சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, August 8, 2013

சென்னை எக்ஸ்பிரஸ் - சினிமா விமர்சனம்

நானும் தமிழ்ல ரெண்டு சுழி ன மூணு சுழி ண எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனா வணிகம் என்று எழுதியிருக்கும் பலகையில் நாலு சுழி போட்டு ஒரு ண வருது பாருங்க மெரண்டுட்டேன்.


கில்லி படத்துல வில்லன்கள் நடுவில் த்ரிஷாவின் கழுத்தில் கத்தியை வைத்து கடத்திச் செல்வாரே அந்த காட்சியை அப்படியே சுட்டு இந்த படத்திலும் காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனால் சம்பந்தமே இல்லாமல் வில்லன் கூடவே வந்து சேற்றில் விழுவது எதற்காக என்று தான் தெரியவில்லை. தமிழ்ல பிரகாஷ்ராஜ் கழுத்திலயாவது துண்டு இருக்கும். இதுல ம்ஹூம்.

படம் 90 சதவீதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் நடப்பது போலவே காட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு சதவீதம் அதுவும் பாம்பன் பாலம் மட்டும் ஒரு காட்சியில் காட்டப்பட்டு இருக்கிறது. மற்றபடி எல்லா காட்சிகளையும் தமிழ்போர்டு வைத்து லோனாவாலாவில் சுட்டு இருக்கிறார்கள். லோனாவாலா மகாராஷ்ட்ராவில் இருக்கும் மிகச்சிறந்த சுற்றுலா மலைப்பிரதேசம்.


Don't under estimate the power of the Common man என்ற வசனம் படத்தில் கிட்டத்தட்ட நூறு முறைக்கு மேல் வருகிறது. ஆனால் படத்தில் ஒவ்வொரு முறையும் போரடிக்காமல் இருப்பது தான் ஆச்சரியம். சில இடங்களில் Common manக்கு பதில் ஹல்வாயி.

படத்தின் கதையை தைரியமாகவே நீட்டி முழக்கிச் சொல்லலாம். மும்பையில் தாய் தந்தையில்லாமல் பாட்டி தாத்தாவுடன் வசிக்கும் ஒரு மிட்டாய்க்கடை அதிபர் (ஹல்வாயி பெயர்க்காரணம்) ஷாருக்கான்.

தாத்தா இறந்தவுடன் அவரது கடைசி ஆசைப்படி அவரது அஸ்தியை கரைக்க ராமேஸ்வரம் புறப்படுகிறார். அவர் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்ஸில் தீபிகா படுகோன் பயணிக்கிறார். அவருடன் நான்கு தமிழ் அடியாள்கள் வருகின்றனர்.


ஊரில் பெரிய தாதா அப்பாவான சத்யராஜ் தீபிகாவுக்கு திருமணம் செய்து வைக்க பார்த்திருக்கும் மாப்பிள்ளையை பிடிக்காமல் தப்பித்து வந்த அவரை திரும்பவும் வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர். தான் தப்பிக்க ஷாருக்கை தன் காதலர் என தந்தையிடம் பொய் சொல்கிறார்.

மொழி தெரியாத ஷாருக்கும் மண்டையை ஆட்ட ஊருக்குள் பிரச்சனை, ஆறரை அடிக்கும் மேல் உயரமான தீபிகாவுக்கு பார்த்து வைத்த மாப்பிள்ளையை அடித்து வீழ்த்தி தான் திருமணம் செய்ய முடியும் என்ற நிலை வருகிறது.

இந்த நிலையில் தான் கில்லி ஸ்டைலில் தப்பித்துச் செல்கின்றனர். பிறகு இருவருக்கும் காதல் வருகிறது. தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்த பின்னர் தீபிகாவின் ஊருக்கே வந்து வில்லனிடம் சவால் விடுகிறார் ஷாருக்.


அந்த வில்லனை வீழ்த்தி தீபிகாவை திருமணம் செய்தாரா என்பதே கதை. அப்பாடா முழுக்கதையையும் சொல்லாமல் சொல்லி கடையில் ஒரு மொக்க ட்விஸ்ட்டை வச்சாச்சி.

ரொம்ப நாளைக்கு அப்புறம் திரையரங்கில் மக்களுடன் சிரித்து ரசித்துப் பார்த்த ஹிந்திப்படம், இதற்கு முன்பு ஓம் சாந்தி ஓம். அதன் பிறகு எவ்வளவோ படம் முக்கியமாக இதே படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய கோல்மால் ரிட்டன்ஸ், கோல்மால் 3 அப்புறம் நம்ம தில்லுமுல்லுவின் தற்போதைய ரீமேக்கான போல்பச்சன் எல்லாம் பார்த்து கடியாகி வந்தவன் நான்.

ஆனால் இந்த படம் நல்லாயிருக்கிறது. கண்டிப்பாக ஹிட்டோ ஹிட் சூப்பர் ஹிட் இந்த படம். இதைப் பார்த்து இன்னும் எத்தனைப் படங்கள் தென்னிந்தியாவை கதைக்களமாக வைத்து எடுக்கப் போறார்களோ தெரியலையே.

ஷாருக்கை இது வரை நடித்த படங்களில் ரசித்த பிறகு இந்தப் படத்தில் நல்லா நடித்து இருக்கிறார் என்று சொன்னால் எங்க ஊரு ராகுகால துர்க்கை கூட சூலாயுதத்தால் குத்த வரும். ஆனால் காமெடி மற்ற படங்களை விட படு சூப்பராக வந்திருக்கிறது. ரயிலின் முதல் சண்டைக் காட்சியில் கத்தியைக் காட்டி மிரட்டும் காட்சியில் சிரிக்க வைத்தவர் படம் முழுக்க அதே டெம்ப்போவை மெயிண்டெயின் செய்திருக்கிறார்.

தீபிகா படுகோன் அடடா(இந்த இடத்தில் ஜொள் வடிகிறது என்று அர்த்தம்) சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஒரு பற்பசை விளம்பரத்தில் கவர்ந்தவர். ஓம் சாந்தி ஓம்மில் கவர்ந்தவர் பிறகு சில காலம் என் கவனத்திற்கு வராமலே போனார். அதன் பிறகு இந்த படத்தில் தமிழ்ப்பெண் ஹிந்தி பேசுவது போல வாயை சுழித்து சுழித்து ப்ரைமரி லெவல் ஹிந்தி பேசும் போது சுண்டியிழுக்கிறார்.

சத்யராஜ் படத்தில் கம்பீரமாக வந்து கம்பீரமாக செல்கிறார். அவருக்கு கதைப்படி தமிழ்டான் கேரக்டர். அதனால் ஹிந்தி வசனமும் பேச முடியாது. தமிழில் வைத்தால் பெரும்பாலானவர்களுக்கு புரியாது. எனவே முறைப்பாகவே இருந்து விடுகிறார்.

இன்னும் பல தமிழ்நடிகர்கள் வந்து முகத்தை காட்டிச் செல்கின்றனர். ரஜினி போஸ்டர் வைத்து ஒரு பாடலை யூடியுப்பில் பார்த்தேன். படத்தில் வரும் வரும் என்று காத்திருந்து கடைசி வரை வரவில்லை. கடைசியில் படம் முடிந்ததும் போட்டு அனைவரையும் இன்னும் ஐந்து நிமிடம் உக்கார வைக்கின்றனர். அவ்வளவே.

பெரும்பாலான வசனங்கள் தமிழில் இருப்பதால் தமிழர்கள் மொழி தடையின்றி பார்த்து ரசி்க்கலாம். ரசித்து சிரித்து பார்க்க சிறந்த படம், பார்த்து சிரித்து மகிழுங்கள்.

ஆரூர் மூனா செந்தில்
 

10 comments:

 1. ஒ காட்..ஒ காட்.. படம் நல்லா இருக்கும் போல, உங்க ரசனை மேல எனக்கு ரொம்பவே நம்பிக்கை.
  அப்புறம் செந்தில் தலைவா ரீலீஸ் ஆகுதா...??? இல்லையா..??

  ReplyDelete
  Replies
  1. நாளை காலை 6 மணி வரை சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க ராஜ்.

   Delete
 2. விமர்சனம் நன்றாகவே இருக்கு செந்தில்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா

   Delete
 3. இது ஹிந்தி படமா? தமிழ் படமான்னு ஒரு சந்தேகம். ஹிந்தி தெரியாதவங்க இதை பாக்க மாட்டங்க தமிழ் தெரியாதவங்களும் இதை பாக்க மாட்டங்க. போய் பார்த்தா இது ஒரு வித்தியாசமான தமிழ் படம்னு தெரியும். கடைசி சண்டைக் காட்சியைத் தவிர மற்ற இடங்களில் திருப்தியான படமாக எனக்கு தெரிகிறது. ஓவர் கூச்சல், சண்டைக் காட்சியில் பறப்பது, பாடல் காட்சிகளுக்கு உடனே நியூஸிலாந்த், ஸ்விஸ் என காட்டுவது, பல காட்சிகளில் இசை என்ற பெயரில் காது கிழிய அண்டா குண்டாவை உருட்டுவது, காமெராவை போட்டு ஆட்டி எடுத்து நம் கண்ணுக்கும் உடலுக்கும் ஒரு அயர்வை உண்டாக்குவது எல்லாம் இதில் இல்லை. நம் தமிழின் உருப்புடாத இயக்குனர்கள் இதை ஒரு முறை பார்த்து திருந்த வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

   Delete
 4. உங்கள் விமர்சனமும் என் எண்ணமும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா

   Delete
 5. "ரசித்து சிரித்துப் பார்க்க " நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...