை சட்டை, நெற்றியில் பட்டை, கூலிங்கிளாஸ், ஹெல்மெட்டுடன் ரெயின் கோட்டையும் போட்டுக் கொண்டு மேல் பாதியில் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கைப் போலவும், கீழ்ப்பாதியில் சபரிமலைக்கு மாலை போட்ட பக்தனைப் போலவும் காட்சியளித்தேன்.

தஞ்சை குமணன் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வீட்டிற்கு வந்திருந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு ஜெமினி சர்க்கஸ்ஸில் சாகசம் செய்யும் பைக்காரனைப் போல சாகசங்கள் செய்து ஒரு வழியாக பதிவர் சந்திப்பு திருவிழா நடக்கும் மண்டபத்தை அடைந்தேன்.

அப்பாடா ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்ற இறுமாப்பை அடைந்தேன். வெளியிலேயே வேஷத்தை கலைத்து விட்டு காவி உடை தரித்த நல்லவனைப் போல மண்டபத்தில் உள்ளே நுழைந்தேன். நாற்காலியில் அமரும் போது கூட பார்த்து பார்த்து அமர வேண்டியதாயிற்று. என்னா கஷ்டம்டா.

பதிவர் சந்திப்பு சிறப்பாக துவங்கி நடைபெற்று மதிய இடைவேளை வந்தது. மற்றவர்கள் உணவருந்திய பின்பே விழா ஏற்பாட்டாளார்கள் சாப்பிட வேண்டுமென கலந்தாய்வில் கேட்டுக் கொண்டதால் கடைசி பந்தியில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம்.

இலை வந்தவுடன் தண்ணீர் தெளிக்க வந்தவர் தண்ணியை சற்று வேகமாக தெளிக்க பாதி தண்ணீர் பளிச்சென்று சட்டையில் விழுந்தது. விதி விளையாட துவங்குகிறதோ என்ற பதைபதைப்புடன் லேசாக முறைத்தேன். ஹி ஹி ஹி சாரி என்று சொல்லிவிட்டு கடந்து சென்றார்.

பறிமாறியவர்களில் ஒருவர் ஐஸ்கிரீம் டம்ளரில் கிரேப் ஜூஸை வைத்து விட்டு சென்றார். பின்னாடியே சாம்பார் சாதம் பரிமாறியவர் என் இலைக்கு பரிமாறும் போது சிறிது சாதம் டம்பளரில் உள்ள கிரேப் ஜூஸில் விழுந்தது. கிரேப் ஜூஸ் சில்லென்று சட்டையில் தெளித்தது. விதி மீண்டும் சிரித்தது.

அதன் பிறகு பரிமாற வந்தவர்களை முன்பே மெதுவாக பறிமாறும்படி எச்சரித்து அரைகுறையுடனே சாப்பிட்டு எழுந்தேன். சட்டையை சுத்தம் செய்து காய்ந்ததும் கறை தெரியவில்லை. நிம்மதியாக இருந்தது. இடைவேளைக்கு பின் மீண்டும் துவங்கியது திருவிழா.

பட்டுக்கோட்டை பிரபாகர் வந்ததும் விழா களை கட்ட துவங்கியது. கடைசி நேரத்தில் போண்டா வந்தது. நான் இப்பொழுது பரிமாற துவங்க வேண்டாம். பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பேசி முடித்ததும் போண்டாவை கொடுக்கலாம் என்று கூறினேன். அதற்கு மறுத்த பதிவு நண்பர் ஒருவர் போண்டா சூடு ஆறிவிடும். நாம் தட்டில் வைத்து அனைவரிடமும் சென்று கொடுப்போம் என்றார்.

நானே சட்டையில் சட்னி பட்டு விடும் என்று பயந்து போண்டாவை வேண்டாம் என்று ஒதுக்கினால் விதி தேடி வந்து தள்ளுதே என்று புலம்பியபடியே தட்டில் வைத்து கொடுக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் போண்டா கொடுக்கும் இடத்தில் கூட்டம் சேர ஆரம்பிக்கவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சுரேகா அவர்கள் அனைவரையும் அமரும்படியும் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசியதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அழைக்க அனைவருக்கும் கொடுத்து மட்டுமே கொண்டிருந்த நான் வழிந்து கொண்டே அமர வந்தேன்.

என்னை போண்டா கொடுக்கும்படி பணித்த நண்பர் பக்கத்தில் அமர்ந்து சிரித்துக் கொண்டே போண்டா தின்று கொண்டிருந்தார். என் கெரகம் அப்படினு நினைத்துக் கொண்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தேன்.

விழா இனிதே நிறைவடைந்தது. வெற்றிகரமாக நடந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. முடிந்து செல்லும் போது முக்கால்வாசி நண்பர்கள் நடத்திக் காட்டியதற்கு நன்றி தெரிவித்து சென்றனர். நக்கீரனும் கிளம்பி விட்டார். அப்பாடா என்று அகமகிழ்ந்தேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியை நடத்திய நண்பர்கள் மற்றும் சில சீனியர் பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி சிறு மீட்டிங் போட்டோம். அதுவும் முடிந்து 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். வரும்வழியெங்கும் சட்டையில் எதுவும் படக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒட்டி வந்தேன்.

வீட்டின் அருகில் வந்ததும் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்தேன். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது பாழாய்ப்போன ஆப்பாயில் வரும் வரை. ஆர்வத்தில் ஆப்பாயிலை எடுத்து வாயில் போட முயற்சிக்கும் போது வழியில் உடைந்து சட்டையில் மஞ்சள் கரு கொட்டியது.

இதன் பிறகு வீட்டில் நடந்ததை சொன்னால் உலகம் என்னை வெளியில புலி வீட்ல எலி என்று பரிகாசம் செய்து கைகொட்டி சிரிக்கும். தலையில் வாங்கிய அடி புடைத்துக் கொண்டு வலித்தது. சத்தியமாக விதி வலியது.

ஆரூர் மூனா செந்தில்

Saturday, August 25, 2012

குடிக்கணுமா. ஒரு மெயில், அனைத்தும் ரெடி.




மக்களே சென்னையில் பதிவர்கள் யாருக்காவது இன்றிரவு குடிக்க வேண்டுமென்றால் என்னை மெயிலில் தொடர்பு கொள்க. இலவசமாக ஊத்தித் தரப்படும். மு...........கா பயலுகளுக்கும் உண்டு. பாகுபாடு கிடையாது. ஒரு மெயில், ஓஹோன்னு குடி.






ஆரூர் மூனா செந்தில்

Thursday, August 23, 2012

பஞ்சேந்திரியா - சாம்பிள் பிரியாணியும் பதிவர் சந்திப்புக்கான முன்பதிவும்



பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் அப்ரெண்டிஸ் படிப்பதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இது ஐடிஐ மற்றும் அப்ரெண்டிஸ் இரண்டும் சேர்ந்த படிப்பு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு. குறைந்தபட்ச வயது 15. விண்ணப்பக் கட்டணம் ரூ40. SC/ST க்கு கட்டணம் ஏதுமில்லை.

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அப்ரெண்டிஸ் முடித்தால் இரண்டு வருடத்தில் ரயில்வேயில் குறைந்தபட்சம் கலாஸி வேலை வழங்கப்பட்டு விடும். பட்டப்படிப்பு முடித்தவர்களே அரசுவேலைக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற தலையால் தண்ணி (இதிலும் தண்ணியா) குடித்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் சரியான வயதில் உங்களது பசங்களை இதில் சேர்த்து விட்டால் அவனுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்க.

அரசு வேலையை பற்றிய விவரங்கள் குறைவா பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்கின்றனர். நானும் என் குடும்பத்தில் முதல் தலைமுறை ஆளாக ரயில்வே வேலையில் சேர்ந்தவன். எனக்கு கிடைத்த விவரம் அறியாத மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று தான் பகிர்ந்து கொண்டுள்ளேன். இதில் வேறு எந்த வணிக நோக்கமும் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்க. என்னால் இயன்ற விவரங்களை தருகிறேன்.

-----------------------------------------

சத்தியமா இவர் பதிவர் சந்திப்புக்கு வரமாட்டாருங்க சகோ


-----------------------------------

பெரம்பூர் கேரேஜ் மற்றும் லோகோ நுழைவாயில் முன்பாக 50 வருடங்களுக்கு மேலாக இருந்த டீக்கடைகள், பெட்டிக்கடைகள், இட்லிக்கடைகள் மற்றும் கேண்டீன்கள் ஆகியவைகளை இடித்து தள்ளிவிட்டனர். இடம் ரயில்வே இடமாக இருந்தாலும் பல வருடங்களை கடை வைத்து பிழைப்பு நடத்திய ஏழைகள் அவர்கள்.

இத்தனை நாட்களாக கோர்ட்டில் ஸ்டே ஆர்டர்கள் இருந்ததால் வெயிட் பண்ணிய ரயில்வே நிர்வாகம் ஸ்டே முடிந்த அன்றே அனைத்து கடைகளையும் இடித்து தள்ளி விட்டது. ஊழியர்கள் வேலை முடிந்ததும் டீ குடிக்க வெளியில் வரும் தொழிலாளர்கள் இப்பொழுது பல கிமீ தள்ளி சென்று தான் டீ கூட குடிக்க முடிகிறது.

சட்டப்படி பார்த்தால் ரயில்வே இடம் தான். அவர்கள் காலி பண்ணியதும் சரியானது தான். ஆனால் தொழிலாளர்களின் வசதியையும், ஏழை மக்கள் அன்றாடம் நூறு, இருநூறு சம்பாதித்ததில் மண்ணை அள்ளி போட்டு விட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ரயில்வே யூனியன்களும் கேட் மீட்டிங்குகளை நடத்தி வருகின்றனர்.

என்ன நடக்க போகிறதோ காலத்திற்கே வெளிச்சம்.

-------------------------------------

ராங் கனக்சன்


-----------------------------------

சாம்பிள் வாங்கி சாப்பிடுவது, வடிவேலு காமெடியிலும் மயில்சாமி காமெடியிலும் சூப்பர்ஹிட்டானது. அது போல் இன்றும் எனக்கு நடந்தது. நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன். எங்களது கேங்கில் இருக்கும் ஒருவர் இந்த மாதத்துடன் ரிட்டையராக இருக்கிறார்.

ரிட்டையர்மெண்ட் பார்ட்டியாக சக தொழிலாளிகள் ஒவ்வொருவருக்கும் குவாட்டரும் கோழிபிரியாணி தருவதும் வழக்கம். ஏற்கனவே பிரியாணிக்கு ஒரு பார்சல் ரூ70 வீதம் ஒரு ஆளிடம் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தனர்.

நேற்று நான் வேலை முடிந்து வரும் போது வில்லிவாக்கத்தில் ஒரு கடையில் ஆப் பிரியாணி வாங்கினால் ஆப் பிரியாணி இலவசம் என்று போர்டு மாட்டியிருந்தது. உடனே உள்ளே சென்று ஆப் பிரியாணி சாப்பிட்டு விட்டு ஆப் பிரியாணி பார்சல் வாங்கி வந்தேன். அதனை எங்களது சக ஊழியரிடம் தெரிவித்த போது உடனடியாக அதனையே நாம் வாங்கி விடுவோம் என்று சொல்லி என்னையும் அந்த கடைக்கு அழைத்து வந்தார்.

140 பிரியாணிக்கு பணம் கொடுத்து விட்டு சகஊழியர் அவர்களிடம் ஏம்ப்பா இவ்வளவு பிரியாணிக்கு காசு கொடுத்திருக்கோம் சாம்பிள் கொடுக்கமாட்டீங்களா என்று கேட்டார். எனக்கு பயங்கர சிரிப்பாக வந்தது. அவர் முன் காட்ட முடியாதில்லையா, அடக்கிக் கொண்டு அவர்கள் கொண்டு வந்த ஆப் (எப்பா எவ்வளோ ஆப், சத்தியமா இது பிரியாணி மட்டும் தாங்க, வேற ஆப் இல்லீங்க)பிரியாணியை சாப்பிட்டு வந்தேன்.

சாம்பிள் பிரியாணி கூட ருசியாகத்தான் இருந்தது.

----------------------------------------

எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்கப்பா


---------------------------------------

பதிவர் சந்திப்புக்காக வெளியூரிலிருந்து வரும் தோழர்கள் முன்பே தொடர்பு கொண்டு சொன்னால் தான் நன்றாக இருக்கும். இதுவரை நண்டு நொரண்டு, சிபி செந்தில் குமார், திண்டுக்கல் தனபாலன், சங்கவி, நக்கீரன் ஆகியோர் மட்டுமே என்னைத் தொடர்பு கொண்டு அறைக்கான தேவையை உறுதிப்படுத்தியுள்ளனர். வேறு யாராவது சனி இரவு தங்க அறை வேண்டியிருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும். அப்பொழுது தான் அறை முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

சர்ச்சைகள் பல இருந்தாலும் பதிவர் சந்திப்பு இனிதாக நடைபெறும்

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, August 21, 2012

பதிவர் சந்திப்பை குலைக்க நடக்கும் சதிகள்

மிகப்பெரிய பதிவர் சந்திப்பு பல வருடங்களாக சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஒரு சிலரின் ஒத்துழைப்பின்மையால் கைவிடப்பட்டே வந்தது. ஐயா சென்னைப் பித்தன், புலவர் ராமானுஜம், மின்னல் வரிகள் கணேஷ் மற்றும் கவிஞர் மதுமதி ஆகியோரால் மிகச்சிறிய அளவில் பதிவர் சந்திப்பு என்று துவங்கப்பட்டு மற்ற பதிவர்களால் கைதூக்கப்பட்டு மிகப் பெரிய பதிவர் சந்திப்புக்கு அடிக்கோலிடப்பட்டது.

பொதுவாக ஒரு விஷயம் நல்ல முறையில் நடக்க ஆரம்பித்தால் அது உடனடியாக சில கருங்காலிகளால் திட்டமிடப்பட்ட பொய்ப்பிரச்சாரத்தினால் அதன் வீரியத்தை இழந்து விடுவதுண்டு.

இந்த சந்திப்புக்கு சில கருங்காலிகள் திருஷ்டிப்பொட்டு வைக்க முயன்றிருக்கிறார்கள். நண்பர்களே நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் பதிவர் சந்திப்பில் குழப்பம் ஏற்படுத்த உங்களால் முடியாது.

நானும் நக்கீரனும் குடிக்கிறோம். குடியைப் பற்றி எங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறோம் என்பது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். நானோ அல்லது என் நண்பர்களோ குடித்து விட்டு பதிவர் சந்திப்புக்கு வந்ததை பார்த்ததுண்டா?

இரவு தனியறையில் குடித்து விட்டு யாருக்கும் இடைஞ்சல் செய்யாமல் இருப்பவன் நல்லவனா? நான் பெரியவன் என் குழு பெரியது என்று பொது இடத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பேசி கெடுக்க நினைக்கும் நீங்கள் நல்லவர்களா?

ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னையும் என் நண்பரையும் தாக்கி பதிவிட்டு இருக்கிறார். அவர் செய்தது தவறு என்று நான் குற்றம் சாட்டுகிறேன். அந்த உரையாடலில் எந்த சம்மந்தமும் இல்லாமல் அவர் உன் குழுவை சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்.

பதிவர் சந்திப்பை குலைக்கும் வகையில் பேசி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அது வெற்றி பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி முகமது ஆஷிக் போன பதிவில் சம்மந்தம் இல்லாமல் நீ பதிவிட்டு இருக்கும் போதே நினைத்தேன். உங்களது அடுத்த டார்கெட் நானாக இருப்பேன் என்று. செயல்படுத்தி விட்டாய் நன்றி.

ஆரூர் மூனா செந்தில்

Thursday, August 16, 2012

என் விகடனில் நம்ம நாய் நக்ஸ் நக்கீரன்

எனதருமை மக்களே, நம்ம நக்கீரன் அவர்கள் என் விகடன் பாண்டி பகுதியிலிருந்து வெளியிடப்படும் முதல் இணைய என் விகடன் பகுதியில் வலையோசை பகுதியில் வந்திருக்கிறார். இந்த இணைப்பை சொடுக்கி அனைவரும் பார்த்து மகிழுங்கள்...




நக்கீரன் அவர்களின் பதிவு


அண்ணன் நாய் நக்ஸ் நக்கீரன் வாழ்க, வாழ்க.
(இத செய்யலைனா எனக்கு போன் போடுறதா சொல்லியிருக்காருங்க அதான்).


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இந்த பதிவுக்கு ஒட்டு போடாமலும் மற்றும் பின்னூட்டமிடாமலும் இருக்கும் நம் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நக்கீரன் போன் செய்து பேசுவதாக சொல்லியிருக்கிறார்.


Wednesday, August 15, 2012

அட்டக்கத்தி - சினிமா விமர்சனம்


படத்தின் எதிர்ப்பார்ப்புக்கு சான்று அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் இன்று காலைக்காட்சி ஹவுஸ்புல். எங்கு திரும்பினாலும் படத்தின் விளம்பரங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டதே இதற்கு காரணம். பெரிய நடிகர்களின் படங்களே ராக்கி திரையரங்கில் பாதி தான் நிறையும் காலத்தில் விடுமுறை தினம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அரங்கு நிறைந்தது எனக்கு பயங்கர ஆச்சரியத்தை அளித்தது.

இவ்வளவு எதிர்பார்ப்பையும் படம் நிறைவேற்றியிருக்கிறதா என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும். படத்தில் கதை கத்தரிக்காய், மனதை உருக்கும் சென்டிமெண்ட், ஆக்சன் காட்சிகள், சமூகத்திற்கு தேவையான கருத்துகள், அதிர்ச்சியான க்ளைமாக்ஸ் என்று எந்த வெங்காயமும் கிடையாது. அட்டக்கத்தி என்ற பெயர் காரணம் என்னவென்றால் உதார் விடும் வெத்து பசங்களுக்கு வடசென்னை பகுதியில் வைக்கப்படும் பட்டப்பெயர்.

தேடிப்பார்த்து கதையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாயகன் (தினேஷ்) சென்னையின் புறநகரில் வசித்து வருகிறான். அவனது படிப்புக்காக சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது. படிப்பை முடித்து வேலையில் செட்டிலாவதற்குள் 7 அல்லது 8 ஒரு தலை காதல்களை சந்தித்து எல்லாவற்றிலும் தோல்வியடைந்து கடைசியாக காதலித்து கல்யாணம் செய்கிறார். அவ்வளவு தான்.

படத்தின் கதை விவாதத்தின் போது கலந்து கொண்ட உதவி இயக்குனர்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விகளை சொல்ல அதனை இயக்குனர் மேம்படுத்தி ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வந்து அதனை படத்தில் சுவைபட சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒருவனது வாழ்க்கையில் இவ்வளவு காதல் சொதப்பல்கள் இருக்காது. ஒன்னு ரெண்டு சொதப்பல்களிலேயே ஒருவனுக்கு ஞானம் பிறந்து விடும்.

தினேஷ் படத்தின் நாயகனாக வருகிறார். புறநகரில் ருந்து சென்னைக்கு படிக்க வரும் வாலிபனை இயல்பாக கண் முன் நிறுத்துகிறார். அவரது ஊரில் அவரைப் போலவே நான்கு வெட்டி நண்பர்கள். அவர்கள் அனைவரின் லட்சியம் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வது தான். பஸ்ஸ்டாண்டில் ஸ்டைலாய் ட்ரெஸ் செய்து கொண்டு நிற்பது, பஸ்ஸில் வரும் பெண்களின் பார்வைக்காக கையில் உள்ள புக்கைக் கொடுத்துவிட்டு புட்போர்ட் அடிப்பது, ஏரியாவிட்டு ஏரியா போய் அடி வாங்கிக் கொண்டு அழுவது, நிறைய தோல்விகள் கொடுத்த பாடங்களால் காதலை விட்டு விலகி கல்லூரியில் சேர்ந்து “ரூட்டு தலையாகி” அடிதடி ஹீரோயிசமாய் அலையும் போது, கராத்தே மாஸ்டரிடம் சரிமாத்து வாங்கி வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வரும் போது, மச்சான் அமுதாடா என்று சொன்னவுடன் சட்டென திரும்பி பனியனால் முகம் துடைத்துக் கொண்டு சிரிப்பது என தினேஷ் என் கல்லூரி கால நண்பனாக அசத்தியிருக்கிறார்.

படத்தில் நாயகி என்று யாருமில்லை. நாயகி போல் வந்து தினேஷூக்கு அல்வா கொடுப்பவராக நந்திதா. புறநகருக்கு என்று ஒருனி ஸ்லாங் இருக்கிறது. சென்னைத் தமிழை விட சற்று வித்தியாசமாக பேசப்படும் தமிழ். அந்த ஸ்லாங்கில் இயல்பாக பேசி அசத்தியிருக்கிறார். பள்ளி மாணவியாக தினேஷை கொஞ்ச காலம் அலையவிட்டு கடிதம் கொடுக்கவரும் போது அண்ணா என்று சொல்லும் போது தியேட்டர் அதிர்கிறது. கல்லூரிக்கு வந்ததும் சற்று மெச்சூரிட்டி வந்து தினேஷூடன் இயல்பாக பழகும் போதும் கவர்கிறார்.

படத்தில் நாயகிகளாக வருபவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் மனதை கவர்கிறார்கள். அதுவும் அந்த இரட்டை நாயகிகள், தினேஷ் அவர்களிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்னும் போது அவர்கள் அம்பத்தூர் என்றதும் தியேட்டரில் எழுந்த விசில் அடங்க ஐந்து நிமிடம் எடுத்தது.

அதிசயமாக ஒரு புதிய இயக்குனர் படத்தில் புதிய இசையமைப்பாளரின் பாடல் நன்றாக இருக்கிறது. அதுவும் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது. எனக்கு ஆடி போனா ஆவணி பாடல் மிகவும் பிடித்திருந்தது.

என்னை இந்தப்படம் மிகவும் கவர்ந்ததற்கு காரணம் நான் சென்னையில் ஐசிஎப்பில் படித்தவன். என்னுடன் படித்த முக்கால்வாசிப் பேர் திருவள்ளூர் முதல் பட்டாபிராம் வரையுள்ள பகுதிகளிலிருந்து வருபவர்கள் தான். நான் ஹாஸ்டலில் தங்கியிருந்ததால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களின் ஏரியாவுக்கு செல்வேன். படத்தின் காட்சிகள் அனைத்தும் அந்தப் பகுதிகளிலேயே படமாக்கப்பட்டிருக்கின்றன என்பதால் தான். என் நண்பர்கள் கல்லூரிக்கு வரும் போதும் இதே போல் அரட்டையடித்துக் கொண்டு ரயிலில் வரும் பெண்ணை ஒரு தலையாக காதலித்தும் வருவார்கள். அதில் சதீஷ் என்பவன் தான் ரூட்தலை. அதை அப்படியே படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

படத்தின் தனித்துவமே இயல்பான காதல் காட்சிகள் காதல் சொதப்பல் காட்சிகள் தான். சண்டை என்ற பெயரில் ஒரே குத்தில் 50 பேரை அடிக்க முயற்சிக்காமல் இருந்ததற்கு பூங்கொத்தே கொடுக்கலாம். தினேஷின் அப்பாவாக வருபவர் நான் வீரப்பரம்பரை என்று கெத்து காட்டி வாழை மரத்தை வெட்டுவதும், அவர் போதையில் தள்ளாடி சாப்பிடாமல் இருக்கும் போது மனைவி ஊட்டி விடுவதும் இயல்பாக இருக்கிறது.

குறை என்று சொல்லி நம் அறிவுஜீவித்தனத்தை காட்டுவதை விட இது போன்ற நல்ல சின்ன பட்ஜெட் படங்கள் வர வேண்டும் என்று வாழ்த்துவோம். நன்றி.

மொத்தத்தில் அட்டக்கத்தி படம் பார்க்க வேண்டிய படம் தான்.

ஆரூர் மூனா செந்தில்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...