சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, February 15, 2013

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்


நான் படித்த பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.எனது போதி மரம். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன். கல்வியாண்டு 1990 - 1997 வரை. திருவாரூரில் கமலாலயம் தென்கரையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் ஆண்டுகாலம் நூறாண்டுக்கும் மேல். பள்ளி துவங்கிய போது பள்ளியின் பெயர் போர்டு ஹை ஸ்கூல். எனது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், முரசொலி மாறன், எழுத்தாளர் சின்னக்குத்தூசி, தோழர் தியாகு ஆகியோர். மற்றபடி சொல்லிக்கொள்வது போல் நான் தான் (போதும்டா உன் சுயபுராணம், ஸ்கூலைப் பத்தி மட்டும் சொல்லு).


எனக்கு வீடு வடக்கு வீதியில் இருந்தது. அங்கிருந்து வெட்டவாசப்படி வழியாக பெரிய கோயிலின் உள் நுழைந்து கமலாம்பாள் சன்னதி வழியாக மேலவீதி நுழைவாயிலின் வழியாக வெளி வந்து கமலாலய படிக்கட்டின் வழியாக நடந்து சென்று முராசன்ஸ் பிள்ளையார் சன்னதியில் மேல் ஏறி பள்ளிக்கு செல்வோம். ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் இது நடந்தது. எட்டாம் வகுப்பு தொடங்கியதும் என் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அதன் பள்ளி இறுதி வகுப்பு முடியும் வரை சைக்கிள் பயணம் தான்.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியர் திரு. மகாதேவன் அவர்கள். அவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு அது மணியடிக்கும் முன் வரும் மகாதேவன். அதாவது பள்ளி துவங்கும் நேரம் காலை மணி 10, ஆனால் அவர் 9.30 மணிக்கே வகுப்புக்கு வந்து பாடம் எடுப்பார். பள்ளி மைதானத்தில் பே பே, கிரிக்கெட் மட்டும் தான் விளையாட முடியும். மற்ற பள்ளிகளுக்குரிய எந்த விளையாட்டுகளும் அதாவது வாலிபால், பேஸ்கட் பால் மற்றும் எந்த விளையாட்டுகளும் எங்களுக்கு கி்டையாது. பெரிய கோயிலின் வெளி பிரகாரத்தில் தான் பள்ளி இல்லாத நாட்களில் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த வயதிற்குரிய குறும்பு அவ்வளவே.


ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்புகளில் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் P.G. சுப்பிரமணியன், அந்த காலக்கட்டம் தான் பெண்கள் பற்றிய ஈர்ப்புகளும் அவர்களைப் பற்றிய ரகசிய பேச்சுகளும் துவங்கிய காலம், சைட் அடிப்பதில் துவங்கி பலான புத்தகம் படிப்பது வரை அறிந்து கொண்ட காலம். அப்பொழுது செங்கம் தியேட்டரில் ஜாக்கிசானின் ஆபரேசன் காண்டர் என்றொரு படம் வந்தது. அந்தப்படத்தில் ஒரு நொடிக்காட்சியில் ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் காண்பிக்கிறார்கள் என்று முதல் நாள் தனது அண்ணனுடன் சென்று பார்த்து வந்த சேத்தமடையான் சொன்னான். பிறகென்ன வகுப்பில் இருந்த தினேஷ், பிரகாஷ் மற்றும் நான் ஆகியோர் ஒரு திட்டமிட்டோம்.

முதல் முறையாக ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் திரையில் பார்க்க ஆசைப்பட்டதால் வந்த வினை இது. அப்பொழுது 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்ததால் காலையில் பள்ளி விடுமுறை, மதியம் மட்டுமே பள்ளி உண்டு. மறுநாள் வீட்டில் காலை எங்கள் டியூசன் ஆசிரியரின் வீட்டில் ஆண்டு விழாவுக்காக பெஞ்சு நகர்த்த வேண்டியிருக்கிறது. அதனால் நான் டியூசன் சென்று அதனை முடித்து விட்டு 1மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்கிறேன் என்று என் அம்மாவிடம் கூறி விட்டு நாங்கள் மூவரும் சினிமாவுக்கு 11மணி காட்சிக்கு சென்று விட்டோம். படம் துவங்கியவுடன் கரண்ட் போய் விட்டது.

அந்த தியேட்டரில் ஜெனரேட்டர் கிடையாது. வேறு வழி அந்த சீனை பார்த்தே ஆக வேண்டுமென்று தியேட்டரிலேயே அமர்ந்திருந்தோம். 12.30 க்கு தான் கரண்ட் வந்தது. அந்த சீன் வரும் வரை போக கூடாது என்று முடிவு செய்து அமர்ந்து விட்டோம். படம் முடியும் போது மணி 2. வீட்டிற்கு வந்தால் அம்மா மட்டும் தான் இருந்தார். உள்ளே சென்றதும் முதல் பளார் விழுந்தது, எங்க பொறுக்கிட்டு வந்த என்றார். என்னம்மா ஆச்சு என்றேன். இரண்டாவது பளார். ரைட்டு எஸ்கேப்பாகனும் என்று நினைத்து பள்ளிக்கு நேரமாகி விட்டது கிளம்பனும் என்று கிளம்பி விட்டேன்.

பள்ளிக்கு சென்றால் என் வகுப்பாசிரியர் வகுப்பில் அழுது கொண்டிருந்தார். நான் உள்ளே சென்றதும் நான் உன்னை என் வீட்டிற்கு வர சொன்னேனா என்றார். இல்லை என்று சொல்வதற்கு முன் அவரிமிருந்து பளார் விழுந்தது. அவ்வளவு தான் அரைமணிநேரத்திற்கு என்னை சாத்திவிட்டார். எனது பெஞ்ச்சை பார்த்தேன் என்னுடன் படம் பார்த்த தினேஷூம் பிரகாஷூம் சிரித்து கொண்டிருந்தனர். அன்று முழுவதும் என்னை முட்டி போட சொல்லி விட்டார். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. என் அம்மா எதற்கு அடித்தார். வகுப்பாசிரியர் எதற்கு அடித்தார். என்னுடன் படம் பார்தத இருவரும் எப்படி தப்பித்தனர்.

மாலை வரை முட்டி போட்டு அமர்ந்திருந்தேன். மண்டைக்குள் குடைந்தது காரணம் என்ன என்று. பள்ளி முடிந்ததும் வெளியில் வந்து வகுப்பாசிரியரின் பக்கத்து வீட்டுக்காரனும் என் வகுப்பு தோழனுமான ராமலிங்கத்திடம் கேட்டேன். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. நான் அம்மாவிடம் 1மணிக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தியேட்டரில் அமர்ந்திருந்ததால் போகவில்லை.


01.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து சாப்பிட வந்த என் அப்பாவிடம் அம்மா என்னைக் காணும் என்று சொல்லி அழ அப்பா என் ஆசிரியரின் வீட்டிற்கு 10 பேருடன் சென்று என் செய்தாய் என் மகனை என்று மிரட்டியிருக்கிறார். பயந்து போன ஆசிரியர் தான் அழைக்கவேயில்லை என்பதை சொல்லியிருக்கிறார். அத்துடன் என் அப்பா அலுவலகம் சென்று விட்டிருக்கிறார். இதுவரை இருவரிடம் வாங்கியாகிவிட்டது. அடுத்தது அப்பா தான். ஆனால் அவர் காட்டுத்தனமாக அடிப்பாரே என்று பயம் வேறு. சாயந்திரம் முழுவதும் பயந்து கொண்டே வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். என் அப்பா வந்தார்...

எங்கள் வீ்ட்டில் ஒரு மரக்கட்டில் உண்டு. வீட்டின் கூடத்தின் மூலையில் அது இருக்கும். என்னை தரதரவென்று இழுத்து கட்டிலின் கீழ் தள்ளி விட்டார். அவர் கையில் கிரிக்கெட் பேட். கட்டிலின் கீழிருந்து வெளியேற அனைத்து பக்கமும் அடைபட்டிருந்தது. கட்டிலின் கீழ் என்னை குறி வைக்காமல் அவர் பாட்டுக்கு பேட்டை வீசுகிறார். நான் எந்த பக்கம் சென்றாலும் அடி விழுகிறது. அரைமணிநேரம் அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். பாவம் அவருக்கு கை வலித்திருக்கும் போல.

உடம்பு முழுக்க காயம் வீட்டிலும் யாரும் மருந்து போடக்கூட தயாரில்லை. இரவெல்லாம் அழுது கொண்டே யோசித்தேன். எப்படிடா அப்பாவுக்கு கட்டிலின் அடியில் விட்டு விளாச யோசனை வந்தது. நாமோ அவர் எப்படி அடித்தாலும் இரண்டாவது அடிக்குள் வீட்டை விட்டு வெளியில் ஒடி விடலாம் யோசித்து வைத்திருந்தோமே. கரெக்டாக கட்டிலின் கீழ் லாக் ஆகி விட்டோமே என்று. வீட்டில் அனைவரும் என்னுடன் சரியாக பேச 15 நாட்கள் ஆனது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் நான் தான் வகுப்புத் தலைவன். அது வரை எங்கள் பள்ளியில் Sports Activities என்பதே இல்லாமல் இருந்தது. திரு. இளங்கோவன் அவர்கள் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வந்து சேர்ந்தார். அதன் பிறகு தான் முதல்முறையாக பள்ளிக்கென ஹாக்கி டீம் உருவாக்கப்பட்டது. நான் தான் ஜூனியர், சீனீயர் இரண்டு டீம்களிலும் கோல் கீப்பர். ஏனென்றால் வயது இரண்டுக்கும் சரியாக இருந்தது, உருவமும் கடாமுடாவாக இருந்தது. அது வரை ஹாக்கியை டிவியில் மட்டுமே பார்த்திருந்த நாங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம்.

டீமில் இருந்த அனைவரும் புதியவர்கள். அதுவரை விடிந்தே எழுந்த நான் ஆசிரியரின் கண்டிப்பால் காலை 4 மணிக்கே எழுந்து திருவாரூர் தெப்பக்குளமான கமலாலயத்தை சுற்றி ஒட ஆரம்பித்தேன். குழுவில் இருந்த அனைவரும் தான். ஒரு முறை சுற்றவே 1.5 கி.மீ வரும். ஆறு ரவுண்டு கண்டிப்பாக ஒடவேண்டும். அதன் பிறகு அங்கிருந்து நேராக திரு.வி.க கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்று பயிற்சி. 11 மணி வரை விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தால் சராசரியாக நான் முப்பது இட்லி தின்பேன். இப்பொழுதெல்லாம் நாலுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. எல்லாம் காலம்.

நாங்கள் விளையாட்டு குழுவில் இருந்ததால் பள்ளிக்கு மதியம் அரை நாள் சென்றால் போதும். மூன்று மாதம் பயிற்சிக்கு பிறகு டிவிசனல் லெவல் போட்டிகள் துவங்கியது. ஜூனியர் அணிக்கான போட்டி எங்கள் பள்ளி அணிக்கு எதிராக மன்னார்குடி பின்லே பள்ளி அணி களமிறங்கியது. 0-1 என்று தோல்வி. சில நாட்களுக்கு பிறகு சீனியர் அணிக்கான போட்டி எதிரணி மன்னார்குடி நேஷனல் பள்ளி அணி. அதில் குறிப்பிட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்டில் எனக்கு அடிபட்டதால் எனக்கு பதில் கணேஷ் என்ற நண்பன் கோல் கீப்பராக இருந்தான். அதிலும் 0-1 என்ற கணக்கில் தோல்வி. அத்துடன் பள்ளி விளையாட்டு முடிவுக்கு வந்தது.

அதிலும் ஒரு கலாட்டா நடந்தது. எங்கள் பள்ளிக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ஒரே மேனேஜ்மென்ட் தான். அந்த பள்ளியில் உள்ள ஹாக்கி டீம் தமிழ்நாடு லெவலில் சாம்பியன். நாங்களோ முதல் முதலாக விளையாடுபவர்கள். எங்கள் பள்ளியின் தாளாளர் ஒரு யோசனை சொன்னார். இந்த பசங்களுக்கு பெண்கள் அணியுடன் விளையாட வைத்தால் நல்ல பயிற்சி கிடைக்கும் என்று. பசங்களுக்கோ ஒரு பக்கம் பெண்களுடன் விளையாடுவதனால் கடுப்பும் அதே சமயம் கிளுகிளுப்புமாக இருந்தது. போட்டி கல்லூரி மைதானத்தில் துவங்கியது. அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க கமெண்ட் அடிக்க அது பெண்கள் அணியின் ஆண் கோச்சுக்கு கேட்டு விட்டது. என்னை நோக்கி கோபத்துடன் நடந்து வந்தார்.

நேரே என்னிடம் வந்த கோச் எப்படி நீ இவ்வாறு பேசலாம் என்று கேட்டார் அவ்வளவு தான். அவருக்கு தபதப வென அடி விழுந்தது. அவர் என்னை நோக்கி வந்ததும் ஆட்டக்களத்தில் இருந்த மற்ற நண்பர்கள் எப்படி அந்த கோச் என்னிடம் வந்து பேசலாம் என்று கோபப்பட்டு என்ன ஏதுவென்று விசாரிக்காமல் அவரை பின்பக்கத்திலிருந்து அடி வெளுத்து விட்டார்கள். பிறகு பள்ளித் தாளாளர் வரை பிரச்சனை சென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகே பிரச்சனை முடிந்தது.

பத்தாவது தான், நான் என் நண்பர்களுடன் பிட்டு படங்களுக்கு செல்ல ஆரம்பித்தக் காலம். திருவாரூரில் செங்கம் மற்றும் பேபி ஆகிய தியேட்டர்களில் பிட்டு படங்கள் போடுவார்கள். டிக்கெட் 4 ரூபாய் தான் இருக்கும். முக்கால்வாசி மதிய நேரங்களில் தியேட்டரில் தான் இருப்போம். சில நாட்களில் எங்கள் பள்ளியின் உதவி தலைமையாசிரியாராக இருந்த ராஜமாணிக்கம் வாத்தியாரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்து விடுவார். அவரைப் பார்த்தவுடன் மறைவாக போய் பால்கனியில் அமர்ந்தெல்லாம் படம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அந்த இரண்டு தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன.

அப்பொழுது தான் சிராக்கோ என்ற உலகப்புகழ் பெற்ற ஆங்கில பிட்டுப் படம் வந்தது. திருவாரூரிலேயே 80 நாட்களுக்கு மேலாக ஓடிய படம் அது. கிட்டத்தட்ட அந்தப்படத்தை 40 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். போதும், இதற்கு மேல் அசைவமாக வேண்டாம்.

அதே போல் பெண் பிள்ளைகளை சைட் அடிக்க ஆரம்பித்த நேரமும் இது தான். முதல் பெண்ணின் பெயர் புவனி*. திருவாரூரில் புதுத்தெருவில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறம் அவர்கள் வீடு இருந்தது. அவள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோகோ விளையாட்டில் வீராங்கனையாக இருந்தாள். அவர்கள் தினமும் பயிற்சி செய்யும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளிக்கு நானும் என் நண்பன் கணேசும் சைக்கிளில் செல்வோம். அங்கு அவள் பயிற்சி முடியும் வரை காத்திருந்து அவளுக்கு பின்னாலேயே வீடு வரை வருவோம். ஏன் அவனுடன் என்றால் அவனும் அவளை சைட் அடித்தான். எங்களுக்குள் ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருந்தது. அவள் யாரை நோக்குகிறாளோ மற்றவர் விலகி விடுவது என்று. ஆனால் நடந்ததே வேறு. அவள் வேறு ஒருவனை காதலித்து அந்த வயதிலேயே வீட்டை விட்டு ஒடி விட்டாள்.

சில நாட்கள் நாங்கள் விரக்தியுடன் திரிந்தோம். இந்த பெண் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே. என்று முழுதாக முளைக்காத தாடியை வைத்துக் கொண்டு சோகமாக திரிந்தோம். பிறகு ஒரு நாள் மடப்புரம் தெட்சணாமூர்த்தி மடத்தில் புவனி1*ஐப் பார்த்தோம். பிறகென்ன மீண்டும் ஷேவிங் செய்து கொண்டு மனதில் கனவுகளுடன் வியாழக்கிழமை தோறும் மடத்திற்கு சென்றோம் அவளுக்காக. இந்த கணேஷ் பயலும் என்னுடனே சேர்ந்து அவளுக்காக மடத்திற்கு வந்தான். பிறகு அந்த பிகரும் ஊத்திக் கொண்டது வேறு ஒரு சோகக்கதை.

பத்தாம் வகுப்பில் ஒரு வழியாக முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று பதினொன்றாம் வகுப்பு அதே பள்ளியில் முதல் குரூப்பில் சேர்ந்தேன். ஏற்கனவே இருந்த நண்பர்கள் குழாம் பிரிந்து புதிய நண்பர்கள் குழாம் அமைக்கப்பட்டது. தினேஷூம் மஞ்ச ரொட்டி விஜயனும் என்னுடன் நெருங்கிய சினேகிதர்களானார்கள். தியேட்டரில் பிட்டு படம் பார்த்த காலம் முடிந்து எவன் வீட்டில் உறவினர்களெல்லாம் ஊருக்கு போகிறார்களோ அடுத்த சிலமணிநேரத்திலேயே விசிஆர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த இரவு முழுவதும் பிட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு நாள் அதிலும் எசகு பிசகாக மாட்டிக் கொள்ள இருந்ததை தனி பதிவாக ஏற்கனவே போட்டிருக்கிறேன்.

பதினொன்றாம் வகுப்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு ஒரு சிறப்பு இருந்தது. ஆமாம் அந்த வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பத்தாம் வகுப்பு படித்தாராம். நாங்கள் கூட அதே கடைசி பெஞ்ச்சில் தான் அமர்ந்திருப்போம். பதினொன்றாம் வகுப்பில் காலாண்டுக்கு பிறகு சுத்தமாக மதியம் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டு ஊர் முழுவதும் சுற்ற ஆரம்பித்து வீணாய் போக ஆரம்பித்தேன்.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நண்பர்கள் குழு புதியதாக தோன்றியது. அதுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் குரூப் மாறி வேறு வகுப்புகளுக்கு சென்றார்கள். நான் படித்த பயாலஜி தமிழ் வகுப்புக்கு அது வரை சற்று தூரத்தில் இருந்த நண்பர்கள் நெருக்கமானார்கள். கிரிக்கெட் வெறித்தனமாக மாறியது. புதுப்புது பெண்களை சைட் அடிக்க முயற்சிகள் துவங்கின.

அந்த நண்பர்கள் குழுவை நான் என்றுமே மறக்க மாட்டேன். அவர்களில் சிலரை குறிப்பிடுகிறேன். இதனை நண்பர்களில் யாராவது படித்தால் உடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். தினேஷ் தற்போது சீனாவில் பிஸினஸ் செய்கிறான். மஞ்ச ரொட்டி விஜயன் திருவாரூரிலேயே ஸ்டீல் ஆர்டர்கள் எடுத்து செய்து கொண்டுள்ளான். சீனிவாசலு இன்று வரை நெருக்கமாக என்னுடன் தொடர்பில் இருப்பவன். சிங்கப்பூருக்கு செல்ல ஆட்கள் ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டுள்ளான். தொளுத்தி அந்தோணிராஜ் திருவாரூரிலேயே ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டுள்ளான். காட்டான் அருண் சிங்கப்பூரில் பெரிய பணியில் இருக்கிறான்.

பாக்கியுள்ள பச்ச மொளகா நாகேஸ்வரன், தொப்பை ரமேஷ், அப்துல் மாலிக், பாரதிராஜா, முருகானந்த ராஜா அம்மையப்பன் பாலாஜி, மாட்டு பாலாஜி, ஸ்ரீதர், அமாவாசை சரவணன் மற்றும் பலர். இவர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. என் மிகச்சிறந்த நண்பனாக இருந்த சுதாகர்ராஜ் திருவாரூரில் சிவில் இஞ்சினியராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டான். அப்புறம் இப்பொழுதும் தொடர்பில் உள்ள ராஜேஷ், அருண் பி.எஸ் (வாத்துன்னு சொன்னா அடிப்பான்), நரேந்திரன், சுரேன் ஆகியோர் படிக்கும் போது சரியான செட்டாக இருந்தது.

அப்பொழுதெல்லாம் மதிய வேளைகளில் கட் அடித்து விட்டு சிங்களாஞ்சேரி கேட் அருகில் உள்ள ஒரு கால்வாய் மதகுக்கு குளிக்க சென்று விடுவோம். 5 மணி வரை குளித்து விட்டு பிறகு கிரவுண்டிற்கு வந்து இருட்டும் வரை கிரிக்கெட் விளையாடி விட்டு தான் வீட்டிற்கு செல்வோம். இது வழக்கமான செயல். வாரத்தில் மூன்று நாட்கள் கண்டிப்பாக சினிமா. ஒரு சமயம் செங்கம் தியேட்டரில் டிக்கெட்டுக்கு கொடுக்க பணம் பத்தாமல் சிலர் மட்டும் காம்பவுண்டு ஏறிக்குதித்தெல்லாம் சினிமாவுக்கு சென்றதுண்டு.

ஒரு சம்பவம் சரியாக 1995 டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டம், அது வரை எந்த பகுதியிலும் போலீஸ் காவல் குறைவாக இருந்த காலக்கட்டம். ஏனென்றால் 1996 ஜனவரி 1லிருந்து தான் திருவாரூர் தனி மாவட்டமாகிறது. இரவு முழுவதும் நண்பர்கள் குடித்து விட்டு விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தத்தில் கூத்தடித்துக் கொண்டு அந்த வழியாக வந்து போகும் வண்டியையெல்லாம் நிறுத்தி ஹாப்பி நியூ இயர் என்று கத்தி கலாட்டா செய்வதுமாக இருந்தோம். எங்களில் அருண் என்ற நண்பன் சரக்கடித்து மட்டையாகி அங்கு படுத்திருந்தான். நாங்கள் இருபது பேர் ரோட்டில் கத்திக் கொண்டு இருந்தோம். ஒரு கார் வந்தது. நாங்கள் நிறுத்தச் சொல்லி கூச்சலிட வண்டி நிற்கவில்லை. நண்பர்கள் கல்லெடுத்து எறிந்து சத்தம் போடவே வண்டி சரக்கென்று நின்றது. ரிவர்ஸில் வந்தது. சற்று வெளிச்சத்துக்கு வந்ததும் தான் தெரிந்தது. அது புதிய எஸ்பியின் கார்.

டேய் போலீஸ் என்று சத்தம் மட்டும் தான் கேட்டது. கார் வந்து நிற்பதற்குள் அந்த இடத்தில் ஒருத்தனையும் காணும் என்னையும் சேர்த்து. காரிலிருந்து எஸ்பி உட்பட நான்கு பேர் இறங்கி இடத்தை சல்லடை போட்டு தேடுகிறார்கள். ஒருவனும் சிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து கார் சென்றது. அதன் பிறகு ஒருத்தன் ஒருத்தனாக தலையை வெளிக்காட்டுகின்றனர். அது மிகப்புதிதாக வளர்ந்து வரும் புறநகர் பகுதி. இருவர் ஒரு வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வருகின்றனர். ஒரு வேலிப்பகுதியிலிருந்து இருவர் வருகின்றனர். எதிர்பக்கம் இருந்த வயல் முழுவதும் மழைத்தண்ணீர் நிரம்பியிருந்தது. அதில் மூழ்கிப்படுத்திருந்த பலர் எழுந்து வந்தனர். நான் எங்கிருந்தேன் என்று கேட்கிறீர்களா, அதற்கடுத்த பிளாட்டில் கட்டுவதற்காக மணல் கொட்டியிருந்தது. அதனுள் நுழைந்து கொண்டிருந்தேன். எல்லோருக்கும் வந்தபின்பு ஒருவனை பற்றி சந்தேகம் இருந்தது.

மட்டையாகி படுத்திருந்த அருண் எங்கே அவன் சைக்கிள் எங்கே என்று. பிறகு கேசவன் தான் சொன்னான், அவன் ஒடும் முன்பு அருணையும் அவன் சைக்கிளையும் பேருந்து நிறுத்தத்தின் மேலே ரூப்பில் தூக்கி போட்டு விட்டு சென்றாக. இன்று வரை எத்தனையோ புத்தாண்டு கொண்டாட்டத்தை பாரத்து விட்டேன். அது போல ஒரு திரில் கிடைக்கவேயில்லை. அன்று யாராவது ஒருவர் மாட்டியிருந்தால் போதும் அத்தனை பேரின் ஜாதகமும் போலீஸ் கையில் போயிருக்கும்.

அதன்பிறகு பள்ளிப்படிப்பை முடிப்பேனா என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர்களுக்கும் வந்து விட்டது. எனவே பள்ளிப்படிப்புடன் திருவாரூரில் இருந்தால் உருப்பட மாட்டேன் என்று சென்னைக்கு மூட்டை கட்டி விட்டார்கள். அதன் பிறகு சென்னை வந்து ஐசிஎப்பில் படித்து இன்று வேலைக்கு செல்வது வரை அதிசய வரலாறு தான்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. தம்பி தியாகேசன் திருவாரூரிலிருந்து பள்ளியைப் பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டான். ஏற்கனவே எழுதியதை சொன்னதும், மீள்பதிவு செய்து தரும்படி கேட்டான். தம்பி தியாகேசனுக்காக மீள்பதிவு செய்யப்படுகிறது. ஏற்கனவே மூன்று நான்கு பதிவாக போட்டதை ஒன்றாக இணைத்ததால் கொஞ்சம் பெரிய பதிவாக ஆகி விட்டது, நண்பர்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும்.


19 comments:

  1. என்னது முப்பது இட்லியா ????!!!!!!!!?????
    அரிசி விலை ஏற்றத்திற்கு நீங்களே காரணம்
    ஹா ....ஹா ....
    இதை வன்மையாக கண்டிக்கிறோம் thala

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி நன்றி ஷெரீப்

      Delete
  2. ரொம்ப நீளமான பதிவுதான்... இருந்தாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே

      Delete
  3. Naanum ithu padithathu pol irukkirathe entru mandaiya udaichukittu irunthaen.. Nalla velai kadaisiya ithu oru meelpathivu nnu sollittinka.. Illana..???!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நன்றி அன்பு

      Delete
  4. உங்கள் பள்ளிக்கால அனுபவங்கள் அசத்தல் செந்தில்/ அப்பாவிடம் கட்டிலின் கீழே அடிவாங்கியது - படிக்கும் போது நமக்கும் வலிப்பது போல இருக்கு!

    ஆனாலும் அவையெல்லாம் வாழ்க்கையின் அனுபவங்களே! அருமையான மீள்நினைவு இடுகை!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மணி.

      Delete
  5. வழக்கம் போல் லக லக. . .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆரிப்.

      Delete
  6. எனக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு மச்சி...

    காதல், விளையாட்டு, கிடாவெட்டு என்று....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மச்சி, சேம் பிஞ்ச்.

      Delete
  7. படம்பார்த்து செம உதையா :)) அய்யோ பாவம் என்று இருந்தது.

    சுவாரஸ்யமான பள்ளிக் காலம்.

    .

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி. பால்ய வயதில் இதெல்லாம் சகஜம் தானே.

      Delete
  8. 1966-1972 நான் படித்த பள்ளியைப் பற்றி படித்ததும் என நினைவுகள் இனிமையான அந்த நாட்களைத் தேடின. ராஜமாணிக்கம் என்பவர் நான் படிக்கும்போது Drawing Master ஆக இருந்தார். அழகிய மீசை வைத்திருப்பார். அவர்தான் இவரா? மற்றும் நான் படிக்கும் காலத்தில்தான் சிறந்த தமிழாசிரியர்களான ஞானச்செல்வன், சண்முகவடிவேல்,சுப்புரத்தினம், உத்தமசீலன், சுந்தரராசன், தியாகராஜன் போன்றோர் இருந்தனர். மணிவாசகம், காட்டூர் மாணிக்கம், சங்கரநாராயணன், ஜம்பு சார், இவர்களைத் தெரியுமா? 1994ல் நான் திருவாரூர் சென்று பார்த்தேன். நான் படித்த வகுப்பறைகள் அப்படியே இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பள்ளியின் தரையைத் தொட்டு வணங்கினேன். பள்ளியில் என்னுடன் பயின்றோர் ஒருவரோடும் இன்று தொடர்பில் இல்லை. அந்த வகையில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா, ராஜமாணிக்கம் சார் நான் படிக்கும் போது உதவி தலைமையாசிரியராக இருந்து ஒய்வு பெற்று விட்டார். சுப்புரத்தினம் நான் படிக்கும் போது தலைமையாசிரியராக இருந்தார். உத்தமசீலன் அவர்கள் எனக்கும் தமிழாசிரியராக இருந்தார். 10 வதுக்கு சண்முகவடிவேல் அய்யா அவர்கள் எனக்கு தமிழாசிரியராக இருந்தார், அதே ஆண்டே ஒய்வு பெற்று விட்டார். ஜம்பு உடற்கல்வியாசிரியராக இருந்து ஒய்வு பெற்று விட்டார்.

      Delete
  9. palliparuvathai ninaivu paduthiyadhukku nandri

    ReplyDelete
  10. Ethir paaratha vithamaaga ungal katturaigalai padika nerthathu, palli paruva ninaivugalai ivalavu thelivaga kan mun kaatiyamaiku mikka nandri, naan ungal sakothararin nanban, vagupu thozhalan, ungal GRT garden veetin munbu ungaludan cricket vilaiyadiyae kaalam, maraka mudiyatha naatkal.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...