சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, May 31, 2013

இத்தரம்மாயிலத்தோ - தெலுகு சினிமா விமர்சனம்

ஒரு மாதத்திற்கு முன்பு மா டிவியில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா பார்க்க நேர்ந்தது. ஒரு சில பாடல் பிடித்திருந்ததால் படம் வெளியாகும் தினத்தன்றே பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.


இன்று பார்க்கலாம் என்று முடிவு செய்த போது விசாகப்பட்டினத்தை சேர்ந்த நண்பன் சத்யநாராயணா நினைவுக்கு வந்தான். அவனையும் அழைத்துக் கொண்டு அபிராமி மாலுக்கு போனேன்.

ரீக்கிளைனர் டிக்கெட் எடுத்து அமர்ந்தால் இரண்டு பக்கமும் காதல் ஜோடிகள், எல்லாம் தெலுகில் மாட்லாடிக் கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் குலாவிக் கொண்டு இருந்தார்கள். நமக்குத்தான் வயிற்றில் கொஞ்சம் சுர்ரென எரிந்தது.

தெலுகு படத்தில் மகேஷ் பாபு, என்டிஆர், அல்லு அர்ஜூன் வகையறா ஹீரோக்களின் படங்களுக்கென ஒரு பார்முலா இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் ஒரு மாபியா கும்பல் தலைவன் இந்தியாவுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருப்பான். முக்கியமாக தெலுகை கடித்து கடித்து பேசுவான்.


ஹீரோ அவனை வீழ்த்தி ஜெயிப்பார். இது தான் கதை. பேஸ் கதை. அதற்கு சிங்காரிப்பது மட்டும் படத்திற்கு படம் மாறுபடும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை. இந்த படத்தின் ஸ்பெஷல் முழுக்க முழுக்க ப்ரான்ஸிலேயே படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்தரம்மாயிலத்தோ என்றால் இரண்டு பெண்களுடன் என்று அர்த்தம்.

படத்தின் கதை. கதாநாயகி காத்ரினா தெரசா (அன்னை தெரசாவுக்கு வந்த சோதனை) மத்திய அமைச்சரின் மகள். மேற்படிப்புக்காக பாரீஸ் வருகிறார். அவர் தங்கியிருக்கும் வீட்டில் ஏற்கனவே தங்கியிருந்த அமலா பாலின் டைரி கிடைக்கிறது. அதில் அல்லு அர்ஜூன் உடனான காதல் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது.


காதல் கல்யாணத்தில் போய் நிற்கிறது. ஒரு நாள் காத்ரீனா அல்லுவை மட்டும் சந்திக்கிறார். கல்யாணம் என்னவானது என்று டைரியில் எழுதப்பட வில்லை. அல்லுவிடம் விவரங்கள் கேட்கிறார்.

ப்ளாஷ்பேக் தொடர்கிறது. கல்யாணத்திற்கு சில நாட்கள் முன்பு வில்லன்களால் அல்லு கண் முன்பு அமலா பால் குத்தப்படுகிறார். அதற்கு காரணமானவர்களை அல்லு கொன்று விடுகிறார். காரணம் ஒரு நாட்டின் தூதரை வில்லன் கொல்லும் போது எதார்த்தமாக அமலா பால் வீடியோ எடுத்தது தான் என்று தெரிய வருகிறது.

அல்லு மேல் காத்ரினா காதல் வயப்படுகிறார். அல்லுவோ மெயின் வில்லனை தேடி அலைகிறார். இதற்கிடையில் ஒரு நாள் அமலா பாலை உயிருடன் காத்ரினா சந்திக்கிறார். பின்பு என்னவானது என்பது தான் படத்தின் கதை.


ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அல்லு அர்ஜூனுக்கு பெயர் போடுகிறார்கள். அதற்கேற்றாற் போல் கொலையை கூட தலைவர் ஸ்டைலாகத்தான் செய்கிறார். சண்டை காட்சிகள் முதல் பாடல் காட்சிகள் வரை ஸ்டைல் மன்னன் தான் அல்லு.

அமலா பால் அய்யர் வீட்டு பொண்ணாக பாவாடை தாவணியுடன் பாரீஸில் வந்து இறங்குகிறார். சில காட்சிகளில் முடி ஸ்ட்ரெய்ட்னிங் பண்ணி பக்கா நவநாகரீக பெண்ணாகி விடுகிறார். படத்தின் இறுதியில் ஹீரோவுக்கு துணையாக வில்லனை பழி வாங்குகிறார்.

காத்ரீனா தெரசா அமைச்சரின் மகளாக பல பெட்டிகள் டெடி பியர் துணையுடன் பாரீஸ் வருகிறார். அல்லு அமலா காதலின் பால் ஈர்க்கப்பட்டு அல்லுவை காதலித்து படத்தின் இறுதியில் ஹீரோவுக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சல்மான் கான் போல் தொடை வரை ஏறிய ஜீன்ஸ் டவுசருடன் தான் சுற்றுகிறார்.

ப்ரம்மானந்தமும் ஆலியும் காமெடி என்ற பெயரில் மொக்கைப் போட்டு கொல்கிறார்கள். ஆனால் கூட்டம் அதற்கும் கை தட்டுவது தான் ஆச்சரியம். நாசர், தணிகலபரணி, சுப்பாராஜூ, ராவ் ரமேஷ் என கூட்டமே இருக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் பாடல்கள் தான். தேவிஸ்ரீபிரசாத் போட்ட மூன்று பாடல்கள் ஏற்கனவே அதிரிபுதிரி ஹிட்டாகி விட்டது. டாப் லேசிப் போயிந்தி என்ற பாட்டு ஏற்கனவே ரிங்க ரிங்கா பாடல் அளவுக்கு ஹிட். வேறென்ன வேண்டும் டிஎஸ்பிக்கு.

வேறோன்றும் படத்தினை பற்றி சொல்வதற்கு இல்லை. அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் மட்டும் படத்தினை கொண்டாடுவார்கள். பக்கா தெலுகு பார்முலா படம். தமிழில் வர வாய்ப்பே இல்லை. அதனால் நீங்கள் தப்பித்தீர்கள்.

ஆரூர் மூனா செந்தில்
 

Thursday, May 30, 2013

குட்டிப்புலி - சினிமா விமர்சனம்

மற்ற எதிர்ப்பார்ப்புகளுடைய படங்களைப் போல் இந்தப் படத்திற்கும் காலை 9 மணிக்காட்சி என ஏஜிஎஸ்ஸில் போட்டிருந்ததால் காலையிலேயே கிளம்ப முடிவு செய்து நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். சீக்கிரம் என்பதால் ஒருத்தனும் வரவில்லை.


ஆனால் எதிர்ப்பார்ப்புக்குரிய அளவுக்கு டிக்கெட் விற்பனை இல்லாததால் காலையில் மூன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டு முதல் காட்சி 10.30க்கு தான் துவங்கியது. கூட்டமும் அவ்வளவாக இல்லாததால் சிறிய திரையரங்கில் படத்தை போட்டிருந்தார்கள்.

பொதுவாக சுப்ரமணியபுரம் படத்திலிருந்து இன்று வரை சசிக்குமாரின் ஒரு படத்தையும் முதல் காட்சி தவற விட்டதில்லை. பல படங்கள் முதல் காட்சிக்குரிய எதிர்பார்ப்பை சரியாகவே செய்திருந்தன. ஆனால் இந்த படம்?

படத்தின் கதை, ஊருக்குள் சண்டியராக திரியும் மகன் காதலினால் எல்லாத்தையும் கைவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் போது பழைய எதிரிகளால் ஆபத்து நேருகிறது. அவனது அம்மா எல்லாவற்றையும் முடித்து வைத்து மகனை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே படத்தின் கதை.


தமிழ்ப்படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறி வைத்து படம் எடுப்பதை கைவிட்டு பல நாட்கள் ஆகிறது. சசிகுமாரின் படங்கள் மட்டும் ஏன் தேவர் சாதியினை குறி வைத்து எடுக்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இது சாதி பாசமா, இல்லை வெறியா?

நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் கடைசியாக இந்த படம் வரை எல்லாவற்றிலுமே கதாநாயகன் தேவர் சமூகத்தை சேர்ந்தவராகவே வருவதன் ரகசியம் தான் புரியவில்லை. கொஞ்சம் மற்ற சாதியினரையும் காட்டுங்கப்பா.

படம் கதையாக சொல்லும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் பாதி படத்தை சொதப்பி இருக்கிறார்கள். படத்தின் நீளம் வேறு பொறுமையை சோதிக்கிறது.


சசிகுமார் படத்திற்கு படம் நடிப்பில் நன்கு மெருகேறி வருகிறார். படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு திரியும் சண்டியர்த்தனம் பொருந்துகிறது. காமெடியிலும் அசத்தியிருக்கிறார்.

படம் முழுக்க லுங்கியில் வந்தாலும் இடைவேளைக்கு பின்பு ஒரு காட்சியில் மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்துகிறார். தாய்ப்பாசத்தில் மருகும் போது சற்று கலங்க வைக்கிறார்.

லட்சுமி மேனன் வருகிறார் செல்கிறார் அவ்வளவே, முந்தைய படங்களைப் போல் இந்த படத்தில் பெரிதாக நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. மேக்கப்பும் ஓவராக போட்டு கலங்கடிக்கிறார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


படத்தில் மொத்த பலமும் சரண்யா மட்டும் தான். அம்மா வேடத்திற்கு வழக்கம் போலவே பாந்தமாக பொருந்திப் போகிறார். மகனுக்காக கொலையே செய்யும் கேரக்டர். மகனின் எதிரிகள் ஒவ்வொருவரிடமும் சென்று மன்னிப்பு கேட்கும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

படத்தில் மைனஸ் விஷயங்கள் சற்று கூடுதலாக இருப்பது தான் சற்று வருத்தமளிக்கிறது.

சிலம்பாட்டம் என்பது சரியாக இருக்க வேண்டும், சுமாரான அளவில் இருந்தாலும் சொதப்பி விடும். தூறல் நின்னு போச்சு படத்தில் பாக்யராஜ் சிலம்பாட்டம் ஆடியிருப்பது இப்ப வரைக்கும் கண்ணில் நிற்கிறது. தேவர்மகன் படத்தில் கமல் கூட சற்று சிரமப்பட்டு முயற்சித்து இருப்பார்.

மற்ற நடிகர்கள் எல்லாம் கட் ஷாட்களில் மாயாஜாலம் காட்டியிருப்பார்கள். இதிலும் சரியான டெம்போவில் வந்திருக்க வேண்டிய சிலம்பாட்ட சண்டையில் கட் ஷாட் வைத்தே சமாளித்திருக்கிறார்கள்.

படத்தில் ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள் இருக்கிறது. அடுத்த ஆக்சன் ஹீரோவாக முயற்சி என்றால் பார்த்து சாரே, விஷாலை பார்த்து சற்று கவனமுடன் இருக்கவும்.


படத்தின் திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் சென்றிருக்க வேண்டும். ஒரு சில கிளைக் காட்சிகள் இருந்தாலும் எந்த இடத்திலாவது படத்தின் திரைக்கதையில் வந்து இணைய வேண்டும்.

ஆனால் இந்த படத்தில் படத்தின் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் பல காட்சிகள் இருக்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸில் ஏதோ நடக்கப் போகிறது என்று முன்பே தெரிந்து விடுவதால் இது போன்ற சம்பந்தமில்லா காட்சிகள் அந்த டெம்ப்போவை குறைக்கின்றன.

பாலா மற்றும் சில கனா காணும் காலங்கள் நடிகர்கள் படத்திற்கு எந்த வித தேவையுமில்லாமல் வந்து செல்கிறார்கள். அவை எல்லாமே நகைச்சுவை என்ற பெயரில் கடியாகத்தான் உள்ளது.


சுந்தரபாண்டியனின் அதிரடி வெற்றியும் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் தான் இந்த படத்தின் வசூலை பாதிக்கப் போகிறது. இரண்டாம் பாதி மெதுவாக செல்தல், பாடல்கள் உட்பட இன்னும் சில குறைகள் இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தினை ஒரு முறை கண்டு வரலாம்.

ஆரூர் மூனா செந்தில்
 

Saturday, May 25, 2013

பார்ட்டி கலாட்டாவுடன் நடந்த கிரகப்பிரவேசம்

மூன்று மாதத்திற்கு பிறகு சென்ற வாரம் மச்சான் வீட்டு கிரகப்பிரவேசத்திற்காக ஊருக்கு சென்றிருந்தேன். எனக்கும் அவனுக்கும் சமவயது. தானே சம்பாதித்து மன்னார்குடியில் கடை வைத்து நன்கு முன்னேறி சொந்த வீடு கட்டியிருக்கிறான். அதுமட்டுமில்லாமல் மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அவன் தான்.


பல வருடங்களுக்கு பிறகு அந்த ஊருக்கு செல்வதால் மிகுந்த சந்தோஷம் பால்ய வயதில் என் பெரும்பாலான கொட்டங்கள் நடைபெற்றது இங்கு தான். என் அப்பாவின் தங்கை உஷா அத்தையின் மகன். என் அத்தை 20 வருடங்களுக்கு முன்பு ரத்தப்புற்று நோயில் இறந்து விட்டார்கள்.

நான் திருவாரூரில் படித்தது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில். இவர்கள் ஊரில் உள்ள திருமுருகன் உயர்நிலைப் பள்ளி இருபாலர் பயிலும் பள்ளி. அங்கு இவர்கள் 10 வது படிக்கும் வரை அரைக்கால் சட்டை தான் பள்ளிச் சீருடை. மாடு மாதிரியிருப்பவர்கள் எல்லாம் அரைக் கால்சட்டை அணிந்து பள்ளிக்கு சென்று வரும் போது மிகுந்த காமெடியாக இருக்கும்.

கூச்சமில்லாமல் அரைக் கால்சட்டை அணிந்து பெண்களுடன் கடலை போட்டு கொண்டு இருக்கும் போது நான் போய் இவர்களை கிண்டல் செய்து காலி செய்வேன்.


மன்னார்குடியில் லட்சுமி மற்றும் செண்பகம் என்ற தியேட்டர்கள் முன்பு இருந்தன. இப்பொழுது இல்லை. இவற்றில் காலைக் காட்சி என்பது பெரும்பாலும் பலானப் படங்கள் மட்டும் தான்.

இவர்கள் ஊரிலிருந்து நண்பர்கள் குழு சைக்கிளில் வந்து படம் பார்த்து விட்டு செல்வோம். இன்று அந்த திரையரங்குகள் இருந்த இடத்தில் பலமாடி கட்டிடங்கள் எங்களைப் போல் பலரின் நினைவுகளை சுமந்து கொண்டு நிற்கின்றன.

இன்னும் பல கூத்துக்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் இப்பொழுது சொன்னால் நாகரீகமாக இருக்காது. எனக்கு கிடையாதுங்க அது அவனுக்கு நாகரீகமாக இருக்காது. அதனால் இத்துடன் ப்ளாஷ்பேக்கை நிறுத்திக் கொள்வோம்.


கிரகப்பிரவேசத்திற்கு முதல் நாள் காலையில் இருந்தே நண்பர்கள் குழு கூட ஆரம்பித்தது. ரகசியமாக அவ்வப்போது மன்னார்குடிக்கு சென்று தாகசாந்தி செய்து வந்து கொண்டு இருந்தோம். மதியம் நண்பர்கள் வற்புறுத்தலால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் விளையாடினேன்.

கிரிக்கெட் விளையாடும் போது தான் தெரிந்தது நமது ஸ்டாமினா. அரைமணியில் போதை இறங்கி வியர்த்து கொட்டி விட்டது. அதன் பிறகு விளையாடியது வெறும் கூடு தான். விளையாட்டை முடித்து விட்டு போர்செட்டுக்கு சென்று குளித்து விட்டு இரவு கச்சேரிக்கு ஆரம்பமானோம்.

மற்ற உறவினர்கள் வர ஆரம்பித்தனர். என் அத்தைகள், மாமன்கள், சித்தப்பன்கள் அவர்களின் வாரிசுகள் என இடம் களை கட்ட ஆரம்பித்தது. நான் செல்லும் வழியை என் அப்பா அமர்ந்து கொண்டே கவனித்துக் கொண்டு இருந்தார். இந்த முறை சரக்கடித்தால் உதை விழும் என ஏற்கனவே அப்பாவால் எச்சரிக்கப்பட்டு இருந்தேன்.


எல்லோரும் சாப்பிட அமரும் போது அப்பா சாப்பிட வா என்று அழைத்தார். என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கும் போது நண்பர்கள் ப்ளக்ஸ் அடிக்க மன்னார்குடி போகலாம் என்று அழைத்தார்கள்.

காரணம் கிடைத்து விட்டது. அப்பாவிடம் காரணம் சொல்லி கழன்று கொண்டேன். இன்னொரு அத்தானின் பண்ணை வீட்டில் உறவினர்கள் கூட்டம் பார்ட்டிக்கு கூடினோம். வெகுநேரம் சென்ற பார்ட்டி 1 மணிக்கு முடிந்தது.

சாப்பிடுவதற்காக விசேசம் நடக்கும் வீட்டிற்கு சென்றோம். எல்லோரும் தூங்கியிருந்தனர். சாப்பிடும் போது எங்கள் குழுவில் இருந்த சரவணன் என்பவன் திடீரென கூகூகூ என கூவ ஆரம்பித்தான். உள்ளே தூங்கியவர்கள் எழுந்து வெளியே வர ஆரம்பிக்க சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் எழுந்து வெளியே ஒட ஆரம்பித்தோம். ஓடியவர்களில் சித்தப்பா, மாமா, மச்சான், தம்பிகள், என அனைவரும் அடக்கம். எல்லோரும் மனைவிக்கு பயந்து வெளியில் ஒடி வந்தார்கள்.

போதைக்கு தலைக்கேறியதால் சரவணன் மட்டும் ஊளையிட்டுக் கொண்டு இருந்தான். அவன் அம்மா வந்து ரெண்டு சாத்து சாத்தி வெளியில் துரத்தி விட்டார்கள். இரண்டு தெரு தள்ளி இருந்த ஒரு பண்ணையில் காத்திருந்தோம். ஆடிக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் சரவணன்.

செம போதையில் ஒண்ணுக்கு இருக்க குத்துக்காலிட்டு அமர்ந்தவன் பத்து நிமிடம் அப்படியே இருந்தான். என்னவென்று கிட்டே போய்ப் பார்த்தால் அப்படியே தூங்கியிருந்தான். அவனை தூக்கிக் கொண்டு போய் இன்னொரு தம்பி கலை வீட்டு மொட்டை மாடியில் போட்டு விட்டு நாங்களும் அங்கேயே படுத்தோம்.

பசிக்க ஆரம்பித்தது. என்ன செய்யலாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போது சாண்டில்யன் படியேறி வந்தான். கையில் சாம்பார் வாளி, உள்ளே சாம்பாரில் இட்லி மிதந்து கொண்டு இருந்தது. நாகரீகமில்லாதவர்கள் கூட நாகரீகமுடன் சாப்பிட்டு இருப்பார்கள். நாங்கள் சாப்பிட்டது அதை விட கேவலம். அப்படியே படுத்து விட்டோம். படுக்கும் போது மணி 2.

விடியற்காலை 4 மணிக்கு வந்து சித்தி எல்லோரையும் எழுப்பிக் கொண்டு இருந்தார். ஹோமம் துவங்கி விட்டது என்று. குளித்து துணி மாற்ற பையை எடுக்க வீட்டுக்கு சென்றால் என் அம்மா பையை கொடுக்க மாட்டேன் என்றார். இப்படியே போய்த் தொலை என் சத்தம் போட்டார். வெளியில் வந்து முழித்துக் கொண்டு இருந்தேன்.

கடுப்புடன் திரும்பிப் பார்த்தால் என்னுடன் தூங்கிய எல்லோரும் அதே போல் நின்று கொண்டு இருந்தனர். யாரும் குளித்து மாற்ற புதுத்துணி கிடைக்கவில்லை. என்னடா பண்ணுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தோம்.

அப்பொழுது தான் ஊரிலிருந்து இறங்கி இன்னொரு மச்சான் வந்தான். அவனிடம் நிலைமையை விளக்க அவன் உள்ளே சென்று பத்து நிமிடத்தில் யாருக்கும் தெரியாமல் எங்கள் துணிகளை எடுத்து வந்தான். ஆனால் பேஸ்ட், பிரஷ், சோப்பு, துண்டு கிடைக்கவில்லை.

அதையும் எதிர்பார்த்தால் ஒன்னும் நடக்காது என்று தெரிந்ததால் தாமரை குளத்திற்கு வந்து செங்கலை தேய்த்து கிடைத்த மண்ணில் பல் விளக்கி விட்டு சோப்பு போடாமல் குளித்து விட்டு துவட்டவும் துண்டு இல்லை. பழைய துணியில் துவட்டி விட்டு துணிகளை அணிந்து விட்டு சபையினில் அமர்ந்தோம்.

அதன் பிறகு வீடு திரும்பும் வரை நல்ல பிள்ளையாக இருந்து வீடு வந்து சேர்ந்தோம்.

திருவாரூருக்கு திரும்பியதும் அப்பாவும் அம்மாவும் மண்டகப்படி நடத்தியது வேறு விஷயம். இருந்தாலும் இந்த விஷேசம் என் டயரியில் எழுத வேண்டிய இனிய நினைவுகள் தான்.

ஆரூர் மூனா செந்தில்



சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

BE (Instrumentation Engineering) முடித்தவர்கள் தேவை


சம்பளம் 1800 சிங்கப்பூர் டாலர்.


உடனடி தேவை.

-------------------------------------------------

Diploma (Civil) முடித்தவர்கள் Engineer (Civil) வேலைக்கு தேவை.

சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


-------------------------------------------------

BE (Automobile Engineering) முடித்தவர்கள் இஞ்சின் பிரித்து வேலை செய்யத் தெரிந்தவர்கள் தேவை

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------


டிகிரி முடித்தவர்கள் Admin Asst வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


------------------------------------------------------


டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Friday, May 24, 2013

Fast & Furious 6 - சினிமா விமர்சனம்

கொஞ்ச நாளா உங்களையெல்லாம் கவிதை என்ற பெயரில் ஒன்றை கிறுக்கி தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் என நினைக்கிறேன். திங்களன்று மச்சான் கிரகப்பிரவேசத்திற்காக ஊருக்கு சென்றிருந்தேன்.


அப்பொழுது ஒரு நண்பன் "எழுதுவது என்றால் எல்லாத்தையும் தான் எழுதனும். கட்டுரை மட்டும் எழுதி தப்பிச்சிக்கலாம் என்று நினைக்காதே" என்று சீண்ட அதற்காகத்தான் சில கவிதை என்ற பெயரில் கிறுக்கல்கள்.

எனக்கே தெரியும் இந்த வரிகளை வரிசைப்படுத்தி படித்துப் பார்த்தால் கட்டுரை போலவே இருக்கும். இருக்கட்டும். ஆயிரம் பேரை கொன்னாத்தான் அரை வைத்தியன் என்று சொல்வார்கள்.


அது போல் பல ஆயிரம் மொக்கை கவிதைகளை எழுதி பிறகு நல்ல கவிதை எழுத தொடங்குகிறேன். வழக்கம் போல இன்று சினிமா விமர்சனம். பெரிய படங்கள் எதுவும் இன்று வெளியாகாததால் எதிர்பார்ப்பிற்குரிய Fast and furious 6ம் பாகம் பார்க்கச் சென்றேன்.

எனக்கும் ஆங்கிலப் படங்களுக்குமான தொடர்பு எனக்கும் ஆங்கிலத்துக்குமான தொடர்பின் அளவிலேயே இருந்தது. அதாவது படத்தில் ஒரு வசனங்கள் இருக்கும். ஆனால் நானாக ஒரு அர்த்தம் பண்ணிக் கொள்வேன்.


உதாரணம் வேண்டுமானால் ரொம்ப நாட்களாக Van Damme என்ற பெயரை வான் டம்மி என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு தான் அதனை வான் டாம் என்று உச்சரிக்க வேண்டும் என அறிந்தேன்.

ஆங்கிலப் படங்கள் தமிழ்ப்படுத்தி வர ஆரம்பித்த பிறகு தான் நிறைய படங்களை புரிந்து பார்க்க ஆரம்பித்தேன். இந்த படம் கூட 5ம் பாகம் வரும் வரை இந்தப் படத்தை பற்றிய ஆர்வம் பெரிதாக வந்ததில்லை. 5ம் பாகம் வந்த பிறகு தான் மற்ற பாகங்களை பார்த்தேன். அசந்து விட்டேன். கார் ரேசிங் இவ்வளவு விறுவிறுப்பாக எந்த படமும் வந்ததில்லை.


6ம் பாகத்தின் கதை ரஷ்ய நாட்டு ராணுவ ரகசியங்களை வில்லன் கும்பல் கடத்தி சென்று விடுகிறது. அவர்களிடம் இருந்து அதனை மீட்க அமெரிக்க ராணுவ அதிகாரி கடத்தல் கும்பல் தலைவனான வின் டீசலின் உதவியை நாடுகிறார். அவர் அவரது குழுவுடன் லண்டன் வந்து வில்லனுடன் மோதி பல ரேஸ்கள் நடத்தி ஸ்பெயினுக்கு பறந்து க்ளைமாக்ஸூக்கு வருகிறார். வில்லனை வீழ்த்தி படத்தை முடித்து வைத்து அடுத்த பாகத்திற்கும் அடி போடுகிறார்.

வின் டீசல் கட்டுமஸ்தான உடம்பு சும்மா கிண்ணென்று இருக்கிறது. வெறி கொண்டு அடி அடியென்று அடிக்கிறார். கார் ரேஸில் பின்னுகிறார். முடிவில் வில்லனின் கட்டுமஸ்தான அடியாளை தூக்கி ராக் அடிக்க கொடுக்கும் போது விசில் பின்னுகிறது.

தி ராக் என்று அறியப்பட்ட டிவெய்ன் ஜான்சன் மாமிச மலையாக வருகிறார். இந்த திட்டத்திற்கு அடித்தளமிட்டு படத்தை துவக்கி வைக்கிறார்.

முந்தைய பாகங்களில் வந்தவர்கள் அதே போல் வந்து அசத்தி செல்கிறார்கள்.

என்ன தான் இன்டர்நேசனல் படமாக இருந்தாலும் பாட்ஷா படத்தில் இருந்து காட்சியை சுட்டால் நம்மளால் கண்டுபிடிக்க முடியாதா என்ன. பாட்ஷா படத்தில் ரஜினியும் ரகுவரனும் சந்திக்கும் காட்சியில் மாடியில் ஒரு அடியாளை துப்பாக்கியுடன் நிற்க வைத்து சும்மா அங்க பாரு கண்ணா என்று டயலாக் விடுவார்களே, அதை அப்படியே சுட்டு படமாக்கியிருக்கிறார்கள். அய்யோ அய்யோ.

கார் ரேஸ்கள் படு அசத்தலாக படமாக்கப் பட்டு இருக்கிறது. கண்ணுக்கு விருந்து செம.

க்ளைமாக்ஸ் முன்பு வரும் டாங்கி சேஸிங் பைட்டும் க்ளைமாக்ஸில் வரும் விமான பைட்டும் ஏஒன். ஏன் எதற்கு எப்படி சாத்தியம் என்ற கேள்விகளையும் மூளையையும் கழற்றி வைத்து விட்டு படத்திற்கு சென்றால் ஒன்றரை மணிநேரம் பக்கா ஆக்சன் ப்ளாக்குக்கு நான் கியாரண்டி.

மிகப்பெரிய விமானத்தை இரண்டு ஜீப்களை வைத்து ஜஸ்ட் லைக் தட் என வீழ்த்துவது எல்லாம் காதுல பூக்கூடை.

கொஞ்சம் கூட கவலையேப் படாமல் விமானத்தில் இருந்தும் பாலத்தில் இருந்தும் புல்டோசரிலிருந்தும் ஆளாளுக்கு ஜம்ப் பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள்.

படம் முடிந்து வெளியில் வந்ததும் ட்ராபிக்கில் பாய்ந்து பைக்கை ஓட்டி வீட்டுக்கு வந்தது தான் இந்த படத்தின் தாக்கமும் வெற்றியும்.

ஆரூர் மூனா செந்தில்


Thursday, May 23, 2013

தேவதைகள் நிலைப்பதில்லை

தாவணியில் தேவதையாய்
கண்ணுக்கு தோன்றியதால்
தினம் அவளை காணவேண்டி
வேட்டியும் விபூதி பட்டையுமாய்
சாயரட்சை வேளையில்
பெரிய கோவிலில் காத்திருந்தேன்


தோழியுடன் வந்தமரும் அவளை
தரிசனம் செய்ய வேண்டி
எப்பொழுதும் பின்வரிசை
இடத்தினிலே நிரந்தரமாய்
நின்றிருந்தேன் ஒத்தையிலே

கண்கள் மெல்ல மூடி
மெல்லியதாய் மந்திரத்தை
மனமுருகி வேண்டிக் கொண்டே
பிரார்த்திக்கும் அவள் முகத்தை
காண கண் கோடி வேண்டும்

வருடங்களும் செல்லச் செல்ல
தேஜஸ் கூடிய அவள் முகத்தை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே
நின்றிருந்தேன் தனிமரமாய்

காதலை சொல்லி விடும்
தைரியம் தான் வரவில்லை
வேகமாக மறுத்து விட்டாலோ
கோவிலுக்கு வராவிட்டாலோ
மீண்டும் காண வாய்ப்பில்லா

கணங்களை உழண்டு யோசித்து
மனதினிலே ஆசைகளை
புதைத்து வைத்து மரமானேன்
காலங்கள் சென்றிருந்த

நான் அறியா ஒரு தருணம்
மின்னும் வெளிச்சத்தில்
அரைகுறை ஆடையுடன்
நிற்கமுடியா நிறை போதையிலே

குலுக்கலாய் ஆடிக் கொண்டு
நின்றிருந்த என் அவளை
மீண்டும் கண்டதிர்ந்தேன்
நள்ளிரவு பப்பினிலே

கணினியைப் படித்து விட்டு
வேலையிலே சேர்ந்தினால்
பூர்வீகம் மறந்திடுமோ
நிலை அதுவும் மாறிடுமோ

சிறு கீற்றாய் திருநீறை
நெற்றியிலே அளவாய் இட்டு
தெருவிலே நடந்து வந்த
என் ஆசை தேவதையை

உரித்து வைத்து கோழிபோல
காண நேர்ந்ததினால் என்
வருத்தத்தை பகிர்கின்றேன் சபையினிலே
இது நியாயமா சொல்லுங்கள்
என் நட்பு நியாயமாரே

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, May 21, 2013

தண்ணீர் லாரி சாலையில் தேடி

சென்னைக்கு வரும் வரை
கண்டதில்லை இப்படி ஒரு காட்சியை
சாமானியனும் சரி அயிட்டங்காரனும் சரி
கார்ப்பரேசன் தண்ணி லாரியைக் கண்டதும்
சாதுவாக குடங்களுடன் வரிசை கட்டியதை


வூடுகட்டும் வஸ்தாதும் செல்லாக்காசே
இங்கு தண்ணீர் பிடிக்கும் போது
கிளீனர் வண்டியிலிருந்து இறங்கியதும்
மிக லாவகமாக ஐம்பது பைசா வாங்கி
கண்ணாலேயே மிரட்டி தண்ணீர் விடுவதை
வெளியிலிருந்து பார்த்து மிரண்டு விட்டேன்

நாளெல்லாம் பார்த்து ஜொள்ளு விட மாட்டோமா
என ஏங்கிய தேவதைகள் எந்த பந்தாவும்
காட்டாமல் வரிசையில் நிற்பதை
பார்த்து கண்கள் பூத்துப் போகும்
பின்வரிசை பெண்களை வார்த்தைகளால்
மிரட்டும் போது தான் தெரியும்
இவள் பூஜிக்கும் பூவல்ல
பூவின் வேடம் அணிந்த புயல் என்று

இரண்டு தினங்களில் வரிசையில் நின்று
கரெக்ட் பண்ணிய ஆண்ட்டிகள் ஏராளம்
தினமும் புது அனுபவமாய் சென்ற நினைவுகள்
காலங்கள் மாறியதால் கோலங்களும் மாறின
கேன் வாட்டரும் சுலபமாய் கிடைத்ததால்
வரிசையில் நிற்கும் தொல்லை இல்லை

வாழ்க்கை ஒரு வட்டம் என்று
விஜய் சொன்ன வார்த்தைக்கு ஏற்ப
போனவாரம் மீண்டும் கிடைத்தது
ஒரு தண்ணீர் லாரி அனுபவம்
தெருவில் நின்று பொருள் தூக்க
யோசித்த கெளரவம் போய்
தேவைக்காக மீண்டும் குடத்துடன்
தேடியலைந்தேன் தெருக்களில்

தண்ணீர் பிடித்து வரும்பொழுது
நினைவுகளெல்லாம் பின்னோக்கி
மடிப்பு கலையாத தாவணியுடன்
அசைந்து வரும் சிந்தாமணி
ஜன்னலில் கண்ணசைவு காட்டி
வரிசையில் இடம் கொடுத்து
மனதில் பிடித்தேன் இடம்

இன்றும் கண்டேன் அவளை
கலைந்த கேசமும் முடிந்த கூந்தலுமாக
ஓங்கி சத்தமிட்டு வரிசையில் முன்னேறி
தனக்கு மட்டும் பத்து குடம் பிடித்ததை
இன்று கூட மாறவில்லை அவள் குணம்
அன்று நளினமாய் இன்று ஆங்காரமாய்
காரியத்தில் மட்டும் விடாக்கண்டனாய்

நல்ல காலம் தப்பித்தேன்
மயக்கத்தினால் கைப்பிடித்திருந்தால்
அவளுக்கு இணையாக நானும் நின்றிருப்பேன்
தண்ணீர் குடம் கை கொண்டு

ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...