சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, August 27, 2013

பதிவர் சந்திப்பு சிறப்பு பேச்சாளர் கண்மணி குணசேகரன்

நமது பதிவர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். அவர் பதிவர் சந்திப்பில் மதியம் 3 மணிக்கு சிறப்பு உரையாற்றுகிறார். அவரைப் பற்றிய கட்டுரை இது.

கண்மணி குணசேகரன் தென்னாற்காடு வட்டார பேச்சு நடையில் எழுதும் மிகச் சிறந்த எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.


கண்மணி குணசேகரனின் படைப்புகள், மண் சார்ந்த வாழ்வியல் யதார்த்தத்தைத் தம் அழகியலாகக் கொண்டுள்ளன. கண்மணி குணசேகரன் தலைமுறைக் கோபம், காற்றின்பாடல் என்னும் இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் உயிர்த் தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு என மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், கோரை, அஞ்சலை ஆகிய இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கடலூர், விருத்தாசலம் பகுதிகளை உள்ளடக்கிய நடுநாட்டு மனித வாழ்க்கையே கண்மணி குணசேகரனின் புனைகளம். அவர் விவசாயிகளின் எழுதித் தீராத துன்பத்தையே தன் படைப்புப் பொருளாக்குகிறார்.


நேரடியான யதார்த்தவாத படைப்புகளை எழுதுபவர் கண்மணி குணசேகரன். நுண்மையான தகவல்களும் இயல்பான கதாபாத்திரச் சித்தரிப்புகளும் கொண்ட அவரது ஆக்கங்கள் நவீனத் தமிழிலக்கியத்தின் சாதனைகள் என்றே சொல்ல முடியும்.

அஞ்சலை, கோரை என்ற இரு நாவல்களும் பேசபப்ட்டவை. உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை அவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத்தொகுதி.

பூரணி பொற்கலை - கண்மணிகுணசேகரன் எழுதிய கதைகள். கடலூர் வட்டார தொன்மங்களையும் தெய்வங்களையும் தன் கதைகளின் படிமங்களாக ஆக்குகிறார் கண்மணி.

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் எழுதிய நாவல். கடலூரில் போக்குவரத்து அலுவலக ஊழியரான கண்மணி தன் வாழ்வனுபவங்களின் அடிப்படையில் எழுதிய  ஆக்கம் இது.

ஆரூர் மூனா செந்தில்

--------------------------------------

கண்மணி குணசேகரனின் அஞ்சலை பற்றிய ஜெயமோகனின் கட்டுரை


‘சாதாரணமாகச் சொல்வது’ என்பதைப் பற்றிய ஒர் அழகியல் பிரக்ஞை ஆசிரியரில் செயல்பட்டுள்ளது என்பதை அவரது முன்னுரை காட்டுகிறது. தான் சொல்ல முனையும் வாழ்க்கையின் தரத்துக்கு சிறிய அளவிலான அழகுகள் கூட சுமையாகும் என்று படுவதாக ஆசிரியர் சொல்கிறார். ஆகவே இலக்கணசுத்தமான இயல்புவாத அழகியல் கொண்ட ஆக்கமாக இந்நாவல் உள்ளது.


எளிமையான முறையில் அஞ்சலையின் கதாபாத்திரத்தின் தனித்தன்மைகளை கண்மணி சித்தரித்துக் காட்டுகிறார். படிக்கப்போனவள் வயல்காட்டில் கிடைக்கும் உண்டைச் சோற்றுக்கு ஆசைப்பட்டு பள்ளியை விட்டு ஓடிஓடி வருகிறாள். நாளடைவில் வயல்வேலையே அவள் இயல்பாக ஆகிறது. அஞ்சலையின் இயல்பில் உள்ள இந்த ‘நாக்குத்துடிப்பை’ அவளுடைய அடிப்படையான ஒரு குணத்தின் வெளிப்பாடாக நாம் காணலாம். உடலின்பம் மீது இயல்பாக உருவாகும் இச்சை. இந்த இச்சைக்கும் எப்போதும் வேவுபார்த்தபடி இருக்கும் சமூகத்தின் கண்களுக்கும் இடையேயான முரண்பாடு மூலம் உருவாகும் சிக்கல்களே விரிந்து விரிந்து அவள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்று எளிமையாகச் சொல்லலாம்.

உணவுச்சுவை போலவே எளிமையான காமம்தான் அஞ்சலை தேடுவது. சின்ன அக்கா கணவன் அவளை பெண் கேட்டபோது ஒரு சிறு யோசனைக்குப் பிறகு அதை ஒப்புக் கொள்வதில் அவளுக்கு தயக்கம் இல்லை. அவளை தனியாகச் சந்திக்கும் சின்ன அக்கா தங்கமணி ”… இந்தா பாரு புள்ள படுபயலா இருந்தாலும் வேற எவனையாம் பாத்துக் கட்டிக்க. மீறி நீயும் உன் அம்மாவும் ஏதாவது திட்டம் போட்டீங்க,அப்றம் என் பொணத்தைத்தான் பாக்கலாம்…” என்று மிரட்டியமையால்தான் அவள் பின் வாங்குகிறாள்.

பெண்பார்க்க வந்த கும்பலில் மாப்பிள்ளையாகக் காட்டப்பட்டவன் திடகாத்திரமாக இருக்கிறான். அதுவே அவளுக்கு ஆழமான உவகையும் மெல்லிய காதலுணர்வுகளையும் அளித்துவிடுகிறது. கிட்டத்தட்ட பசிக்கு உணவு என்ற அளவிலேயே இது இருப்பதை கண்மணி நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார். ஏமாற்றப்பட்டு இன்னொருவன் கணவனாகும்போது அஞ்சலையை உண்மையில் வதைத்தது எது என சொல்வது கஷ்டம். ”எமாத்தின பயலுவோடா நீங்க…உங்கள கண்டாலே பத்தி எரியுதுடா” என்று அவள் தினம் எல்லாரிடமும் பொங்கி வடிந்தாலும் உள்ளூர இருப்பது நிறைவிலா காமத்தின் வெம்மையே. அவளுடைய பசிக்கு இயலாத உணவு அவள் கணவன் என்பதே உண்மையான சிக்கல்.

உள்ளூர அவளுக்குத் தெரியும், அவளது கணவன் மண்ணாங்கட்டி அவளை ஏமாற்றவில்லை என்று. ஆனாலும் அவனை வெறுக்கிறாள். அவனை அவமதித்து வெறுகிறாள். ஆனால் அவளை திட்டம் போட்டு ஏமாற்றிய மீசைக்காரக் கொழுந்தனை அவள் வெறுக்கவில்லை. அவனுடன் காம உறவையே அவள் நாடுகிறாள். அவனை பார்ப்பதே அவளுக்குப் பரவசம் அளிக்கிறது. அவனைப்பற்றிய நினைவு எந்நேரமும் அவளில் நிறைந்திருக்கிறது. அவளை கோபம் கொள்ளச் செய்வது அவனது உதாசீனமே. அந்த வெறியில் அவனது சட்டையைப் பற்றிக்கொண்டு அவள் கேட்பதெல்லாம் ,” எனக்கொரு வழி சொல்லுடா கம்னாட்டி ” என்றுதான் ‘..உன் பெண்ணாட்டி உன்னை என் கூட விடுவாளா?’ என்றுதான். அவன் அதற்கு ஒப்புக் கொண்டிருந்தான் என்றால், அவன் மனைவி அப்படி ஒரு ஆவேசமான பெண்ணாக இல்லாலிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். அஞ்சலை அக்கா கல்யாணி போல அவளுக்கும் ஒரு மீறல்வாழ்க்கை அமைந்திருக்கும்.

கணவனை உதறிவிட்டு தன் அக்கா கல்யாணியுடன் சென்று ஆறுமுகத்தைப் பார்த்தக் கணமே அவனால் அஞ்சலை கவரப்படுகிறாள்.பசித்தவன் உணவைக் கண்டது போல என்றுதான் மீண்டும் சொல்ல முடிகிறது. அவனது சிவப்பு நிறம் மற்றும் அழகிய தோற்றம் குறித்து அவள் கொள்ளும் பரவசத்தை விரிவாக எழுதும் கண்மணி அவள் ஒரே கணத்தில் தன் முந்தைய வாழ்க்கையை உதறி ஆறுமுகத்தை கணவனாக ஏற்றுக் கொள்வதைக் காட்டுகிறார். அவனுடனான உறவில் அவள் நிறைவு கொள்கிறாள். அவனுக்கும் கல்யாணிக்குமான உறவு தெரியவந்தபோது அவள் கொதிப்பும் வெறுப்பும் கொண்டபோதிலும்கூட மெல்லமெல்ல அதை ஏற்றுக் கொள்ளும் இடத்தை அடைவதைக் காண்கிறோம்

கல்யாணிக்கு அஞ்சலை மீது பொறாமையும் குரோதமும் வளராவிட்டால், ஆறுமுகம் ஓரளவு இருவரையும் சரிசமமாக நடத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அஞ்சலை சாதாரணமாக அதை ஏற்றுக்கொண்டு சிறு அதிருப்தியுடன் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பாள். தங்கமணியின் கணவனிடம் வாழ்க்கையைப் பகிர எளிதில் முன்வந்தவள் தானே அவள்? அவளது தேவை எளிய பசி மட்டுமே. பெரிய கனவுகள் அவளை வழிநடத்தவில்லை.

மீண்டும் முதல்கணவனிடம் திரும்போது அஞ்சலை உடலும் மனமும் தளர்ந்து காம நாட்டத்தை இழந்து வெறும் தாய் மட்டுமாக ஆகிவிட்டிருக்கிறாள். நான்குபேர் மதிக்கும் ஒரு எளிய வாழ்க்கை. குழந்தைகளின் நலமான வாழ்க்கை. அவளுக்கு அதுவே பெரும் சுமையாக உள்ளது. அவளைச்சூழ்ந்த சமூகம் அதை அவளிடமிருந்து பறிக்கிறது.

இந்நாவலில் முக்கியமாக முதன்மைப்படும் சமூகப்பிரச்சினையே சமூகத்தின் வன்முறைதான். அஞ்சலையை ஓட ஓட துரத்தியடிக்கிறது சமூகம். இந்திய சமூகத்தில் எல்லா சாதிகளுக்குள்ளும் புறங்கூறுதல், வம்பு பேசுதல் இயல்பாக உள்ளது என்றாலும் ஐச்சூழலில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது. நாவலே அதற்கான காரணங்களையும் காட்டிச்செல்கிறது. மனிதர்கள் அசாத்தியமான அளவுக்கு அடர்ந்து நெருங்கியடித்து சேரியின் சந்துக்குள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரின் கண்முன் தான் வாழ்க்கையைந் அடத்த வேண்டியிருக்கிறது. அந்தரங்கமே இல்லை. ஆகவே அந்தரங்கம் என ஒன்று உண்டு என்ற நினைப்பே எவரிடமும் இல்லை.

நாவலுக்குள் பல கதாபாத்திரங்கள் ஒருவரோடொருவர் காட்டும் கொடிய வெறுப்பும் இழைத்துக்கொள்ளும் தீங்குகளும் முதல் நோக்கில் அதிர்ச்சி ஊட்டுகின்றன. ஆனால் கூரிய வாசிப்பில் அவர்கள் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்தக் குழந்தைகளிடம்கூட அதே குரூரத்துடன் நடந்துகொள்வதையே மீண்டும் மீண்டும் காண்கிறோம். அஞ்சலை உட்பட அனைவருமே பெற்ற குழந்தைகளை காரணமிருந்தும் இல்லாமலும் அடித்து துவைக்கிறார்கள். கணவனையும் தாயையும்கூட கொடுமையாக வசை பாடுகிறார்கள். அடிக்கவும் துணிகிறார்கள். அந்த வன்மம் ஒருவகையில் தன்மீதான, தன் விதி மீதான வன்மம். ஒரு மொத்தப்பார்வையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அவ்வாழ்க்கை மீதான ஆறாக் கசப்பு அது.

பாக்கியத்தின் குணங்களின் வாரிசாகவே நாவலில் அஞ்சலை வருகிறாள். கன்று பசுவைத் தொடர்கிறது. பாக்கியத்தின் பெண்களில் தங்கமணி ஓர் எல்லை. அவளும் ஆவேசமும் வேகமும் கொண்ட உழைக்கும் பெண்தான். ஆனால் கணவனுக்குக் கட்டுப்பட்டவள். நல்லவள் அத்துடன் உணர்ச்சிகரமான பலவீனம் கொண்டவள். அவள் கணவன் அதையே பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான். கல்யாணி மறு எல்லை. கணவனின் பலவீனத்தை அவள் பயன்படுத்திக் கொள்கிறாள். காமமும் உலகியலாசையும் கொண்டபெண். அதன் வேகமே அவளிடம் குரூரமாக வெளிப்படுகிறது. தன் முன் இருக்கும் ஒன்றை இழக்க விரும்பாத பசியின் உக்கிரமே அவள் ஆளுமை.

அஞ்சலை இரு எல்லைகள் நடுவே இருக்கிறாள். அவளை கண்மணி வழக்கமான மிகையுணர்ச்சிக் கதைகளில் வரும் நாயகி போல அனைத்து நன்மைகளும் நிரம்பியவளாகக் காட்ட முனையவில்லை. அஞ்சலையின் இயல்பான காமவிழைவு நாவலில் நேரடியாகவே சொல்லப்படுகிறது. அச்சூழலில் பிறரிடம் இருக்கும் அதே குரூரம் அவளிடமும் இருக்கத்தான் செய்கிறது. சிறந்த உதாரணம் அவள் தன் கணவனிடம் நடந்துகொள்ளும் முறை. அதைவிட கணவனின் வயோதிகத் தந்தையை நடத்தும் முறை. பல தருணங்களில் அது எல்லை மீறிச்செல்கிறது. அஞ்சலை கையாளும் பல சொற்கள் அவளுக்குள் இருக்கும் கல்யாணியைக் காட்டுபவை. அவற்றை கண்மணி குணசேகரன் மழுப்பவேயில்லை.

அத்துடன் அவள் மண்ணாங்கட்டி மீது காட்டும் முழுமையான உதாசீனம் நாவலின் முக்கியமான ஒரு சரடாகும். அவன் தரப்பில் நின்று நோக்கினால் அதன் முகம் கொடூரமானது. அதையும் கண்மணி மழுப்பவில்லை. அவன் அஞ்சலை போன்ற ஒரு பெண்ணை மணக்க விரும்பவோ முயலவோ இல்லை. அவனையும் ஏமாற்றித்தான் அஞ்சலைக்கு கணவனாக்கியிருக்கிறார்கள். இருந்தும் அவன் அவள்மீதான தன் உரிமையை வன்முறை மூலம் காட்டவில்லை. அவள் மீது மதிப்பும் அனுதாபமும் கொண்டிருக்கிறான். அவளை வழிபடுகிறான். அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறான். அவள் உதறிச்சென்றபின்னரும் காத்திருக்கிறான். அவள் மீண்டு வரும்போது ஏற்றும் கொள்கிறான்

அந்தப்பிரியத்தை அஞ்சலை எதிர்கொண்ட விதம் எப்படி? அவளுக்கு ஆணின் தோற்றம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. அயோக்கியனாக இருந்தும் ஆறுமுகத்தை கெஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு மண்ணாங்கட்டி ஒரு மனிதனாகவே படவில்லை. அவனுடைய உழைப்பில் குடும்பத்தை கட்டி எழுப்பும்போதுகூட அவனை அவள் அன்புடனும் மதிப்புடனும் நடத்தவில்லை. ஒரு கட்டத்தில் கணவன் என்ற இடத்திலிருந்தே விலக்கி விடுகிறாள். மண்ணாங்கட்டி அவள் மீது கொள்ளும் மனத்திரிபுக்கும் ஐயத்திற்கும் அதுவே ஊற்றுக்கண். அவ்வகையில் பார்த்தால் அஞ்சலையின் கடைசிக்காலத்து நிராதரவான நிலைக்கு அவளே பொறுப்பு.

இதேபோல இன்னொரு இடம் இறுதியில் பாக்கியம் அஞ்சலையிடம் சொல்லும் கிட்டத்தட்ட கடைசி உரையாடல். ”அதுக்குல்லாம் யாரைச் சொல்லியும் குத்தமில்லை. எல்லாம் ஒன்னாலத்தான். நல்லதோ கெட்டதோ அவன்கிட்டயே இருந்திருந்தேன்னா இப்டி நடக்குமா?வெளிய வந்துட்ட. வந்த எடத்தில ஒத வாங்கினாலும் அடி வாங்கினாலும் நம்ம கையில புள்ள இருக்குத இத தூக்கிட்டு வராம இருந்திருக்கணும்…அதுவும் இல்ல. பழையபடி வேப்பம்பழமா இருந்தவன் பெலாப்பழமா இனிக்குதான்னு அவன் கிட்ட போயி ரெண்டு பெத்துக்கிட்ட”

அஞ்சலையின் முக்கியமான சிக்கலை அம்மா இங்கே தொட்டு விடுகிறாள். வாழ்க்கையை உறுதியாக எதிர்கொள்ளாமல் சட்டென்று உடைந்துபோய் நழுவி ஓடிவிடுவதே அவள் மீண்டும் மீண்டும் செய்வது. கடைசியில் அவள் கொள்ளும் தற்கொலைமுயற்சிகூட ஒரு தப்பி ஓட்டமே. ஆனால் நிலா அப்படி இல்லை. நாவலின் இறுதியில் அவள் சொல்லும் சொற்களில் திடமாக முடிவெடுத்து நின்று எதிர்கொள்ளும் மன ஆற்றல் தெரிகிறது.

கார்குடல் ,மணக்கொல்லை, தொளார் என மூன்று ஊர்களையும் அதிகமாக விவரிக்காமலேயே வேறுபடுத்திக் காட்டுகிறார் கண்மணி குணசேகரன். வயலும் நீரும் நிறைந்த கார்குடல், முந்திரிக்காடுகள் மண்டிய மணக்கொல்லை, நகர்சார் ஊரான தொளார் என இயற்கை மக்களின் இயல்பு அனைத்துமெ திட்டவட்டமாக மாறுபடுகின்றன. நிலக்காட்சிகளை தீட்டுவதில் பருவ மாறுதல்களைச் சொல்வதில் ஆர்வம் காட்டாத சித்தரிப்பு முறை இது. கதாபாத்திரங்களின் கண்வழியாக தெரியும் தகவல்களே அச்சித்திரங்களை எளிமையாக வாசக மனத்தில் உருவாக்குகின்றன.

கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் ‘இல்லாமலேயே’ நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது. அவ்வனுபவத்தை அளிக்கையில் இயல்புவாத நாவல் கலைவெற்றி கொள்கிறது. அஞ்சலை அப்படிப்பட்ட வெற்றிகரமான இலக்கிய ஆக்கம்.

நன்றி ஜெயமோகன்

25 comments:

 1. அருமையான பதிவு. அற்புதமான எழுத்தாளர். நிகழ்வுக்கு மிகவும் பொருத்தம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கும்க்கி, பதிவர் சந்திப்புக்கு வந்திடுங்க

   Delete
 2. மிகசிறந்த எழுத்தாளரை அழைத்துள்ளீர்கள் ... நன்றி ..

  ReplyDelete
 3. Replies
  1. நன்றி, படித்து சிரித்தேன்

   Delete
 4. நிகழ்ச்சிகள் மேலும் சிறப்பாகிக் கொண்டிருக்கின்றன.
  நல்ல அறிமுகம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி குட்டன்.

   Delete
 5. அருமையான அறிமுகம்
  மேடையில் நேரமின்மை காரணமாக இத்தனை
  விரிவாகச் சரியாக அறிமுகம் நிச்சயம் செய்யமுடியாது
  என அறிந்து பதிவின் மூலம் அறிமுகம் செய்தது
  தங்கள் திட்டமிடுதலின் செயல் திறனைக் காட்டுகிறது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி அய்யா

   Delete
 6. வணக்கம்
  மிகச்சிறந்த எழுத்தாளரை பதிவர் சந்திப்புக்கு அழைப்பததை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன்

   Delete
 7. விவசாயிகளின் எழுதித் தீராத துன்பத்தையே தன் படைப்புப் பொருளாக்குகிறார்.
  அவரை வணங்கி வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவியாழி அண்ணே

   Delete
 8. நல்ல பகிர்வு..அவரை காண ஆவலாயிருக்கிறேன்...

  ReplyDelete
 9. சென்ற ஞாயிறு நீயா நானாவில் பங்கேற்று அருமையாக பழைய விடயங்களைக் கூறினார்.

  ReplyDelete
  Replies
  1. நானும் கவனித்தேன். நன்றி யோகன்

   Delete

 10. பொன் மலர் வாசனை பெற்றது போல விழா சிறக்க கண்மணி உரையாற்றுவது மிகவும் நன்று!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா

   Delete
 11. சந்திப்புக்காக காத்திருக்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் வந்து பதிவர் சந்திப்பு வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள் வாத்தியாரே

   Delete
 12. முன்னரே நான் கேள்விப்பட்ட எழுத்தாளர் அண்ணே ... நம் விழாவில் சிறப்பு அழைப்பாளாராக வருவதில் கூடுதல் மகிழ்வு ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அரசன்

   Delete
 13. சிறந்த எழுத்தாளாரை சந்திக்கப் போவதில் மகிழ்ச்சி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...